Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்துதான் சமூக நீதியா?

இட ஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்துதான் சமூக நீதியா?

  • PDF

இனவாதிகளின் அவதூறும் எமது நிலையும் மா ற்று இயக்கத்தினர் மீது இட்டுக்கட்டி அவதூறும் பொய்யும் புனைச் சுருட்டும் பரப்புவதாலேயே மட்டும் எந்தவொரு இயக்கமும் வளர்ந்துவிட முடியுமா? அப்படித்தான் நம்புகிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனப் பிரச்சினையாகட்டும், இட ஒதுக்கீடாகட்டும், ஈழப் பிரச்சினையாகட்டும், இந்தத் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை "அப்படியே'' ஏற்காதவர்களை எதிரிகளோடு இணைவைத்து முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள். குறிப்பாக, புதிய ஜனநாயகப் புரட்சிகர இயக்கத்தினரிடம் மட்டும் இந்தச் சிறப்பு அணுகுமுறையை வைத்திருக்கிறார்கள்.


அதேசமயம், தமிழ்தேசிய இனத்தின், சமூக நீதியின், ஈழவிடுதலையின் எதிரிகளான பா.ஜ.க.ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஜெயலலிதா கும்பல்களின் நெருங்கிய பங்காளிகளான ஜார்ஜ் பெர்ணாண்டஸ், வைகோ, திருமா போன்றவர்களோ தமிழினவாதிகளின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தலைவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளைப் பார்த்து "தமிழ் தேசியத்துக்கு எதிரான அகில இந்திய பூணூலிஸ்டுகள்'', "ஈழப் பிரச்சினையில் புதிய ஜனநாயகத்தின் நிலைப்பாடுகளும் பார்ப்பன "துக்ளக் சோ'வினுடையவையும் ஒன்றுதாம்'', "இட ஒதுக்கீடு பிரச்சினையில் ம.க.இ.க.வின் அணுகுமுறை மறைமுகப் பார்ப்பனியமாக உள்ளது'' இப்படியெல்லாம் தொடர்ந்து இட்டுகட்டி, முத்திரை குத்தி அவதூறு செய்கிறார்கள், தமிழினவாதிகள்.


இந்தப் பிரச்சினைகளிலெல்லாம் நமது நிலைப்பாடுகளை, அடிப்படை ஆதாரங்களை விளக்குவதோடு நாம் நிற்கவில்லை. இவற்றில் தமிழினவாதிகளின் நிலைப்பாடுகள் மீது பல முக்கியமான கேள்விகளை எழுப்பி, நிராகரித்திருக்கிறோம். அவை எதற்குமே பதிலளிக்கத் திராணியற்ற தமிழினவாதிகள், நமது எதிரிகளின் நிலைப்பாடுகளோடு ஒப்பிட்டு இணை வைப்பதோடு, அவதூறும் பொய்பிரச்சாரமும் செய்கிறார்கள். அவர்கள் இணைவைத்துக் காட்டும் எதிரிகளுடையவற்றில் இருந்து நம்முடைய நிலைப்பாடுகள் எவ்வாறு அடிப்படையிலேயே மாறுபடுகின்றன என்றும் பலமுறை விளக்கியிருக்கிறோம். எளிதில் யாரும் புரிந்து கொள்ளக்கூடிய இந்த விளக்கங்களுக்கே கூட மறுப்புரை ஏதும் முன்வைக்காமல், கோயபல்சுகளாகி திரும்பத் திரும்ப அதே பொய்களைப் பேசி வருகிறார்கள்.


தற்போது, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்தப் போவதாக மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அறிவித்திருக்கிறது. இதை ஏற்கெனவே உயர்கல்வி பெற்று வேலையிலிருக்கும் மற்றும் உயர்கல்வி கற்றுவரும் முற்பட்ட சாதியினர் எதிர்த்துப் போராடி வருகின்றனர். இதையொட்டி, "உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகளின் போராட்டத்தை முறியடிப்போம்'' என்று ம.க.இ.க. மற்றும் பிற புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகள் முழக்கம் முன்வைத்துப் போராடி வருகின்றன.


"உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு'' என்பதை பார்ப்பனர்கள் தவிர வேறு பிற ஆதிக்கசாதிகளும் எதிர்ப்பதையும் முறியடிக்க வேண்டியுள்ளது. அதோடு, ஒருபுறம் இட ஒதுக்கீட்டை ஆதரித்துக் கொண்டும் அதற்காகப் போராடிக் கொண்டிருக்கும் ராமதாசு, முலயம் சிங், லல்லுபிரசாத், கருணாநிதி போன்ற பிற்படுத்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக் கொள்ளும் சக்திகள் அதிகாரத்தில் பங்கு பெற்று, தனியார்மயம், தாராளமயம் மற்றும் உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கத்தை ஏற்றுக் கொள்வதன் மூலம் முற்படுத்தப்பட்ட சாதிகளுடன் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அதுமட்டுமல்ல, பொதுவில் எல்லா இட ஒதுக்கீட்டிலும் உள்ளதைப் போலவே, உயர் கல்விக்கான இட ஒதுக்கீட்டிலும் இடம் பெற எத்தணிக்கும் சாதிகள் எல்லாம், உண்மையில் அதற்குத் தகுதியானவை என்று கருத முடியாது.


அதாவது, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்ற பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ள சாதிகளில் பலவும் முற்பட்ட சாதிகளாக உள்ளன. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற சாதிகளை ஒடுக்கும் பல ஆதிக்க சாதிகள் பொய்யான அடிப்படையில் தாமும் பிற்படுத்தப்பட்டவை என்று உரிமை பாராட்டி இட ஒதுக்கீடு வாய்ப்பைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.


இந்த உண்மை விவரங்களைப் பரிசீலிக்காமலேயே, மறுத்துரைக்காமலேயே, தங்கள் நிலையை ஆதரிக்க வேண்டும்; இல்லையென்றால் நாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள், பார்ப்பனர்களுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றும் முத்திரை குத்துகிறார்கள், தமிழினவாதிகள். அவர்களுடைய நிலையோ எந்த ஆய்வுபரிசீலனையும் இல்லாது, நீதிக் கட்சியின் சிற்றரசர்கள், மிட்டாமிராசுகள், ஜமீன்தாரர்கள், (அக்கட்சி அப்படிப்பட்டதுதான் என்பதற்கு ஆதாரம் 1945 சேலம் திராவிடர் கழக மாநாட்டில் அண்ணாதுரை ஆற்றிய உரையேயாகும்) ஆகிய சாதி இந்துக்களின் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் என்ற பொதுவரையறையின் அடிப்படையிலான நிலையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதாகும்.


···


"கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா'' என்று புத்திசாலித்தனமாக சிலர் கேட்பதுண்டு. இரண்டில் ஒன்று சொல்லமுடியாது, பரிணாம வளர்ச்சிப்படிதான் வந்தது என்று சொல்லப் புகுந்தால், பதிலைப் புரிந்து கொள்ள மறுத்து, "அதெல்லாம் வேண்டாம், இரண்டில் ஒன்று சொல்லுங்கள்'' என்று முட்டாள்தனமாக அவர்கள் அடம்பிடிப்பதும் உண்டு. அப்படித்தான் அடம் பிடிக்கிறார்கள், தமிழினவாதிகள். தமது மூதாதையர்களின் சாதி இந்துக்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அப்படியே ஆதரிக்க வேண்டும். அதை எவ்விதப் பரிசீலனைக்கும் மாற்றத்துக்கும் உட்படுத்தக் கூடாது. இல்லையென்றால் எதிர்க்கிறீர்கள் என்றுதான் பொருள் என்கிறார்கள். மொத்தத்தில் "இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா? இரண்டில் ஒன்று சொல்லுங்கள். இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும். மூன்றாவது ஒன்று இருக்க முடியாது. இரண்டும் இல்லாத வேறொன்று இருக்க முடியாது, நடுநிலையும் இருக்க முடியாது'' என்றெல்லாம் குதர்க்கம் பேசுகிறார்கள். பகுத்தறிவுக்கும் தர்க்கவியலுக்கும் விரோதமான இந்த அணுகுமுறையை அறிவியல்பூர்வமானது என்றும் கற்பித்துக் கொள்கிறார்கள்.


கேள்வியை அமைக்கும் முறை, மாற்றுக் கருத்துக்களைக் காமாலைக் கண் கொண்டு பார்க்கும் பார்வை, மாற்றாரும் எண்ணிப் பார்க்காத வகையில் அவர்களுடைய நிலைக்கு இவர்களே தரும் வியாக்கியானம் எல்லாவற்றிலும் பாசிசத்தனமான கருத்துத் திணிப்புத்தான் இருக்கிறது. காசுமீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விக்கு, இல்லை எதிர்க்கிறோம் என்று பதில் சொன்னால், அப்படியென்றால் பாகிஸ்தான் நிலையை ஆதரிக்கிறார்கள் என்று முடிவு செய்தால், அது என்ன தர்க்கமாகும் தெரிகிறதா? அதேபோல இந்தியாவின் நிலையையும் ஏற்கவில்லை, பாகிஸ்தானின் நிலையையும் ஏற்கவில்லை; இரண்டையும் எதிர்க்கிறோம் என்று சொன்னால், அது நடுநிலையும் ஆகிவிடாது. காசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதுதான் சரியானது என்ற மூன்றாவது, மாற்று, வேறொரு நிலையை எடுக்கவும் முடியும். இப்படி நிலை எடுப்பதாலேயே இந்திய வெறியர்கள் நம்மைப் பார்த்து, தேசத்துரோகிகள், பாக் ஆதரவாளர்கள் என்று அவதூறும் செய்யக் கூடும்.


அதைப்போலத்தான், இந்தத் தமிழினவாதிகள் உட்பட சமூக (அ) நீதிக்காரர்கள்! நன்றாகக் கவனியுங்கள், இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை என்னவென்று கேட்கவில்லை. தமது நிலையை ஆதரிக்கிறீர்களா? இல்லையா? என்று கேட்கிறார்கள். நாம் நமது நிலையைச் சொன்னால், அவர்களாகவே ஒரு வியாக்கியானம் செய்து கொள்கிறார்கள்.


இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது நிலை குறித்து ஏற்கெனவே பின்வருமாறு எழுதியுள்ளோம்.


இட ஒதுக்கீடு குறித்துப் பார்ப்பன மற்றும் பிற உயர்சாதி இந்துக்கள் மூன்று விதமான நிலைப்பாடு எடுக்கின்றனர். ஒன்று; இட ஒதுக்கீடு என்பதே கூடாது; தகுதி, திறமை அடிப்படையிலேயே கல்வி, வேலை வாய்ப்புகள் தரவேண்டும் என்பது. இரண்டு; பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு செய்து தரவேண்டும்; ஏனெனில் கல்வி மற்றும் சமூக உரிமை இப்போது கிடையாது என்பது. மூன்று: கல்வி மற்றும் சமூக ரீதியிலானவற்றோடு பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ளதையும் அடிப்படையாக வைத்து இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது. இட ஒதுக்கீடு மண்டல் அறிக்கையின் தீவிர ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ளும் சில "மார்க்சிய லெனினியக் குழுக்கள்'' கூட இந்த மூன்றாவது நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளன. ஆனால் "புதிய ஜனநாயகம்'' மேற்படி மூன்று நிலைப்பாடுகளையும் ஏற்கவில்லை; எதிர்த்து அம்பலப்படுத்தி வருகிறது.


"சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பதுதான் அரசியல் சட்டத்தில் உள்ளது; இது தான் சரியானது; இவ்விரு அடிப்படைகளில் எது ஒன்றையும் புறக்கணிக்கக் கூடாது'' என்பதுதான் திராவிடக் கட்சிகள், அவற்றின் சார்புடையவர்களது நிலைப்பாடு. இதை "புதிய ஜனநாயகம்'' எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் சமூக ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள்தான் இட ஒதுக்கீடு கோரும் உரிமை உடையவர்கள் என்றே கூறிவந்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் திராவிடக் கட்சிகள்அவற்றின் சார்புடையவர்களுக்கும் "புதிய ஜனநாயக''த்திற்கும் இடையிலான வேறுபாடு, எந்தெந்த சாதிகள் சமூக ரீதியிலும் கல்வி ரீதியிலும் ஒடுக்கப்பட்டவைகள் உரிமை மறுக்கப்பட்டவைகள், இதை எப்படித் தீர்மானிப்பது என்பதுதான்! அப்படி இருக்கும்போது பார்ப்பனர்களைப் போலவே குழப்புவதாகவும், "புதிய ஜனநாயகம் என்பது புதிய பார்ப்பனீயமே' என்று எழுதுவதும் வெறும் அவதூறும் பொய்யும்தான்! (புதிய ஜனநாயகம், 115, மார்ச்'92, கேள்விபதில்)


ஆகவே, இட ஒதுக்கீடு பிரச்சினையில் நமது முழுமையான, சுருக்கமான நிலை இதுதான்:


· நிலவும் சமுதாயப் பொருளாதார, அரசியல் அமைப்பின் மீது வெறுப்புறும் பல்வேறு பிரிவு மக்களும் தங்களுக்கு எதிரான கலகத்தில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, "இந்த ஆட்சியில் தாங்களும் பங்கு பெறுகிறோம்'' என்கிற மாயையை உருவாக்குவதற்காகவே, கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு என்ற "நிறுவனமயமாக்கும் கொள்கை.'' இந்த அடிப்படையில்தான் உலகின் பல நாடுகளிலும் ஆளும் வர்க்கங்களே இட ஒதுக்கீடு ஏற்பாட்டைச் செய்கின்றனர். ஆங்கிலேயக் காலனியவாதிகள் முதல் ஆளும் காங்கிரசு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுவரை இப்படித்தான், இதற்காகத்தான் செய்கின்றனர். தமிழினவாதிகள் உட்பட சமூக (அ)நீதிக்காரர்கள் கருதுவதைப் போல நீதிக்கட்சியினரோ, திராவிடர் கழகத்தினரோ முன்வைத்துப் போராடிப் பெற்ற உரிமையல்ல. ஆட்சியாளர்களால் புகுத்தப்பட்ட நிறுவனமயமாக்கும் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சாதி இந்துக்களுக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டதுதான் நீதிக் கட்சிக்காரர்களின் "வகுப்புரிமைப் போர்.'' தங்களது ஏகபோகஆதிக்கம் "பறிபோகிறதே'' என்று ஆத்திரமுற்று இட ஒதுக்கீட்டுக் கொள்கையை பார்ப்பனர்கள் எதிர்த்தபோது, அதை முறியடிக்கத் திராவிடர் கழகத்தினர் நடத்தியதுதான் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டம். இட ஒதுக்கீடு தவிர வேறு பிறவற்றில், பெரியார் நடத்திய பார்ப்பனிய எதிர்ப்புக்களை அவரது "வாரிசுகள்'' கைவிட்டுவிட்டார்கள்; "இடஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது'' என்கிறார்கள். ஆனால், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் இட ஒதுக்கீட்டில் உள்ள புரட்சிக்கு பாதகமான அம்சங்களை மார்க்சிய லெனினியவாதிகள் பார்க்கிறார்கள். தங்களையும் பொதுவுடைமைவாதிகள் என்று கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் இந்த உண்மையைக் காண மறுக்கிறார்கள். இந்த உண்மையை வலியுறுத்தும் நமது நிலையை எடுத்துக் காட்டி, "இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்'', "மறைமுகப் பார்ப்பனியம்'' என்று அவதூறு செய்கிறார்கள்.


· அதேசமயம், இட ஒதுக்கீடு என்பது ஆட்சியாளர்களே புகுத்துவது என்றபோதும், நிலவும் சமூக அமைப்பில் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் சீர்திருத்தமாகவும் இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் சீர்திருத்தங்களுக்கு எதிரானவர்கள் அல்ல என்கிற முறையில் நாம் இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல; அது ஒரு தற்காலிக ஏற்பாடு என்கிற முறையில் எதிர்மறையில் ஏற்கிறோம். ஆனால், இட ஒதுக்கீடு ஒரு முழுமையான தீர்வல்ல, ஒரு இடைக்காலத் தீர்வுதான்; அதுவே சமூகப் புரட்சியாகாது என்பதைத் தாங்களும் ஏற்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழினவாதிகள் உட்பட சமூக(அ)நீதிக்காரர்கள் முரண்பாடாகவும் வாதிடுகிறார்கள். இட ஒதுக்கீடு என்பது பார்ப்பனியத்துக்கு எதிரான வகுப்புரிமைப் போர் என்றும் உலகிலேயே தனிச்சிறப்பான இந்திய சாதிய சமுதாயப் பிரச்சினைகளுக்கு வேறு யாராலும் எந்தத் தீர்வும் முன்வைக்கப்படாதபோது, பெரியாரும் அம்பேத்கரும் கண்டுபிடித்த சரியான ஒரே தீர்வு இதுதான் என்றும் உயர்த்திப் பிடிக்கப்படுவது இட ஒதுக்கீடுதான்! ஆட்சியாளர்களாலேயே புகுத்தப்பட்டது, சமூகப்புரட்சியாகி விடாதுசமூக சீர்திருத்தம்தான் என்கிறபோது, இந்த இட ஒதுக்கீடுதான் பெரியாரியத்தின் உயிராதாரமானது என்று வாதிடுவது பெரியாரையே இழிவுபடுத்துவதாகாதா?


கருணாநிதி 5வது முறையாக முதல்வராகப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அவரை உலகவங்கி அதிகாரி மைக்கேல் கார்டர் சந்தித்து தமிழகத்தில் உள்ள கிராமப்புற ஏழைகள் மற்றும் அபாயகரமான பிரிவு மக்களின் ஏழ்மைக் குறைப்புக்காக 750 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கினார். தேர்தலின்போது கருணாநிதி அறிவித்த பல்வேறு இலவசத் திட்டங்களுக்கும் இந்த நிதி பயன்படப் போகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே ஒப்புதலளிக்கப்பட்டது, உலக வங்கியின் இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டம். தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் ஆகிய மறுகாலனியாதிக்கம்தான் மக்களை ஏழ்மையில் தள்ளுகிறது என்றபோதும் பல்வேறு "இலவசங்கள்'' அடங்கிய இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தை நாம் எதிர்ப்பதில்லை. அதேசமயம், இதை ஆதரித்து, இந்த ஏழ்மைக் குறைப்புத் திட்டத்தின் கீழ் மேலும் மேலும் பல "இலவசங்கள்'' கோரிப் போராடவும் போவதில்லை. வறுமையிலும் பட்டினியிலும் செத்துமடியும் நம் மக்கள் உயிர் பிழைத்திருப்பதற்கு ஒரு இடைக்கால ஏற்பாடு என்கிற எதிர்மறைநோக்கில் ஏற்கிறோம்.


ஏழ்மைக் குறைப்புத் திட்டங்களால் வறுமை ஒழிப்போ, மக்களின் பொருளாதா வாழ்வில் புரட்சிகர மாற்றங்களோ வந்துவிடப் போவதில்லை. மறுகாலனியாக்கத்தை முறியடிப்பதே வறுமை ஒழிப்புக்கான வழி என்பதை வலியுறுத்தி மக்களைத் திரட்டுகிறோம். மறுகாலனியாக்கத்தை எதிர்க்கிறீர்கள், ஆகவே அதன் ஒரு பகுதியாகிய ஏழ்மைக் குறைப்புக்கும் எதிரானவர்கள் என்று அதிமேதாவித்தனமாக வாதிட முடியாது. அதைப்போலத்தான், ஆட்சியாளர்களின் நிறுவனமயமாக்கும் கொள்கை என்கிற முறையில் தெரிவிக்கும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவாதங்களை, ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் தெரிவிக்கும் எதிர்மறையான ஆதரவை மறுப்பதற்குப் பயன்படுத்துவது அயோக்கியத்தனமானது.


· இட ஒதுக்கீடு கொள்கையை ஒரு சீர்திருத்தம் என்கிற முறையில் ஏற்கும் அதேசமயம், தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களைப் போலவே இதற்கும் ஒரு வரம்பிருக்கிறது. தொழிற்சங்கக் கோரிக்கைகளுக்கான போராட்டமாகட்டும், இட ஒதுக்கீட்டுச் சீர்திருத்தமாகட்டும், இரண்டையும் தொடர்ந்து வரம்பின்றி செயல்படுத்திக் கொண்டே இருந்தால் எதிர்விளைவுகள் அதாவது முந்தையதில் முதலாளித்துவக் கண்ணோட்டமும், பிந்தையதில் சாதியக் கண்ணோட்டமும்தான் வலுப்படுத்தப்படும் என்கிறோம். இட ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த சிலர் கருப்புப் பார்ப்பனர்களாக நடந்து கொள்வதையும் பார்க்கிறோம். இட ஒதுக்கீடு கொள்கை ஒரு சீர்திருத்தம்தான் என்றபோதும், அதைக்கூட சகித்துக் கொள்ளாது பார்ப்பன மற்றும் பிற ஆதிக்க சாதிகள் காட்டும் எதிர்ப்பு கடுமையாகப் போராடி முறியடிக்க வேண்டியது என்கிறோம். அதேசமயம், முன்பு விளக்கியதைப் போன்று இட ஒதுக்கீட்டின் பலன்களை அதற்குத் தகுதியற்ற ஆதிக்க சாதிகள் (சமூக ரீதியில் தொடர்ந்து ஒடுக்குமுறை செலுத்தி வரும் சாதிகள்) பெறுவதையும் எதிர்க்கவேண்டும். ஆனால், இத்தகைய "சாதி இந்துக்களின்'' நலன்களுக்காகத்தான் தமிழினவாதிகள் உட்பட சமூக (அ)நீதிக்காரர்கள் புதிய ஜனநாயகப் புரட்சியாளர்கள் மீது பாய்கின்றனர், அவதூறு செய்கின்றனர்.
— ஆசிரியர் குழு


(ஜூலை 2006 இதழிலிருந்து)