Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் "வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்

"வெள்ளையனே வெளியேறு' நாடகமும் காங்கிரசின் வேசித்தனமும்

  • PDF

"வெள்ளையனே வெளியேறு!' என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முழக்கமிட்டு "செய் அல்லது செத்துமடி' என தீரமிக்க ஒரு போராட்டத்தை இந்தியாவின் சுதந்திரத்திற்காக காந்தி நடத்தினாராம்! கதை விட்டு வருகின்றனர், காங்கிரசுக்காரர்கள். காந்தி விடுத்த அறைகூவலின்படி போராட்டத்தில் ஈடுபட்ட "ஆகஸ்டு தியாகிகள்' என்று தம்மைத்தாமே பீற்றிக் கொள்கின்றனர். அதற்கு இப்போது பொன்விழா கொண்டாடுகிறார்களாம் தமிழக காங்கிரசுக்காரர்கள்.


வரலாற்றைப் புரட்டுவதும் தேசத்துரோகத்தையே தேசபக்தி என்று சித்தரிப்பதும்தான் காங்கிரசின் கலாச்சாரம். இந்தியத் திருநாட்டின் விடுதலை தான் நோக்கம் என்பது திட்டமிட்ட பொய்யே. "வெள்ளையனே வெளியேறு!'' என்ற தீர்மானத்தை காந்தியும் காங்கிரசும் போட்ட பின்னணியே வேறு.


1939ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதியன்று இட்லர் போலந்தையும் இங்கிலாந்தையும் தாக்கினான். உடனே பிரான்சு ஜெர்மனி மீது போர்ப்பிரகடனம் செய்தது. இவ்வாறு இரண்டாவது உலக யுத்தம் மூ­ண்டது.


போர் தொடுக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள் ஆங்கிலேய வைசிராய், இந்தியா "போரிலுள்ள ஒரு நாடு'' என அறிவித்தார். யுத்த செலவிற்காகப் புதிய வரிகளைப் போட்டு இந்திய மக்களைக் கசக்கிப் பிழிய ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தயாரானது. தனது இராணுவ பீரங்கிக்குத் தீனி போட இந்தியர்களைத் தீவிரமாகப் பட்டாளத்தில் சேர்க்க ஆரம்பித்தது. எதிர்த்துப் போராடுபவர்களை ஒடுக்க அவசரச் சட்டங்களைப் போட்டு, அடக்குமுறையை ஏவிவிட தன்னைத் தயார்படுத்திக் கொண்டது; ஒவ்வொரு எதிர்ப்பையும் நசுக்கியது. ஒடுக்குமுறையை மட்டுமே நம்பியிருக்காமல் போருக்குப் பின் அரசியலதிகாரத்தை இந்தியர்களின் கைக்கே மாற்றிவிடுவது என்ற மாயையை ஏற்படுத்தும் பொருட்டு கிரிப்ஸ் கமிசன் போன்ற தூதுக்குழுக்கள் ­மூலம் அரசியல் மோசடி மூ­ட்டைகளை அவிழ்த்துவிட்டது.


ஜெர்மனி ஜப்பான் ஒரு பக்கமும், இங்கிலாந்து பிரான்சு மற்றொரு பக்கமுமாக நின்று நாசகார யுத்தத்தில் ஈடுபட்டிருந்தன. இந்த இரண்டு ஏகாதிபத்திய முகாம்களும் ஒன்றின் காலனிகளை இன்னொன்று அபகரிக்க நடத்திய யுத்தம்தான் அது. எனவே, அது உலக மக்களுக்கு எதிரான அநீதியான யுத்தமாகும். இந்த யுத்தத்தில், இரண்டு முகாம்களையும் எதிர்த்து முறியடிக்க வேண்டியதே ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமையாகும். நம்மை அடிமைப்படுத்தியிருந்த இங்கிலாந்து அநியாய யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருந்த நேரம், அதனால் இந்தியா மீது தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதில் பலவீனப்பட்டிருந்த நேரம். எனவே, இந்தியா தனது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு மிகவும் வாய்ப்பான நேரம். இந்தியாவின் சுதந்திரத்தை ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடமிருந்து பறித்தெடுக்க விரும்பும் எந்த தேசபக்த இந்தியனும் இவ்வாறுதான் எண்ணுவான். யுத்தத்திற்கும் காலனிய ஆட்சிக்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து சுதந்திரத்திற்கான போராட்டத்தைத் தீவிரமாக்குவான்.


ஆனால் காந்தியும் காங்கிரசும் மக்களைத் திரட்டி சுதந்திரத்திற்கான போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காந்தி, நேரு, ஜின்னா ஆகியோர் தனித்தனியாக விடுத்த அறிக்கைகளில் உறுதி கூறினர். 1939 செப்டம்பர் 5ல் வைசிராயைச் சந்தித்த காந்தி தனது முழு அனுதாபமும் ஆங்கிலேய ஆட்சிக்கு உண்டு எனச் சொன்னார். அந்தச் சந்திப்பின்போது, "நான் அவருக்கு (வைசிராய்க்கு) இங்கிலாந்து பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் யுத்தத்தால் அழியக்கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கியபோது கண்கலங்கிப் போனேன்'' என்று காந்தி எழுதினார். "இங்கிலாந்து ஜீவ மரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, அதை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்குவது இந்தியாவின் கௌரவத்திற்கே இழிவு ஏற்படுத்தும் செயலாகும்'' என்று 1940, மே 20ல் நேரு அறிவித்தார். இதே நேரத்தில் காந்தி, "பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களது சுதந்திரத்தை தேடவில்லை'' என்று அறிவித்தார்.


அது மட்டுமல்ல, இங்கிலாந்து ஒரு நியாயமான இலட்சியத்திற்குப் போராடுவதாகவும் அதற்கு இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவித்தார். "ஆகையினால் நான் இப்போது இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் இங்கிலாந்தும் பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்ன ஆவது?''1 என்று காலனியாதிக்கவாதிக்காகக் கண்ணீர் வடித்தார்.


1941ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதிகூட காந்தி பின்வருமாறு சொன்னார்: "இங்கிலாந்தின் நெருக்கடியான நேரம்தான் நமக்குச் சரியான சந்தர்ப்பம் என அடிக்கடி கூறப்படுகிறது. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் பம்பாய் தீர்மானம் அத்தகைய கொள்கை எதையும் நிராகரிக்கிறது. நாம் எவ்வாறு இங்கிலாந்தை அதன் நெருக்கடியான வேளையில் சங்கடப்படுத்திக் கொண்டே, அகிம்சாவாதிகள் என நம்மை அழைத்துக் கொள்ள முடியும்?2


இவ்வாறு காந்தியும் காங்கிரசும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டு அமைதியாக இருந்தனர். மக்களுடைய மனோநிலை எப்படி இருக்கிறது என்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தனர். மறுபக்கம், இந்தியத் தொழிலாளர்களும் விவசாயிகளும் மாணவர்களும் யுத்தத்திற்கு எதிராகவும் இந்தியாவை இங்கிலாந்தின் போர் இரதத்தில் மாட்ட வைத்ததற்கு எதிராகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஏகாதிபத்தியக் காலனி அரசு கடும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது. இந்தியப் பாதுகாப்புச் சட்ட விதிகளை அமுலுக்குக் கொண்டு வந்து ஏராளமான பேரைக் கைது செய்தது.


இந்த நிலையில் 1942ஆம் ஆண்டு வந்த உலக யுத்தத்தில் ஜெர்மனிஜப்பான் முகாமான அச்சு நாடுகளின் கை மேலோங்கியது. அனேகமாக ஐரோப்பா கண்டம் முழுவதையும் நாஜி ஜெர்மனி படைகள் படுவேகத்தில் தமது காலடியில் கொண்டு வந்தன. ஜப்பானியப் படையெடுப்பிற்கு முன் மலேசியாவிலும் பர்மாவிலும் இருந்த இங்கிலாந்தின் காலனிய அரசுகள் பொலபொலவென உதிர்ந்தன. ஜப்பானியப் படைகள் படுவேகத்துடன் இந்திய எல்லைவரை முன்னேறியது. இவையெல்லாம் சேர்ந்து அச்சு நாடுகள்தான் உலக யுத்தத்தில் இறுதி வெற்றியடையும் என்று ஒரு பிரிவு இந்திய தரகு முதலாளிகளையும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளையும் நம்ப வைத்தன. ஜப்பானின் அடுத்த ஒரு தாக்குதலில் இந்தியா அதன் வசம் வந்துவிடும் என்று இவர்கள் உறுதியாக நம்பினர். உண்மை நிலையும் அதுவாகத்தானிருந்தது.


எனவே, இனிமேலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக இருக்க அவர்கள் விரும்பவில்லை. வெற்றி பெறப்போகும் புதிய எஜமானனான ஜப்பானிய ஏகாதிபத்தியத்திற்குச் சேவகம் செய்ய விரும்பினர். ஜப்பானிய ­மூலதனத்துடன் புதிய உறவுகளை உருவாக்க எண்ணினர். இந்தியாவை விட்டு வெளியேறுமாறு ஆங்கிலேயருக்கு நிர்ப்பந்தம் கொடுக்க விரும்பினர். சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் மூ­ழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை விட்டுத் தப்பத் துடிக்கும் எலிகளைப் போல இருந்தனர். காந்தியின் தளபதியான பட்டாபி சீதாராமையாவின் வார்த்தைகளில் இந்தச் சிந்தனை பின்வருமாறு பிரதிபலித்தது: "இந்தியா ஒரு மூ­ழ்கிக் கொண்டிருக்கும் கப்பலுடனோ, உதிர்ந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்துடனோ தன்னை இணைத்துக் கொள்ள வேண்டுமா?''3


ஜப்பானின் தாக்குதல் வேகத்தைக் கண்டு காலனிய ஆங்கிலேய அரசாங்கமும் பீதியுற்று, அசாமையும் வங்காளத்தையும் கை கழுவியது. அதற்கு முன் அந்தப் பகுதிகளில் எதிரிப்படைகளுக்குப் பயன்படலாம் எனக் கருதப்படுகின்ற கட்டிடங்களை இடித்துத் தள்ளுதல், பயிர்களை எரித்தல் ஆகியவற்றை — நிலத் தீய்ப்புக் கொள்கையை (குஞிணிணூஞிடஞுஞீ ஞுச்ணூtட ணீணிடூடிஞிதூ) ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கையாண்டது. பீகாரில் புதிய தற்காப்பு அரண்களைக் கட்டியது. இவையெல்லாம் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளிடையே பீதியை உருவாக்கிற்று.


நிலைமையைக் கணிப்பதிலும் செயல்படுவதிலும் காங்கிரசிற்குள் மூ­ன்று பிரிவினர் தோன்றினர். ஜப்பானிய முகாம் வெற்றி பெற்று இந்தியாவைக் கைப்பற்றும் என உறுதியாக காந்தி நம்பினார். எனவே, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி ஜப்பானியரோடு தாங்கள் கூட்டு வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டுமென்று விரும்பினார். நேரு, ராஜாஜி, ஆசாத் ஆகியோர் ஆங்கிலேய ஏகாதிபத்திய முகாமே உலக யுத்தத்தில் இறுதி வெற்றி பெறும் என நம்பினார்கள். எனவே, தொடர்ந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்று வாதாடினர். சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஒரு பிரிவினர் பாசிச ஜெர்மனி ஜப்பான் முகாமை நேரடியாக ஆதரித்துப் படைதிரட்டிக் கொண்டு களத்திலேயே இறங்கினர்.


1940இல் இட்லரிடம் ஹாலந்து சரணடைந்ததிலிருந்து காந்தியின் பார்வையில் இட்லரின் நிலை "சீராக உயர்ந்து கொண்டிருப்பதாகவும்'' யுத்தத்தில் இங்கிலாந்து தோற்றுவிடும் என்று காந்தி நம்புவதாகவும்4 ஜி.டி. பிர்லாவிடம் காந்தியின் செயலாளர் மகாதேவ் தேசாய் தெரிவித்தார். 1940ஆம் ஆண்டு மே 26இல் வைசிராய் லின்லித் கௌவுக்கு காந்தி எழுதிய கடிதத்தில், "சமாதானத்தை நாடுமாறு'' ஆங்கிலேய அமைச்சரவைக்கு ஆலோசனை கூறினார். மேலும் அக்கடிதத்தில், "சித்தரிக்கப்படுவதைப் போல இட்லர் அவ்வளவு மோசமான மனிதராக இருப்பார் என்று நான் நம்பவில்லை'' என்றும் குறிப்பிட்டார். மேலும் இங்கிலாந்து மக்களை, "நீங்கள் எல்லோரும் உங்களையோ, மானுடத்தையோ காப்பாற்ற முடியாத உங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட வேண்டும். போராடுவதற்குப் பதில் திருவாளர் இட்லரையும் சீமான் முசோலினியையும் வரவேற்று உங்களுடைய நாடுகள் என்று சொந்தம் கொண்டாடும் பகுதிகளில் அவர்களுக்கு எது வேண்டுமா அதை எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்''5 என்று வற்புறுத்தி காந்தி வேண்டுகோள் விடுத்தார்.


ஆங்கிலேயர்களிடம் காந்திக்கு இருந்த முந்தைய அனுதாபம் நாஜிப் படைகளுக்கு அமைதியாகக் காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களிடம் ஆங்கிலேயர்கள் சரணடைவதே சிறந்தது என அறிவுறுத்துவதாகவும் உருமாற்றம் அடைந்தது. 1942 ஏப்ரலில் காந்தி, "தாம் முன்பு இங்கிலாந்திற்கு முற்றிலும் கொடுத்து வந்த தார்மீக ஆதரவை இப்போது கொடுக்க மனம் மறுக்கிறது.''6 என்று கூறினார். ஆம், "மகாத்மா'வின் "அந்தரங்கக் குரல்' இப்போது முற்றிலும் வேறுபட்ட பாதையை மேற்கொள்ளக் கட்டளையிட்டது. எனவே, ஆங்கிலேய அரசுப் பிரதிநிதி கிரிப்ஸ் திரும்பிச் சென்ற பிறகு காந்தி, காங்கிரசின் காரியக் கமிட்டிக்கும் அகில இந்திய காங்கிரசு கமிட்டிக்கும் நகல் தீர்மானம் ஒன்றை, ஏப்ரல் 27 தொடங்கி நிகழவிருந்த அலகாபாத் மாநாட்டிற்கு ஏற்றுக் கொள்ள அனுப்பினார். அத்தீர்மானத்தில் அவர் பின்வருமாறு கூறியிருந்தார்:


"அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டி, இந்தியாவை இனியும் இங்கிலாந்தால் பாதுகாக்க முடியாது எனக் கருதுகிறது... ஜப்பானின் சண்டை இந்தியாவுடனானது அல்ல... இந்தியா விடுதலை அடையுமானால் அதன் முதல் நடவடிக்கை ஜப்பானுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக இருக்கும். இக்கமிட்டி ஜப்பானிய அரசு மற்றும் மக்களுக்கு இந்தியா அவர்களுடனோ வேறெந்த நாட்டுடனோ எவ்விதப் பகைமையும் கொண்டிருக்கவில்லை என உறுதியளிக்கிறது.''7


வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், கிருபளானி போன்றோரால் ஆதரிக்கப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தை நேரு பின்வருமாறு விமரிசித்தார்: "நாம் பாபுவின் (காந்தியின் மொர்) அணுகுமுறையை ஏற்போமாகில், அச்சு நாடுகளின் மறைமுகக் கூட்டாளிகளாகி விடுவோம். இத்தீர்மானத்தின் முழுச் சிந்தனையோட்டமும் பின்னணியும் ஜப்பானுக்குச் சாதகமாக இருக்கிறது. ஜப்பானும் ஜெர்மனியும் போரில் வெல்லும் என்று காந்தி நம்புகிறார். இந்த நம்பிக்கை அவரது முடிவை அவரையும் அறியாமலேயே ஆளுமை செய்கிறது.''


ராஜேந்திர பிரசாத்தால் திருத்தப்பட்ட காந்தியின் நகல் தீர்மானத்தைப் பற்றி கருத்து கூறும்போது ராஜகோபாலாச்சாரி, "ஜப்பான் ஆங்கிலேயரின் வெளியேற்றத்தால் உருவாக்கப்படும் வெற்றிடத்தை நிரப்பும்... இத்தீர்மானம் சொல்வது போல் ஜப்பானின் கரங்களில் ஓடி விழுந்து விடக் கூடாது.''8


காந்தியோ மிகவும் அவசரப்பட்டார். மே 1942ல் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டி ஒன்றில் காந்தி கூறினார்: "இந்த ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட, கட்டுப்பாடான அராஜகம் (அதாவது ஆங்கிலேய ஆட்சி) ஒழிய வேண்டும். இதன் விளைவாக முற்றிலும் சட்டம் ஒழுங்கு சீர்குலையுமானாலும் அதை நான் எதிர்கொள்வேன்''. மேலும் 1942 ஜூன் 7ஆம் தேதியிட்ட "அரிஜன்' ஏட்டில் "அடிமை ஓட்டுனர்களை எதிருங்கள்'' என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். 1942 மே 28இல் ராஷ்ட்ரிய யுவக் சங் எனும் அமைப்பினுடைய உறுப்பினர்களிடம், "இந்த அடிமைத்தனத்தின் பேரழிவிலிருந்து விடுவித்துக் கொள்ள நாம் வன்முறையைக் கூட ஏற்கலாம்''9 என்றார் காந்தி.

 

இவ்வாறு காந்தி, படேல், பிரசாத் ஆகியோர் ஜப்பானியப் படைகளின் வெற்றியை ஆவலுடன் எதிர்நோக்கி ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு வெளியேறி அதன் ­மூலம் தாங்கள் ஜப்பானுடன் ஒப்பந்தத்திற்கு வர இங்கிலாந்தை நெருக்கியபோது, நேருவும் ஆசாத்தும் நேசப்படைகள் (அமெரிக்கா இங்கிலாந்து பிரான்சு முகாம்) இறுதி வெற்றியடையும் என உறுதியாக நம்பினர். நேரு சியாங்கே ஷேக்குடனும் அமெரிக்காவுடனும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொண்டார். ஆங்கிலேய ஆதிக்கமே தொடர வேண்டும் இந்தியா சுதந்திரம் பெற வேண்டுமென்பதல்ல என்ற நேருவின் கருத்தை ஆதரித்தார் ராஜாஜி. முசுலீம் லீகுடன் அவர்களின் தனிநாடு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதன் அடிப்படையில் இணைந்து, ஆங்கிலேய ஆட்சிக் குடையின் கீழ் ஒரு "தேசிய அரசாங்கத்தை'' நிறுவி ஜப்பானை எதிர்க்க வேண்டுமென்று வாதாடினார்.


காங்கிரசின் மேல்மட்டத் தலைமையில் ஏற்பட்ட இந்தப் பிளவு இந்தியத் தரகுப் பெரு முதலாளிகளின் முரண்பட்ட விருப்பங்களையே பிரதிபலித்தது. லால் சந்த், ஹீராசந்த் போன்றபல குஜராத்தி, மார்வாரி மில் முதலாளிகள் ஜப்பானிய எஜமானர்களை வரவேற்கக் காத்திருந்தபோது மற்றொரு பிரிவு, ஆங்கிலேய ஆதரவுக் குழுவாகவே நீடித்தது. ­மூன்றாவதாக ஒரு பிரிவு உயர்ந்து கொண்டிருந்த அமெரிக்காவுடன் இணைந்து கொள்ள முன்வந்தது. ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கும் இந்தியத் தரகுப் பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கும் பிறந்த கள்ளக் குழந்தையான காங்கிரசுக் கட்சி, இந்தியாவின் சுதந்திரத்திற்கு என்றுமே பாடுபட்டதில்லை. மாறாக, தரகுப் பெரு முதலாளிகள் நிலப்பிரபுக்களின் அரசியல் பிரதிநிதியான காங்கிரசு, சுதந்திர வேட்கையால் தன்னெழுச்சியாகப் போராடிய இந்திய மக்களின் தீரமிக்க போராட்டங்களைக் காட்டிக் கொடுத்தது; துரோகமிழைத்தது. மக்களுடைய போராட்டங்களைத் திசை திருப்பி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குக் கேடயமாக விளங்கியது. காலனிய ஆட்சியைப் புதிய அடித்தளங்களில் தக்க வைக்கும் கருவியாகச் செயல்பட்டது. இதுவரை ஒரே முகாமாக இருந்த காங்கிரசில்தான், ஜப்பானின் படுவேகமான முன்னேற்றம் மேற்சொன்ன பிரிவுகளைக் கொண்டு வந்தது.


இந்தப் பிரிவினர் கொண்டிருந்த கருத்து வேறுபாடெல்லாம் எந்த ஏகாதிபத்திய முகாம் வெற்றி பெறும் என்ற கணிப்பில்தான். ஆனால் வெற்றி பெறும் முகாமிற்கு இந்தியா அடிமையாக இருக்க வேண்டுமென்பதில் கருத்து ஒற்றுமையிருந்தது.
"வெள்ளையனே வெளியேறு' என்று காந்தியும் காங்கிரசும் அறைகூவல் விடுத்ததன் பின்னணி இதுவே. எதிர்ப்பு தெரிவித்த நேரு, ஆசாத் ஆகியோரை காங்கிரசின் பொறுப்புகளிலிருந்து ராஜினாமா செய்யச் சொல்லி மிரட்டியும் பிறவாறு உருட்டியும் காந்தி தனது தீர்மானத்தை ஏற்குமாறு செய்தார். ஓர் எதேச்சதிகாரியாகவே நடந்து கொண்டார். இப்படித்தான் ஏகமனதாக, "வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் பம்பாயில் நடந்த காங்கிரசுக் கமிட்டிக் கூட்டத்தில் 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி நிறைவேறியது.


ஒரு பக்கம் ஜப்பானிய புது எஜமானர்களுக்குச் சேவை செய்யக் காத்திருக்கிறோம் என்று நிரூபிக்க "செய் அல்லது செய்துமடி' என்று தீவிரமாக காந்தி அறைகூவல் விட்டாலும் இன்னொரு பக்கம் மக்களின் போராட்டங்கள் தனது கையை விட்டுப் போய்விடக் கூடாது என்பதிலும் குறிப்பாக இருந்தார். எனவேதான் போராட்டத்திற்கு எவ்விதத் தயாரிப்போ, திட்டமோ தீட்டப்படவில்லை. பேச்சு வார்த்தை நடத்துவதே நோக்கம் என்று சொல்லப்பட்டது.


1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி காந்தி வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் "நான் பெரும் நடவடிக்கைகளைத் தொடங்கும் வரையாவது இந்திய அரசாங்கம் காத்திருக்க வேண்டும். உருப்படியான ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் முன் உங்களுக்கு ஒரு கடிதம் அனுப்ப பூரணமாகச் சிந்திப்பதாய் நான் வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டார். போராட்டம் தொடங்கும் முன், பிரச்சினை எழுவதற்கு முன், முதல் நடவடிக்கையாக வைசிராய்க்குப் பேச்சுவார்த்தை வேண்டி எழுதப்படும் என்று காங்கிரசால் விளக்கம் தரப்பட்டது. காங்கிரசுக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வைசிராய்க்குக் கடிதம் எழுதத் தொடங்கினார்கள். முடிக்கும் முன்பே ஆகஸ்ட் 9ம் தேதி காந்தி உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். காங்கிரசு சட்ட விரோதமான ஸ்தாபனம் என அறிவிக்கப்பட்டது. "ஒரு வாரத்தில் வெற்றி' என்று படேல் சவடால் அடித்தார்.


காங்கிரசுத் தலைவர்களின் கைது மக்களது போராட்டங்களைத் தூண்டிவிடும் என ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குத் தெரியும். எனினும், காங்கிரசுத் தலைவர்கள் எவ்வித முன் தயாரிப்பும் செய்யாததால் தன்னெழுச்சியான திட்டமிடாத போராட்டங்களைச் சுலபமாக அடக்கி விடலாம் என ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கருதியது.


ஆனால் இந்திய மக்களோ, காந்தியின் நயவஞ்சக விருப்பத்தை மீறி, ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடினார்கள். காந்தியின் உபதேசங்களை மீறியும் அவருடைய கண்டனங்களைப் புறக்கணித்தும் மக்கள் நாடெங்கும் வன்முறைக் கிளர்ச்சிகளைத் தொடங்கினர். இந்தியாவெங்கும் கொந்தளிப்பு; குழப்பம்; தனிப்பட்ட பிரிவுகளும், குழுக்களுமே இப்போராட்டங்களை நடத்தின.


இதுதான் "புகழ்பெற்ற' ஆகஸ்ட் போராட்டம்; இந்தப் போராட்டத்தை காங்கிரசு ஆரம்பிக்கவில்லை; மாறாக, இந்தியாவின் உழைக்கும் மக்கள் இப்போராட்டத்தினை நடத்தினர்; காந்தியும் காங்கிரசும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தவே செயல்பட்டனர். ஆனால் இன்றோ, ஆகஸ்ட் தியாகிகள் என வெட்கமின்றி காங்கிரசுக்காரர்கள் பீற்றிக் கொள்கிறார்கள். இந்தியாவை புதிய எஜமானனுக்கு (ஜப்பானுக்கு) அடகு வைக்க "வெள்ளையனே வெளியேறு' தீர்மானம் போட்ட காந்தியும் காங்கிரசுக்காரர்களும் இன்று ஏகாதிபத்திய எதிர்ப்பு சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் காட்டிக் கொள்வது கயமைத்தனத்தின் உச்சமாகும்!


194344ம் ஆண்டுகளில் யுத்தத்தின் போக்கு மாறியது; உலக அளவில் ஜெர்மனி ஜப்பான் பாசிச முகாம் வீழ்ச்சியடையத் தொடங்கியது; இங்கிலாந்து பிரான்சு முகாம் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தது; ஜெர்மனி ஜப்பான் முகாமினுடைய வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று தெள்ளத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. பார்த்தார் காந்தி! அடித்தார் ஒரு "அந்தர்' பல்டி! அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்ட கதையாகிவிடப் போகிறதே என்று ஆங்கிலேய ஏகாதிபத்தியத் திற்கு மீண்டும் தன் எஜமான விசுவாசத்தைக் காட்ட வாலை ஆட்டினார். நடந்த போராட்டங்களுக்குத் தான் பொறுப்பல்ல என்று வலியச் சொல்ல ஆரம்பித்தார். 1943ஆம் ஆண்டு ஜூலை 15ம் தேதி உள்துறைக்கு காந்தி எழுதிய கடிதத்தில், "மொத்தமாகப் பெருமளவில் காங்கிரசுத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் தங்களை அடக்கிக் கொள்ளும் ஆற்றலை இழக்கும் அளவிற்கு மக்கள் சினத்தால் வெறிகொண்டு விட்டதாய்த் தோன்றுகிறது. நடந்துள்ள நாசத்திற்கு காங்கிரசு பொறுப்பல்ல; அரசாங்கமே பொறுப்பு என்று நான் கருதுகிறேன்.''


"இந்தியா முழுவதும் கைதுகள் செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கை மிக வன்முறையாக இருந்ததால், காங்கிரசிடம் பரிவு உள்ள மக்கள் தன்னடக்கத்தை இழந்து விட்டார்கள். இந்தத் தன்னடக்க இழப்பிற்கு காங்கிரசு உடந்தை என்று பொருளாகி விடாது'' என்று தெரிவித்தார்.


1942 ஆகஸ்ட் 7,8 தேதிகளில் நடந்த அகில இந்திய காங்கிரசுக் கமிட்டி கூட்டில் காங்கிரசுக்காரர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்புவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அது முழுமையாக வரையப்படாது நின்றுவிட்டது. 1943 ஜூலை 15ல் காந்தியார் இந்த வரையப்படாத சுற்றறிக்கையைத் தயக்கத்துடன் மேற்கோள் காட்டினார்; அதில் பின்வருமாறு இருந்தது.


"மகாத்மா முடிவு செய்யும் வரை எந்த இயக்கமும் முடிவு செய்யக்கூடாது; எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது. இறுதியாக அவர் வேறுவிதமாக முடிவு செய்யலாம். ஒரு பெரிய அனுமதி பெறாத தவறுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆவீர்கள். ஆயத்தமாக இருங்கள்; ஏற்பாடு செய்யுங்கள்; விழிப்போடு இருங்கள்; ஆனால் எவ்விதத்திலும் செயல்படாதீர்கள்''.


காங்கிரசின் சார்பில் நேரு, வல்லபாய் படேல், ந.பி.பந்த் ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட ஓர் அதிகாரபூர்வமான அறிக்கை 1945, செப்டம்பர் 21ல் வெளியாயிற்று. அதில், "அகில இந்தியக் காங்கிரசு கமிட்டியாலோ காந்தியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படவில்லை'' எனத் தெரிவித்திருந்தனர்.


இவ்வாறு, ஆகஸ்டில் நடந்த போராட்டங்களுக்கும் காங்கிரசிற்கும் கிஞ்சித்தும் தொடர்பில்லை எனக் காலனியாதிக்கவாதிகளிடம் தன்னை நல்ல பிள்ளை போல காட்டிக் கொண்ட காங்கிரசு, ஆகஸ்டு மாதத்திலும் அதை அடுத்த மாதங்களிலும் நடைபெற்ற தலைமையற்ற தன்னெழுச்சியான நிகழ்ச்சிகளைப் பின்னாளில் "ஆகஸ்டு போராட்டம்' என ஏற்பதென்று முடிவு செய்தது. அதாவது, காந்தியின் கண்டனங்களைப் புறக்கணித்து விட்டு மக்கள் நடத்திய போராட்டங்களையே காந்தியும் காங்கிரசும் நடத்திய "ஆகஸ்டு போராட்டம்' என சுவீகரித்துக் கொண்டனர்.


உண்மையான விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு, இந்திய உழைக்கும் மக்கள் எண்ணற்ற தியாகங்கள் செய்து நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்களைக் கண்டனம் செய்த காந்தியும் காங்கிரசும், பின்னர் அந்தப் போராட்டங்களையே காங்கிரசின் தியாகமாக, விடுதலைப் போராட்டமாகச் சித்தரித்துச் சுவீகரித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வக்கிரம்! வரலாற்றுப் புரட்டு!


உண்மையில் வெள்ளையனை இந்த நாட்டைவிட்டு விரட்டுவதுதான் காந்தியின் நோக்கமென்றால், சிறையிலிருந்து 1944ஆம் ஆண்டு காந்தியார் வெளிவந்தபின் "வெள்ளையனே வெளியேறு'' போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் காந்தியாரோ "ஆகஸ்ட் தீர்மானம் தானாகவே ரத்தாகிவிட்டது'' என்று சொன்னார். ஏனென்றால், "1944ஆம் ஆண்டில் 1942ஆம் ஆண்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது'' என்று விளக்கெண்ணெய் விளக்கமளித்தார்.


எனவே, போர் முடியும் தறுவாயில் (ஆகஸ்ட் 1945) உலகெங்கும் மக்கள் விடுதலையை நோக்கி முன்னேறிய போது காந்தியாரின் துரோகத்தனத்தால் இந்தியா போரின் தொடக்கத்தில் இருந்தது போல் ஓர் அடிமை நாடாகவே போரிலிருந்து வெளிப்பட்டது.


தனது புதிய எஜமானர்களான ஜெர்மனி, ஜப்பான் ஏகாதிபத்தியங்களை வரவேற்கவே "வெள்ளையனே வெளியேறு' என்று காந்தி சொன்னார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியோ எவ்வித நிபந்தனையும் இன்றி ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்குப் பக்கபலமாக நின்று போருக்கான உதவிகளைச் செய்தது; யுத்த நிதி திரட்டிக் கொடுத்தது; படைக்கு ஆட்களைச் சேர்த்தது; வேலை நிறுத்தம் செய்ய வேண்டாம் என்றும் உற்பத்தியைப் பெருக்கச் சொல்லியும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.


இவ்வாறு காந்தியைப் போலவே இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும் மக்களுக்குத் துரோகமிழைத்தது. ஆனால் காங்கிரசுக்காரர்களோ தாங்கள் "24 காரட்' சுத்த தேச பக்தர்கள் என்றும் கம்யூனிஸ்டுகள்தான் துரோகிகள் என்றும் நேற்றுவரை பிரச்சாரம் செய்து வந்தனர். இன்று காங்கிரசும் வலது இடது போலி கம்யூனிஸ்டுகளும் சேர்ந்து "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் பொன் விழா கொண்டாடுகிறார்கள். ஆக, தங்களைத் தேசத்துரோகிகள் என்று காங்கிரசு சொல்லி வந்ததை இரு போலி கம்யூனிஸ்டுகளும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நேற்றுவரை துரோகிகளாய் இருந்த கம்யூனிஸ்டுகள் இன்று திடீரெனத் தேச பக்தர்களாக மாறிவிட்டார்கள் என்று காங்கிரசு சொல்கிறது.


இதுதான் காங்கிரசின் "தேசிய' கலாச்சாரம்!
இதுதான் போலிக் கம்யூனிஸ்டுகளின் "புரட்சி'க் கலாச்சாரம்!
புரிந்து கொள்வோம் இவர்களை!
புறந்தள்ளுவோம் இவர்களை!



அடிக்குறிப்புகள்:
1. அரிஜன், செப்.9,1939
2. பி. பட்டாபி சீதாராமையா இந்திய தேசியக் காங்கிரசின் வரலாறு, பக்கம் 278
3. þ, பக். 283
4. பிர்லா "மகாத்மாவின் நிழலில்' பக்கம் 273, அபுல்கலாம் ஆசாத், "இந்தியா சுதந்திரம் அடைகிறது'; பம்பாய், 1959, பக்கம் 72; ராஜேந்திர பிரசாத் சுயசரிதை, பம்பாய் 1959, பக்கம் 531; நேரு டிஸ்கவரி ஆஃப் இந்தியா, பக்கம் 481.
5. þ, பக்கங்கள் 100, 214,215,230
6. சீதாராமையா மேற்குறிப்பிட்ட புத்தகம், பக்கம் 334.
7. "அதிகார மாற்றம்' பகுதி ஐஐ , பக்கம் 63, 6670; இந்திய அரசாங்கம் "1942 43 போராட்டங்களுக்குக் காங்கிரசின் பொறுப்பு'', டெல்லி, 1943, பக்கம் 4648.
8. þ, பக்கம் 129132.
9. மகாத்மா காந்தி தொகுப்பு நூல். பகுதி 76, பக்கம் 155, குறிப்பு 3, பக்கம் 160.
(ரஜினி பாமிதத் என்பவர் எழுதிய "இன்றைய இந்தியா' என்ற நூலையும், சுனிதி குமார் கோஷ் எழுதிய "இந்தியப் பெரு முதலாளிகள்' என்ற நூலையும் அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதில் வரும் பிற மேற்கோள்கள் அந்நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டவையே).
1988 ஆகஸ்டு 1631, புதிய ஜனநாயகம் இதழில்
(ஆண்டு 3, இதழ் எண் 19) வெளியான கட்டுரை