Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் போராட்டத்தின் பின்னணி

போராட்டத்தின் பின்னணி

  • PDF

நிஜாம் மாநிலம், 16 மாவட்டங்களைக் கொண்டிருந்தது.மூன்று மொழி பேசப்படும் பிரதேசங்கள் இருந்தன. அதாவது 8 தெலுங்கானா மாவட்டங்களும், 5 மராட்டிய மாவட்டங்களும், 3 கன்னட மாவட்டங்களும் இருந்தன. ஒன்றரை கோடி மக்கள்தொகை கொண்ட அவ்வரசில் தெலுங்கானா மக்களின் தொகை 1 கோடியாக இருந்தது.


நிஜாம் மாநிலம் முழுவதும் ஒரு நிலப்பிரபுத்துவ மாநிலமாகத் திகழ்ந்தது. இந்தியாவில், பிரித்தானிய அரசுக்கு அடிபணிந்து நிஜாம் மாநிலத்தின் நவாப், தனது சொந்தப் படை, நாணயம், அஞ்சல் மற்றும் சுங்கம் ஆகியவற்றுடன் தனது மாநிலத்தின் மீது முழு அதிகாரமும் கொண்டிருந்தான். மாநிலத்தில் எந்தத் தேர்தல் முறையும் இல்லை. ஆணைகளை நிறைவேற்றும் அதிகாரமற்ற ஒரு ஆலோசனைக் குழுதான் இருந்தது.


மாநிலத்தை அநேகமாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். கல்சா பகுதி என்றும் கல்சா இல்லாத பகுதிகள் என்றும் பிரிக்கலாம். கல்சா பகுதி என்பது நிஜாம் மாநில அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் பகுதியாகும். மாநிலத்தின் மூன்றில் இரண்டு பகுதிகள் இதிலடங்கும். கல்சா இல்லாத பகுதி என்பது நிஜாம் மாநில அரசிற்கு அடிபணிந்த ஜாகிர்தார்கள், ஜமீன்தார்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இதுமூன்றிலொரு பகுதியை அடக்கும். இப்பகுதியைக் குறுநில மன்னர்கள், பைகாக்கள், ஜாகிர்தார்கள், மாக்தாக்கள் மற்றும் தேஷ்முக்குகள் ஆகியோர் நிஜாம் அரசுக்கு கட்டுப்பட்டு ஆண்டு வந்தனர். கல்சா இல்லாத பகுதியில் நிலத்திற்குப் பாத்தியதை இல்லை. தாங்கள் உழும் நிலமோ, வசிக்கும் வீடுகளோ மக்களுக்குச் சொந்தமில்லை; கிராமங்களை விட்டுப் போக வேண்டுமெனில் வெறுங்கையுடன்தான் போகவேண்டும். அவர்களுக்கென்று எதுவும் சொந்தமில்லை.


நிஜாம் மாநில நவாப்பே ஒரு பெரும் நிலப்பிரபு; மாநிலத்தின் 18 தாலுக்காகளில் லட்சக்கணக்கான ஏக்கர் நிலம் அவனுக்குச் சொந்தம். நிஜாம் அரசுக்குட்பட்ட சில குறுநில மன்னர்கள் கூட தங்கள் சொந்தத் தீர்வை, போலீசு மற்றும் இதர அதிகாரங்களைக் கொண்டிருந்தனர். ரயத்துவாரிப் பகுதிகளில் கூட, நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் வைத்திருந்த மிராசுதாரர்கள் கிராமப்புற பொருளாதார, அரசியல் விவகாரங்களில் சக்தி பெற்றவர்களாக விளங்கினர். ஜன்னா ரெட்டி குடும்பத்தினர் ஒரு லட்சம் ஏக்கர் நிலம் வைத்திருந்தனர். பாபாசாகிப் பட்டேல் குடும்பத்துக்கு பத்தாயிரம் ஏக்கர் நிலம் சொந்தமாக இருந்தது. இப்படிப்பட்ட பெரும் நிலப்பிரபுக்கள் கிராமங்களில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்தனர். எல்லா வளமான நிலங்களும், நீர்ப்பாசன வசதிகளும் இம் மிராசுதாரர்களுக்குச் சொந்தம். அந்தந்த வட்டாரத்தின் பொது பன்சார் (நன்செய்) நிலங்களும், தோப்புகளும் இவர்களுக்குச் சொந்தம். எதன் மீதும் மக்களுக்கு உரிமையில்லை.


இதற்கும் மேலாக, மேல்தட்டு வர்க்கங்கள், அரசு அலுவலகங்களைச் சார்ந்த முசுலீம் அதிகாரிகள் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். நாட்டின் பல்வேறு மக்களின் தாய்மொழிகள் நசுக்கப்பட்டன. ஆட்சி மொழி உருது என்பதால் இதர மொழிகளுக்கு எந்தவித வாய்ப்பும் இல்லை.