Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் தண்ணீர்ப் பஞ்சம் :எதனால்? யாரால்?

தண்ணீர்ப் பஞ்சம் :எதனால்? யாரால்?

  • PDF

நாளுக்கு நாள் தண்ணீர்ப் பஞ்சம் அதிகரித்துக் கொண்டே போகிறது. போதிய அளவு மழை பெய்யாததுதான் இதற்குக் காரணம் என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் இது முழு உண்மையல்ல.


முன்பு போல அல்லாமல் பருவம் தவறி மழை பெய்கிறது என்பதும் ஓரிடத்தில் முன்பு பெய்த அளவிற்கு மழை பெய்யவில்லை என்பதும், இன்னொரு இடத்தில் கூடுதலாகப் பெய்கிறது என்பதும் உண்மைதான். எனினும் இந்தியாவில் அதிக மழைப் பொழிவு உள்ள கேரளத்திலும் உலகின் அதிக மழைப் பொழிவு உள்ள சிரபுஞ்சியிலும் கூட குடிநீர்த் தட்டுப்பாடு வருவது ஏன்?


பெய்கின்ற மழைநீர் முழுஅளவில் நமக்குக் கிடைப்பதில்லை. கணிசமான அளவு நீர் வீணாகிறது. குறிப்பிட்ட பகுதி குடிநீருக்கோ பாசனத்திற்கோ பயன்படுத்தப்பட முடியாத அளவிற்கு நஞ்சாக்கப்படுகிறது அல்லது நாசமாக்கப்படுகிறது. இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே வருகின்றது; தண்ணீர்ப் பற்றாக்குறை / பஞ்சம் வருவதற்கு முக்கியமான காரணம் இதுதான். போதிய அளவு மழை பெய்யாதது அல்லது வறட்சி என்பது இரண்டாம்பட்சக் காரணம்தான்.


பெய்கின்ற மழைநீர் ஆறுகளில், கால்வாய்களில் ஓடுகிறது; ஏரிகள், குளங்கள், கிணறுகளில் நிரம்புகின்றது; நிலத்தடி நீராகச் சேமிக்கப்படுகிறது; மீதி கடலுக்குச் செல்கிறது. கடலுக்குச் சென்ற நீரைத்தவிர பிற அனைத்தும் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பிற உற்பத்தி நடவடிக்கைகளுக்கும் பயன்படுகின்றன. இந்தத் தண்ணீர் அனைத்தையும் நஞ்சாக்கி, அதன்மூலம் மண்ணையும் நஞ்சாக்கி, உணவு உற்பத்தியையும் கெடுத்து, குடிநீரும் இல்லாமல் செய்பவர்கள் இரு வர்க்கத்தினர் மட்டுமே; அவர்கள் முதலாளிகளும், அதிகாரிகள் வல்லுனர்களும் தான். நமது நாட்டில் மட்டுமல்ல, உலக முழுவதும் இந்த இரு பிரிவினரும்தான் நன்னீரை நஞ்சாக்கும் குற்றவாளிகள்!


எல்லா ஆலைகளும் தங்களது கழிவுநீரைச் சுத்திகரிப்பு செய்துதான் வெளியே விட வேண்டுமென்று சட்டம் இருக்கிறது; அதை அமல்படுத்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இருக்கின்றது; ஆனால், ஓரிரு ஆலைகள் தவிர பிற எல்லா ஆலை முதலாளிகளும் ஒன்று, சுத்திகரிப்பு ஆலை கட்டுவதில்லை; கட்டினாலும் அன்றாடம் அதை இயக்குவதில்லை; அல்லது அரைகுறையாகச் சுத்தம் செய்து கழிவுகளை வெளியேற்றுகிறார்கள்.


ஆறுகளை அழிப்பவர்கள் யார்?


சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை பாசனத்திற்கும் கட்டிட வேலைகளுக்கும் பயன்படுத்த முடியும். இதன் மூலம் ஏராளமான தண்ணீரை மிச்சப்படுத்த முடியும். ஆனால், ஆலைமுதலாளிகள் எவரும் இந்தப் பணிகளைச் செய்வதில்லை; சுத்திகரிப்பிற்காக ஆகும் செலவைத் தவிர்ப்பதன் மூலம் இலாபத்தை அதிகப்படுத்தும் வெறிகொண்ட முதலாளிகள், கழிவுநீரைச் சுத்தம் செய்யாமல் அப்படியே ஆறுகள், குளங்கள், ஏரிகள், கால்வாய்களில் விடுகிறார்கள்; மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இலஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த அக்கிரமத்தை அனுமதிக்கிறார்கள்; இதேபோல், நகரங்களில் சாக்கடைகள் மற்றும் பிற கழிவுகளை நகராட்சித் தலைவர்களும் அதிகாரிகளும் கால்வாய்கள், ஆறுகளில் எவ்விதக் கூச்சமுமின்றி இறக்கி விடுகிறார்கள்.


சென்னையின் கூவம் முதல் திருச்சி நகரின் உய்யகொண்டான் கால்வாய் வரை அனைத்திலும் நல்ல தண்ணீர் ஓடிய காலமுண்டு. இன்றோ அவை சாக்கடைகள் என்று அறியப்படுகின்றன. புனித நதிகள் என்று கூறப்படும் கங்கை, யமுனை முதல் தமிழகத்தின் காவிரி வரை அனைத்தும் புனிதச் சாக்கடைகளாக மாறி வருகின்றன, மாற்றப்படுகின்றன.


சில எடுத்துக்காட்டுகளை மட்டும் பார்ப்போம்:


தாமிரவருணி — இது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஓடும் வற்றாத ஜீவநதி. இந்த ஜீவநதியால் இம்மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கர் நிலத்தில் இரண்டு போக நெல் சாகுபடியும், சுமார் 25,000 ஏக்கரில் மூன்று போகச் சாகுபடியும் நடைபெற்று வந்தது. பாசனம் தவிர இவ்விரு மாவட்டங்களின் முக்கியக் குடிநீர் ஆதாரமாகவும் இந்த ஆறு உள்ளது. இந்த ஆற்றில் சுமார் 65 இடங்களில் குடிநீர் எடுக்கப்படுகின்றது. மதுரா கோட்ஸ், சன் காகித ஆலை, சங்கர் சிமெண்ட், ஸ்பிக் உரத் தொழிற்சாலை, தாரங்கதாரா தொழிற்சாலை, டாக் ஆலை, கனநீர் ஆலை, அனல்மின் நிலையம், துறைமுகம் ஆகியவற்றுக்கும் முக்கியமாக இந்த ஆற்று நீர் ஆதாரமாக உள்ளது.


தாமிரவருணி ஆற்று நீரை முன்பெல்லாம் அப்படியே அள்ளிக் குடிக்கலாம். ஆனால் இன்றோ ஆற்றின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை ஒரு சில பெரிய தொழிற்சாலைகள், 19 சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள், நகரச் சாக்கடைகள், ஆற்றோரச் சுடுகாட்டுக் கழிவுகள், வாகன சுத்திகரிப்புக் கழிவுகள் அனைத்தும் கொட்டப்பட்டு கழிவுகளின் சங்கமத்தால் தாமிரவருணி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறது.


நொய்யல் — ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரத்துப்பாளையம் அணைநீர் முற்றிலும் நஞ்சாக்கப்பட்டிருக்கிறது. கோவை, திருப்பூர் வழியாக ஒரத்துப்பாளையத்தை வந்தடையும் நொய்யல் ஆறு கொடுமுடி அருகே காவிரியுடன் கலக்கிறது. 1992இல் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்ட ஒரத்துப்பாளையம் அணை ஏறத்தாழ 25,000 ஏக்கர் பாசனத்திற்காகத்தான் கட்டப்பட்டது. ஆனால், திருப்பூர் நகரின் சலவை சாயப்பட்டறை முதலாளிகள் ஆலைக்கழிவுகள் முழவதையும் நொய்யல் ஆற்றில்தான் திறந்து விடுகின்றனர். கழிவுநீரில் உள்ள சல்ஃபர், சோடியம், காஸ்டிக் சோடா, பிளீச்சிங் தண்ணீர் ஆகியவை காரணமாக விவசாயத்திற்கோ குடிநீருக்கோ பயன்படுத்த முடியாத அளவிற்கு தண்ணீர் நஞ்சாக்கப்பட்டு விட்டது.


இதனால் அணையைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலம், நீர், காற்று, குடிநீர், குடிநீர் ஆதாரங்கள், கால்நடைகள், விவசாயப் பயிர்கள், மரங்கள், செடி கொடிகள் என அத்தனையும் பாழ்பட்டு விட்டன. மலட்டுத்தனம், கருச் சிதைவு எனப் பல்வேறு நோய்களுக்கும், வறுமைக்கும் இப்பகுதி மக்கள் ஆட்படுத்தப்பட்டுள்ளனர். பத்தாண்டுகளாக விவசாயிகள் பல போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை; நீதிமன்றத்திற்கு ஓடியும் பயனில்லை. 700க்கும்மேற்பட்ட முதலாளிகள் சுத்திகரிப்பு ஆலைகளைக் கட்ட வேண்டுமென்றும், விவசாயிகளுக்கு முதலாளிகள் 12 கோடி ரூபாய்கள் இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் உயர்நீதி மன்றம் "ஆணையிட்டது'. ஆனால் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. இன்றளவும் தொடர்ந்து கழிவுநீர் தங்கு தடையின்றி நொய்யல் ஆற்றில் பாய்ந்து வருகிறது.


இதனால் அணை நிரம்பி வழிய ஆரம்பித்தது. அணை உடையும் அபாயம்; தண்ணீரைத் திறந்து விடுமாறு 2005 மே இறுதியில் உயர்நீதி மன்றம் ஆணையிட்டது; உடன் திறக்கப்பட்டது; இதனால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டதோடு, கழிவுநீர் காவிரியில் கலந்து, அதனால் காவிரியிலிருந்து குடிநீர் பெறும் கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் இந்தக் கழிவுநீர் கலந்த தண்ணீர்தான் குடிநீர். இத்தனைக்குப் பிறகும் ""நொய்யல் ஆற்றில் கழிவுநீரை விடக் கூடாது; உடனே தடுத்து நிறுத்த வேண்டும்'' என்று மட்டும் உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பிக்க மறுக்கிறது. காரணம், ""தொழில்பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு, அன்னியச் செலாவணி இழப்பு'' என்றெல்லாம் முதலாளிகள்கூறும் வாதத்தை உயர்நீதி மன்றம் வேதவாக்காக ஏற்றுக் கொள்கிறது.


பவானி — சவுத் இண்டியா விஸ்கோஸ் ஆலை பவானியிலிருந்து அன்றாடம் 400 லட்சம் லிட்டர் தண்ணீரை எடுத்துப் பயன்படுத்திவிட்டு அதேஅளவு நீரை கழிவாக பவானி ஆற்றில் விடுகிறது. இதனால் பவானி நீர்த்தேக்கத்தில் அதிகஅளவு ரசாயனங்களும், கனரக உலோகக் கழிவுகளும் கலந்திருக்கின்றன. மேலும், யுனைடெட் பிளீச்சர்ஸ், டேன் இண்டியா, டி.டி.கே. அட்டைத் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள் போன்றவைகளும் தங்கள் கழிவுகளை பவானி ஆற்றில் கொட்டுகின்றன. சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் போன்ற நகரங்களின் சாக்கடைகளும் இதில் கலக்கின்றன. இதனால் பவானி ஆற்றுக் குடிநீரைப் பயன்படுத்துபவர்கள் வயிற்றுப்போக்கு, சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.


கொடகனாறு — திண்டுக்கல் நகரையொட்டி ஓடும் கொடகனாற்றின் படுகையில் சுமார் 80 தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றிலிருந்து நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் கழிவுநீர் ஆற்றில் விடப்படுகிறது. இதனால் சுற்றுப்புறக் கிராமங்களில் 20 சதுர கி.மீ நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விட்டது; சிந்தளக் குண்டு எனும் ஒரு கிராமத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான கிணறுகள் பாதிக்கப்பட்டு விவசாயம் நலிந்து விட்டது. கிணறு வெட்ட ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் திவாலாக்கப்பட்டுள்ளனர்.


பாலாறு — வேலூர் மாவட்டத்தில் மட்டும் 317 ஏரிகளுக்குத் தண்ணீர் வழங்குகிறது பாலாறு. இந்த ஆற்றிலிருந்து பாசனத்திற்கு 606 ஆற்று ஊற்றுக் கால்வாய்கள் இருந்தன. பாலாற்றில் ஆற்றடி நீரோட்டம் 30 அடியிலிருந்து 40 அடி ஆழம் வரை உள்ளது. இது இந்த ஆற்றுக்கே உரிய சிறப்பு. பல நூற்றுக்கணக்கான கிராமங்களுக்குக் குடிநீரையும், ஆயிரக்கணக்கான கிணறுகளுக்கு நீரூற்றையும் இது அளித்து வந்தது. ஆனால், இவையெல்லாம் இன்று சாகடிக்கப்பட்டு விட்டன. காரணம், பாலாற்றுப் படுகையில் கட்டப்பட்டுள்ள சுமார் 100 சிறிய, பெரிய தோல் தொழிற்சாலைகள், இரசாயனத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீராகும். அன்றாடம் 450 லட்சத்திலிருந்து 500 லட்சம் லிட்டர் கழிவுகள் ஆற்றில் கொட்டப்படுகின்றன.


பாலாற்றுப் படுகையில் ஒரு நாளைக்கு 110 லட்சம் கிலோ


தோல் பதனிடப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 100 கிலோ


எடையுள்ள பதனிடப்படாத தோல், பதனிட்டபின் 20லிருந்து 30 கிலோ வரை எடையுள்ள தோலாக மாறுகிறது. மீதமுள்ள கழிவுத்தோல் முழுவதும் திடக் கழிவுகளாக ஆற்றில் கொட்டப்படுகிறது.


யமுனை நதி — தமிழ்நாட்டில் எப்படி காவிரியானது கூவத்திற்கு அடுத்தபடியாக மிகவும் மாசுபடுத்தப்பட்ட நதியாக மாற்றப்பட்டிருக்கிறதோ அப்படி யமுனை நதி உலகிலேயே மிக மிக மாசுபடுத்தப்பட்ட நதிகளில் ஒன்றாக மாறிவிட்டது. டெல்லியைச் சுற்றி 22 கி.மீ. தூரம் ஓடும் யமுனை நதி அந்தத் தொலைவு முழுவதும் துர்நாற்றம் வீசும் சாக்கடையாகவே ஓடுகிறது; அந்த நதி 570 லட்சம் மக்களுக்குக் குடிநீரும், பத்தாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதியும் வழங்குகிறது. யமுனையைக் கடப்பவர்கள் எல்லாம் மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் கடக்கிறார்கள். டெல்லியில் ஓக்லா என்ற இடத்தில் ஷாத்ரா என்ற சாக்கடைக் கால்வாய் மட்டும் நாள் ஒன்றுக்கு 60 கோடி லிட்டர் கழிவுநீரை யமுனையில் கொட்டுகிறது. அந்த இடத்தில் யமுனைத் தண்ணீரில் சுத்தமாக ஆக்ஸிஜன் இல்லாமல் போய் விடுகிறது என்றும் மீன் போன்ற எல்லா உயிரினங்களும் மடிந்து அற்றுப் போய்விட்டன என்றும் கூறுகிறார்கள் வல்லுனர்கள். இனி, யமுனையைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்றால் ஓரிரு நூற்றாண்டுகள் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


இப்படி ஒவ்வொரு ஆறும் யாரால் எந்த அளவுக்கு நஞ்சாக்கப்பட்டுள்ளது என விரிவாக விளக்க முடியும். அந்த அளவிற்கு ஏராளமான ஆதாரங்கள், புள்ளி விவரங்கள் உள்ளன. மாசு பட்டிருப்பதில், நஞ்சாக்கப்பட்டிருப்பதில் கூவம் முதலிடமும், காவிரி இரண்டாம் இடமும், நொய்யல் பவானி அடையாறு அடுத்தடுத்த இடங்களையும் பெறுகின்றன என்று அண்ணா பல்கலைக்கழகச் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது. (இந்து, 29.4.2005)


மணற்கொள்ளையின் விளைவு வறட்சி!


குடிநீரையும் பாசனநீரையும் நஞ்சாக்கி தண்ணீர்ப் பஞ்சத்தை / பற்றாக்குறையை உருவாக்குவதில் மணல் கொள்ளையர்கள் (லாரி முதலாளிகள், ஓட்டுக் கட்சித் தலைவர்கள் ஆகியோர்) ஒரு முக்கியமான பங்கு வகிக்கின்றனர். பெரிய கிரிமினல் கும்பலையும் அரசியல் செல்வாக்கையும் வைத்துக் கொண்டு, லஞ்சம் ஊழல் மூலம் பெரிய அதிகாரிகளைக் கையில் போட்டுக் கொண்டு, அன்றாடம் ஆயிரக்கணக்கான லாரிகளில் ஆற்று மணலை டன்டன்னாக வாரி எடுத்துச் சென்று கொள்ளை லாபம் அடிக்கின்றனர்; கீழ்மட்டத்தில் உள்ள சில நேர்மையான அதிகாரிகளோ, மக்களோ இதை எதிர்த்தால் துணிச்சலாக லாரியை விட்டுக் கொலையும் செய்கின்றனர்.


பல அடி ஆழம் மணலைத் தோண்டி எடுத்து விடுவதால், தண்ணீரை உறிஞ்சிப் பாதுகாத்து வைக்கும் ஆற்றின் வலுவும் திறனும் வெகுவாகக் குறைந்து விடுகிறது; ஆற்றில் வருகின்ற தண்ணீரில் பெருமளவு அப்படியே ஓடி கடலில் கலந்து விடுகிறது. இதனால் சுற்று வட்டார நிலத்தடி நீர் மட்டமும், நீர்வளமும் குறைவது வறட்சிக்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் நீர்த்தேக்கம் என்றழைக்கப்படும் கேரள மாநிலத்தில் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படுவது பாலக்காடு மாவட்டம்; இந்த மாவட்டமும் இன்னமும் சில மாவட்டங்களும் அண்மையில் வறட்சிக்கு ஆளாகித் தவித்தன. இதற்கான முக்கியமான காரணம் வரைமுறை இல்லாமல் ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டதுதான் என்று வல்லுனர்கள் சொல்லியுள்ளனர்.


மணலில் உள்ள ஒரு வகை பாக்டீரியா, நீரைத் தூய்மையாக்குகிறதென்றும், மணற்கொள்ளை காரணமாக இயற்கையாக நடைபெறும் இந்தச் சுத்திகரிப்புப் பணியும் அழிக்கப்பட்டு நிலத்தடிநீர் மேலும் மாசுபடுகிறது என்றும் கூறுகின்றனர் சூழலியல் ஆய்வாளர்கள்.


ஏரிகளை விழுங்கும் ரியல் எஸ்டேட் முதலாளிகள்


தண்ணீர்ப் பற்றாக்குறையை உருவாக்கும் குற்றவாளிகளில் இன்னொரு முக்கியமான பிரிவினர் ரியல் எஸ்டேட் முதலாளிகள். இவர்கள் பகல் கொள்ளை அடிப்பதற்காக நகர்ப்புறங்களை விரிவாக்கிக் கொண்டே போகிறார்கள்; நகர்ப்புறங்களைச் சுற்றியுள்ள நல்ல தண்ணீர் வளமிக்க விளைநிலங்களை எல்லாம் வாங்கி பிளாட் போட்டு விற்கிறார்கள்; இதனால் அங்கெல்லாம் கான்கிரீட் வீடுகளாகி, தண்ணீரை நிலம் உறிஞ்சுவதற்கான மேற்பரப்பு வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது. பெரும் பெரும் அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டி அவற்றின் பயன்பாட்டிற்காக வரைமுறையற்று தண்ணீர் உறிஞ்சப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் விரைவாகக் கீழே இறங்குகிறது.


இவர்கள் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் எதையும் விட்டு வைப்பதில்லை. எல்லாவற்றையும் நிரப்பி வீடாக்கி விடுகிறார்கள். பலமாதங்கள் தொடர்ந்து ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருந்தால்தான் நிலம் தண்ணீரைத் தொடர்ந்து உறிஞ்ச முடியும். அதனால் நிலத்தடி நீர்வளமும் செழிக்கும். ரியல் எஸ்டேட் முதலாளிகளால் இந்த வாய்ப்பு பலாத்காரமாக அடைக்கப்பட்டு வருகிறது.


சென்னை நகரைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏரிகள் இப்படிக் காணாமல் போயிருப்பதை இப்போதுதான் "கண்டுபிடித்திருப்பதாக'க் கூறுகிறார்கள் அதிகாரிகள். மாநகரப் பகுதிக்குள் உள்ள ஏரிகளைத் தூர்வாரும் திட்டத்திற்காக, கையில் வரைபடத்தை வைத்துக் கொண்டு அதிகாரிகள் ஏரிகளைத் தேடுகிறார்கள். சென்னையில், சேத்துப்பட்டு ஏரி ஒன்றுதான் மிச்சமிருக்கிறதாம்!


நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள ஏரிகள் குளங்களின் நிலை இதுதான். அவை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன அல்லது குப்பைத் தொட்டிகளாகவும் கழிவுநீர்க் குட்டைகளாகவும் மாற்றப்பட்டு விட்டன. மக்கிப் போகாத பாலிதின் பிளாஸ்டிக் குப்பைகளில் தொடங்கி, அழுகி நாறும் குப்பைகளும், அபாயகரமான மருத்துவமனைக் கழிவுகளும், இன்னதென்றே தெரியாத வேதிப் பொருட்களும் கொட்டப்படுவதால் சுற்று வட்டாரத்து வீடுகளின் கிணற்று நீர் உடனே நஞ்சாகிறது. நிலத்தடி நீரோ நிரந்தரமாக நாசமாகிறது.


பணக்கார வர்க்கத்தின் குப்பை மேடாக நகரங்கள்!


நகரத்தையும் நகரம் சார்ந்த பணக்கார வர்க்கத்தையும் கொழுக்க வைப்பதையே நோக்கமாகக் கொண்ட பொருளாதாரம், அவர்கள் நுகர்ந்த கழிவுகளின் குப்பைமேடாக நகரத்தை மாற்றி, இயற்கையை நாசமாக்குவதுடன் நிற்பதில்லை. இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையே பணக்கார வர்க்கம் தன் நுகர்பொருளாக்கிக் கொள்கிறது.


ஏற்றுமதி அந்நியச் செலாவணி என்ற பெயரில் காவிரியை திருப்பூர் முதலாளிகளின் சாக்கடையாக மாற்றியிருக்கும் அதே கொள்கை, வெளிநாட்டு உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகச் சுற்றுலா மையங்கள் அமைக்கிறது. ஆறுகள் உருவாகும் இடங்கள், இயற்கை ஊற்றுகள் உள்ள இடங்கள், இயற்கை எழில் கொஞ்சும் அருவியோரங்கள், ஆற்றங்கரைகள் மற்றும் இதுவரை மனிதர்களே போகாத காட்டுப்பகுதிகளில், ஏரிக்கரைகளில் ஐந்து நட்சத்திரச் சுற்றுலா விடுதிகள் அமைக்கப்படுகின்றன. அங்கு மனிதக் கழிவுகளும், பிற எல்லா வகைக் கழிவுகளும் அப்படியே அந்த நீர்நிலையின் தலைப்பகுதியில் கொட்டப்படுகின்றன. இதனால், ஆறுகள் ஏரிகள் அருவிகள் எல்லாம் நஞ்சாக்கப்படுகின்றன.


இன்னும் மேல்தட்டு வர்க்கத்தினரின் உல்லாசக் கேளிக்கைகளுக்காகத் தண்ணீர் விளையாட்டு மையங்கள், செயற்கைப் பனிச்சறுக்கு மையங்கள், தண்ணீர்ப் பூங்காக்கள் போன்றவை அமைக்கப்படுகின்றன. தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடும் கோடைக் காலத்தில் கோக், பெப்சி நிறுவனங்கள் நடத்தும் மழை நடனங்களுக்காக லாரிலாரியாய்க் குடிநீர் அழிகிறது, கழிவுநீராக மாசுபடுத்தப்படுகிறது.


இன்று நிலத்தடி நீர் மட்டம் வீழ்ச்சியடையும் பிரச்சினை குறித்துப் பேசத் தொடங்கியவுடனே, முதல் குற்றவாளியாக விவசாயிகளை அடையாளம் காட்டுகின்றனர் முதலாளித்துவ வல்லுனர்கள். வகை தொகையில்லாமல் பாசனத்திற்குத் தண்ணீரைச் செலவிடுவதாக விவசாயிகள் மீது பழிபோடுகின்றனர். இது அபாண்டமானது. பன்னாட்டு முதலாளிகளும் இந்திய அரசும்தான் பசுமைப்புரட்சி எனும் விபரீதத்திற்குள் இந்திய விவசாயிகளை இழுத்து விட்டனர். இன்று அதன் விளைவுகளுக்கு விவசாயிகளைக் குற்றம் சாட்டுகின்றனர்.


பசுமைப் புரட்சியால் அழிந்த தண்ணீர், இறந்த விவசாயிகள்!


1960களின் இறுதியில் நமது நாட்டில் புகுத்தப்பட்டது பசுமைப் புரட்சி; அதற்கு முன்புவரை ஏரிகள், குளங்கள், ஆறுகள் மூலம் தான் விவசாயிகள் பெரும்பாலும் பாசனம் செய்து வந்தனர். 1950களில் புதிய அணைகள் கட்டியதோடு, பாசன வாய்க்கால்களை அமைத்து ஏரிகள், குளங்களை வெட்டி, தூர் எடுத்து மராமத்தும் செய்து வந்தது அரசு. பசுமைப் புரட்சிச் சாகுபடி முறைகளோ பணப்பயிர்களை ஊக்குவிப்பதாகவும், அதிக அளவு தண்ணீர் கோரும் சாகுபடி முறைகளாகவும் இருந்தன.


பன்னாட்டு உரக் கம்பெனிகள், டிராக்டர் கம்பெனிகள், விதை மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துக் கம்பெனிகளின் சந்தைக்காகவும் லாபத்திற்காகவும், உலக வங்கியின் உத்தரவுப்படி புகுத்தப்பட்டதுதான் பசுமைப்புரட்சி என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் இது புரியும். அரசும் பொது மராமத்துப் பணிகளைப் புறக்கணிக்கத் தொடங்கியது. எனவே, கூடுதல் தண்ணீர்த் தேவைக்கு, தனித்தனி விவசாயிகள் தனித்தனியே புதிய கிணறுகள் வெட்டுதல், ஆழ்துளைக் குழாய் போடுதல், மின்சார பம்பு செட்டு போடுதல் ஆகியவற்றை லட்சக்கணக்கில் பெருக்கினர். இதற்கேற்ப நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது. நீர்மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டன. நிலத்தடி நீரும் உப்பானது.


பணப்பயிர் முறைக்கு மாறும்படி விவசாயிகளைத் தூண்டியது பசுமைப்புரட்சி. இவ்வாறு பருத்தி விவசாயத்திற்கு மாறிய ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்ட விவசாயிகள் சர்வதேசச் சந்தையிலும், உள்ளூர்ச் சந்தையிலும் நல்ல விலை கிடைக்கிறது என்ற தூண்டிலுக்குப் பலியாகி கடன் வாங்கி ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி பம்பு செட்டுக்கள் போட்டு விவசாயம் செய்தனர். நிலத்தடி நீர் இறங்கிக் கொண்டே போனது. ஒரு ஆழ்துளைக் கிணறு வறண்டு விட்டால், அதே விவசாயி இன்னொரு கிணறு அமைத்தார்; அதுவும் வறண்டுட்டால் இன்னொன்று. இவ்வாறு சிறு, நடுத்தர விவசாயிகளும் கூட இரண்டு மூன்று ஆழ்துளைக் கிணறுகள் இறக்கினர். இதன் விளைவாக அப்பகுதி முழுவதுமே நிலத்தடி நீர் அதலபாதாளம் சென்றது; நட்டத்துக்கு மேல் நட்டம் — வாங்கிய கடனைக் கட்ட முடியாமல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பசுமைப்புரட்சியும் பணப்பயிரும் பாலிடாலாக மாறி தண்ணீர் வளத்தைச் சாகடித்தது மட்டுமல்ல, விவசாயிகளையும் சாகடித்தது. இந்தக் கொடுமைகளை "தி இந்து' நாளேட்டின் துணை ஆசிரியர் பி.சாய்நாத் என்பவர் பல கட்டுரைகள் மூலம் சோகம் ததும்ப வருணித்துள்ளார்.


பசுமைப் புரட்சிச் சாகுபடிகளில், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஏராளமாகக் கொட்டப்பட்டதால், இரசாயனங்கள் அதிகஅளவில் மண்ணில் கலந்து தண்ணீர் வளம் நஞ்சாக்கப்பட்டது; பல்லுயிர் வகைகள் அழிந்தன; மண்வளம் கெட்டது; மண் இறுகி உறிஞ்சும் திறனை இழந்ததால் நிலத்தடி நீர் வளம் புதுப்பிக்கப்படுவதற்கான வாய்ப்பும் அடைபட்டது.


1990களிலிருந்து புகுத்தப்பட்ட தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளின் விளைவாக, புதிய அணைகள் கட்டுவது, கால்வாய்கள், ஏரிகுளங்கள் கட்டுவது பராமரிப்பது, சிறுசிறு அணைகள் கட்டுவது, சமூகக் காடு வளர்ப்பு ஆகியவற்றிலிருந்து அரசு முற்றிலும் விலகிக் கொண்டது. தண்ணீரைத் தனியார் கொள்ளைக்குத் திறந்துவிடவும் செய்தது. இது எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றியது போல தண்ணீர்ப் பஞ்சத்தைப் பற்றி எரியச் செய்தது.


ஆக, தண்ணீர்ப் பஞ்சத்திற்கும், வரவர தண்ணீர்ப் பற்றாக்குறை அதிகரித்து வருவதற்கும் மேற்கூறிய காரணங்களே அடிப்படை ஆகும். தண்ணீர்ப் பஞ்சத்தை உருவாக்குபவர்கள் இலாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்களைச் சுரண்டி வாழும் உள்நாட்டு முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனி முதலாளிகளும் தான்.


காடுகளை அழிப்பதும் முதலாளிகளே!


ஆறுகளை நஞ்சாக்குவதற்கு இணையான அளவில் காடுகளை அழித்து மழைப்பொழிவைக் கெடுப்பவர்களும் முதலாளிகள்தான். எந்தத் தொழிற்சாலையின் தேவைக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன, எந்த முதலாளியின் லாபத்திற்குக் காடுகள் இரையாகின்றன, எந்த வர்க்கத்தின் நுகர்வுக்காக இந்தக் கொள்ளை நடக்கிறது என்பதைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்துவிட்டு, காடுகள் அழிவதைச் சொல்லி நீலிக் கண்ணீர் விடுகின்றன அரசும் ஊடகங்களும்.


காடுகளை அழிப்போரை ஏதோ ஒரு முகம் தெரியாத மாஃபியா கும்பலாகவும், யாரோ ஒரு வீரப்பனாகவும் சித்தரித்து உண்மைக் குற்றவாளிகள் ஒளிந்து கொள்கின்றனர். கனிவளங்களைச் சூறையாட காடுகளை அழிக்கிறார்கள் சுரங்க முதலாளிகள். சட்டிஸ்கரில் தனியார் மின்நிலையம் அமைக்க ஒரே அடியில் 20,000 மரங்களைச் சாய்த்திருக்கிறது ஜிண்டால் நிறுவனம்.


காகித ஆலை முதலாளிகளும் மரச்சாமான்கள் உற்பத்தி செய்கிற முதலாளிகளும் காடுகளைச் சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் வரைமுறையற்று அழித்து மொட்டை அடிக்கிறார்கள். மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை அழிப்பின் காரணமாகவே கேரளாவில் அண்மை ஆண்டுகளில் வறட்சி வந்ததென்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே, மழை அளவு குறைந்து வறட்சி ஏற்படுவதற்கும், மண் அரிப்பு ஏற்பட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது குறைவதற்கும் இதே முதலாளித்துவ வர்க்கத்தினர்தான் காரணமாக இருக்கின்றனர்.


கார்கள் பெருக, கார்மேகம் அழிகிறது!


பருவமழை தவறுவதற்கும், குறைவதற்கும், வெப்பம் அதிகரிப்பதற்கும் காரணம் "புவி சூடேறுதல்' தான் என்பது இன்று உலகம் ஒப்புக் கொண்ட உண்மை. வாகனப்புகை, குளிர்பதனப் பெட்டிகளிலிருந்து வெளிவரும் குளோரோஃப்ளோரோ கார்பன் போன்ற வாயுக்களால் ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்து அதன் விளைவாகத்தான் புவிக்கோளம் ஆண்டுக்கு ஆண்டு வெப்பமடைந்து வருகிறது. இதனால் வடதுருவ, தென்துருவப் பனிக்கட்டிகள் கரைந்து கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக நன்னீர் இருப்பின் அளவும் குறைந்து கொண்டே வருகின்றது.


இமயமலையில் பனிப்பாறைகள் ஆண்டுக்கு 10 முதல் 15 மீட்டர் உயரத்திற்குக் கரைந்து வருகின்றன; இதன் விளைவாக இமயத்திலிருந்து பிறக்கும் கங்கை, பிரம்மபுத்திரா, சிந்துபோன்ற ஆறுகளில் வெள்ளம் அதிகரிக்கும்; சில ஆண்டுகளுக்குப் பிறகு பனிப்பாறைகள் பெருமளவு குறைந்து தண்ணீரும் குறைந்து விடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்குக் காரணமான நச்சு வாயுக்களைத் தடுக்க வேண்டும்; அப்படியென்றால், இரு சக்கர வாகனங்கள், மகிழுந்துகள், குளிர்பதனப் பெட்டிகள் ஆகியவற்றின் உற்பத்திக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். மாறாக, இந்தத் தொழில்களைத்தான் அரசு வலிந்து ஊக்குவிக்கிறது. சலுகைகள் வழங்கி வளர்க்கிறது. பேரழிவு நோக்கிய இந்தப் பயணத்தைத்தான் தேச முன்னேற்றமாகச் சித்தரிக்கிறது. இவ்வாறு உலக முதலாளிகள் மற்றும் உள்நாட்டுத் தரகு முதலாளிகளின் லாப வேட்டைக்காக இயற்கை ஒட்டு மொத்தமாகச் சீர்குலைக்கப்படுகிறது.


கடலும் தப்பவில்லை!


முதலாளிகளின் லாபவெறி நன்னீர் வளங்களை நாசமாக்குவதுடன் நின்று கொள்வதில்லை. பரந்து கிடக்கும் கடலையும் அது மாசுபடுத்துகிறது. ஆழ்கடலில் மீன் பிடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான டிராலர்கள் எனப்படும் பிரம்மாண்டமான மீன்பிடிக் கப்பல்கள் கடல் வளத்தை அரித்தெடுக்கின்றன. பல கிலோமீட்டர் சுற்றளவுள்ள அதன் வலைகள் தேவையான மீன்களை மட்டுமின்றி வலையில் சிக்கும் கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் வாரி எடுக்கின்றன. மீன்களை மட்டும் சலித்து எடுத்தபின் செத்து அழுகிப் போன மற்ற உயிரினங்கள் அனைத்தையும் கடலில் கொட்டி கடல்வளத்தை நாசமாக்குகின்றன. பிறகு வெட்டுக் கிளிகள் போல அடுத்த இடம் நோக்கி நகர்கின்றன. கடலில் அன்றாடம் கலக்கும் எண்ணெய்க் கப்பல்களின் கசிவுகள், பன்னாட்டு நிறுவனங்கள் காதும் காதும் வைத்தாற்போல கடலில் கொட்டி விட்டுச் செல்லும் அபாயகரமான ரசாயனக் கழிவுகள், அணுக் கழிவுகள், கடலடியில் நடத்தப்படும் அணுச்சோதனைகள்.... என கடல் வளத்தை நாசமாக்கும் உலக முதலாளி வர்க்கத்தின் குற்றங்கள் ஒரு தனிப்பட்டியலாக நீள்கின்றன.


நன்னீர் வளம் அழிந்து, கடல்நீரைக் குடிநீராக்கித்தான் மனிதகுலம் உயிர் பிழைக்க வேண்டும் என்ற நிலை நாளை தோன்றினால், கடல்நீரும் கூட கழிவு நீராகிவிட்ட சூழலைத்தான் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுமட்டுமல்ல, பரந்து கிடக்கும் கடலைக்கூடப் பட்டா போட்டுப் பிரித்து, பன்னாட்டு முதலாளிகளிடம் குத்தகைக்கு விட்டுவிட வேண்டும் என்ற திட்டத்தைத் தயாரித்து விட்டார்கள் அமெரிக்க முதலாளிகள். தண்ணீர்ப் பஞ்சம் எனும் பிரச்சினையை எந்தக் கோணத்திலிருந்து பரிசீலித்தாலும், அதற்குக் காரணமான குற்றவாளிகள் முதலாளி வர்க்கத்தினர்தான் என்ற முடிவையே நாம் வந்தடைய இயலும். அது சாய ஆலை முதலாளியாகவோ துணி ஆலை முதலாளியாகவோ சாராய முதலாளியாகவோ இருக்கலாம். இந்நாட்டுத் தரகு முதலாளியாகவோ பன்னாட்டு முதலாளியாகவோ இருக்கலாம்.


தன்னுடைய குறுகிய லாபநோக்கத்துக்காக கோடிக்கணக்கான மக்களின் குடிநீரையும், லட்சக்கணக்கான விவசாயிகளின் விளைநிலத்தையும் நாசமாக்கும் "இரக்கமின்மை' இந்த வர்க்கத்துக்கு மட்டுமே உரியது. நகையை விற்று, கந்துவட்டிக்குக் கடன் வாங்கி வீடு கட்டும் மக்கள் யாரும் "கழிவு நீர்த் தொட்டி கட்டக் காசில்லை' என்று சொல்லித் தம் வீட்டுக் கழிவறைத் தண்ணீரைச் சாலையில் விடுவதில்லை. சட்டத்திற்கு அஞ்சுவதல்ல காரணம்; அவ்வாறு செய்ய யாருக்கும் மனம் வருவது இல்லை. ஆனால் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் முதலாளிகள்தான் கொஞ்சமும் கூசாமல் தம் கழிவுநீரை ஆற்றில் இறக்குகிறார்கள்.


குடிநீர்க் குடத்தில் கையை விட்டு விளையாடும் அறியாப் பிள்ளைகளைக்கூட நாம் அடித்து விடுகிறோம். லட்சக்கணக்கான மக்களுக்கும், உயிரினங்களுக்கும் குடிநீர் வழங்கி, உணவு உற்பத்திக்குத் தேவையான பாசனவசதியும் அளிக்கும் ஆறுகளில் மனதறிந்து நஞ்சைக் கலக்கிறார்களே இந்த முதலாளிகள், இதைவிடக் கொடிய பயங்கரவாதச் செயல் இருக்க முடியுமா?


இது பயங்கரவாதமில்லையா?


சந்தேகத்திற்கிடமின்றி இது பயங்கரவாதம்தான். ஆனால் இந்தப் பயங்கரவாதிகளை அரசு தண்டிப்பதில்லை. கழிவு நீரைக் கலக்கும் ஆலைகளை மூடுவதில்லை. நடுநிலை தவறாமல் நாட்டுக்கே நீதி கூறுவதாகச் சொல்லிக் கொள்ளும் நீதிமன்றங்கள் ஆற்றில் கழிவுநீர் விடுவதை நிறுத்தச் சொல்லிக் கூட ஆணை பிறப்பிப்பதில்லை. சுத்திகரிப்பு ஆலை கட்டுவதை விரைவு படுத்துமாறு ஆண்டுக் கணக்கில் முதலாளிகளுக்கு "அறிவுறுத்தியபடியே' இருக்கின்றன. கோக் ஆலையின் உரிமத்தை பிளாச்சிமடா பஞ்சாயத்து பறித்தால், உடனே உரிமம் வழங்கச் சொல்லி பஞ்சாயத்துக்கு உத்தரவிடுகிறது உயர்நீதி மன்றம்.


அதிகார வர்க்கத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டாம். ஆறுகள், கால்வாய்களில் மாநகராட்சிக் கழிவுகளைக் கலக்க ஆணையிடுவதே மாநகராட்சி ஆணையர்கள்தான். மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியர்களும் இந்தக் கொடுமையைத் தடுக்க முயற்சி எடுப்பதேயில்லை. இவர்கள் எல்லாம் மெத்தப் படித்தவர்கள், நிபுணர்கள், சமூகத்திற்குப் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!


கிடைத்தற்கரிய செல்வமான தண்ணீரில் நச்சுக் கழிவுகள் கலப்பதால் ஏற்படும் கடும் விளைவுகள் பற்றியும் அதன் பரிமாணம் குறித்தும் நன்றாகத் தெரிந்தே அனுமதிக்கும் இந்த மேதைகளும் நிபுணர்களும் தான் முதலாளிகளைவிட மிகவும் இரக்கமற்ற கொடியவர்களாக, சமூக விரோதிகளாக இருக்கிறார்கள். இவர்களின் திறமையும் பட்டங்களும், நீதிமான்கள் என்ற கௌரவமும் இந்த அயோக்கியத்தனத்தை மூடி மறைக்கும் கவசங்களாகவே உள்ளன. முதலாளிகள் போடும் எலும்புத் துண்டுகளுக்கு வாலை ஆட்டும் பிராணிகளாகவே இவர்கள் இருக்கிறார்கள்.


திருட்டுக்குத் தண்டனை பரிசு!


அதிகாரவர்க்கம், நீதித்துறையினர் மற்றும் ஓட்டுக் கட்சிகளின் கருத்துப்படி முதலாளிகளின் லாபம் புனிதமானது. அதுதான் தேச நலன்; அதுதான் சமூகத்தின் முன்னேற்றம். அதைப் பாதிக்கும் விதத்திலான எத்தகைய நடவடிக்கையையும் இவர்கள் எடுக்க மாட்டார்கள். எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அவற்றைப் பயன்படுத்த மாட்டார்கள்.


இன்றைய பிரதமரும் அன்று உலக வங்கியின் கூலி பெற்ற பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங் தண்ணீர் வீணாக்கப்படுவதற்கு காரணம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதுதான் என்று அப்பட்டமாக விவசாயிகளைத் தூற்றியுள்ளார். மின்சாரம் இலவசமாகக் கிடைப்பதால், தங்கள் விருப்பம் போல மின் மோட்டாரை ஓடவிட்டு தண்ணீரை விவசாயிகள் வீணாக்கி விட்டார்கள். எனவே, இனி மின்சாரம் மட்டுமல்ல, பாசனத்திற்கான தண்ணீரைக் கூட இலவசமாகத்தரக் கூடாது. அதற்கும் கட்டணம் வசூலிக்க வேண்டுமென்று வன்மத்துடன் பேசியுள்ளார்.


ஆறுகளை நஞ்சாக்கும் ஆலை முதலாளிகளுக்கு எதிராகவோ, ஏரிகளை விழுங்கும் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு எதிராகவோ, நிலத்தடி நீரைச் சூறையாடும் பன்னாட்டுத் தண்ணீர்த் திருடர்களுக்கு எதிராகவோ இந்தக் கோபத்தில் ஒரு சதவீதத்தைக் கூட அரசு காட்டுவதில்லை. எந்த முதலாளிவர்க்கம் தண்ணீரை நஞ்சாக்கிப் பஞ்சத்தை உருவாக்குகிறதோ, அந்த முதலாளி வர்க்கத்திடமே, இந்தப் பஞ்சத்தைப் பயன்படுத்திக் கொள்ளை லாபம் அடித்துக் கொள்ளுங்கள் என்று அனுமதித்துவிட்டு, மக்களுக்குத் தண்ணீர் வினியோகம் செய்யும் பொறுப்பிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்கிறது. விவசாயிகளுக்கும், மக்களுக்கும் தண்டனை. தண்ணீரைக் கொள்ளையடித்து விற்பனை செய்யும் முதலாளிகளுக்குப் பரிசு! இதுதான் அரசாங்கத்தின் தண்ணீர்க் கொள்கை.