Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்' கைஅடித்து விரட்டுவோம்!

தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க "கோக்' கைஅடித்து விரட்டுவோம்!

  • PDF

அன்பார்ந்த உழைக்கும் மக்களே,
தண்ணீர்ப் பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். குடிநீருக்காக மக்கள் தவிக்கும் சூழ்நிலையில் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்தித் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டும். நீர்வளத்தைக் கையகப்படுத்தி இலவசமாக மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும்.


ஆனால் அரசு என்ன செய்கிறது? தண்ணீருக்காகப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துகிறது. நெல்லை அருகே கங்கை கொண்டான் எனும் கிராமத்தில் அமையவிருக்கும் கொக்கோ கோலா ஆலைக்கு, தாமிரவருணி ஆற்றிலிருந்து குழாய் போட்டுக் கொண்டுவந்து, லிட்டர் ஒண்ணரை பைசா விலைக்கு தண்ணீர் விற்க ஒப்பந்தம் போடுகிறது. கோவில்பட்டி சாத்தூர் மக்களுக்குக் கிடைக்காத தாமிரவருணித் தண்ணீரை கொக்கோ கோலாவுக்கு வழங்குகிறது. அதை பாட்டிலில் அடைத்து 13 ரூபாய் விலைக்கு விற்று தமிழக மக்களைக் கொள்ளையடிக்கப் போகிறது கொக்கோ கோலா.


அமெரிக்க கம்பெனிக்கு வாரி வழங்குமளவுக்கு இங்கே நீர்வளம் கொழிக்கிறதா? "தமிழகத்தின் நிலத்தடி நீரில் 72 சதவீதம் குடிக்க லாயக்கற்றது'' என்று கூறுகிறது பொதுப் பணித்துறை. மீதமுள்ள 28 சதவீத நீர்வளத்தை போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சிக் காசாக்குகிறார்கள் தனியார் முதலாளிகள். 600 தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் ஏரிகளையும் நிலத்தடி நீரையும் உறிஞ்சுகின்றன. சென்னை நகரில் மட்டும் இவர்களது தண்ணீர் வியாபாரம் மாதமொன்றுக்கு 50 கோடி ரூபாய் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது பொதுப்பணித்துறை.


அதாவது, "தாகத்தால் தவிக்கும் மக்களைக் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள்'' என்று தனியார் முதலாளிகளுக்குக் கண்ணைக் காட்டிவிட்டிருக்கிறது இந்த அரசு. "அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் பேர்வழிகள், பொதுச் சொத்தைச் சூறையாடும் திருடர்கள், இவர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?'' என்று நீங்கள் கேட்கலாம்.


உண்மைதான். ஆனால் இவர்கள் திருடர்கள் மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கூலிகள்; உலக வங்கியின் அடிமைகள். அதிமுக, திமுக, காங், பாஜக, தெலுங்கு தேசம் என எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்த அடிமைகளின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவர்களுக்கு ஆணையிடும் ஆண்டையான உலகவங்கியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.


உலக வங்கிக்காரன் என்பவன் யார்? "குடிநீர் முதல் கக்கூசு வரை எல்லா நலத்திட்டங்களுக்கும் உதவி வழங்கும் வள்ளல்'' என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஒரு கந்துவட்டிக் கும்பல்; ஏழை நாடுகளுக்கு வலியக் கடன் கொடுத்து, வலையில் வீழ்த்தி அந்த நாடுகளின் வளங்களையும் சொத்துக்களையும் வளைத்துப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்குவதுதான் உலகவங்கியின் பணி.


"உலக வங்கி ரேசன் அரிசி விலையை உயர்த்தச் சொல்கிறது, மின் கட்டணம் பேருந்துக் கட்டணத்தைக் கூட்டச் சொல்கிறது'' என்று ஜெயலலிதாவும் கருணாநிதியும் சட்ட சபையிலேயே பேசுவதை நீங்கள் எத்தனைமுறை கேட்டிருப்பீர்கள்! மத்திய அரசு முதல்மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் வரை அனைத்து மட்டங்களிலும் உலகவங்கி நேரடியாக அதிகாரம் செலுத்துகிறது; கண்காணிக்கிறது. அந்த உலக வங்கிதான் தண்ணீரைத் தனியார்மயமாக்கச் சொல்கிறது. பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதைப் போலவே ஆறு,குளம், ஏரிகளையும் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கச் சொல்கிறது.


இயற்கையின் கொடையான தண்ணீரை, உயிரின் மூலமான தண்ணீரை, உயிரினங்கள் அனைத்தின் உரிமையான தண்ணீரை ஒரு "விற்பனைச் சரக்கு' என்று சொல்கிறது. ஆறுகளும், குளங்களும் "மக்களின் பொதுச்சொத்தல்ல, முதலாளிகள் தொழில் செய்வதற்கான முதலீடு' என்கிறது. காற்றைப் போலத் தண்ணீரும் மனிதனின் இயற்கையான தேவை என்பதை மறுத்து, அது "காசு கொடுப்பவனுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சேவை' என்கிறது.


உலக வங்கி இதுநாள்வரை தந்திரமாகச் செய்ததை, வெளிப்படையாகவும் சட்டபூர்வமாகவும் செய்வதற்கு காட்ஸ் என்ற சர்வதேச ஒப்பந்தம் அமலுக்கு வர இருக்கிறது. "சேவைத்துறை வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்' என்ற இந்த ஒப்பந்தத்தின்படி, மருத்துவம், கல்வி, வங்கி போன்ற சேவைத்துறைகளைப் போலவே அரசு செய்து வரும் குடிநீர் விநியோகத்தையும் தனியார்மயமாக்க வேண்டும். எனவே இலவசக் குடிநீர் விநியோகத்தை உடனே ஒழிக்கச் சொல்கிறது இந்த ஒப்பந்தம்.


இந்த "காட்ஸ்' ஒப்பந்தத்திலும் இதற்கு முந்தைய "காட்' ஒப்பந்தத்திலும் இந்திய மக்களுக்குத் தெரியாமல், நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் ஒரு அதிகார வர்க்கக் கும்பல் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஒப்புதல் அளித்து விட்டன.


"உலக வங்கி ஐ.எம்.எப் காட்ஸ் உலக வர்த்தகக் கழகம்' என்ற இந்த ஏகாதிபத்திய நிறுவனங்கள் சொல்வதுதான் இனி இந்தியாவின் சட்டம். உலக வர்த்தகக் கழகம் என்ன ஆணையிடுகிறதோ அதற்கேற்ப இந்தியாவின் சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இறையாண்மையற்ற இந்த அடிமைத்தனத்தைத்தான் மறுகாலனியாக்கம் என்று சொல்கிறோம். தண்ணீர் தனியார்மயம் என்பது மறுகாலனியாக்கத்தின் ஒரு குரூரமான வெளிப்பாடு!


தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டால் என்ன நடக்கும்? அது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும். எண்ணெய் விலை ஏறுவது போல தண்ணீர் விலையும் ஏறும். லாபவெறி பிடித்த முதலாளிகள் நீர்வளத்தை போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சி இயற்கையை நாசமாக்குவார்கள். நம் கண்முன்னே ஒரத்தப்பாளையம் நீர்த்தேக்கத்தைத் தமது கழிவுநீர்த் தொட்டியாக மாற்றி எட்டு மாவட்டத்து மக்களின் குடிநீரையும் பாசன நீரையும் நஞ்சாக்கியிருக்கிறார்கள் திருப்பூர் முதலாளிகள்.


பன்னாட்டு முதலாளிகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? முப்போகம் விளைந்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தில் ஆலை அமைத்து, நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, நச்சுக்கழிவுகளையும் இறக்கிவிட்டு இரண்டே ஆண்டுகளில் அந்த வட்டாரத்தையே தரிசாக்கியிருக்கிறது கொக்கோ கோலா. இன்று அந்த மக் கள், ஒரு குடம் தண்ணீருக்காக 5 மைல் நடக்கிறார்கள்.


எனவேதான் சொல்கிறோம் தண்ணீரைப் பன்னாட்டு முதலாளிகளின் உடைமையாக்கினால் அவர்கள் நம் நாட்டின் நீர்வளத்தை அழித்து புல், பூண்டுகள், உள்ளிட்ட எல்லா உயிரினங்களையும் அழித்து அந்தப் பேரழிவை இயற்கையே கூட மீண்டும் சரி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளி விடுவார்கள்.


இவையெல்லாம் நாளை வரவிருக்கின்ற அபாயங்கள் அல்ல. இன்று நம் கண்முன்னே தென்னாப்பிரிக்காவில் தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது. குடிநீருக்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்தி அட்டை வாங்கும் "பிரிபெய்டு கார்டு' முறை அங்கே அமலாக்கப்பட்டுள்ளது. காசு கொடுத்து குடிநீர் வாங்க முடியாத ஏழைகள், கண்ட தண்ணீரையும் குடித்து காலராவுக்கு பலியாகிறார்கள். தென்னாப்பிரிக்க நகரங்களின் தண்ணீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் "விவென்டி' என்ற பன்னாட்டு நிறுவனம்தான் இலவசக் குடிநீரை ஒழிக்க சென்னை மாநகராட்சிக்கு ஆலோசனை கூறி வருகிறது.

 

பொலிவியா நாட்டில் கொச்சபம்பா நகரின் தண்ணீர்க் கட்டணத்தை உயர்த்தி மக்களின் மாத வருவாயில் மூன்றில் ஒரு பங்கைப் பிடுங்கிக் கொண்டது அமெரிக்காவின் "பெக்டெல்' நிறுவனம். பொலிவிய மக்களால் விரட்டப்பட்ட "பெக் டெல்' நிறுவனம் தான் திருப்பூரின் குடிநீர் விநியோகத்தை 30 ஆண்டுகளுக்குக் குத்தகை எடுத்திருக்கிறது.


"நகரங்களின் நீர் விநியோகம் பன்னாட்டு முதலாளிகளுக்கு; கிராமப்புற நீர் வளங்கள் பண்ணையார்களுக்கும் கந்து வட்டிக்காரர்களுக்கும்'' இதுதான் உலக வங்கி திட்டம். 3900 கோடி ரூபாய் உலக வங்கியிடம் கடன் வாங்கி தற்போது தமிழக அரசு அமல்படுத்தவிருக்கும் "நீர்வள மேம்பாட்டுத் திட்ட'த்தின்படி ஏரி, குளங்களை இனி அரசாங்கம் பராமரிக்காது. "பயனாளிகளே பராமரித்துக் கொள்வது' என்ற பெயரில் நீர்வளங்கள் அனைத்தும் கிராமப்புற ஆதிக்க சக்திகளிடம் ஒப்படைக்கப்படும். சந்தைக்கும் கக்கூசுக்கும் டெண்டர் எடுத்த சமூக விரோதிகளைப் போல பாசன நீருக்கு இவர்கள் விவசாயிகளிடம் விருப்பம் போலப் பணம் பிடுங்குவார்கள்.


மராட்டிய காங்கிரசு அரசு கடந்த ஏப்.16 அன்று ஒரு கொடூரமான சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டத்தின்படி ஒரு ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு விவசாயி கட்ட வேண்டிய தண்ணீர் வரி ரூ. 8,000/. இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றவிவசாயிகளுக்கோ வரி ரூ. 12,000/ ஏழை, நடுத்தர விவசாயிகளை விவசாயத்தை விட்டே துரத்தி பட்டினிச் சாவுக்குத் தள்ளப் போகிறது இந்தச் சட்டம்.


தண்ணீர் தனியார்மயமென்பது தண்ணீர்ப் பிரச்சினை மட்டுமல்ல. தண்ணீரை இழந்தால் நாம் சோற்றையும் இழப்போம். விதைகளின்மீது நமது விவசாயிகள் கொண்டிருக்கும் பாரம்பரிய உரிமையை ரத்து செய்து அவற்றை பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குகிறது மத்திய அரசின் புதிய விதைச் சட்டம். உரமும், பூச்சி மருந்தும் ஏற்கனவே அவர்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன. அரசு கொள்முதல் ஒழிக்கப்பட்டு நாடெங்கும் கார்கில், ஐ.டி.சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதலைத் தொடங்கி விட்டன. பன்னாட்டுக் கம்பெனிகள் நேரடியாக ஏற்றுமதிக்கான விவசாயம் செய்வதற்காகவே "தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்' கொண்டு வரப்படுகிறது. தற்போது தண்ணீர் விற்பனையில் இறங்கியிருக்கும் அமெரிக்க மான்சாண்டோ நிறுவனம் "மொத்த உணவுச் சங்கிலியையும் கைப்பற்றுவது தான் எங்கள் திட்டம்' என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது.


தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்டால் நாம் சுயசார்பை இழந்து உணவுக்கும் தண்ணீருக்கும் கப்பலை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்போம். தண்ணீரைக் கட்டுப்படுத்துபவன் எல்லா ஆதாரங்களையும் கட்டுப்படுத்த முடியும். தண்ணீரை இழந்தால் பெயரளவிலான இறையாண்மையையும் நாம் இழப்போம்.


கோக் ஒரு குறியீடு. "உலகின் நீர்வளங்கள் அனைத்தும் எம் தனி உடைமை'' என்று கூறும் பன்னாட்டு தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு கோக் ஒரு பிரதிநிதி. ஆறு, குளங்களும் நிலத்தடி நீர் வளமும் நமக்குச் சொந்தமா, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.


தண்ணீர், முதலாளிகளின் தனி உடைமை என்பதை இந்த நாட்டின் எல்லா ஓட்டுக் கட்சிகளும் அதிகார வர்க்கமும் நீதிமன்றமும் ஊடகங்களும் ஒப்புக் கொண்டு விட்டன. "நம் நாட்டு மக்களின் நல்வாழ்வைக் காட்டிலும் முதலாளிகளின் லாபம் மேன்மையானது. முதலாளிகளின் வளர்ச்சியே தொழில் வளர்ச்சி. முதலாளிகளின் முன்னேற்றமே தேச முன்னேற்றம். இந்தியாவை அந்நிய ஏகாதிபத்தியங்களிடம் அடிமைப்படுத்தும் உரிமையும் முதலாளிகளுக்கு உண்டு. உலகை அடிமைப்படுத்தும் உரிமையோ பன்னாட்டு முதலாளிகளுக்கு உண்டு.'' இதுதான் இவர்கள் கூறும் நீதி.


நாம் தண்ணீரை சரக்காக்கி விற்கவும் சம்மதிக்க முடியாது. தாய்நாட்டை விற்கவும் சம்மதிக்க முடியாது. இவ்வாறு "முடியாது' என்று உரத்த குரலில் முழங்குபவர்கள் நக்சல்பாரிகளைத் தவிர வேறு யாரும் கிடையாது.


இறால் பண்ணை அழிப்புப் போராட்டம், மான்சாண்டோ விதைகளுக்கெதிரான போராட்டம், தேக்குப் பண்ணை அழிப்புப் போராட்டம், நெய்வேலி மின்நிலையம் அமெரிக்கக் கம்பெனிக்கு விற்கப்படுவதற்கெதிரான போராட்டம்... என கடந்த பத்தாண்டுகளாக மறுகாலனியாக்கத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். இதுநாள் வரை மெத்தனம் காட்டிய பலர் இன்று உணர்ந்து வருகிறார்கள்.


மெத்தனம் இனியும் வேண்டாம். தண்ணீர் தனியார்மயத்துக்கெதிராக, தாமிரவருணியை உறிஞ்ச வரும் அமெரிக்க கோக்கிற்கு எதிராக, மறுகாலனியாக்கத்திற்கெதிராக நமது கரங்கள் உயரட்டும்! மண்ணின் உயிரை, மக்களின் உரிமையை உறிஞ்சத் துடிக்கும் கோக்கின் கொடுங்கரம் சாயட்டும்!


"நக்சல்பாரிப் பாதையில் அணி திரள்வோம்!
தண்ணீரைக் கண்ணியாக்கி
மறுகாலனியாக்க வலையை இறுக்கும்
உலக வங்கி, உலக வர்த்தகக் கழகத்தின்
ஆட்சியைத் தூக்கியெறிவோம்!
காட்ஸ் ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவோம்!