Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் தேவை: ஒரு விடுதலைப் போராட்டம்!

தேவை: ஒரு விடுதலைப் போராட்டம்!

  • PDF

இதெல்லாம் நடக்க முடியாத விசயங்கள் அல்ல. பிரிட்டிஷ்காரனின் காலனியாதிக்கத்தின் கீழ் அடிமை நாடாக நாம் இருந்தபோது அந்நியத் துணிகள் புறக்கணிப்பு இயக்கம் இப்படித்தான் நடந்தது. விலை குறைவான நைஸான வெளிநாட்டுத் துணிகளைப் புறக்கணித்து முரட்டுக் கதராடையையும் கைத்தறி ஆடையையும் நாட்டுப் பற்றுள்ள மக்கள் அன்று விரும்பி வாங்கத்தான் செய்தார்கள்.


இன்று நம் அண்டை மாநிலமான கேரளத்தில் பிளாச்சிமடா என்ற கிராமத்தின் நிலத்தடி நீரை உறிஞ்சி சுடுகாடாக்கி, கழிவு நீரை வெளியேற்றி விளைநிலங்களையும் அழித்த கோக், பெப்சி நிறுவனங்களுக்கு எதிராக அங்கு மக்கள் நடத்திய போராட்டம் ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி, இன்று கேரள மக்கள் யாருமே கோக் பெப்சியை விரலால் கூடத் தீண்டுவதில்லை என்ற நிலை அங்கே உருவாகியிருக்கிறது.


அத்தகையதொரு நிலையை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாம் இங்கே உருவாக்கினால்தான் நாளை வால்மார்ட்டும் டாடாவும் பிர்லாவும் தமிழகத்தில் நுழைவதற்கே தயங்கிப் பின்வாங்குவார்கள். இந்த ரிலையன்ஸ் எதிர்ப்பு இயக்கம் நாடு முழுவதும் ஒரு பேரியக்கமாகப் பற்றிப் படரும்.


"விலை மலிவு, தரம் அதிகம் என்பதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், எங்கள் நாட்டு வியாபாரிகளிடம்தான் பொருளை வாங்குவேனே தவிர எங்கள் நாட்டைக் கொள்ளையடிக்கும் ஒரு பன்னாட்டு முதலாளியிடம் வாங்க மாட்டேன்'' என்று மக்களைச் சொல்ல வைக்க வேண்டும். "சிறு வியாபாரிகள், விவ சாயிகளின் இரத்தம் குடிக்கும் ரிலையன்ஸ், டாடா போன்ற கோடீசுவரத் தரகு முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்குத் துணை போகமாட்டேன்'' என்று மக்களைப் பேச வைக்க வேண்டும். அத்தகைய நாட்டுப்பற்றும் சுரண்டலுக்கு எதிரான கோபமும் எங்கும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கினால், பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை அடமானம் வைக்கும் இந்த தேசத்துரோக அரசையும் தூக்கி எறிய மக்கள் தயாராகி விடுவார்கள்.


இவையெல்லாம் சாதிக்க முடியாத சாகசங்கள் அல்ல. ரிலையன்ஸ் நிறுவனம் வளர்ந்து கொழுப்பதை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக வியாபாரம் படுத்து 1000, 500, 200 என்று குறைந்து, மூன்று வேளை சோறு இரண்டு வேளையாகி, பிறகு அது ஒரு வேளையாகக் குறைந்து, கடனாளியாகி மனம் நொந்து சாவதை விட, அவனா நாமா என்று பார்த்து விடுவதுதான் தீர்வு.


மகாராட்டிர மாநிலத்தில் தினந்தோறும் 10, 15 விவசாயிகள் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலை தொடர்கிறதே தவிர அவர்களுக்கு எந்த விடிவும் பிறக்கவில்லை. ஆனால் மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மக்களோ, தங்கள் விளைநிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராகப் போராடினார்கள். 14 பேரை மார்க்சிஸ்டு அரசு சுட்டுக் கொன்ற பின்னரும் மக்கள் போராட்டம் அடங்கவில்லை. நந்திகிராமில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் முடிவையே கைவிடுவதாகக் கூறி மேற்கு வங்க அரசு பின்வாங்கியது.


"தங்களுடைய நிலத்தை டாடாவுக்குக் கொடுக்க முடியாது'' என்று போராடிய ஒரிசா மாநிலம் கலிங்கநகரைச் சேர்ந்த பழங்குடி மக்கள் சென்ற ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இருந்தாலும் இன்று வரை டாடா நிறுவனம் அங்கே கால் வைக்க முடியவில்லை.


தம்முடைய மண்ணையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத் தீவிரமாகப் போராடியதால் நந்திகிராம் மக்களைப் பயங்கரவாதிகள் என்கிறது அரசு. 80,000 கோடி ரூபாய் சொத்து வைத்திருக்கும் உலகின் 18வது பெரிய பணக்காரனான முகேஷ் அம்பானி, ஒரு தள்ளுவண்டி வியாபாரியையும் மளிகைக் கடைக்காரரையும் மோதி அழித்தால் அதனை வியாபாரம் என்றா சொல்ல முடியும்? இதுதான் உண்மையான பயங்கரவாதம்.


இந்த எதிரிகள் சாதாரணமானவர்கள் அல்ல. அரசாங்கமும் போலீசும் கோர்ட்டும் இவர்களுடைய பங்களாவில் வேலை செய்யும் தோட்டக்காரனுக்கும் வாட்ச்மேனுக்கும் சமமானவர்கள். ரிலையன்ஸை ஒழிக்கச் சொல்லி இவர்களிடம் முறையிடுவது வீண். நாய்தான் வாலை ஆட்ட முடியும். வால் நாயை ஆட்ட முடியுமா? அப்படி முடியும் என்று நம்பிக் கெட்டவர்கள் பலபேர். தொலைபேசித்துறை, வங்கி, இன்சூரன்சு, துறைமுக, விமானநிலைய ஊழியர்கள் ஓட்டுக் கட்சிகளை நம்பினார்கள். தங்கள் தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொண்டார்கள். இந்தத் துறைகள் எல்லாம் தனியார்மயமாவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.


உண்ணாவிரதம், தர்ணா, கடையடைப்பு போன்ற "அறவழி'ப் போராட்டங்களுக்கு அம்பானியும் அசையமாட்டான். இந்த அரசும் அசையப் போவதில்லை. நர்மதை அணைக்கட்டுத் திட்டத்துக்கு எதிராகக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மேதா பட்கர் நடத்தாத அறவழிப் போராட்டமா? அணைக்கட்டின் முன் சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம், உச்சநீதி மன்றத்தில் வழக்கு... இத்தனைக்குப் பிறகும், அந்த அணைக்கட்டுக்காக வெளியேற்றப்பட்ட பழங்குடி மக்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை.


அம்பானியையும், வால்மார்ட்டையும் விரட்ட வேண்டுமானால் அதனைத் தம் கொள்கையாகக் கொண்டுள்ள இயக்கம்தான் அதைச் செய்ய முடியும்.

 

"தனியார்மய தாராளமயக் கொள்கைகளையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிக்க வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை விரட்டிவிட்டு உள்நாட்டுத் தொழில்களையும் விவசாயத்தையும் ஊக்குவித்து வளர்க்க வேண்டும்'' என்ற கொள்கையுடைய ஒரே இயக்கம் நக்சல்பாரி இயக்கம்தான். இது மிகையல்ல, உண்மை. நக்சல்பாரி இயக்கத்தின் கீழ் அணிதிரண்டால் அம்பானியை நாள் குறித்து வெளியேற்ற நம்மால் முடியும். நந்திகிராம் மக்களைப் போலப் போராடினால் எப்பேர்ப்பட்ட எதிரியையும் மண்டியிடச் செய்ய முடியும்.


கரையான் புற்றெடுக்க கருநாகம் நுழைந்தது போல நுழைந்திருக்கிறான் அம்பானி. இந்தப் பாம்புக்குப் பால் வார்க்கிறது அரசு. பாம்பைப் பார்த்து நடுங்கி அன்றாடம் செத்துப் பிழைப்பதை விட ஒரே போடாய்ப் போட்டு விடுவதுதான் அறிவுக்கு உகந்த செயல். மானமுள்ள வழியும் அதுதான்!

 

சிறு வணிகர்கள், தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகளை ஆதரிப்போம்!
ரிலையன்ஸ், டாடா, பிர்லா தரகு முதலாளிகள்
மற்றும் வால்மார்ட் போன்ற பன்னாட்டு முதலாளிகளைப் புறக்கணிப்போம்!
அந்நிய அடிமை மோகம் உதறி எறிவோம்!
உள்நாட்டுப் பொருட்களை வாங்குவோம்!
தேசிய, சிறு தொழில்களை ஊக்குவிப்போம்!
விவசாயிகள், சிறுதொழில் முனைவோரை வாழவைப்போம்!
நம் மண் மீதும் உழைக்கும் மக்கள் மீதும் பற்று கொள்வோம்!
நாட்டுப் பற்றுணர்வை நாடி நரம்புகளில் முறுக்கேற்றுவோம்!
தனியார்மயம், தாராளமயம், உலகமயம்
மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!