Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back சமூகவியலாளர்கள் எனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை

எனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவையில்லை

  • PDF

நாங்கள் மனித மாண்பு காக்கவும், சுயமரியாதைக்காகவுமே போராடுகிறோம். மனிதனை ஒரு முழு மனிதனாக மாற்றுவதற்காக, நாங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர்கள், கடந்த நாற்பதாண்டுகளாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் இனியாவது இந்த முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Ambedkar பவுத்தம் தழுவிய பிறகும் நான் அனைத்து அரசியல் உரிமைகளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இந்த இயக்கத்திற்காக நாம் கூடுதலாகப் போராட வேண்டும். பவுத்தத்தை தழுவிய பிறகு ஏற்படும் இன்னல்களை, எப்படித் தீர்ப்பது என்பது குறித்து நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதை எதிர்கொள்வதற்கு என்ன விதமான முயற்சிகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் நான் முழுமையாக சிந்தித்து விட்டேன். என்னிடம் ஏராளமான தீர்வுகள் உள்ளன. நான் எம் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவேன். என்னிடம் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். எனக்கு எதிரானப் பிரச்சாரத்தில் எந்த உண்மையும் இல்லை.

 

ஒரு விஷயத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். எங்கு பார்த்தாலும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், நான் ஏன் பவுத்தத்தைத் தழுவினேன் என்று ஒருவர்கூட கேட்கவில்லை. நான் ஏன் இந்த மதத்தைத் தவிர வேறு மதத்தைத் தழுவவில்லை என்று எவரும் கேட்கவில்லை. இந்த முக்கிய அடிப்படைக் கேள்விதான் மதமாற்ற இயக்கத்திற்கு அடிப்படையான கேள்வியாகும். மதம் மாறும்போது, அது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எந்த மதம், ஏன் அது தழுவப்பட வேண்டும்? 1935 ஆம் ஆண்டு இயோலாவில் இந்து மதத்தை விட்டொழிப்பதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு முன்பே நான் கூறினேன் : ‘‘நான் இந்துவாகப் பிறந்தாலும் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன்” நேற்று அதை நிரூபித்தும் காட்டினேன். நான் தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். நான் ஒரு கொடூரத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன். எனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவை இல்லை. பவுத்தத்தை தழுவ விரும்புகிறவர்கள், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் உள்ளுணர்வு அந்த மதத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.

 

மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மதம் இன்றியமையாததாகிறது. எனக்குத் தெரியும், ஒரு பிரிவினர் காரல் மார்க்சை படித்த பிறகு, மதம் தேவையற்றது என்று கருதுகிறார்கள். அவர்களுக்கு மதத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. அவர்கள் காலையில் எழுந்து காலை உணவை ரொட்டி, வெண்ணெய், கோழிக்கறி போன்றவைகளை சாப்பிட்டு நன்றாகத் தூங்கி, திரைப்படங்களைப் பார்த்து அத்துடன் அவர்களுடைய அந்த நாள் முடிவடைகிறது. இதுதான் அவர்களுடைய கொள்கை. என்னுடைய கொள்கை அதுவல்ல. என்னுடைய தந்தை ஏழை. எனக்கு அத்தகைய வசதிகள் கிடையாது. நான் என்னுடைய வாழ்க்கையில் துன்புற்றதைப் போல யாரும் துன்புற்றிருக்க முடியாது. எனவே, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வசதிகள் இல்லையென்றால், அவன் எவ்வளவு துன்பப்படுவான் என்பதை என்னால் உணர முடியும். பொருளாதார மேம்பாட்டிற்கான ஓர் இயக்கம் தேவை என்பதை நான் அறிவேன். நான் அந்த இயக்கத்திற்கு எதிரானவன் அல்ல. மனிதன் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.

 

ஆனால், இவ்விஷயத்தில் நான் ஒரு முக்கிய வேறுபாட்டைக் காண்கிறேன். எருமை மாட்டிற்கும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு. எருமை மாட்டுக்கு தினமும் புண்ணாக்கு தேவை. மனிதனுக்கும் உணவு தேவை. ஆனால், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், எருமைக்கு அறிவு இல்லை. மனிதனுக்கு உடலும் அறிவும் இருக்கிறது. எனவே, இவை இரண்டு குறித்தும் அவன் சிந்திக்க வேண்டும். அவனுடைய அறிவு பண்படுத்தப்பட வேண்டும். மனிதனுக்கும் பண்பட்ட மனிதனுக்கும், உணவைத் தவிர வேறு எந்த உறவும் இல்லை என்று நினைக்கும் மக்களுடனும் நாட்டுடனும் உறவு வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. மக்களோடு உறவு வைத்துக் கொள்ள மனிதனுக்கு நல்ல உடலும், அந்த உடலைப் பேணுவதற்கு அறிவையும் பண்படுத்த வேண்டும். இல்லையெனில் மனித இனம் முன்னேறியதாகச் சொல்ல முடியாது.

 

ஒரு மனிதனின் உடல் அல்லது மனம் ஏன் பாதிக்கப்படுகிறது? ஒன்று அவன் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் மனது புத்துணர்ச்சியின்றி இருக்க வேண்டும். மனதில் புத்துணர்ச்சி இல்லையெனில், அங்கு முன்னேற்றம் இருக்க முடியாது. அவனுக்கு ஏன் புத்துணர்ச்சி இல்லை. இதற்கான முதல் காரணம், மனிதன் எந்த வாய்ப்புகளும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறான் அல்லது அவன் முன்னேற எந்தவித நம்பிக்கையுமின்றி வைக்கப்பட்டிருக்கிறான். இத்தகு சூழலில், அவன் எப்படிப் புத்துணர்வோடு இயங்க முடியும்? அவன் நோயுற்றே கிடக்கிறான். தன்னுடைய உழைப்புக்குரிய பயன் கிட்டும்போதுதான் அவன் புத்துணர்வு பெறுகிறான்.

 

15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை

நன்றி:தலித்முரசு