Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தோழர் அனுராதகாந்தி அவர்களுக்குச் சிவப்பஞ்சலி!

தோழர் அனுராதகாந்தி அவர்களுக்குச் சிவப்பஞ்சலி!

  • PDF

கம்யூனிசப் புரட்சியாளரும் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)யின் மத்தியக் கமிட்டி உறுப்பினருமான தோழர் அனுராதா காந்தி, கடந்த ஏப்ரல் 12ஆம் நாளன்று மலேரியா நோய் தாக்குதலால் மரணமடைந்து விட்டார். தலைமறைவு புரட்சிகர வாழ்க்கையின் காரணமாக, அவர் மறைந்துவிட்ட துயரச் செய்தி மிகத் தாமதமாகவே தெரிய வந்துள்ளது.

 

1970களில் மும்பையில் கல்லூரி மாணவியாக இருந்த காலத்தில் முற்போக்கு மாணவர் இயக்கம் மூலம் நக்சல்பாரி புரட்சிகர அரசியலைக் கற்றுணர்ந்த அவர், அவசரநிலை பாசிச ஆட்சியைத் தொடர்ந்து "ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டி''யைத் (CPDR) தொடங்கி மனித உரிமைப் போராளியாகச் செயல்பட்டார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராகப் பணியாற்றிய போது, தொழிற்சங்க இயக்கத்திலும் தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டு பலமுறை அவர் சிறையிடப்பட்டார். மும்பையிலிருந்து அப்போது வெளிவந்த "கலம்'' (KALAM) எனும் புரட்சிகர மாணவர் பத்திரிகையின் முக்கியத் தூணாக விளங்கினார். பின்னாளில் மாவோயிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று, வேலையை உதறி எறிந்துவிட்டு பஸ்தார் பழங்குடியினப் பெண்கள் மத்தியில் புரட்சிப் பணியாற்றினார். அண்மைக் காலமாக, ஜார்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினப் பெண்களை அரசியல்படுத்தி அமைப்பாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மலேரியா நோய் தாக்கி, தலைமறைவு வாழ்க்கையின் இடர்ப்பாடுகள் காரணமாக உரிய சிகிச்சை பெறமுடியாமல், தாமதமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தனது 54வது வயதிலேயே மரணமடைந்து விட்டார்.


நாக்பூரில் அவர் அனைத்து மகாராஷ்டிரா தொழிலாளர் சங்கத்தில் (AMKU) பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், நமது அழைப்பை அன்புடன் ஏற்று 17.11.1990 அன்று மதுரையில் நடந்த புதிய ஜனநாயகம் இதழின் 6ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிச் சிறப்பித்தார்.


உயர்கல்வி கற்று பேராசிரியராகப் பணியாற்றிய போதிலும், அவ்வேலையைக் கைவிட்டு புரட்சிப் பணியாற்றுவதில் அவர் கொண்ட பேரார்வம், மக்களின் விடுதலையை தனது உயிர்மூச்சாகக் கொண்டு செயல்பட்ட அவரது தன்னலமற்ற அர்ப்பணிப்பு, மாவோயிஸ்டு கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினராக தன்னை உயர்த்திக் கொண்ட அவரது புரட்சிகரப் பேராற்றல், தலைமறைவு வாழ்க்கையின் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு புரட்சிப் பணியாற்றிய அவரது தீரம், கடின உழைப்பு, எளிய வாழ்வு ஆகிய உயரிய கம்யூனிசப் பணிகளை உறுதியாகப் பற்றி நின்று, அவரது இலட்சியக் கனவை நிறைவேற்ற புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்!