Language Selection

வன்னியை இராணுவம் கைப்பற்றாமலே, புலிகள் தோற்றுக் கொண்டிருக்கின்றனர். புலிப் பாசிட்டுகளின் வரலாறு இப்படித் தான் முடியும். பாசிட்டுகளின் சொந்த வரலாற்று விதி, இப்படித் தான் நடக்கும். பாசிசம் ஏற்படுத்தியுள்ள போலியான பிரமைகளும்,

 பிரமிப்புகளும் சாய்ந்து பொடிப்பொடியாக நொருங்கும் போது, பாசிட்டுகள் வரலாற்றில் நிற்பதற்கே இடமிருக்காது.

 

ஒரு இனத்தையே காவு கொண்டு உருவான பாசிட்டுகள், வரலாற்றில் நீடித்ததாக வரலாறு கிடையாது. அது போல் அவர்களின் சொந்த பாசிச வரலாறு அவர்கள் மீதே நிச்சயமாக காறி உமிழும். நாம் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி, இது நடந்தேயாகும்.

 

புலிகளிடம் இன்றும் தக்கவைத்துள்ள பலம், அவர்கள் நினைத்த இடத்தில் நினைத்ததை செய்ய முடியும் என்ற பிரமை, அனைத்தையும் விலைக்கு வாங்கமுடியும் என்ற திமிர், இவைகள் எதுவும் இதை தடுத்து நிறுத்தி விடாது. அந்த சக்தி அவற்றுக்கு கிடையாது.

 

புலி பாசிட்டுகள் கருதுவது போல், மனித இனம் என்பது வெறும் இயந்திரங்களல்ல. அவர்கள் பாசிசத்துக்கு தலையாட்டும் பொம்மைகளுமல்ல. எப்படி வாழ்ந்தாலும், நீண்ட காலம் அடங்கியொடுங்கி வாழ்வது கிடையாது.

 

புலிகள் பாசிச கொலை வெறியாட்டங்கள் மூலம், முழுச் சமூகத்தையும் செயலற்றதாக்கினர். இப்படி தான், தனக்கு இசைவாக அனைத்தையும் அடிமைப்படுத்தினர். இதனால் சமூகம் அடங்கியொடுங்கி பாசிசமே மனித வாழ்வென்று நம்பி வாழ்ந்ததும் கிடையாது, வாழ்வதும் கிடையாது. அது தனது சொந்த வழிகளில், இதை எதிர்த்து இயங்குகின்றது.

 

மக்கள் புலிப் பாசிசத்துக்குள் அடங்கியொடுங்கி கிடந்தாலும், பாசிசத்துடன் என்றும் உடன்பட்டதில்லை. அதன் கோரமான செயல்பாட்டில் பங்குபற்றியதில்லை. தனது பந்த பாசங்கள் கொல்லப்படுவதையும், மிருகத்தனமாக அடக்கியொடுக்கப்படுவதையும், ஒருநாளும் உள்ளார அங்கீகரித்ததில்லை. இதைப் பகிரங்கமாக தெரிவிக்க முடியாவிட்டாலும், அதில் இருந்து விலகி மௌனமாக ஒதுங்கி விடுவதன் மூலம் எதிர்ப்பு ஆரம்பமாகின்றது. இப்படித்தான் புலியை எதிர்த்து, புலியை தம்மில் இருந்து அந்த மக்கள் ஒழிக்கின்றனர், ஒழித்துக்கட்டுகின்றனர். புலிகளை ஒழிப்பதில் மக்கள் வெற்றி பெற்று வருகின்றார்கள்.

 

இன்றும் மாபெரும் பாசிச கட்டமைப்பைக் கொண்டுள்ள புலிகள், மாபெரும் இராணுவ இயந்திரமாக காணப்பட்ட போதும், அது நொருங்கிக் கொண்டு இருக்கின்றது. இதை இனியும் சரிசெய்ய முடியாது. அதன் செயற்பாட்டுக்குரிய, உணர்வு பூர்வமான பாசிச நலன்கள் மெதுவாக அவர்களின் உள்ளேயே அன்னியமாகி வருகின்றது.

 

ஏன் இன்றும் புலிகள் வெளிப்படையாக மிகப்பெரிய ஒரு இராணுவம். தமிழ் மக்களின் அனைத்து செல்வவளங்களையும், அவர்களின் மூச்சுக்களையும் கூட ஒருங்கிணைத்த ஒரு பாசிச இராணுவ இயந்திரம் தான். தாம் தமது பாசிச நலன்களுடன் தப்பிப் பிழைக்க, தமது பிரதேசத்தில் வாழ்கின்ற முழு மக்களையும் பலாத்காரமாகவே இராணுவமயமாக்குகின்றது. இன்றும் தாம் இல்லாத இடங்களில் கூட, தமது அதிகாரத்தையும், அடக்குமுறையையும் கொண்டு, அனைத்தையும் தமக்கு அடிபணிய வைக்கின்றது. ஏன் யாரையும் விலைக்கு வாங்கவும், பிழைப்புவாத பினாமிகளைக் கொண்டு அனைத்தையும் தாமாகக் காட்டவும் கூட முடிகின்றது. அவர்களால் இந்தா புலிகள் வெல்லுகின்றனர், இந்தா அரசு தோற்கின்றது என்று அனைத்துப் பினாமி ஊடகவியலிலும் கூட கூறமுடிகின்றது.

 

அத்துடன் சர்வதேச வலைப்பின்னலை அடிப்படையாகக் கொண்ட உளவுப்பிரிவையும், ஆயுதம் ஏந்திய குண்டர்களையும் கொண்டு இயங்கமுடிகின்றது. சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுடனான புலிகளின் அரசியல் உறவு என்பது, மாபியாத்தனத்துடன் தொடர்ச்சியாக இன்றும் பாதுகாக்க முடிகின்றது.

 

உலகின் பல பாகத்தில், புலிப் பாசிச மாபியாத்தனத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் விரோத நிலையை தக்கவைக்க முடிகின்றது. இதற்குள்ளாக கூட்டங்கள், சதிகள், இரகசிய சூழ்ச்சித் திட்டங்களை இன்றும் தீட்ட முடிகின்றது. ஏகாதிபத்திய மக்கள் விரோத நாசகாரர்களுடன் சேர்ந்து சதியாலோசனைகளையும் செய்ய முடிகின்றது. இப்படி எங்கும், எதிலும், எல்லாவிதத்திலும் அமர்க்களமான சதிகள், காய் நகர்த்தல்கள், சுத்துமாத்துக்கள். அனைத்துமே மக்களின் பெயரில் இன்றும் புலிகளால் செய்ய முடிகின்றது.

 

இந்தளவு இருந்த போதும், புலிகளின் பாசிச வரலாறு முடிவை நோக்கி நகருகின்றது. இதை நம்ப முடியாதவர்கள், நம்ப மறுப்பவர்கள், புலிகளின் வரலாற்றின் சொந்த விதியை அவர்களின் கண்ணால் காண்பார்கள். அது தவிர்க்க முடியாதது. இது எமது சொந்த விருப்பங்களோ, கற்பனைகளோ அல்ல. மாறாக புலிப் பாசிசம் உருவாக்கிய சொந்த வரலாற்றின், இறுதிக் கால கட்டம் தான் அரங்கேறுகின்றது. அதையே நாங்கள் எடுத்துக் காட்டுகின்றோம்.

 

இவை எவையும் பேரினவாதத்தின் சொந்த இராணுவ வெற்றிகள் அல்ல. பேரினவாதத்தால் தமிழ் மக்களை ஒருநாளும் வெல்லமுடியாது. அப்படி இருக்க, எப்படி புலிகள் தோற்கின்றனர்?

 

உண்மையில் தமிழ் மக்கள் தான் புலிகளைத் தோற்கடித்துக் கொண்டு இருக்கின்றனர். புலிப் பாசிசத்தை அவர்கள் தமது சொந்த வழியில் ஒழித்துக் கட்டுகின்றனர்.

 

புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான தொப்புள் கொடியை புலிகளே அறுத்து, பாசிசம் என்னும் இடை மதிலால் அதைப் பிளந்துவிட்டனர். இப்படி தமிழ் மக்களுடன் இருந்த தொப்புள் உறவை மறுத்து, சொந்தத் தாயையே எட்டி உதைத்தனர். இப்படி தாயின் தாலாட்டை உதறியும், தாயின் அரவணைப்பை எட்டியும் உதைத்த புலிகள், பாசிட்டுகளாகி தறிகெட்டு அதிகார வெறியில் திமிரெடுத்துத் திரிந்தனர். அராஜகத்துடன் கூடிய லும்பன் தனம் மூலம், சமூகத்தையே நலமடித்தனர். புலிகளை உருவாக்கிய தமிழ் சமூகமே, இவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கியது. தமது சொந்த வாயைப் பொத்தி, மௌனமாகி, படிப்படியாக ஓதுங்கிக் கொண்டதன் மூலம், புலிகளின் இருப்புக்கு இப்படியே தான் வேட்டு வைத்தனர், வைத்து வருகின்றனர்.

 

இதன் விளைவு, பலமான இந்த பாசிச இயந்திரத்தில், வெடிப்புகளையும் சிதைவுகளையும் அன்றாடம் உருவாக்குகின்றது. இதற்கு தலைமை தாங்குவோர் முதல் கீழ் அணிகள் வரை, படிப்படியாக புலிகளின் பாசிச இலட்சியத்தில் நம்பிக்கை இழந்துவிட்டனர். வெற்றுத்தனமான குருட்டு நம்பிக்கைகள், பொய்யான பரப்புரைகளை நம்பி ஊர்ந்தவர்கள், தொடர்ந்து நடக்க கால்கள் இல்லை என்பதை காண்கின்றனர். எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் ஊர முடிவதில்லை. தாம் எதற்காக போராடுகின்றோம் என்பதைக் கூட, அவர்களால் இன்று உணர முடிவதில்லை.

 

ஏன் தமது பக்க அரசியலை சொல்ல அவர்களிடம் எந்த மக்கள் அரசியலும் கிடையாது. அனைத்தையும் இராணுவ வெற்றிகள் மூலமும், அனைத்தையும் தியாகி துரோகி என்றும் பறைசாற்றி நின்றவர்களின் தகவல் மையம் முற்றாக செயல் இழந்துவிட்டது. 400க்கு மேற்பட்ட புலி இணையங்கள், அவர்களின் ஊதுகுழல் ஊடகங்கள் வம்பளக்க செய்தியின்றி, வீரம் பேச நாதியின்றி படுத்து உறங்குகின்றது. பேரினவாதிகளுக்கு இடையில் நடக்கும் குத்துவெட்டுகளை, புலி முரண்பாட்டைச் சார்ந்து புலிகளின் தகவல்கள் முக்கி முனங்குகின்றது.

 

புலிகள் தோற்கின்றனர். இதற்கான காரணம் என்ன? இதற்கான உட்கூறுகளை 23.09.2006 எழுதிய எனது கட்டுரை, முன் கூட்டியே இதை விரிவாக ஆராய்கின்றது. 'அரசியல் ரீதியாக தோற்ற புலிகள்இ இராணுவ ரீதியாகவும் தோற்கின்றனரே ஏன்?"

 

கிழக்கு முதல் வன்னிவரை புலிகள் இராணுவ ரீதியில் தொடர்ச்சியாக யுத்தம் செய்ய முடியாத நிலைக்குள் அவர்கள் சென்றுவிட்டனர். உணர்வு ப+ர்வமாக யுத்தம் செய்யும் மனநிலையை புலி அணிகள் இழந்துவிட்டன. யுத்தத்ததை வழிநடத்துபவர்கள் தமது பாசிச போராட்டம் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். மக்களில் இருந்து அன்னியமாகியதன் விளைவு, தனிமைவாதத்தில் சிக்கி நாற்றமடிக்கும் பிணமாய் அழுகிச் சிதைகின்றனர். எங்கெல்லாம் அவர்கள் எதிரியின் யுத்த முனையை எதிர்கொள்கின்றனரோ, அங்கெல்லாம் அவர்கள் இழப்பதற்கு ஆயுதங்களையும் உயிரையுமே வைத்துள்ளனர். இதனால் அன்றாடம் புலிகளின் ஆயுதங்களும், புலிகளின் உடல்களும் எதிரியால் கைப்பற்றப்படுகின்றது. புலிகளின் வரலாற்றில் இப்படி நடந்து கொண்டிருப்பது இதுதான் முதல் தடவை மட்டுமின்றி, இதுவே இறுதியானதுமாகும்.

 

இராணுவத்தை தாக்க வருபவர்கள் அன்றாடம் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முடிவதில்லை. புலியல்லாத பிரதேசத்தில் தாக்குதல்கள் நடத்த முனையும் போது, அம்முயற்சிகள் தோல்வி பெறுகின்றன. எதிரி முன்கூட்டியே இவற்றைக் கைப்பற்றுவது, முறியடிப்பது அன்றாட நிகழ்ச்சியாகின்றது. புலியல்லாத பிரதேசத்தில் பேரினவாதம் நடத்துகின்ற படுகொலைகள், கடத்தல்கள் மூலம், புலிகளின் சிறு செயற்பாடுகள் கூட முடக்கப்படுகின்றது. புலிகள் பணத்தைக் கொடுத்து எதிரியை வாங்கி நடத்திய தாக்குதல்கள், அனைத்தும் படிப்படியாக இல்லாது ஒழிக்கப்படுகின்றது. புலிகளின் உளவு சார்ந்த தகவல் மையமே அதிர்ந்து ஒடுங்கி முடங்குகின்றது.

 

புலிகளின் நிதியாதாரங்கள் முதல் வரி மற்றும் கப்பம் போன்றன ஒரு தேக்கத்தின் எல்லையை எட்டியுள்ளது. புலம்பெயர் சமூகத்தில் நடைபெறும் கைதுகள், முழு செயல்பாட்டை முடக்கி வருகின்றது. சர்வதேச ரீதியான புலிகளின் இரகசியமான ஆயுத செயல்தளம், முழுவீச்சில் இயங்க முடியாது அழிந்து வருகின்றது.

 

இப்படி எங்கும் எதிலும் பாரிய நெருக்கடிக்குள் புலிகள் சிதைந்து அழிகின்றனர். புலிகளின் உள்ளே பாரிய சந்தேகங்கள், இடைவெளிகள். தலைமைக்குள் பரஸ்பரம் நம்பிக்கையீனம். இப்படி புலிகள் தனக்குள்ளேயே சிக்கி, உள் முரண்பாடுகள் கொதிநிலையை அடைந்து வருகின்றது. கைதுகள் சித்திரவதைகள், குற்றச்சாட்டுகள் பொதுவான உள்ளியக்க விதியாகிவிட்டது. இதுவே அன்றாடம் பெருகிச் செல்லுகின்றது. உயிரோட்டமாக, உணர்வுபூர்வமாக, நம்பிக்கை விசுவாசத்துடன் செயல்பட முடியாத நம்பிக்கையீனம், அமைப்பையே சூனியமாக உருவாக்கிவிட்டது.

 

சூனியம் வைத்தது போல் ஒவ்வொன்றாக தகர்கின்றது. எங்கும் எதிலும் அதிருப்தி. நம்பிக்கையீனங்கள் மலிந்து போய்விட்டது. இலட்சியப்பற்று என்பது மறந்து, அதை அறவே காணமுடியாத ஒன்றாகிவிட்டது.

 

தமிழ் மக்கள் எப்படி தமது அழிவுக்கான யுத்தத்தை வெறுக்கின்றனரோ, அப்படி புலிகளின் அணிகள் கூட புலிகளின் யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் வலிந்து திணிக்கப்படும் போது, தோல்வியும் மரணமும் முன் கூட்டியே தீர்மானமாகி விடுகின்றது.

 

எதற்காக இப்படி போராடுகின்றோம், மரணிக்கின்றோம் என்பது கூட தெரியாத சோகம். விளைவு உள் மோதல்கள், அமைப்பு ஆட்களை இல்லாது ஒழித்தல் என்பது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. அனைத்தையும் கட்டுப்படுத்த, வன்னி மண்ணில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கும்பலின் காட்டுத்தனமான அதிகாரம். இதுவொரு அராஜக லும்பன்களாக, மக்கள் மேலான வன்முறையையே தனது போராட்டமாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு வீட்டுப் பெண்ணையும் இவர்கள் கற்பழித்தால் கூட, கேட்க நாதியற்ற வன்னிச் சமூகமாக இவர்களால் இழிவுக்குள்ளாகி வருகின்றனர். அந்தளவுக்கு வன்முறையின் கோரம், கொடூரம். இப்படி கொடூரமாக இயங்கும் அராஜகத்தையே அடிப்படையாகக் கொண்ட புலிக்கும்பல் ஒருபுறம், மறுபக்கம் ஒழுங்குபடுத்தப்பட்ட இதனுடன் தொடர்பற்ற புலி இராணுவம்.

 

லும்பன்கள் நடத்துகின்ற மனித விரோத சமூக இழிவாடல்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவத்தின் உட்கட்டமைப்பின் உணர்வையே சிதைக்கும் வண்ணம் அதற்கு நஞ்சிடுகின்றது. கட்டாயப்படுத்தி பலாத்காரமாக கடத்தி வரப்படும் ஒவ்வொருவனும் ஒவ்வொருத்தியும், தனக்கு நேர்ந்த துயரக் கதை முதல் தனது சொந்த சமூகத்துக்கு நேருகின்ற அவலத்தை சொல்லி புலம்புவதன் மூலம், புலிகளின் இராணுவம் கறையான் புற்றெடுக்கின்றது. புலிகளின் இராணுவத்தில் நடக்கும் உணர்வு ரீதியான சிதைவு, முழு இராணுவக் கட்டமைப்பையும் சிதைக்கும் தொற்று நோயாகின்றது. தாம் யாருக்காக இதையெல்லாம் செய்கின்றோம் என்ற விடைதெரியாத சோகம், சொல்லி மாளமுடியாது உணர்வு ரீதியாகவே அதற்குள் மாண்டு போகின்றனர்.

 

வன்னியை இராணுவம் பிடிக்காமலே, வன்னி தோற்றுக் கொண்டு இருக்கின்றது. பேரினவாதம் ஒரு தீர்வுப்பொதியை வைத்துவிட்டால், அது புலிக்குள்ளான புதிய மோதலாக சிதைவாக மாறிவிடும். தீர்வு புலியைப் பிளக்கும், சிதைக்கும். உட் குழுக்கள், கொடுப்பதை ஏற்றுக்கொள்ளக் கோரும் முரணான மனநிலை, யுத்தம் செய்ய விரும்பாமை மேலும் அதிகரிக்கும். இதை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மீதான அவநம்பிக்கை உருவாகும். சந்தேகங்கள் புலிகளை மேலும் அம்பலமாக்கும். மக்கள் மத்தியில் இதன் விளைவும், அதன் எதிர்வினையும் புலிக்கு எதிரானதாக மாறும்.

 

புலிகளை யுத்தமின்றி தோற்கடிக்கக் கோரியே தான், உலகம் தீர்வை முன்வைக்கக் கோரி அரசை நிர்ப்பந்திக்கின்றது. இனவாதிகள் இடையிலான முரண்பாடு தான், புலியை இன்னமும் பாதுகாக்கின்றது. உலகளவில் அதிகார மட்டத்தில் இருந்து எழும் யுத்தத்துக்கு எதிரான குரல்கள், யுத்தம் மூலம் புலிகளை தோற்கடிப்பதை விட ஒரு தீர்வுப் பொதி மூலம் புலியை அழிக்க முடியும் என்பதை தெளிவாக கண்டு கொண்டுள்ளது. இதற்குரிய நிலைமை மிகவும் கனிந்து காணப்படுகின்றது. வன்னியில் இன்றைய நிலைமைகள், புலியை தோற்கடித்துவிடும்.

 

மறுபக்கத்தில் பேரினவாத வக்கிரம் மேலோங்கி நிற்கின்றது. புலிகள் உணர்வு ரீதியாக யுத்தம் செய்ய முடியாத மனநிலையைப் பயன்படுத்தி, யுத்தம் மூலம் வெற்றி கொள்ள எண்ணுகின்றது. பேரினவாத சிங்கள பாசிட்டுகள், புலிகளின் மக்கள் விரோத நிலையை அடிப்படையாக கொண்டு, இந்த வெற்றிகளைத் தமது வெற்றியாக காண்பிக்கின்றனர். புலிக்கு எதிரான மக்களின் உணர்வை தனக்கு சார்பாக மாற்றி, அவர்களை புலிகளிடம் இருந்து தனிமைப்படுத்தி, தமிழ் இனத்தை யுத்தம் மூலம் வெல்ல முனைகின்றது.

 

புலிகள் கடந்த காலத்தில் மாற்று இயக்கத்தை, மாற்றுக் கருத்தாளனை நர வேட்டையாடி கொன்று குவித்து, மக்களை இதன் பின் அண்டவிடாது தனிமைப்படுத்தி அழித்தனர். அதையே இன்று பேரினவாதம் அப்படியே புலிகளாக இனம் காணப்பட்டவர்கள் மீது, அதன் ஆதரவாளர்கள் மீது கையாளுகின்றது. புலிகளுடன் தொடர்பு கொள்ளாத வரை உனக்கு ஆபத்தில்லை என்ற புலி விதியையே கையாளுகின்றது. புலியைப் போல், புலியையே வேட்டையாடுகின்றது. அதன் ஆதரவாளர்களை முடக்குகின்றது. புலிகளில் இருந்து மக்களை தனிமைப்படுத்தி வெல்லுகின்றது.

 

புலி ஆதரவாளர்கள் முதல் புலிகள் வரை அரசு சிறைச்சாலை பாதுகாப்பானது என்று கருதி நூற்றுக்கணக்கில், சுயபாதுகாப்பு கோரி சிறையில் வாழமுனைகின்றனர். அங்கு பாதுகாப்பு உறுதி என்று கருதி, புலியைச் சார்ந்தவர்கள் மக்களிடமிருந்து விலகி வாழும் சூழலை பேரினவாதம் உருவாக்கியுள்ளது. மக்களுடன் புலிகள் வாழமுடியாத நிலை.

 

இப்படி பல தளத்தில் புலிகள் தமது சொந்த பாசிச வழிகளில் தோற்றுக் கொண்டிருப்பது என்பது, தற்செயலானதல்ல. இது தான் பாசிசத்தின் வரலாற்று விதி. மக்களைக் கடந்து எந்த வரலாறும் நிலைத்தாக ஒரு மனித வரலாறு கிடையாது.

பி.இரயாகரன்
09.09.2007


Most Read

முற்றவெளியில் பிணத்தை எரிக்க, கொள்ளிக்கட்டை கொடுத்த வெள்ளாளியப் பண்பாடு

யாழ். நாகவிகாரை விகாராதிபதியின் உடலை யாழ் முற்றவெளியில் எரிக்க வேண்டும் என்று அடம்பிடிக்க, அதை எதிர்க்கும் அளவுக்கு இனவாத - இந்துத்துவ சாதிய அரசியல் நடந்தேறியிருக்கின்றது. மக்களை ஒடுக்குவதையே தங்கள் அரசியலாகக் கொண்ட ஒடுக்கும் தரப்புகள், ஒடுக்கப்பட்ட தமிழ்மக்களின் மேலான தங்கள் அதிகாரத்தை அரசியல் மயமாக்கும் அரசியலாக, தகன நிகழ்வை மாற்றியிருக்கின்றனர்.

பிரமுகர்கள் மரணமாகும் போது பொதுவெளிகளில் தகனம் செய்யும் புத்த மதத்தின் மரபை, ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதுகில் போட்டு எரிப்பதற்;கு "நல்லாட்சி" அரசு கங்கணம் கட்டி நின்று, அதை தங்கள் அதிகாரங்கள் மூலம்  அரங்கேற்றினர். இந்த இனவாத அரசியல் பின்னணியில் "நல்லாட்சி" அரசின் தூண்களான கூட்டமைப்பின் அனுசரணையுடனேயே, இந்த முரண்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அரசியலாக்கப்பட்டது.

வேள்வியை தடைசெய்யக் கோரும் வெள்ளாளிய இந்துத்துவம்

யாழ் குடாநாட்டில் மிருகபலி மூலம் நடைபெறும் வேள்வியானது பாரம்பரிய வரலாறு கொண்டது மட்டுமின்றி ஆதி மனித வழிபாட்டு முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. இது காலகாலமாக இந்து வெள்ளாள சாதிய வழிபாட்டு முறைக்கு முரணாகவும் இருந்து வருகின்றது. ஆதிமனித வழிவந்த ஒடுக்கப்பட்ட சாதிகளால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட மிருக பலி மூலமான வழிபாட்டு முறையானது, ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த மக்களையும் தனக்குள் உள்வாக்கிக் கொண்டதுடன் வேள்வியான உணவுக் கொண்டாட்டமாக மாறி இருக்கின்றது. இறைச்சி விரும்பி உண்ணும் உணவாக மாறி இந்து-சாதி பண்பாட்டு கூறுகளை அழிக்கின்றது. இதானல் இதை சாதிய இந்துத்துவவாதிகள் தடை செய்யக் கோருகின்றனர்.

மிருக பலி !?

இலங்கையில் மாடு வெட்டுவதை தடை செய்வது பற்றி ஜனாதிபதி கூறியதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றது. உழைக்கும் மக்கள் மாட்டு இறைச்சியை தங்கள் உணவாக உண்பதை சமூக பண்பாடாகக் கொண்டவர்கள். இதற்கு எதிராக "மாடு புனிதமானது" என்றும் மாட்டு இறைச்சியை உண்ணக் கூடாது என்ற பிரச்சாரத்தை வெள்ளாள சாதிய இந்துத்துவ மதவாத சக்திகள் முன்னெடுத்து வந்ததுடன், மாட்டு இறைச்சியை ஓடுக்கப்பட்ட சாதிகளின் "இழி' உணவாக காட்டி வந்தனர். அதேநேரம் பௌத்த மத அடிப்படைவாதிகள் கூட இதே இந்துத்துவ சாதிய அடிப்படையில் முன்வைத்து வந்ததுடன் முஸ்லீம் மக்களின் உணவுப் பண்பாட்டுக்கு எதிரான பிரச்சாரமாகவும் இதை முன்னெடுத்து வருகின்றனர்.

உலகை குலுக்கிய வர்க்கப் புரட்சியின் 100 ஆண்டு

மார்க்சியம் என்பது கற்பனையல்ல. மானிட வாழ்வியலைப் பற்றிய தத்துவமே மார்க்சியம். மார்க்சிய தத்துவத்தின் நடைமுறையே, 1917 உலகைக் குலுக்கிய வர்க்கப் புரட்சியாகும்.

இந்தப் புரட்சி தனியுடமைக்கு எதிரான வர்க்கப் புரட்சி என்பதாலே, எல்லாப் புரட்சிகளிலும் இருந்து வேறுபட்டு நிற்கின்றது. இதனாலேயே 1917 நடந்த புரட்சி, உலக வர்க்கப் புரட்சிக்கான ஆயுதமாகி நிற்கின்றது. எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்;கும் எதிரான உண்மையான நேர்மையான தத்துவமாக மார்க்சியம் இருப்பது போல், 1917 புரட்சியே இன்றைய புரட்சிகளுக்கு எல்லாம் நடைமுறையாகவும் இருக்கின்றது. இது தான் இன்றைய எதார்த்தம்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

MOST READ