Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சமூக உறவுகளின் முழுமையை மறுப்பதே உலகமயமாக்கம்

சமூக உறவுகளின் முழுமையை மறுப்பதே உலகமயமாக்கம்

  • PDF

ம னித வரலாற்றில் தனிச்சொத்துரிமை அமைப்பு உருவானது  முதலே, சக மனிதர்களின் உழைப்பைச் சுரண்டுவது  தனிமனித உரிமையாகியது. இதுவே மனிதனின் ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் இருப்பதுடன், மனித நாகரிகத்தின் பண்பாட்டுச் சின்னமாகவும் கொழுவேற்றுள்ளது.  இது சட்டதிட்டங்களினால் மட்டும் சுரண்டல் அமைப்பை கட்டமைத்துவிடவில்லை. சட்டதிட்டங்களைச் சுற்றியுள்ள சமூக ஒழுக்கங்களும், சமூகப் பண்பாடுகளும், சமூக கலாச்சாரங்களும் கூட, இதற்குள்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன.

முழு சமூக  உறவுகளின் தோற்றமும் இதற்குள் இருந்து தான் பிறக்கின்றது. இதன் மூலம் சக மனித உழைப்பை தனிமனிதர்கள் சுரண்டும் உரிமையையே, ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் கூட பூச்சூட்டப்பட்டது. தனிச்சொத்துரிமை அமைப்பு உருவானது முதலே, மனிதகுலம் இதனடிப்படையில் இரண்டாகப் பிளவுற்றே வளர்ச்சியுற்றது, வளர்ச்சியுறுகின்றது. இதàல் மனித குலத்தை, பல பிரிவுகளாக பிளந்து சின்னாபின்னமாக்கியுள்ளது. இந்த தனிச்சொத்துரிமை அமைப்பு சில நேரங்களில் அமைதியாக இருந்த போதும், மற்றைய நேரங்களில் கொந்தளிப்பான ஒரு சமூக வன்முறை சார்ந்த போராட்டமாகவே எப்போதும் இருந்து வந்தது, இருந்து வருகின்றது. சக மனிதனின் உழைப்பை மற்றொரு மனிதன் சுரண்டும் அடிப்படையில் ஏற்பட்ட சமூகப் பிளவே, வர்க்கப் பிளவாகியது. இந்தச் சமூகப் பிளவு ஒட்ட முடியாத எதிர்நிலைத் தன்மையில், நேர் எதிர்த் திசைகளில் பயணிக்கின்றது. இதை கட்டிப் பாதுகாக்கும் சமூக அமைப்பு எப்போதும் எங்கும் வன்முறையிலானது.


 அதாவது வர்க்க மோதல்கள் இல்லாத எந்த சமுதாயமும், தனிச் சொத்துரிமை அமைப்பில் கிடையாது. இதற்கு மாறாக எதிர்நிலையில் மனித பிளவுகளற்ற ஒரு சமூக அமைப்பு உருவாகும் போது, தனிச்சொத்துரிமை என்பது இருக்காது. அனைத்து மனிதப் பிளவுகள், சக மனிதனின் உழைப்பை சுரண்டுவதில் இருந்தே தொடங்குகின்றது. மனித உழைப்பைச் சுரண்டும் சமூக அமைப்பு உருவாகும் முன்பு, சமுதாயத்தின் உழைப்பு முதல் அனைத்தும் சமுதாயத்தின் சொத்தாக பொதுவில் இருந்தது. இதனால் பிளவுகளற்ற சமுதாய உணர்வு மேலோங்கி இருந்தது.


 இங்கு தனிமனித உணர்வுகள் சமுதாய உணர்வுக்கு உட்பட்டு இருந்தது. இதனால் தனிமனித நலன்கள், சமுதாய நலனுக்கு உட்பட்டு இருந்தது. தனிமனித முரண்பாடுகள் சமுதாய நலனுக்குட்பட்டு செயலாற்றியது. சமுதாய நலனுக்கு எதிரான முதலாவது தனிமனித முரண்பாடு, தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டத்தில் இருந்தே உருவாகியது. அதாவது இதன் போதே தனிமனித நலன், சமுதாய நலனுக்கு எதிரானதாக உருவாகியது. இப்படி உருவாகிய தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டம், எப்போதும் சக மனிதனின் உழைப்பைத் தனதாக்கும் இழிவான ஒரு கண்ணோட்டம் சார்ந்தே உருவாகியது. இந்த இழிவான மனித (சமூக) விரோத போக்கு, அனைத்து மனித உழைப்பையும், தனதாக்கும் உணர்வை அடிப்படையாகக் கொண்டது. இந்த சமூக விரோத உணர்வின் முதிர்வே உலமயமாதலாகும். இவை உலகளாவிய சமுதாய உணர்வாகவும், பண்பாடாகவும், கலாச்சாரமாகவும் உள்ளது. மற்றைய மனிதனின் உழைப்பைச் சுரண்டித் தனதாக்கும் செயல், இயல்பில் உலகில் அனைத்தையும் தனதாக்கும் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டது. இது தனிச்சொத்துரிமை உருவானது முதலே, அதனை இறுதி இலட்சியமாகக் கொண்டு செயலாற்றுகின்றது.


 மனிதர்களைச் சுரண்டி வளர்ச்சியுற்ற தனிச்சொத்துரிமை அமைப்பு, படிப்படியாக மூலதனத்தின் குவிப்பாக மாறியது. எவ்வளவு மனிதர்களின் உழைப்பை சுரண்ட முடிகின்றதோ, அதற்கு ஏற்ப மூலதனம் தனிமனிதனை நோக்கிக் குவிவது அதிகரித்தது. உழைக்கும் மக்கள் அடிமைவாழ்வை நோக்கிச் செல்வது இதன் அடிப்படை விதியாகியது. இதன் மூலம் அதிக மனிதர்களைச் சுரண்டுவது என்ற சமூகக் கண்ணோட்டம் சார்ந்து, மனிதர்களை அடிமைப்படுத்த சமுதாய அமைப்புகள் நெகிழ்வுத் தன்மையுடையதாக மாற்றப்படுகின்றது. இந்த நெகிழ்வுத் தன்மை உள்ள அமைப்பை, வன்முறை மூலமே சாதிக்க முடிகின்றது. இந்த வன்முறை சார்ந்து உருவான தனிச்சொத்துரிமை அமைப்பைப் பாதுகாக்கவே, அதிகார அமைப்புகளை உருவாக்கின. இது ஆரம்பத்தில் சொந்தக் குழுவுக்கு வெளியில் உள்ள குழுக்களுக்கு எதிரானதாக இருந்ததால், இந்த அதிகார அமைப்பை இலகுவாகவே நிறுவமுடிந்தது. இந்த தனிச்சொத்துரிமையை பாதுகாக்கும் அதிகார அமைப்பு, சொந்தக் குழுவில் தனிமனிதர்கள் சுரண்டப்படுவதை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்படவில்லை. மாறாக மனித உழைப்பு சுரண்டப்படுவதை உறுதி செய்து, அதைப் பாதுகாக்கும் கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட அதிகார நிறுவனங்களாகவே அரசுகள் உருவாகியது. அன்று முதல் இன்று வரை அரசுகள் எவையும், மனிதச் சுரண்டலை எதிர்த்து உருவாக்கப்படவில்லை. 20ஆம் நூற்றாண்டில் உருவான ஒரு சில அரசுகளைத் (சீனா, சோவியத் போன்றன தனிச் சொத்துரிமையை ஒழிக்கும் வர்க்கப் போராட்டத்தை நடத்தின. சொத்துகளை சமூக சொத்துரிமையாக்கின) தவிர, அனைத்தும் தனிச்சொத்துரிமை சுரண்டல் அமைப்பை பாதுகாத்த, பாதுகாக்கின்ற அரசுகளாகவே இந்தத் தனிச் சொத்துரிமை அமைப்பு நீடிக்கின்றது. இந்த தனிச் சொத்துரிமை சமூக அமைப்பில் இதற்கு வெளியில், ஜனநாயகம் பற்றியும் சுதந்திரம் பற்றியும் எந்தவிதமான விளக்கங்களும் கிடையாது. அடிமைத்தனத்தையும் மிருகத்தனத்தையும், காட்டு மிராண்டித்தனத்தையும் மூலதனம் தனது பண்பாடாகவும், பொருளாதாரமாகவும், அரசியலாகவும் கொண்டே உலகை அடக்கியாள முனைகின்றன.


 இந்த தனிச் சொத்துரிமை அமைப்பை தொடர்ச்சியாக, ஒரே வடிவில் நீடித்த வகையில் பாதுகாக்க முடிவதில்லை. தனிச் சொத்துரிமையின் சொந்த முரண்பாடே, அதை மாற்றக் கோருகின்றது. உழைப்பல் இருந்து உருவாகும் மூலதனம் தனிமனிதன் கையில் குவியும் போது, சுரண்டும் ஆற்றல் பெறுகின்றது. இது மேலும் சுரண்டிக் கொழுக்க, பெரும் மக்கள் கூட்டத்தைக் கோருகின்றது. இது விரிந்த தளத்தில் எல்லைகளைக் கடந்து செல்லுகின்றது. காலத்துக்கு காலம் இதனடிப்படையில் சமுதாய அமைப்பு முறைகள் மாறிவந்தன. பெரிய மக்கள் கூட்டத்தை தனது நேரடிச் சுரண்டலுக்கு உட்படக் கூடிய வடிவங்களுக்கு ஏற்ப, மாற்றங்கள் அவசியமாகியது. அதாவது தனக்கு போட்டியாக சந்தையில் மோதும், போட்டிச் சுரண்டல் பிரிவை ஒழித்துக் கட்டுவதில் இருந்தே, இது தொடங்கியது. இது அமைதியாகவும், வன்முறையாலும் தொடர்ச்சியாக இடைவிடாது சாதிக்கப்படுகின்றது. இதுவே உலகில் நடந்த அனைத்து யுத்தங்களுக்குமான அடிப்படையாக இருந்தது.


 சுரண்டலுக்கு உள்ளாகும் பெரும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும், பலம் பொருந்திய அதிகார மையங்கள் உருவாகின. சொந்த மக்களை அடக்கியாளவும், புதிதாக மக்களை வென்று அடக்கவும் நிரந்தரமான படைகள் அவசியமாகியது. யுத்தங்கள் மூலதனத்தின் வெற்றிக்கு நெம்புகோலாகியது. மக்கள் இந்த தனிச் சொத்துரிமை சுரண்டல் கொடுமைகளில் இருந்து மீள முனைவதைத் தடுக்க, இயல்பாக உருவாகி வளர்ந்த பண்பாட்டு கலாச்சார அலகுகளை குறுகிய வடிவில் பிளந்தனர். பண்பாட்டு கலாச்சார அடுக்கில் சமுதாய நலனுக்கு எதிரான வகையில் வக்கிரமான பிளவுகளை உருவாக்கினர். இதை நியாயப்படுத்த அறிவியலுக்கு மாறான பல்வேறு கோட்பாடுகளை முன்தள்ளினர். இதற்குள் மனித மோதல்களை தொடர்ச்சியாகக் கட்டமைத்தனர். அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளையும், சமுதாய நலனுக்குப் புறம்பான பண்பாடுகளையும், கலாச்சாரங்களையும் முன்வைத்து, தனிமனித சொத்துரிமைக் கண்ணோட்டத்தில் மனித குலத்தைப் பிளந்தனர். இதனடிப்படையில் மனிதர்களுக்கு இடையிலான மோதல்களை அகலமாக்கி, சொத்துரிமைக் குவிப்புக்கான யுத்தங்களை இலகுவாக விரிவாக்கினர். தனிச் சொத்துரிமை அமைப்பின் பிறப்பு முதலே யுத்தங்கள் இன்றி உயிர் வாழ முடியாது என்ற விதி அதன் உயிருள்ள ஆன்மாவாகியது.


 சமுதாய ரீதியான தனிச்சொத்துரிமை முரண்பாட்டை மூடிமறைத்து, குறுகிய உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட மோதல்களை வெற்றிகரமாக சமுதாயமயமாக்கி விடுகின்றனர். இந்த தனிச்சொத்துரிமை அமைப்பின் நீடித்த இருத்தலுக்கு, இவை சதையுள்ள உடலாகி விடுகின்றது. இங்கு தனிச்சொத்துரிமை நலன்கள் என்ற அடிப்படையான சமூகக் கண்ணோட்டம், அனைத்தினதும் ஆணிவேராக இருந்தது, இருந்து வருகின்றது. மனிதகுலம் எங்கும் இதற்குள்ளான மோதலே முதன்மைப் பொருளாகியது. இதன் மூலம் சொத்துக் குவிப்பு என்பது விரிவாகிச் சென்றது. கடந்த 2000 முதல் 3000 ஆண்டு காலத்தில் மனிதகுலம் இந்த எல்லைக்குள் தான் முன்னேறி வந்தது. சொத்துக் குவிப்பை அடிப்படையாகக் கொண்ட போட்டி, தவிர்க்க முடியாது, நவீன தொழில் நுட்பத்தை வேகமாகவே முன்தள்ளியது. அதிக சுரண்டல் என்ற தனிச்சொத்துரிமை உணர்வு, நவீன தொழில் நுட்பத்தின் உயிருள்ள ஆன்மாவாகியது. அத்துடன் தனிச்சொத்துரிமைக்கு எதிரான தொழிலாளர் வர்க்கத்தின் வர்க்கப் போராட்டங்களை எதிர்கொண்டு சமரசம் செய்ய அல்லது தகர்க்க, நவீன தொழில் நுட்பம் நெம்புகோலாகியது. மறுபக்கத்தில் நவீன தொழில் நுட்பம் மூலம், மேலும் அதிக மக்களை சுரண்டக் கோரியது. எல்லை கடந்த உலகளாவிய சுரண்டல் என்பது, இதன் உயர்ந்த குறிக்கோளாகியது. மூலதன வேட்டைக்காக பூமியைக் கடந்து செல்லவும் விரும்புகின்றது. பூமி அல்லாத வேறு ஒரு கோளில், அடிமைகளை உருவாக்கிச் சுரண்டவும், இல்லாது போனால் மற்றொரு உழைக்கும் உயிரினம் இருப்பின் அதை அடிமை கொண்டு சுரண்டவும் கூட மனித நாகரீகம் காட்டுமிராண்டித்தனமாகவே விரும்புகின்றது. மனிதனை மனிதன் உண்ணும் காட்டுமிராண்டியின் நிலையில் வாழ்ந்த மனிதனிடத்தில் (அப்போது மற்றைய மனிதனை மனிதனாக அல்ல, மற்றொரு மிருகமாகவே பரஸ்பரம் கருதினான்.) இருந்து எந்த மாற்றமும் இன்றி, நாகரீக மனிதர்கள் சுரண்டுவதன் மூலம் தனது ஆடம்பரமான வாழ்க்கைத் தேர்வை பூர்த்தி செய்கின்றான். கொடிய சுரண்டலால் வாழவழியற்ற நிலையில் கொடுமைக்குள்ளாகி இறந்து போகும், கோடிக்கணக்கான மக்களின் உடல்களை இயற்கை மரணமாகக் காட்டி புதைத்து விடுகின்றனர் இன்றைய நாகரீக காட்டுமிராண்டிகள். இந்தப் பூமியில் எல்லா மனிதர்களையும் ஒரு மனிதன் சுரண்டும் எல்லை வரை, தனிச் சொத்துரிமைக் கோட்பாடு முரண்பாடு இன்றி தன்னைத் தான் தகவமைத்துள்ளது. இதைத்தான் மனித சுதந்திரத்தின் கடைசி எல்லை என்கிறது இன்றைய ஜனநாயகம். இதைத்தான் ஜனநாயகத்தின் சொர்க்கம் என்கிறது. அதாவது, எல்லா மனிதர்களும் ஒரு மனிதனுக்கு அடிமையாதலை நோக்கி, இந்தத் தனிச்சொத்துரிமை அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது.


 தனிச் சொத்துரிமை என்ற சமூக அமைப்பில், இதற்கு வெளியில் எந்த விளக்கமும் இருப்பதில்லை. சுதந்திரம், ஜனநாயகம் என்பது இதைத் தாண்டி விளக்கப்படுவதில்லை. எந்த தனிமனிதனும் இதற்கு வெளியில் உயிர் வாழ முடியாது. அனைத்துக் கோட்பாடுகளும் இதற்கு வெளியில் உருவாவதில்லை. இதை எதிர்த்து அல்லது ஆதரித்து உருவாகும் அனைத்து விதமான கோட்பாடுகளும், இந்த எல்லைக்குள் தான் தம்மை வேறுபடுத்துகின்றன. கோட்பாடுகளும், நடைமுறைகளும் இந்த எல்லைக்கு வெளியில் எதையும் படைப்பதில்லை. இதற்கு வெளியில் எதையும் படைப்பதாக யாரும் நிறுவமுடியாது. இப்படி படைக்க முடியும் என்றால், மக்களின் அறியாமை சார்ந்த முட்டாள் தனத்தை மட்டும் மூலதனமாகக் கொண்டு, தம்மைத் தாம் அலங்கரிக்கின்றனர்.


 உலகமயமாதல் என்ற அமைப்பு சொத்துக் குவிப்பில் ஒரு வடிவம் மட்டும் தான். கடந்து வந்த  தனிச்சொத்துரிமை அமைப்பில் நீடித்து வந்த வடிவங்களில் ஏற்பட்ட, ஒரு பண்பு மாற்றம் தான் இன்றைய உலகமயமாதலாகும். உலகம் முழுக்க சில தேசம் கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டும் கட்டமைப்புக்குரிய காலகட்டமே, இன்றைய உலகமயமாதலாகும். அறிவியல்பூர்வமாக சிந்திக்க விரும்பும் ஒருவன், இன்று எது உலகமயமாகின்றது என்ற கேள்வியை எழுப்பின், எப்போதும் உண்மையை நிர்வாணமாக்கி விடுகின்றது. சுரண்டல் என்பது உலகளவிலானதாகின்றது. சொத்துக் குவிப்பு உலகளவிலானதாகின்றது. பண்பாடு கலாச்சாரங்கள் உலகளவிலானதாகின்றது. ஒற்றைப் பண்பாடு, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைப் பொருளாதாரம், ஒற்றை மொழி என்று பல்துறை சார்ந்து நடக்கும் மாற்றம் தான் உலகமயமாதல். அதாவது பன்மைப் பண்பாட்டு அழிப்பு, பன்மைக் கலாச்சார அழிப்பு, சிறு மற்றும் பெரு உற்பத்தித் துறைகளை அழித்தல், பன்மை மொழி அழிப்பு, இயற்கையின் பன்மைத் தன்மை அழித்தல், சிறிய சொத்துரிமை அழித்தல் என்று எல்லை கடந்த இயற்கை மற்றும் மனிதனின் பன்மைத் தன்மையை அழித்தலே உலகமயமாதலாகும். அதாவது மனிதனின் அடிமை நிலையை உருவாக்குவதே உலகமயமாதலாகும். மனித அடிமைத்தனத்தை, மனித மிருகத்தனத்தை, மனிதக் காட்டுமிராண்டித்தனத்தை உருவாக்குவதன் மூலம் உழைப்பைச் சுரண்டுவதே உலகமயமாதலாகும். மனிதர்கள் அடிமையாக ஒரு நிறுவனத்திடம் தனது உழைப்பை விற்றுப் பிழைக்கும் அடிமை நிலைவரை, இந்த உலகமயமாதல் வீறு கொண்டு செயல்படுகின்றது. உழைப்பை சுதந்திரமாக விற்க முடியாத, போட்டி மூலதனமற்ற நிலையை உலகமயமாதல் உருவாக்குகின்றது. தனிமனிதனின் உழைப்புத்திறன் உட்பட, அவனின் சிறப்புத் தகுதிகளைக் கூட அழிக்கின்றது. இதன் மூலம் ஒரு தனிமனிதனிடம் உலகத்தின் அனைத்துச் சொத்துக்களும் குவியும் நிலையை வந்தடைய, பல இடைக்கட்டங்கள் தேவைப்படலாம். ஆனால் அதுவே மூலதனத்தின் உயர்ந்தபட்ச இலட்சியமாகும். அதுவே அதன் உயர்ந்தபட்ச சுதந்திர உணர்வாகும். அதுவே அதன் உயர்ந்தபட்ச ஜனநாயகமாகும்.


 இந்த உலகமயமாதலின் விளைவு, பண்ணையில் வாழும் மந்தைக்குரிய நிலையில் மனிதர்களை இட்டுச் செல்வதைத் தாண்டி எதுவுமல்ல. பண்ணைகளில் மந்தைகள், எப்போதும் கீறிய கோட்டைத் தாண்ட அனுமதிக்கப்படுவதில்லை. போடப்படும் உணவை உண்ணவும், தன்னை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் எல்லைக்கு அப்பால், வாழ்வின் நோக்கம் எதுவும் சுயேச்சையாக இருப்பதில்லை. இயற்கையான அனைத்து இயல்பும் நலமடிக்கப்பட்டு, மலடாக்கப் பட்டு, அழிக்கப்படுகின்றது. இது போன்று மனிதர்கள் பூமி என்ற பண்ணையில் அடைக்கப்படுவதை உறுதி செய்வதே உலகமயமாதலாகும். விரல்விட்டு எண்ணக் கூடிய சில பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உலகம் இயங்கவும், அவர்களின் உற்பத்திகளை நுகர கட்டமைப்பதே உலகமயமாதலாகும். இதற்கு ஏற்ப அடிமைத் தனத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மரபு மாற்றத்தைக் கூட, மனிதனில் ஏற்படுத்தத் தயங்காத வக்கிரபுத்தி கொண்ட மூலதனத்தின் நலன்கள் தான் இன்றைய ஜனநாயகத்தின் உயர்ந்தபட்ச குறிக்கோளாக உள்ளது. பண்ணையில் அடைத்து வைக்கப்பட்ட மந்தைக்குரிய தாழ்நிலைக்கு, மனிதனை தரம் தாழ்த்துவதே உலகமயமாதல் ஜனநாயகத்தின் உன்னதமான குறிக்கோள். உதாரணமாக பன்மை உணவை அழித்து, ஒரு சில உணவை உண்ணக் கட்டமைக்கப்படும் பண்பாட்டுச் சிந்தனை உணர்வுகள் முதல், மொத்தப் பொருளாதாரக் கட்டமைப்பும் இதற்கு இசைவாக உருவாக்கப்படுகின்றது. பண்ணை வாழ் மந்தைக்குரிய நிலையைத் தாண்டி, எதையும் உலகமயமாதல் நடைமுறைப் படுத்துவதில்லை. பல தெரிவுகள் என்ற பன்மைத்தன்மை சார்ந்த உற்பத்தியை அழிப்பதற்கே, உலகத்தின் ஜனநாயகமும், சுதந்திரமும் விபச்சாரம் செய்கின்றது. தெரிவுகளின் எண்ணிக்கையை அழிப்பது, உலகமயமாதலின் அடிப்படைக் கோட்பாடு. உணவு, உடை, முதல் எல்லா உற்பத்திக் கட்டமைப்பிலும் இதை உருவாக்குவதே உலகமயமாதலாகும். உலக மக்களை பண்ணை வாழ் மந்தைகள் போல், மூலதனம் பயன்படுத்தும் இழிநிலைக்கு ஒரு அடிமையாய், ஒரு காட்டுமிராண்டியாய், ஒரு மிருகமாய் மக்களை மாற்றுவதே உலகமயமாதலாகும்.


 இந்த வகையில் உலகம் மாற்றி அமைக்கப்படுகின்றது. இதுவே உலகமயமாதல். இன்று இந்த இழிநிலையை உருவாக்குவதே ஏகாதிபத்தியத்தின் ஒரே இலட்சியமாக உள்ளது.  இன்று ஒன்றுக்கு மேற்பட்ட ஏகாதிபத்தியங்களை உருவாக்கியுள்ள முதலாளிகளுக்கு இடையிலான மோதல், ஒன்றுபட்ட இலக்கை நோக்கி நகர்வதில் நெருக்கடியை உருவாக்குகிறது. தனித்தனி எகாதிபத்தியத்தை வெவ்வேறு மூலதனங்கள் உருவாக்கி பாதுகாப்பதால், இவற்றுக்கு இடையிலான மோதல் ஐக்கியம் என்ற இரு போக்குகள் அரங்கில் எப்போதும் பிரதிபலிக்கின்றன. தொழிலாளர் வர்க்கம் அமைப்பாகி வர்க்கப் போராட்டம் கூர்மையாகும் போது ஐக்கியமும், வர்க்கப் போராட்டம் தணியும் போது மோதலும் அரங்கில் எழுகின்றது. இக்காலகட்டம் உலகளவில் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான உலக யுத்தமற்ற அமைதியான யுத்த தயாரிப்பு கால கட்டத்தில் நடக்கின்றது. ஆனால் விதிவிலக்காக கடும் உள்நாட்டு வர்க்க நெருக்கடிகளின் போது, ஏகாதிபத்திய மோதல் போக்கு முதன்மைப்பண்பை பெற்றுவிடும்போது, இதுவே ஒரு உலக யுத்தமாக மாறிவிடுகின்றது.


 உலகைச் சுரண்ட வெவ்வேறு மூலதனத்தைப் பிரதிபலிக்கும் ஏகாதிபத்தியங்கள், தமக்கு இடையிலான மூலதனச் சுரண்டல் போட்டியில் கடுமையாக ஈடுபடுகின்றன. இதனால் ஏற்படும் மோதலைத் தவிர்க்க உலகை தமக்கு இடையில் சமரசமாக இடைவிடாது தொடர்ச்சியாக பங்கிடுகின்றனர். இது அமைதியான காலகட்டமாக இருந்தாலும், மூலதனத்தின் சுரண்டும் வீச்சு, புதிய மோதலை மீண்டும், மீண்டும் உருவாக்குகின்றது. உலகை முழுமையாகச் சுரண்ட தவிர்க்க முடியாமல் மோதுகின்றது. இதில் தோல்விபெறும்போது, மறுபங்கீடு நடக்கின்றது. இது இடைவெளியற்ற அலையலையான மோதல், பிரதான முரண்பாடாகி, உலகை யுத்தம் என்ற நிலைக்குள் நகர்த்திவிடுகின்றது.


 உலகமயமாதலை பூர்த்தி செய்ய ஏகாதிபத்தியங்கள்  காலனிகள், அரைக்காலனிகள், நவகாலனிகள், மறுகாலனியாக்கம் என்று பல்வேறு வடிவங்களில் உலகை அடக்கி சுரண்டியாளுகின்றன. உலகம் எங்கும் கடுமையான நெருக்கடிக்கூடாகவே நகர்ந்து செல்லுகின்றது. மனித குலத்தின் பிரதான எதிரியை இனம் காணமுடியாத வகையில், மக்கள் கூட்டத்துக்கு இடையில் முரண்பாடுகள் உருவாக்கப்பட்டு, மக்களை மோதவிட்டுள்ளனர். மதம், சாதி, இனம், பால், நிறம், கலாச்சாரம், பண்பாடு, தனியுரிமை சிந்தனை என்ற எண்ணற்ற முரண்பாடுகளை முதன்மைப்படுத்தி, மோதல்கள் மூலம் உலகமயமாதலைப் பாதுகாக்கின்றனர். மனிதகுலத்துக்கு உலகமயமாதலால் ஏற்படும் அழிவுகளில் இருந்து மூலதனம் தப்பிப் பிழைக்க, உதிரியான கும்பல்களின் நலன் சார்ந்து இந்த மோதல்கள் கட்டமைக்கப்படுகின்றன. முழுமையில் ஏகாதிபத்திய நலன்களைப் பேண இது அடிப்படையான அஸ்திவாரமாக, உலகமயமாதலின் விதியாக அமைந்துள்ளது. உலகளவில் அரசியல் கூட மனித குலத்தைப் பிளக்கும் வக்கிரபுத்தியுடன் தான், தன்னைத் தகவு அமைக்கின்றது. எங்கும் மக்களின் அடிப்படையான பிரச்சனைகளில் இருந்து அரசியல் பேசப்படுவதில்லை. மக்களை பிளக்கும் அரசியல், உலகளாவிய போக்காகியுள்ளது. ஜனநாயகம் மனிதனைப் பிளந்து போடும் அரசியலாகி, அதற்குள் வக்கரித்து நிற்கின்றது. மனிதப் பிளவையும், மோதலையும் ஊக்குவிப்பதே உலகமயமாதலின் அடிப்படையான சித்தாந்தம். இது உலகமயமாதலின் வேகமான சொத்துக் குவிப்பு என்ற வெற்றிக்கு, நெம்புகோலாகவும், அச்சாகவும் உள்ளது.


 இந்த வகையில் உலகமயமாதல் எப்படி முன்னேறி வந்தது, வருகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்வதன் மூலம்தான், உலகமயமாதலை எதிர்கொண்டு முறியடிக்க முடியும். முதலில் நீ எப்படி வாழ்கின்றாய்? என்ற அறிவு அவசியமானது. நீ எப்படி முன்பு வாழ்ந்தாய்? என்ற அறிவும் அவசியமானது. நீ எப்படி வாழப் போகின்றாய்? என்ற அறிவும் அவசியமானது. அதாவது மனிதகுலம், தன்னைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமானது. தனது வாழ்வு சார்ந்த உண்மை என்ன என்ற அறிவு முதன்மையானது. முதலில் சமுதாய உணர்வை நாம் ஒவ்வொருவரும் பெறுவது அவசியமானது. தனிமனித சமூகப் பொருளாதார வக்கிரங்களை, நிராகரிக்கத் தெரிந்து கொள்வது அவசியமானது. அவை எப்படி சமுதாயத்தில் நீடிக்கின்றன என்ற அறிவும் முதன்மையானது. ஒட்டுமொத்த மக்களின் மகிழ்ச்சியான வாழ்வை, குறைந்தபட்சம் கனவு காணத் தெரிந்து கொள்ளவேண்டும். நனவு பூர்வமாக இதை அடைய, நாம் நம்மையும், நமது அறிவையும், சமுதாய அறிவையும் உருவாக்கும் ஒரு சிறிய புள்ளியில் இருந்தே நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும்.


 சினிமா நடிகைகள் நடிகர்கள் பற்றியும், பாலியல் வக்கிரங்கள் பற்றியும், புகைக்கும் வகைபற்றியும், மார்க் பொருட்கள் பற்றியும், கார்களின் வகை பற்றியும், தொலைபேசிகளின் வகைகள் பற்றியும், கம்யூட்டரின் வகைகள் பற்றியும், இதுபோன்ற பல அறிவியலுக்கு புறம்பான, விளம்பரச் சந்தை சார்ந்து நாம் தெரிந்து கொள்வதில் இருந்து முதலில் வெளியே வந்தாக வேண்டும். எதற்கும் உபயோகமற்றவற்றை எல்லாம் தெரிந்து கொள்ளும் நமது சமுதாய சிந்தனைத் தளம், உப்புச்சப்பற்றது. உண்மையில் இவை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் லாபநட்ட கணக்கிற்கு உட்பட்டவையே. இவை அனைத்தும் அவர்களின் சொந்த வக்கிரங்களை அடிப்படையாகக் கொண்டவை. மனிதனை மூளைச் சலவை செய்து வாங்கக் கோரும், சந்தையின் எல்லைக்குட்பட்ட வெறும் பொருட்கள் பற்றியதே இவை. இவை அறிவு சார்ந்தவை அல்ல.


 மனித குலத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்று கேட்டுப் பார்க்க வேண்டும். சமுதாய வாழ்வியல் முறையைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? என்ற வினாவைத் தொடுத்துப் பார்க்க வேண்டும். உனது அடிப்படைத் தேவையையும், உனது ஆடம்பர பொருட்களைப் படைக்கும் மனிதனின் வாழ்க்கை என்ன என்று உனக்குத் தெரியுமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். உன்னைப் போன்ற மனிதர்கள் இந்த சமூதாயத்தில் எப்படி வாழ்கின்றனர் என்று உனக்குத் தெரியுமா? என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அதைத் தெரிந்து கொள்வதுதான் அனைத்துக்குமான அடிப்படை அறிவாகும். மனிதகுலத்துக்கு வெளியில் அறிவியல் எதுவும் இருப்பதில்லை. அவை சிந்தனைக்கு அப்பாற்பட்ட இயல்பு சார்ந்த இயற்கையானதே. எமது சிந்தனை சார்ந்த அறிவியல் மனித சமூக சராத்தையே அடிப்படையாகக் கொள்வது, அனைத்தையும் ஒட்டு மொத்த மனித வாழ்வின் மீது பாகுத்தாய்வது அவசியமாகின்றது.


 கார்ல்மார்க்ஸ் குறிப்பட்டது போல் ""மனித சமூக சாரம் என்பது, ஒவ்வொரு தனி மனிதனிடமும் இயல்பாக உள்ளார்ந்திருக்கும் சாரம் என்பதல்ல, அதன் எதார்த்தத்தில், அது சமூக உறவுகளின் முழுத் தோற்றம் ஆகும்.'' இந்த உண்மையைக் கண்டறியும் போது, உலகம் உனதாகிவிடுகின்றது. உன்னை நீ முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் நீ யார்? என்பதையும், நீ எப்படி வாழ்கின்றாய்? என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதில் இருந்து உனக்கு வெளியில் மக்கள் எப்படி சூறையாடப்படுகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ள முனைவதே அறிவியலாகும். மனித குலம் எப்படி அடிமையாகியது என்பதைத் தெரிந்து கொள்வதே அறிவியலாகும். வெறும் பொருட்களின் கருவியாக எப்படி மனிதன் மாற்றப்பட்டான் என்பதைத் தெரிந்த கொள்வதே அறிவியலாகும். தொழில் நுட்பத்தில் நீ ஒரு இயங்கியாகி மலடாகிப் போய்விட்டாய் என்பதை முதலில் வெட்கத்தை விட்டு தெரிந்து கொள்ள வேண்டும். இதை மாற்றுவது எப்படி என்பதைச் சிந்திப்பதே அறிவியல். இவற்றை எல்லாம் நாம் தெரிந்து கொள்வதே உலகமயமாதல் பற்றிய நமது அறிவாகும். இந்த அறிவின்பாலான மனித உணர்வே, வாழ்வின் மேலான உண்மையான சமூக இயக்கமாகும். இந்த சமூக இயக்கமே உலகை மாற்றி அமைக்கின்றது. உற்பத்தியாகின்ற ஒவ்வொரு பொருட்களிலும் மனித உழைப்பு மறைந்து கிடக்கின்றது என்ற உண்மையைக் கண்டறிவதே மனித அறிவியலின் முதல் படியாகும். உனது உழைப்பும், உலக மக்களின் உழைப்பும்தான் சந்தையில் குவிந்து கிடக்கும் அனைத்தும். இதுதான் மனித துயரத்துக்கும் வித்திடுகின்றது. உனது வறுமைக்கும், உனது சமூகப் பிரச்சனைக்கும் காரணம், பொருட்களில் மறைந்து கிடக்கும் உழைப்பு உன்னிடம் உள்ளதா? இல்லையா? என்பதை அடிப்படையாக கொண்டே ஏற்படுகின்றது. மிகப் பெரும் ஆடம்பர வாழ்வும் கூட, உற்பத்தியான பொருளில் மறைந்து கிடக்கும் மனித உழைப்பை மறுப்பதில் இருந்து கட்டமைக்கப்படுகின்றது. மனிதன் தான் ஒரு உழைப்பாளியாக இருந்து உற்பத்தி செய்ததை மட்டுமின்றி, உற்பத்தித் திறனையும் பிறரிடம் இழந்துவிட்ட நிகழ்வு மனித துயரங்கள் அனைத்தினதும் மூலமாகவுள்ளது. உழைப்பு சார்ந்த வாழ்வு என்பது, வாழ்வதற்காக என்ற நிலையைக் கடந்து மனித துயரத்துக்கான மூலதனமாகி நிற்கின்றது. இதைத் தெளிவுபடுத்தும் வகையில், மூலதனம் மனித அடிமைத்தனத்தையும், துயரத்தையும் மேலும் எப்படி உலகமயமாதலூடாக வேகப்படுத்தி உள்ளது என்பதைப் பார்ப்போம். இந்த வகையில் நாம் உலகமயமாதல் எப்படி மக்களின் அடிப்படையான பொருளாதார வாழ்வைச் சூறையாடுகிறது எப்படி உலகத்தை சிலர் தமக்கு சொந்தமாக்கி வருகின்றனர் என்பதை பல்வேறு புள்ளிவிபரங்களூடாக விரிவாகப் பார்ப்போம்.