Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தண்ணீர்க் கொள்ளையர்களைத் தாங்கிப் பிடிக்கிறது அரசு!

  • PDF

அரசு என்ன செய்கிறது? தண்ணீர்க் கொள்ளையை அனுமதிக் கிறது. மக்களுடைய தாகத்தைக் காசாக்கும் இந்தக் கொள் ளையை ஊக்குவிக்கிறது. இந்தத் தண்ணீர்த் திருட்டைத் தொழில் வளர்ச்சி என்றும் தண்ணீர்த் திருடர்களைத் தொழிலதிபர்கள் என்றும் கூறி கவுரவிக்கிறது.


ஆனால் தங்களுக்குச் சொந்தமான நீரைப் பறிகொடுத்த மக்கள் குடிநீர் லாரிக்காகக் குடத்துடன் மறியல் செய்தாலோ போலீசு லாரியை அனுப்பித் தடியடி நடத்துகிறது.


"ஒரு நாளைக்கு நாலுகுடம் தண்ணீர் கிடைத்தால் அதுவே சொர்க்கம்'' என்று வாழப் பழகிக் கொண்ட மக்களிடம் "தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழியுங்கள்'' என்று புத்திமதி சொல்கிறது. பள்ளிப் பிள்ளைகளின் கையில் அட்டையைக் கொடுத்து ஊர்வலம் விடுகிறது.


மழைநீர் சேகரிப்பு, கடல் நீரைக் குடிநீராக்குவது, கழிவுநீர் மறுசுழற்சி, ஆழ்துளைக் கிணறு தோண்ட அரசு அனுமதி... இவையெல்லாம் மக்களுக்கு. ஆறுகளும் ஏரிகளும் நிலத்தடி நீர்வளமும் கோக், பெப்சி, விஜயசாந்தி, டீம், நர்மதா, கங்கா ஜல், ப்யூர், ஃபிரெஷ் போன்ற தண்ணீர்த் திருடர்களுக்கு! "தண்ணீரைச் சேமிப்பது மக்கள் கடமை அதைத் திருடுவது முதலாளிகளின் உரிமை'' என்பதுதான் அரசின் தண்ணீர்க் கொள்கை.


ஆறும் அணைகளும் தனியார்மயம்


இது வெறும் கூற்றல்ல; நாடெங்கும் தண்ணீர் தனியார்மயமாக்கப்படுவதை நிரூபிக்க ஏராளமான சான்றுகள் உள்ளன. ஒரு நாளைக்கு 5 லட்சம் லிட்டர் வீதம் ஆண்டு முழுவதும் பவானி ஆற்றிலிருந்து தண்ணீர் உறிஞ்சி கொக்கோ கோலாவிற்கு விற்கிறது, கோவை அன்னபூர்ணா குழுமத்திற்குச் சொந்தமான "பூனம் பெவிரேஜஸ்' என்ற நிறுவனம். கட்டணம் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாயாம்! சென்னை சோழவரம் ஏரியை கோக்கும், பாலாறு, வைகையை பெப்சியும் உறிஞ்சுகின்றன.


தண்ணீர் தனியார்மயம் என்பது இன்று நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் கொள்கை. சட்டிஸ்கார் மாநிலத்தில், மகாநதியின் கிளை நதியான ஷியோநாத் ஆறு ரேடியஸ் வாட்டர் என்ற நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. "ஆற்றோரக் கிராமத்து மக்கள் குடிக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது'' எனத் தடை விதித்தது அந்த நிறுவனம். கரையோர நிலங்களில் விவசாயிகள் போட்டிருந்த பம்பு செட்டுகளைக் கூடப் பிடுங்கி எறிந்தனர் அந்தக் கம்பெனியின் அடியாட்கள். மக்களின் கடுமையான போராட்டத்தின் விளைவாக 2002இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. ஆனால் அதே மாநிலத்தில் கருண், கேலு, சாக்ரி போன்ற ஆறுகள் முதலாளிகளுக்குக் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. குர்குத் என்ற அணைக்கட்டும் நீர்மின் நிலையமுமே ஜிண்டால் நிறுவனத்துக்குச் சொந்தமாக்கப்பட்டுள்ளன.


மகாராட்டிராவில் கொக்கோ கோலோவிற்குத் தண்ணீர் தருவதற்காகவே வைதரணா என்ற ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டிருக்கிறது. ராஜஸ்தானில் வகால் என்ற ஆற்றில் சொந்தமாக அணை கட்டிக் கொள்ள இந்துஸ்தான் சின்க் என்ற தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கப்பட்டு, மக்கள் அதனை எதிர்த்துப் போராடி வருகின்றனர். உ.பி. ராஜஸ்தான், ஹரியானா, ஆந்திரா போன்ற எல்லா மாநிலங்களிலும் கோக், பெப்சி நிறுவனங்களின் நிலத்தடி நீர்க் கொள்ளையை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர்.


இத்தனை எதிர்ப்புகளுக்கிடையிலும் நாட்டின நீர்வளங்கள் கூறு கட்டி விற்கப்படுகின்றன. உயிரின் ஆதாரமான குடிநீர், விற்பனைச் சரக்காக்கப்படுகிறது. பம்பாய், டெல்லி, பெங்களூர், ஹூப்ளி, தார்வார், பெல்காம் போன்ற நகரங்களின் குடிநீர் விநியோகம் பன்னாட்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. சென்னை குடிநீர் விநியோகத்தை வியாபாரமாக்கி லாபம் சம்பாதிக்க விவென்டி என்ற பிரெஞ்சு நிறுவனம் மாநகராட்சியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது. இவை சில சான்றுகள் மட்டுமே. எல்லா மாநிலங்களிலும் எல்லாக் கட்சி அரசுகளும் அமல்படுத்திவரும் கொள்கை இதுதான்.


குடிநீர் விநியோகம்: அரசால் இயலாதா?


மக்களுக்குக் குடிநீர் விநியோகம் செய்ய அரசாங்கத்தால் முடியாதாம்! பணபலம் ஆள்பலம் இல்லையாம்! அதனால்தான் தனியார் முதலாளிகளிடம் அந்தப் பொறுப்பை விடுகிறார்களாம். இந்த அற்பத்தனமான பொய்யை யாராவது நம்ப முடியுமா? "அரசாங்கத்து முட்டை அம்மிக் கல்லையும் உடைக்கும்'' என்கிறார்களே, அப்பேர்ப்பட்ட பிரம்மாண்டமான அரசு எந்திரத்தின் ஆள், அம்பு, சேனை, அமைச்சகங்கள், துறைகள், வாரியங்கள், அதிகாரிகள் அனைவரும் சேர்ந்து மக்களுக்குக் கேவலம் குடிநீர் கூடத் தர இயலாதாம்! அதற்கு அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டனிலிருந்து ஆள் வரவேண்டுமாம்!


பொதுப்பணித்துறை, நீர்ப்பாசனத்துறை, சுகாதாரத்துறை, குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை, மின்சார வாரியம் என்று குடிநீர் விநியோகம் தொடர்பான எல்லாத் துறைகளும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. ஆறுகள், ஏரிகள், அணைக்கட்டுகள் அனைத்தும் அரசின் பராமரிப்பில் இருக்கின்றன. நிலத்தடி நீர் எங்கே இருக்கிறது எங்கே குறைகிறது என்று விண்ணிலிருந்தே கண்டுபிடித்துச் சொல்லும் செயற்கைக் கோளையும் வைத்திருக்கும் அரசாங்கத்தால் மண்ணில் கிடக்கும் தண்ணீரை மக்களுக்கு விநியோகிக்க முடியாதாம்! போதிய தொழில்நுட்ப அறிவு இல்லையாம்! நம்ப முடிகிறதா?


அயோடின் கலவாத உப்பைத் தின்றால் மக்களுக்கு கழலை நோய் ஏற்பட்டு விடுமேயென்று "கருணையோடு' சிந்தித்து கல் உப்பைத் தடை செய்கிறது அரசு. உயிர்வாழ்வதற்கு உப்பைக் காட்டிலும் அவசியமானது தண்ணீர் என்ற எளிய உண்மை பேரறிஞர் மன்மோகன் சிங்குக்குத் தெரியாதா?


அத்தகைய தண்ணீரை பகிரங்கமாகக் களவாடி ஒரு கும்பல் விற்பனை செய்யும்போது, அதைக் காசு கொடுத்து வாங்க முடியாத மக்கள் தாகத்தால் தவிக்கும்போது அரசு என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் வியாபாரத்தைத் தடை செய்து அதனைத் தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்ம். ஆறுகளை மாசுபடுத்தும் ஆலை முதலாளிகளையும், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகளையும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.


அது மட்டுமல்ல, நீர்வளமுள்ள பகுதிகள் தனியார் வசமிருந்தால் அவற்றையும் பொதுநலன் கருதி கையகப்படுத்தி மக்களுக்கு இலவசக் குடிநீரை உத்திரவாதம் செய்ய வேண்டும். "பொதுநலன்' என்று கூறி அணைகள், சுரங்கங்களுக்காகப் பழங்குடி மக்களையும் விவசாயிகளையும் வெளியேற்றும் அரசு, நெடுஞ்சாலையமைப்பதற்காக வீடுகளை இடிக்கும் அரசு, தனியார் முதலாளிகளிடமிருந்து நீர் ஆதாரங்களைக் கைப்பற்றுவதும் சாத்தியம்தான்.


ஆனால், அரசோ நேரெதிராகச் செயல்படுகிறது. மக்களின் பொதுச் சொத்தான ஆறுகளையும் ஏரிகளையும் முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுக்கிறது. தண்ணீர் வியாபாரத்தை ஊக்குவிக்கிறது. "இலவசமாகத் தருவதனால் தண்ணீரின் அருமை மக்களுக்குத் தெரியவில்லை. எனவேதான் தனியார் விற்பனையை அனுமதிக்கிறோம்'' என்று நியாயப்படுத்துகின்றது.


தண்ணீர்ப் பஞ்சத்தில் மக்களைத் தவிக்கவிட்டு, வேறு வழியில்லாமல் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்கிக் குடிக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளிவிட்டு, "இதோ மக்கள் தண்ணீருக்குக் காசு கொடுக்கத் தயாராக இருக்கிறார்களே, பிறகு எதற்காக இலவசமாகத் தரவேண்டும்?'' என்று இப்போது கேள்வி எழுப்புகிறார்கள் தண்ணீர் தனியார்மயத்தை ஆதரிக்கும் கொள்ளையர்கள்.


தனியார்மயத்தின் அடிக்கொள்ளி!


"தண்ணீர் வியாபாரம்' என்பது தண்ணீர்ப் பஞ்சத்தால் தானே உருவாகி வளர்ந்துவிடவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதை அரசுதான் உருவாக்கி வளர்த்து வருகிறது. "தனியார்மயம் தாராளமயம் உலகமயம்' என்ற மறுகாலனியாக்கக் கொள்கைதான் இதற்கு அடிப்படைக் காரணம்.


"அரசாங்கத்தால் பள்ளி, கல்லூரிகள் நடத்த முடியாது — 5 லட்சம் 10 லட்சம் கொடுத்து மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளில் படித்துக் கொள்ளட்டும்; வேலைவாய்ப்பையும் அரசாங்கம் வழங்க முடியாது — அது அவரவர் பொறுப்பு; அரசாங்கம் மருத்துவமனை நடத்த முடியாது — தனியார் மருத்துவமனைக்குக் கொட்டியழ முடியாதவன் செத்துப் போகட்டும்; அரசாங்கம் சாலை போடாது — அதுவும் தனியாரிடம்; அரசாங்கம் நியாயவிலையில் ரேசன் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை தர முடியாது — அநியாய விலையில் வாங்க முடிந்தவன் தின்று பிழைத்துக் கொள்ளட்டும்; அரசு தானியக் கொள்முதல் செய்யாது — கிடைக்கின்ற விலைக்கு விவசாயி விற்றுக் கொள்ளட்டும்; போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம், வங்கி, இன்சூரன்சு, தபால் துறை... என இது நாள் வரை செய்து வந்த எந்தச் சேவையையும் அரசு செய்ய முடியாது; இவையெல்லாம் அரசாங்கத்தின் வேலையல்ல'' — இதுதான் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எல்லாக் கட்சி அரசுகளும் அமல்படுத்தி வரும் கொள்கை. இந்த வரிசையில் இப்போது தண்ணீரும் வந்திருக்கிறது.


மக்கள் உயிர் வாழ்வதற்கே அடிப்படையான தண்ணீரைக் கூடத் தன்னால் வழங்க முடியாதென்று கூறும் உரிமை ஒரு அரசுக்கு உண்டா? ஆறுகள், ஏரிகள், குளங்கள் என அனைத்து நீராதாரங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அவற்றைப் பராமரிக்காமல் சீர்கெட விட்டு, முதலாளிகள் விருப்பம் போல உறிஞ்சவும் கொள்ளையடிக்கவும் கழிவுகளை இறக்கி நாசமாக்கவும் அனுமதித்து விட்டு "பாசனநீருக்குப் பணம் கொடு'' என்று விவசாயிகளைக் கேட்கும் அதிகாரம் இந்த அரசுக்கு உண்டா? தனது குடிமக்களுக்கு வேலை, உணவு, கல்வி முதல் தண்ணீர் வரை எதையும் தரவியலாத ஒரு அரசுக்கு மக்களுடைய சமூக அரசியல் வாழ்க்கை மீது அதிகாரம் செலுத்த என்ன அருகதை இருக்கிறது? "அருகதை இல்லை' என்றுதான் நியாயமாகச் சிந்திப்பவர்கள் யாரும் சொல்ல முடியும்.


முதலாளிகளுக்கு மாமா வேலை!


"மக்கள் நல அரசு' என்று சொல்லிக் கொண்டு இத்தனைக் காலம் காட்டி வந்த பம்மாத்துக்களையெல்லாம் எல்லா அரசாங்கங்களும் மூட்டை கட்டிவிட்டன. விவசாயம், தொழில்துறைகள், சேவைத்துறை உள்ளிட்ட அனைத்தையும், காடுகள், சுரங்கங்கள், ஆறுகள் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்து தரும் மாமா வேலையைத்தான் இந்த நாட்டின் நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும், அதிகார வர்க்கமும் நீதித்துறையும் இப்போது செய்து வருகின்றன.


"பொதுத்துறை வங்கிகளையும் இன்சூரன்சு நிறுவனங்களையும் திறந்து விடு'' என்று பன்னாட்டு நிதி நிறுவனங்கள் கேட்கிறார்களா அதற்கேற்ற சட்டம் தயார்; விவசாயிகளின் விதை உரிமையைப் பறிக்க விதைச்சட்டம், மருத்துவத்துறையைக் கொள்ளையடிக்க காப்புரிமைச் சட்டம், கட்டுமானத் துறையில் பன்னாட்டுக் கம்பெனிகள் புகுந்து சூதாட வசதியாக 100 சதவீத அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, சிறு வணிகர்களை ஒழித்து சில்லரை விற்பனையிலும் பன்னாட்டுக் கம்பெனிகளைப் புகுத்த வாட் வரி விதிப்புச் சட்டம், முதலாளிகள் காடுகளை அழிக்கத் தடையாக இருக்கும் பழங்குடி மக்களை காட்டிலிருந்து துரத்த காடுகள் சட்டம், தொலைபேசி, மின்சாரம், தண்ணீர் போன்ற அத்தியாவசியத் துறைகளில் அந்நிய நிறுவனங்களுக்குச் சாதகமாகக் கட்டைப் பஞ்சாயத்து செய்ய "ஒழுங்குமுறை ஆணையம்'...!


ஒன்றா, இரண்டா? நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் நாட்டை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து விற்கும் ஏலக்கம்பெனி வேலையைத்தான் செய்து வருகின்றன. கொஞ்சம் அசந்தால் நமக்கே தெரியாமல் நம் குடும்பம், பெண்டாட்டி பிள்ளைகளில் 10 சதவீதத்தை பங்குச் சந்தையில் விற்கப் போவதாகக் கூட சட்டமியற்றி விடுவார் ப.சிதம்பரம்.


சட்டமியற்றும் ஓட்டுக் கட்சிகளும், அதை அமல்படுத்தும் அதிகாரவர்க்கமும் மட்டுமல்ல; அரசியல் சட்டத்தைக் "காவல்' காப்பதாகக் கூறிக் கொள்ளும் நீதித்துறையும் முதலாளிகளின் திருட்டுக்கு ஆதரவாகத் தான் தீர்ப்பு சொல்கின்றது. நகர்ப்புறக் குடிசைகளை இடிக்கலாம், நடைபாதை வியாபாரிகளைத் துரத்தலாம், நர்மதை அணைக்காகப் பழங்குடி மக்களை மூழ்கடித்துக் கொல்லலாம், கொக்கோ கோலா தண்ணீர் திருடலாம், அரசுத் தொலைபேசியை அம்பானி கொள்ளையடிக்கலாம், பால்கோ, மாடர்ன் பிரட் போன்ற பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு விற்கலாம்... என எத்தனைத் தீர்ப்புகள்!


மக்களுக்கு குண்டாந்தடி!


மக்களின் சொத்துக்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலைபேசும் இந்தத் தரகு வேலையைத் தவிர வேறெதையாவது இந்த அரசு செய்கிறதா? செய்கிறது. இந்தத் தேசத்துரோகச் செயல்களால் பாதிக்கப்படும் மக்கள் போராடுவதைத் தடுக்கப் புதிது புதிதாகச் சட்டமியற்றுகிறது. பணிப் பாதுகாப்பு முதல் வேலை நிறுத்த உரிமை வரை தொழிலாளர்களின் எல்லா உரிமைகளையும் பறிக்கிறது. குடிநீருக்காகப் போராடும் விவசாயிகளைக்கூட (ராஜஸ்தான்) கூசாமல் சுட்டுத்தள்ளுகிறது. அதன் பிறகும் மக்கள் போராடக்கூடும் என அஞ்சுவதால் போலீசை நவீனமாக்குகிறது; போலீசுக்கும் இராணுவத்துக்கும் ஆளெடுத்து கோக்குக்கும் பெப்சிக்கும் காவலுக்கு நிறுத்துகிறது. அட்டூழியங்கள், கொலைகள் ஒவ்வொன்றுக்கும் போலீசுக்குப் பரிசளித்துக் குளிப்பாட்டுகிறது. தெருவுக்குத் தெரு "போலீசு நண்பர்கள்' என்றொரு ஐந்தாம்படையை உருவாக்கி மக்களை வேவு பார்க்கிறது.


இதுதான் அரசு. இதில் இரகசியமோ மூடு மந்திரமோ இல்லை. வாஜ்பாயி, மன்மோகன்சிங், கருணாநிதி, ஜெயலலிதா என்று நாற்காலியைத் தேய்க்கும் நாயகர்கள் யாராக இருந்தாலும் நடந்து கொண்டிருப்பது இதுதான். நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது நரசிம்மராவ் அரசு. அதற்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒப்புதல் அளித்தன. அன்று முதல் நடந்து வருவது உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி! "தாராள இறக்குமதியும், காப்புரிமைச் சட்டமும் உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகள்'' என்று அமைச்சர்கள் நாடாளுமன்றத்திலேயே பேசவில்லையா? "பேருந்து, மின் கட்டண உயர்வுகள் உலகவங்கியின் உத்தரவு'' என கருணாநிதியும் ஜெயலலிதாவும் சட்டசபையில் சொன்னதில்லையா?


நடப்பது உலக வங்கி உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி. அமெரிக்க, ஐரோப்பிய வல்லரசுகள் போடும் வரவுசெலவுத் திட்டத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படுவதுதான் இந்தியாவின் பட்ஜெட். இந்தியாவில் இத்தனைக் கோடி டாலருக்கு குடிதண்ணீர் விற்க வேண்டுமென கோக்கும் பெப்சியும் அமெரிக்காவில் முடிவு செய்தால் அதற்கு ஆவன செய்யும் அடிமைதான் இந்த அரசாங்கம். இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எல்லா ஏழை நாடுகளிலும் இதுதான் நிலைமை.


மறுகாலனியாக்கமா, முன்னேற்றமா?


இதைத்தான் மறுகாலனியாக்கம் என்கிறோம். அமெரிக்காவுக்கும் பிற வல்லரசுகளுக்கும் நாட்டை அடிமையாக்கும் சதித்திட்டம் என்கிறோம். இதுதான் முன்னேற்றம் என்றும் நாடு வல்லரசாக மாறக் கிடைத்த நல்வாய்ப்பு என்றும் கொண்டாடுகிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். இதற்குக் காரணமிருக்கிறது. டாடா, பிர்லா, அம்பானி, டி.வி.எஸ்., எஸ்ஸார், தாபர், மல்லையா, சிங்கானியா, பஜாஜ், ஜிண்டால் போன்ற பரம்பரைத் தரகு முதலாளிகளில் தொடங்கி கலாநிதி மாறன், சந்திரபாபு நாயுடு போன்ற திடீர்த் தரகு முதலாளிகள் வரை அனைவரும் கடந்த பத்தே ஆண்டுகளில் பார்த்திருக்கும் லாபம் பல லட்சம் கோடி.


இந்தியாவில் எதையெதை விழுங்கினால் கொள்ளை லாபம் என்று அந்நிய முதலாளிகளுக்கு இவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள்; ஓட்டுக் கட்சிகளுக்கு ஆணையிடுகிறார்கள்; அடுத்த கணமே சட்டங்கள் நிறைவேறுகின்றன.


ஆலைகளும், ஆறுகளும், சுரங்கங்களும் விற்கப்படும்போது, பொதுச்சொத்தில் ஒன்று குறையும் போது ஓட்டுப் பொறுக்கிகளின் ஸ்விஸ் வங்கிக் கணக்கு கூடுகிறது. ஓட்டுப் பொறுக்கிகள் தொழிலதிபர்களாக முன்னேறுகிறார்கள்; தொழிலதிபர்களோ நேரடியாக எம்.எல்.ஏ., எம்.பி.யாகிறார்கள். ஓட்டுக் கட்சித் தலைவர்களின் பிள்ளைகள் எல்லோரும் அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். அங்கே பன்னாட்டு நிறுவன அதிகாரிகளாகப் பதவியைப் பெறுகிறார்கள்.


ஐதராபாத் மக்களுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரைமணிநேரம் தண்ணீர் விடுகிறது நகராட்சி. அந்த நகராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை லிட்டர் 25 காசு விலையில் கொக்கோ கோலாவுக்கு விற்றார் சந்திரபாபு நாயுடு. தமிழக விவசாயிகளுக்குத் தண்ணீர் விட மறுத்த கிருஷ்ணா, கர்நாடகத்தின் காவிரி நீரை பன்னாட்டு கம்பெனிக்கு எழுதித் தருகிறார். கர்நாடகத்திடமும், ஆந்திரத்திடமும் தண்ணீருக்குக் கையேந்தும் ஜெயலலிதா, தாமிரவருணித் தண்ணீரை அமெரிக்க கோக்கிற்கு அள்ளி வழங்குகிறார். "ரத்தப் புற்று நோய்க்கான மருந்தை இந்திய நிறுவனங்கள் உற்பத்தி செய்யக் கூடாது'' என்று சென்னை நீதிமன்றத்தில் பன்னாட்டு நிறுவனத்தின் வக்கீலாக நின்று வாதாடி ஜெயித்துக் கொடுக்கிறார் ப.சிதம்பரம்.


பிரிட்டிஷாருக்கு நாட்டை அடிமையாக்கி விட்டு அவனிடம் பென்சன் வாங்கிக் கொண்டு பதவியில் நீடித்த மன்னர்களைப் போல, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை விற்பதற்காகவே நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள். இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், நிர்வாகம், சட்டம் ஆகிய அனைத்தையும் இதற்கேற்ப திருத்தியமைக்கிறார்கள். இதைத்தான் மறுகாலனியாக்கம் என்கிறோம்.