Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் எங்கே போனார்கள் ஓட்டுக் கட்சிகள்?

எங்கே போனார்கள் ஓட்டுக் கட்சிகள்?

  • PDF

கேட்டாலே நமக்கு இரத்தம் கொதிக்கிறதே, ஆனால் இந்த அநீதிகளைக் கேட்பதற்கு ஒரு நாதியில்லையே ஏன்? சிவாஜி கணேசனின் பேரன் கல்யாணத்துக்கும் பேத்தியின் காதுகுத்துக்கும் ஆசி வழங்கத் தெரிந்த தானைத்தலைவரின் காதுகளுக்கு கோயம்பேடு தமிழர்களின் கூக்குரல் மட்டும் எட்டவில்லையே ஏன்? தன்னுடைய மேயர் பதவி பறிபோனவுடன் பதறித் துடித்த தளபதி, ஒரு இலட்சம் தமிழர்களின் வாழ்க்கை பறிபோவதை வேடிக்கை பார்க்கிறாரே, இவர் யாருக்குத் தளபதி?

 உலகத் தமிழர்களுக்காகவெல்லாம் சீறும் புரட்சிப் புயல் வைகோ, அம்பானிக்கு எதிராகச் சீறாத மர்மம் என்ன? தன்னுடைய திருமண மண்டபம் இடிக்கப்படுவதை உலகப் பிரச்சினையாக்கிய கேப்டன், கோயம்பேடு தொழிலாளர்களின் வாழ்க்கை இடிக்கப்படுவதை எதிர்த்து வீரவசனம் கூடப் பேசவில்லையே, ஏன்?


இந்தக் கேள்விகள் எதற்கும் அவர்கள் பதில் சொல்லப் போவதில்லை. ஏனென்றால் அவர்கள் எதிர்ப்பது போல நடிக்கிறார்கள். "இன்னும் பத்தே நாட்களில் சென்னையில் உள்ள தன் கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு ரிலையன்ஸ் ஓடி விடவேண்டும். இல்லையென்றால் நாங்கள் நேரடி நடவடிக்கையில் இறங்க வேண்டியிருக்கும். நாங்கள் எந்த விலை கொடுக்கவும் தயார்'' என்று சீறினார் ராமதாஸ். சில்லறை வணிகத்தைப் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவது முதல், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வரை அனைத்து முடிவுகளையும் மைய அரசுதான் எடுத்திருக்கிறது. அமைச்சரவையின் முடிவுகளில் மகன் அன்புமணி கையெழுத்துப் போடுகிறார். தந்தையோ இங்கே தாண்டிக் குதிக்கிறார்.


கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகளின் சிறுவியாபாரிகள் சங்கமும், தொழிற்சங்கமும் ரிலையன்சை விரட்ட வேண்டுமென்று போராடுகின்றன. "வணிகர்கள் தங்களுடைய வரம்பில்லா லாபத்துக்கு போட்டியே இருக்கக் கூடாது என்று கருதுகிறார்கள்'' என்று அம்பானிக்கு வக்காலத்து வாங்குகிறார் விடுதலைச் சிறுத்தைகளின் எம்.எல்.ஏ. ரவிக்குமார். "ரிலையன்ஸ் வந்ததனால் சென்னை நகரின் சிறுவணிகர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது'' என்று சாதிக்கிறார் திருமாவளவன்; தொலைபேசித் துறையைக் கொள்ளையடித்துப் பிடிபட்ட திருடன் அம்பானி தொலைபேசித் துறையில் மாபெரும் புரட்சி செய்திருப்பதாகப் புகழாரமும் சூட்டுகிறார்.


இங்கே ரிலையன்ஸை எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் மார்க்சிஸ்டு கட்சி மே.வங்கத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அம்பானிக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் ஒதுக்குகிறது. முதல்வர் புத்ததேவோ அமெரிக்க வால்மார்ட்டுக்குப் புகழாரம் சூட்டுகிறார். அம்பானியை விடப் பன்மடங்கு பெரிய கொம்பானியான "மெக்டொனால்டு' எனும் அமெரிக்க நிறுவனம் கல்கத்தா நகரெங்கும் "டிபன் கடை' போட அனுமதித்து திறப்புவிழா நடத்துகிறார்.


கோயம்பேடு வியாபாரிகளை ஆதரிப்பதாக நாடகமாடும் பாரதிய ஜனதா கட்சி தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிப்பதே அம்பானியின் காசில்தான் என்பது அகில உலகமும் அறிந்த இரகசியம். சென்ற பாரதிய ஜனதா ஆட்சியில் பிரமோத் மகாஜன் தொலைபேசித் துறை அமைச்சராக இருந்தபோது தொலைபேசித் துறை அம்பானிக்குத் தாரை வார்க்கப்பட்ட ஊழல் சந்தி சிரித்தது உங்களுக்கு நினைவில்லையா?


தண்ணீருக்குத் தவிக்கும் தென்மாவட்ட மக்களின் எதிர்ப்பை மீறி, தாமிரவருணி ஆற்றையே அமெரிக்க கோகோ கோலாவுக்குத் தூக்கிக் கொடுத்த ஜெயலலிதா, அம்பானியை எதிர்ப்பதாக அறிக்கை விடுவது அப்பட்டமான மோசடியில்லையா?


ஆட்சியில் இருக்கும்போது தனியார்மய தாராளமயக் கொள்கைகளைத் தீவிரமாக அமல்படுத்துவது, எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் போராட்டத்தை ஆதரிப்பதாக வாய்ச்சவடால் அடிப்பது என்ற இந்த நாடகத்தை எத்தனை ஆண்டுகளாக இவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்? இந்த மோசடி நாடகத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பினால் அவர்கள் பதில் சொல்லப் போகிறார்களா என்ன?


அதிகாரபூர்வமான கணக்கின்படியே இந்திய அரசியல்வாதிகளில் முதல் பணக்காரர் ஜெயலலிதா. இரண்டாவது கருணாநிதியாம். மூன்றாவது இடத்துக்குப் போட்டி போடுகிறார் ராமதாஸ். கோடிகளைக் குவிப்பது எப்படி என்று கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் இவர்களா தள்ளுவண்டி வியாபாரிகளின் பிரச்சினைக்கு வழி சொல்லப் போகிறார்கள்? நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.


நீங்கள்தான் இவர்களுக்கு ஓட்டுப் போட்டவர்கள். "அந்த ஆட்சிக்கு இந்த ஆட்சி பரவாயில்லை, இந்த ஆட்சிக்கு அந்த ஆட்சி பரவாயில்லை'' என்று கடந்த 15 ஆண்டு காலமாக இவர்களையெல்லாம் ஆட்சியில் அமர்த்தியது நீங்கள்தான். எனவே, நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.


"எல்லாம் திருட்டுப்பயல்கள். பெட்டி வாங்கியிருப்பார்கள்'' என்று இப்போது குற்றம் சாட்டுவதில் பயனில்லை. பெட்டி வாங்குவதென்பது இன்று நேற்றா நடக்கிறது? இவர்களெல்லாம் யோக்கிய சிகாமணிகள் என்று நம்பி யாராவது ஓட்டுப் போட்டார்களா? வாட் வரிவிதிப்பை அமல்படுத்தப் போவதாக சிதம்பரம் சொன்னபோது அதை ஜெயலலிதா எதிர்த்தார். ஜெயலலிதா சொன்னபோது கருணாநிதி அதை எதிர்த்தார். "எல்லோருமே உலகமயமாக்கல் கொள்கையை அமல்படுத்துபவர்கள் என்பதால் இவர்கள் யாரையுமே நம்ப முடியாது'' என்று வணிகர் சங்கம் இந்தத் தேர்தலில் தனியே வேட்பாளர்களை நிறுத்தியது.


ஆனால் தேர்தலில் நின்று வெற்றி பெற்றாலும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான கொள்கையை யாராவது அமல்படுத்தி விட முடியுமா? முடியாது. தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற இந்த மறுகாலனியாதிக்கக் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டும்தான் இந்த அரசமைப்பில் தேர்தலில் நிற்க முடியும். ஆட்சி நடத்தவும் முடியும். ஒரு இலட்சம் மக்களின் வாழ்க்கை பறிபோகிறதே என்று எந்த நீதிமன்றத்தில் முறையிட்டாலும் அம்பானியின் கடைக்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கப் போவதில்லை.