Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் எல்லா வெற்றிகளையும் இழத்தல்

எல்லா வெற்றிகளையும் இழத்தல்

  • PDF

போராட்டத்தை முதுகில் குத்தி, அரசாங்கத்திடம் ஆயுதங்கள் திருப்பிக் கொடுக்கப்பட்டன. இந்தச் சரணடைதலுடன் தெலுங்கானா இயக்கத்தின் வெற்றிகள் யாவும் இழப்பதற்கு அடித்தளம் அமைக்கப்பட்டது.


தெலுங்கானா இயக்கத்தின் வீச்சால், தெலுங்கானாவிலும் ஆந்திராவிலும் கம்யூனிஸ்டுக் கட்சி பெரும்பான்மையான கட்சியாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தது. இலட்சக்கணக்கான மக்களின் தியாகங்களின் விளைவாக கட்சித் தலைவர்கள் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் இடம் பெற்றனர். கட்சித் தலைவர்களில் சிலர், ஓட்டுப் பெட்டிகளின்மூலம் சோசலிசத்தை சுலபமாக அடையலாம் என்று நினைத்தனர். எல்லாவகைத் தேர்தல்களிலும் கட்சியைக் கலந்து கொள்ளுமாறு அவர்கள் செய்தனர். மக்கள் மத்தியில் வர்க்க உணர்வை உண்டாக்குவது, வர்க்கப் பிரச்சினைகளில் மக்களைத் தீவிரமாக்குவது, வர்க்கப் போராட்டங்களை நடத்துவது ஆகியவை மெதுவாகப் பின்னணிக்குத் தள்ளப்பட்டன. தியாகங்களின் அர்த்தங்களும், கம்யூனிசத்திற்காக தம்மை அர்ப்பணித்துக் கொள்வதும் மழுங்கடிக்கப்பட்டன. இவ்வாறாக தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் கட்சி பலவீனமடைந்தது.


நாடாளுமன்றப் பாதையைப் பின்பற்றுவதன்மூலம் கட்சியானது மாபெரும் தெலுங்கானா இயக்கத்தையும் அதனுடைய வரலாற்றுப் பூர்வமான வெற்றிகளையும் காட்டிக் கொடுத்துவிட்டது. வர்க்கப் போராட்டங்களின்மூலம் மட்டும் தீர்க்கப்படக் கூடிய நிலப்பிரச்சினை, நீதிமன்றங்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டது. காங்கிரசு அரசாங்கத்தின் நலத்திட்டங்கள் என்றுமே வறிய மக்களுக்கு நிலங்களைக் கொடுக்கவில்லை. அந்தத் திட்டங்களின் நோக்கமே நிலப்பிரபுக்களின் நிலங்களைப் பிரித்துக் கொடுப்பதாக என்றுமே இருந்ததில்லை. அந்தத் திட்டங்களின்படி, சில பணக்கார விவசாயிகள் மட்டுமே சில நிலங்களை வாங்க முடிந்தது. போராட்டத்தின்மூலம் மக்கள் அடைந்த இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் திரும்பவும் கொள்ளைக்கார நிலப்பிரபுக்களுக்கே திருப்பித் தரப்பட்டன. ஆயிரக்கணக்கான கிராமங்களில் ஏற்படுத்தப்பட்ட கிராம இராஜ்ஜியம் அழிக்கப்பட்டது. கிராம இராஜ்ஜியத்திற்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சாயத்துச் சபைகள், பஞ்சாயத்து சமிதிகள், மாவட்டப் பரிஷத்துக்கள் ஆகியவை வர்க்கப் போராட்டங்களைத் திசை திருப்பவும், கிராமங்களில் நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்தைத் திரும்பவும் நிறுவவுமே உதவின.


நாடறிந்த மக்கள் எதிரிகள் கூட, கிராமங்களில் மெதுவாகத் தங்களுடைய ஆட்சியை நிறுவினர். சுரண்டல், வலிந்து பிடுங்கிக் கொள்ளுதல் ஆகியவை மீண்டும் கிராமங்களில் தோன்றின. தரகு, கொடும் வட்டித் தொழில் ஆகியவை மிகவும் தீவிரமான வடிவங்களில் மீண்டும் தோன்றின. இது மட்டுமல்ல; தெலுங்கானா போராட்டக் காலத்தில் கிராமங்களில் நிலப்பிரபுக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இப்பொழுது அவர்கள் பஞ்சாயத்துப் போர்டுகள், பஞ்சாயத்து சமிதிகள், பரிஷத்துக்கள், சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் ஆகியவைகளில் நுழைந்து சக்திமிக்க பதவிகளில் அமர்ந்தனர். அவர்களில் சிலர் அமைச்சர்களாகவும் ஆனார்கள். இவ்வாறாக அவர்கள் அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக ஆனார்கள். மக்களின் கழுத்துக்களின் மீது இறுக்கமாக உட்கார்ந்து கொண்டு, அரசியல் தலைவர்களாக மாறினார்கள். இவ்வாறாக அழிந்து கொண்டிருக்கும் நிலப்பிரபுத்துவம் இன்னொரு முறை வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டது. பழைய வடிவத்திலிருந்த கொத்தடிமைத்தனத்தைத் தவிர, மற்ற எல்லாவிதச் சுரண்டல்களும் கிராமங்களில் தோன்றி மக்கள் கொடுமையான சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டனர். இது கட்சியிலிருந்த திரிபுவாதத் தலைவர்கள் கைக்கொண்ட நாடாளுமன்றப் பாதையின்மூலம் தெலுங்கானா இயக்கத்திற்குச் செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.


இப்பொழுது இந்தக் கிராமங்களில்தான் — எங்கு கடுமையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்தனவோ அந்தக் கிராமங்களில்தான் — மக்கள் நடைமுறை வெற்றிகள் எல்லாம் இழக்கப்பட்டுவிட்டாலும் இயக்கமானது இன்னும் உயிருடன் இருந்து கொண்டிருக்கின்றது. கடுமையான நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் எங்கு நிற்க முடியவில்லையோ அங்கெல்லாம் —அதாவது மனுகோட்டா போன்ற இடங்களிலெல்லாம் — நிலப்பிரபுக்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தனர்.