Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு

இட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு

  • PDF

ஒ ரு கோட்பாடு என்கிற முறையில், இட ஒதுக்கீடு பிரச்சினை யில், தமிழினவாத குழுக்களிலேயே ஒருசில குழுக்கள் நம்முடைய நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் வாய்வழி பிரச்சாரத்தில், "புதிய ஜனநாயகத்தினர் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள். பார்ப்பனியத்தை மறைமுகமாக வைத்துக் கொண்டிருப்பவர்கள். இட ஒதுக்கீட்டை எதிர்த்தால்தான் பார்ப்பனியர்கள் ஏற்கெனவே இருக்கிற ஆதிக்கத்தை, அரசு பதவிகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்; கல்வி வாய்ப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கருதுபவர்கள். இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களெல்லாம் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு எதிரானவர்கள்; பார்ப்பன சாதிக்கு ஆதரவானவர்கள்'' என்று ஒரு அவதூறு பிரச்சாரம் செய்கிறார்கள்.


நம்மைப் பொருத்தவரை மிக தெளிவாகச் சொல்கிறோம், நாங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள் அல்ல. ஆதரவாளர்களா என்றால், சில பிரச்சினைகள் காரணமாக, சில நிபந்தனைகள் அடிப்படையில் ஆதரிக்கிறோம் என்பதுதான் உண்மையே ஒழிய, அப்படியே இவர்களைப் போல ஆதரிப்பவர்கள் அல்ல. ஏன் சில நிபந்தனைகளை உள்ளன என்பதைப் பார்க்கவேண்டும். வரலாற்றுப்பூர்வமாக இந்த இட ஒதுக்கீடு என்பது எப்படி உருவாகியது? இந்த இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இன்று வரையில் பல ஆண்டுகளாக இது எப்படிப்பட்ட பாதிப்பைக் கொண்டு வந்துள்ளது? இவற்றையெல்லாம் பரிசீலித்து நாங்கள் சில முடிவிற்கு வந்துள்ளோம். இந்த முடிவுகளைப் பற்றி நாங்கள் எழுதியுள்ளோம். அதில் சில கேள்விகள் எழுப்பியுள்ளோம். அந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், "இவர்களெல்லாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரிகள், பார்ப்பனர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதற்காக அப்படிச் செய்கிறார்கள்'' என்ற பொய்யைப் பரப்புகிறார்கள்.


இட ஒதுக்கீட்டின் அடிப்படை என்னவென்றால் இதுதான்: இந்தியாவின் சமூக அமைப்பில், சாதிய வர்ணாசிரம சமூக அமைப்பில் பெரும்பான்மையான மக்கள் கல்வி ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள். ஏற்கெனவே கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முற்பட்டுள்ள பார்ப்பனர்களுடன் அவர்களைப் போட்டிபோடச் சொன்னால், அவர்களால் போட்டி போட முடியாது. ஓட்டப் பந்தயம் வைத்து அதில் பலவீனமானவனையும் ஏற்கெனவே பலசாலியானவனையும் ஓடச் சொன்னால் பலவீனமானவன் வெற்றி பெறமுடியாது. பளு தூக்கும் போட்டியில் கூட இவ்வளவு எடை உள்ளவர்கள், இவ்வளவு எடை தூக்குபவர்கள் என்று பிரித்துள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் ஜூனியர், சப்ஜூனியர், சீனியர் என்றெல்லாம் மட்டம் பிரித்துள்ளனர். எதற்காக என்றால், ஒரு பத்து வயது சிறுவனை 25 வயதுடைய ஒரு இளைஞனுடன் ஓடச் சொன்னால், அவனால் முடியாது. அதனால் அவரவர்களுக்குப் பிரித்து வைத்துள்ளனர். அதுபோல் அரசு பதவி பெறுவதற்கான இந்த முயற்சியில், 2000 ஆண்டுகளாக வசதி வாய்ப்பு மறுக்கப்பட்டஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மற்றவர்களுக்கும் சமமான அளவில் போட்டி வைக்கக் கூடாது. பார்ப்பனக் குடும்பங்களில் தாய்தந்தையர்கள் படித்திருப்பார்கள், அவர்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் சொல்லிக் கொடுப்பார்கள், அவர்கள் சமூகப் பின்னணியே அதுபோல. எளிதில் ஒரு விசயத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் பதவிக்கு வந்துவிட முடியும். ஆனால், நமது குடும்பங்களில் இருப்பவர்கள் பின்தங்கியவர்கள், தாய்தந்தையர்கள் படிக்காதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் அவர்களுடன் போட்டி போட்டு ஜெயிக்க முடியாது.


ஆக, ஏற்றத்தாழ்வான ஒரு சமூகத்தில் சமவாய்ப்பு என்பதே பின்வரும் அடிப்படையில்தான் இருக்கமுடியும். சமவாய்ப்பு வழங்குவதற்கே இட ஒதுக்கீடு அவசியம். அது எப்படியென்றால், அவர்கள் ஒரு 20 வயதில் எந்த அறிவு பெறுகிறார்களோ, அந்த அறிவை இப்படி ஒடுக்கப்பட்ட மக்கள் 25 வயதில்தான் பெறுவார்கள். அதனால்தான், அரசு பதவிகளில் அதிகபட்ச வயதுவரம்பு 30 வயது என்றால், தாழ்த்தப்பட்டவர்களுக்கோ அல்லது ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கோ 35 வயது என்று சலுகை கொடுங்கள்; அப்போதுதான் இவர்கள் திரும்பத் திரும்ப போராடி அந்த இடத்திற்கு போக முடியும். — இவை இட ஒதுக்கீட்டை பற்றிய ஒரு விளக்கம்.


இன்னொரு விளக்கம் என்னவென்றால், முற்பட்டவர்களுக்கு 60 சதவிகித மதிப்பெண் என்று வரம்பு வைத்தால், சாதி ரீதியில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 50 சதவிகிதம் என்ற சலுகை வேண்டும். அவ்வாறின்றி சமூக, வரலாற்றுக் காரணங்களால் இவர்கள் அவர்களுடன் போட்டிபோட முடியாது. இதுதான் ஒரு சமத்துவமான போக்காக இருக்க முடியும். இதுதான் சமூக நீதியாக இருக்க முடியும். இந்த அடிப்படையில்தான், இட ஒதுக்கீடு கோரிக்கை என்பது இப்பொழுது விளக்கப்படுகிறது. இந்தப் பொது விளக்கம், கோட்பாடு சரி என்று திரும்பத் திரும்ப நாம் சொல்கிறோம். இதன் மீது நாம் கேள்வி கேட்கிறோமா, எதிர்க்கிறோமா, தவறு என்று சொல்கிறோமா என்றால் கிடையாது.


ஆனால், இப்படி சமூக ரீதியாக, கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்கள் என்று யாரைச் சொல்வது என்கிற விசயத்தில் வேறுபடுகிறோம். பிற்படுத்தப்பட்டவர்கள் என்று யாரைச் சொல்வது என்கிற கேள்வியை ஏன் எழுப்புகிறோம் என்றால், இந்த சமூக நீதி என்ற கோரிக்கைக்காகஇட ஒதுக்கீடுக்காக இன்றைக்கு வரையில் போராடுபவர்கள், யாருடைய சமூக நீதிக்காகஇட ஒதுக்கீட்டிற்காக போராடுகிறார்கள் என்பதிலே எங்களுக்கு சில சந்தேகங்கள் இருக்கின்றன. இதனுடைய வரலாறைப் பார்க்கும்போதும் இந்த சந்தேகம் வருகிறது. இது நியாயமானதா, இல்லையா என்பதை பரிசீலிப்போம் என்கிறோம். இந்த பரிசீலனைக்குள்ளேயே "சமூக நீதிக்காரர்கள்' வர மறுக்கிறார்கள்.


ஒரு காலனிய அரசமைப்பு இருக்கிற ஒரு நாட்டில், ஒரு சிலருக்கு பதவி வாய்ப்பு; மற்றவர்களுக்கு அது மறுக்கப்படுகிறது என்கிற ஒரு நிலை இருக்கக்கூடாது என்கிற காரணத்திற்காக, ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த இட ஒதுக்கீடு. பெரியாராலோ, வேறு சிலராலோ, நீதிக்கட்சியாலோ, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இயக்கங்களாலோ அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டு வரப்பட்டது அல்ல. இது ஒரு முக்கியமான உண்மை. ஏனென்றால், அவ்வாறு சிலர் இப்போது உரிமை பாராட்டிக் கொள்கிறார்கள்.


1900க்கு முன்னாலேயே ஆங்கிலேய ஏகாதிபத்தியக் காலனியவாதிகள் அனைவருக்கும் கல்வி, கல்விக்கான உரிமை, வாய்ப்பு என்பதைக் கொண்டு வந்தார்கள். அதற்கு முன்பு, இந்த சாதியைச் சேர்ந்தவன்தான் படிக்கலாம்; இந்த சாதியைச் சேர்ந்தவன் படிக்க முடியாது; இவன் பள்ளியில் சேரலாம், அவன் சேரமுடியாது என்றிருந்தது. அனைவருக்குமான கல்வி என்பதை ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள்தான் கொண்டு வந்தார்கள். அவர்களுடைய போலீசில், ராணுவத்தில் சாதி அடிப்படையில் இல்லாமல் — அதாவது, பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் என்றில்லாமல், வேறு பல சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஓரளவு இடம் தந்தார்கள்.


இந்த இட ஒதுக்கீடு எப்போது வந்தது, எதற்காக, யாரால் கொண்டு வரப்பட்டது? ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளால் கொண்டு வரப்பட்டது. அதாவது, அவர்களின் காலனிய அரசு அடக்கி ஆளக்கூடிய சமூகத்தில், ஒரு பிரிவுக்குதான் சலுகைகள் இருக்கிறது; மற்ற பிரிவுகளுக்கு அது முற்றாக மறுக்கப்படுகிறது என்கிற ஒரு எண்ணம் மற்ற பிரிவுக்கு வரக்கூடாது; பார்ப்பானுக்குத்தான் இந்த ஆட்சி நடக்கிறது, மற்றவர்களுக்கு இல்லை என்கிற கருத்து உருவானால், மற்றவர்கள் ஐக்கியப்பட்டு இந்த ஆட்சிக்கு எதிராகப் போராடக் கூடிய நிலைமை ஏற்படும் என்று காலனியவாதிகள் கருதினார்கள். இந்த அடிப்படையில், இதையே சொல்லி கொண்டு, ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார்கள். இதை மெக்காலே கல்வி முறையிலும், ஸ்டுவர்டு மில் எழுதிய அறிக்கை அடிப்படையில் நிர்வாகத்தியிலும் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதாவது, அவர்கள் பரிந்துரை செய்து கொண்டுவந்தார்கள். இப்படி ஒரு அடிப்படையில் மிகவும் பின்தங்கிய பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும், இல்லையென்றால் இந்த ஆட்சி ஒரு சில பிரிவைச் சேர்ந்த மக்களுக்கான ஆட்சி என்கிற கருத்து காலனிய நாட்டு மக்களுக்கு உருவாகிவிடும் என்று எண்ணினர். அந்த அடிப்படையிலேதான், ஆங்கிலேயர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் சாதிவர்ணாசிரம ரீதியில் சில சாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கல்வித் தடை, வேலைத் தடை ஆகியன சட்டப்படி நீக்கப்பட்டது.


இந்த அரசமைப்பில் திராவிட இயக்கங்கள் கூறும் சமூக நீதி என்பதுகூட எப்படி வந்தது? அதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. 1857இல் முதல் சுதந்திரப்போர் தொடங்கிய பிறகு, விக்டோரியா மகாராணியின் சாசனத்தின் அடிப்படையில் இந்தியாவில் ஒரு புதிய, மையப்படுத்தப்பட்ட ஆட்சி நிர்வாக அரசமைப்பு ஏற்பட்டது. ஆட்சி நிர்வாகத்தில் இந்திய மக்களுக்கும் இடம் கொடுப்பது என்பது வந்தது. சட்டத்துறையில், நீதித்துறையில், ராணுவத்தில், ஆட்சி நிர்வாகத்தில் இந்தியர்களையும் சேர்த்துக் கொள்வது என்கிற முடிவை ஆங்கிலேயர் எடுத்தபோது, அந்த இடத்திற்குத் தயார் நிலையில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள். ஏற்கெனவே கல்வி அறிவு மற்றும் பிற அனைத்து விசயங்களிலும் தயார் நிலையில் இருந்தார்கள். முதலில் பெரும்பான்மையானவர்கள் வக்கீல்கள் ஆனார்கள். வக்கீல் தொழில் மிகையாக லாபம் சம்பாதிக்கக் கூடிய தொழிலாக இருப்பதைப் பார்த்தார்கள். பிறகு, 100க்கு 90 சதவீதம் அரசு பதவிகளில் பார்ப்பனர்கள் உட்கார்ந்தார்கள்.


அதற்கு முன், பார்ப்பனரல்லாத சாதிகளைச் சேர்ந்த ஒரு சில பகுதியினர் பெரிய பெரிய நிலவுடைமையாளர்களாக இருந்தார்கள்; இவர்களெல்லாம் ஜமீன்தார்கள், மிட்டாதாரர்கள், மிராசுதார்கள், குறுநில மன்னர்கள்; இவர்கள் இந்த விசயத்தை எப்படிப் பார்த்தார்கள்? ஏற்கெனவே அவர்களிடம் அதிகாரம்"அதலத்', வரிவசூல், நிலநிர்வாகம் போன்றவை இருந்தது. "அதலத்' என்றால் ஒரு வட்டாரத்தில் ஜமீன்தாராக இருக்கக் கூடியவர் ஒரு தோட்டியை வைத்துக் கொண்டு, குற்றம் நடந்தால் அவர்களைப் பிடித்து வந்து தண்டிப்பது என்ற அடிப்படையில் நேரடி போலீஸ், நீதி, நிர்வாக அதிகாரத்தை பெற்றிருந்தார்கள். பிறகு, மையப்படுத்தப்பட்ட அரசு வந்தபிறகு சாதி அடிப்படையிலோ, ஜமீன்தாரி முறைப்படியோ இல்லாமல் அதிகாரம் என்பது வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டது. அந்த இடத்தைப் பார்ப்பனர்கள்தான் முதலில் பிடித்துக்கொண்டனர். இந்த அதிகாரத்தை இழந்த பிரிவினருக்கு என்ன தேவையாக இருந்தது? ஜமீன்தார், மிட்டாமிராசுள் என்ற முறையிலான அதிகாரத்தை இழந்ததன் காரணமாக, இவர்கள் தங்களுக்கும் புதிய அரசு பதவிகளில் பங்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். முதலில் என்ன செய்தார்கள் என்றால், இவர்களும் பார்ப்பனர்களைப் போன்று கல்வி பயில்வது, சமஸ்கிருதம் கற்பது, பார்ப்பனப் பண்பாட்டைக் கற்றுக் கொள்வது; இதன் மூலம் தனது தகுதி நிலையை உயர்த்திக் கொள்வது, அரசு பதவிகளுக்குத் தகுதி உடையவர்களாக மாறிக் கொள்வது என்றவாறு முயன்றார்கள்.


அதற்குப் பிறகும் 100க்கு 80 சதவிகிதம் பார்ப்பன ஆதிக்கம் நீடித்தது என்பதால், இவர்கள் ஒரு சங்கமாகச் சேர்ந்தார்கள். தென்னிந்திய நல உரிமைச் சங்கம் வைத்தார்கள். திராவிடன், ஜஸ்டிஸ் ஆகிய பத்திரிகைகள் நடத்தினார்கள். "ஜஸ்டிஸ்' என்பது எந்த அடிப்படையில்? "சமூகத்தில் நீதி மறுக்கப்படுகிறது. பார்ப்பனருக்கு மட்டும்தான் பதவி வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் இவ்வளவுபேர் நீதிபதிகளாக இருக்கிறார்கள்; இவ்வளவு பேர் வக்கீல்களாக இருக்கிறார்கள்; இவ்வளவு பேருக்கு கல்வி கிடைத்துள்ளது; இந்த அடிப்படையில் பார்ப்பன ஆதிக்கம் வந்துள்ளது. இந்த சமுதாயத்தில் மற்ற எல்லா பிரிவினருக்கும் இந்த வசதி வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது'' என்றார்கள். அதற்கு அவர்கள் சொன்ன விளக்கமும் கோரிக்கைகளும் என்னவென்றால், "பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் சூத்திரர்கள்; "வேசிமகன்' என்ற இழிவுபடுத்தப்பட்டிருந்தோம்; எங்களுக்கு கல்வி உரிமை, சமூக உரிமை மறுக்கப்பட்டிருந்தது; ஆகவே, 2000 ஆண்டுகளாக இந்த சமுதாயத்தில் நாங்கள் அடக்கி, ஒடுக்கப்பட்டுள்ளதால், பார்ப்பனர்களைப் போல இந்த "தகுதிகள்' எங்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கக்கூடாது; ஆகையால், அரசு அதிகாரத்திற்கான போட்டியில் சமமான ஒரு வாய்ப்பு என்பது தவறு; எங்களுக்கு சில சலுகைகள் வேண்டும்; எனவே,எங்களுக்கென்று இட ஒதுக்கீடு தேவை'' என்கிற கோரிக்கையை நீதிக்கட்சி வைத்தது.


இதற்குத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் யார் என்றால் ஏற்கெனவே சொன்ன மிட்டாமிராசுகள், ஜமீன்தார்கள், குறுநில மன்னர்கள் போன்றோர்கள். யாரெல்லாம்? பொப்பிலி ராஜா, பனகல் ராஜா, வேங்கட கிரி ராஜா, சர் பி.டி. ராஜன், சர். தியாகராய செட்டியார் போன்றோர்கள். இவர்களெல்லாம் வியாபாரத்தில் பெரிய பெரிய ஆட்களாக இருந்தனர் அல்லது நிலவுடைமையில் பெரிய பெரிய நிலையில் இருந்தார்கள். எந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள்? பட்டிவீரன்பட்டி ஜமீன் டபிள்யு.பி.ஏ. சவுந்தர பாண்டியன், பி.டி.ராஜன் போன்ற ஜமீன்தார் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், வேளாள முதலியார்கள், அப்புறம், தஞ்சை, மதுரை, செங்கல்பட்டு, கோவை மாவட்டத்தில் இதேபோன்று பெரிய நிலையில் இருக்கக்கூடிய மிட்டாமிராசுகள், ஜமீன்தார்கள். — இவர்களெல்லாம்தான் இந்த நீதிக்கட்சிக்குத் தலைவர்களாக இருந்து இட ஒதுக்கீடு கோரிக்கையை முதலில் எழுப்புகிறார்கள்.


பொப்பிலி ராஜா, பனகல் ராஜா, வேங்கட கிரி ராஜா — இட ஒதுக்கீடு கேட்ட இவர்கள் என்னென்ன சாதியென்றால் வேளமா, பலிஜா நாயுடு, கம்மா நாயுடு, ரெட்டியார்களிலேயே உயர்ந்த பிரிவினர், சைவ வேளாளர்கள், கொங்கு வேளாளர்கள், வேளாள முதலியார்கள். இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி, "பார்ப்பனர்கள் இவ்வளவு சதவிகிதம் ஆதிக்கத்தில் இருக்கிறார்கள். அந்த இடத்தை எங்களுக்குக் கொடுங்கள்'' என்ற கோரிக்கையை வைத்தார்கள். இப்படி நாம் சொல்வது பொய்யல்ல. தி.மு.க. வரலாறு என்ற நூலை பார்த்தசாரதி எழுதியுள்ளார். பின்னால், முரசொலி மாறன் எழுதியுள்ளார். அந்த புத்தகங்களையெல்லாம் வாங்கி படித்துப் பார்த்தால் இதுதான் இருக்கிறது.


1945இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாகியது. 1945இல் சேலத்தில் நடந்த அந்தக் கழக மாநாட்டில் அண்ணாதுரை உரையாற்றியுள்ளார். அதில் என்ன சொல்கிறார்? "அரண்மனைகளிலும், மாளிகைகளிலும் சதி ஆலோசனை செய்து, ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்து, பேரம்பேசி சலுகைகளைப் பெறுவதாகத்தான் இதற்கு முன்பிருந்த திராவிடக் கட்சி இருந்துள்ளது. இப்பொழுது உருவாகக்கூடிய திராவிடக் கழகம் அப்படி இருக்காது. சாமானியர்களுக்காக போராடும்'' என்று அந்த உரையிலேயே அறிவித்துள்ளார். ஆக, நீதிக்கட்சியினுடைய வர்க்க அடிப்படை என்ன? எப்படிப்பட்டவர்கள் இட ஒதுக்கீட்டை முதலில் கோரினார்கள், ஆதாயம் அடைந்தார்கள்? யாரும் மறுக்க முடியாது. திராவிட இயக்கங்களிலேயே ஊறிப் போன சிலர்தான் நீதிக்கட்சியும் நியாயமான கட்சி என்று பேசுவார்களே ஒழிய, இன்றும் கூட பகுத்தறிவு சுயமரியாதைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட யாருமே அப்படிப் பேசுவதில்லை.


"சமூக நீதிக்காரர்களால்' உரிமை பாராட்டப்படும் இட ஒதுக்கீடு எப்படி, எப்போது வந்தது? அதுவும் அந்த நீதிக்கட்சியால் வரவில்லை. 1927இல் இவர்கள் ஒரு மந்திரி சபையை அமைத்தார்கள். சர்வஜன வாக்கு இல்லை; சொத்துடையவர்கள், பட்டம் பெற்றவர்கள் வாக்களிக்க நிலப்பட்டாவைக் காட்ட வேண்டும். கல்வி கற்றிருக்க வேண்டும். இவர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமையுடைய ஒரு தேர்தலில், நீதிக்கட்சி சில சுயேட்சைகளை வைத்துப் பெரும்பான்மை பெற்று, 1927இல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தது. அப்பொழுது இருந்த சென்னை மாகாணம் என்பது பெங்களூர் உட்பட்ட கர்நாடகத்தின் ஒரு பகுதி, தெலுங்கானா தவிர ஆந்திரா, தெற்கு ஒரிசா, கேரளாவில் பாலக்காடு, கண்ணூர், கள்ளிக்கோட்டை இப்படிப்பட்ட சில பிராந்தியங்களையும் உள்ளடக்கியது. இந்த சென்னை மாகாணத்தில் ஆட்சியமைத்தாலும், தெலுங்கு பேசக்கூடிய ஜமீன்தார்குறுநில மன்னராகவுள்ள மூன்று பேரைக் கொண்ட ஒரு மந்திரி சபையை அமைத்தார்கள். தமிழர்களுக்கு மந்திரி சபையில் ஒரு இடம் கூடக் கொடுக்கவில்லை. போராட்டம் நடத்தி தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவருக்கு அந்த மந்திரி சபையில் ஒரு இடம் வாங்கினார்கள். இலஞ்ச ஊழல் பெருகி, பெரும்பான்மையை இழந்து, அதற்குப் பிறகு வந்த தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது. அந்த கட்சிக்குள்ளேயே சண்டை ஏற்பட்டு கலைந்துபோயினர்.


திருச்செங்கோடு குமாரமங்கலம் ஜமீன் டாக்டர் சுப்பராயனை சுயேட்சை முதல் மந்திரியாக வைத்து, அவர் பின்னணியிலிருந்து நீதிக்கட்சி மறுபடியும் மூன்றாண்டுகளுக்கு ஆட்சி செலுத்துவதற்கான வாய்ப்பை பெற்றனர். அதாவது, நீதிக்கட்சியின் ஆதரவு பெற்ற சுயேட்சை ஆட்சி. இந்த சுயேட்சை ஆட்சிக் காலத்தில்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) என்கிற ஒரு சட்டத்தை பார்ப்பனரல்லாத அனைத்து சாதி இந்துக்களுக்கும் பொதுவாகப் பொருந்தக்கூடியதாகக் கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை அறிவிக்கிறார்கள். அதாவது, பார்ப்பனர்களுக்கு இவ்வளவு இடஒதுக்கீடு, பார்ப்பனர் அல்லாத சாதி இந்துக்களுக்கு இவ்வளவு, கிறித்தவர்களுக்கு இவ்வளவு, தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு இவ்வளவு இட ஒதுக்கீடு என்கிற அடிப்படையில் அரசு பதவிகளைப் பிரித்து பகிர்ந்து கொண்டனர். இந்த அடிப்படைதான் 1950 வரை இருந்தது. அதாவது, தாழ்த்தப்பட்டமலைவாழ் மக்களுக்கு இவ்வளவு சதவிகிதம், தாழ்த்தப்பட்டவர்களும் அல்லாத — பார்ப்பனர்களும் அல்லாதவர்கள், ஆனால் சாதி இந்துக்கள் என்கிற பொது வரையறையில் வரும் எல்லா சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் இவ்வளவு என்று இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இந்த இட ஒதுக்கீடு முறையில் நடந்தது என்னவென்றால் வண்ணார், நாவிதர், குயவர், கொல்லர்தச்சர், கைக்கோலர், நாடார், வேட்டுவர், வன்னியர், பிறன்மலைக் கள்ளர் — இப்படி உடல் உழைப்பை மட்டும் நம்பியிருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களும், மிகவும் முன்னேறிய சைவ வேளாளர்கள், வேளாள முதலியார்கள், வேளாள கவுண்டர் , செட்டியார், மறவர், அகமுடையார், நாயுடு, ரெட்டியார் இப்படி அனைவரும் சேர்ந்துதான் சாதி இந்துக்கள் என்ற ஒரு பொதுப்பட்டியலில் வந்தார்கள். இப்படிப்பட்டஏற்பாட்டில் அரசு பதவிகளுக்கு இந்த முன்னேறிய சில சாதிகள்தானே வரமுடியும்? அப்படித்தான் நடந்தது. அவர்கள்தான் இட ஒதுக்கீடு மூலமான அரசுப் பதவிகளைப் பிடித்துக் கொண்டனர். அவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு என்பது 30 ஆண்டுகளாக இருந்தது. ஆகவே, கம்யூனல் ஜி.ஓ. மூலம் "பார்ப்பனரல்லாத மற்ற எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கிடைத்தது; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சமூக நீதி கிடைத்துக் கொண்டிருந்தது'' என்பதெல்லாம் பொய்.


இது பொய் என்று நாம் மட்டும் சொல்லவில்லை. சமூக நீதி அறிக்கை எனப்படும் மண்டல் கமிசன் அறிக்கை, தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்ட சட்டநாதன் கமிசன் அறிக்கை போன்றவற்றில் சொல்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதார் என்கிற ஒரு பொது மூடுதிரையின் கீழ், பொதுப்போர்வையைப் போர்த்திக் கொண்டு, முன்னேறிய சில சாதிகள் அந்த இடத்தில் உட்கார்ந்துக் கொண்டனர். ஏனென்றால், ஏற்கெனவே சொன்னதுபோல் உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதிளைச் சேர்ந்தவர்கள் அவர்களுடன் போட்டி போட முடியவில்லை.


இன்னொரு கோணத்தில் பார்த்தால், இந்த சமூக நீதி, இட ஒதுக்கீடு என்பதற்கான அடிப்படை என்னவென்றால், "2000 ஆண்டுகளாக எங்களுக்குக் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது. சமூக உரிமை மறுக்கப்பட்டுள்ளது; அந்த அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு'' என்று சொல்லித்தான் வந்தார்கள். ஆனால் நடைமுறையில், இவர்கள் அனைவரும் கல்வி உரிமை மறுக்கப்பட்டவர்களா? வேளாள, வைசிய சாதிகளுக்கெல்லாம் கல்வி உரிமை மறுக்கப்பட்டது என்பதெல்லாம் பொய். முக்குலத்தோரிலேயே ஒரு சிலப் பிரிவினர்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படவில்லை. வேறு பல காரணங்களினால் அவர்களுக்கு இந்த நிலை வந்திருக்கிறது. இவர்கள் மற்றப் பிரிவினர்களை கீழ் நிலையில் வைத்து அடக்கி ஒடுக்கிக் கொண்டிருந்தவர்கள்.


முத்துராமலிங்கத் தேவர்தான் முதன்முறையாக குற்றப் பரம்பரை முறையை தகர்த்தார், ஒழித்தார் என்பது எதைக் குறிக்கிறதென்றால், முக்குலத்தோரிலேயே ஒரு பிரிவினரைத்தான் கீழ் நிலையில் வைத்து குற்றப் பரம்பரை என்று நடத்தி வந்துள்ளனர். எல்லா முக்குலத்தோரையும் அப்படி வைத்தது கிடையாது. இதுதான் உண்மை. இதேபோல்தான் மற்ற எல்லா சாதிகளிலும் இருக்கிறது. கவுண்டர்களிலேயே வேட்டுவக் கவுண்டர் போன்றவர்கள் கீழ் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். வேளாளக் கவுண்டர்களால் தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டார்கள். வீடுகளில் அனுமதிக்கப்படவில்லை. வன்னியர்களிலேயே பள்ளிகள் என்று சொல்லக்கூடிய பிரிவினர்கள் வீடுகளில் அனுமதிக்கப்படவில்லை.


இன்னொரு உண்மை என்னவென்றால், தமிழ்நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்பது எல்லா சாதிகளுக்குமான பண்பாடு அல்ல. அதாவது, அது எல்லா வர்ணத்திற்கும், எல்லா சாதிகளுக்கும் பொதுவானதாக இருக்கவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல, பெரும்பான்மையான சாதிகளில் விவாகரத்து, மறு திருமணம் என்பது பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை மறுக்கும் சில சாதிகள், பார்ப்பன அடிப்டையில் தன்னை மேல்சாதி என்று கருதுவதுதான் நடைமுறையில் இருந்தது. விவாகரத்து கிடையாது, விதவைத் திருமணத்தை மறுத்து வெள்ளை சேலை கட்டிக் கொள்ள வேண்டும் என்கிற அடிமைத்தனங்களை பெண்ணுக்கு விதிப்பது என்பது மேல்சாதிகள் மத்தியில் மட்டும்தான் இருந்ததே ஒழிய, எல்லா சாதிகளிலும் கிடையாது. அப்படிப்பட்ட சமூக, பண்பாடு கொண்ட சாதிகள் தங்களுக்கும் கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது, சமூக உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்றால் அது உண்மையா?


இன்றைக்குத் தமிழினவாதிகள், திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், "பார்ப்பனரல்லாத அனைவருமே ஒன்றுதான், ஒரே சமுதாயம், பிற்படுத்தப்பட்ட சமுதாயம், சூத்திர சாதிகளிலிருந்து வந்தவர்கள்'' என்கிறார்கள்.


ஆனால், திரும்ப திரும்ப பெரியார் பல நூல்களில் எழுதியுள்ளார், "சூத்திர சாதிகளிலிருந்து வந்தவர்கள், வேசிமகன் என்று பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்டவர்கள். அதனால் எங்களுக்கு கல்வி உரிமை இல்லை, சமூக உரிமைஇல்லை. 2000 வருடங்களுக்கு முன்பு மனுதர்மத்தில் சூத்திரனுக்கு இன்னன்ன பண்பு, தொழில், பிரிவினை என்றெல்லாம் வரையறுத்துள்ளனர்''. பெரியார் பத்து பக்கத்தில் ஒரு சிறு நூலை வெளியிட்டுள்ளார். அதில் "சூத்திரன் என்பன் உடைந்த மண்பாண்டத்தில்தான் குடிக்க வேண்டும். ஊருக்கு ஒதுக்குப்புறத்தில்தான் குடியிருக்க வேண்டும். கிழிந்த துணியைத்தான் உடுத்த வேண்டும். பால் குடிக்கக்கூட அவனுக்கு உரிமை கிடையாது. கோவிலில் நுழைவதற்கு உரிமை கிடையாது.'' என்கிறார். இவை சூத்திரனுக்குக் கொடுக்கப்பட்ட வரையறை. ஆக, சூத்திர வர்ணத்தை சேர்ந்தவர்களுக்குத்தான் கல்வி உரிமை, சமூக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.


இப்போது,அந்த வர்ணம்தான் நாங்கள் என்று சாதி இந்துக்கள் எனப்படுவோர் சொல்கிறார்கள். இது உண்மையா என்று நாம் கேட்கிறோம். ஏனென்றால், கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு இப்பொழுது நாம் பார்க்கும் சாதிகள் என்னவாக இருந்தன; எப்படியெல்லாம் மாறி வந்தன. படிப்படியாக, பல அடுக்குகளாக இருக்கக்கூடிய பல சாதிகளில் பலர் நில உடைமையாளர்களாக, ஜமீன்தாரர்களாக இருந்துள்ளனர். தமிழகத்திலும் மிகவும் பெரியளவில் ஜமீன்தார், மிட்டாமிராசு முறை இருந்துள்ளது. பிரிட்டிஷ்காரன் வந்த பிறகுதான் குத்தகைக்கு விவசாயிகளிடம் நிலத்தை கொடுக்கும் முறையான ரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தினான். அதற்கு முன்னால், ஜமீன்தார்தான் நிலங்களை குத்தகை விவசாயிகளிடமும் மற்ற விவசாயிகளிடமும் கொடுப்பான். அவன்தான் அவர்களிடமிருந்து நேரடியாக குத்தகைவரிவசூல் செய்து கொள்வது இருந்தது. அதற்கு முன்பு பல பார்ப்பனர்களும் சாதிஇந்துக்களும் ஜமீன்தாரர்களாக இருந்துள்ளனர். பார்ப்பனர்கள் மட்டும்தான் அப்படி இருந்தார்கள் என்பது பொய். ஆகவே, ஜமீன்தாரராக இருந்த அந்த சாதி இந்துக்களைச் சமூக ரீதியில், கல்வி ரீதியில் ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் என்று சொல்ல முடியுமா, இப்போது அதற்குரிய உரிமை கோர முடியுமா என்றால் முடியாது. எந்தெந்த சாதிகள் நிலவுடைமைச் சாதிகளாக, போதிய அளவு கல்வி பெற்ற சாதிகளாக, சாதி ஒடுக்குமுறையை செலுத்திக் கொண்டுள்ள சாதிகளாக இருந்தன? இந்தச் சாதிகளெல்லாம் தாங்களும் சூத்திரர்களாக இருந்தோம் என்று சொல்லிக் கொள்வது ஏற்கக்கூடியதா?


பெரியாரும் பிற தமிழின, திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் எவ்வளவோ சமூக ஆராய்ச்சிகள் நடத்தியுள்ளனர். இந்த ஆராய்ச்சிகளில், கடந்த 2000 ஆண்டுகளில் என்னென்ன மாற்றம் நடந்துள்ளது, எந்தெந்த சாதிகளுக்கு கல்வி உரிமை, மத வழிபாட்டு உரிமை, சமூக உரிமை மறுக்கப்பட்டிருந்தது, எந்தெந்த சாதிகளுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டிருந்தது என்று ஏதாவது ஆராய்ச்சி இருக்கிறதா? எல்லா சாதிக்காரர்களும் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் சத்திரியர், நாங்கள் வைசியர் என்கிறார்கள்; அதாவது, ஒன்று சத்திரிய சாதி என்கிறார்கள், இல்லையென்றால் வைசிய சாதி என்கிறார்கள். அவர்கள் பெயருக்கு சொல்கிறார்களா என்றால் இல்லை. கடந்தகால சமுதாயத்திலேயே அவர்கள் வியாபாரிகளாக, படை நடத்தும் ஆட்சியாளர்களாக — அதாவது, சத்தியர்களாக இருந்துள்ளனர்.


முக்குலத்தோரிலேயே ஒரு சில பிரிவினர் திரும்ப திரும்ப என்ன சொல்கிறார்கள் என்றால் "சேர, சோழ, பாண்டிய ஆட்சியில் பாண்டிய மன்னர்களாகவும், சோழ மன்னர்களாகவும் நாங்கள்தான் இருந்தோம்.'' நாடார் சமுதாயத்தில் ஒரு சில பிரிவினர் " நாங்கள்தான் பாண்டிய நாட்டில் பாண்டியர்களாக இருந்துள்ளோம், திருநெல்வேலியை தலைநகரமாகக் கொண்டு நாங்கள் ஆட்சி நடத்தியுள்ளோம்.'' அதேபோல வன்னியர்கள், "நாங்கள் பல்லவர்களின் பாரம்பரியம்'' என்கிறார்கள். இன்றைக்கும் ராமதாஸ் ஒவ்வொரு சித்திரை பௌர்ணமியிலும் மாமல்லபுரத்தில் இளைஞர்களைக் கூட்டி வைத்து, "நாம் பல்லவ பரம்பரையில் வந்துள்ளோம். இந்த அடையாளம் நமக்கு இருக்கிறது. நாம் போர்ப் பரம்பரையில் வந்தவர்கள்'' என்கிறார். இவற்றை எல்லாம் நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பெரியார் திரும்ப திரும்ப சொல்கிறார், "நீ இப்படி எல்லாம் உரிமை பாராட்டாதே, நாமெல்லாம் சூத்திரனாகத்தான் இருந்துள்ளோம்'' என்று. ஆனால், அதை இந்த சாதியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, வரலாற்று ரீதியில் பார்க்கும்பொழுது, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக கல்வி உரிமை பெற்றவர்கள் யார்? கல்வி பெறாதவர்கள், மறுக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் யார்? எந்தந்த சாதிகள்? நாம் முழுமையாக ஆராய்ச்சி நடத்திவிடவில்லை. ஆனால் நடைமுறையில், "சமூக நீதி'க்காரர்களின் வாதங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லை.


இன்றைக்கும் கோவை, சேலம், ஈரோடு மாவட்டங்களில் மிகவும் கடுமையான சாதி ஒடுக்குமுறை உள்ளது. தெற்கேயாவது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் மற்ற சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் சாதிக் "கலவரங்கள்', சாதிச் சண்டைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், மேற்கு மாவட்டங்களில் துளி அளவுக்கூட சாதி சண்டைகள் கிடையாது. சமீபத்தில் காளப்பட்டி என்கிற ஊரில் ஒரு சாதி ஒடுக்குமுறை சம்பவம் நடந்துள்ளது. மற்றபடி எங்கெயும் இல்லை. திண்டுக்கல்லுக்கு மேற்கில், வடக்கில் பார்த்தால் சாதிக் கலவரம், சாதி எழுச்சி, போராட்டம் என்பது எதுவுமே கிடையாது. அதற்குப் பொருள், அங்கெல்லாம் தீண்டாமை இல்லை என்பதில்லை. தமிழ்நாட்டிலேயே மிகக் கொடூரமான முறையில் தீண்டாமை அங்கிருக்கிறது. அப்படி கொடூரமான முறையில் சாதி ஒடுக்குமுறையை வைத்துக் கொண்டிருக்கின்ற வெள்ளாளக் கவுண்டர்கள் கரூரில் கூடி, ஒரு மாநாடு நடத்தி "நாங்களும் பிற்படுத்தப்பட்டவர்கள், இந்த பி.சி.ஆர். என்று சொல்லக்கூடிய, தாழ்த்தப்பட்டவர்களின் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இது பிற்படுத்தப்பட்ட எங்கள் சாதிக்கெதிரான சட்டம், இதைக்கேடாக பயன்படுத்துகிறார்கள். எங்களுக்குப் போதிய இட ஒதுக்கீடு போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டால், நாங்கள் தனிநாடுக் கூட கேட்போம்'' என்று தீர்மானம் நிறைவேற்றினர்.


அதாவது சமூக ரீதியில் பார்த்தால், அந்த சாதிக்காரர்கள், "நாங்கள்தான் மேலானவர்கள், நாங்கள்தான் அரசாட்சி செய்தவர்கள், சங்கர் பொன்னர் கதைப்படி ஆண்டவர்கள் கொங்குவேளாளர்கள்'' என்று உரிமை பேசினர். சமூக ரீதியில் உரிமைபேசி, அந்த அடிப்படையில்தான் அங்கிருக்கக்கூடிய தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கி வருகின்றனர். ஆனால் அரசு பதவி மற்றும் கல்வியில் இட ஒதுக்கீடு என்றால், "நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், 2000 ஆயிரம் வருடங்களாக எங்களுக்கு கல்வி வசதி, சமூக வசதி இல்லாமல் போய்விட்டது, எங்களால் பார்ப்பானிடம் போட்டி போட முடியாது'' என்கின்றனர். அங்குள்ள நிலமை என்னவென்றால், கடந்த இருபது, முப்பது ஆண்டுகள் வரையில், "எங்களுக்கு நிலம் இருக்கிறது, நாங்கள் பிழைத்துக் கொள்வோம், ஒருத்தரிடம் கைகட்டி சம்பளம் வாங்கக்கூடாது'' என்பதுதான் அந்த சமுதாயத்தின் பண்பாடாக இருந்தது. அரசு வேலைக்கு செல்வது என்பதே கைகட்டி வேலைசெய்வது (ஒருவரிடம் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்வது) என்று கருதும் இந்த சாதியினரே சாதி அடக்குமுறையைச் செலுத்துகின்றனர். இவர்கள் இந்த பண்பாட்டின் காரணமாகப் பின்தங்கியுள்ளனரா? இல்லை, பார்ப்பன சூழ்ச்சியின் காரணமாகத்தான் இவர்கள் இப்படி இருக்கின்றனரா?
ஆகவே நாம் சாரமாக சொல்வது என்னவென்றால், சாதி அடக்குமுறை செலுத்துபவன், தான் ஒரு மேல்சாதி என்கிற நிலையில் ஏற்கெனவே வாழ்ந்துவிட்டு, இப்பொழுது இட ஒதுக்கீடு மூலம் சில அதிகாரம் கிடைக்கும், பதவி கிடைக்கும் என்கிற நிலை ஏற்பட்டதும், "நானும் பிற்படுத்தப்பட்டவன், நானும் ஒடுக்கப்பட்டவன், நானும் கீழ் சாதியைச் சேர்ந்தவன்'' என்கிற ஒரு வாதத்தை வைப்பது என்பது நாடகமாடுவதாகும். பெரியார் திரும்ப திரும்ப சொல்கிறார்: "பார்ப்பன சூழ்ச்சியால்தான், இந்தச் சாதி, அந்தச் சாதி, தானும் மேல்சாதி என்று பேசுவது வந்தது. அவன்தான் சாதியைப் படிப்படியாக பிரித்துள்ளான். மற்றபடி இவர்களும் சூத்திரர்கள்தான்.'' ஆனால், அவர்கள் ஏற்றுக் கொள்வதற்குத் தயாராக இல்லை. இவர்கள் சூத்திர சாதி, கீழ் நிலையில் இருந்தவர்கள் என்பதற்கு எதார்த்தமான ஆதாரம் எதுவுமே கிடையாது.


இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பார்த்தால், ஒரு சில சாதிகள் மேல்சாதிகள் என்பதற்கு உரிமை பாராட்டுவது; அரசாங்க பதவிகளை வாங்கிக் கொள்வது; அதற்கு பிறகு தனக்குக் கீழ் உள்ளவர்களை ஒடுக்குவது என்கிற முறையில்தான் இருக்கிறது. எனவே, நாம் வரையறுக்க வேண்டும். எந்தெந்த சாதிகளுக்கு உண்மையிலேயே கல்வி உரிமையும், வழிபாட்டு உரிமையும், சமூக உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது; அவர்கள் ஏன் பார்ப்பனர்களிடம் போட்டி போட முடியாது என்பதற்கு ஒரு புது வரையறுப்பு தேவை என்கிறோம்.


தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் 80, 90 சதவிகித சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்றும் இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் என்றும் ஆக்கப்பட்டிருக்கின்றன. 90 சதவிகிதம் இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான ஒடுக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களை ஒடுக்கிய சாதிகள் என்னென்ன? 3 சதவிகிதம் மட்டுமே உள்ள பார்ப்பான் மட்டுமே ஒடுக்கமுடியுமா?


சமூகம் என்பதை வர்ண ரீதியில் பிரித்தால், பார்ப்பான், அவனுக்கு கீழ் சத்திரியன். அவனுக்கு கீழ் வைசியன், அவனுக்கு கீழ் சூத்திரன், அவனுக்கு கீழ் பஞ்சமன், அவனுக்கு கீழ் சண்டாளன் என்கிற அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்தது. வர்ணாசிரம தர்மப்படி இந்தப் பிரிவில் பார்ப்பானுக்கு புரோகிதம் தொழில், இல்லையென்றால் அரசர் காலத்தில் மந்திரி போன்ற பதவிகளில் இருக்கலாம் . சத்திரியனுக்கு படை நடத்துவது, அரசை நடத்துவது; அதாவது இதுதான் சட்டம், இதுதான் விதி என்று பார்ப்பான் வகுத்துக் கொடுத்தபடி அமல்படுத்துவது. வைசியன் என்பவன் வியாபாரம், தொழில் செய்பவன். சூத்திரன் என்பவன் அவனுக்கு மேல் இருக்கக்கூடியவனுக்கு உடலுழைப்பு செய்பவன். அனைவருக்கும் வெளியே இருப்பவர்கள்தான் பஞ்சமர்கள், தீண்டத்தகாதவர்கள். இந்த ஏற்பாட்டில் எது நடந்துள்ளது என்றால், தங்களது கூட்டாளியாக வைசிய சாதியோ, சத்திரிய சாதியோ இல்லாமல் இந்த சூழ்ச்சியை அல்லது இந்த அடக்குமுறையை பார்ப்பன வர்ணத்தை சேர்ந்தவர்கள் — அவர்களது சொந்த பலத்தைக் கொண்டு மட்டும் அமல்படுத்தி இருக்க முடியாது. ஒரு பலாத்காரமான முறையில்தான் இந்த சாதி ஒடுக்குமுறை இருந்துள்ளது, அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பலாத்காரத்தை பார்ப்பான் மட்டும் தனது சொந்த வன்முறைக் கருவிகளை, ஆயுதங்களை வைத்துக் கொண்டு பெரும்பான்மையான இந்தச் சமுதாயத்தை அடக்கி ஒடுக்கி வைத்திருந்தானா? பார்ப்பான் இதற்குத் தலைமை தாங்கியுள்ளான் அல்லது இந்த சமுதாய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளான் என்றால், அது ஏற்கக் கூடியது. ஆனால் இது நடைமுறைக்கு வந்ததென்பது சத்திரியர்களின் ஆயுத பலமில்லாமல், வைசியர்களின் பொருளாதார பலமில்லாமல் சாத்தியம் ஆகியிருக்கமுடியாது. ஆகவே, சாதி வர்ண ஏற்பாட்டால் இந்த பிரிவினரும் ஆதாயம் அடைந்துள்ளனர்.


இன்றைக்கும் வர்ணாசிரம சாதி அடிப்படையில் பார்ப்பன சாதி மட்டும் ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த சாதிவர்ணாசிரம ஒடுக்குமுறை என்பது பார்ப்பனர்களும் அல்லாத, தாழ்த்தப்பட்டவர்களும் சூத்திரர்களும் அல்லாத வேறுசில சாதிஇந்துக்களுக்காகவும் இன்றைக்கும் கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது. அந்த வேறுசில சாதிகள் என்னவென்றால், நமது கண்ணுக்கு முன் தெளிவாகத் தெரியும் உயர்ந்த சாதிகள். வர்க்க ரீதியில் பார்த்தால், அந்தச் சாதிகளிலேயே ஒரு சிறு பிரிவினர்தான் ஆதாயம் அடைந்துள்ளனர். கீழ் நிலையில் உள்ளவர்கள் ஆதாயம் பெற்றார்களா என்றால் இல்லைதான்; ஆனால், இந்த சமூக அமைப்பால் ஒரு மேல்சாதிக் கூலித்தொழிலாளி கூட மேல்சாதி என்கிற அகம்பாவத்தால் ஆதிக்க ஆதாயம் அடையக்கூடியவனாக இருக்கிறான்.


ஆகவே, பார்ப்பனரல்லாத அனைத்து சாதியும் பிற்படுத்தப்பட்ட சாதி என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதான் இந்த இட ஒதுக்கீட்டில் உள்ள பிரச்சினை.


1970களில் தமிழ்நாடு அரசு, சட்டநாதன் கமிசன் என்கிற ஒரு கமிசன் போட்டது. இதுவரை இட ஒதுக்கீட்டின் மூலமாக என்ன பலன் ஏற்பட்டிருக்கிறது, மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி சட்டநாதன் கமிசன் என்ன சொன்னது? "இட ஒதுக்கீட்டிற்கு தகுதியானவர்கள் என்று 300க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகள் இங்கே இருக்கின்றன. ஆனால், 13 சாதிகள் மட்டும்தான் 49 சதவிகிதம் பதவிகளைப் பெற்று ஆதாயம் அடைந்துள்ளனர். மீதியுள்ளவர்களெல்லாம் கீழ் நிலையில்தான் இன்றும் உள்ளனர். ஆகவே, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்கிற சாதிகளுக்குள்ளேயே, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிற பிரிவினை வரவேண்டும். அப்படி செய்தால்தான், ஒரு பொதுப்போட்டியில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆதாயம் அடைய முடியும். இல்லையென்றால் முன்னேறியவர்களும், பின்னேறியவர்களும் பிற்படுத்தப்பட்ட சாதி என்கிற அடிப்படையில் போட்டி போடும்போது, உண்மையில் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றைக்குமே முன்னேற முடியாது'' என்று அந்த கமிசன் சிபாரிசு செய்தது. முன்பு கருணாநிதி ஆட்சியில் அந்த சிபாரிசை அமல்படுத்த மறுத்துவிட்டார். அதனால்தான் ராமதாஸ் திரும்பத் திரும்ப சொன்னார். "நமது சமுதாயத்திற்கு எதிரி இவர்தான். அந்த முன்னேறிய 13 சாதிகளில் ஒன்று கருணாநிதியின் சாதி. 300 சாதிகளிலேயே இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொண்டு 49 சதவிகித பதவிகளைப் பெற்ற, 13 சாதிகளில் ஒன்று அவருடைய சாதி. அதனால்தான் இவர் சட்டநாதன் கமிசன் சிபாரிசை எதிர்க்கிறார்'' என்று ராமதாஸ் இன்றைக்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.


அதற்கு பிறகு எம்.ஜி.ஆர். ஆட்சி வந்தபிறகு, அவரிடம் வன்னிய சாதியைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சில சிபாரிசுகளை செய்து பிற்படுத்தப்பட்டவர்களிலேயே, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று இரண்டாக பிரித்து, இட ஒதுக்கீட்டையும் இரண்டாக பிரிக்கவேண்டும் என்பது வந்தது.


தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா போன்ற இடங்களில் ஓரளவிற்கு இந்த பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்துள்ளது. இதில் முன்னோடியாக தமிழ்நாடு இருந்துள்ளது. அப்புறம் கர்நாடகம் இருந்துள்ளது. அப்புறம் ஆந்திரம், மகாராஷ்டிரா இருந்துள்ளது. இவைகளுக்கு வெளியே, பல ஆண்டுகாலம், பெரும்பாலும் பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு என்பது கிடையாது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும்தான் இருந்துள்ளது. அதன் பிறகு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபொழுது மண்டல் கமிசன் அமைத்தார்கள். அந்த மண்டல் கமிசன் அறிக்கை வந்தபிறகும் அதை அமலாக்க காங்கிரசு அரசு மறுத்து வந்தது. வி.பி.சிங் ஆட்சிக்கு வந்த பிறகு, மத்திய அரசு பதவிகளில் இட ஒதுக்கீடு என்பதை அமலாக்கப் போவதாகக் கூறினார்கள். பார்ப்பன சாதியைச் சேர்ந்தவர்கள் அதற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி, அதை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகளை செய்து, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் போட்டு அதற்கு சில வரம்புகளையெல்லாம் போட்டார்கள்.


இந்த மண்டல் கமிசன் அறிக்கை என்ன சொல்கிறது? பார்ப்பனரல்லாத எல்லோருக்குமே இட ஒதுக்கீட்டிற்கான தகுதி இருக்கிறது என்பதை முதலில் அது நிராகரித்தது. பார்ப்பனரல்லாத எல்லோருமே உண்மையிலேயே பிற்படுத்தப்பட்டவர்கள் கிடையாது. பல சாதிகள் முற்படுத்தப்பட்ட சாதிகளாக இருக்கின்றன. என்ன சாதிகள் என்றால் ராஜ்புத்துக்கள், கஸ்யாப், பூமிகார், ஜாட், மராட்டா போன்று வடமாநிலங்களில் பெரும்பான்மையாக வாழக்கூடிய சாதிகளுக்கு இட ஒதுக்கீடு தகுதி இல்லை. ஏனென்றால், சமூக ரீதியில் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் இவர்கள் இருக்கிறார்கள், வசதிவாய்ப்புகள் இருக்கின்றன, நில உடைமை இருக்கின்றன. ஆகவே, இவர்களை பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருத முடியாது. யாரைப் பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருத முடியும் என்பதற்கு அவர் ஒரு வரையறை வகுத்துக் கொண்டார். சமுதாயத்தில் எந்தந்தச் சாதிகளுக்கு என்னென்ன மதிப்பு இருக்கிறது; எவ்வளவு முன்னேறியுள்ளனர், எவ்வளவு நிலபுலன்கள் இருக்கின்றன என்று ஒரு சில வரையறைகளை வகுத்தார். ஆனால், அவர் அந்த வரையறைகளைப் பிரயோகித்து அறிக்கை எழுதவில்லை. அதற்கு பதிலாக, பல்வேறு சாதிகளைச் சேர்ந்த சாதிச் சங்கங்கள், அரசியல் கட்சிகள் "பிரதிநிதித்துவ'ப்படுத்தி, நிர்பந்தம் செய்து இந்தந்த சாதிகளை பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று மண்டல் கமிசனை அறிவிக்கச் செய்தன. அவர் 3000க்கும் மேற்பட்ட சாதிகள் இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்று அறிவித்தார்.


அந்த மண்டல் கமிசன் அறிக்கையினுடைய இணைப்பாக டாடா கன்சல்டன்சி என்கிற நிறுவனத்தினுடைய ஆய்வு உள்ளது. ஏற்கெனவே தமிழகம் போன்ற மாநிலங்களில் இட ஒதுக்கீடு என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை பற்றி ஆய்வு செய்து சொல்லுங்கள் என்று மண்டல் கமிசனால் அமர்த்தப்பட்டதுதான் இந்த டாடா கன்சல்டென்சியின் ஆய்வு. அது டாடா என்கிற பெயர் வைத்திருப்பதாலேயே, உண்மையாக ஆய்வு செய்யாது என்று தமிழ் தேசிய இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். அப்படி அல்ல. அது சட்டநாதன் கமிசன் அறிக்கை உறுதிசெய்த சில உண்மைகளின் அடிப்படையில், அதைத் தொடர்ந்து சொல்கிறது: பிற்படுத்தப்பட்டவர்கள் என்கிற பெயரில் ஒரு சில சாதிகள் மட்டும்தான் திரும்பத் திரும்ப ஆதாயம் அடைந்துள்ளனர். கம்யூனல் ஜி.ஓ. மூலம் இட ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்ட 1930லிருந்து கிட்டதட்ட 50 ஆண்டுகளாகியும் கூட எப்படி ஒரு சில சாதிகள் மட்டும் ஆதாயத்தை அடைய முடிந்தது என்கிற கேள்வி எழுப்பி, "நாமெல்லாம் ஒரு தேசிய இனம்'' என்று திராவிட இயக்கம் சொல்லிச் சொல்லி ஒரு சாதிக் கூட்டணியை அமைத்துக் கொண்டு, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்கிற போர்வையில் சில சாதிகள் முன்னேறின. தேசிய இனம், திராவிட இனம் என்றெல்லாம் சொல்வதன் மூலமாக உண்மையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளை மயக்கி, அவர்களை ஒரு பொதுப்பிரிவின் கீழ் வைத்து, கீழ் நிலையிலேயே இருத்தி, ஒரு சில சிறுபான்மை சாதிகள் முன்னேறுவதற்கு வழி வகுக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். இப்படி ஒரு பக்கம், ஒரு சில சாதியினர் ஆதாயம் அடைவது தொடர்ந்து நடந்து வருகிறது.


வி.பி.சிங் இந்த மண்டல் கமிசனை அறிமுகப்படுத்தியபோது, அதை ஆதரித்தும் எதிர்த்தும் கடுமையான போராட்டம் நடந்தது. ஆதரித்த போராட்டத்தில் முன்னிலையில் இருந்தவர்கள் யாதவ சாதியைச் சேர்ந்தவர்கள். வடநாட்டில் யாதவ சாதி என்பது இங்கிருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்களைப் போன்றது இல்லை; யாதவர்களில் பெரும்பான்மையினர், நிலவுடைமை சாதியான பூமிகார் சாதிக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் . அவர்கள்தாம் மண்டலை ஆதரித்துக் கடுமையாக போராடினார்கள். ஜாட் என்ற நிலவுடைமை சாதியினர், தங்களையும் பிற்படுத்தப்பட்டோர்களாகச் சேர்த்துக் கொள்வதற்காகப் போராடினார்கள்.


ஆனால் இந்த மண்டல் கமிசன் அறிக்கையை அமல்படுத்துவதை பார்ப்பனிய சக்திகள் மார்வாரிகள்,குஜராத்திகள் ஆகிய பனியாக்கள், ராஜபுத்திரர்கள், பார்ப்பனர்கள் ஆகிய சாதிகளைச் சேர்ந்தவர்கள்அதிகமாக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ்.கடுமையாக எதிர்த்து, தீக்குளிப்பு மற்றும் வன்முறைப்போராட்டங்களை நடத்தினார்கள்.


ஆகவே, இந்த மண்டல் கமிசன் அறிக்கையை ஆதரித்தும் எதிர்த்தும் நடந்த போராட்டம் என்பது மேல் சாதிகளுக்கிடையிலானது என்கிற ஒரு நிலையை நாம் எடுத்தோம். அதுமட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்க்கான இட ஒதுக்கீடு என்பதே வரலாற்று ரீதியாக மேல் சாதிக்கும் அதற்கும் மேலே இருக்கக்கூடிய பார்ப்பனர்களுக்கும் இடையே நடக்கக்கூடிய ஒரு சண்டையாக இருக்கிறது.


மேலும், இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்தி பெரியார் என்ன சொன்னாரோ, அதற்கு முன்பு ஆங்கிலேயர்கள் அறிக்கையில் என்ன சொன்னார்களோ அதையே மண்டல் அறிக்கை சொல்கிறது. அதாவது, "இந்த சமுதாயத்தில் உண்மையில் ஒடுக்கப்பட்ட, கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்; இந்த மக்களில் ஒரு சிலருக்காவது அரசு பதவிகளில் இடம் கொடுத்தால், இந்த அரசு என்பது எல்லோருக்குமான ஒரு அரசு, இது ஒரு சிலரை ஒதுக்கி வைத்துவிட்டஅரசு அல்ல என்கிற ஒரு மனப்பான்மை ஏற்படும். இந்த மனப்பான்மை என்பது இந்த ஆட்சி நிலைத்திருப்பதற்கு அவசியமானது,'' என்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தும்போது மண்டல் கமிசன் அறிக்கையும் குறிப்பிடுகிறது.


இப்போதைய தேர்தல் முறை என்பது என்ன? நடப்பது ஜனநாயக முறை, உங்களுக்கும் வாக்குரிமை இருக்கிறது, நீங்கள் ஓட்டு போட்டவர்கள்தான் அங்கு போய் ஆட்சியில் உட்கார்ந்திருக்கிறார்கள் என்பதன் மூலமாக ஒரு நியாயம் கற்பிக்கப்படுகிறது. அதற்காகத்தான் தேர்தல், ஜனநாயகமெல்லாம் வைக்கப்படுகின்றது. அதேபோலத்தான் இட ஒதுக்கீடும். ஒவ்வொரு சாதியிலும் எத்தனை பேர் இந்த இட ஒதுக்கீட்டின் மூலமாக ஆதாயம் அடைந்துள்ளனர் என்று பார்த்தால், இந்த மக்களில் ஒரு சில தனிநபர்கள்; பெரும்பான்மை மக்களைக் கொண்ட சாதிகளில் ஒரு 10 பேர்; 20பேர்; 100 பேர். ஒரு பத்து லட்சம் பேரைக் கொண்ட ஒரு சாதியில் ஒரு 10 பேர் என்ற முறையில்தான் அங்குபோய் பதவியில் உட்கார்ந்துள்ளனர். "இந்த பத்து பேர் அங்கு போய் உட்கார்ந்ததன் மூலமாக அந்தச் சமுதாயத்திற்கு, அந்தச் சாதிக்கு காலப்போக்கில் நாம் சமத்துவத்தை அடைந்துவிடலாம் என்கிற ஒரு உணர்வை அது ஏற்படுத்தும். இந்த அரசிலே பங்கேற்கிறோம் என்கிற உணர்வை ஏற்படுத்தும்'' என்று சொல்கிறார் மண்டல். அதையே இந்த சமூக நீதி பேசக்கூடிய குழுக்களெல்லாம் இங்கே தமிழ்நாட்டில் சொல்கிறார்கள். "இந்த பத்து பேர் அங்கு போய் சேருவதன் மூலமாக, நம்முடைய சமுதாயம் அவர்களை பார்த்து முன்னேற வேண்டும் என்கிற ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவார்கள். இந்த பத்து, இருபது பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளாகி, அரசு பதவிகளில் அல்லது பல்வேறு மட்டங்களில் இருக்கக்கூடிய அதிகார பதவிகளில் போய் உட்காருவதன் மூலமாக, அந்த சாதியைச் சேர்ந்த மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி, விழிப்புணர்வு ஏற்படும்; மற்ற பிரிவினரையும் தன்கூட சேர்த்து முன்னேற்ற வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படும்'' என்று நம்பும்படி இந்த மண்டல் கமிசன் அறிக்கைக்கு ஒரு வியாக்கியானம் தருகிறார்கள். வீரமணி போன்ற பலரும் இவ்வாறு எழுதியுள்ளனர்.


உண்மை என்னவென்றால், இப்படி போகக்கூடிய ஒரு சில நபர்கள், அந்த சாதியில் ஒரு சிறு எண்ணிக்கையைக் கொண்டவர்கள் — வேறு ஒரு தனி சாதியாக அமைகிறார்கள். இது ஒரு முக்கியமான விசயம். தனியாக அவர்களுக்கென்று குடியிருப்புகள், போக்குவரத்து வாகனங்கள், அதிகார வசதி வாய்ப்புகள் செய்துதரப்படுகின்றன. அவர்கள் தங்களுடைய குடும்பத்தைச் சேர்ந்த நெருங்கிய உறவினர்களை மேலும் மேலும் வளர்ப்பது என்பதுதான் நடக்கிறதே ஒழிய, இந்த சாதி இழிவை ஒழிப்பது, ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது என்பது நடப்பதில்லை. இவர்கள் எல்லோருமே வேறு ஒரு தனி சாதி. மார்க்சிய கண்ணோட்டத்தின்படி, அதிகார வர்க்கமாக அரசமைப்பிலே இருப்பவர்கள் எப்பொழுதுமே ஒரு தனிசாதி. தொழில் ரீதியாக, பண்பாட்டு, சமூக ரீதியாக அவர்கள் இன்னொரு சாதி என்கிறார் லெனின். "கேஸ்ட்' என்ற ஆங்கில வார்த்தையைப் பயன்படுத்துகிறார். இந்த சாதியைச் சேர்ந்த போலீஸ்காரன் என்றால் மக்களை எப்படி ஒடுக்குவது, ராணுவம் என்றால் இன்னும் கடுமையாக எப்படி ஒடுக்குவது, நீதித்துறை என்றால் தாம்தான் இந்த உலகத்திலேயே உயர்ந்த நீதியாளர் என்பது போன்ற எண்ணம்தான் உருவாக்கப்படுகிறது. இவர்கள் "தனி சாதி' என்ற முறையில் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவே முயல்கிறார்கள். வக்கீல் போராட்டம் நடக்கிறது என்றால், இந்த நீதிபதிகள் "இது தப்பு' என்று தங்களுடைய சங்கத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி தங்களுக்குள் ஒரு சாதியாக நிற்கிறார்கள்.


இன்றைக்கு ஜெயலட்சுமி விவகாரம் இந்த அளவிற்கு பெரிதாக வெடித்த பிறகு, போலீஸ்காரர்களுக்குள் சாதி வேறுபாட்டைக் கடந்து குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்கு லட்சக்கணக்கான ரூபாய் நிதி திரட்டுகிறார்கள் . ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனுக்கும் இவ்வளவு என்று இலக்கு வைத்து நிதி திரட்டி ஜெயலட்சுமி விவகாரத்திலிருந்து மற்ற அதிகாரிகளை விடுவிப்பதற்கான முயற்சி நடக்கிறது. "என்கௌன்டர்' என்கிற பெயரிலே புரட்சியாளர்களைக் கொலை செய்யும் சம்பவங்களில் எல்லாம், அதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு போலீஸ் ஸ்டேசனுக்கும் லட்சக்கணக்கான ரூபாய் இலக்கு என்று வசூல் செய்வது நடக்கிறது. அங்கு போய் உட்கார்ந்து கொள்வதனால், எது எப்படிப்பட்ட இயக்கம், எதற்காக நடக்கிறது, யாருக்காக நடக்கிறது என்று பார்ப்பதில்லை; வர்க்க ரீதியாகவோ, சாதி ரீதியாகவோ தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு அப்படியெல்லாம் இவர்கள் செயல்படுவதில்லை. அந்த போலீசை, குற்றவாளி இல்லையென்று விடுவிப்பது எப்படி, அதற்காக போராடுவது எப்படி என்று ஒரு தனி சாதியாக மாறுகிறார்கள்.


மணிப்பூரில் மிக பெரியளவில், மோசமான அளவில் கற்பழிப்புக் குற்றங்கள் செய்த ராணுவத்தைக் காப்பாற்றுவதற்காகத்தான் மற்ற ராணுவத்தினர் போராடுகின்றனர். சிவில் சமுதாயத்திற்கு எதிராக ராணுவம் என்கிற ஒரு கட்டமைப்பைப் பாதுகாத்துக் கொள்வது என்பதுதான் அவர்களுக்கு முதலில் ஊட்டப்படுகிறது. மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடம் ஒன்று கலந்து விடக்கூடாது என்பதற்குத்தான் அவனுக்கு கல்வி, பயிற்சி, குடியிருப்பு அமைப்பு அமைக்கப்படுகிறது. "இந்த சமுதாயத்திலிருந்து நான் வருகிறேன், நான் முன்னேறி விட்டேன். இனி என்னுடைய உழைப்பு, இந்த சமுதாயத்திற்கே போய்ச் சேரவேண்டும்'' என்று ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் நினைப்பதில்லை. விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் இருக்கலாம்.


அதற்கு மாறாக, மேல் சாதியைச் சேர்ந்த அதிகாரிகள் சாதிச் சங்கம் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செய்வதிலேயே கவனம் செலுத்து கிறார்கள். ஐ.பி.எஸ். அதிகாரி டி.ஆர். கார்த்திகேயன் இருக்கிறார் என்றால், கவுண்டர்களிடையே "நாமெல்லாம் ஒரு சாதி'' என்று பேசுகிறார்; பொன்.பரமகுரு முக்குலத்தோர் சாதிச் சங்கம் வைக்கிறார். எஸ்.சுப்பிரமணியம் வன்னியர் சங்கத்திற்குத் தலைவராகிறார். ரயில்வே துணை அமைச்சராக இருக்கக்கூடிய வேலு, பா.ம.க.வின் வன்னியர் சாதிக்காரராகவே செயல்படுகிறார். ஆகவே, அவர்களுக்கு இரண்டு வகையிலும் அதிகாரம் கிடைக்கிறது என்று சொல்கிறோம். எப்படியென்றால், சமூக ரீதியாக ஏற்கெனவே அதிகாரம் பெற்றுள்ளனர். அதாவது, ஒடுக்கக்கூடிய அதிகாரம். இப்பொழுது, பதவி மூலமாக இன்னொரு அதிகாரம். இவை இரண்டும் சேர்ந்து அவர்களிடம், நாம் எங்கிருந்து வந்தோம் என்கிற உணர்வைக் கொடுப்பதில்லை. மற்றபிற சாதிகளை ஒடுக்கும் ஒரு உணர்வைத்தான் கொடுக்கிறது. பெரியார் காலத்திலிருந்தே இந்த பகுத்தறிவு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். "நாம் எங்கிருந்து வந்தோம் என்று தயவு செய்து திரும்பிப் பாருங்கள். இட ஒதுக்கீடு மூலமாக ஆதாயம் பெற்று வந்துள்ளோம். உங்களிடம் சாதி உணர்வு இருக்கக்கூடாது. நீங்கள் சாதி பாராட்டக்கூடாது. தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஐக்கியப்பட்டு ஒரு பெரும்பான்மை சக்தியாக வளர்ந்து ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கிறார்கள். ஆனால், எது செயலுக்கு வருகிறது? அதிகாரிகளாகி விட்டதால் யாரெல்லாம் மேல்சாதிக்காரர்களாக இருக்கிறார்களோ, அவர்கள் தமது சொந்த ஆதாயத்துக்காக சாதி அடையாளத்தை மட்டும் கைவிடுவதில்லை.


இப்டி இட ஒதுக்கீடு என்பது எதிர்மறையான ஒரு செயலைச் செலுத்தியுள்ளது என்று நாம் மட்டும் சொல்லவில்லை. இவர்களின் பத்திரிகைகள் எழுதுகின்றன. பெரியாரே சொல்லியிருக்கிறார். "இதுதான் நமது லட்சியம் என்று எண்ணினால் அது முட்டாள்தனம், தப்பு. சூத்திரன் என்கிற பட்டம் எப்பொழுது ஒழியும் என்றால், தீண்டத்தகாதவன் என்கிற பட்டம் எப்பொழுது ஒழியுமோ, அப்பொழுதுதான் சூத்திரன் என்கிற பட்டம் ஒழியும்.'' ஆனால் அந்த உணர்வு அவர்களுக்கு வருவதில்லை. அதற்கு பதிலாக, நாம் வைசிய சாதியைச் சேர்ந்தவர்கள்; சத்திரிய சாதியைச் சேர்ந்தவர்கள் என்கிறார்கள். ஏன் இப்படி வருகிறது என்றால், அப்படி சத்திரிய சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆதாயம் இருக்கிறது. சாதி ஆதிக்கம் செலுத்த முடியும். வைசிய சாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் சாதி ஆதிக்கம் பெறமுடியும்.


ஆகவே, நாம் ஒரு கோரிக்கை வைத்தோம். அது என்னவென்றால், எந்த சாதி தீண்டாமையைப் பின்பற்றுகிறதோ, அதை மிக வன்மமாக அமல்படுத்துகிறதோ, அந்த சாதிக்கு இட ஒதுக்கீடு கூடாது. எதைச் சொல்லி இட ஒதுக்கீடு, பதவி உரிமையைப் பெற்றார்கள்? "நான் சாதி ரீதியாக, கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்டுள்ளேன்; 2000 வருடமாக எனக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது; ஆகவே எனக்கு சலுகை வேண்டும்'' — இதுதான் இட ஒதுக்கீட்டில் பதவி பெறுவதற்கு அடிப்படை, ஆதாரம், நீதி. ஆனால், ஏற்கெனவே சமுதாயத்தின் மேல் இதே சமூக ஒடுக்குமுறையை, கல்வி ஒடுக்குமுறையை, தீண்டாமையை செலுத்துபவர்களே இப்படி பதவி பெறுவதற்கு உரிமை இருக்கிறதா, நியாயம் இருக்கிறதா?


கடிவாளம் கொண்டு சென்றால் குதிரை வாயை மூடிக் கொள்ளுமாம், கொள்ளு கொண்டு சென்றால் வாயைத் திறந்து கொள்ளுமாம்; அது குதிரையின் பண்பு. அதுபோல் மற்றவர்களிடம் தீண்டாமையையோ, சாதி அடக்குமுறையோ பாராட்டாதே என்றால் "நான் மேல் சாதிக்காரன், அப்படித்தான் செய்வேன்''என்கிறார்கள். அரசு பதவிகள் என்றால் "நான் கீழ்சாதிக்காரன், பாதிக்கப்பட்டவன்''என்கிறார்கள். இப்படிப்பட்ட கண்ணோட்டம் எந்தச் சாதிகளுக்கு இருக்கிறதோ, அந்தச் சாதிகளுக்கு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளைக் கோருவதற்கு உரிமை கிடையாது என்பது அமலுக்கு வரவேண்டும் என்கிறோம்.


"அந்த சாதிகளில் ஒரு சிலர் சாதி வெறியர்களாக இருக்கிறார்கள். பெரும்பான்மை மக்கள் அப்படி இல்லை. உழைக்கும் மக்களும் இருக்கிறார்கள். ஒரு சிலர் சாதி வெறியர்களாக இருப்பதால் பெரும்பான்மையான மக்களைத் தண்டிக்கலாமா, அவர்களுடைய உரிமைகளை மறுக்கலாமா?'' என்று கேட்கிறார்கள் சமூக நீதிக்காரர்கள். ஒவ்வொரு சாதியிலும் ஒரு சிலர்தான் சாதி வெறியர்களாக இருக்கிறார்கள் என்பது சரிதான். அந்த ஒரு சிலர் சாதிவெறியர்களாக இருப்பதற்கு என்ன காரணம்? "நாம் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவர்கள் அல்லது மேல்சாதியைச் சேர்ந்தவர்கள்'' என்கிற சாதி பலம்தான் காரணம்.


"இப்படி சாதி ஒடுக்குமுறையைப் பின்பற்றும் உங்களுக்கு அந்தச் சாதி பலத்தை நாங்கள் தரமாட்டோம். நீங்கள் சாதி ஒடுக்குமுறையை மேற்கொள்ளும்போது என்னுடைய சாதி என்று சொல்லாதீர்கள்'' என்று மற்றவர்கள் சொல்லவேண்டும் என்று நாம் திரும்ப திரும்பத் சொல்கிறோம். மத வெறியர்களைப் பார்த்து நாம் என்ன சொல்கிறோம்? " நீ இந்து, இந்துக்களெல்லாம் ஒன்று, கிறித்தவர்கள்இசுலாமியர்கள் அல்லாத பெரும்பான்மையான நாங்களெல்லாம் இந்துக்கள் என்று எங்களையும் சேர்த்துக்கொள்ளாதே. நீங்கள் பார்ப்பனீயர்கள்; சிறுபான்மையான நீங்கள் எங்கள் பெயரைச் சொல்லி நாமெல்லாம் பெரும்பான்மை என்று சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. நீங்கள் ஒரு சிறுபான்மை, மத ஆதிக்கத்தை நிறுவுவதற்கு முயற்சிக்கிறீர்கள், சாதி வர்ணாசிரம ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கு முயற்சிக்கிறீர்கள், அதற்கான பலத்தை திரட்டிக் கொள்வதற்காக, கிறித்துவர்கள்முஸ்லீம்கள் அல்லாத எல்லோருமே இந்துக்கள் என்கிற ஒரு பொதுப்போர்வையின் கீழ் கொண்டுவர முயற்சி செய்கிறீர்கள்'' என்கிறோம்.


அதேதான் இந்த விசயத்திலும். "நான் இந்தச் சாதி என்று நீ சொல்லிக் கொள்ளாதே. ஏனென்றால் நீ பிற்படுத்தப்பட்டவன், ஒடுக்கப்பட்டவன் என்று சொல்லி பல சலுகைகளைப் பெறுபவன்; ஆனால் சாதி ஆதிக்கம் செலுத்துபவன்; சாதி ஒடுக்குமுறையை நான் வெறுக்கிறேன்'' என்று எந்தந்த சாதி பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதி உரிமை பாராட்டி, இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகிறதோ, அந்தந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள் தன்னுடைய சாதிக்குள் போராடவேண்டும். சாதி சங்கம் வைத்திருப்பதைப் போலவே இப்படி ஒரு சங்கம் வைத்து, "இட ஒதுக்கீடு போன்ற சலுகைகளை நாம் கோருவதாலே நாம் வேறு சாதிகளை ஒடுக்கக்கூடாது'' என்பதை ஒரு நிபந்தனையாக அவர்களுக்கு விதிக்க வேண்டும். பிரச்சாரம் செய்ய வேண்டும். இதையும் நாங்கள் சொல்கிறோம்.


அதற்கு அடுத்து, இந்த அரசு எந்திரத்திற்குப் போவதைப் பற்றிய நம்முடைய நிலைப்பாடு இதுதான்: அரசு என்பது பிரதானமாக எதற்குப் பயன்படுகிறது? இட ஒதுக்கீட்டிற்கான இந்தச் சண்டை முக்கியமாக யார்யார் அரசு பதவிகளில் போய் உட்காருவது என்பதற்காக நடக்கிறது.மேல்சாதிக்காரர்கள் அரசு பதவிகளில் போய் உட்கார்ந்துக் கொண்டு மற்ற பிற கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்துவதற்காக நடக்கிறது. அரசு இயந்திரத்திற்குள் நாம் போகலாமா? புரட்சி என்பதே இந்த அரசு இயந்திரத்திற்கு எதிரானது என்று நாம் சொல்கிறோம். நம்முடைய திட்டம் என்னவென்றால், இந்த அரசு இயந்திரத்தைத் தகர்த்து எறிவது. இதற்கு மாற்றாக, எதிராக ஒரு புதிய அரசு இயந்திரத்தை அமைப்பது; மணியரசன், நெடுமாறன் போன்ற பெரும்பான்மையான குழுக்களிடம் இது கிடையாது. பெரியாரிடம் கூட சமூக நீதி என்பது என்ன? இந்த அரசு இயந்திரத்தில் நாம் பங்கேற்று பார்ப்பனியம் ஆதிக்கம் செலுத்தும் இடத்தில், நம்முடைய ஆதிக்கத்தை செலுத்த வேண்டும்; அந்த இடத்தில் ஆதிக்கம் இல்லையென்றாலும் சமத்துவத்தை வைக்க வேண்டும் என்பதுதான். அதற்கு மேல் ஏதாவது இருக்கிறதா என்றால் இல்லை.


ஏற்கெனவே சொன்னபடி, அரசமைப்பில் இப்படி இடம் பெற்றுச் சென்றவர்கள் ஒரு தனி சாதியாகி விடுகிறார்கள். ஒரு தொழிற்சாலையில் ஒரு தொழிலாளி போராடுகிறான் என்றால், அவன் மீது எப்படி தடியடி நடத்துவது, கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சு நடத்துவது; ஒரு கோரிக்கையை வைத்து மக்களில் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தம் செய்தால், அவர்களை எப்படி அடக்கி ஒடுக்குவது என்பதைத்தான் சட்டமும், கல்வியும், பயிற்சியும் அரசில் பங்கேற்பவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறது. இதற்குமாறாக, "இல்லை, போராடுபவர்கள் என்னுடைய சாதி, என்னுடைய மக்கள், என்னுடைய வர்க்கத்தினர்'' என்று சொல்லி கீழே இறங்கி வந்து உதவி செய்வது என்கிற முறையிலான இந்த எண்ணம் அவர்களுக்குக் கிடையாது. அதற்கான கல்வியோ பயிற்சியோ தன்மையோ கிடையாது. இன்னும் சொல்லப் போனால், "அரசியலுக்குச் சென்றால் லஞ்சஊழல் செய்யலாம், அதிகாரம் கிடைக்கும், லாபம் சம்பாதிக்கலாம், அரசியல் முறைகேடு செய்யலாம்'' என்பதைப் போலத்தான் "அரசு வேலைக்குப் போனால் செய்யலாம்'' என்ற எண்ணம் உள்ளது.

 
அப்படி பார்க்கும்பொழுது ராணுவத்திற்கு, போலீசிற்கு, நீதிபதிக்கு எல்லாம் அதிகாரம் கொடுப்பது என்பதே தவறு என்று சொல்கிறோம். இவர்களும் சாதாரண மனிதர்கள் போலத்தான். போலீசிற்குச் சென்றால் லஞ்சம் வாங்கலாம்; நீதிபதியானால் லஞ்சம் வாங்கலாம்; ராணுவத்திற்குச் சென்றால் நல்ல சம்பளம், அதிகாரம், ஆயுதம், பெயர் கிடைக்கும் என்று இப்படி சாதாரண மனிதர்களாகப் போனவர்கள்தான். ஆனால், சாதாரண மக்களை அடக்கி ஒடுக்குதற்காகத்தான் வரைமுறையற்ற அதிகாரம் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.


நாம் இப்படி சொன்னால் என்ன சொல்கிறார்கள்? "ஒரு மில்லில், தொழிற்சாலையில் முதலாளி சுரண்டுகிறான் என்பதற்காக அதை நீங்கள் எதிர்க்கிறீர்களா, இல்லையே! அதைப் போன்றதுதான் இடஒதுக்கீடு. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த சிலர் பதவிக்கு போய் நமக்கு எதிராக வேலை செய்கிறார்கள். சுரண்டலை அனுமதிப்பதைப் போல இதையும் நாம் சகித்துக் கொள்ள வேண்டும். அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்.'' — இது அவர்கள் சொல்கிற இன்னொரு விளக்கம். இது வேறு, அது வேறு. தன்னுடைய உழைப்பிற்கான கூலியைப் பெறுவதற்காகத் தொழிலாளர்கள் செல்கிறார்கள். இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் "அதிகாரம்' உழைப்பிற்கான கூலி இல்லை. இந்த அதிகாரமே எதற்கென்றால், மக்கள் மீது ஒடுக்குமுறை செய்வது; இவர்களின் "உழைப்பு', சாதாரண சாதியை, மக்களை ஒடுக்கிக் கட்டுப்படுத்தக்கூடிய "உழைப்பு'.


மேலும் இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்துபவர்களில் சில பிரிவினர், "தேர்தலைப் புறக்கணிப்போம், தேர்தலில் பங்கேற்க மாட்டோம்'' என்கிறார்கள். "இது பார்ப்பனியத்தால் உருவாக்கப்பட்ட சட்டமன்றம், பாராளுமன்றம்; இதை நாங்கள் பயன்படுத்த முடியாது.'' என்று அவர்கள் சொல்கிறார்கள். இதுவும் அரசு பதவிதானே! ஐந்தாண்டுகளுக்கோ, மூன்று ஆண்டுகளுக்கோ, இந்த தற்காலிகமான ஒரு பதவியில் இவர்கள் ஏன் போய் உட்காரக் கூடாது? "அதை நாம் பயன்படுத்த முடியாது, கூடாது' என்றால் இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கும் வேறு பல பதவிகளை நாம் பயன்படுத்தலாமா? அரசு பதவிகளை வைத்து தனிநபர் சம்பளம் வாங்கலாம், மக்களுக்கு எதிராகச் செயல்படலாம். இதற்கு மேல் இதை நீங்கள் எதற்கு பயன் படுத்த முடியும்? பாராளுமன்ற, சட்டமன்றங்களில் பங்கேற்கக் கூடாது; புறக்கணிக்க வேண்டுமென்பது நியாயம். பாராளுமன்ற, சட்டமன்றப்பதவிகள் ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டவை என்றால், இந்த பதவிகளும் ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்பட்டவை, ஆளும் வர்க்க நலன்களுக்காக உருவாக்கப்பட்டவை, இல்லையா?


"சமூக நீதி''க்காரர்களைப்போலஇட ஒதுக்கீடு என்பதை நாம் ஊக்குவிப்பது இல்லை. வேறு கோணத்திலிருந்து நாம் பார்க்கும் போது கல்வி ரீதியில், சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட சாதிகள் — உண்மையில் ஒடுக்கப்பட்ட சாதிகள், கல்வியே பெற முடியாத சாதிகள் — கல்வி பெறலாம், வேலை வாய்ப்புகள் பெறலாம் என்கிற நிலையிலிருந்து ஆதரிக்கிறோம். ஆனால், அதை ஆதரித்து இவ்வளவு ஒதுக்கீடு கொடுங்கள், இதற்குக் கொடுங்கள், அதற்குக் கொடுங்கள் என்று போராடுவது நமது நோக்கமல்ல.


இவ்வளவு காலமும் இட ஒதுக்கீட்டைப்பற்றிய இந்தக் கருத்துகளைத்தான் நாம் சொல்லி வருகிறோம். ஆனால், பல்வேறு இயக்கங்களை நடத்தும் நாம், இட ஒதுக்கீடுக்கு எதிராக ஒரு சிறு துண்டு பிரசுரம் கூட போட்டதில்லை. ஒரு அறைக் கூட்டம் போட்டுக்கூட பேசியதில்லை. இருந்தபோதும், நம்மீது "இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள்'' என்கிற முத்திரை குத்தப்படுகிறது. அது, உண்மையல்ல; பொய். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நாம் எந்த ஒரு இயக்கமோ, நடவடிக்கையோ, பிரச்சாரமோ செய்யவில்லை. அதேபோல் ஆதரிக்கவும் இல்லை.


இட ஒதுக்கீட்டிற்காக வாதாடுபவர்களைப் பொருத்தவரை என்ன சொல்கிறார்கள் என்றால், "இது ஒரு சமூக விடுதலைக் கோட்பாடு, இது ஒரு உரிமைப் பிரச்சினை, சமூக நீதி, புரட்சிகரமானது , இது பார்ப்பனியத்தை வீழ்த்தும்'' என்றெல்லாம் சொல்கிறார்கள். அதனால், இதைத்தான் நாங்கள் எதிர்த்துப் பேசுகிறோம். "இது பார்ப்பனியத்தை வீழ்த்தாது. சமூக விடுதலையை, சமூக மாற்றத்தைக் கொண்டு வராது. இது ஒரு சலுகைதான். எல்லோரும் இந்த ஆட்சியில் பங்கேற்கிறோம் என்கிற ஒரு மாயையை, தோற்றத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டதுதானே ஒழிய வேறல்ல. ஆகவே,இது ஒரு சீர்திருத்தம்; புரட்சியல்ல'' என்கிறோம். இந்த வாதத்திற்கு பிறகுதான் "இதிலேயே எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று நாங்களும் சொல்லவில்லை'' என்று வருகிறார்கள். பிறகு ஏன் இதை உயிராதாரமான பிரச்சினை, பெரியார் சொன்னதிலேயே இதுதான் அடிப்படையான பிரச்சனை என்கிறீர்கள்?


அலிகார் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர் து.மூர்த்தி, இடதுசாரிமுற்போக்குஇன அடிப்படையில் சிந்திக்கக் கூடியவர்; பெரியாரை ஆதரிக்கக் கூடியவர். அவர், "பெரியார் என்றும் தேவைப்படுகிறார்'' என்று எழுதிய ஒரு தொடர் கட்டுரை சில ஆண்டுகளுக்கு முன்பு "தமிழர் கண்ணோட்ட'த்தில் வந்தது. அந்தக் கட்டுரையில் என்ன சொல்கிறார் என்றால், பெரியாரை ஏற்றுக் கொள்பவர்கள் பலரும் இருக்கிறார்கள். பெரியாரை ஏற்றுக் கொள்பவர்களில் குன்றக்குடிகளைப்போல தெய்வ நம்பிக்கையுடைய ஒரு பிரிவினரும் இருக்கிறார்கள். பெருவியாபாரிகளான செட்டியார்களில் பலரும் பெரியாரை ஏற்றுக் கொள்கிறார்கள். தமிழ் இசை விழா நடத்துபவர்கள், அண்ணாமலை பல்கலைக் கழகத்தை நிறுவிய செட்டிநாட்டு அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களெல்லாம் பெரியாரை எதிர்ப்பவர்கள் அல்ல. அவர்கள் மத ரீதியாக சுயமரியாதைக்காரர்கள் அல்ல; நாத்திகக் கருத்திற்கு எதிரானவர்கள். இப்படி ஆன்மீக அடிப்படையில் இருப்பவர்கள் கூட பார்ப்பனர் அல்லாதவர் என்கிற முறையில்பெரியாரை ஏற்றுக் கொள்கிறார்கள். அதேபோல திராவிட, தமிழ் தேசிய இனம் என்கிற அடிப்படையில் இருப்பவர்களில் பலர் பெரியாரை ஏற்றுக் கொள்கிறார்கள். இப்படி மதத்தை நம்புபவர்கள் நம்பாதவர்கள், நாத்திகர்கள் நாத்திகரல்லாதவர்கள், இன அடிப்படையில் போராடுபவர்கள், அகில இந்தியத்தை ஏற்றுக் கொள்பவர்கள் கூட, காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களில் ஒரு பிரிவினர் கூட பெரியாரின் தொண்டர்கள். பெரியாரைப் பின்பற்றுபவர்கள் என்று கூறும் எல்லோருமே ஒரு விசயத்தில் ஒன்றுபடுகிறார்கள். அது எதுவென்றால் சமூகநீதி, இடஒதுக்கீடு. ஒருவர் பெண்ணடிமை பாராட்டுபவராக, சாதியை, மதத்தைப் பாராட்டுபவராக, தேசிய இன விடுதலைக்கு எதிரானவராக இருக்கலாம். ஆனால், அவர் கூட ஏற்றுக் கொள்ளக்கூடியது பெரியாரினுடைய சமூக நீதிஇட ஒதுக்கீடு கொள்கை. இவர்கள் இட ஒதுக்கீடு கொள்கையால் தனக்கு சொந்த ஆதாயம் இருக்கிறது என்கிற அடிப்படையில் பெரியாரை ஏற்றுக் கொள்கிறார்கள். மற்றபடி, பெரியாரை தூக்கி எறிந்துவிட்டனர் என்று ஒரு கட்டுரை எழுதுகிறார்.


இதுதான் உண்மை. இட ஒதுக்கீடு என்பது சிலருடைய குடும்பத்திற்கோ, சாதிக்கோ சில சலுகைகளைப் பெற்றுத் தருகிறது. ஒட்டுமொத்த சமுதாய மாற்றத்திற்குப் பயன்படுகிறதா, இல்லையா என்றால் அது பயன்படுவதில்லை. இது ஒரு சீர்திருத்தம். ஏற்கெனவே இருக்கக்கூடிய சமுதாயத்தில் ஒரு சீர்திருத்தம்.
இன்றைக்கு ஆளும் வர்க்கத்தால் சத்துணவு போடப்படுகிறது. உலக வங்கியால் திட்டமிட்டுக் கொடுக்கப்பட்டு தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவிற்கே முன்னோடியாக இருக்கிறது. இந்தச் சத்துணவுத் திட்டத்தை நாம் எதிர்க்கிறோமா? பல லட்சக்கணக்கான குழந்தைகள் இந்தச் சத்துணவை நம்பித்தான் இருக்கின்றன. இது ஒரு சீர்திருத்தம்; ஒரு சலுகை. இலவச வேட்டி, சேலை, செருப்பு, பல்பொடி, சைக்கிள் போன்றவைகளெல்லாம் தருகிறார்கள். இப்படி பல்வேறு சலுகைகள் வருகின்றன. ஆட்சியாளர்கள் தினசரி ஏதாவது சலுகைகள், சீர்திருத்தங்களைக் கொண்டு வருவார்கள், செய்வார்கள். அப்பொழுதுதான் அவர்கள் தங்களுடைய ஆட்சியைத் தற்காத்துக் கொள்ள முடியும், நிலைக்க வைக்க முடியும் என்கிற நிலைக்கு அவர்கள் செல்கிறார்கள்.இந்த சலுகைகளைப் பற்றி புரட்சிகர இயக்கம் எப்படிப்பட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க முடியும்? "இப்படிப்பட்ட சலுகைகளை மேலும் மேலும் கொண்டு வா'' என்கிற கோரிக்கை அடிப்படையில் இருக்க முடியுமா? சத்துணவு போடுகிறார்கள்; சத்துணவை நாம் எதிர்க்கவில்லை. இலட்சக்கணக்கான குழந்தைகள் அதை நம்பியிருக்கின்றன. ஆனால் சத்துணவை நன்றாக போடு, அதில் முட்டை போடு, கறி போடு, மூன்று நேரமும் உணவு போடு என்றெல்லாம் கோரிக்கை வைப்பது நம்முடைய நிலைப்பாடு இல்லை. அதேநேரத்தில், சத்துணவுக் கூடங்களையெல்லாம் இழுத்து மூடு என்பதும் நம்முடைய நிலைப்பாடு இல்லை.


இதேபோல் வேலையில்லா திண்டாட்டம் பெருகுகிறதா, அனைவருக்கும் வேலைவாய்ப்பு என்கிற சட்டம் கொண்டு வருவார்கள். அந்த சட்டம் அமலுக்கு வராது. சட்டம் வேண்டுமென்றால் கொண்டு வரலாம். "அப்படி வேலை கொடுக்க முடியவில்லையென்றால் மாதம் 75 ரூபாய் கொடுங்கள். 75 ரூபாயை 100 ரூபாயாக கொடுங்கள். 100 ரூபாயை 150 ரூபாயாக கொடுங்கள்'' என்றபடியெல்லாம் கேட்டுக் கொண்டிருக்க முடியுமா? அப்படியே போய்க் கொண்டிருக்கிற கட்சி தன் இயக்கத்தினுடைய திட்டமாக, செயலாக எதையும் வைத்து செயல்பட முடியாது.


இப்படி ஆட்சியாளர்கள் மேலும் மேலும் செய்து கொண்டு இருப்பார்கள். அவர்கள் பின்னாலேயே வால்பிடித்துக்கொண்டு செல்வது ஒரு புரட்சிகர இயக்கத்தினுடைய வேலையில்லை. அப்புறம் நமக்கென்றுள்ள திட்டத்தை என்னசெய்வது? ஆளும் வர்க்கம் இவ்வாறு செயல்பட்டால் நாம் என்ன செய்வது? ஒவ்வொரு பிரச்சினையையும் பொருத்து நாம் முடிவு செய்வோம். எடுத்துக்காட்டாக, தமிழ் வழிக் கல்வி என்றால், அது ஒரு முற்போக்கான விசயமாக இருக்கிறது. ஆகவே, அதை ஆதரிப்போம். அதற்காக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் ஆதரிக்கவேண்டும் என்பதில்லை. ஆளும் வர்க்கம் கொண்டுவரும் திட்டங்களில் எது அவசியமானது, எது சரியானது, எது புரட்சியை நோக்கி நம்மை முன்னெடுத்து செல்லும்; எது வெறும் சீர்திருத்தம், மக்களை ஏமாற்றுவதற்கானது, எது மக்களுக்கு ஒரு இடைக்கால நிவாரணம் அளிக்கிறது என்று பார்க்கவேண்டும். ஒரு பெரிய வெள்ளம் வந்துவிட்டது, சாப்பிடுவதற்குக்கூட ஒன்றும் இல்லை, அப்பொழுது அரசாங்கம் உணவுப் பொட்டலம் போடுகிறது என்றால், அந்த நிவாரணம் அவசியமானது. அவன் உயிர் வாழ்வதற்கே அது அவசியம். ஆனால் ஒட்டுமொத்த சமுதாயத்தையே இரங்கும் நிலையில் வைக்கும் ஒரு அரசுத் திட்டத்தை ஏற்கமுடியுமா?


அமெரிக்காவில் கிட்டதட்ட 30 சதவிகிதம்பேர் உதிரி தொழிலாளர்கள்; அவர்கள் காலையில் எழுந்ததும் இங்கு இருக்கக்கூடிய சத்துணவு கூடங்களைப் போலவுள்ள இலவசக் கஞ்சித்தொட்டி வரிசைகளில் நிற்கிறார்கள். ஆங்கிலத்தில் "டோல்' என்பார்கள்; ஒரு துண்டு ரொட்டியும் ஒரு கோப்பை "சூப்பும்' கொடுப்பார்கள். இதற்காக தினசரி அவர்கள் வரிசையில் நிற்பார்கள். காலையில் எழுந்த உடனேயே எல்லோருக்கும் தருகிறான். இப்படி ஒரு பெரும்பகுதி சமுதாயத்தை வைப்பது என்பது அவனது திட்டத்தில் ஒன்றுதான். அவனுடைய திட்டத்தைப் பற்றி மேலும் விளக்கலாம். நிறைய இருக்கின்றன. அரசுசாரா நிறுவனங்களை உருவாக்கி அறிவொளி கல்வி என்கிறார்கள். கல்வியைஅடிப்படை உரிமையைக் கட்டாயமாக்குவது, செயல்படுத்துவது, அனைவருக்கும் கல்விக்கான சமூக நிலையை, பொருளாதார நிலையை உருவாக்குவது என்பதற்குப் பதிலாக, அறிவொளி இயக்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் என்று ஏகாதிபத்திய நிதி உதவியுடன்மேற்பார்வையுடன் பல அமைப்புகள், பல்வேறு திட்டங்களை இங்கே அமல்படுத்துகின்றார்கள். இதை அரசாங்கம் அமல்படுத்தினால் இங்கேயுள்ள லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் காரணமாக மக்களுக்குப் போய்ச்சேராது என்றஞ்சி பல அரசுசாரா நிறுவனங்களையும் அவர்களே உருவாக்கி, நேரடியாகவே கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொடுத்து, இங்கே பல அமைப்புகளை, இயக்கங்களை ஏற்படுத்துகிறார்கள். அவை மூலமாக எவ்வளவோ சலுகைகளை, சீர்திருத்தங்களை ஆளும் வர்க்கங்கள் கொண்டு வரலாம். இவை மூலமாக மக்களுக்கு ஏதாவது நிவாரணங்கள், சலுகைகள் கிடைக்கத்தான் செய்கின்றன. அதற்காக அவற்றை ஆதரித்துவிட முடியுமா?


அவ்வாறாக ஆளும் வர்க்கங்கள் கொண்டு வரும் சலுகைகள், சீர்திருத்தங்களில் ஒன்றுதான் இந்த இட ஒதுக்கீடு.


ஆனால், இந்த இட ஒதுக்கீட்டால் சமூக ஆதாயம் இருக்கிறது என்கிற காரணத்துக்காக, ஒவ்வொரு "இந்து சாதி'யும் ஒன்றுசேர்ந்து "சங்கங்கள்' அமைத்து, இது சாதிய உரிமை, சமூக உரிமை, இதற்கு 2000, 3000 ஆண்டு வரலாற்று அடிப்படைஇருக்கிறது என்று திரிக்கப்பட்ட ஒரு வரலாற்றை சொல்லி, நியாயம் கற்பித்து, தனது இயக்கத்தினுடைய லட்சியமாக வைத்துக்கொண்டு, இதை நீங்களும் ஏற்கவேண்டும்; அப்பொழுதுதான் நீங்கள் ஒரு புரட்சிகர இயக்கம் என்று நாங்கள் ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள். இப்படியெல்லாம் சிறுமைப்படுத்துவதை நாங்கள் ஏற்க முடியாது. இந்திய வருணாசிரம சாதிய சமுதாயத்தில் பலருக்கு கல்வி உரிமை, சமூக உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இது உண்மை என்கிற அடிப்படையில், உண்மையில் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை நாம் எதிர்க்கவில்லை; ஏற்கிறோம்; ஆனால், மேற்சொன்ன காரணங்களுக்காக அது ஒரு சீர்திருத்தம் என்ற முறையில் மட்டுமே ஏற்கக்கூடியது; இதுதான் நம்முடைய நிலைப்பாடு.


ஆனால், தங்களுடைய நிலையை முழுமையாக, அப்படியே ஏற்கவில்லை என்பதற்காக, நம்முடைய நிலையைத் திரித்துச் சொல்லி, இட ஒதுக்கீட்டையே நாம் எதிர்ப்பதாக உண்மையில் சாதியவாதிகளான "சமூக நீதிக்காரர்கள்'' புளுகித் திரிகிறார்கள்.


···


(மதுரையில் பு.ஜ. வாசகர் வட்டத்தினர் "இட ஒதுக்கீடு யாருக்கு?'' என்ற தலைப்பில் 2005 செப்டம்பரில் நடத்திய அரங்கக் கூட்டத்தில், வாசகர்களின் வினாக்கள் சந்தேகங்களைத் தொகுத்து
பு.ஜ. ஆசிரியர் குழுவின் சார்பில் அளிக்கப்பட்ட விளக்கவுரை.
பதிவு செய்யப்பட்ட உரையிலிருந்து தொகுக்கப்பட்டது.)
···