Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சீன மக்களின் சொத்தை தனியார் கைப்பற்றல்

சீன மக்களின் சொத்தை தனியார் கைப்பற்றல்

  • PDF

 சீனாவில் இவை எதிர்மறையில் வறுமையைப் பன்மடங்காக்கு கின்றது. இது உள்ளூர் உற்பத்தியில் நடக்கும் மாற்றத்தில் இருந்தே பிரதிபலிக்கின்றது. மூலதனத்தின் ஜனநாயகம் மக்களின் வறுமையில் பறப்பதையே, சீனாவில் நாம் தெளிவாகக் காணமுடியும்.


சீன தனியார்மயமாக்கல்
தனியார்மயமாக்கல்                                                        1994                       1998                              2001
தனியார்மயமான நிறுவனங்கள்                         4 லட்சம்            12 லட்சம்                   20 லட்சம்
இதில் தொழில் புரிவோர்                                    56 லட்சம்          145 லட்சம்                 225 லட்சம்
முதலீடு                                                                      1 730 கோடி         8 700 கோடி              22 000 கோடி
                                                                                            டாலர்                   டாலர்                            டாலர்
தனியார் முதலீட்டாளர் எண்ணிக்கை         9 லட்சம்            26 லட்சம்                      46 லட்சம்


 சீனாவில் என்ன நடக்கின்றது என்பதை இந்த அட்டவணை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. தேசியமயமாக்கப்பட்ட அரசுத் துறைகளில் இருந்து உழைக்கும் மக்கள் துரத்தப்படுகின்றனர். தேசியமயமான மக்கள் சொத்துக்கள், தனியார்மயமாதல் என்பது அன்றாட நிகழ்ச்சியாகிவிட்டது. 1990க்கு பின்பாக அரசுத் துறையில் நான்கு கோடி உழைப்பாளிகளை, அவர்களின் வேலையை விட்டே சீன அரசு துரத்தியுள்ளது. தொடர்ந்து அரசுத் துறைகளில் இருந்து வருடம் 30 லட்சம் பேர் வேலையை இழந்து வருகின்றனர். இந்த வெட்டு முகத்தை நாம் உண்மையில் எதார்த்தத்தில் காண வேண்டுமாயின், ஒரு புள்ளிவிபர தரவு மட்டும் போதுமானது. சீனாவில் 1997இல் 2,62,000 அரசு நிறுவனங்கள் இருந்தன. இது 2002இல் 1,59,000மாக குறைக்கப்பட்டது. அதாவது ஐந்து வருடங்களில் 1,03,000 நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டது. இப்படி லட்சக்கணக்கான அரசு சொத்துக்கள் மக்களிடம் இருந்து பறித்து (பிடுங்கி) தனியாருக்கு விற்கப்படுகின்றன. அதாவது சுதந்திரம், ஜனநாயகத்தின் பெயரில் அவை தனியார்மயமாக்கப் படுகின்றது. சீனப் புரட்சியை அடுத்து நடந்தப்பட்ட வர்க்கப் போராட்டங்களின் போது, தனியார் சொத்துக்கள் ஒழிக்கப்பட்டு இருந்தன. ஆனால் இன்று தனியார்மயமாதல் என்ற பெயரில் அரசு சொத்துக்களை, சிலர் திருடிச் செல்கின்றனர். மக்களின் உழைப்பு உருவாக்கிய தேசியச் சொத்துக்கள், அன்றாடம் தனிப்பட்ட நபர்களால் சூறையாடப்படுகின்றன. மக்கள் வேலையை இழந்து வறுமையில் அங்கும் இங்குமாக வீதிகளில் அலைகின்றனர். அரசுத் துறையில் வேலை வாய்ப்புகள் இல்லாது ஒழிக்கப்பட்டது. தனியார் துறையில் மட்டுமே வேலை என்ற நிலையில், எந்த சமூகப் பாதுகாப்பும் அற்ற நிலையில், சட்டப் பாதுகாப்பும் அற்ற நிலையில் உழைப்பு கசக்கிப் பிழியப்படுகின்றது. இப்படி சுதந்திரமாக, ஜனநாயகமாக வரைமுறையின்றிச் சூறையாடும் சுதந்திரத்தை அனுபவிக்கவே, சீனாவின் மேல் காதல் கொண்ட அன்னிய மூலதனம் குதூகலத்துடன் உட்சென்று புணருகின்றது. இதன் நேரடி விளைவு என்ன எனப் பார்ப்போம்

 

 சீனாவில் தனியார்மயமாதலால் 19901999 இடைப்பட்ட காலத்தில் வேலைவாய்ப்பும், வேலை இழப்பும் எப்படி நடக்கின்றது எனப் பார்ப்போம்.


அரசுத் துறை                                       - 2.06  சதவீதத்தில் குறைந்துள்ளது.
கூட்டுறவுத்துறை                               -7.78  சதவீதத்தில் குறைந்துள்ளது.
தனிப்பட்ட உற்பத்தி                    +12.84  சதவீதத்தில் அதிகரித்துள்ளது.
கூட்டுத் தனியார் உற்பத்தி       +27.07  சதவீதத்தில் அதிகரித்துள்ளது.
தனியார் துறை                              +31.46  சதவீதத்தில் அதிகரித்துள்ளது.


 தனியார்துறை முதன்மை பெற்ற ஒரு சமூக அமைப்பாக, சீனா மாறி வருவதைக் காட்டுகின்றது. தனியார் அமைப்பில் கிடைக்கும் உயர்ந்த லாபம், அன்னிய மூலதனத்தின் ஆன்மாவைக் குளிர்மைப் படுத்தியது. சீன மக்களின் வாழ்வு சூறையாடப்படும் வீதம் எவ்வளவுக்கு உயர்வான நிலையை அடைகின்றதோ, அந்தளவுக்கு எதிர்மறையில் தனியார் மூலதனம் கொழுப்பேற குதூகலத்தில் ஆழ்கின்றது. மக்களின் அடிப்படையான சமூகத் தேவைகளையே அரசு கைவிட்டுவிட்டது. உதாரணமாக பொதுச் சேவையை தனியார்மயமாக்கியதால் 2 கோடி குழந்தைகள் கல்வியை இழந்துள்ளனர். 2004இல் மட்டும் 12,000 சிறுவர் பூங்காக்களை உள்ளடக்கிய வகையில் இயங்கிய பாடசாலைகளை சீன அரசு மூடியுள்ளது. எங்கும் சமூக அவலங்கள் விதைக்கப்படுகின்றன. மருந்துகளின் விலை அதிகரிப்பாலும், வைத்தியசாலை கட்டணம் செலுத்தும் நிலை மாறியுள்ளதாலும், சீன மக்களில் பாதிப் பேர் வைத்தியசாலை செல்ல முடியாத நிலைக்குத் தரம் தாழ்ந்துள்ளனர். மனித அவலத்தில் தான் சீனப் பொருளாதாரம் முன்னேறுகின்றது.


 சீனாவின் உணவு உற்பத்தி அந்த மக்களுக்கானதாக, தேவை சார்ந்தாக 1949 முதல் திட்டமிடப்பட்டது. உலக வர்த்தகக் கழகம் சீனாவில் புகுந்ததைத் தொடர்ந்து 60 கோடி விவசாயிகளின் உணவு உற்பத்தி, வர்த்தகம் சார்ந்ததாகவும், ஏற்றுமதிக்கானதாக மாற்றியமைத்தது. இதன் அடிப்படையில் 15 முதல் 22 சதவீத உணவு உற்பத்தியை முற்றாக வர்த்தக அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டது. அத்துடன் பழம், மரக்கறி மற்றும் இறைச்சி உற்பத்தியை ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யும் வகையில், உலக வர்த்தகக் கழகம் மாற்றியமைத்துள்ளது. இதன் அடிப்படையில் 20 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கியுள்ளது. ஆனால் இது எதிர்மறையில் பல கோடி விவசாயிகள் விவசாயத்தை கைவிட வைத்தது. தொழிலை இழந்த விவசாயிகளை, வேலை தேடி நகரங்களை நோக்கிப் படையெடுக்க வைத்துள்ளது. சீன நகரங்கள் வேலைதேடித் திரியும் மக்கள் கூட்டத்தால் பிதுங்குகின்றது. சீனாவில் கிராமங்களில் இருந்து மக்கள், நகரங்களை நோக்கி ஓடுவது தொடர்ந்து அதிகரிக்கின்றது.

 


                                    நகரங்கள்                        கிராமங்கள்
1980                   19.7 சதவீதம்                      80.3 சதவீதம்
1990                   27.4 சதவீதம்                      72.6 சதவீதம்
2000                   35.8 சதவீதம்                      64.2 சதவீதம்
2003                   38.6 சதவீதம்                      61.4 சதவீதம்


 சீனக் கிராமங்களில் மக்கள் வாழமுடியாத வகையில் கடுமையான, ஈவிரக்கமற்ற சுரண்டல், அந்த மக்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றது. இது 2010இல் 80 சதவீதமான மக்கள் நகரங்களை வந்தடைந்து விடுவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கிராமங்கள் வறுமையில் சிக்கியுள்ளது. சீன அரசு அறிக்கை ஒன்றே ஒன்பது கோடி சீனர்கள் ஒரு டாலருக்கு குறைவான வருமானத்தை பெற்று வறுமையில் இருப்பதாக ஒப்புக் கொள்கின்றது. சீனா மக்கள் தொகையில் கிராமத்தில் 69 சதவீதமானவர்கள் வாழ்கின்றனர். இவர்களில் 50 சதவீதமானவர்கள் விவசாயத்தையே உழைப்பாக கொண்டுள்ளனர். அதேநேரம், 19 சதவீதமானவர்கள் வேறு கிராமத் தொழில்களைச் சார்ந்து வாழ்கின்றனர். 50 சதவீத விவசாயிகள் தேசிய வருமானத்தில் பெறுவது 16 சதவீதத்தை மட்டுமே. இதற்கே வேட்டு வைக்கப்படுகின்றது. 1980 முதலே இந்த நிலை வளர்ச்சி பெற்று, இன்று நிலைமை மோசமாகி ஏழைகளை உற்பத்தி செய்கின்றது. சீன விவசாயிகள் உண்ட உணவு ஏற்றுமதியாவதால், பசியும் பட்டினியும் சீனாவின் புதிய தலைவிதியாகியுள்ளது. அதேநேரம் சீனா உலகில் நாலாவது மிகப் பெரிய உணவு ஏற்றுமதி நாடாக மாறியுள்ளது.


2001இல் அதிக விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்த நாடுகள்


ஐரோப்பிய ஒன்றியம்            23,551  கோடி டாலரில்
அமெரிக்கா                                   6,840  கோடி டாலரில்
ஜப்பான்                                          5,694  கோடி டாலரில்
சீனா                                                2,012  கோடி டாலரில்  (ஹாங்காங் உள்ளடக்கவில்லை)
கனடா                                            1,555  கோடி டாலரில்
மெக்சிகோ                                   1,279  கோடி டாலரில்
தென்கொரியா                           1,250  கோடி டாலரில்
ரசியா                                             1,140  கோடி டாலரில்
ஹாங்காங்                                  1,106  கோடி டாலரில்
தாய்வான்                                       699  கோடி டாலரில்


 உலகில் மிகப் பெரிய உணவு ஏற்றுமதி நாடாக மாறும் சீனாவினுள், மக்கள் உணவுக்காகக் கையேந்தி பிச்சை எடுக்கின்றனர். ஒரு நேரக் கஞ்சி குடிக்க முடியாது வீதிகளில் அலைகின்றனர். ஆனால், சீனா பொருளாதார ரீதியாக ஏகாதிபத்தியத்துக்கு சவால் விடும் நிலைக்கு தன்னை மாற்றி வருகின்றது. பணக்காரக் கும்பல்களின் நலன்களை அடிப்படையாக கொண்டே சகலமும் ஒழுங்கமைக்கப்படுகின்றது. சீனாவின் மிகப் பெரிய தனியார் நிறுவனத்தின் சொத்தின் பெறுமதி 220 கோடி டாலராகியுள்ளது. முதல் 5 மிகப் பெரிய நிறுவனங்களின் சொத்து 365 கோடி டாலராகியுள்ளது.


 2003இல் சீனாவின் மிகப் பெரிய 11வது பணக்காரனையே, சீனாவின் ஜனாதிபதியின் மகள் திருமணம் செய்து கொண்டார். அவரிடம் 3.5 கோடி டாலர் சொத்துக்கள் உண்டு. அரசு இயந்திரமும் மூலதனமும் இணைந்து நடத்தும் சுரண்டல், சூறையாடலாகிய யுடன் திருமணமாக வெளிப்படுகின்றது. மறுபக்கத்தில் 9.4 கோடி விவசாயிகள் நிலங்களை இழந்ததுடன், நகரங்களை நோக்கி நகர்ந்துள்ளனர். இப்படி வரும் கூலித் தொழிலாளர்களுக்கு அன்றாட கூலிகளைக் கூட கொடுக்க முடியாத நிலையில், 1200 கோடி டாலர் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இது ஒரு சமூக நெருக்கடியாக கொந்தளிப்பாக பரிணமிக்கின்றது. சீன மக்களின் துயரங்கள் பலவாக மாறி வருகின்றது. உதாரணமாக சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் கூட, சீன உழைக்கும் மக்களின் வயிற்றில் அடிக்கின்றது. 2003இல் அமெரிக்கா சீனாவின் துணி மற்றும் ஆடைகளுக்கு விதித்த தடை, 1.5 கோடி புடவை உற்பத்தியாளர்களையும், அதற்குத் தேவையான மூலவளங்களை உற்பத்தி செய்த 10 கோடி விவசாயிகளின் வாழ்வை நெருக்கடிக்குள்ளாக்கியது. உலகில் மேற்கு அல்லாத நாடுகளில் உயர் கடன் கொண்ட, இரண்டாவது மிகப் பெரிய நாடாக சீனா உள்ளது. 2001இல் 17,000 கோடி டாலர் கடனை சீனா கொண்டிருந்தது. அதாவது சீனாவின் மொத்த கடன் 11,03,821 கோடி இந்தியா ரூபாவாகும். சீனாவில் 20012002 வருடப் பற்றாக்குறை 1,82,868 கோடி இந்திய ரூபாவாகியுள்ளது.


 சீனப் பொருளாதாரம் என்பது மக்களுக்கு எதிரானதாக, அவர்களை எதுவுமற்ற ஒன்றாகி விட்டது. அதேநேரம் உலகளவில் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களின் உழைப்பின் ஆற்றலை அழித்து, அவர்களின் வாழ்வைச் சூறையாடுகின்றது. குறிப்பாக ஏகாதிபத்திய நாட்டு உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வை அழித்து வருகின்றது. சீனப் பொருளாதாரம் சீனா உள்ளிட்ட உலகப் பணக்காரக் கும்பலின் நலன்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றது. அதேநேரம் சீன மூலதனம் உலகளவில் ஏகாதிபத்தியதுக்குப் போட்டியாகவும் களத்தில் குதித்துள்ளது. அதேநேரம் ஏகாதிபத்திய உற்பத்திகளை உள்ளிழுத்து, உலகளாவிய ஒரு புதிய சர்வதேச நெருக்கடிக்குள் உலகை நகர்த்தி வருகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான நெருக்கடிகளில் கூட, சீனாவின் பங்கு முதன்மையான ஒன்றாக மாறிவிட்டது. உலகமயமாதலில் சீனாவின் நிலைப்பாடு, உலகளாவிய பல நெருக்கடிக்கு ஊன்றுகோலாகிவிட்டது. இவற்றை நாம் மேலே விரிவாகக் கண்டோம். தொடர்ந்து விரிவாகக்  காணவுள்ளோம்.