Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் சிங்களப் பேரினவாத முதலாளித்துவக் கட்சி தான், ஜே.வி.பி

சிங்களப் பேரினவாத முதலாளித்துவக் கட்சி தான், ஜே.வி.பி

  • PDF

ஜே.வி.பி தம்மை பேரினவாதக் கட்சி அல்ல என்கின்றனர். சொல்வதற்கு வெளியில், அதை நடைமுறையில் மக்கள் தாமாகவே உணரும் வண்ணம் நிறுவ முடிவதில்லை. அதேநேரம் இலங்கை வாழ் அனைத்து தொழிலாளர் வர்க்கத்தினரதும், வர்க்க விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொள்ள முனைகின்றனர்.

 

 

இதன் மூலம் ஜே.வி.பி இரண்டு செய்தியை சொல்ல முனைகின்றது.

 

1. ஜே.வி.பி தாம் ஒரு இனவாதக் கட்சியல்ல என்கின்றனர்.


2. இலங்கை பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான கட்சி என்கின்றனர்.

 

இப்படிக் கூறிக்கொண்டு, இந்த இரண்டுக்கும் எதிரான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டதே ஜே.வி.பி. ஜே.வி.பி ஒரு முதலாளித்துவ கட்சி மட்டுமின்றி, ஒரு இனவாதக் கட்சியும் கூட. சந்தர்ப்பவாத, பிழைப்புவாத நிலைப்பாட்டைக் கொண்ட இக் கட்சி, நேரத்துக்கு நேரம் சோரம் போபவர்கள். சிங்கள மக்களை மட்டுமல்ல, தமிழ் மக்களையும் சதா ஏமாற்றி பிழைக்க முனைகின்றனர். இவர்களுக்கு புலியொழிப்பை முன்வைக்கும் புலியெதிர்ப்புக் கும்பல், புலம்பெயர் நாடுகளில் ஆலவட்டம் பிடிக்கின்றனர்.

 

ஜே.வி.பி தமிழர் மத்தியில் ஒருவிதமாகவும், சிங்களவர் மத்தியில் வேறு விதமாகவும், இனப்பிரசச்னை பற்றி கருத்துரைக்கின்றனர். இதனால் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான எந்த ஆவணங்களையும், தமிழில் வெளிப்படையாக முன்வைப்பதில்லை.

 

ஜே.வி.பி தாம் இனவாதிகள் அல்ல என்று கூறும் காரணமே, நகைப்புக்குரியது

 

அவர்கள் தாம் இனவன்முறையில் ஈடுபடவில்லை என்பதால், தாம் இனவாதிகள் அல்ல என்கின்றனர். இப்படிக் கூறி அரசியல் ரீதியாக மாயாஜால வித்தை காட்ட முனைகின்றனர்.

 

இனவாத நடவடிக்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களும் தான் ஈடுபடவில்லை. ஆனால் சிங்கள பேரினவாதக் கட்சிக்கு பின்னால் அவர்கள் நின்றதன் மூலம், பேரினவாதத்துக்கு உதவினர். அவர்களோ மக்கள். ஆனால் நீங்கள் ஒரு கட்சி. அதுவும் ஒரு பாட்டாளி வர்க்க கட்சியென கூறிக்கொள்பவர்கள். இனவாதத்தில் ஈடுபடவில்லை என்ற வாதம் சரியா பிழையா என்பதற்கு முதல், இந்த இனவாதத்தை எதிர்த்து என்ன செய்தீர்கள். அதைச் சொல்லுங்கள். மானம் கெட்ட வழியில், மக்களை ஏய்த்துப் பிழைக்கும் இவர்களுக்கு அரசியல் ஒரு கேடு.

 

சரி போலிச் சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும், இலங்கை முதலாளித்துவ ஆட்சியமைப்பு எப்படி இருந்தது. சிங்கள பேரினவாதம் மூலம் தானே, முதலாளித்துவ ஆட்சியமைத்து வந்தனர். இந்த பேரினவாத அரசியலை எதிர்த்து போராடாத அனைவரும், பேரினவாதத்துக்கு துணை போனவர்கள் தான். இந்த பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதிரானதாக இருந்தது. சிங்கள அரசின் பேரினவாத நடத்தையால், தமிழ் மக்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகினர். இதனால் சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக தமிழ் மக்கள் இருந்தனர். மக்கள் விரோத அரசுக்கு எதிரான மக்களை, அணிதிரட்டாத பாட்டாளி வர்க்கப் புரட்சி என்பது பொய்யானதும் புரட்டுத்தன்மை கொண்டதுமாகும். இந்த அரசியல் போராட்டத்தை நட்பு சக்தியாக கொள்ளாதவர்கள், வரலாற்றில் இனவாதிகளையே தமது நட்பு சக்தியாக கொண்டனர். இது தான் கடந்த எமது இனவாத வரலாறு. ஜே.வி.பி என்ன விதிவிலக்கா.

 

சிங்கள பேரினவாத அரசின் அனைத்து செயலுக்கும் உடந்தையாக, செயற்பட்டவர்கள் தான் ஜே.வி.பி. பேரினவாதம் முன்வைத்த பிரதான இனவாத அரசியலை எதிர்த்து, ஜே.வி.பி கிளர்ச்சி எதையும் செய்தது கிடையாது. பேரினவாதிகளின் வழியில் இனவாதத்தை எதிர்த்து மக்களை அணிதிரட்டாது கள்ள மௌனம் சாதித்தபடி, அரசுக்கு எதிராக கிளர்ச்சி என்ற பெயரில் இளைஞர் கும்பல் சதி செய்தனர். இந்த நிலையில், தாம் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படவில்லை என்கின்றனர். இப்படி அப்பட்டமான அரசியல் பொய்யை உமிழுகின்றனர். இப்படி தம்மை தூய்மையானவராக புனைந்து கூறுவது, கடைந்தெடுத்த அரசியல் போக்கிரித்தனமாகும்.

 

இலங்கையில் இனமுரண்பாட்டை கடந்த 60 வருடமாக முன்னுக்கு கொண்டு வந்த பேரினவாதம், அதை யுத்தம் வரை இன்று இட்டுச்சென்றுள்ளனர். இதை தடுத்து நிறுத்தத் தவறிய முழுப்பொறுப்பும், தமிழ் சிங்கள பாட்டாளி வர்க்கத்தைச் சார்ந்தது. இதை மறுப்பது, பாட்டாளி வர்க்க நிலைப்பாடல்ல. இதை தமிழ் மற்றும் சிங்கள பாட்டாளி வர்க்கம் தடுத்து நிறுத்தியதா? இல்லை. எவர் இதற்கு உரிமையுடன் பதில் கூறமுடியும். ஜே.வி.பி யினால் முடியுமா எனின், முடியாது.

 

இந்த நிலையில் தம்மை பாட்டாளி வர்க்க கட்சிகளாக கூறிக்கொண்டவர்கள், இனவாதத்தை பாதுகாத்தனர். இதை எதிர்த்து போராடாததன் விளைவு, இரண்டு இனங்களும் மோதிக்கொள்ளும் பொதுவான இனவாத அரசியல் நிலைக்கு இட்டுச்சென்றது. இந்த நிலைமை உருவாக தாமும் காரணம் என்பதை, அதற்கான பொறுப்பைக் கூட ஜே.வி.பி ஏற்பது கிடையாது. தமிழ் பாட்டாளி வர்க்கம் இந்த போக்கில் சிதைந்து சின்னாபின்னமாகிய நிலையிலும் கூட அது போராடியது. பலர், தமிழ் இனவாத குறுந்தேசியவாதத்தை எதிர்த்து தமது உயிரையே இழந்தனர். உண்மையில் இனவாதத்துக்கு எதிரான குரல்கள், துணிச்சலுடன் தமிழ் பாட்டாளிகளிடையே உதிரியாகத் தன்னும் தெளிவாக முன்வைக்கப்பட்டது, முன்வைக்கப்படுகின்றது. இந்த நேர்மையான போராட்டம், இன்றுவரை சிங்கள பாட்டாளி வர்க்கத்தினிடையே துளியளவு கூட கிடையாது. சிங்கள் மக்கள் மத்தியில், சிங்கள பாட்டாளி வர்க்கம் என்று கூறிக்கொண்ட யாரும், இந்த இனவாதத்தை எதிர்த்து ஒரு பாட்டாளி வர்க்க போராட்டத்தை வைப்பது கிடையாது. மாறாக சிங்கள இனவாதத்தின் வாலில் தொங்கிக்கொண்டு, இனவாதிகளாக நாலுகால் பாய்ச்சலில் அதை முந்தமுனைகின்றனர்.

 

இலங்கையில் பேரினவாத நடடிவடிக்கையில் சிங்கள அரசுகள் ஈடுபட்டன என்பதை ஏற்றுக்கொள்வதையே இவர்கள் மறுக்கின்றனர். ஜே.வி.பியோ சிங்கள இனவாத கட்சியான சுதந்திரக்கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து அரசு அமைப்பதும், ஆதரவு கொடுப்பதுமான அரசியல் விபச்சாரத்தைச் செய்கின்றனர். அதை நியாயப்படுத்த யூ.என்.பியை முதலாளித்துவ கட்சி என்கின்றனர். இரண்டு கட்சியும் ஏகாதிபத்திய நலனை பூர்த்திசெய்யும் முதலாளித்துவ கட்சிகள் தான். இதை எதிர்த்து பாட்டாளி வர்க்கத்துக்காக போராடாது, ஒன்றை மிதவாதிகளாக காட்டி செய்யும் அரசியல், உள்ளடகத்தில் பேரினவாதமாகும். இந்த கட்சிகளின் அரசியல் என்பது, பேரினவாதம் ஊடாகவே அரங்கேறுகின்றது. இதை மறுத்தபடி தான், ஜே.வி.பி பேரினவாத்தின் தூண்களாக செயல்படுகின்றனர்.

 

பேரினவாத அரசு என்பது, ஜே.வி.பி அரசுடன் இணைந்ததனால் தூய்மையாகி நின்றுவிடவில்லை. மாறாக பேரினவாதம் தொடருகின்றது. அதை புலிப் பாசிசத்தின் பின்னால், மறைக்க விரும்புகின்றனர். இப்படி தொடருகின்ற இனவாதத்தை, எதிர்த்துப் போராடாத அனைவரும் இனவாதிகள் தான். தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாதிகளின் செயல்களை எதிர்த்து போராட முனையாத ஒரு கட்சி, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியா? யாரெல்லாம் இனவாத அரசில் சேர்ந்தும், அதை ஆதரித்தும், கள்ள மௌனம் சாதித்து செயல்படுகின்றனரோ, அவர்கள் அனைவரும் இனவாதிகள் தான். ஜே.வி.பி இதுவாகவே இருப்பது ஊர் உலகம் அறிந்தது. பேரினவாதத்துக்கு துணை போகும் ஜே.வி.பி, பேரினவாத நடவடிக்கையை எதிர்த்தது கிடையாது. மாறாக அதற்கு எண்ணை வார்த்து இனவாதத்தை தூண்டினர், தூண்டுகின்றது. பின் இவர்கள் கூறுகின்றனர், தமிழ் மக்களுக்கு எதிராக தாம் எதுவும் செய்யவில்லை என்கின்றனர். இப்படி அரசியல் வேடிக்கை காட்டுகின்றனர்.

 

தமிழ் மக்களுக்கு எதிராக இயங்கிய சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக, அதை எதிர்த்து தமிழ் மக்களுடன் சேர்ந்து எப்படி போராடினீர்கள். அதைச் சொல்லுங்கள். ஏன் வம்புப் பேச்சு. பேரினவாத நடிவடிக்கையை எதிர்த்து போராடாத இவர்கள், அதில் குளிர் காய்ந்தவர்கள். தமிழ் மக்களுக்கு எதிரான செயல்பாட்டை அடிப்படையாக கொண்ட பேரினவாத போக்கில், அரசியல் செய்கின்ற தீவிர சிங்கள இனவாதிகளாக ஜே.வி.பி இன்று செயல்படுகின்றனர்.

 

ஜே.வி.பி தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படவில்லையா?

 

ஜே.வி.பியின் தோற்றமே இனவாதம் தான். சண்முகதாசனுக்கு எதிராக கட்சியில் இருந்து சதி செய்தபடி ஓடிய ஜே.வி.பியின் பிரச்சாரம், தமிழ் விரோத உணர்வை விதைத்தது. அதில் தான் ஜே.வி.பி பரிணமித்தது. ஜே.வி.பியின் முக்கிய கொள்கை வகுப்புகளில் ஒன்று, மலையாக தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே இருந்தது. இந்திய வம்சாவழிகளாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், ஜே.வி.பி அவர்களை சிங்கள மக்கள் முன் எதிரியாக நிறுத்தியது. தமிழர்களின் விஸ்தரிப்புவாதமாக அதைக் காட்டியது.

 

ஜே.வி.பியின் இனவாத அரசியல் தளம், மலையக மக்கள் எதிரான சிங்கள இனவாத கட்சி அரசியல் நடிவடிக்கையுடன் பின்னிப்பிணைந்து சென்றது. சிங்கள இனவாதக் கட்சிகள் எதனடிப்படையில் செயல்பட்டனரோ, அதனடிப்படையில் தான் ஜே.வி.யும் செயல்பட்டது. சிங்கள இனவாதிகள் மலையக மக்களை ஒடுக்கி சிதைத்த போது, அதை ஜே.வி.பி எதிர்க்கவில்லை. மாறாக தனது பங்குக்கு அதை ஆதரித்து, எண்ணை ஊற்றி வளர்த்தவர்கள் யார் என்றால், ஜே.வி.பி தான்.

 

அவர்களை உலக தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக கூட, அங்கீகரிக்க மறுத்த பேரினவாதத்தையே ஜே.வி.பி கொண்டு இருந்தது. இதில் தம்மை பாட்டாளி வர்க்கம் என்கின்றனர். இவர்கள் பாட்டாளி வர்க்க கட்சியா? (இதை விரிவாக அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்) தூ, பிழைப்புவாதத்தை அரசியலாகக் கொண்ட ஒரு இனவாதக் கட்சி தான் ஜே.வி.பி. முழமையாகவே, சந்தர்ப்பவாதத்தின் ஏகப்பிரதிகள். இலங்கை தொழிலாளர் வர்க்கமான மலையக மக்களையே, இனவாத உள்ளடக்கத்தில் எதிர்த்தவர்கள் இவர்கள். தமிழ் மக்களின் விரோதிகளாக, இனவாதிகளாக செயல்பட்டவர்கள் இவர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களும் மொழிகளும் உள்ள ஒரு நாட்டில், அவர்கள் இணங்கி வாழும் வகையில் அதன் தனித்துவத்தை அங்கீகரிக்க மறுப்பவர்கள் தான் ஜே.வி.பி. இதனால் இனங்கள் மற்றும் மொழிகளுக்கான தீர்வு எதையும் அரசியல் ரீதியாக வைத்து, ஒரு அரசியல் கிளர்ச்சி செய்ய முடியாதவர்கள் தான் இந்த இனவாத ஜே.வி.பி. வேறு அடையாளம் இந்த இனவாதிகளுக்கு வரலாற்றில் கிடையாது.

பி.இரயாகரன்
20.09.2007