Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

  • PDF

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!


நாங்கள் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்று அழைக்கப்படும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் அமைப்புகள். விவசாயம், சிறுதொழில்கள், சிறுவணிகம் முதலான எல்லாத் துறைகளையும் நாட்டின் இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பிடிக்குள் சிக்கவைக்கும் வகையில் இன்று அரசு அமலாக்கிவரும் கொள்கைகள் வெறும் பொருளாதாரக் கொள்கைகள் அல்ல, அவை நாட்டையே அடிமைப்படுத்தும் மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் என்று நாங்கள் கூறுகிறோம்.


உலகவங்கி, உலக வர்த்தகக் கழகம் ஆகிய ஏகாதிபத்திய நிறுவனங்களின் உத்தரவுப்படி, பன்னாட்டு நிறுவனங்கள் நம்முடைய நாட்டை அடிமைப்படுத்துவதற்குத்தான் எல்லா ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் கைக்கூலி வேலை செய்கின்றன என்று குற்றம் சாட்டுகிறோம். இன்னொரு விடுதலைப் போராட்டத்துக்கு மக்கள் அணிதிரள வேண்டும் என்று அறைகூவுகிறோம்.


1994இல் நரசிம்மராவ் அரசு "காட் ஒப்பந்தம்' என்ற அடிமைச்சாசனத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து "நாடு மீண்டும் அடிமையாகிறது'' என்ற உண்மையை தமிழக மக்கள் மத்தியில் தொடர்ந்து எடுத்துச் சென்று அரசியல் விழிப்புணர்வூட்டியதும், இந்தக் கொள்கைக்கெதிரான போராட்டங்களுக்கு அணிதிரட்டியதும் நாங்கள் மட்டுமே என்பதைத் தயக்கமின்றிக் கூறுகிறோம்.


இந்த மறுகாலனியாதிக்கக் கொள்கைகளின் கீழ் தஞ்சை மாவட்டத்தின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களை வளைத்து பெரு முதலாளித்துவக் கம்பெனிகள் அவற்றில் இறால் பண்ணைகளைத் தொடங்கியபோது அதற்கெதிராக "இறால் பண்ணை அழிப்புப் போராட்டம்'' நடத்தினோம்.


கம்பம் பகுதியில் விவசாயிகளின் விளைநிலங்களை அனுபவ், ஸ்டெர்லிங் போன்ற நிறுவனங்கள் தேக்குப் பண்ணைகளாக மாற்றியபோது, விவசாயிகளைத் திரட்டி, அந்தத் தேக்குக் கன்றுகளை வெட்டியெறிந்தோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட மான்சாண்டோ விதைகள் விவசாயத்தில் புகுத்தப்படுவதற்கு எதிரான போராட்டத்தை நடத்தினோம்.


நெய்வேலியில் "ஜீரோ யூனிட்' என்ற அனல்மின் நிலையத்தை அமெரிக்கப் பன்னாட்டுக் கம்பெனிக்குத் தாரை வார்க்க முயன்றபோது அதைத் தடுத்து நிறுத்தப் போராடினோம். நீலகிரி தேயிலை விவசாயமும் கைத்தறி, விசைத்தறி மற்றும் சிறுதொழில்களும் அழிக்கப்பட்ட போது விவசாயிகள் தொழில் முனைவோர் ஆகிய பல தரப்பினரையும் ஒன்று திரட்டி கோவையில் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக மாநாடு நடத்தினோம்.


தனியார்மயக் கொள்கையின் உச்சமாக தாமிரவருணி ஆற்றுநீரை அமெரிக்க கோகோ கோலா நிறுவனத்துக்கு ஜெயலலிதா அரசு வழங்கியதை எதிர்த்து நெல்லையில் மாபெரும் மறியல் போராட்டம் நடத்தினோம். தனியார்மய தாராளமயக் கொள்கைகளால் பாதிக்கப்பட்டு, அதற்கெதிராகப் போராடிய விவசாயிகள், தொழிலாளர்கள், சாலைப் பணியாளர்கள், சிறுவணிகர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வழக்குரைஞர்கள் போன்ற அனைத்துப் பிரிவினரது போராட்டங்களையும் ஆதரித்து இயக்கம் மேற்கொண்டிருக்கிறோம்.


மறுகாலனியாக்கத்தின் விளைவாக நாடும் மக்களும் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்கள் குறித்து நாங்கள் என்னவெல்லாம் எச்சரிக்கை செய்தோமா அவையெல்லாம் ஒவ்வொன்றாக உண்மையாகி வருகின்றன. எனினும் பாதிக்கப்படும் மக்கள் தமக்கு பாதிப்பு ஏற்படும்போது மட்டும்தான் போராடுகிறார்கள். "மறுகாலனியாக்க எதிர்ப்பு' என்ற பொது முழக்கத்தின் கீழ் எல்லாப் பிரிவு மக்களும் ஒன்று திரள்வதில்லை.


கட்சி மாற்றிக் கட்சி வாக்களிப்பதன் மூலம் இந்தப் பாதிப்புகளிலிருந்து தற்காலிகமாக விடுபட்டுவிடலாம் என்று நம்புகிறார்கள். அல்லது ஒரு தொழில் அழிந்தால் வேறு தொழிலுக்கோ வேறு வேலைக்கோ மாறிக் கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் பின்வாங்குவதற்கோ ஒதுங்குவதற்கோ இனி இடமில்லை என்பதே உண்மை.


எல்லாத் தொழில்களும் ஒன்றன்பின் ஒன்றாக அழிக்கப்பட்டு வரும் சூழலில், எதிர்த்து நிற்பது ஒன்றுதான் வழி. தேர்தல் பாதையல்ல, புரட்சிப்பாதை ஒன்றுதான் தீர்வு. தனித்தனியாகப் போராடுவதல்ல, ஒரே அமைப்பாக இணைந்து போராடுவதுதான் வழி.


மறுகாலனியாதிக்கத்துக்கு எதிராக உறுதியாகப் போராடிவரும் எமது அமைப்புகளில் இணையுங்கள் என்று உங்களை அழைக்கிறோம். மறுகாலனியாக்கத்துக்கு எதிராகப் போராடும் எல்லாப் பிரிவு மக்களுக்கும் ஆதரவு கொடுக்க நாங்கள் களத்தில் முன்நிற்கிறோம்.