Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel

எது கவிதை?

  • PDF

வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை? விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறுங்கையால் இயற்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கிய காலம் முதல் தாம் வாழ்வதற்கான புதியவகை சாதனங்களை மட்டுமல்ல, புதியவகை உணர்ச்சிகளையும் படைத்தே வந்திருக்கிறது. படைப்புரீதியான இவ்வகை உழைப்புப் போக்கின் மூலம் சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதே அறிவியல், கலைக்கான ஆளுமைமிக்க வரலாற்றுப் பாத்திரமாகும்.

 

அவ்வகை மனித முயற்சி, நாகரிகம் எதுவுமின்றி "தான் எப்படியாவது பேசப்பட வேண்டும், பார்க்கப்பட வேண்டும்'' என்பதற்காக சமூகத்தின் சரிபாதியான பெண்களின் இடுப்பைக் கிள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள் சில கோடம்பாக்கத்து போக்கிரிகள். காரணம் கேட்டால் இவர்கள் கவிஞர்களாம்! சுற்றிலும் நம் காற்று மண்டலத்தில் கலந்திருக்கும் சாதி தீண்டாமை அநீதிகள், ஒன்று சேர்ந்து வாழ்வதுபோல் நடிக்கும் இல்லறத்தின் புதிர்கள் இன்னும்பல சமூகக் கொடுமைகள் இவைகளை விண்டு பார்த்து விடைதேட முயன்று பாருங்கள். உங்கள் படைப்புக்கான ஆளுமை அங்கே காத்திருக்கிறது. கூட்டுத்துவ உழைப்பினால் வளர்ந்துவந்த சமூகத்தின் வரலாற்றை உணர்ந்து பாருங்கள், ""தான்'' என்ற அறியாமை வெட்கி விலகும். உயிர்த்துடிப்பான உழைக்கும் மக்களின் ஒருநாள் வாழ்க்கைப் போராட்டத்தை உற்றுப் பாருங்கள், நாம் மனிதர்களாகி விடுவோம். ""லூசுப்பையன்கள்'' திரியும் கோடம்பாக்கத்து ஒட்டுண்ணி இலக்கைவிட்டு வெளியே வாருங்கள். உணர்ச்சியுடனும் சுரணையுடனும் உழைக்கும் மக்கள் திரளினரால் படைக்கப்படும் புதிய சமூகத்திற்கான போராட்ட உணர்ச்சியில் கலந்து பாருங்கள். நாமும் கவிஞர்களாகி விடுவோம்.

 

அரசியலால் கலைத்தன்மை போய்விடும் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டே ஆளும் வர்க்க அரசியலை நத்திப்பிழைக்கும் இலக்கிய வட்டங்களைத் தாண்டி பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான அரசியலமைப்போடு ஒன்று சேர்ந்து பாருங்கள்! ஒரு புதிய சமூகத்தையே கவிதையாய் வடிக்கும் பேரார்வம் அங்கே உங்களுக்காகக் காத்து நிற்கிறது.