Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் புரட்சிப் பாதை: பு.ஜ.வின் நிலையும் மாவோயிஸ்டுகளின் புளுகும்

புரட்சிப் பாதை: பு.ஜ.வின் நிலையும் மாவோயிஸ்டுகளின் புளுகும்

  • PDF

மக்கள் திரள் அடித்தளத்தைப் பெறாமலேயே அதற்கான முயற்சிகள் ஏதுமின்றியே ஆயுதப் போராட்டத் தயாரிப்பு, ஆட்களையும் ஆயுதங்களையும் சேகரிப்பது, பயிற்சி எடுப்பது ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடும் செயலுத்தியை மாவோயிஸ்டு கட்சியின் தலைமை பின்பற்றுவதாக கட்சியின் உள்ளேயும் வெளியேயும் திரும்பத் திரும்ப விமர்சனங்கள் வந்த பிறகு பின்வருமாறு எழுதுகிறார்கள்.


"புரட்சிகர யுத்தத்திற்கு மக்களை அணிதிரட்டுவது கம்யூனிசப் புரட்சியாளர்களின் முதன்மையான கடமையென்பதால், அவர்களுக்கு காடு, மலை, துப்பாக்கி பயிற்சி என்பதெல்லாம் மிகவும் முக்கியமான தேவைகளாகின்றன. ஆனால் இக்கடமையை வெறும் ஆயுதங்களைக் கொண்டு நிறைவேற்றிவிட முடியாது என்பதும், மக்களைப் பல்வேறு அரசியல், பொருளியல், சமூகக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களின் மூலமாகவும், அரசியல் ரீதியில் அணி திரட்டுவதன் மூலமாகவும் செய்ய வேண்டும் என்பதும் மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடாகும்.'' (போராளி வெளியீடு, பக்.31)


"மக்கள் ஆதரவு, அடித்தளம் மட்டுமல்லாமல், மக்களின் நேரடியான பங்கெடுப்பில்லாமல் ஒரு புரட்சி வெற்றி பெற முடியாது. அதனால்தான் புரட்சி என்பது மக்களின் திருவிழா என்று மாமேதை தோழர் லெனின் கூறினார். ஆகவே, புரட்சிக்கு மக்களை அணிதிரட்டுவது, அமைப்பாக்குவது மற்றும் அவர்களை நேரடியாகப் பங்கெடுக்கச் செய்வது புரட்சிக்கு தலைமை தாங்கும் கம்யூனிஸ்டு கட்சியினுடைய கடமை.'' (போராளி வெளியீடு, பக். 31).


"ஆயுதக் குழு கட்டி ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு, மக்கள் அடித்தளம் ஆதரவு இருக்க வேண்டுமா என்றால் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி இருக்க வேண்டும் என்பதுதான் மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடு. (போராளி வெளியீடு, பக். 32)


இவ்வாறு பொதுவில் புரட்சிக்கும், குறிப்பாக ஆயுதப் போராட்டத்திற்கும் மக்களை அணிதிரட்டுவதும், அமைப்பாக்குவதும், அவர்களை நேரடியாகப் புரட்சியில் பங்கெடுக்கச் செய்வதும் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி இருக்க வேண்டும் என்பது மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடாகும் என்று கோட்பாட்டு ரீதியில் ஒப்புக் கொள்ளும் அவர்கள், அடுத்த வரியிலேயே இந்த நிலைப்பாட்டை நிராகரித்து விடுகிறார்கள்.


முதலில், புரட்சிக்கும், ஆயுதப் போராட்டத்திற்கும் மக்கள் ஆதரவு அடித்தளத்தைப் பெறுவதற்கான "புதிய ஜனநாயகம்' வகுத்துக் கொண்டுள்ள அரசியல் வழிமுறைகள் வலது சந்தர்ப்பவாதமென்று நிரூபிப்பதற்காக முயன்று, அவசியமான சரியான மார்க்சியலெனினியத் தலைமை முறை பற்றிய அனைத்துக் கோட்பாடுகளையும் நிராகரித்து விடுகிறார்கள். "அரசியல் போராட்டத்தின் உயர்ந்த வடிவம்தான் ஆயுதப் போராட்டம், அரசியல் போராட்ட அனுபவத்தினூடாக ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தை மக்கள் உணர வேண்டும்'' என்ற மார்க்சியலெனினியக் கோட்பாட்டைப் பின்வருமாறு கொச்சைப்படுத்தி நிராகரித்து விடுகிறõர்கள்.


"மொத்தத்தில், பு.ஜ. வகுத்துள்ள புதிய சூத்திரம் மாலெமாவை திரித்து புரட்டும் ஒரு சந்தர்ப்பவாத சூத்திரமே. இது அரசியல் போராட்டம் படிப்படியாக, ஆயுத போராட்டமாக மாறும் என்ற பரிணாமவாதக் கோட்பாட்டை முன்வைப்பதன் மூலம், பாய்ச்சல் மூலமான வளர்ச்சி என்ற மார்க்சிய கோட்பாட்டை மறுக்கிறது. மறுபுறம் மக்கள் ஆயுதப் போராட்டத்தை நடத்த அரசியல் போராட்ட அனுபவங்களை அடிப்படையாக்குவதன் மூலம், புறநிலையில் தோன்றக்கூடிய புரட்சிகர சூழலை பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் மலட்டுக் கோட்பாடாக உள்ளது. அரசியல் போராட்டத்தை முதிர்ச்சியடைய செய்ய (எப்போது முதிர்ச்சியடையும்?) நிரந்தரமாக முயற்சித்துக் கொண்டிருப்பதும், மக்கள் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள (இதை எப்படி முடிவு செய்வது?) அரசியல் போராட்ட அனுபவம் பெற வைக்க காலாகாலத்துக்கு முயன்று கொண்டிருப்பதுதான் இந்த சந்தர்ப்பவாதக் கோட்பாட்டின் விளைவாக இருக்க முடியும். '' (போராளி வெளியீடு, பக்.26)


மேலும் புதிய ஜனநாயகம் அமைப்பினர் முன் வைக்கும் போர்த்தந்திரம், செயல்தந்திரம் பற்றிய கோட்பாடுகளை வேண்டுமென்றே திட்டமிட்டு, மோசடியாகத் திரித்துப் புரட்டி, அவை முதலாளிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் நீண்டகாலத் தயாரிப்பைத் தொடர்ந்து நடத்தப்படும் நாடு தழுவிய பேரெழுச்சிப் பாதை என்றும் ஒரு பச்சைப் பொய்யை மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. இந்தப் பச்சைப் பொய்யை ஆதாரமாக வைத்து, நாடு தழுவிய அளவில் மக்கள் ஆதரவைத் திரட்டியபிறகுதான் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க முடியும் என்று கோட்பாட்டை வகுத்துக் கொண்டு ஆயுதப் போராட்டத்தைக் கண்காணாத தூரத்துக்குத் தள்ளி வைத்து விட்டதாக வேறு அவதூறும் செய்கிறது.


இவ்வாறுதான் முன்னாள் மக்கள் யுத்தக் கட்சி மற்றும் இன்னாள் மாவோயிசக் கட்சித் தலைமை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பு.ஜ. அமைப்பின் கோட்பாடுகள் குறித்து திரித்துப் புரட்டியும், புளுகியும் அவதூறு செய்து வந்தது. ஆனால், அதே கோட்பாடுகளின் பகுதிகளைத் "திருட்டுத்தனமாக'' தனது ஐக்கியம் மற்றும் போராய ஆவணங்களில் புகுத்திக் கொண்டது. அது தெரியாமல் அக்கட்சியின் தமிழ் மாநிலக் குழு தொடர்ந்து, போர்த்தந்திரம், செயல்தந்திரம் பற்றிய பு.ஜ. அமைப்பின் நிலைப்பாடுகள், குறிப்பாக பிரதானத் தாக்குதல் திசைவழி, புரட்சி அலையேற்றம், அலையிறக்கம், பிரச்சாரம், கிளர்ச்சி, கட்டளை மற்றும் ஆணை ஆகிய கட்டங்களிலான இயக்க வளர்ச்சி போன்றவை முதலாளிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியன; இந்தியா போன்ற நாடுகளுக்கு இவையெல்லாம் பொருந்தாதவை; அதைப் பற்றி எங்கேயும் மாவோ கூறவில்லை, மாறாக அந்தக் கொள்கை சீன நிலைமைகளுக்கு எப்படிப் பொருந்தாது என்றுதான் கூறியுள்ளார் என்றும் பச்சையாகப் புளுகினார். புரட்சிகர அலையேற்றம், அலையிறக்கம் என்பதெல்லாம் வார்த்தை ஜாலங்கள் என்றும், புரட்சிகர அலையேற்றத்திற்காக இலவுகாத்த கிளியாக ஆயுதப் போராட்டத்தை துவக்காமல் காத்திருக்கின்றனர் என்றும் கிண்டல் செய்தார்கள். (ஆதாரம்: "போகாத ஊருக்கு வழி சொல்லும் மா.அ.க.வின் அரசியல் பாதையும், இராணுவப் பாதையும்'', போராளி வெளியீடு, பக். 61, 64)


இதுபற்றி சுமார் மூன்றாண்டுகளுக்கு முன்பே பு.ஜ. அமைப்பு கேட்டிருந்தது, "அரசியல் யுத்த தந்திரம், செயல்தந்திரங்கள் பற்றிய மா.அ.க.வின் நிலைப்பாடுகளைக் கொல்லைப்புற வாசல் வழியே (மாவோயிசக் கட்சி) சேர்த்துக் கொண்டிருக்கிறது. இப்போது ம.யு. தமிழ் மாநிலக் குழு தோழர்கள் மா.அ.க.வுக்கு எதிரான வெளியீட்டில் எழுதியுள்ள அவதூறுகளை நேர்மையாக ஒப்புக் கொள்வார்களா, அல்லது தலைமை கடைப்பிடித்த கபடத்தனத்தைப் பின்பற்றுவார்களா என்று தெரியவில்லை.'' ("சாகச வழிபாடு சந்தர்ப்பவாத வழிமுறை போவது எங்கே?'', பக். 107) என்று பு.ஜ. அமைப்பு கேட்டிருந்தது.


மாவோயிசக் கட்சியின் தமிழ் மாநிலக் குழு, தனது கட்சியின் இந்தக் கோட்பாட்டு மோசடி குறித்து நேர்மையாக நடந்து கொள்ளாததுடன் தலைமையின் அதே கபடத்தனத்தைப் பின்பற்றுவது இப்போது தெரிகிறது. அதாவது பு.ஜ. அமைப்பின் செயல்தந்திர நிலைப்பாடு, முதலாளிய நாடுகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடிய நாடு தழுவிய பேரெழுச்சிப் பாதையிலானதென்று தொடர்ந்து புளுகி வருகிறது.


நீண்டகாலத் தயாரிப்பைத் தொடர்ந்து நாடு தழுவிய ஆயுதந்தாங்கிய பேரெழுச்சி பாதை அதாவது நாடு தழுவிய அளவில் மக்கள் ஆதரவைத் திரட்டிய பிறகுதான் ஆயுதப் போராட்டத்தை தொடங்குவது என்பது பு.ஜ. அமைப்பின் நிலைப்பாடே கிடையாது. இதுதான் நமது நிலைப்பாடு என்பது மாவோயிஸ்டுகள் வேண்டுமென்றே திரித்து, இட்டுக் கட்டிச் சொல்வதாகும். ஏற்றதாழ்வான வளர்ச்சியுடைய நமது நாட்டில் மக்களைத் திரட்டுவதும் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்குவதும் காலத்தாலும் இடத்தாலும் ஏற்றத்தாழ்வாகவே இருக்கும் என்பதுதான் நமது நிலைப்பாடாகும். நாட்டின் எங்கு வேண்டுமானாலும், எப்போதும் ஆயுதப் போராட்டம் தொடங்கலாம் என்ற மாவோயிஸ்டுகளின் நிலைப்பாடுதான் சமச்சீரான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கண்ணோட்டமாகும்.


ரசியாவிலும், சீனாவிலும் பின்பற்றப்பட்டதைப் போல ஒரு குறிப்பிட்ட போர்த்தந்திரத்தின் சில போராட்ட மற்றும் அமைப்பு வடிவங்கள் மற்றொரு போர்த்தந்திரத்தில் அவசியமானால் பயன்படுத்த முடியும், பயன்படுத்த வேண்டும்; இந்த முறையில் கொரில்லா மண்டலங்களையும், தளப்பிரதேசங்களையும் நிறுவுவதற்கான முதற்படியாக உள்ளூர் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சிகளை நடத்துவது முன்தேவையாக உள்ளன என்பதுதான் பு.ஜ. அமைப்பின் நிலைப்பாடே தவிர, நாடு தழுவிய பேரெழுச்சிக்குத் தயாரிப்பது என்பது பு.ஜ. நிலைப்பாடே கிடையாது. (ஆதாரம்: மேற்படி நூல், பக். 171). மாவோயிஸ்டுகள்தாம் நமது நிலைப்பாட்டைத் திரித்துச் சொல்லி அவதூறு செய்து வருகிறார்கள்.


அதேசமயம், ஆயுதக் குழு கட்டி, ஆயுதப் போராட்டம் நடத்துவதற்கு மக்கள் அடித்தளம், ஆதரவு இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளும் மாவோயிஸ்ட் கட்சி கூறும் வழிமுறையோ, வெளியில் ஒன்றும் இரகசியமாக எழுதி வைத்துக் கொண்டுள்ள கட்சி ஆவணத்தில் வேறொன்றாகவும் இருக்கின்றது. அந்த உண்மையை ஆதாரத்துடன் பார்ப்போம்.