Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம்!?

அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம்!?

  • PDF

இந்த மர்க்சிய விரோத நிறப்பிரிகை வாதிடும் அடுத்த விடையத்தைப் பார்ப்போம். "..... நாம் ஒரு புதிய தமிழ் மரபை கற்பிதம் செய்தாக வேண்டி இருக்கிறது. அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவங்களையும், தலைமை வழிபாடல்லாத இயக்கச் செயல் பாடுகளையும் நாம் யோசிக்க வேண்டி இருக்கிறது." என்று புலம்பும் தமிழ் தேசிய விரோத ஏகாதிபத்திய சார்பு நிலையைப் பார்ப்போம்.


புதிய தமிழ் மரபை கற்பிதம் செய்ய வேண்டும் என்பதன் மூலம் தமிழ் மரபு ஒன்று உள்ளதை மறுக்கின்றனர். "புதிய" என்ற சொற்பதம் ஒரு மயக்கத்தைக் கொடுத்து விடுவதன் மூலம் ஏதோ சரியானதைத் தேடிப் புறப்படுவதாக சினிமா காட்டுவதன் மூலம், அடிப்படை தமிழ் இயங்கியல் மரபை மறுப்பதில் ஈடுபடுகின்றனர். அதாவது இது இனத்தின் இயங்கியல் வரலாற்றுத் தொடர்ச்சியை மறுத்து, "புதியமரபு" என்பதன் ஊடாக அடிப்படையில் தமிழ் மரபே இல்லை என்று மறைமுகமாகக் கூறி, தமிழ் இனத்துக்கு அதன் தேசியத் தன்மைக்கு எதிராகச் செயல்படுவதாகும்.


அடுத்து அதிகாரத்தை உருவாக்காத புதிய அமைப்பு வடிவம் என்பது, இங்கு அதிகாரம் என்பதை இருக்கும் உற்பத்தி மீதான வர்க்கப் போராட்டத்தை ஒட்டி அமையும் வடிவத்தின் முதலாளித்துவ ஜனநாயகமற்ற தன்மைகளைக் குறித்து இந்த மார்க்சிய விரோதிகள் கூறவில்லை. மாறாக இதில் சொல்விளையாட்டை காட்டியபடி பாட்டாளி வர்க்க தலைமை பற்றித்தான் கூறுகின்றனர். அதாவது முதலாளித்துவத்தைத் தகர்த்து அதில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்துவத்தை கைப்பற்றுவதையே "அதிகாரம்" எனக் கூறி மறுப்பதன் மூலம் உண்மையில் இருக்கும் ஏகாதிபத்திய ஆட்சி முறைகளை தக்க வைக்க முனைகின்றனர்.


அதிகாரம் என்பது இரண்டு வர்க்கத்திற்கு இடையானது, அராஜகத்தை ஏற்கும் அராஜக வாதிகள், அதிகாரத்தை மறுத்தல் என்ற பெயரால் உள்ள ஏகாதிபத்திய சார்பு மார்க்சிய விரோதிகள் சரி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உண்மையில் மறுக்கின்றனர்.


பாட்டாளி வர்க்க சர்வாதிகார புரட்சிகர அதிகார மாற்றத்தை மறுக்கும் நிறப்பிரிகை, உண்மையில் மக்கள் மீதிருக்கும் வர்க்க சர்வாதிகார ஒழுங்குகள் இனியும் ஆள முடியாத போது, கட்டவிழ்த்து விடும் பாசிச சதிராட்ட வன்முறைத் தாக்குதலை கண்டு மக்கள் மிரள்வதை, தமக்கு சாதகமாக சாதாரண மக்கள் நிலையில் நின்று சுட்டிக் காட்டி, அதையே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கொச்சைப்படுத்தப் பயன்படுத்தி ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக இருக்க சபதம் செய்கின்றனர்.


ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தேசவிடுதலைப் போரில் சரி பாட்டாளி வர்க்க போரில் சரி பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சிக்காக சர்வதேசிய வாதியாக நின்று போராடும் அதேநேரம், பாட்டாளி வர்க்க முன்னேறிய அனுபவம் வாய்ந்த தலைவர்களை பாட்டாளி வர்க்கம் தேடிக் கொள்கிறது.


வர்க்கத்தின் தலைவர்கள் அந்த வர்க்கப் போராட்டத்தில் புடம் போடப்பட்டு உருவாக்கப்படுவதும், அந்த வர்க்கம் தனது தலைமையை எந்தளவு நேசிக்கின்றதோ அந்தளவுக்கு அந்தத் தலைமை முக்கியத்துவமானதும், பாதுகாக்கப்பட வேண்டியதுமாகும். உண்மையில் மக்கள் தமது வர்க்கத் தலைமையை நேசிப்பதைத் தான் இந்த மார்க்சிய விரோத நிறப்பிரிகை "தலைமை வழிபாடு" என முத்திரை குத்தி அதற்கு சேறடிக்க முனைகின்றனர்.


வர்க்கத்தினதும், மக்களினதும் தலைமை எப்போது அவர்களை உள்ளடக்கி நடைமுறை, கோட்பாட்டுப் போராட்டத்துக்குள் இறக்கி அதில் போராடத் தவறுகின்றதோ, அப்போது தான் தலைமை வழிபாடு நேர்கின்றது. எனவே ஒரு வர்க்கம் தனது சொந்தப் போராட்டத்தின் ஊடாக தனது தலைமையைத் தேர்ந்து எடுக்கிறது, அத்துடன் ஆழமாகத் தலைமையைப் பாதுகாத்தும் நேசிக்கின்றது.


வர்க்கத் தலைமை உருவாவதும், வர்க்கம் தனது தலைமையை நேசிப்பதும் அவசியமான அடிப்படையானது. இந்த வகையில் மார்க்ஸ் முதல் பாட்டாளி வர்க்கத் தலைவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் நேசத்துக்கு உரியவர்களே ஒழிய உங்களைப் போன்ற மார்க்சிய விரோதிகளுக்கு அல்ல. நீங்கள் அது தான் தலைமை வழிபாடு எனப் புலம்பும் உங்கள் பின் உள்ளது உண்மையில் முதலாளித்துவ கண்ணோட்டம் கொண்ட சிந்தனை தான்.


ஒரு பாட்டாளி வர்க்கமல்லாத கட்சிகள் கூட தனது தலைமையை வர்க்கக் கண்ணோட்டத்துக்கு இசைவாகக் கொண்டுள்ளன. தலைமை என்பது வர்க்க சமுதாயத்தின் தவிர்க்க முடியாத அடிப்படை விடையமாக உள்ளது. அந்தத் தலைமை என்பது வர்க்கத்தின் பிரதி நிதிதானே ஒழிய வெளியில் அல்ல. அந்தோனிசாமி மார்க்ஸை உள்ளடக்கிய நிறப்பிரிகை கோட்பாடு தலைமை, பாட்டாளி வர்க்கத்தினது அல்ல. மாறாக பாட்டாளி அல்லாத வர்க்கத்தின் கோட்பாட்டுத் தலைமையாகவே உள்ளது.


எனவே அதிகாரம், தலைமை என்று வர்க்க சமுதாயத்தில் கூறி மறுப்பதன் மூலம் அடிப்படையில் இருக்கும் ஏகாதிபத்திய அதிகாரத் தலைமையை மறைமுகமாக தக்க வைத்து பாதுகாக்க முனைவது ஆகும். மாற்றுத் தலைமையை , அதிகாரத்தை முன்வைக்காத அமைப்பு என்பன நிறப்பிரிகையின் அரசியல், ஏகாதிபத்தியம் கொண்டுள்ள ஜனநாயக அரசியலே ஒழிய வேறு ஒன்று மல்ல.


அடுத்து அந்தோனிசாமி மார்க்ஸ் தொடர்ந்தும் கூறுவதைப் பார்ப்போம். "சேகுவராவின் பாணியில் கட்டமைக்கப்பட்ட இலத்தீன் அமெரிக்க புரட்சிகர இயக்கங்கள் அனைத்தும் பின்னாளில் சோசலிச உணர்வுகள் மறைக்கப்படும் அளவிற்கு தேசிய இன உணர்வுச் சொல்லாடல்களைக் கொண்டிருந்தன" என்று தனது தேசிய சார்புப் பார்வைக்கு ஆதாரம் தேடுகிறார்.


மார்க்சியத்தை சேறடிக்கப் புறப்பட்டு விட்டால் மார்க்சியத்தின் உயிர் ஓட்டமுள்ள அதன் உள்ளடக்கத்தைக் காண முடியாது போனதன் விளைவு தான் இந்த அ.மார்க்சின் புலம்பல். தென் அமெரிக்க நாடுகள் மட்டுமின்றி, மூன்றாம் உலக நாடுகள், இரண்டாம் உலக நாடுகள் கூட தனது வர்க்கப்போரில் தேசிய உள்ளாக்கத்தை அடிப்படையில் சர்வதேசிய நிலையில் கொண்டு இருக்கின்றன. வர்க்கப்போர் தனித்துவமாக உள்நாட்டு எதிரிக்கு மட்டும் நடத்துப்படுவதில்லை மாறாக எல்லா வர்க்கப் போரும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளன. இது சாராம்சத்தில் தேசிய விடுதலைப் போராக உள்ளது. ஏன் எனின் ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அனைத்துப்போரும் தேசிய விடுதலைப் போர் மட்டுமின்றி வர்க்கப்போருமாகும். இது சர்வதேசிய நிலையில் நின்று அணுகப்படுகின்றது. வேறுவழியில் இது சாத்தியம் இல்லை.


ஏகாதிபத்தியத்தை எதிர்க்காத ஒரு தேசிய விடுதலைப் போர் நடக்குமாயின் அது தேசியத் தன்மையை இழந்து படிப்படியாக ஏகாதிபத்தியத்திடம் சரணடைந்து விடுகின்றது.


எனவே இன்று மார்க்சியம் அதன் மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனை வழியில் எங்கு எல்லாம், யார் எல்லாம் முன்னெடுக்கின்றார்களோ, அங்கு எல்லாம் அது வர்க்கப்போராகவும் சாரம்சத்தில் தேசியப் போராகவும் இது பொதுவில் சர்வதேசிய வர்க்கப் போராகவும் இருக்கின்றது. இதற்கு வெளியில் ஒரு வர்க்கப் போரோ, தேசியப் போரோ மார்க்சியத்தைச் சொல்லி முன்னெடுக்க முடியாது.


முதலாம் உலகநாடுகளில் மட்டும் வர்க்கப்போர் தேசியம் இன்றி இருக்கமுடியும். ஆனால் இன்று தீவிரமாகும் தேசங்கடந்த பன்னாட்டு சூறையாடல் அங்கு கூட வரையறுக்கப்பட்ட தேசியத்தை பாதுகாக்கக் கோருகின்றது. இது சரியாக அடையாளப்படுத்தப்பட்டும், சொந்தத் தேசம் கடந்த சூறையாடலை எதிர்த்து வர்க்கப்போரை முன்னெடுக்கத் தவறின், அது பாசிசத் தேசியமாக ஆக்கிரமிப்புத் தேசியமாக வளரும். உதாரணமாக ஏகாதிபத்தியத்தில் உள்ள உற்பத்தி நிலையத்தை மூடி மூன்றாம் உலக மலிவுச் சுரண்டலுக்கு நகர்த்தும் போக்கில், மற்றும் விவசாய உற்பத்தியை நிறுத்தி மலிவாக மூன்றாம் உலக சந்தையில் வாங்கக் கோரும் உலக மயமாதல், டங்கல் ஒப்பந்தத்தையும் எதிர்த்து முதலாம் உலக நாட்டுச் தேசிய முதலாளிகள் தேசியத்தை உயர்த்துவதும், பிரிவினையைக் கோருவதும் ஏகாதிபத்தியத்தில் காணப்படும் பொதுப்பண்பு. இது சரியாக அடையாளப்படுத்தப்படுவதில் மட்டும் ஏகாதிபத்தியம் முதல் உலக நாடுகளின் வர்க்கத் தேசியம் அடங்கி உள்ளது. இங்கு தேசியம் முன்பே முடிபுக்கு வந்துவிட்டதால், எழும் தேசியப்போர் பாசிசமாக, உலகைப் பங்கிடுவதில் தான் மையமிடுகின்றது. இன்னுமொரு புறத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளுர் மிகப்பெரிய நிறுவனங்களின் சிறிய தேசிய முதலாளித்துவ உற்பத்தியை அழிக்கிறபோது எழும் போராட்டம், தேசிய தற்காப்பு போராட்டமாக உள்ளது.


உலகமயமாதல் தேசங் கடந்த உற்பத்தியைக் கோருகின்றது. இது மலிவு கூலி, இலகுவாக மலிவாக மூலதனத்தைத் திரட்டக் கூடிய இடம், போராட்டத்தை இலகுவாக நசுக்கக் கூடிய இடம், இயற்கைப் பாதுகாப்பை மீற வசதியான இடம் என பலவற்றைக் கொண்டு, முதலாம் உலக நாடுகளின் உற்பத்தியை மூன்றாம் உலக நாடுகளை நோக்கி நகர்த்த நிர்ப்பந்திக்கின்றன. இது முதலாம் உலக நாடுகளில் இருந்து தனது உற்பத்தியை மூன்றாம் உலக நாடுகளுக்கு நகர்த்துகின்றன. இதன் மூலம் முதலாம் உலக நாடுகளில் வேலை இன்மை அதிகரிக்க வைக்கும் அதேநேரம், மூன்றாம் உல நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் மலிவுப்பொருட்களை முதலாம் உலக நாடுகளில் விற்பதன் மூலம் தேசிய உற்பத்தியை சந்தைப்படுத்த முடியாத நெருக்கடி முதலாம் உலக நாடுகளில் ஏற்படுகின்றன. அதே நேரம் மூன்றாம் உலக நாடுகளில் இது ஏற்படுகின்றது.