Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் புலம் பெயர்ந்த நாடுகளில் கற்பிக்கும் தமிழ் கல்வி தொடர்பாக.....

புலம் பெயர்ந்த நாடுகளில் கற்பிக்கும் தமிழ் கல்வி தொடர்பாக.....

  • PDF

புலம் பெயர்ந்த நாடுகளில் பல சிறுவர்கள் தமிழ் கல்வி நிறுவனங்களையும், சிறு சஞ்சிகைகளையும், ஒலி, ஒளி நாடாக்களையும் வெளியிட்டு தமிழ் கல்வியை நோக்கிய கவனத்தைச் செலுத்துகின்றனர். இந்த முயற்சியில் சிலர் இதை வியாபாரமாகவும், சிலர் தமது குறுகிய நோக்கிலும், பலர் பரந்த நோக்கிலும் செயற்படுகின்றனர்.

 

 

இந்த முயற்சியில் ஈடுபடும் 99வீதம் பேர் தமிழ் கல்வி புலம் பெயர்ந்த இந்தக் குழந்தைகளுக்கு, ஏன் தேவை என்பதை புரியாத நிலையில் தமிழைக் கற்பிக்கின்றனர். கற்பிப்போர், பேற்றோர், குழந்தைக்கு ஏன் தமிழைக் கற்பிக்க வேண்டும் என்ற கேள்விக்கு சரியான நிலையில் இருந்து இக்கல்வியைப் புகட்டாமையினால், இந்த முயற்சி எதிர்காலத்தில் பலத்த தோல்வியை ஏற்படுத்தும் விடையமாகவுள்ளது.

 

அண்மையில் பரீசில், அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த பாப்பா பாரதிப் பாடசாலையின் வெளியீடான இரு ஒளிநாடாக்களை ஆய்வு செய்யும் நோக்கில் ஒரு விவாதம் நடைபெற்றது. அந்த ஒளிநாடா தொடர்பான விவாதம். மற்றம் நோர்வேயில் வெளியாகிய சின்னப் ப+க்கள் ஒலி நாடா என்பவற்றை எடுத்து நாம் நோக்கும் போது இதன் பின்னுள்ள கடின உழைப்பு, முயற்சி, பரந்த நோக்கம் என்பன எல்லாவற்றையும் விட பாராட்டப்பட வேண்டியதாகும்.


இந்தப் பாராட்டு என்பது அவற்றை சரியானதாக மாற்றிவிடாது. சரியான ஒன்றைத் தேர்வு செய்வது என்பது இவ்வெளியீட்டாளர்கள் முன் உள்ள சவாலாகும்.

இந்தவகையில் குழந்தையின் கவனம்பற்றிய ஒரு கரிசனையூடான கல்வியை குழந்தைக்கு எவ்வாறு புகட்ட வேண்டும் என்பதை கட்டுரை மூலம் ஆராய முற்படுகின்றோம்.


பொதுவாக இன்று குழந்தைக்கான கல்வி புகட்டலில் பெற்றோரும், கற்பிப்போரும் கடைப்பிடிக்கும் அடிப்படை என்ன எனப் பார்ப்போம்.

1) புலம் பெயர்த்த நாடுகளில் உள்ள மொழி தொரியாத பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையில் ஒரு தொடர்பு பாலமாக தமிழைப் பயன்படுத்தல்.


2) விடுதலைப்புலி ஆதரவுப் பாடசாலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்த, தமிழிற்க்கு பங்காற்றுகிறோம் என்பதைக் கூறிக்கொண்டு புகட்டுகின்றனர்.


3) மொழி தெரிந்த, தெரியாத பெற்றோர்கள் ஊரில் உள்ள தமது பெற்றோருடன், உறவினருடன் தொடர்புகொள்ள.


4) நாட்டுக்கு திரும்பிச் செல்ல, என நினைக்கும் ஒரு கணிசமான பகுதியினர்.


5) நாம் தமிழர் எனவே தமிழ் தெரிய வேண்டும் என்போர்.


இந்த வரையறையைத் தாண்டி அல்லது உள்ளடக்கிய தமிழ் கல்வி சிறு அளவில் புலம் பெயர்ந்த நாடுகளில் புகட்டப்படுகிறது. இது பரந்த அளவில் புகட்டப்படாமையும், அதை புறக்கணிப்பதும், சிறுமைப்படுத்துவதும் பெரும்பான்மையாக உள்ளது.

 

இது ஏன்? என்ற கேள்வியின் ஊடாக தமிழ் கல்வி கற்பிக்கும் நோக்கை எடுத்துக்கொள்வோமாயின் அது ஒரு குறுகிய எல்லை கொண்டதாக அமைவது ஒரு அடிப்படையாகும்.

 

உதாரணமாக பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் ஆங்கிலம் தெரிந்தால், அல்லது வேறு ஒரு பொது மொழி தெரிந்தால், அங்கு தமிழ் கல்வி தேவையற்றது ஆகிவிடுகிறது. இதேபோல் பெற்றோரின் பெற்றோருக்கம் (பேரர்மாருக்கு) அம்மொழி தெரிந்துவிடின் அங்கு தமிழ் மொழி தேவையற்றது ஆகிவிடுகிறது, அடுத்தது விடுதலைப் போராட்டம் முடிவுக்குவரின் தமிழ் கல்வி தேவையற்றதாகிவிடும். தமிழர் எனவே தமிழ் கற்கவேண்டும் என்ற கருத்து பின்னர் தேவை அற்தாகிவிடுகின்றது.

 

அதாவது தமிழ் கற்பிக்கும் நோக்கம் பரந்த அடிப்படையில் ஏன் தேவை என்பதைப் புரிந்து கொள்ளாத வரை இந்த கற்பித்தல் என்பது ஒரு நிலையில் களைத்துப் போன, அவசியமற்ற, நேர விரையோகம் கொண்ட விடையமாக கற்பிப்போருக்கும், பெற்றோருக்கும், குழந்தைக்கும் எற்படும் என்பதை தெளிவாகப் புரிந்து கொள்வது அவசரமான விடையமாகும். 

 

இன்று உலகில் உள்ள ஆயிரக்கணக்காண மொழிகளில் தமிழும் ஒன்று. தமிழ் உலகில் அதிகமாக பேசும் மொழிக் கூட்டத்தினருள் முதல் 15வது இடத்தினுள் உள்ளது. இருந்த போதும் தமிழ் இன்று சமூகத்தின் வாழ்வை தீர்மானிக்கும் ஒரு தனிமனித பொருளாதார ஏற்றத் தாழ்விற்கு பங்களிக்க முடியாத நிலை உள்ளது. அதேவேளை தமிழ் புறக்கணிப்பும் இன்னும் ஒரு அம்சமாகும்.



புலம் பெயர்ந்த நாங்கள் இங்கு தமிழை எமக்கிடையில் பரிமாறுவது கூட அந்த நாட்டு மொழி எந்தளவிற்கு தெரிகிறது என்பதுடன் தொடர்புடைய விடையமாகியுள்ளது. அப்படி உள்ள போது குழந்தைக்கு தமிழ் கற்பிப்பது என்பது கடினமாக உள்ளது. அதுவும் குழந்தை இந்த மண்ணில் பிறந்து இந்த நாட்டு மொழியைத் தாய் மொழியாகக் கொள்ளும் போது அக்குழந்தை தமிழைக் கற்கும் தேவை அற்றதாகிறது.

 

மொழி என்பது ஒரு மக்கள் கூட்டத்துடன் தொடர்பு கொள்ள மட்டுமே இருந்து போது, இன்று உலகில் பொருள் தேடும் விடயத்துடன் தொடர்புடையதாகவும், சீரழிந்தும் உள்ளது. குழந்தைக்கு அந்தத் தேவை இங்குள்ள மொழியால் தீர்க்கப்படும் பட்சத்தில் ஏன் தமிழ் மொழி தேவை என்பது குழந்தையின் நிலையாகிவிடும். தமிழ் மொழி என்பது ஏன் தேவை? என்ற கேள்வியை எழுப்பாத, அதை கற்கை நெறிக்குள் உள்ளாக்காத தமிழ் கல்வி என்பது வரையறுக்கப்பட்ட எல்லையுடன் முடிவிற்கு வரும்.

 

எம்மைப் பொறுத்தவரையிலும் சரி, குழந்தையைப் பொறுத்த வரையிலும் சரி ஏன் தமிழ் கல்வி தேவை என்று கேட்பின் அது ஒரே ஒரு அடிப்படை விடையத்தை மட்டும் சார்ந்துள்ளது. அது நாம் இங்கு இரண்டாந்தரப் பிரஜை என்பதால் மட்டுமேயாகும். நாம் கறுப்பர்களாக இருப்பது, மூன்றாம் உலகத்தவர்களாக இருப்பது, வறிய நாட்டு மக்களாக இருப்பது என்ற ஒரே ஒரு அடிப்படை மட்டுமே தமிழ் கற்கக் கோருகிறது. அதாவது நான் யார்? எனது சொந்த அடிப்படை என்ன? நாம் ஏன் இங்கு வந்தோம்? ஏன் மூன்றாம் உலக நாடுகள் வறுமையில் உள்ளது? நிற வேற்றுமை என்றால் என்ன? என்ற கேள்விகளில் இருந்தே தமிழ் கற்கும் தேவை எழுகிறது.

 

நாம் இங்கு இரண்டாந் தரப் பிரஜையாக, வேண்டப்படாத பிரஜையாக உள்ளோம். எம்மீதான நிற, இன, அகதி என்ற போர்வையில் ஒரு தாக்குதலை எல்லாத் துறையிலும் சந்திக்கின்றோம். அதை சாதாரண மனித செயற்பாடுகளில் இருந்து விரிவாகப் பார்ப்போம்.


நாம் இந்த மக்கள் கூட்டத்துக்கு ஒரு மனிதனாக அடையாளப் படுத்து முடியாத நிலை மட்டுமே எமது சொந்த அடையாளத்தை தேடவைக்கிறது. அந்த சொந்த அடையாளம் என்பது தமிழை வெறுமனே தெரிந்து கொள்வதனால் மட்டும் தீர்ந்து விடுவதில்லை. தமிழை நான் ஏன் கற்க வேண்டும் என்ற கேள்வியை, குழந்தைக்குப் புகட்டும் போது பெற்றோர் கற்க வேண்டிய நிலையில் உள்ளனர்.

 

அநேகமாக 99வீதமான பெற்றோர் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத ஒரே சூனிய நிலையில் உள்ளனர். சோறு, அதன் கறியைப் பற்றியும், உடுப்பைப் பற்றியும், மலிவு விலைப் பட்டியலைப்பற்றியும்,.. .. என எண்ணற்ற விடயத்தை உப்புச் சப்பின்றி கதைக்கும் பெற்றோர் உலகில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி தெரியாது உள்ளனர்.

 

தமக்கு எதிராக இந்த நாடுகளில் உருவாக்கிவரும் சட்டங்கள், புதிய ஒடுக்கு முறைகளைப் பற்றியும் தெரியாது உள்ளனர். இந்த நிலையில் தான் குழந்தைகள் ஏன் தமிழ் கற்க வேண்டும் என்ற கேள்வியை அவர்கள் முன் கேட்க வேண்டி உள்ளது. இந்த கேள்விக்கான பதிலை தமிழ் மொழிக் கல்விக் கூடாக சொல்லாத வரை குழந்தையோ, பெற்றோரோ தமிழ் கல்வி மீதான தேவையான ஆர்வத்தைப் பெற முடியாது.

 

இந்த நிலையில் பாப்பா பாரதி ஒளிநாடாமீதான விவாதத்தை தொட்டு ஆராய முயல்கிறேன். இவ்வொளிநாடா தமிழ் மொழிக் கல்வியின் ஒரு அங்கமாகக் கருதி வெளியிட்டதாக குறிப்பிட்டனர். இது எந்தளவுக்கு அவர்களுக்கு வெற்றி அளித்துள்ளது என ஆராயின்:



1) தமிழ் கல்வி கற்பித்தல் என்பதை வெளிவந்த இரு நாடாக்களும் சாதிக்க வில்லை.


2) தமிழ் கல்வி மூலம் ஏதாவது ஒரு அறிவைக் கொடுத்ததா எனின் இல்லை என்பது முக்கியமானது.

 

இதை நான் விரிவாக ஆராயின், இந்நாடாக்கள் மூலம் ஒரு குழந்தை சில சொற்களைப் தெரிந்து கொள்கிறது என்பது உண்மையே. அதன் அர்த்தம் தெரிந்தும், தெரியாமல் கூட அதைப் பெறுவது என்பது தமிழ் கல்வியை வளர்க்கும் ஒரு பணியில், முயற்சியில் ஒரு வளர்ச்சியாகி விடாது. ஒரு பாட்டை, கதையை தெரிந்து கொண்டால் மாத்திரம் தமிழ் கற்றதாகிவிடாது. இதற்கு உதாரணமாக லண்டனில் உள்ள தமிழ் தெரியாத சில தமிழ் குழந்தைகள் கர்நாடக சங்கீதத்தை ஆங்கிலத்தில் எழுதி அதைப் படித்து சித்தியடைவது போல் நடந்து விடும். அவர்கள் கர்நாடக சங்கீதத்தை சரியாகப் புரிந்தோ அல்லது அதன் உள் அர்த்தத்தை புரிந்தோ சித்தியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்னும் ஒரு பக்கத்தில் எமது குழந்தைகள் தமிழ் ஆர்வம் இருக்கிறதோ, இல்லையோ தமிழ் சினிமாப் பாடல்களை பாடுகின்றனர். அந்த சொற்களில் சில அர்த்தங்கள் தெரிந்தும், தெரியாத வகையில் அந்தப் பாடல்களை தெரிந்து கொள்கின்றனர்.

இங்கு ஒரு குழந்தை, ஒரு பாடலை, கதையை ரசிக்கின்றது, விரும்புகின்றது என்பது தமிழை கற்க விரும்புகிறது என்று யாரும் கருதி முயற்சி எடுப்பின் அது ஒரு பொய்ப் படமாகவே அது இருக்கும்.

 

புலிகளின்பாடல் அவர்களின் ஆதரவாளர்களின் குழந்தைகள் பல மேடைகளில் பாடுகின்றனர், புலி மாமா பற்றி கதை எழுதுகின்றனர். இது அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து சொன்னார்களா? என ஆராயின் சினிமாப் பாடல் போல் மாறிவிடுகிறது.


ஆர்வம், விருப்பு என்பது வேவ்வேறு நோக்கத்தைக் கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

 

தமிழ் மீதான ஆர்வம் என்பது அதை ஏன் கற்க வேண்டும் என்ற ஒரே விடையில் மட்டுமே ஏற்பட முடியும். இந்த விவாதத்தில் பாப்பா பாரதி சார்பாக கலந்து கொண்ட மாவை நித்தி குறிப்பிடும் போது தனக்கு ஏன் அந்த ஆhவம் ஏற்பட்டது என்றால் எனது சுய அடையாளத்தை தேடுவதில் இருந்து. அதாவது நான் யார்? என்ற கேள்வியில் இருந்து என்கின்றார்.

 

இது மிகச் சரியானதாகும். அவர் இந்தக் கேள்வி மீதான அடிப்படைதான தமிழ் கல்வியை வளர்க்க முன்வந்ததாகும். ஆனால் இது அக் குழந்தைகளுக்கு உண்டா? அல்லது இதில் ஈடுபட முனையும் பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் உண்டா? எனின் 99வீதம் இல்லை என்பதே பதிலாகும். இதற்கு ஆய்வு தேவையில்லை.

 

அடுத்து தமிழ் கல்வி மூலம் அறிவைப் புகட்டுவதாக இந்நாடாவைக் கொண்டு கூற முடியாது. கல்வி புகட்டுவதற்கு இந்த மேற்கு நாட்டுக் கல்விக்கு மேம்பட இந்நாடா பங்கு ஆற்றவில்லை.

 

இந்த விடையத்துக்கு அப்பால் ஒளி நாடா சரி, நோர்வே ஒலிநாடா சரி பெற்ரோராகிய எங்கள் நிலையில் நின்று கொண்டு, பிள்ளையின் சூழலைப் புரிந்து கொண்டு பங்காற்றுவதில் தவறிழைத்துள்ளது.

 

உதாரணமாக கழுதைமீது போகும் கதை, பேய் கதை போன்றன குழந்தைக்கு அன்னியமானது. மாட்டு வண்டியே இல்லாத நாட்டில் மாட்டு வண்டியைப் பற்றி பாடல், கதை அன்னியப்பட்டதாகும். அதைச் சொல்லுவதாயின் அந்தச் சூழலை புரியவைக்க வேண்டும். இது ஏன் தமிழ் கற்பித்தல் என்ற கேள்விக்குள் அடங்கியிருக்கிறது.

 

தமிழை எப்படிப் புகட்டலாம், அறிவை எப்படிப் புகட்டலாம் என்ற கேள்வி எழுவது இயல்பானது. எப்படி அந்தச் சூழலுடன் எம் சூழலை இணைக்கலாம் என்ற கேள்வி எழுவது, எம்மை (பேற்றோரை) நோக்கி கேட்பது இயல்பானதே.

 

இங்குதான் சமுதாயத்தில் அக்கறைக்குரியவர்களது, குழந்தையின் வளர்ச்சியில் அக்கறையாக வழிகாட்ட முயல்பவர்களை தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக 2 முதல் 15 வயது குழந்தை ஒன்று, உங்களுடன் வரும் போது வீதியில் காணும் பல விடையங்களை சுட்டிக் காட்டி, உங்களிடம் ஏன் என்ற கேள்வியை முன்வைக்கிறது. உதாரணமாகப் பார்ப்பின் பொலீஸ் ஒரு வெளிநாட்டவரை கைது செய்யும் போது, அக்குழந்தை ஏன் எனக் கேட்கிறது. வெளிநாட்டவர் மணிக்கணக்காக பொலீஸ் நிலையத்தில் தூங்கும் போது அல்லது அலக்கழியும் போது ஏன் எனக் கேட்கிறது. கடைக் கண்ணாடியில் காணும் எல்லாப் பொருட்களையும் வாங்கித் தரக்கோருகின்றது. சிறுவர் உழைப்பைத் தொலைக்காட்சியில் காணும் குழந்தை ஏன் வேலை செய்ய வேண்டும், ஏன் உணவு இல்லை,......... என கேட்கிறது.

 

நாம் ஏன் இலங்கைக்கு போக முடியாது, ஏன் இலங்கையில் சண்டை, ஏன் சாகிறார்கள் எனக்   கேட்கிறது. பணக்கார நாட்டில் வீட்டுக்கு வீடு கார் உள்ள போது, ஏன் அங்கே மாட்டு வண்டி செல்கிறது, கார் ஏன் அங்கில்லை என்கிறது. ஏன் நான் கறுப்பு, ஏன் அவர்கள் வெள்ளை, ஏன் அவர்களைப் போல் நான் இல்லை, ஏன் நான் கறுப்பு அவர்களுடன் இணைந்து சுறுசுறுப்பாக விளையாடக் கூடாது, ...... ஏன் நாளாந்த வாழ்கையில் உங்கள் குழந்தையின் கேள்விகள் பலவாகின்றன. நாட்டுக்கு நாடு இது பல கோணத்திலும் சில வேறுபாட்டாலும், இதற்கான விடைகள் பெற்றோருக்கே தெரியாது நிலையிலும் பலர் காணப்படுகின்றனர். ஏன் எனின் பெற்றோருக்கு தமிழ் ஏன் கற்க வேண்டும் என்ற கேள்விக்கு பதில் தெரியாத சமூகக் காரணமாகும். 

 

என்ன கல்வி கற்பிப்பது என்பதை பிள்ளையின் உளவியல் கேள்வியில் இருந்து ஆராய்வது அவசியமாகும். பிள்ளை எதை முரண்பாடாகக் காண்கின்றதோ, எதைத் தெரிந்து கொள்ள முடியாது சூனியமாக இருக்கின்றதோ அதன் மீதான கதை, பாடல்கள் தான் பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டும். அறிவைப் புகட்டுவது என்பது எம் சூழலில் புலப்படுவது என்பது இன்னுமொருபுறமான விடையமாகிறது.

 

உதாரணமாக அண்மைக் காலங்களில் குழந்தை உழைப்புப் பற்றி பல பாடசாலைகளில் கூறப்பட்டது. தொலைக்காட்சி காட்டூண் முதல் பலவழிகளில் புகட்டியது. ஆனால் இந்த வழிகள் ஒரு பக்கமானவை. ஒரு கூர்மையான சமூக ஆய்வின் அதன் முற்பக்கத்தைக் கூறும் பொது குழந்தை அதை நோக்கி ஆhவத்தைத் தூண்டுகிறது. அப்போது எல்லா சராசரிக் குழந்தையை விட அறிவியல் ரீதியல் முன்னணிக்கு வருகிறது. இது தான் அறிவியல் ரீதியில் குழந்தைக்குப் புகட்டும் கல்வியாகும்.

 

மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என்ற செய்தியை ஒரு தொலைக்காட்சி செய்தி ஊடாக தமிழில் புகட்டும் போது அது வழக்கமான சலிப்ப+ட்டுவதற்குப் பதில் அதன் மீதான முரண்பாட்டை இனங்காட்ட வேண்டும். இந்த குழந்தையின் பெற்றோர் தாம் கற்கும் போது நிராகரிக்கப்பட்டதை, மதப்பிரிவுகள் நிராகரித்ததையும், அவர்கள் முன்பு இதற்கு எதிராக செய்த அழிவுகளையும் இனங்காட்ட வேண்டும். இது அக்குழந்தைக்கு புதிய விடயமாக தமிழ் கற்கும் அறிவைத் தூண்டுகிறது.

 

பூமி உருண்டை என்று சொல்லும் ஒரு கதையைத் தயாரிக்கும் போது அதை மறுத்தவர்கள் செய்த அட்டகாசத்தை ஒரு சிறு கதையாக நடித்த படி கூறலாம். அந்த உண்மை மீதான வன்முறையையும் இனங்காட்டுவது என்பது குழந்தைக்கு புதிய விடையமாகும். இந்த சமூக அமைப்பால் கொடுக்கப்படாத விடையம் இயல்பில் குழந்தை அதன் மீது ஆர்வமாகிறது. அதைத் தேடத் தொடங்குகிறது.

 

அமெரிக்காவைக் கண்டு பிடித்த கதையைப் பற்றி கூறும் போது அல்லது அவுஸ்ரேலியா உருவான வெள்ளையர் கதையைக் கூறும் போது, இலங்கைகைப் கைப்பற்றிய பிரிட்டிஸாரைப் பற்றி கூறும் போது, தமிழ் மக்கள் மீது நிகழ்ந்து சிங்களபேரினவாத ஆக்கிரமிப்பைப் பற்றி கூறும் போது அங்கு இருந்த எதிர்ப் பக்கம் பற்றிய கூற்று குழந்தைக்கு தெரியாத ஒரு புதிய புதிரான விடையமாகும். அப்போது குழந்தை அதை ஆராய முற்படுகிறது. இதுதான் அறிவியல். இது பெற்ரோரையும் அறிவியல் ரீதியில் உயர்த்தும்.


உதாரணமாக நாம் குழந்தையாக இருந்து போது எமது பெற்றோர்கள், எமது ஆசிரியர்களாள் கதைகள் கூறப்பட்டன. அதில் ஒரு சிலவற்றை எடுப்பின் குரு பக்தி பற்றி ஏகலைவன், துரோணர்; கதை புகழ் பெற்றது. இந்தக் கதையை எமது குழந்தைக்கு எமது ஊர் கதையாக கூறும் போது அதுபற்றிய பல கேள்விகளை நாம் கேட்பது அவசியமாகும். ஏன் ஏகலைவன் தன் விரலை வெட்டியான், ஏன் துரோணர் வெட்டக் கோரினார். அதன் சமூக முரண்பாடு என்ன? ஏன் ஒரு வேடன் வில்வித்தையை கற்கக் கூடாது? அன்றிருந்த சமூக அவலத்தை நீதிக் கதையாக இணைப்பது இன்று அவசியமா? இவ்வாறான கேள்விகள் அக்குழந்தையின் அறிவை உயர்த்துகின்றதுடன் பெற்றோரின் அறிவையும் உயர்த்துகின்றது.


நந்தனார் கதையை அடிக்கடி கோவில்களில் கேட்டுள்ளோம். நந்தனார் தில்லையில் யோதியில் (நெருப்பில்) கலந்தார் என்கின்றது கதை. யார் நெருப்பு வைத்தார், ஏன் நெருப்பு வைத்தனர்? அந்தச் சமூக ஏற்றத் தாழ்வு தான் என்ன? ஏன் நந்தனார் கோவிலுக்குப் போகக் கூடாது? என்ற கேள்வி அறிவை விழிப்புற வைக்கும் இது எமது சிறுகதை இதை விழிப்புணர்வு மிக்க சிறுகதையாக நாம் மாற்ற வேண்டும்.

 

இப்படி நிறையவே கூற முடியும் நாம் கேட்டவைகள், கேட்காதவைகளை விட குழந்தை கேட்கப் போவது, கேட்பது அதிகமானது. ஏன்? என்ற கேள்வி அதிகமாக எழுகின்றது. ஏனேனில் எங்களைவிட அடுத்த தலைமுறை முன்னேறியே இருக்கும்.

 

பிள்ளை இந்த சமூகத்தில் எதைத் தெரிந்து கொள்ள முடியாது உள்ளதோ அதை முன்வைப்பது பெற்றோருக்கம் பிள்ளைகளுக்கும் அதிக ஆர்வத்தை தூண்டும். இது தமிழில் நடக்கும் போது அது மேலும் ஆர்வத்தை தமிழின் பக்கம் தூண்டும்.



நாம் இங்கு இரண்டாந்தரப் பிரஜையாக நடத்தப்படுவதைப் புரிந்து கொள்வதும், அதைப் பிள்ளைக்கு புரிய வைப்பதும், அதைத் தமிழ் மூலம் சாதிக்க முற்படவேண்டும். அது, இயல்பில் தமிழ் என்ற சோந்த அடையாளத்தை நோக்கி தேடுதலாக அமையும்.

 

இரண்டாந்தர பிரஜை என்பதைச் சொல்லாத நிலையில் குழந்தை அதைத் தெரிந்து கொள்ளாத நிலையில் அக்குழந்தை வளர்ந்து வரும் போது இயல்பில் அதை அடையாளங் காண்கின்றது. இப்படிக் காண்கின்ற போது சொந்த அடையாளாத்தின் மீதான தெளிவு இல்லாது இருப்பதொன்பது அக்குழந்தை இயல்பில் சமூக நிலையில் இருந்து விலகிய ஒரு வன்முறைக் கும்பலாக, லுப்பன்களாக மாறுவர். ஏன் எனில் ஒடுக்குமுறை என்ற கோரமுகம் இந்த சமூகம் மீது வெறுப்பை கொடுக்கின்றது. அதே நேரம் பெற்றோர் இதை மறுக்கும் பொது அல்லது சொந்த அடையாளத்தை தொலைத்து நிற்கம் போது குழந்தை பெற்றோரிடம் இருந்து விலகிவிடுகிறது.

 

அக்குழந்தை இச்சமூகத்தில் இருந்து விலகி வன்முறையைத் தீர்வாக முன்வைக்கிறது. சமூகப் பார்வை அற்ற இப்போக்கு மீள முடியாத மக்களுக்கு எதிரான, அரசுக்கு எதிரான ஒரு வடிவமாக மாறுகிறது. இதற்கு பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மன், .......... என பலநாடுகளில் உள்ள வெளிநாட்டுக் குழந்தைகள் எடுத்துக் காட்டாக உள்ளனர். பெற்றோர் அடங்கிப் போன அரசு ஊழியர்களாக இருக்க குழந்தைகள் வன்முறை கொண்டோராக எல்லாவற்றையும் எதிர்க்கும் அடுத்த எல்லையில் உள்ளனார்.

 

ஒரு குழந்தையின் சமூகப் பற்று என்பது சுய அடையாளத்துடன் கூடிய தேடுதல் என்பதுதான். நான் என் இரண்டாந்தரப் பிரஜையாக நடத்துப்படுகின்றேன் என்ற கேள்விக்கு விடை அளிக்கின்றது அந்த சமூகக் கண்டு பிடிப்பு ஊடாக இரண்டாந்தரப் பிரஜை என்பதை இல்லாது ஒழிக்க ஒரு மாற்று வழியைக் காண்கின்றது. நான் இரண்டாந்தரப் பிரஜை என்பதை இனம் கண்டு கொள்ள தமிழ் தெரிவதன் ஊடாக தமது சுய அடையாளத்தைத் தேடுதல் என்பது இலகுவாகிறது.

 

இந்நிலையில் சிலர் இதையும் சில வழமையான சில செய்திகளையும் சேர்த்து கொடுக்கலாம் என்ற கருத்து உண்டு. அப்படிப் பார்த்தால் சினிமாப் பாடலையும் கூட சேர்க்கலாம். ஒரு விடையத்தைச் சேர்க்கும் போது ஏன் எதற்கு என்ற கேள்வி முக்கியமானது. ஒரு செய்தி செல்லும் பொது அது எதைச் சாதிக்கிறது என்பது முக்கியம். ஒரு பாடல் ஒரு கதை வெறும் புலம்பலல்ல. அதைக் கொடுக்கும் போது சமூகத்தில் குழந்தை கற்றுக் கொள்ள, தெரியாத ஒரு புதிய விடையத்தை அறிந்து கொள்ள என பல துறைகளை உள்ளடக்கி இருக்க வேண்டும்.

 

தமிழ் சினிமாப் பாடல் போல, குப்பை தமிழ் வெளியீடு போல சம்பந்தம் இல்லாத வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்ப்பது அவசியம். ஏதோ ஒன்றைச் சொல்லும் போது அது அக்குழந்தைக்கு அறிவையும், தமிழ் கல்வியையும் இணைத்துச் செல்ல வேண்டும்.
எனது சுய கடமை என்ன? நான் யார்? என்ற கேள்வியை உள்ளடக்கிய , ஏன் தமிழைக் கற்க வேண்டும் என்ற தெளிவைப் புகட்டக் கூடிய வகையில் தமிழ் கல்வி புகட்டப்படுவது இன்று அவசரமான எம்முன் உள்ள பணியாகும். அது இல்லாத வரைக்கும், அது வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் அதன் உயிர்வாழ்வு முடிந்து விடும் என்பதைக் கவனத்தில் எடுப்பது மிக அவசியம். இறுதியாக நாம் உங்கள் முன் விளங்கப் படுத்திய விடையத்தை ஒரு தத்துவமாக அல்லது இது தேவை இல்லை என்று பொதுவாகக் கூறும் தலைமுறைக்கு சிலவற்றைக் கூறுவது அவசியமாகிறது.

 

இந்து நுற்றாண்டின் ஆரம்பத்தில் அல்லது எமக்கு முந்திய தலைமுறையின் கல்வியை எடுப்பின் அது ஐரோப்பாவாக இருந்தாலும் சரி எம் நாடாக இருந்தாலும் சரி அங்கு கல்வி என்பது மதம் சார்ந்ததாகவே இருந்தது. இதை எதிர்த்து அக்காலத்தில் ஆய்வாளர்கள் போராடிய அதே நேரம் விஞ்ஞானக் கல்வியை புகுத்த முனைந்தனர். அப்போது பலர் அதை எதிர்த்தனர். சிலர் அதையும், இதையும் சேர்க்கக் கொரினர். ஆனால் இறுதியில் முழுக்க முழுக்க கால ஓட்டத்தில் விஞ்ஞானக் கல்வி புகுத்தப்பட்டது. இன்று இந்தக் கல்விக்கு சமூக விஞ்ஞானக் கல்வியைப் புகுத்தும் போது இந்தத் தலைமுறை அதே பாணியில் எதிர்க்கின்றது. ஆனால் அடுத்து தலைமுறைக்கு, சமூக விஞ்ஞானத்தை தமது கல்வியாக புகுத்தாவிட்டால் மனித இனமே வாழ முடியாது அழியும்.

 

எப்படியும் விஞ்ஞானம் இன்றி இன்று வாழ முடியாது ஆகவே நாம் அதை எம்சிறுவர்களுக்கு இன்றே புகுத்துவது உடனடிப் பணி என்பதை சென்ற தலைமுறை கல்வியுடன் ஒப்புட்டுப் புரிந்து கொள்வது அவசியம். நாம் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் மனிதனை சிந்திக்கும் வகையில் சொல்லப்பட வேண்டும் என்பது அடிப்படை. இதைப் புரிந்து கொள்வது பெற்றோரினதும், கற்பிப்பவர்களினது உடனடித் தேவையாக உள்ளது. இக்கட்டுரை தொடர்பான விமர்சனத்தையும் கருத்துக்களையும் நான் வரவேற்கிறேன்.

Last Updated on Friday, 18 April 2008 18:02