Sat04202024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்

மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்

  • PDF

இனவாதம் மூலம் மலையக மக்களின் பிரஜாவுரிமையை பறித்தவர்கள் அதற்காக கையேந்தக் கோரினர். இலங்கை பிரஜாவுரிமை வேண்டுமாயின் விண்ணப்பிக்க கோரினர்.

இந்த இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு 1951 ஆகஸ்ட் 5ம் திகதி வரை 825000 பேர் பிரஜாவுரிமை கோரி 237034 விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர். 1951 முதல் 1962 வரை 11 வருடமாக விண்ணப்பங்கள் மேல் பரிசீலனை என்ற பெயரில் தமிழ் சிங்கள இனவாதிகள் நாட்களைக் கடத்தினர். 1962 இல் 134188 பேருக்கு மட்டும் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. இது மொத்த மக்களில் 16.2 சதவீதமாகும். 1949-1964 வரையிலான காலத்தில் 184771 மலையக மக்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இலங்கை இனவாதிகள் மலையக மக்களை ஏற்றுக் கொள்ள மறுத்த நிலையில், அவர்கள் "நாடற்றவர்கள்" என்ற நிலைக்குள் மாற்றியதுடன், இந்த அடை மொழியால் இழிவாக்கப்பட்டனர்.

 

1948ம் ஆண்டு 18ம் இலக்க குடியுரிமைச் சட்டப்படி இலங்கைப் பிரஜை என்பதை அங்கீகரிக்க

 

1.பரம்பரையாக குடியிருக்க வேண்டும் அல்லது

 

2.சட்டப்படி சட்டத்தின் நிபந்தனைக்குட்பட்டு பதிவு செய்திருக்க வேண்டும் என்றதன் மூலம் அரையடிமையாக வைத்திருந்த ஒரு சமூகத்தையே நிலைதடுமாற வைத்தனர். சாதிய ரீதியாக இழிந்த நிலையில் அடக்கியாண்ட ஒரு சமூகத்தை, வாக்கு ரீதியாக கடுமையாக சுரண்டியதுடன் அடிப்படையான வாழ்விடம் முதல் கல்வியறிவற்ற நிலையில் நடைப்பிணமாக வைத்திருந்த ஒரு சமூகத்திடம், சட்டப்படி வாழ்ந்ததை நிறுவக் கோரிய போது அவர்கள் கையில் உழைப்பைத் தவிர வேறு எதுவுமே இருக்கவில்லை. மலையக மக்களின் பெயரில் வளர்ச்சி பெற்று வந்த பிழைப்புவாத தொழிலாளர் காங்கிரஸ், இதை தனது பிழைப்புக்கே சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. இந்த மக்களின் நலனில் தமிழ் சிங்கள கட்சிகள் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. மலையக மக்களை நாடு கடத்த தொடர்ச்சியான பல பேச்சு வார்த்தைகளை இந்தியாவுடன் நடத்தினர்.


1947 இல் நேரு - சேனநாயக்கா இரண்டாவது தடவையாக 8 லட்சம் மலையக மக்களின் தலைவிதி தொடர்பான பேச்சு வார்த்தையை நடத்தினர்.

 

1953 இல் நேரு - டட்லி பேச்சு வார்த்தை லண்டனில் நடந்தது. இதில் இந்தியா 3 லட்சம் பேரை ஏற்க வேண்டும் என்றும், மற்றவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் பேசப்பட்டது. இதில் 3 லட்சம் மக்களை கட்டாயத்தின் பெயரில் நாடு கடத்தப்படுவர் என்று கூறியதால், இதை நேரு ஏற்றுக் கொள்ள மறுத்ததால் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

 

1954 இல் நேரு - கொத்தலாவல பேச்சு வார்த்தை புதுடெல்லியில் நடைபெற்றது. இதுவும் தோல்வி பெற்றது.

 

1962 க்கு பின்பாக பகிஸ்தானுக்கு 5749 பேர் நாடுகடத்தப்பட்டனர்.

 

1964 இல் 1008269 மலையக மக்கள் இலங்கையில் இருந்தனர். இவர்கள் தொடர்பாக 1964.10.30 இல் சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் கையெழுத்தானது. மலையக மக்களை நாடுகடத்துவதை துரிதமாக்கியது. இந்த ஒப்பந்தப்படி 975000 பேரில் 525000 பேரை, அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் 15 வருடத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்துவதை உறுதி செய்தது. அதே நேரம் 3 லட்சம் பேருக்கு அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் இலங்கை பிரஜாவுரிமை வழங்குவதாக இனவாதிகள் ஒத்துக் கொண்டனர். 1.5 லட்சம் பேரின் தலைவிதியை 1974 இல் தீர்மானிப்பதாக கூறியது.

 

1974 இல் சிறீமா - இந்திரா ஒப்பந்தம் முந்திய ஒப்பந்துக்கு உட்படாத மக்களை பரஸ்பரம் பாதியாக பங்கிட்டுக் கொள்வதாக கையெழுத்திட்டு ஒரு மாபெரும் மனித விரோதத்தை அரங்கேற்றினர்.

 

ஒரு மக்கள் கூட்டத்தின் தலைவிதியை, மனித விரோதத்துக்கு தலைமை ஏற்ற இரு தலைவர்கள் தீர்மானிக்கும் விடையமாக்கினர். மக்களை மந்தைக் கூட்டம் போல் நடத்தினர். இடதுசாரி மற்றும் முற்போக்கு வேடமிட்ட இனவாத அரசு நிலவிய காலத்தில் தான், இந்த மாபெரும் இனவிரோத ஒப்பந்தங்கள் அரங்கேறின. இந்த இனவாத ஆட்சிகளில் இலங்கையின் போலி இடதுசாரிகள் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். வலதுசாரிகள் இதற்கு ஆசி வழங்கினர். இலங்கை இனவாத வரலாற்றில் எதிர்ப்பற்ற வகையில் நாடுகடத்தலை அனைவரும் அங்கீகரித்தனர். 1971-77 இல் உடுதுணியுடன் நாய் பிடிப்பது போல் மலையக மக்களை பிடித்து, ஆயிரக்கணக்கில் இந்தியாவுக்கு நாடுகடத்தினர். ஒட்டு மொத்தமாக நாடுகடத்தப் பட்டவர்களில் 88 சதவீதமானவர்கள் இந்தியாவை முன்பே பார்த்ததேயில்லை. இந்த நிலையில் ஒரு மனித விரோதம் அரங்கேறியது. இக் காலத்தில் தமிழ் தேசியம் இன்றைய ஆயுதப் போராட்டத்துக்கு அத்திவாரமிட்ட காலமாகும். ஆனால் இந்த மலையக மக்களையிட்டு போராடவில்லை. நாடு கடத்தல் வேகம் பெற்றது.

 

 

ஆண்டு                        இந்தியா அனுப்பட்டோர்                       இலங்கைப் பிரசாவுரிமை பெற்றோர்

1964                                               14                                                                                             -

1965                                               51                                                                                            -

1966                                          1910                                                                                             -

1967                                          2648                                                                                             -

1968                                          2123                                                                                        170

1969                                          5284                                                                                      2929

1970                                          8733                                                                                     7469

1971                                        21867                                                                                   13696

1972                                       27575                                                                                    16107

1973                                       33175                                                                                   15805

1974                                               -                                                                                          -

1975                                    106425                                                                                     60813

1976                                    190802                                                                                   104570

1978ஜீன் 30 வரை        229925                                                                                   131473


1971-77 க்கு இடையில் வேகமாக நாடுகடத்தல் நடந்தது. விசேட புகைவண்டி இதற்கென இனவாதிகள் பயன்படுத்தினர் இந்த அவலமான புகைவண்டியில் எழுந்த கதறல்கள் அந்த வண்டி சென்ற இடமெல்லாம் பிரபலித்து எதிரொலித்தது. இந்த புகைவண்டிக்கு "அழுகைக் கோச்சி" என்ற பெயர் வழங்கலாயிற்று. ஒரு இனத்தின் பிரிவிலும் சோகத்திலும் மற்றைய இனங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன் மூலம் அற்ப எலும்புகளை மற்றைய தேசியங்கள் பெற்றுக் கொண்டன. 19.10.1983 வரை மொத்தம் 107580 குடும்பத்தைச் சேர்ந்த 428380 பேர் நாடு கடத்தப்பட்டனர்.

 

மனித விரோத வரலாற்றை இனவாதிகள் அரங்கேற்றிய போது, சிறுபான்மை இனங்களின் தலைவர்களும் சொந்த இனத் தேசிய தலைவர்களும் அப்பட்டமான துரோகத்தையே கையாண்டனர். சிறீமா- சாஸ்திரி ஒப்பந்தம் செய்த போது தொண்டமான் அரசாங்கத்தில் நியமன எம்பியாக நக்கியே பிழைப்பை நடத்தினார். இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தால் சொத்துகள் பறிக்கப்படும் என்ற மசோதாவை பாராளுமன்றம் நிறைவேற்றியது. இன தலைவர்களாக இருந்த சொத்துக்கு சொந்தக்காரர்கள், இந்த ஒப்பந்தத்தை அனுசரித்து ஆதரித்து நின்றனர். 1967 நாடு கடத்த வசதியாக நாடற்றவர்களை கண்டறிய தனி இடாப்பு அவசியம் என்று கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பீற்றர் கெனமன் கொண்டு வந்த போது, அதற்கு இனவாதிகள் கட்சி பேதமின்றி ஆதரித்தும் பேசியும் வாக்களித்தனர். இதையே சிறீமா 1964 கொண்டு வர முயன்ற போது சாத்தியமாகவில்லை. இனவாதம் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கூட விட்டுவைக்கவில்லை. சிறீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த தமிழரசுக்கட்சி, 1966ம் ஆண்டு டட்லி சேனநாயக்காவின் ஆட்சியில் இதை ஆதரித்ததுடன் நாடு கடத்துவதற்கு ஒத்துழைத்தனர். இதை எதிர்த்த எம்.மாணிக்கம் தனது பதவியைத் துறந்தார்.

 

1949 இல் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டதை எதிர்த்து உருவான தமிழரசுக் கட்சி அந்தக் கோரிக்கையை கைவிட்டது. இந்த நிகழ்வு மீண்டும் அம்மக்களுக்கும், தமிழ் மக்களுக்கும் செய்த வரலாற்றுத் துரோகமாகும். இந்த துரோகத்தை 1957 இல் யூலை 27 இல் செய்து கொண்ட பண்டா - செல்வா ஒப்பந்தம் பூர்த்தியாக்கியது. அந்த ஒப்பந்தம்

 

1.சிங்கள குடியேற்றத்தை நிறுத்தல்.

 

2.தேசிய சிறுபான்மை மொழியாக தமிழை அங்கீகரித்தல்.

 

3.வடக்கு - கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக இருத்தல்.

 

4.தமிழ் மக்கள் தம் கருமங்களை தமிழில் ஆற்றவும், பண்பாட்டை வளர்க்கும் உரிமை உண்டு.

 

5.பிரதேச சபை மூலம் பிரதேச சுயாட்சி வழங்கப்படும்.

 

மலையக மக்களின் பிரஜாவுரிமை என்ற விடையத்தை அப்படியே கைவிட்டனர். மாறாக அந்த இனவாதத்தை அங்கீகரித்தே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. தேசியம் குறுந் தேசியமாக சிதைந்ததைக் காட்டுகின்றது. இது இன்று வரை நிவர்த்தி செய்யப்படவில்லை. மற்றைய இனங்கள் மேல் இனவாதத்தை கையாள்வதை அங்கீகரித்தே, இந்த ஒப்பந்தம் சலுகை பெறுவதை உறுதி செய்தது. ஒரு நாட்டில் இனவாதத்தை எதிர்த்து நடக்கும் ஒப்பந்தங்கள், மற்றைய இனங்கள் மேலான இன ஒடுக்குமுறையை ஒழிப்பதை நிபந்தனையாகக் கொள்ள வேண்டும். இல்லாத வரை மற்றைய இனங்கள் மேலான ஒடுக்குமுறையை இணைந்து அங்கீகரிப்பது என்பது, இந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிவதற்கு முன் கூட்டியே அங்கீகரிப்பதை நிபந்தனையாக்குகின்றது. ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது என்பது உண்மையில் தமிழ் தலைவர்களின் சொந்த துரோகத்தில் இருந்தே தொடங்குகின்றது. மற்றைய இனங்களை ஒடுக்க அங்கீகரிக்கும் இணை ஒப்பந்தங்கள் இனவாதத்தில் மேலும் துளிர்க்கின்றது. இந்த ஒப்பந்தங்கள் பரஸ்பரம் சொந்த இனத்தின் மீதான இனவாத அணிதிரட்டலை மேலும் ஆழமாக்குகின்றது.

 

இந்த ஒப்பந்தம் அழுல் செய்யப்படவில்லை. 1958.4.8 இல் இந்த ஒப்பந்தம் பகிரங்கமாக இனவாதிகளின் முன்னிலையில் கிழித்தெறியப்பட்டது. இனவாதத்தை ஒழிக்காத பல்தேசிய இனங்கள் உள்ள நாட்டில், இரண்டு இனங்கள் மற்றைய இனங்களை ஒடுக்குவதை அங்கீகரித்து செய்யும் ஒப்பந்தத்துக்கு நடக்கும் கதியே விரைவில் நடந்து முடிந்தது.

 

1960 இல் தமிழரசுக் கட்சி நான்கு கோரிக்கையை வைத்தது.

 

1.பிரதேச சபைகளை அமைத்தல், குடியேற்றங்களை நிறுத்தல்

 

2.தமிழ் மொழிக்கு சட்ட அந்தஸ்து

 

3.பிரஜாவுரிமைச் சட்டத்தை திருத்தல்

 

4.குடியுரிமை பிரச்சனை தீர்க்கும் வரை 6 நியமன உறுப்பினரில் நான்கை மலையக மக்களுக்கு வழங்கல்

 

தமிழரசுக்கட்சி மீண்டும் சில கோரிக்கையுடன் தம்மை நிலைநிறுத்த முனைந்தனர். பிரஜாவுரிமைச் சட்டத்தை திருத்தக் கோரினர்களே ஒழிய நீக்கக் கோரவில்லை. இதற்குள்ளேயே இனவாதமும், பிரஜாவுரிமையை பறிக்கும் கோரிக்கையும் உள்ளடங்கிய வகையில், அரசியல் ரீதியாக இனவாதமாக சீரழிந்து காணப்பட்டது. அத்துடன் இந்த குடியுரிமையை தீர்க்கும் வரை பாராளுமன்ற கதிரைக்கு சிலரை நியமிக்க கோரினர். இதன் மூலம் இதை உடனடியாகத் தீர்க்க தேவையில்லை என்ற அரசியல் உள்ளடக்கம் மூலம், இனவாதத்தை தொடரும் கண்ணியை கோரினர். இனவாதத்தை ஒழிக்க போராடுவதற்கு பதில் அதை தொடரும் வகையில் கோரிக்கைகளை அமைத்துக் கொண்டனர்.

 

1965 இல் செல்வா - டட்லி இரகசிய ஒப்பந்தம் மூலமே டட்லி ஆட்சிக்கு வந்தர். இதைத் தொடாந்து டட்லி ஆட்சி ஏறுவதற்கு முதல் நாள் அதாவது 24.3.1965 இல் டட்லி - செல்வா ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் உள்ளடக்கம்

 

1.மாகாணசபை அமைப்பது

 

2.வடக்கு கிழக்கில் தமிழ்மொழி அமுலாக்கம்

 

3.சிங்கள குடியேற்றத்தை தடுப்பது


இந்த ஒப்பந்தமும் மேலும் ஆழமான இனவாதத்தில் தமிழரசுக் கட்சி சிதைந்ததைக் காட்டுகின்றது. முந்திய ஒப்பந்தத்தை விட பதவி சுகத்துடன் மக்களை ஏமாற்றும் ஒரு நாடகத்தை தமிழரசுக் கட்சி ஆடியது. மலையக மக்களுக்கு முதுகில் குத்துவதில் தலை சிறந்தவர்களாக இருந்தனர். ஒப்பந்தம் மறுபடியும் இலங்கை இனவாதத்தை ஒழிப்பதைக் கோரவில்லை. சில எலும்புகளை பெற்ற படி இனவாதத்தை தொடரவும் அதற்கு ஒத்துழைப்பதை உறுதி செய்தனர். இருந்த போதும் பெரும்பான்மை இனவாதிகள் சிறுபான்மை இன உதவி இன்றி இனவாதத்தை கட்டவிழ்த்து விட முடியும் என்பதால், எலும்புகள் வீசப்படுவதை அனுமதிக்கவில்லை. இந்த எலும்புக்கான ஒப்பந்தத்தை 1968 இல் கைவிட்டனர். சிறீமா- சாஸ்திரி ஒப்பந்தத்தை எதிர்த்து வந்த தமிழரசுக் கட்சி, அதைப்பற்றி ஒப்பந்தத்தில் ஒரு வார்த்தை கூட முன்வைக்கவில்லை. இது போல் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டவர்களின் கதியையும் இந்த ஒப்பந்தம் பேச மறுத்தது. மக்களின் வாக்கை கவர மட்டும் அந்த மக்களின் உரிமைகளைப் பற்றி வாய் கிழிய பேசியவர்கள், அந்த மக்களின் முதுகில் குத்தி துரோகத்தை தொடர்ந்தனர். தமிழரசுக் கட்சியின் இனவாத வரலாறு இப்படித் தான் பல ஆதாரத்துடன் தொடர்ந்தது. இந்த நிகழ்வும் இலங்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சிறுபான்மை இனம் சார்ந்த ஒரு இனவாத நடவடிக்கையாகும். புpரஜாவுரிமை பறிக்கப்பட்ட போது தமிழ் தலைவர்கள் இதை ஆதரித்தே நின்றனர். எதிர்த்தவர்கள் பின் மறைமுகமாக ஆதரிக்கத் தொடங்கினர். மலையக மக்கள் உழைக்கும் வர்க்கமாக இருந்ததாலும், அந்த வர்க்கம் தமக்கு எதிரானது என்பதாலும், தமிழ் தேசியம் இந்த பறிப்புக்கு கம்பளம் விரித்தது.

 

இந்திய இலங்கை ஒப்பந்தம் 1987 இல் செய்து கொள்ளப்பட்ட போதும் இந்த துரோகம் மீண்டும் அரங்கேறியது.


சரத்து 1.2 இல் மலையக மக்களை இலங்கையின் ஒரு தேசிய இனமாகவே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. தேசிய இனமாக தமிழ், சிங்கள, முஸ்லீம், பர்ஹர்களை தேசிய இனமாக ஏற்றவர்கள், மலையக மக்களை ஏற்றுக் கொள்ள வில்லை. மாறாக அவர்களை மற்றொரு சரத்து மூலம் திருப்பியனுப்புவதை உறுதி செய்தனர்.


சரத்து 2.16 இல் இலங்கையில் உள்ள மலையக மக்களை இந்தியாவுக்கு அழைத்துக் கொள்ள துரிதமாக இந்தியா செயற்படும் என்று இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் இனவாதத்தை எதிர்த்து தமிழ் தேசியம் போராடவில்லை. மலையக மக்களை இலங்கை ஒரு சிறுபான்மை தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் ஒப்பந்தம் அனைத்துமே, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டே எழுகின்றது. மலையக மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க மறுக்கும் தேசியம், குறுந் தேசியமாக இனவாதமாக சீரழிந்து கிடப்பதையே காட்டுகின்றது.

 

அண்மையில் நோர்வேயின் பேச்சு வார்த்தையை தொடர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை திருப்பி அனுப்ப முயலும் போது மற்றொரு துரோகம் வெளிப்பட்டது. தமிழ் தேசிய தலைவர்கள் மேற்கத்தைய தலைவர்களிடம் தற்காலிகமாக அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சி வேண்டுகோள் விடுகின்றனர். அவர்கள் தற்போது வாழும் நாட்டில் வாழும் உரிமை, மற்றும் திரும்பிச் செல்லும் அவர்களின் விருப்பங்களை முன்வைத்து கோரவுமில்லை, போராடவுமில்லை. இதைத்தான் மலையக மக்களுக்கு தமிழ் தேசியம் காலகாலமாக செய்து வந்த ஒரு துரோக வரலாறாகும்.


விகிதாசார தேர்தல் முறை பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை அடியோடு ஒழித்தது. இனவாதத்தை அனைத்து கட்சியும் அரசியலாக கொண்ட நிலையில், சிறுபான்மை கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் நிலை உருவானது. அத்துடன் இந்த தேர்தல் முறை மலையக மக்களின் பிரதிநிதிகளை சொந்தமாக பாராளுமன்றம் அனுப்பும் அல்லது தீர்மானிக்கும் சக்தியாக மாறியது. இதைத் தொடர்ந்து ஆட்சியை தக்க வைக்க அவர்களின் தயவைப் பெறவும், 1986 இல் மலையக் மக்களின் ஒருபகுதியினருக்கு பிரஜாவுரிமை வழங்கிய போது, சுதந்திரக்கட்சியும் அதனுடன் இருந்த கட்சிகளும் எதிர்த்தன. இந்த பிரஜாவுரிமை வழங்கியது இனவாதத்தை ஒழிப்பதை மையமாகக் கொள்ளவில்லை. மாறாக இனவாதத்தை ஆழமாக்கும் பலத்தைக் கோரி ஒரு பகுதியினருக்கு வழங்கப்பட்டது. மிகுதியானவர்களை 1987 ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் நாடு கடத்தவே மீண்டும் கோரியது, மீண்டும் இன்றுவரை கோருகின்றது.

Last Updated on Sunday, 14 June 2009 07:08