Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் தீவிரவாதமும் ஒத்துழையாமையும்

தீவிரவாதமும் ஒத்துழையாமையும்

  • PDF

ஏகாதிபத்தியமும் அதன் கைக்கூலி காங்கிரசும் எவ்வளவுதான் கபடத்தனமாகச் செயல்பட்ட போதும் மக்களின் உணர்வுகள் போராட்டங்களிலேயே கிளர்ந்தெழுந்தன. புரட்சிகரமான மக்கள் போராட்டங்கள் நாடு முழுதும் பேரலையாய் எழுந்தன. பம்பாய், சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களில் தொழிலாளர் போராட்டங்களும், பஞ்சாப், உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் படித்த அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்கள் அடங்கிய புரட்சிகரக் குழுக்களும் தோன்றின. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் "கேதார்' கட்சி என்ற வன்முறைப் பாதையில் நம்பிக்கைக் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சியை அமைத்து விடுதலையை நோக்கமாகக் கொண்டனர். 1913ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ என்ற அமெரிக்க நகரில் அமைக்கப்பட்ட கேதார் கட்சி, "கேதார்' (புரட்சி) என்ற உருதுப் பத்திரிக்கையை அச்சடித்துப் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பியது. அப்பத்திரிக்கையின் இதழ் ஒன்று ஒருமுறை இவ்வாறு விளம்பரப்படுத்தியது:


தேவை : புரட்சி செய்ய விருப்பமுள்ள இளைஞர்கள்
ஊதியம் : மரணம்
பரிசு : வீரத்தியாகி என்ற பட்டம்
பென்ஷன் : இந்திய விடுதலை
பணியாற்றும் இடம் : இந்தியா


இந்தப் பத்திரிக்கை வெளிநாடுகளில் வாழும் இந்தியரை நாட்டின் விடுதலைக்குப் பணியாற்றும் வகையில் புரட்சிகர உணர்வைத் தட்டி எழுப்பியது.


நாட்டு விடுதலை மீது மாளாக் காதல் கொண்ட புரட்சிகர இளைஞர்கள் மத்தியில் 1917ஆம் ஆண்டு ரசியப் புரட்சியைத் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வேகமாகப் பரவியது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாடு முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் தொழிலாளர்களும் புரட்சிகர வன்முறையை நோக்கித் திரும்புவதைக் கண்ட காங்கிரசிற்குத் தன்னுடைய செயல்முறையைச் சிறிது மாற்றியமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ராஜீவ் குறிப்பிட்டதைப் போல, "புதிய எண்ணங்களும் புதிய பார்வைகளும் சங்கமமாகி'' அகிம்சை, ஒத்துழையாமை என்ற அட்டைக் கத்திப் போராட்டங்களை மக்கள் முன் வைத்தது.


மக்களின் போராட்டத்தைத் திசை திருப்ப ஒத்துழையாமை இயக்கம் ஆரம்பித்த காந்தி அதற்கான காரணமாகக் கூறுவதைக் கேளுங்கள்:


"மனுப் போடுவது போன்றவற்றால் வளரும் தலைமுறை திருப்தியடையாது என நினைக்கிறேன்... புயல் வருவதைத் தடுத்து நிறுத்த ஒத்துழையாமைதான் ஒரே வழி என்று எனக்குத் தெரிகிறது.''


காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்ததற்கான காரணத்தைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?


அதுசரி; ஒத்துழையாமை இயக்கம் என்பது என்ன? காந்தி மேலும் கூறுகிறார்: "1919ஆம் வருடம் வரை கண் மூ­டித்தனமாக நான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்குச் சேவை செய்தேன். பிறகே கண்திறந்தது. அதன் பயனாக ஒத்துழையாமை இயக்கத்தைத் தோற்றுவித்தேன். அதுவே சிறந்த ஆயுதமென இன்னமும் கருதியிருக்கிறேன். நாட்டு மக்கள் என்னோடு சேர்ந்து உழைத்தால், பிரிட்டிஷாரால் சுமத்தப் படக்கூடிய இன்னல்களைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால், கல் நெஞ்சையும் கரைத்துவிடலாமென நான் உறுதி கூறமுடியும்.'' (காந்தி வைசிராய்க்கு எழுதிய கடிதம், மார்ச்2, 1930)


பிரிட்டிஷாரின் கல்நெஞ்சைக் கரைக்க காந்தியார் முன் வைத்த ஒத்துழையாமைத் திட்டங்கள் என்ன? பிரிட்டிஷார் கொடுத்த பட்டங்களைத் துறப்பது; சட்டமன்றங்களையும், நீதிமன்றங்களையும், கல்வி நிறுவனங்களையும் துறப்பது; மதுவிலக்கு, ராட்டை சுற்றுவது, பிரார்த்தனை செய்வது ஆகியவைகளே. இந்த இயக்கம் காந்தியால் தீர்மானிக்கப்படும் ஒரு "நல்ல நாளி'ல் வரி கொடுப்பதில்லை என்ற நடைமுறையில் போய் முடியும். சொல்லிலும் செயலிலும் இது வன்முறை இல்லாமல் இருக்க வேண்டும்.