Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள் : அறிவாளிகளா, உளவாளிகளா?

  • PDF

சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.


பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு மாபெரும் அறிஞர், கணித விஞ்ஞானி, சமூகவியல் ஆய்வாளர், எழுத்தாளர், ஜனநாயகவாதி, நாத்திகர், கல்வியாளர் என்றெல்லாம் அறியப்படுபவர். பாடநூல்களில் அவரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அவருடைய நூல்கள் இன்றும் உலகெங்கிலும் விற்பனையாகின்றன. அப்பேர்ப்பட்ட அறிஞர் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் உளவாளியாக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா? நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை.


பிரிட்டிஷ் உளவுத்துறையே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. ""ஒரு அறிஞர் என்ற முறையில் கம்யூனிச எதிர்ப்பு நூல்கள் எழுத வேண்டும்; தமக்கு அறிமுகமாகின்ற நண்பர்களில் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்பதை போலீசுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். இந்த முக்கியமான பணிகளுக்காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுத்தோம்'' என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். ரஸ்ஸல் மட்டுமல்ல, ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகிய நான்கு பிரபல அறிவாளிகள் கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்:


அறிவாளிகளா, உளவாளிகளா?


சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.


பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு மாபெரும் அறிஞர், கணித விஞ்ஞானி, சமூகவியல் ஆய்வாளர், எழுத்தாளர், ஜனநாயகவாதி, நாத்திகர், கல்வியாளர் என்றெல்லாம் அறியப்படுபவர். பாடநூல்களில் அவரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அவருடைய நூல்கள் இன்றும் உலகெங்கிலும் விற்பனையாகின்றன. அப்பேர்ப்பட்ட அறிஞர் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் உளவாளியாக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா? நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை.


பிரிட்டிஷ் உளவுத்துறையே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. ""ஒரு அறிஞர் என்ற முறையில் கம்யூனிச எதிர்ப்பு நூல்கள் எழுத வேண்டும்; தமக்கு அறிமுகமாகின்ற நண்பர்களில் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்பதை போலீசுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். இந்த முக்கியமான பணிகளுக்காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுத்தோம்'' என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். ரஸ்ஸல் மட்டுமல்ல, ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகிய நான்கு பிரபல அறிவாளிகள் உண்மையில் கம்யூனிச எதிர்ப்பு உளவாளிகள் என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். அறிவுலகத்தினரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்செய்தி 1996 ஜூலையில் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ஃபிரான்டியர் (ஜூலை 2531, 1999) வார இதழ் வெளியிட்டுள்ள ஓர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.


ரஸ்ஸல் இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பாட்டனார் பிரிட்டிஷ் பிரதமர். இளமைக்காலத்திலிருந்தே ரஸ்ஸல் இடதுசாரியாக இருந்தாலும் ""கம்யூனிஸ்டு அல்லாத இடதுசாரியாக இருக்க வேண்டும்'' என்பதில் வெகு கவனமாக இருந்தவர். எனவே ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே அதை எதிர்த்தார். பிறகு 1920இல் ரசியா சென்று வந்தவுடன் ""போல்ஷ்விக் கோட்பாடும் நடைமுறையும்'' என்ற நூலின் மூலம் தனது மார்க்சிய எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்தார். மார்க்சிய தத்துவம், பொருளாதாரம் இரண்டையுமே அவர் நிராகரித்தார். ஒரு குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டம், அதன் அடிப்படையில் வரலாற்றைப் புரிந்து கொள்வது, புதிய சமுதாயத்தை அமைக்கப் போராடுவது என்பதெல்லாம் தவறு என்று அவர் கருதினார்.


ஒரு கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து அதன் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் வன்முறையிலும் கொலைவெறியாட்டத்திலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என்பதும் அந்த வகையில் மதம், நாசிசம், கம்யூனிசம் ஆகியவை அனைத்தும் ஒன்றே என்பதும் அவர் கருத்து. ஐயவாதமும் அறியொணாவாதமும் "சித்தாந்தம்' என்ற ஒன்று இல்லாதிருப்பதும்தான் சகிப்புத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் அடிப்படையானது என்று அவர் கருதினார். ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடனே ரஸ்ஸல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அனைவரையும் துணுக்குறச் செய்தது. அளப்பரிய தியாகங்கள் செய்து நாஜி ஜெர்மனியை முறியடித்திருந்தார்கள் ரசிய மக்கள். உலக மக்களும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் கம்யூனிசத்தை நோக்கியும், ரசியாவை நோக்கியும் ஈர்க்கப்பட்டனர். கம்யூனிசக் கொள்கை காட்டுத் தீயாய்ப் பரவிய காலமது. அப்போது ரஸ்ஸல் அறிவித்தார்: ""ரசியா மேலை நாடுகளிடம் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். இல்லையேல் அதனை அணுகுண்டு வீசி அழித்துவிட வேண்டும்.'' ஒரு கொள்கைக்காகத்தான் என்றாலும் வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று பேசிய அகிம்சாவாதி, கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆறில் ஒரு பங்கு மனித இனத்தையே அழிக்கக் கோரியதை என்னவென்பது?


ஆனால் 60களில் ரஸ்ஸல் மீண்டும் "ஜனநாயகவாதி' ஆகிவிட்டார். அணு ஆயுத எதிர்ப்பியக்கத்தை முன் நின்று நடத்தினார். அதற்காகக் கைது செய்யப்பட்டார். இதற்குக் காரணம் சமாதானத்தில் நாட்டமா, அல்லது ரசியாவும் அணுகுண்டு தயாரித்துவிட்டது என்ற அச்சமா எனும் கேள்வி எழுகிறது. அதேபோல அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இயக்கம் நடத்தினார் ரஸ்ஸல். அந்த காலகட்டத்தில் உளவு நிறுவனத்துடன் அவருக்கிருந்த உறவு அறுபட்டதால் இந்த "ஜனநாயக உணர்வு' தோன்றியதா, அல்லது உலகு தழுவிய அமெரிக்க எதிர்ப்பு கம்யூனிச ஆதரவாக மாறிவிடாமல் தடுக்க பிரிட்டிஷ் உளவுத்துறை தீட்டிய திட்டத்தின் அங்கம்தான் ரஸ்ஸலின் அமெரிக்க எதிர்ப்பா என்ற கேள்வியும் எழுகிறது.


ஜார்ஜ் ஆர்வெல் இந்தியாவில் பிறந்து பர்மாவில் சிறிது காலம் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர். பிறகு அவர் ஒரு "சுதந்திர' இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டார். 1943இல் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கெதிராக ரசிய மக்கள் போராடிக் கொண்டிருந்தபோதுதான் கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் "விலங்குப் பண்ணை' எனும் நாவலை எழுதினார் ஆர்வெல். இரண்டாவது உலகப்போர் முடிந்த பின் ரசியாவுக்கெதிரான பனிப்போரை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கின. அந்தத் தருணத்தில்தான் வெளிவந்தது ஆர்வெல்லின் ""1984'' எனும் நாவல். ஆர்வெல்லின் இந்த இரண்டு கம்யூனிச எதிர்ப்பு நாவல்களையும் பிரபலப்படுத்தி விற்பனை செய்யுமாறு மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தனது தூதரகங்களுக்கு உத்தரவிட்டது பிரிட்டிஷ் அரசு. குறிப்பாக முஸ்லீம்கள் பன்றிகளையும், நாய்களையும் வெறுப்பவர்களாதலால், ""விலங்குப் பண்ணை நாவலில் வரும் பன்றி, நாய் ஆகிய பாத்திரங்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் குறிக்கின்றன'' என்று இசுலாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்யுமாறும் தனது தூதரகங்களுக்கு வழிகாட்டியது.


பிரிட்டிஷ் உளவு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்த செலியா என்ற பெண் 1996இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.


"1949இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாகச் சந்தித்தேன். அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்தபோதிலும் உடல்நிலை சரியில்லாததால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிக்கைத் துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள்காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.''
சமுதாயம் முழுவதையும் எப்போதும் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் அரசுதான் சோசலிச அரசு என்று சித்தரிப்பதற்காக "1984'' எனும் நாவலில் ஆர்வெல் உருவாக்கியதுதான் ""பெரியண்ணன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்!'' (ஆடிஞ் ஆணூணிtடஞுணூ டிண் தீச்tஞிடடிணஞ் தூணித!) என்ற பிரபலச் சொற்றொடர். ஆனால் இந்தச் சொற்றொடரை உருவாக்கிய "மேதை'யோ ஒரு போலீசு உளவாளி.


ஸ்டீபன் ஸ்பென்டர் 1930களில் பிரிட்டனில் இருந்த பிரபல இடதுசாரி கவிஞர்களில் ஒருவர். பின்னர் அவர் ஒரு வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பாளராக மாறினார். பனிப்போர் காலகட்டத்தில் விதவிதமான கம்யூனிச எதிர்ப்புப் பத்திரிக்கைகள் மேற்குலகிலிருந்து வெளியாயின. ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்றவை அத்தகைய சனரஞ்சகப் பத்திரிக்கைகள். "என்கவுண்டர்' (உணஞிணிதணtஞுணூ) (சந்திப்பு அல்லது மோதல் என்று பொருள்) என்ற பத்திரிக்கை "அறிவுத்தரம்' கொண்ட ரகத்தைச் சேர்ந்தது.


ஸ்பென்டர் இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். ""பண்பாட்டுச் சுதந்திரத்திற்கான காங்கிரஸ்'' என்ற அமைப்பு இந்தப் பத்திரிக்கைக்கு நிதி கொடுத்து வந்தது.


இந்தப் பத்திரிக்கை அமெரிக்க உளவு நிறுவனத்தால் (சி.ஐ.ஏ) நடத்தப்படுகிறது என்ற ரகசியத்தை கனார் க்யூரி ஓ ப்ரியன் என்ற ஐரிஷ் ராசதந்திரி அறுபதுகளின் மத்தியில் வெளியிட்டார். உடனே ஸ்பென்டரும் அவருடன் சேர்ந்த அறிவாளி/ உளவாளிகளும் இதை மறுத்தனர். ஆனால் என்ன துரதிருஷ்டம்! "நாங்கள் தான் பணம் கொடுக்கிறோம்'' என்ற உண்மையை அமெரிக்க உளவு நிறுவனமே ஒப்புக் கொண்டது. உடனே கவிஞர் ஸ்பென்டர் பல்டியடித்தார். தனக்கு எதுவுமே தெரியாதென்றும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் புலம்பினார். ஆசிரியர் பதவியையும் உடனே ராஜினாமா செய்தார்.


ஆனால் இந்த "அப்பாவி முற்போக்குக் கவிஞர்' பிரிட்டிஷ் உளவாளியாகவும் இருந்திருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. தனது பத்திரிக்கைக்கு யார் பணம் தருகிறார்கள், என்ன நோக்கத்துக்காகப் பணம் தருகிறார்கள் என்பதெல்லாம் கவிஞர் ஸ்பென்டருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ராஜினாமா நாடகமெல்லாம் ""சுதந்திரமான முற்போக்குக் கவிஞர்'' என்ற தன்னைப் பற்றிய கருத்துருவைப் பாதுகாத்துக் கொள்ளும் கீழ்த்தரமான மோசடியே. உளவாளி என்று ஊர் சிரித்துப் போனபின்னரும் "அறிவாளி'யின் ஆன்மா தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை தந்திரங்கள் செய்கிறது!


கீஸ்லர் பிரிட்டிஷ்காரரல்ல. ஹங்கேரி நாட்டுக்காரர். பிறப்பால் யூதர். 30களில் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். சோவியத் யூனியனுக்கும் சென்று வந்தார். ஸ்பெயினில் நடந்த பாசிச எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டார். பிறகு சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அந்தப் போரில் அவர் பாசிச எதிர்ப்புப் பத்திரிகையாளராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்போதே அவர் உளவாளியாகவும் இருந்தாரா எனத் தெரியவில்லை. கீஸ்லரின் பிரபலமான (பிரபலம் ஆக்கப்பட்ட) நூல் ""பகலில் இருள்''. தோழர் ஸ்டாலினைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கும் நூல் இது.


சோவியத் அரசுக்கெதிராகச் சதி செய்ததற்காக புகாரின், ஜினோவியேவ் போன்ற மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் மீது அப்போது நீதிமன்ற விசாரணை நடந்தது. பகிரங்கமாக நடைபெற்ற இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டனர். சோவியத் ஆட்சியை ஒழிப்பதற்கு அப்படியொரு சதியை மேலை ஏகாதிபத்தியங்கள் செய்தன என்பதும் பலவிதமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


இது ஒருபுறமிருக்க, இந்த விசாரணை தொடர்பாக கீஸ்லர் எழுப்பும் கேள்வி முக்கியமானது. "அவர்கள் ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்?'' என்று கேட்கிறார் கீஸ்லர். உலகப் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாக விசாரணை நடைபெற்றதால் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டார்கள் என்றும் கீஸ்லரால் சொல்ல முடியவில்லை. ""அவர்கள் இத்தனைக் காலம் பொருள் முதல்வாதிகளாக இருந்தார்கள்; எனவே மார்க்சியம்தான் அவர்களுடைய எதிர்ப்புணர்வையே உறிஞ்சி விட்டது'' என்கிறார் கீஸ்லர். இந்தக் கூற்று கோமாளித்தனமானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் "கோமாளித்தனத்தின்' தத்துவ ஞானம் எது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


கம்யூனிசக் கோட்பாட்டிற்கு எதிரான கீஸ்லரின் மையமான வாதத்தில் அது வெளிப்படுகிறது. ""நாம் முரணற்றவர்கள் அல்ல; முரணற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்கான முயற்சி நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் தெரியுமா? அதோ கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள்!'' என்கிறார் கீஸ்லர். முரண்பாட்டை "உறிஞ்சும்' மார்க்சியத்தின் முயற்சி, எதிர்ப்பு உணர்வை உறிஞ்சும் நடவடிக்கையாகக் கீஸ்லருக்குப்படுகிறது. "தவறிழைத்தவன் தன்னுடைய தவறை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்' என்பதுதான் கீஸ்லரின் கேள்வி. எனவே சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு மார்க்சியம் மேற்கொள்ளும் முயற்சி அவருக்குத் தீயொழுக்கமாகவும், மோசடியாகவும் படுகிறது. முரண்பாடுகளுடன் வாழ்வதை ஏற்றுக் கொள்வதும், அதை அங்கீகரிப்பதுமே நல்லொழுக்கமாகவும், நேர்மையாகவும் அவருக்குத் தெரிகிறது. எனவே ஏற்றத்தாழ்வு, சுரண்டல், கொடுமைகள் ஆகிய அனைத்து முரண்பாடுகளும் நிறைந்த முதலாளித்துவம், அதன் முரண்பட்ட நிலையின் காரணமாகவே ஒழுக்கமானதாகவும், எனவே சுதந்திரமானதாகவும் அவருக்குத் தோன்றுகிறது.


நாஜிகளும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளும் ஒரே ரகம்தான் என்று ரஸ்ஸல் கூறியதைப் போலவே கீஸ்லரும் கூறுகிறார். ""ஸ்பெயின் நாட்டின் பாசிச சர்வாதிகாரமும் சோவியத்தின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றுதான். பிராங்கோ தனது சர்வாதிகாரத்தை ஸ்பெயினுடன் நிறுத்திக் கொள்கிறான்; ரசியாவோ அதை உலகெங்கும் பரப்ப முயல்கிறது.'' கீஸ்லரின் கவலை கம்யூனிச அபாயம் பற்றித்தான். மெக்கார்த்தியிசம் என்ற வெறிகொண்ட கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அமெரிக்க அரசால் அமல்படுத்தப்பட்டு கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டபோது, அவர் மெக்கார்த்தியிசத்தை ஆதரித்தார்.


"மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பாசிசத்திற்கெதிராக சோவியத் யூனியனுடன் ஐக்கிய முன்னணி அமைத்ததைப் போல, இன்று கம்யூனிசத்திற்கெதிராக ஜனநாயகவாதிகளாகிய நாம் மெக்கார்த்தியுடன் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும்'' என்றார் கீஸ்லர். ""முதலாளித்துவச் சர்வாதிகாரமும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றே'' என்று சொல்லி இரண்டையும் எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் அறிஞர்கள், தீர்மானகரமான தருணங்களில் முதலாளித்துவத்தின் வெறிபிடித்த ஏவல் நாயாகத்தான் மாறுவார்கள் என்பதற்கு இது இன்னுமோர் சான்று.


இந்த நூற்றாண்டின் மாபெரும் ஜேம்ஸ்பாண்டுகள்! இந்த அறிவாளிகள் ஏன் உளவாளிகள் ஆனார்கள் என்ற கேள்வியைக் காட்டிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறை இந்த அறிவாளிகளை ஏன் உளவாளிகளாகத் தேர்ந்தெடுத்தது என்பதுதான் விடை காண வேண்டிய முக்கியமான கேள்வி. இவர்கள் நான்கு பேருமே இடதுசாரிகளாக அறியப்பட்டவர்கள்.


சோசலிசத்தை ""விலங்குப் பண்ணை'' எனத் தூற்றி நூல் வெளியிட்ட கம்யூனிச எதிர்ப்பு நச்சுப் பாம்பான ஜார்ஜ் ஆர்வெல், கம்யூனிச எதிர்ப்பு நஞ்சைக் கக்கும் ஒவ்வொரு முறையும் ""தான் சோசலிச எதிர்ப்பாளன் அல்ல'' என்று கூறிக் கொள்ளத் தவறியதே இல்லை. கீஸ்லரோ முன்னாள் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்; ஸ்பென்டர் இடதுசாரி முற்போக்குக் கவிஞர்; ரஸ்ஸலோ "மாபெரும்' முற்போக்காளர்.


""பாருங்கள், சோசலிசத்தைப் பற்றி நாங்கள் (அதாவது முதலாளிகளாகிய நாங்கள்) குறை சொல்லவில்லை. அப்பேர்ப்பட்ட ரஸ்ஸலும், ஆர்வெலும், கீஸ்லரும் ரசியாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் பாருங்கள்! அப்பேர்ப்பட்ட முற்போக்காளர்கள் ஏன் பொய் சொல்ல வேண்டும்? யோசித்துப் பாருங்கள்!'' இதுதான் இவர்களைப் பயன்படுத்திய முதலாளித்துவத்தின் ஒரே வாதம். முன்னாள் கம்யூனிஸ்டுகள், அல்லது இடதுசாரிகள் என்ற பட்டம்தான் இவர்களது பொய்களும் பித்தலாட்டங்களும் புனிதத்தன்மை பெறுவதற்குப் பயன்பட்ட ஒரே தகுதி. ஏகாதிபத்தியப் போலீசின் மோப்ப நாய்களான இந்த அறிவாளிகளுக்கு, செத்தபிறகும் இடதுசாரி ஒளிவட்டத்தை விட்டுவிட மனமில்லை. ஆர்வெல் ஒரு உளவாளி என்ற செய்தியை 1996இல் வெளியிட்ட பிரிட்டிஷ் உளவு நிறுவன அதிகாரி செலியா மறக்காமல் அதற்கு ஒரு பின்குறிப்பு தருகிறார். ""ஆர்வெல் சோசலிசத்துக்குத் துரோகம் செய்யவில்லை. அவர் கம்யூனிசத்தைத்தான் எதிர்த்தார். மக்கள் இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.''


நாங்கள் கட்சியைத்தான் எதிர்க்கிறோம் கம்யூனிசத்தை அல்ல என்பதும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைத் தான் எதிர்க்கிறோம் சோசலிசத்தை அல்ல என்பதும், யூரோ கம்யூனிசம், பிராங்ஃபர்ட் மார்க்சியம், கட்சி சாராத மார்க்சியம், புதிய இடது ஆகியவையும், கம்யூனிசத்தின் மீதான இடதுசாரி விமர்சனம் ஆகியவையும் ஆர்வெல் செலியாவின் சந்ததிகளே! ஆனால் அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ரசியப் புரட்சியின் வெற்றியும், இரண்டாம் உலகப் போரில் பாசிசத்திற்கு எதிரான சோசலிசத்தின் வெற்றியும் உலகெங்கும் கம்யூனிச ஆதரவு எழுச்சியை உருவாக்கியிருந்தன. உலகெங்கும் அறிவுத்துறையினர் மார்க்சியத்தின்பால் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர். மார்க்சியத்திற்கு மாற்றாக வேறு எந்த "இயமும்' இல்லை.


இன்றோ சோசலிசம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள காலம். கறுப்பியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம் என ஒன்றையொன்று ஊடறுக்கும் பல்வேறு இயங்களையும், எந்த இயமும் வேண்டாமெனும் பின் நவீனத்துவத்தையும் ஏகாதிபத்தியங்கள் சீராட்டி வளர்க்கின்றன. அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இந்த "கலகக் கோட்பாடுகள்', பல்கலைக்கழகங்களாலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல; உளவு என்ற "அநாகரிகமான' சொல் நீக்கப்பட்டு அது "தொண்டு' "ஆய்வு' என்பதாகக் கவுரவமாக அழைக்கப்படுகிறது, தனியார்மயமாக்கலுக்கு "சீர்திருத்தம்' என்று பெயர் சூட்டியிருப்பது போல! இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்கு (உளவு நிறுவனம்) இப்போது வாலன்டரி ஏஜென்சி (தன்னார்வத் தொண்டு நிறுவனம்) என்று பெயர். ஆர்வெல்லை செலியா ரகசியமாகச் சந்தித்ததைப் போன்ற துன்பமோ, என்கவுன்டர் பத்திரிக்கைக்கு சி.ஐ.ஏ. விடம் காசு வாங்கிய கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டரின் "தர்ம' சங்கடமோ இப்போது தேவையில்லை.


எந்தவிதச் சங்கடமும் இல்லாமல் சி.ஐ.ஏ.வின் தருமத்தை அறிவாளிகள் பெற்றுக் கொள்ளலாம். பலவிதமான காலனியாக்க வேலைகளுக்கும் கம்யூனிச எதிர்ப்பு வேலைகளுக்கும் உளவாளி தேவை என்று ஆங்கில ஏடுகளில் விளம்பரம் தருகிறார்கள். கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அறிவாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆய்வாளர், பணியாளர், திட்ட இயக்குனர், ஒருங்கிணைப்பாளர் என்பனவெல்லாம் உளவாளிகளுக்கு அவர்கள் வழங்கியுள்ள சங்கதேப் பெயர்கள். வறுமை, சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய அனைத்துக் கொடுமைகளையும் "ஒழிக்க' அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை விவரங்கள். தமிழகத்தில் தலித் சாதிகள் எத்தனை, தீண்டாமையின் வடிவங்கள் என்ன, சாதி முரண்பாடுகளின் வரலாறு என்ன, அரசியல் கட்சிகளின் பாத்திரம் என்ன போன்ற பல விவரங்கள். புரட்சிகர இயக்கங்களையும், போராளி அமைப்புகளையும் தன்னுடைய உளவுத் துறையால் சரியாக வேவு பார்த்து விவரம் திரட்ட முடிவதில்லை என்பதால் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோரை குறிப்பிட்ட வேலைக்கான (ணீடிஞுஞிஞு ணூச்tஞு) உளவாளிகளாக நம்மூர் காவல்துறை நியமித்துக் கொள்கிறது. இதே வேலைக்கு அறிவாளிகளை நியமிக்கின்றன அந்நிய ஏகாதிபத்தியங்கள்.


தம்முடைய பிழைப்பு நாயினும் இழிந்தது என்பதை இந்தப் போலீசு உளவாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். அறிவாளிகளோ கூச்சமின்றி கம்பீரமாக உளவு வேலை பார்க்கிறார்கள். ஊனமுற்றவர்கள் என்பதால் ஏற்படும் அனுதாபம் மேற்படி போலீசு உளவாளிகளின் தகுதி. முன்னாள் கம்யூனிஸ்டுகள் என்பதால் கிடைக்கும் அனுதாபம் அறிவாளி / உளவாளிகளின் தகுதி. ஆந்திராவிலும், காஷ்மீரிலும் போலீசுக்கு ஆள்காட்டும் முன்னாள் போராளிகள் முகத்தை மூடிக் கொள்கிறார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டுமில்லை, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும்தான். ரஸ்ஸல், ஆர்வெல் போன்றவர்கள் இப்படி முகத்தை மூடிக் கொள்ள முயன்ற உளவாளிகள்.


""சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு கம்யூனிஸ்டுகள் செய்யும் முயற்சி என்பது ஒரு மோசடி'' என்று அவர்கள் கூறியபோதும் இரட்டை வேடம்தான் மனிதத்தன்மை என்ற கருத்தியல் ரீதியாக அவர்கள் பிரகடனம் செய்த போதிலும், தங்கள் இரட்டை வேடத்தை கம்பீரமாகப் பிரகடனம் செய்து கொள்ளும் "தைரியம்' அவர்களுக்கு அன்று இல்லை. எனவேதான் முக்காடு போட்டுக் கொண்டார்கள். இன்றோ அந்த ஜேம்ஸ்பாண்டுகளின் தத்துவம் பின்நவீனத்துவமாக முற்றிக் கனிந்திருக்கிறது. அதுவா, இதுவா என்று கேட்டால் அதுவும் இதுவும்தான் என்று தத்துவஞான ரீதியில் "தெளிவாக'ப் பதில் சொல்லும் பின் நவீனத்துவ அறிஞர்கள், ""நீங்கள் அறிவாளியா உளவாளியா' என்று கேட்டால் ""அறிவாளியும் உளவாளியும்தான்'' என்று தைரியமாகக் கூறலாம்.


""கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டும்'' என்பது அறிவுலகத்தினர் வலியுறுத்தும் அறிவொழுக்கக் கோட்பாடு. ""ஒவ்வொரு கருத்திற்குப் பின்னாலும் ஒரு வர்க்க நலனும் ஒரு பொருளாயத சக்தியும் உள்ளது'' என்பது மார்க்சியக் கொள்கை. அந்தப் பொருளாயத சக்தி போலீசாகவும் இருக்கக் கூடும் என்பதுதான் ரஸ்ஸல் வகையறாவின் அனுபவம் தெரிவிக்கின்ற படிப்பினை. அறிவாளியின் கருத்தைக் கருத்தால் சந்திக்கலாம்; உளவாளியின் கருத்தை எதைக் கொண்டு சந்திப்பது?


இந்தக் கருத்து இன்ன வர்க்கத்தின் கருத்து என்று கூறினாலே முத் திரை குத்தாதீர்கள் என்று அலறுகிறார்கள் அறிவாளிகள். உளவாளி எனும் முத்திரையை மறைத்துக் கொண்டு உலவியிருக்கிறார்களே இந்த அறிவாளிகள், இனி என்ன செய்வது? இனி "பேரறிஞர்' ரஸ்ஸலின் எழுத்துக்களை எப்படி வாசிப்பது? கம்யூனிசத்தின் மீதான அவரது விமரிசனங்களை ஒரு அறிவாளியின் கருத்துக்கள் என்று கருதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விவாதிப்பதா? அல்லது ஒரு உளவாளியின் அவதூறுகள் என்ற முறையில் "மறுவாசிப்பு' செய்வதா?


""இடப்புறம் தர்க்கவியல் வலப்புறம் படிமங்கள், உணர்ச்சி எனப் பிரிந்தும், ஒன்றோடொன்று உள்ள உறவில் இணைந்தும் இயங்குகிறது மூளை'' என்கிறது நரம்பியல் ஆய்வு. தர்க்கத்துக்கும் உணர்ச்சிக்குமிடையிலான உறவை எழுத்தில் இனம் பிரித்துப் புரிந்துணரலாம். ரஸ்ஸலின் எழுத்துக்களில் அறிவுக்கும் உளவுக்கும் உள்ள உறவைப் பிரித்தறிவது எப்படி? கட்டிடத்தைச் சுரண்டிப் பார்த்து சிமெண்டில் கலந்த மணலை வைத்தே அமைச்சரின் ஊழலைக் கண்டுபிடித்து விடலாம் என்றால், அறிவாளிகளின் எழுத்தைச் சுரண்டிப் பார்த்து, இதோ டாலர் பேசுகிறது, பவுண்டு ஸ்டர்லிங் பேசுகிறது, டாயிஷ் மார்க் பேசுகிறது என்று கூறுவதில் என்ன தவறு? அமைச்சருக்கு ஒரு நீதி, அறிவாளிக்கு ஒரு நீதியா?


"இன்டெலிஜென்ஸ்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அறிவு, உளவு என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டென்பது ஒரு குரூரமான நகைச்சுவை! இனி மார்க்சியத்திற்கு எதிராகப் பலான இயங்களை முன்வைத்து அறிஞர் பெருமக்கள் எழுதும்போது ""ஐயா / அம்மணி! தாங்கள் அறிவாளி என்ற முறையில் எழுதியிருக்கிறீர்களா, உளவாளி என்ற முறையில் தயார் செய்திருக்கிறீர்களா?'' என்று நாம் கேட்டறிந்து கொள்ளலாம். இவ்வாறு கேட்பது பிற்காலத்தில் மறுவாசிப்பு செய்யும் வேலையை நாம் மிச்சப்படுத்திக் கொள்வதற்குத்தானே ஒழிய, அறிவாளிகளை இழிவுபடுத்துவதற்கல்ல.
·
பாலன்
(செப்டம்பர், 1999)


இதயத்தை ஈரமாக்குவது இலக்கியமா? அரசியலா?


வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?


2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,


".... அரசியல் புத்தகம் படிப்பதற்குத்தான் தோழர்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள். எனக்கென்னவோ அரசியலும் இலக்கியமும் இரண்டு தண்டவாளங்கள். ஒன்றுக்கொன்று இணையாகச் சென்றால்தான் நாம் நம்மை வறண்டு போகாமல் இருக்கச் செய்ய முடியும். துன்பப்படுகிற மக்களைப் பார்த்து ஏதாவது செய்தாக வேண்டும் என ஈரத்தோடு உள்ளே வருகிறவர்கள், எல்லாவற்றிற்கும் அறிவு ரீதியான விளக்கங்கள் அறிந்து கொண்ட பிறகு நெஞ்சில் இருந்த ஈரம் வற்றி விடுகின்றது. இந்த ஈரம் வற்றாமல் பாதுகாப்பது என்னைப் பொறுத்தவரையில் இலக்கியங்கள்தான்...'' என்று குறிப்பிட்டிருந்தார்.


புரட்சிகர அமைப்பிற்குள் புதிதாக வரும் தோழர்களிடம் இருக்கும் இரக்க உணர்வு, அறிவுரீதியான அரசியல் விளக்கத்தைத் தெரிந்து கொண்ட பிறகு மங்கி விடுகிறது; அப்படி மங்காமல் தங்குவதற்கு அரசியலுக்கு இணையாக இலக்கியமும் அவசியம் என்கிறார் இந்த வாசகர். அரசியலின் அறிவு, இலக்கியத்தின் உணர்வு இரண்டோடும் உறவு கொள்ளும் புதிய தோழர்களைப் பற்றிய இம்மதிப்பீடு தவறாக இருக்கின்றது. மேலும், அரசியல், மார்க்சியம், கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் உருவாக்கியிருக்கும் பொது உளவியலும், அரசியல்வாதிகள் இரக்கமற்றவர்கள், இலக்கியவாதிகள் ஈரமிக்கவர்கள் என்பதையே அடிப்படையாக வைத்து இயங்குகிறது. இத்தகைய இலக்கியவாதிகளைத்தான் போலி கம்யூனிஸ்டுகள் ஆரத் தழுவி அங்கீகரிக்கின்றனர். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கென்றே த.மு.எ.ச. போன்ற அரட்டை மடங்களை நடத்துகின்றனர். இலக்கியத்தின் அற்பவாதிகளும், கம்யூனிசத்தின் போலிகளும் ஒருவரையொருவர் பற்றி நிற்பதில் முரண்பாடு ஏதுமில்லை.


ஆனால் புரட்சியை நேசிக்கும் புதிய தோழர்கள் இந்தப் பிரச்சினையைப் புரிந்து கொள்ள ஒரு கம்யூனிஸ்டாக மாறுவது குறித்த ஆழ்ந்த பரிசீலனையைத்தான் முதலில் கற்க வேண்டும். வாழ்வில் முதன்முதலாக மார்க்சியத்தைக் கற்கும் இவர்கள் அறிவுரீதியாகப் பெறும் விளக்கம்தான் என்ன?


ஆரம்பமே அவர்களது பழைய அறிவு அழிவதுதான். உலகம், சமூகம், அரசு, பண்பாடு, குடும்பம் அனைத்தும் புதிய பொருளுடன் தென்பட ஆரம்பிக்கின்றன. இவைகள் பற்றிய புதிர்களுக்கு விடை தராத பழைய உலகக் கண்ணோட்டம் உதிர்ந்து போகிறது. விடை தரும் புதிய கண்ணோட்டம் பழைய உலகின் உணர்ச்சிகளை அழிப்பதிலும் தவறுவதில்லை. ஆம். கட்சிக்குள் வரும் புதியவர்கள் தங்களிடமிருக்கும் "ஈரத்தையும், உணர்வையும்' வெட்டி எறிகிறார்கள். காரணம் அவை புதிய உலகிற்குத் தேவைப்படாத, சுயநலத்திலிருந்து எழும் அற்பவாத மிகையுணர்ச்சிகள்.

 

இதை எப்படிப் புரிந்து கொள்வது? உயிரின் இயக்கத்தையும் அது நின்று போவதையும் மருத்துவ அறிவியலாகக் கற்றுத் தேறும் ஒரு மருத்துவர் அவரது மனைவி இறந்து போனால் வருந்துவாரா? வருந்துவார். உயிரின் அறிவுரீதியான விளக்கத்தைக் கற்றதனாலேயே அவர் வருந்தாமல் இருக்க மாட்டார். காரணம் அவரது மனைவியுடன் நெருக்கமான ஒரு வாழ்க்கை உறவு உள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத தருமபுரியின் கூலி விவசாயி, எலிக்கறி சாப்பிடும் தஞ்சையின் கூலி விவசாயிகளைக் கேள்விப்பட்டாலே வருத்தப்படுவார். இவருக்கு அறிவு ரீதியான விளக்கமோ, இதயத்தைத் தொடும் இலக்கியமோ தேவைப்படுவதில்லை. காரணம் கூலி விவசாயியாகச் சமூகத்தில் கொண்டிருக்கும் உறவு அந்தத் துயரத்தை எந்தப் பீடிகையுமில்லாமலேயே உணர்த்தி விடுகிறது.


இப்படிச் சமூகத்திலிருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு அரசியல் கல்வியின்றியே, அறிவு விளக்கமின்றியே சக மனிதனை நேசிக்கும் உணர்வு ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் செய்கிறது. இதில் சுயநலம் சார்ந்த உறவு (குடும்பம், உறவினர்) பொருளாதார அடிப்படையிலிருப்பதால் நீடிக்கின்றது. அத்தகைய அடிப்படை ஏதுமற்ற பொதுநலம் சார்ந்த உணர்வு (இலக்கியம் மட்டும் படிப்பவர்களையும் உள்ளிட்டு) வெறும் அனுதாபம் என்ற அளவிலே விரைவில் நீர்த்தும் போகிறது. அரசியல் கல்வி நடைமுறையற்ற சகல பிரிவினருக்கும் இதைத் தவிர்த்த உணர்வு ஏதும் கிடையாது.


ஆனால் ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்க்கையைத் துவக்கும் ஒருவர் இந்த இரண்டு அளவுகோல்களிலிருந்தும் வேறுபடுகிறார். இங்கே சுயநலம் சார்ந்த உணர்வு அழிவதையும், பொதுநலம் சார்ந்த உணர்வு திட்டமிட்டு முகிழ்வதையும் பார்க்க முடியும்.


வெளிநாடு சென்று பொருளீட்டுவான் என்பதற்காக, சில வருடங்கள் தன் மகனைப் பிரிந்து வாழச் சம்மதிக்கும் ஒரு தாய், அதே மகன் புரட்சிகர அமைப்பில் பணியாற்றுவதை விரும்புவதில்லை. அழுது அரற்றி அனுமதி மறுக்கும் அந்தத் தாயுடனான பழைய பாசம் இனியும் நீடிக்க முடியாது. உடன் பிறந்தோரை வரதட்சணை, சடங்கு, சாதி எனப் பிற்போக்குச் சங்கிலியுடன் மணம் செய்து கொடுக்கும் தந்தையுடன், கண்டிப்புடன் கூடிய அந்தப் பழைய மரியாதையை இனிமேலும் கொடுக்க முடியாது. பழைய அந்தஸ்தின் மூலம் கிடைத்த நண்பர்கள், கம்யூனிஸ்டு என்ற இந்தப் புதிய தகுதியை விரும்பாத போது அந்த நட்பு எப்படி நீடிக்க முடியும்? கந்து வட்டிக்கு விடும் தாய் மாமனேயானாலும் இனியும் ஒட்டி உறவாட முடியாது. பழைய வாழ்க்கை வழங்கியிருக்கும் இத்தகைய அன்பு, பாசம், நட்பு போன்ற உணர்ச்சிகளெல்லாம் புதிய வாழ்வின் செயலூக்கத்தில் நிச்சயம் வறண்டு போகும்.


அதேபோன்று முதல் வாழ்க்கையில் தோன்றியும் புரிந்துமிராத உணர்ச்சிகளெல்லாம் இந்த இரண்டாம் வாழ்க்கையில் புதிது புதிதாய்ப் பிறந்து வளரும். இன்று தாழ்த்தப்பட்டோருக்காகப் போராடும் ஒரு தோழர், அவர் தேவராக வாழ்ந்த நாட்களில் இதைக் கனவிலும் கருதியிருக்க மாட்டார். அதிகார வர்க்கத்தையும், காக்கிச் சட்டையையும் தைரியமாக எதிர்த்துப் போராடும் ஒரு தோழர், அவர் கூலி விவசாயியாக மட்டும் வாழ்ந்த காலத்தில் இவையெல்லாம் இயற்கைக்கு மாறானது என்றே நம்பியிருப்பார். மனைவியுடன் ஜனநாயக முறைப்படி வாழும் ஒரு தோழர் அவர் ஆணாதிக்கவாதியாக ஆட்சி நடத்திய நாட்களை நினைத்து இப்போது வெட்கப்படுவார். சிறைவாசம் அனுபவித்திருக்கும் பெண் தோழருக்கு அவரது பழைய அடிமைத்தன வாழ்க்கையிலிருந்து வெளியேறிய போராட்டம் இப்போதும் நம்பிக்கையளிக்கும்.


இப்படிச் சமூக வாழ்க்கையில் பழைய உணர்வுகள் நீர்த்துப் போய் புதிய உணர்வுகள் மலருகின்றன. கூடவே அரசியல் அரங்கிலும் புதிய கடமைகளுக்கேற்ற உணர்வுகள் பிறக்கின்றன. கம்யூனிசத்தை அறிவியல் ரீதியாகக் கற்பதன் மூலம் புரட்சி சமூக மாற்றம் பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட சித்திரங்கள் மறைகின்றன. ராபின்ஹூட் பாணியிலான சாகசம், புரட்சி என்பது ஒரு ரம்மியமான மாலை நேர விருந்து போன்ற "ரொமாண்டிக்' கற்பனைகள் விரைவிலேயே வெட்கத்துடன் விடை பெறுகின்றன. அதனால்தான் துன்பப்படுகின்ற மக்களைப் பார்த்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி மறைந்து இன்னதுதான் செய்ய வேண்டும் என்ற கடமை உணர்ச்சி பிறக்கின்றது. ஏழைகளைப் பார்த்து வெறுமனே இரக்கப்படும் பழைய உலகின் இலக்கியங்களும், திரைப்படங்களும் இனிமேலும் புதிய தோழர்களை உணர்ச்சிவசப்படுத்துவதில்லை. தன்னுடைய இயலாமை அற்பவாதத்தையே தியாகமாக நினைக்கும் "அழகி'யின் சண்முகமோ, இந்து மதவெறியை மறைப்பதற்காகச் சோகங்கொள்ளும் "பம்பாயின்' காதலர்களோ, ஒரு மாபெரும் வரலாற்றுக் காலத்தைத் தன்னுடைய நடுத்தர வர்க்கத்தின் குடும்பக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சாகேத ராமனின் (ஹேராம் திரைப்படம்) வேதனையோ நமது இதயத்திற்குள் இறங்குவதில்லை.


நம்மைத் தவிர முழு உலகமும் இத்தகைய காவியத் திரைப்படங்களின் கண்ணீரில் முழுகியபோது இந்த மிகையுணர்ச்சிக் கண்ணீரின் கிளிசரின் மோசடியை அகற்றிவிட்டு உண்மையான கண்களையும் கண்ணீரையும் நமக்கு உணர்த்தியது நாம் கற்றுக் கொண்ட கம்யூனிச அரசியல்தான்.


எனவே அரசியல் அறிவு உங்களின் பழைய உணர்ச்சிகளைக் காவு கொள்வதில் கண்டிப்புடன் நடந்து கொள்கிறது; கூடவே புதிய உணர்ச்சிகளை உருவாக்க இடையறாது போராடுகிறது. புதிய தோழர்கள் பெறும் அறிவு விளக்கத்திற்கும், அது அழித்து உருவாக்கும் உணர்ச்சிகளுக்கும் இடையிலான இயங்கியல் உறவு இப்படித்தான் இருக்கிறது. ஆதலால் அரசியல் அறிவு உணர்ச்சியை வற்ற வைப்பதில்லை; உண்மையான ஊற்றைத் தோண்டிச் சுரக்க வைக்கின்றது; கண்ணீர்க் குளமாக்குகிறது; இதுவரையிலும் அழாதவற்றுக்கும் அழவைக்கிறது.


ஆயினும் இந்த உண்மையான உணர்ச்சி அவ்வளவு சீக்கிரம் ஏற்பட்டுவிடுவதில்லை. இதையே ""எல்லாவற்றிற்கும் விளக்கங்கள் அறிவுரீதியாக அறிந்து கொண்ட பிறகு நெஞ்சிலிருந்த ஈரம் வற்றி விடுகின்றது'' என்று வாசகர் சாக்ரடீஸ் தவறாகக் குறிப்பிடுகிறார். நீக்கமற நிரவியிருக்கும் பிற்போக்கான வாழ்க்கை மதிப்பீடுகளிலிருந்து வரும் ஒரு நபர், ஒரு தோழராக மாறுவதில் பல்வேறு சிக்கல்களைக் கடக்க வேண்டியிருக்கிறது.


முதலில் புதிய தோழர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அறிவுரீதியான விளக்கங்களை அறிந்து கொள்வதில்லை; அது சாத்தியமுமில்லை. ""முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் முழக்கங்கள் உதவியுடன் மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு'' எதிராக லெனின் எப்போதும் எச்சரிக்கை செய்தார். நாம் கற்கும் முதல் விசயமே நமது பழைய உலகக் கண்ணோட்டம் தவறு என்பதைத்தான். அதனாலேயே நாம் உருவாக்க விரும்பும் புதிய உலகைப் பற்றிய கண்ணோட்டத்தைக் கற்று விட்டோம் என்பதல்ல. அதற்கு அரசியல் அறிவு மட்டும் போதுமானதல்ல; செயலூக்கம் நிறைந்த நடைமுறைப் போராட்டம் தேவை. வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், சமூகத்தை ஆய்வு செய்து வினையாற்றுவதற்கு நம்மிடம் அளிக்கப்பட்ட மிகச் சிறந்த வாளே மார்க்சிய லெனினிய ஆய்வு முறையாகும்; ஆயினும் அந்த வாளைத் திறமையாகச் சுழற்றக் கற்றுக் கொள்வதில்தான் அதன் பலம் உறைந்திருக்கிறதே ஒழிய உறையில் போட்டு வைத்திருப்பதனால் அல்ல.


வெளிஉலகில் நாம் சந்திக்கும் எல்லாப் பிரச்சினைகளையும் அக உலகில் நாம் வரைந்து வைத்திருக்கும் புரட்சியுடன் இணைப்பது பற்றிய பிரச்சினை, கேள்வி, ஆய்வு, போராட்டங்கள் ஒரு கம்யூனிஸ்ட கட்சி உயிர் வாழ்வதன் அடிப்படையாகும். இதிலிருந்து மாறுபடுகிறவர்களையே போலி கம்யூனிஸ்டுகள் என்று அழைக்கிறோம். மேலும் கட்சியில் புதிதாக வரும் தோழர்களும் தங்களை இறுதி வரை கம்யூனிஸ்டாக வைத்திருப்பதன் பொருளும் மேற்கண்ட பிரச்சினையையும் போராட்டத்தையும் இறுதிவரை செய்வது என்பதே.


முக்கியமாக, இந்தப் போராட்டத்தில்தான் அவர்களது பழைய வர்க்கக் கழிவுகள் நீக்கப்பட்டு மறுவார்ப்பு செய்யப்படுகிறார்கள். அது "நானேதான்' என்று உறுதியான அகந்தையை அழிக்கிறது; சக தோழர்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் வரும் விமர்சனங்களைக் கண்டு அஞ்சும் கோழைத்தனத்தை ஒழிக்கிறது; தனது தவறுகளைத் தானே கண்டுபிடித்து ஏற்கும் வீரத்தைக் கொடுக்கிறது; கற்றுக் கொள்வதில் பணிவையும், கற்றுக் கொடுப்பதில் பொறுமையையும் உருவாக்குகிறது; அடக்குமுறைக்குப் பணியாத கம்பீரத்தைத் தருகிறது; மக்களுடன் இரண்டறக் கலக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகிறது.


இவையெல்லாம் ஓரிரு வாரங்களிலோ, மாதங்களிலோ, வருடங்களிலோ கற்றுக் கொள்ளும் பாடமல்ல. சாகும் வரையிலும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டிய புரட்சியின் கடினமான பாடம். ஏனெனில் புரட்சியை நேசித்துக் கட்சியால் ஈர்க்கப்படும் தோழர்கள் உழைக்கும் மக்களையும் அப்படி ஈர்க்கின்ற வேலையே அவர்களது அரசியல் வேலையின் சாரமாக இருக்கின்றது.


கள்ளங்கபடமற்ற கூலி விவசாயிகளோ, அரசியல் அறியாமையிலிருக்கும் தொழிலாளிகளோ, கருத்தாதரவும் செயலின்மையும் ஒருங்கே கொண்ட நடுத்தர மக்களோ, புத்தம் புது மலர்களாக இருக்கும் மாணவர்களோ இத்தகைய மக்கட் பிரிவினரிடம் சென்று, ஒன்றி, வாழ்ந்து, கேட்டு, கற்று, இறுதியில் வென்று காட்டும் அந்த பாடம்தான் புதியவர்களைக் கம்யூனிஸ்ட்டாக மாற்றிக் காட்டும். பழைய உலகின் உணர்ச்சிகள் சூழ வாழும் புதிய தோழர்கள் இந்தப் பாதையின் செங்குத்துச் சரிவில் களைப்படைவதும், சோர்வடைவதும் உண்டு. ஆரம்பத்தில் அவர்களிடமிருக்கும் உற்சாகமும், துடிப்பும், உணர்வும் இடையில் சற்று வறண்டு போவதன் காரணம் இதுதான். ஆயினும் இறுதியில் சிகரத்தின் உச்சியைத் தொடுவோம் என்பதால் இடையில் வரும் இந்தத் தடங்கல்களுக்கு அயர வேண்டியதில்லை. மீண்டும் மீண்டும் நடைமுறையில் ஈடுபட வேண்டும். இதைத் தவிர நமது இதயம் ஈரத்தைத் தக்கவைப்பதற்கு வேறு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை.


ஆகவே, இலக்கியம் ஏதும் தேவையில்லை என்கிறோமா? இல்லை. இன்றிருக்கும் பெரும்பான்மை கலை இலக்கியங்கள் பழைய உலகின் உணர்ச்சிகளோடு கட்டுண்டு கிடப்பவையே. நமது புதிய உலகின் உணர்ச்சிகளுக்கு உற்சாகமளிக்கும் இலக்கியங்கள் குறைவுதான். இருப்பினும் கிடைக்கும் எதனையும் படியுங்கள். அவை பழைய உலகம் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வையைக் கூர்மைப்படுத்த நிச்சயம் பயன்படும். அதுவும் உங்களின் அரசியல் கல்வி போராட்ட நடைமுறையின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அமைய முடியும்.


ஆம். இலக்கியங்களிலிருந்து உணர்வும், உற்சாகமும் தன்னியல்பாய்ப் பிறக்க முடியாது. பழைய உலகின் இலக்கிய உணர்ச்சிகளை அறுத்துப் பார்த்து நிராகரிப்பதையும், புதிய உலகின் இலக்கியங்களைக் கண்டு கொண்டு உற்சாகம் அடைவதையும், உங்களின் அரசியல் வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது.
·
புதிய கலாச்சாரம் ஆசிரியர் குழு
செப்டம்பர், 2000