Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் துரோகமா மாற்று அரசியல்?

துரோகமா மாற்று அரசியல்?

  • PDF

மக்களுக்கு எதிரான துரோகத்தை நியாயப்படுத்துவதே மாற்று அரசியல் என்று, புலியெதிர்ப்புக் கும்பல் நிறுவ முனைகின்றது. புலிகளிள் ஒவ்வொரு பல்லும் விழும்போது, துரோகமே மாற்று என்று நிறுவப்படுகின்ற அரசியல் வக்கிரம் ஒருங்கே அரங்கேறுகின்றது. வரலாற்றின் முரண்நிலை, இதுவாக இருப்பதாக காட்டப்படுகின்றது. தமிழ் மக்களின் அரசியல் என்பது, இதுதான் என்று அறைந்து ஒட்டப்படுகின்றது. இது மீறப்பட முடியாத வகையில் ஊடகவியல் மாற்றுகள் அனைத்தையும் முடக்கி மலடாக்குகின்றது. இந்த வகையில் தமிழ் மக்களை கண்னை பிரித்து, சிந்திக்க நிர்ப்பந்திக்கின்றது.


1. புலியை ஆதரிப்பது மட்டும் தான் தமிழ் மக்களின் அரசியலாக இருக்க முடியும் என்றும்


2. புலியை எதிர்ப்பதும், புலிக்கு எதிரான துரோகக் குழுக்களையும் பேரினவாத அரசையும் ஆதரிப்பதும் தான் மாற்று என்றும் உளறப்படுகின்றது.


இதுவல்லாத கருத்துக்கு, சிந்தனைக்கு சமூகத்தில் எந்த இடமுமில்லை என்பது இவர்களின் நிலைப்பாடு. இதில் இவர்களுக்கிடையில் வேறுபாடு கிடையாது. மக்கள் தம்மைப்பற்றி தாமே சிந்திப்பது, இவர்களைப் பொறுத்த வரையில் ஒரு ஜனநாயகக் குற்றம். இப்படி இரண்டு தளத்தில் மக்களின் (எமது) அறிவு, சிந்தனை, செயல், மனிதநேயம் என்று எல்லாவற்றையும் காயடித்து, நலமடிக்கின்றனர். இதில் இருந்து எந்த விதத்திலும் மனிதர்களின் பன்முகப் பார்வை விரியக் கூடாது என்பதில், புலிகள் முதல் புலியெதிர்ப்பு கும்பல் வரை மிகக் கவனமாகவுள்ளது.


புலிகள், புலிகளுக்கு வெளியில் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களைச் சுற்றி ஒளிவட்டம் கட்டுவதே அரசியலாகி நிற்கின்றது. இதை நியாயப்படுத்த புலிக்கு பேரினவாத பாசிசம் எப்படி உதவுகின்றதோ, அப்படி புலியெதிர்ப்புக்கு புலிப் பாசிசம் உதவுகின்றது.


ஒன்றையொன்று எதிர்த்தபடி, இதற்குள் தமிழ் மக்கள் இயங்கவேண்டும் என்பது மாற்றுக் கருத்தின் உள்ளடக்கமாக காட்டுவது அரங்கேறுகின்றது. முன்னாள் இயக்கங்களான புளாட், ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.பி.டி.பி என அனைத்தும் மாற்றுக் கருத்துக்களை கொண்ட நபர்களை கொலை செய்து, அதன் மூலம் தலைமைக்கு வந்தவர்களால் தான் இன்னமும் அவ்வியக்கங்கள் துரோக வழியில் வழிநடத்தப்படுகின்றது. இந்த அமைப்புக்கள் இந்தியா இலங்கை முதல் ஏகாதிபத்தியம் வரையிலான ஐந்தாம் படையாகவே இன்றுவரை செயல்படுகின்றது.


இவர்களின் காலத்தில், இவர்களே தம்மை அம்பலமாக்கியவர்கள். மக்களுக்கு எதிரான வக்கிரங்களை கொட்டித் தீர்த்து, கொலைகள் மூலம் தமது தலைமையை தக்கவைத்து வாழ்பவர்கள் இவர்கள். வெறும் பிரபாகரன் மட்டுமல்ல, இந்தக் கூலிக் குழுக்களின் தலைவர்களும் அப்படி வந்தவர்கள். அடியாட்கள் பலம், ஆட்பலம், கைக்கூலிப் பணம், கப்பப் பணம் மூலம் இன்று நாலாம் தரமான அரசியல் செய்கின்றனர். மக்களின் அவலங்களை ஏற்படுத்தி, அதில் நக்கிப் பிழைப்பது இவர்களின் அரசியலாகின்றது. இதற்குள் நாலாம்தரமான பாராளுமன்ற வழியில் இழிந்து சீரழிந்து கிடப்பவர்களா மக்களின் மீட்பாளர்கள்!


இந்த கயவாளிக் கும்பல்களின் வழியில், காலடி எடுத்து வைத்து முன்னேறுகின்றது, கருணா என்ற புலியில் இருந்து பிரிந்த புலிக் கும்பல். கருணா கும்பல் புலிகளில் இருந்து பிரிந்தது முதல் இந்திய இலங்கை அரசின் ஒரு கூலிப்படையாக சீரழிந்து இழிந்து வருகின்றது. நாலாம்தர பாராளுமன்ற பாதைக்கு வந்து, மக்களை எப்படியும் ஏமாற்றி பிழைக்கலாம் என்று கங்கணம் கட்டி நிற்கின்றனர்.


பாவம் மக்கள். மக்கள் என்ன செய்வது. யாராவது ஒரு பொறுக்கிக்கு வாக்கு போடுவது தான் அவர்களின் ஜனநாயகம். இதை இந்த அரசியல் பொறுக்கிகள் கற்றுக்கொடுக்க முனைகின்றனர். மக்கள் இதுவரை ஆயுதம் ஏந்திய குண்டர்களுக்கு பின்னால் தலையாட்டியவர்கள், இனி நாலாம்தர பொறுக்கி பாராளுமன்ற உறுப்பினர்க்கு வாக்குபோடுவதே உங்கள் அரசியல் கடமை என்று ஒப்பாரிவைக்கின்றனர். மக்களின் சொந்த அரசியல் உணர்வை மழுங்கடிப்பதில், இவர்கள் போட்டி போடுகின்றனர்.


இப்படி புதிதாக முளைக்கும் கருணா குழு பற்றிய மாயை விதைக்கப்படுகின்றது. புலியெதிர்ப்பு புல்லுருவிகளால் கருணா பற்றிய மாயையை தொடர்ந்து தக்கவைக்கும், விபச்சாரம் புகுத்தப்படுகின்றது. இப்பத்தானே வந்தவர் என்று கூறுவதன் மூலம், அவரின் மக்கள் விரோத செயல்களைக் கண்டுகொள்ளக் கூடாது என்பதே அவர்களின் பிரச்சார உத்தி. அவர்கள் திருந்துவார்கள், அதை மீறினால் நாம் கண்டிக்கத் தான் வேண்டும். இப்படி ஒரு புளுடா. இவர்கள் எதைத்தான் எப்படி எங்கே கண்டித்துள்ளனர். ஒரு விமர்சனம் கிடையாது. இப்படி பல சூழ்ச்சிகளை அடிப்படையாக கொண்ட வக்கிரமான உத்திகள்.


ஐரோப்பாவில் இருந்து கதைப்பது, விமர்சிப்பது இலகுவானது. அங்கே உள்ள எதார்த்தம் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவது தான். 20 வருடம் புலியுடன் இருந்த கருணாவுக்கு, இராணுவத்தையும் பேரினவாதத்தையும் தெரியாத அப்பாவியா? எனவே கவலைப்படாதீர்கள், அவர்கள் மக்களின் மீட்பாளராகவே இருக்கின்றனர். இப்படி எத்தனையோ பல்லவிகள். எல்லாம் அந்தத் துரோகத்தை மூடிமறைக்க வைக்கும் நரி வாதங்கள். இது புலியையெதிர்த்து அல்ல. மக்களுக்கு எதிராக இந்த துரோகக் குழுக்கள் நடத்தும் அசிங்கத்தை அம்பலப்படுத்தும் எம் போன்றவர்களுக்கு எதிராக, கனைக்கும் வாதங்கள் தான் இவை.


மக்களைப்பற்றி கதைக்க, அவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள உறவைப்பற்றி பேசவும், அதைப்பற்றி கதைக்கவும், எந்த அரசியல் அருகதையும் இவர்களிடம் இருப்பதில்லை. இவர்கள் முன்னாள் இன்னாள் துரோகக் குழுக்களின் எடுபிடிகளாக இருந்து குலைப்பவர்கள் தான்!


கருணா கும்பலுக்காகவே இவர்கள் தலைகீழாகவே நிற்கின்றனர். கருணா கும்பல் தனது வேஷம் களையும் போது எல்லாம், பேச்சுவார்த்தை, சந்திப்புகள் என்று வேஷம் போட்டு கூத்துகளை அரங்கேற்றுகின்றனர். ஆனால் இதற்கு தலைமை தாங்கும் கருணாவோ, அப்பட்டமான ஒரு புளுத்துப் போன புலிப் பரதேசி.


இதை ஊர் அறிய பலமுறை அரங்கேற்றியவர். 24.01.2007 பி.பி.சி தமிழ் சேவையில் கருணா வழங்கிய பேட்டி, தமிழ்ச்செல்வன், தயா மாஸ்டர் பாணியில், அதே புளுத்துப் போன பொய்யை வறுகிக் கொட்டினார். அதைக் கேட்கும் தமிழ் மக்கள் எல்லோரும் கேனப்பயல்கள் என்ற நினைப்பில், அவர்களின் முகத்திலேயே பொய்யையே காறித் துப்பினான். நீங்கள் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குகின்றீர்களா என்ற கேள்விக்கு இல்லையென்றார்!. சரி சிறுவர்களை வைத்துள்ளீர்களா என்ற போது இல்லையென்றார்! ஆள் கடத்தலில் ஈடுபடுகின்றீர்களா என்ற போது இல்லையென்றார்! கொலைகள் அதுவும் இல்லையென்றார்! இப்படி அவர்களின் அன்றாட நடவடிக்கைளை மறுத்தலித்தார். அவர்கள் என்ன தான் செய்கின்றனர்!


அனைத்து மக்களுக்கும் நன்கு தெரிந்த உண்மையை மறுப்பதையும், அதை செய்கின்ற இந்த பேர்வழிகள் எப்படிப்பட்ட நேர்மையாளராக இருக்கமுடியும் என்பதை, அவர்களின் வாய்வழியாகவும் நடைமுறை ரீதியாகவும் பார்க்கின்றோம். இதைச் சுற்றித்தான் ஒளிவட்டம் கட்டப்படுகின்றது. கருணா கும்பலை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகள் தான், கருணா கும்பலின் அன்றாட அரசியல் செயல்பாடுகள். அதை மறுத்து பொய்யையே உமிழும் இவர்களை நம்பும்படி கூறுவது, தமிழ் மக்களின் காதில் துணிந்து ப+ வைப்பது தான். இதைத் தான் இவர்கள் மாற்று அரசியல் என்கின்றனர். இதையே ஜனநாயகம் என்கின்றனர்.

 
அந்த பொய்கார கொலைகாரனின், பிள்ளைபிடிகாரனின், கப்பக்காரனின் பொய்யை தேனீ, நெருப்பு, அதிரடி முதல் ரீ.பீ.சீ வரை செய்தியாக போட்டு அதையே பிரச்சாரம் செய்கின்றனர் என்றால், எப்படிப்பட்ட அரசியல் பொறுக்கிகள் இவர்கள். இதைச் சுற்றி ஒரு புலியெதிர்ப்புக் கும்பல், காவலுக்கு நின்று வள்ளென்று ஊளையிடுகின்றது. இவர்களுக்கே தெரியும் இது பொய் என்று. இல்லையென்று மறுக்கின்ற துணிவு இவர்களிடம் கிடையாது.


உண்மையில் புலிகளின் நிதர்சனம், புதினம் முதல் அனைத்து புலி ஊடகங்களும், பொய்களை எப்படி ஊதிப்பெருக்கி அதைச் சுற்றி நாய்களாய் நின்று குலைத்தனரோ, அதையே தான் இந்த புலியெதிர்ப்புக் கும்பலும் செய்கின்றது.

 
இவர்கள் புலிகளிடம், தம்மை போல் இலங்கை அரசின் துரோகத்தக்கு ஒத்துழைக்க கோருகின்றனர். இதற்கு மாறாக வேறு எந்த அரசியலும் இவர்களிடம் கிடையாது. புலிகளின் பாசிசம் சிங்களப் பேரினவாதத்தினை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி, அதை முன்னிறுத்தி ஒரு மக்களுக்கான போராட்டமாக மாற்ற முடியாத வகையில் பாசிஸ்ட்டுகளாக இருப்பதால், இந்த நாய்கள் துரோகத்துக்காக இலகுவாக குலைக்க முடிகின்றது.


புலிப் பாசிசம் தனது சொந்த விதிக்கமைய தங்களையும் தனது வாழ்வையும் முதன்மைப்படுத்தி, மக்களின் அடிப்படையான தேசிய நலன்களை புதைக்குழிக்கு அனுப்பினர். புலிகளின் இந்த அரசியல் வக்கிரத்தை சாதகமாக கொண்டு, இந்த புலியெதிhப்புக் கும்பல் துரோகத்தை மாற்றாக காட்டி குலைக்க முனைகின்றது.


பேரினவாதமும் அதன் ஒட்டுண்ணிகளாகி நிற்கும் துரோக குழுக்கள் ஒருபக்கத்திலும் மறுபக்கத்தில், புலிப் பாசிசமும் மக்களின் வாழ்வை அழித்து வருகின்றது. இந்த வாழ்வின் அவலத்தில் இருந்து தப்ப, மக்கள் படும்பாட்டை வைத்துக் கொண்டு, அதற்குள் இவர்கள் நீந்தி விளையாடுகின்றனர். மக்களின் போதுமான அவலங்கள், அவர்களின் உரிமைப் போராட்டத்தை விலை பேசப் போதுமானதாக கருதுகின்ற கும்பல்கள், எப்படித்தான் தமிழ் மக்களின் மாற்றாக இருக்கமுடியும்.


ஆயுதப் போராட்டத்தில் கடைந்தெடுத்த கொலைகார பாசிஸ்ட்டுகள், அமைதி வழியில் நாலாம்தர பொறுக்கிகள், இந்த அரசியலைத் தான் இவர்கள் தமிழ் மக்களின் பெயரில் கோருகின்றனர். இதற்குள் தமிழ் மக்களின் நலனை பூர்த்தி செய்வதாகவும், ப+ர்த்தி செய்யப்போவதாகவும் காட்டுகின்ற அரசியல் பொறுக்கிகளை, இன்று இனம் காணவேண்டியது, சமகால வரலாற்றில் அவசர தேவையாகியுள்ளது.


26.01.2007

Last Updated on Sunday, 31 August 2008 20:43