Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஆபாசமும்! கவர்ச்சியுமா! மனித கலாச்சாரம்?

ஆபாசமும்! கவர்ச்சியுமா! மனித கலாச்சாரம்?

  • PDF

கலாச்சாரங்கள் எங்கிருந்து எப்படி உருவாகின்றது? இவை மனிதக் கற்பனைகளில் இருந்தல்ல. மாறாக மனித வாழ்வியல் முறைகளில் இருந்து உருவாகின்றது. இந்த மனித வாழ்வியல் முறைகள், பொதுவாக பிளவுபட்ட இரு சமூகப் போக்கில் உருவாகின்றது. உழைப்பில் ஈடுபடும் மக்கள் ஒருபுறம், உழைப்பில் ஈடுபடாது உழைப்பவனின் உழைப்பைத் திருடி வாழும் கூட்டம் மறுபுறமாக, இரண்டு கலாச்சாரத்தின் ஊற்று மூலமாகவுள்ளது.

 உழைப்பை திருடி வாழ்பவன், தனது திருட்டை நியாயப்படுத்தும் சமூக ஓழுங்கு தான் ஜனநாயகம் என்னும் கலாச்சாரம். மற்றவன் உழைப்பை திருடுவது மனித சுதந்திரமாக, அதை அங்கீகரிப்பது ஜனநாயகமாகின்றது. இதையொட்டி கலாச்சாரங்கள் உருவாகின்றது.

 

மற்றவன் உழைப்பை அவனின் கண்ணுக்கே புலப்படாத வகையில் சூக்குமமாக திருடும் சுதந்திரத்தை, ஜனநாயகப் படுத்துகின்ற சமூக அமைப்பு ஒழுங்குகள் சட்டங்களாக, அவையே இணக்கமான கலாச்சாரமாகின்றது. உழைப்பை மட்டுமல்ல, மனித வாழ்வியலையே சுரண்டும் கட்டமைப்பே நுகர்வு கலாச்சாரமாகின்றது. இவைகளைத் தான் உலகமயமாதல் தாங்கி நிற்கின்றது. இப்படிப்பட்ட நுகர்வுக் கலாச்சாரத்தின் சொந்த அசிங்கம் என்னவென்றால், அது தனது கவர்ச்சியான ஆபாசமான கிறுக்குத்தனத்தை, மொத்த மக்களின் கலாச்சாரமாக்குகின்றது.

 

இப்படிப்பட்ட நுகர்வுக் கலாச்சாரத்துடன், அதாவது அதன் கவர்ச்சி ஆபாசத்துடன் மனிதன் இணங்கிப் போவதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம். ஆனால் எம்மை அறியாமல் இந்த அசிங்கமான சாக்கடைக்குள் மூழ்கி வாழ்வது மறுபுறம். இதற்குள்ளான வாழ்வியல் முரண்பாடுகள். சமூகத் தீர்வுகளற்ற, தனிமனித உளவியல் நெருக்கடிகளாகின்றது.

 

உண்மையில் இந்த நுகர்வுக் கலாச்சாரம் தனிமனித மன உளைச்சல்களை உற்பத்தி செய்து, அதை அந்தரத்தில் அனாதையாகவே தவிக்கவிடுகின்றது. பதற்றம், பீதியும், வாழ்வு பற்றி நிலையற்ற கோட்பாடுகளுடாக, அராஜகவாத உணர்ச்சியில் மனிதமே மரணித்துப் போகின்றது.

 

நுகர்வுக் கலாச்சாரத்தின் நெருக்கடி சார்ந்த விவாதமோ, பழமைக்கும் புதுமைக்குமானதாக, மாற்றத்துக்கும் மாற்றத்தை மறுப்பதற்கும் இடையிலானதாக சுருக்கி பார்க்கின்ற, சமூக அறியாமைக்குள் புதைந்து போகின்றது. இது அல்லது அது என்ற ஓடுகாலித்தனம். சமூகத்தில் நிலவும், எதிரெதிரான பொருளாதார முரண்பாடுகள் மீது, சார்ந்து நிற்கின்ற சுயநலம் சார்ந்த அற்பத்தனம் அரங்கேறுகின்றது. இப்படி சமூகத்தைப் புரிந்து கொண்டதாக நம்புகின்ற தனிமனித முட்டாள்தனங்கள். இதுவே சிந்தனைத் தளத்தில் இன்று ஆதிக்கம் செலுத்துகின்றது.

 

இந்த வகையில் இயற்கையில் மனிதனின் வாழ்வு உருவாக்கிய, வாழ்வதற்கான மனிதத் தன்மைகளை நாம் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்துகின்றோம். சமூக வாழ்வு என்பது, தனிமனித நுகர்வுக்கு எதிரானதாக கட்டமைக்கும் உலகமயமாதல் கலாச்சாரமே, இன்று எங்கும் எதிலும் கோலோசுகின்றது. சமூகத்தை இழிவாக்குகின்றதும், இழிவுபடுத்துகின்றதுமான, தனிமனித வக்கிரங்கள் ஒழுக்கங்களாகின்றது. இந்த வகையில் முடிவுகள், நடைமுறைகள், விஞ்ஞான நடைமுறைகள் என அனைத்தும் சுருங்கிப் போகின்றது. உலகமயமாதல் முடிவுகள் முதல் தனிமனித முடிவுகள் வரை, இதற்குள் தான் சுற்றிச்சுற்றி குட்டி போடுகின்றது.

 

மனிதன் வாழ்வு சார்ந்து இயற்கை ஏற்படுத்திய முரண்பாட்டை, மனிதர்களுக்கு இடையிலான முரண்பாடாக முதன்மைப்படுத்தி மோதவைக்கப்படுகின்றோம். மனிதத்தன்மை இழத்தலே, இவற்றுக்கான அடிப்படையாகும். மனித உழைப்பும், உழைப்பு பிரிவினையும் ஏற்படுத்தி இடைவெளியை எல்லாம் மனித பிளவாக்குகின்றோம். இந்த வகையில் நாம் எல்லா வகையிலும் எமது சொந்த மனிதத்தன்மையை இழக்கின்றோம். இனம், நிறம், மொழி, சாதி, மதம், பால், கலாச்சாரம், பண்பாடு, உழைப்பின் வகை என எங்கும், இன்னும் ஏதேதோ வகையில் இதற்குள் பிளவைத் தேடி ஒடும் எமது குறுகிய மனப்பாங்கு, மனிதத் தன்மைக்கே எதிரானது.

 

சரி இவை எல்லாம் எதற்காக? மற்றவனை விட என்னையும், என்னைச் சுற்றியும் மேம்படுத்த, மேம்படுத்திக் காட்ட நினைப்பது ஏன்? சக மனிதர்களையே எமது எதிரியாக எம்முன் நிறுத்துவது ஏன்? இப்படி மனிதர்களையே இழிவுபடுத்தி உழைப்பைத் திருடி வாழும் வாழ்வையே சுதந்திரமாக, ஜனநாயகமாக காட்டுவது தான் உண்மை. பொதுவாகவே சமூகத்தின் பரிதாபகரமான நிலை இதுவென்றால், அதன் எல்லைக்குள் மனித உறவுகள் நலமடிக்கப்படுகின்து.

 

மனித உறவுகளின் சிதைவுகள்

 

மனிதன் தனக்குள் கொண்டுள்ள சமூக உறவுகளின் சிதைவுகள் தான், உலகமயமாதலின் ஊக்க மருந்துகளாகும். மறுபக்கத்திலோ சமூகமாக வாழத் துடிக்கின்ற இயற்கை சார்ந்த சூழல். இது உலகம் தழுவிய ஒரு சூழல். இயற்கை, செயற்கை எங்கும் இந்த முரணிலை உண்மை, தனிமனித குதர்க்க வாதத்தை மறுதலிக்கின்றது. இயற்கைக்கு வெளியில் மனித வாழ்வு கிடையாது என்பதால், மனிதனை பிளக்கும் தனிமனித வாழ்வு சார்ந்த குதர்க்கங்கள் இயற்கையாவே மறுதலிக்கப்படுகின்றது. செயற்கையான தனிமனித நலனை சுங்கானாக கொண்ட உலகமயமாதல், தனது சொந்த தனிமனித வக்கிரம் கொண்ட நுகர்வுக் கலாச்சாரத்தினால், மொத்த சமூகம் சார்ந்த சமூக நுகர்வு சார்ந்த கலாச்சாரத்தையே அழிக்கின்றது. மனித தேவையை மறுத்து, பணம் கொடுத்து வாங்கும் கும்பலின் தனிமனித தேவையை முதன்மைப்படுத்துகின்றது. இதையொட்டிய கலாச்சாரமே, மனித கலாச்சாரமாகின்றது. தனது சுயநலம் கொண்ட சொந்த வாழ்வியல் நடைமுறையை, மொத்த சமூகம் மீது திணிக்கின்றது.

 

இது குடும்ப அலகுகளைக் கூட பிய்த்து, அதை பிசைந்து போடுகின்றது. இதற்குள் கசங்கி வாழும் குழந்தைகளின் மனித மனப்பாங்கு ஒருபுறம். இதை எதிர்த்து அதை எதிர்கொள்ளும் பெற்றோர்கள் மறுபுறம். கடந்த வந்த மனித வரலாற்றை விட, புதிய அதிரடியான உலகமயமாதல் முரண்பாடுகள். அதாவது இது தலைமுறை முரண்பாடுகளை கூட கடந்து உருவாகின்றது.

 

இது நடைமுறை வாழ்வியல் எதார்த்தத்தில் பலவிதமாக பிரதிபலிக்கின்றது. ஆழம் காணமுடியாத, கலாச்சார முரண்பாட்டின் வடிவில் இது பிரதிபலிக்கின்றது. எது சரி எது பிழை என்று தீர்மானிக்க முடியாத நிலை. குறுகிய எதிரெதிரான பிரதிவாதங்களுக்குள், தானாகவே சொந்த சுழற்சியில் சிக்கிவிடுகின்றது. சமூகத்தில் என்ன மாற்றம் நடக்கின்றது என்பதையும், அது எப்படி எந்த வழியில் நடக்கின்றது என்பதையும் கருத்தில் எடுப்பதில்லை? இது குடும்பத்தில் பாரிய முரண்பாட்டை, பிளவை உருவாக்குகின்றது.

 

1. பெற்றோர்கள் தாம் விரும்பியதை ஒற்றைப் பரிணாமத்தில் குழந்தைகள் மீது திணிக்க முனைகின்றனர்.

 

2. பெற்றோர்கள் தாம் விரும்பியதை, குழந்தைகள் அப்படியே பின்பற்றுவதாக மனப்பிரமை கொள்ளுதல். அதாவது தமது சொந்த இயலாமையை வெளிக்காட்டாத வகையில் முரண்பாடாகவே வாழ்தல்.

 

3. குழந்தைகளின் செயல்களை தாம் விரும்பிய வழிகளில் செல்வதாக கற்பித்து, அது தமது கோட்பாட்டுக்கு இசைவாக இருப்பதாக எண்ணி அதை விளக்குதல், பின் அதற்கு தத்துவ விளக்கம் வழங்குதல்.

 

4. குழந்தைகள் தாம் விரும்பியதை ஒற்றைப் பரிணாமத்தில் பெற்றோர் மீது திணித்தல்

 

இந்த வகையிலான நடைமுறைகள், கருத்துகள் அன்றாட வாழ்வில் விடையமாகின்றது. உலகமயமாதல் உருவாக்கும் பொதுவான தோல்வி மனப்பாங்கை திருத்திசெய்யும் உளவியல் மனப்பாங்கில், பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக காட்சியளிக்கின்றது. போலித்தனமான இணக்கப்பாடு அல்லது வால் பிடித்துச் செல்லுதல் என்ற நிலைக்கு தானாகவே தரம் தாழ்ந்து விடுவது என்பது இதன் பண்பாகும். இப்படி சமூக ஒட்டத்தின் பிரதான விடையம் கண்டுகொள்ளாது தவிர்க்கப்படுகின்றது. அறிவியல் பூர்வமான விவாதம் தவிர்க்கப்பட்ட, தனிமனித குதர்க்கத்தினால் சமூக இழிவின் எல்லையில் சமூகம் சரிந்து வீழ்கின்றது. இது இயல்பில் தன்னை தக்கவைக்கின்ற சுயநலம் கொண்ட குத்தலான குதர்க்க வாதமாகின்றது.

 

1. இந்த உலகத்தின் அவரவர் நம்புகின்ற வாழ்வியல் முறையை, முரண்பாடின்றி சரி என்று ஏற்றுக்கொள்ளும் மனப்போக்காக வெளிப்படுகின்றது. தத்தம் செயலை குதர்க்கமாக நியாயப்படுத்தவும் முனைகின்றது.

 

2. சமூக உறுப்புகளின் செயல் சார்ந்த கோட்பாடுகளும் நடைமுறைகளும், அவை எவ்வளவு தான் சமூக உறவுகளில் முரணாக முரண்பாடாக இருந்தாலும் சரி, முரணற்றதாக இருந்தாலும் சரி, அதை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்காத மாறாத்தன்மை கொண்டதாக காட்டி நடிக்கின்ற போலித்தனமே மனித உணர்வாக அரங்கேறுகின்றது. அதாவது மாற்றம் எதுவுமின்றி வாழ்வதாக காட்டி நடிக்க முனைகின்றனர்.

 

3. சமூக உறுப்புகளின் முரண்பட்ட அல்லது முரண்படாத பொது உலகம் சார்ந்த உலக கண்ணோட்டம் (நோக்கு) தவறாக இருப்பதை காணமறுப்பதன் மூலம், ஒன்றிலிருந்து ஒன்றுக்கு தாவி நியாயப்படுத்துவது காணப்படுகின்றது.

 

4. உலகின் மனித வாழ்வு சார்ந்து அனைத்தும் மாறிக் கொண்டிருக்கின்றது என்பதையும், இவற்றில் சரி பிழைகள் உலகம் தழுவியதாக எங்கும் எதிலும் இருக்கின்றது என்பதையும் ஏற்றுக்கொள்ள மறுப்பது, மனித உறவுகளில் பிரதானமானதும் அடிப்படையானதுமான முரண்பாடாகும்.

 

5. உலகம் தளுவியதாக, பொதுமைப்படுத்தி மனித உறவுகளை பார்க்க மறுக்கின்ற குறுகிய உளவியல் மனப்பாங்கு, தனக்கே எதிராகவே அதை நிறுத்துகின்றனர்.

 

மனித உள்ளடக்கத்தில் உலகைப் புரிதல், பரஸ்பரம் மனித்தன்மை என்னும் ஜனநாயக மனப்பாங்கை வளர்த்தல் ஊடாக, சமுதாய நடைமுறைகளின் சரி பிழைகளை கற்றல், கற்றுக்கொடுத்தல் என்பதை மறுப்பதே, சமூகத்தின் பொதுப்புத்தியாகும். இதன் விளைவை சமூகம் தனது சொந்த சீரழிவின் ஊடாக அனுபவிக்கின்றது. வெறும் மந்தைக் கூட்டமாக, நுகர்வுச் சந்தையில் மேய்வதே அதன் சமூக அறிவாக சுருங்கிவிட்டது.

 

இப்படி உலகின் பண்பாடுகளை கலச்சாரத்தை தீவிரமாக மாற்றுவதில், நுகர்வைத் தூண்டும் சந்தை சார்ந்த நலன்கள் முக்கிய பங்கை இன்று வகிக்கின்றது. அதேநேரம் சந்தைக்கு வெளியில் உழைத்து வாழ்பவனின் உழைப்பு பண்பாட்டுக்கும், சந்தை உருவாக்கும் நுகர்வுப் பண்பாட்டுக்கும் இடையில் பாரிய முரண்பாடு உருவாகி சமுதாயத்தை முடமாக்குகின்றது. நுகர்வுப் பண்பாடு வீங்கி வெம்பி உள்ள சமுதாய உள்ளடக்கத்தில், தனிமனிதன் சார்ந்த குறுகிய நலன்கள் உந்தித் தள்ளுகின்றது. கவர்ச்சியும் ஆபாசமும் நிறைந்த நுகர்வு வக்கிரம், கலாச்சாரமாக பண்பாடாக திட்டமிட்டு உற்பத்தியாகின்றது. ஒரு விளம்பரம் எப்படி எந்த நோக்கில் (உத்தியில்) உருவாக்கப்படுகின்றதோ, அந்த நோக்கில் அதே வகையில் மக்களின் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் சந்தை உற்பத்தி செய்கின்றது. உலகமயமாதல் என்ற சமூகப் போக்கில், இது உலகம் தளுவிய சந்தையாகின்றது.

 

இந்த நுகர்வுக் கலாச்சாரத்தின், காவியாக பெண் மாற்றப்பட்டாள். சமூக அளவில் இதை பெண் எப்படி உணரவில்லையோ, அப்படி ஆணும் உணரவில்லை. சமூகம் மலடாகிப் போக , அதனிடத்தில் இவையே கோலோச்சுகின்றது.

 

உதாரணத்துக்கு பெண்ணின் உடுப்பு

 

பெண் எப்படிப்பட்ட உடுப்பை, எந்தக் கலாச்சார உள்ளடகத்தில், எப்படி அணிய வேண்டும் என்று யார் தீர்மானிக்கின்றார்கள்? நிச்சயமாக பெண் அல்ல. அது போல் சமூகமும் அல்ல. ஆணாதிக்க நுகர்வுச் சந்தையே தீர்மானிக்கின்றது.

 

உலகச் சந்தை என்னும் உலகமயமாதல், சமூகத்தில் நிலவும் சமூக ஒடுக்குமுறைகளை எல்லாம் உள்வாங்கி, அதற்கு ஏற்றால் போல் தான் செயல்படுகின்றது. சமூக ஒடுக்குமுறைகளையே, சந்தைக்குரிய விற்பனைக் கருவியாக பயன்படுத்துகின்றது. நுகர்வுக் கலாச்சாரத்தை, நுகர்வுப் பண்பாட்டை நோக்கி, அதாவது சந்தைக்கேயுரிய உத்தியை உருவாக்குகின்றது.

 

கவர்ச்சியையும், ஆபாசத்தையும் அடிப்படையாக கொண்ட ஆணாதிக்க வக்கிரம், இவைகளை ஒருங்கே கொண்ட ஆணாதிக்க சமூகப் போக்கின் சமூக மேலாண்மை சார்ந்தே, பெண்களின் உடுப்புகளை சந்தை உற்பத்தி செய்கின்றது. இதுவே உலகமயமாதலின் பண்பாடாக கலாச்சாரமாக மாறிவிடுகின்றது.

 

கவர்ச்சியை, ஆபாசத்தை அடிப்படையாக கொண்ட ஆணாதிக்கத்தை வக்கிரமாக கொண்ட உலகமயமாதல் என்ற சந்தைக் கலாச்சாரத்துக்கு முன்பாக, பெண்களின் உடுப்புகள் இதற்கு எதிரானதாகவே இருந்தது. நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க நோக்கும், முதலாளித்துவ நோக்கும் சார்ந்து காணப்பட்ட பெண்ணின் உடுப்புகள், பெண், பெண் சார்ந்த உறுப்புகளை விளம்பரத்துக்குரிய சந்தைப் பொருளாக்கவில்லை. அதாவது ஒரு ஆணின் சொத்து என்ற எல்லைக்குள் காணப்பட்ட பெண்ணும், பெண்ணின் உறுப்புகளும், அவளின் உடுப்புகளும், உலகமயமாதலில் நேரெதிராக மாற்றப்பட்டுள்ளது. பெண், பெண்ணின் உடுப்புகள் வெளிப்படுத்தும் பாலியல் கவர்ச்சி, உலகச் சந்தையில் சந்தைக்குரிய பொருளாக்கப்பட்டது. ஆணாதிக்கம் கற்பிக்கும் பெண்ணின் கவர்ச்சியும் ஆபாசமும், அது வெளிப்படுத்தும் வக்கிரத்தின் ஊடாகவே பெண் சமூகத்தின் விளம்பர மாடலாக்கப்பட்டாள். இதற்கு ஏற்ற ஆபாசமான கவர்ச்சியான உடுப்பு மூலம் பெண் வக்கிரப்படுத்தப்படுகின்றாள்.

 

இன்றைய சந்தைக் கலாச்சாரத்துக்கு (கவர்ச்சி, ஆபாசம், வக்கிரம்) நேர்மாறாகவே, பெண் வாழ்ந்தாள். இதுவே சமூகத்தின் உள்ளான முரண்பாடாகவே மாறுகின்றது. கடந்த கால பெண்ணின் வாழ்வை உதறியெறிவதும், பெண் கவர்ச்சியாக, ஆபாசமாக, வக்கிரமாக வாழ்வதும், காட்சிப் பொருளாகுவதுமே அவளின் சுதந்திரம் என்று சந்தை விளக்கம் தருகின்றது. பெண் விடுதலை இதுவேயென்று பெண் விடுதலையின் பெயரில் மயங்குவதுடன், அதை அவர்கள் கூறவும் தயங்குவதில்லை. இப்படி உலகமயமாதலை பெண்ணின் உடுப்பினூடாகக் கூட, நாம் தெரிந்து கொள்ள முடியும்.

 

பெண் இதை தானாக தெரிவு செய்யவில்லை. ஆணாதிக்க சந்தையை அடிப்படையாக கொண்டே, பெண்ணுக்குரிய உடுப்பை சந்தை பெண் மீது திணிக்கின்றது. இங்கு பெண்ணின் தெரிவு என்பது, எந்தளவுக்கு தான் உடல் தெரிய கவர்ச்சியாக, ஆபாசமாக, வக்கிரமாக இருத்தல் என்ற எல்லைக்குள்ளான ஒரு தெரிவாகின்றது. இதை சந்தை பெண்ணுக்குரிய ஒரு தெரிவாக திணிக்கின்றது. இதை நாம் மேலும் நுட்பமாக, தெளிவாக புரிந்து கொள்வோம்.

 

மனித இனம் தனது இயற்கைச் சூழலைச் சார்ந்து, தனது உடுப்பை தானே உற்பத்தி செய்தது. இதற்குள் நிலபிரபுத்துவ ஆணாதிக்க சமூக பொருளாதார கூறு புகுந்து கொண்டது. குடும்பம், கிராமம், நாடு சார்ந்து, உடுப்பை எப்படி அணிவது, எதை அணிவது என்று தீர்மானித்த சமூகம், பெண்ணை பொதுவில் சந்தைக்குரிய பொருளாக நிறுத்துவதை மறுத்தது. ஆபாசம், வக்கிரம், கவர்ச்சி என்ற எல்லையில் பெண்ணை நிறுத்துவதை அது மறுதலித்தது. பெண்ணை தனது சமூக பொருளாதார நோக்குக்கு ஏற்ப அடிமைப்படுத்தி வைத்திருந்தது.

 

அன்று சமூகத்தில் உறுப்பு சார்ந்து, ஒவ்வொருவரும் தனக்கு தானே தெரிவை உள்ளடக்கிய வகையில் உடுப்பைத் தயாரித்தனர். அங்கு தெரிவு செய்வதில் இருந்த சுதந்திரம், அதை எப்படி எந்தவகையில் தயாரிப்பது, அணிவது என்று இருந்த சுதந்திரம் கூட, இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் அறவே கிடையாது. சந்தை எதை எப்படி உற்பத்தி செய்கின்றதோ, அதை அப்படியே கேள்விகளின்றி அணிவதும், தெரிவதும் தான் பெண்ணின் சுதந்திரம் என்ற வக்கிரமே அரங்கேறியுள்ளது. பெண் உடல் அங்கம் வெளித் தெரிய அரைகுறையாக அணிவது தான், பெண்ணின் பெண் விடுதலையாக சித்தரிக்கப்படுகின்றது. இந்த வகையில் பெண்ணின் உடல் உறுப்புகளை, பாலியல் உறுப்புகளாக பார்க்கப்படுகின்ற பண்பாடும் கலாச்சாரமும், சமூகத்தின் கலாச்சாரமாக, சந்தைக் கலாச்சாரம் உருவாக்கியுள்ளது.

 

பெண்ணின் கவர்ச்சி, ஆபாசம், வக்கிரம், இதையே உலகமயமாதல் பெண் சார்ந்து ஆணாதிக்க உலகுக்காக உற்பத்தி செய்கின்றது. இந்த வகையில் பெண் அல்லது சமூகம் தனக்குரிய உடுப்பை உற்பத்தி செய்யவில்லை, ஆணாதிக்க சந்தைக் கலாச்சாரமே உற்பத்தி செய்கின்றது. சமூகத்துக்கு வெளியில் இயங்கும் தனிமனித நலன் சார்ந்த சந்தை, பெண்ணின் கலாச்சார பண்பாடு சந்தைக்கு ஏற்ப எதுவென்று தீர்மானித்து, பெண்ணின் உடுப்பை தனது ஆணாதிக்க சந்தை வக்கிரத்தக்கு ஏற்ப உற்பத்தி செய்கின்றது. இதை அவர்கள் நவீன உடுப்புக் கலை என்று, கவர்ச்சியாக விளம்பரம் செய்கின்றனர். மக்களை ஏமாற்றி விற்கும் ஆபாச கலைக்கு, இப்படியும் பெயரிட்டு அழைக்கின்றனர்.

 

மாறுபட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்து, சமூக அமைப்பு உருவாக்கிய பாரம்பரிய பண்பாடு சார்ந்த உடுப்புகளில், சந்தையின் ஆபாசமும் கவர்ச்சியும் அதன் வக்கிரமும் பெண் சார்ந்து புகுத்தப்பட்டது. ஆணின் உடுப்பு சார்ந்த உலகில், இந்த ஆபாசம், வக்கிரம், கவர்ச்சி பெருமளவில் ஏற்படவில்லை. பெண்ணின் உடுப்பு சார்ந்த பண்பாட்டில் சீரழிவு, கவர்ச்சியை அடிப்படையாக கொண்ட ஆபாசமூடாக புகுத்தப்பட்டுள்ளது.

 

இந்தியப் பெண்ணின் பண்பாடு சார்ந்த சேலை (சாறி) யில் கூட இது புகுத்தப்பட்ட விதமோ, தனித்துவமானது நுட்பமானது. சாறிக்கு அணியும் மேல்சட்டை (பிளவுஸ்) ஊடாகவே அது நவீனமாக புகுத்தப்பட்டது. பெண்ணின் மார்புக் கச்சை மேற்சட்டை ஊடாக வெளித்தெரியும் வண்ணம், ஆபாச கலாச்சாரம் திணிக்கப்பட்டது. சந்தை கோரும் சந்தைக் கவர்ச்சியும் ஆபாசமும் என்ற எல்லைக்குள், பெண்ணின் மேல்சட்டைக்கான துணி உற்பத்தி செய்யப்படுகின்றது. பெண்ணின் தசை (உறுப்புகள்) கவர்ச்சிக்குரிய ஒரு பொருள் என்ற சந்தை விதிக்கமைய, பெண்ணின் உறுப்புக்களை ரசிக்கும் ஆணாதிக்க சமூக நோக்கில் பெண்ணின் உடுப்பு தீவிரமாக மாற்றப்பட்டது. இங்கு இதை பெண் தானாக தேர்ந்தெடுக்கவில்லை. ஆணாதிக்க சந்தை இதை பெண்ணுக்கு தேர்ந்தெடுக்கும்படி கட்டாயப்படுத்தி திணித்தது. இதனூடாக சந்தையின் கலாச்சாரம் சார்ந்த பாரம்பரிய பொதுவிதியே மாற்றப்பட்டது. இந்த போக்கில் அனைத்தும் தீவிரமான மாற்றத்துக்குள்ளாகியது. பெண்ணின் உடல் அங்கங்கள், ஆபாசமாக தெரியும் வண்ணம் உடுப்பின் அளவு எங்கும் குறைக்கப்படுகின்றது.

 

இந்த வகையில் ஆணாதிக்க கதாநாயக தன்மை கொண்ட சினிமா மூலம் முதலில் வெளிப்படுகின்றது. விளம்பரத்துக்கு நிகரான சினிமா ரசனைக்குள் இது புளுக்கின்றது. இப்படி வீங்கி வெம்பிய கலாச்சாரமும், பண்பாடும், சமூகத்தில் இயல்பான ஒன்றாக மாறுகின்றது.

 

ஆணாதிக்க சந்தை சார்ந்த தனிமனித நுகர்ச்சிச் சுதந்திரம் தான், தனிமனிதனின் தெரிவுக்கான எல்லை. நுகர்ச்சி சுதந்திரம் என்பது ஆணாதிக்கம் நுகருகின்ற தசைச் சுதந்திரம் தான். இந்த சந்தை விதிக்கமைய, பெண்ணின் பாலியல் உறுப்புக்கு ஏற்ற ஆணாதிக்க உடுப்புகள் உற்பத்தி செய்யப்படுகின்றது. உண்மையில் இந்த சந்தை விதிகள் என்பது பெண்ணின் தசை (உறுப்பு) சார்ந்த கவர்ச்சி, ஆபாசம், அது வெளிப்படுத்தும் வக்கிரம் என்ற அடிப்படையில் இயங்குகின்றது. பெண்ணின் உறுப்புகள் அதீதமாக வீங்கி வெளியில் தெரியும் வண்ணமே, ஆணாதிக்க உடுப்பு கட்டமைக்கப்படுகின்றது. தேவை, சூழல், காலம், வசதிக்கு (உழைப்புக்கு) ஏற்ற உடுப்புகள் மறுக்கப்பட்டு, பெண்ணின் உறுப்பின் கவர்ச்சிக்காக பெண்ணுக்கு உடுப்பு அணிவிக்கப்படுவதே சந்தை விதியாகின்றது. பெண் உடுப்பு அணிதல் என்பது, பெண் தனது கவர்ச்சி காட்டுவதற்காக என்றாகிவிட்டது. இதுதான் சந்தைக்கான எடுகோள்.

 

பெண்ணின் தசைக் (பாலியல்) கவர்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணம், பெண்ணின் உடல் பாகங்களை சந்தை தானாகத் தேர்ந்தெடுக்கின்றது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்ற ஆணாதிக்க ரசனைக்கு ஏற்ப, அதை உற்பத்தி செய்கின்றது. பெண் இதற்கு ஏற்ற வண்ணம் உடுப்பை அணிவது தான், பெண்ணின் சுதந்திரம் என்று சந்தை விதந்துரைக்கின்றது. இந்த வகையான ஆபாச உடுப்புகள் உலக நாடுகளின் பொதுச் சந்தையையும், சமூகத்தின் தீர்மானகரமான மேல்மட்ட பண்பாட்டில் முதலில் நுழைகின்றது. மேற்கில் இதுவே சந்தைக் கலாச்சாரமாகவும், மூன்றாம் உலக நாடுகளில் அடி ஆழ கிராமங்கள் தவிர்த்து மேட்டுக்குடிகளின் சந்தைக்குரிய கலாச்சாரமுமாகிவிட்டது. பெண்ணின் உடல் பாகங்களை தேர்ந்தெடுத்து நுகர்வுச் சந்தை கவர்ச்சிப்படுத்துவதன் மூலம், அதனூடாக சந்தை உயிர்வாழ்கின்றது. இது நுகர்வு சார்ந்த கலாச்சாரத்தை உருவாக்குகின்றது. உலகமயமாதல் என்ற சந்தைக் கலாச்சாரம், இதை வேகமாகவும் துல்லியமாகவும் செய்கின்றது. பெண்ணின் உடல்சார்ந்த பாலியல் உறுப்புகள், ஆணாதிக்க கண்ணுக்கு விருந்தளிக்கும் வண்ணம், சந்தை பெண்ணின் உடுப்பை திணிக்கின்றது. அதை பண்பாட்டு மற்றும் கலாச்சாரத்தில் புகுத்துகின்றது. சாராம்சத்தில் பெண் அணியும் உடுப்பின் அளவு படிப்படியாக வெட்டிக் குறைக்கப்படுகின்றது.

 

இந்த எல்லையில் பெண் அல்லது சமூகம் தமது தேவை கருதி உடுப்பு தயாரிக்கும் சொந்த தெரிவையும், சுதந்திரத்தையும் இழந்து நிற்கின்றனர். சந்தை எதை எப்படி அணியவேண்டும் என்று தீர்மானித்து, எதை எப்படி உற்பத்தி செய்கின்றதோ, அதை அப்படியே அணியும் வழக்கம், ஒரு பண்பாடாக கலாச்சாரமாக மாறிச் செல்லுகின்றது. இதுவே புதிய சீரழிவு பண்பாட்டை, கலாச்சாரத்தை உருவாக்குகின்றது. இது பாலியல் பற்றியும், பெண் பற்றியும், அனைத்து சமூக மதிப்பீட்டையும் வக்கிரப்படுத்தி தீவிரமாக மாற்றுகின்றது. கவர்ச்சி ஆபாசம் ஊடாக பெண்ணை பார்க்கும் சமூக மனப்பாங்கை உருவாக்கி, சமூகத்தை அதற்குள் அனுபவிப்பதாக கூறி சீரழிக்கின்றது.

 

அனுபவிப்பாக நம்பும் சுய கவர்ச்சி, ஆபாசம் ஊடான வக்கிரத்தை பிரதிபலிக்கும் சமூக அமைப்பில், ஒரு ஆண் தனது உடல் உறுப்பு தெரிய உடுப்பை அணிவதில்லை. ஆண் பெண்ணுக்கு எதிர்மாறாக முரண்ணிலையாக இருக்கின்றான். பெண்ணின் முந்தைய நிலைக்கு எதிர்நிலையில் பெண்ணின் உடுப்பு தீவிரமாக மாற்றப்பட்ட போதும், ஆணின் பண்பாட்டில் இந்த மாற்றம் நிகழவில்லை. ஆணாதிக்க அமைப்பில் உடுப்பு சார்ந்த பண்பாட்டில், ஆணின் நிலை மாற்றமின்றி தொடர்ந்தும் தக்க வைக்கின்றது.

 

அதாவது ஆண் கவர்ச்சி ஆபாசம் என்ற விடையம், ஆணாதிக்க சந்தையை தீர்மானிக்காமையால், பெண்ணின் தசை சார்ந்த கவர்ச்சி மட்டும் முதன்மைப் பொருளாக்கி ஆபாசமாக்கப்படுகின்றது. பெண்ணே மறுபடியும் இந்த புதிய கலாச்சாரத்திக்கு காவியாகின்றாள். முன்பு பெண் கலாச்சாரத்தின் பாதுகாவலர் என்ற நிலை மாறிவிட்டது. அதவாது சந்தை அதை தகர்க்கின்றது. பெண் ஊடாக மனித வரலாற்றை தெரிந்து கொள்ள உதவிய பாரம்பரிய கலாச்சாரம் அழிக்கப்படுகின்றது. அதனிடத்தில் சந்தைக் கலாச்சாரம் புகுத்தப்படுகின்றது. உண்மையில் இந்த மாற்றம் என்பதில் பெண்ணின் பங்கு, சீரழிவுக்குள்ளாக்கும் போக்கில், காவியாக்கி அவள் தூண்டப்படுகின்றாள். இவை தனிப்பட்ட பெண் அல்லது பெண்களின் நடத்தைகளல்ல. சந்தையின் நடத்தை விதிதான், பெண்ணை இப்படி இருக்க கோருகின்றது. இந்த எதார்த்ததை புரிந்து எதிர்வினையாற்றும் சமூக மதிப்பீடுகள் தான், மனித குலத்தின் ஆரோக்கியத்துக்கும் வாழ்வுக்கும் அவசியமானது. உலகமயமாதல் கட்டமைக்கும் ஆணாதிக்க சந்தை அமைப்பில், பெண்ணின் உடல்சார் கவர்ச்சி தான், சந்தையின் கவர்ச்சியாகின்றது என்பதை முதலில் உணர்வது முதல் படியாகும்.

 

ஒரு ஆண் தனது உடல் தெரிய உடுப்பு அணிவதில்லை. ஆனால் ஒரு பெண் உடல் தெரிய உடுப்பு அணியவைக்கப்படுகின்றாள். இந்த முரணை புரிந்து கொள்வது, எதார்த்தத்தில் இலகுவானது. சந்தையை நியாயப்படுத்தும் இந்த ஆபாசக் சதைக் கூத்தையும், அந்த கலாச்சாரத்தையும் தகர்ப்பதற்கு ஆணின் இந்தநிலை உதவுகின்றது. மனித தேவைகளை மறுத்து, வர்த்தகத்துக்காகவே இயங்கும் உலகமயமாதல் சந்தை, பெண் ஊடாக ஆபாசமாக இயங்குகின்றது. இப்படி பெண் அதற்குள் திணிக்கப்படுகின்றாள் என்பதை புரிந்து கொள்ளமுடியும். இதற்கு எதிரான சமூக கண்ணோட்டம் இல்லாதவரை, சந்தையில் பாலியல் சார்ந்த சதை ஆபாசமே மானிட ஒழுக்கவியலாகின்றது. பெண், பெண் உறுப்பு என்ற பாலியல் சதையூடாக மட்டும் தான் பார்க்கப்படுவாள், பார்க்கப்படுகின்றாள். இந்த வகையில் கீழைய நாடுகளில் இருந்து, மேற்கு நாடுகள் வரை, சந்தை பெண்ணின் சதையை உற்பத்தி செய்கின்றது. பெண்ணின் சதை சார் பாலியல் கவர்ச்சியே, பண்பாட்டுக் கலாச்சாரத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றது. அவள் அணியும் உடையூடாகவும் இது வெளிப்படுகின்றது.

 

உலகமயமாதலில் தீவிரமாக புகுத்திய இந்த மாற்றத்தை நாம் எந்தளவில் உணர்ந்துள்ளோம்? இதை நாம் எந்த வகையில் புரிந்துள்ளோம்? எந்த வகையில் இதை எதிர்த்து, எதிர் வினையாற்றுகின்றோம்? எந்த வகையில் மாற்றுக் கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளோம்? இதை எந்த வகையில், சமூகத்தின் முன் எடுத்துச் செல்லுகின்றோம்? இவை தெளிவுபடாத சூக்குமான ஒரு நிலையில் நாம் வாழ்வோமாயின், அந்த கவர்ச்சியை ஆபாசத்தை ரசிக்கும் வக்கிரம் எமது மனப்பாங்காக மாறிவிடுகின்றது.

 

இதற்கு மாறாக சுயமுரண்பாடு சார்ந்து, ஒரு பொருளின் முரண்பட்ட இரண்டு கூறு சார்ந்து, தனக்கு நெருங்கிய பெண்ணுக்கு இதை மறுக்கின்ற கலாச்சார முரண்பாடாக, வன்முறையாக உருவாகின்றது. பொதுத் தளத்தில் இந்த ஆபாசத்தை ரசிக்கும் தீவிர ரசிகர்களாக, அந்த பண்பாட்டில் ஊறியவர்களாக மாறிவிடுவதும், நெருங்கிய உறவில் அதை சகித்துக்கொள்ள முடியாத வக்கிரம் கொண்டவராக மாறிவிடுவதும் நிகழ்கின்றது. இதன் பொதுத்தன்மை விமர்சிக்கவும் எதிர்க்கவும் முடியாத மனநிலையில், இது குறிப்பாக மட்டும் புரிந்து வன்முறையாக மாறுகின்றது.

 

சீரழிவுக் கலாச்சாரத்தின் ஒரு ஊடகமாக சினிமா இருக்கின்றது.

 

பொருளாதார சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் விளைவு, சினிமாவில் நிகழும் மாற்றமாகின்றது. இன்றைய உலகமயமாதலின் நுகர்வுச் சந்தை விளம்பரம் செய்யும், கலாச்சாரத் தரகுகளாகவே சினிமா இருக்கின்றது. குடும்பத்தை சேர்ப்பதா அல்லது பிரிப்பதா என எதுவாக இருந்தாலும், சந்தை விதிக்கமைய இயங்கும் ஒரு ஊடகவியல் தான் சினிமா.

 

நுகர்வுச் சந்தை, நுகர்வுக் கலாச்சாரம், மனிதன் சேர்ந்திருப்பதை, சேர்ந்து இயங்குவதை, சேர்ந்து வாழ்வதை மறுக்கின்றது. மனித உறவுகள் அனைத்தையும் நுகர்வாக, விற்கும் பொருளாக பார்க்கின்றது. இது கலாச்சாரம் முதல் அனைத்தையும் இதற்குள்ளாகவே திணிக்கின்றது. மனித உறவுகளை சந்தைகுரிய வக்கிரமான போலி உறவாக்குகின்றது. இதற்குள்ளாக அனைத்தும் இருக்க வேண்டும் என்பதால், இதற்கு மாறான சமூகக் கூறுகளை அழிக்கின்றது. இதைச் செய்வதில் தான், சினிமாவின் பங்கு முக்கியமானது. தேசிய உற்பத்திகள் தரமற்றது என்று சொல்லுமளவுக்கு, நுகர்வுச் சந்தைக் கதைகள் உருவாக்கப்படுகின்றது. கதையின் வில்லன் தேசியக் கூறாகவும், கதாநாயகன் உலகமயமாதல் கூறாகவும், இன்றைய சினிமாவில் காட்டப்படுகின்றது.

 

இதன் பின்னணியில் பெண்ணின் சதை சார்ந்த கவர்ச்சியும், ஆபாசமுமே, சினிமா உலகை ஆளும் விதியாகின்றது. இந்த சினிமாவுக்கு ஒரு ஆன்மா இருக்கிறது என்றால், அது சந்தை வெளிப்படுத்தும் ஆபாச உணர்ச்சிதான். சினிமாவுக்கு ஒரு சந்தை இருக்கின்றது என்றால், பெண்ணின் சதை வெளிப்படுத்தும் கவர்ச்சி சார்ந்த ஆபாசமும் ஆணாதிக்க உலகும் அவசியமாகின்றது. சினிமா நுகர்வு சந்தைக்கேற்ற விபச்சாரி என்பதால், விபச்சாரத்தை விளம்பரம் செய்வது அதன் கலையாகின்றது. என்னதான் நோண்டினாலும், இதன் ஊடாகவே சினிமாவின் ஆன்மா வெளிப்படுகின்றது.

 

சினிமா ஒரு ஊடகம் என்ற வகையில், அது சந்தைக்குரிய பண்பாட்டை கலாச்சாரத்ததை உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றது. இந்த வகையில் அது தனது சந்தைச் சீரழிவூடாக, தானே முக்கிமுனங்கி கட்டிப் பாதுகாத்து வந்த பழைய கலாச்சார பண்பாட்டை அழிப்பதில் முன்னணிப் பங்கை வகித்து முன்னோடியாகின்றது.

 

சினிமா வெளிப்படுத்தும் ஆபாசமும் கவர்ச்சியும் கலையாக, இது உலகம் தழுவிய வகையில் மாற்றத்தை விரைவில் மக்களின் உட்புகுத்தக் கூடியதாக உள்ளது. இதை வைத்து சிலர் பிழைப்புக்காக பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் சினிமா மக்களுக்கு சிறுகச்சிறுக நஞ்சிடுகிறது என்பதே எதார்த்தம். பாலியல் கவர்ச்சியையும் ஆபாசத்தையும் ஒருங்கே புகுத்தி, தனிமனித அற்ப நுகர்வு வெறியை தூண்டி மனித உணர்வுகளை வக்கரிக்க வைக்கின்றது.

 

பெண் உள்ளடக்க ரீதியாகவும், வாழ்வு முறையூடாகவும் முழுமையில் ஆபாசமாக இருக்க வேண்டியவள் என்றே, சினிமாக் கலை கூறுகின்றது. இதைத்தான் உலகமயமாதல் கோருகின்றது. பெண் அணியும் துணியை குறைத்தலில் உள்ள நவீன நுட்பம் தான் சினிமாக் கலையாகின்றது. பெண்ணின் சதையை வெளியில் தெரிய வைப்பதில் உள்ள நுட்பமும், அதை வக்கிரமாக இயங்க வைப்பதிலும் உள்ள ஆற்றலும், சினிமாக் கலையையே புல்லரிக்க வைக்கின்றது. இதை செய்வதில் உள்ள மனவிகாரம் கொண்ட வக்கிரமே கலைத் திறமையாகின்றது. இது பணமாக புரளுகின்றது. நுகர்வு சந்தைக்குரிய ஓழுக்கம் (ஆன்மா), பணம் திரட்டுவதில் தான் பூரிக்கின்றது என்றால், சினிமா அதற்கு பாய் விரிப்பதில் மகிழ்ச்சியடைகின்றது. இப்படி கட்டியமைக்கும் சமூகத்தின் அவலத்தின் போக்கிடம் தான், இன்றைய (பின்)நவீன நாகரீகமாக புகுத்தப்படுகின்றது.

 

இதை மேலும் இலகுவாக புரிந்துகொள்ள முனைவோம். முன்பு சினிமாவில் கவர்ச்சியை ஆபாசத்தை வெளிப்படுத்த, இதற்கென சினிமாவால் உருவாக்கப்பட்ட துணை நடிகைகள் பயன்படுத்தப்பட்டனர். சமுதாயத்தில் பாலியல் கவர்ச்சியையும், ஆபாசத்தையும் வெளிப்படுத்தும் இடங்களாக, மதுபானக் கிளப்புகளே, சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக கொண்டு வரப்பட்டது. இவை சமூகத்தில் ஒழிவு மறைவான சந்து பொந்துகளில் நிறுத்தியே, அவை சினிமாவில் காட்டப்பட்டது.

 

உலகமயமாதல் ஆபாசமே சினிமாக் கலாச்சாரமாகிவிட்ட இன்றைய நிலையில், இவை ஒளிவு மறைவு அற்ற ஒன்றாக, இதுவே நவீன சமூகத்தின் போக்காகவே காட்டப்படுகின்றது. ஆபாசத்தை தூண்டும் துணை நடிகைகள் பாத்திரம் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தின் கதாநாயகிகளே ஆபாசமாக கவர்ச்சியாக இருக்கின்ற நிலைக்கு பெண் மாற்றப்பட்டுவிட்டாள். கதாநாயகி எப்படியோ அப்படித்தான் சமூகத்தில் பெண் இருக்கவேண்டும் என்பதையே, சினிமா உலகம் தனது ஆபாச வழிகளில் அற்புதமாக எடுத்துக்காட்டுகின்றது. சினிமா வெளிப்படுத்தும் ஆபாசமான வக்கிரம், இன்றைய உலகமயமாதல் சமூகத்தின் பொதுப் பண்பாடு என்று காட்டப்படுகின்றது. முன்னைய ஆபாச பாத்திரங்கள், இன்று பொதுப் பாத்திரமாகி, அதுவே பண்பாடாக கலாச்சாரமாக மாறுகின்றது. இதுவே மாற்றத்தின் உட்சாரமாகும். முன்பு துணை நடிகை ஊடாகவே சமூக ஒழுக்கவியலைக் கேள்விக்குள்ளாக்கும் சமூகப் பாத்திரம், இன்று ஒழிக்கப்பட்டு அதுவாகவே சமூகம் மாற்றப்படுகின்றது. அதாவது சமூகத்தின் கதாநாயகிகளாகவும், ஒழுக்கவாதிகளாகவும் காட்டப்படுவோர், ஆபாசமாக கவர்ச்சியாக சதை பிதுங்க உடுப்புகளால் அலங்கரிக்கப்பட்டவர்கள் தான். இதை ஒட்டி உருவாகும் கலாச்சாரங்கள் பண்பாடுகள். பெண்ணின் சதை தெரிய ஆடை குறைக்கப்பட்டு, வக்கிரமாக நிறுத்தப்படும் உலகம் தான், இன்றைய உலகமயமாதல்.

 

இப்படி சமுதாயத்தில் நடந்த மாற்றம் தான் என்ன? வெளிப்படையாக இலகுவாக புரிந்து கொள்ள முடியாத சூக்குமம், இங்கு ஆளும் சமூக விதியாகின்றது. தன்னை மறுத்தல், தனக்கு முந்தியதை தெரிந்து கொள்ள மறுத்தல், மனித வரலாற்றை எட்டி உதைத்தலே இதன் மூலதனமாகும். அனைத்தையும் நுகர்வுக் கலாச்சாரம், பண்பாட்டின் ஊடாக புணர்ந்து பார்த்தல் தான், இதன் ஒழுக்கவிதியாகின்றது.

 

பொதுவான மனித வாழ்வியல் எல்லைக்குள் கதாநாயகி என்பவளின், அதாவது பெண்ணின் தகுதி என்பது என்ன? அரைகுறையான கவாச்சியூடாக ஆபாசத்தை வெளிப்படுத்தலாகும். இதைத்தான் உலகமயமாதல் சமூக உணர்வாக்கியுள்ளது. சினிமா இதை பெண்ணுக்குரிய பண்பாடாக, கலாச்சாரமாக எடுத்துக் காட்டுகின்றது. இந்த எல்லையில் இன்று பெண் உடுப்பு அணிவதும், சந்தை இதற்கான உடுப்பை உற்பத்தி செய்வதுமாக உள்ளது. ஆணாதிக்க சந்தை, பெண்ணின் உடல் சதையூடாக திமிரித் தான் வெளிப்படுகின்றது. சினிமா இதைத்தான் தனது சொந்த சுதந்திரமான கலை என்கின்றது. இன்றைய உலகில் சுதந்திரம் என்பது, மற்றவனிடம் இருந்து அபகரிக்கும் அற்பத்தனம் தானே. சினிமாவின் கலைச் சுதந்திரம் என்பது, பெண்ணின் சதையை திமிற வைப்பது தான்.

 

இந்த நிலையில் தான் கதாநாயகி சதையூடாக திமிற வைக்கப்படுகின்றாள். இது அவளின் சொந்த தேர்வுமல்ல, சுதந்திரமுமல்ல. மிகக் குறைந்த உடையில் சதை திமிர நடத்தும் பாலியல் ஆபாசத்தையும், கவர்ச்சியையும், அது வெளிப்படுத்தும் வக்கிரத்தையும், கேள்விகளின்றி ரசிக்கும் சமூக மனப்பாங்கு, வாழ்க்கையை அனுபவிப்பதாக பீற்றிக்கொண்டு அவை மேலோங்கி நிற்கின்றது. இதே மனிதன், (இங்கு ஆண், பெண்) தனது மனைவி சகோதரி குழந்தை விடையங்களில், இதற்கு இணங்க இந்தத் தன்மையை அனுசரிக்க மறுக்கின்றான். இங்கு குடும்பம் என்ற தனிச்சொத்துரிமை அலகு இதை கோரவைக்கின்றது. இதை உலகமயமாதல் என்ற தனிச்சொத்துரிமை அலகு வீங்கி வெம்பும் எல்லையில் குறுகிய தனித்சொத்துரிமையை மறுதலிக்கின்றது. பண்பாடு மற்றும் கலாச்சாரத்திலும் தீவிர மாற்றத்தை திணிக்கின்றது.

 

மொத்தத்தில் பெண் ஆணின் சொத்து என்ற ஆணாதிக்க கண்ணோட்டமும், பெண் நுகர்வுக்குரிய சந்தைப் பொருள் என்ற கண்ணோட்டமும் முரண்பாட்டுக்கான காரணமாகும். ஒரே நேரத்தில் வௌவேறு பாத்திரங்களில் வெளிப்படும் அற்ப குறுகிய வக்கிரமான உணர்வு தான் இது.

 

இதன் சாரம் என்பது இந்த எல்லைக்குள், பெண்ணை நோக்கும் சிந்தனை தளத்துள் உள்ள முரண்பாடு இதற்கு காரணமாகின்றது. குடும்ப உறுப்பினரையும் இதே எல்லைக்குள் நோக்க கோருகின்ற சுய முரண்பாடாக வெடிக்கின்றது. குடும்பத்திலான பாலியல் உறவு, இந்த எல்லைக்குள் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகின்றது. மனைவி ஆபாசமாக பொது உலகில் இருப்பதை மறுப்பதும், சொந்த உறவில் பாலியல் உறவில் இருக்க கோரும் முரண்பாடும் ஏற்படுகின்றது. அத்துடன் அது முடிவதில்லை, குறித்த ஆணின் முன் ஆபாசமாக இருந்து விட்டால், பொது உலகு சார்ந்த ஆபாச கண்ணோட்டம் பெண் மேலான சந்தேகமாகி விடுகின்றது.

 

மறுபக்கத்தில் சகோதரி, அல்லது குழந்தை சதை திமிரும் நுகர்வுப் பண்பாட்டில் வாழ் முற்படும் போது, இந்தக் கலாச்சாரத்தை ரசிக்கும் ஆண் (பெண்ணும் கூட) அதை எந்தக் கண் கொண்டு எப்படிப் பார்ப்பார்கள்? இந்த எல்லையில் தான் முரண்பாடும், குடும்பத்தினிடையே பாலியல் வன்முறையும் ஏற்படுகின்றது. இன்று குடும்பத்தினுள் அதிகரித்துச் செல்லும் பாலியல் வன்முறைக்குரிய வேரும், பொதுவான வன்முறைக்குரிய கூறுகளும் அதிகளவில் உருவாக்கின்றது.

 

ஒரு மனிதனின் உள்ளான இரட்டை வாழ்க்கை முறை என்பது சாத்தியமற்றது. சந்தை வெளிப்படுத்தும் திமிரிய சதை நுகர்வை, அனுபவிப்பதற்கு இயற்கையாகவே தடை உள்ளது. பெண்ணின் சதையை பார்க்கலாம், ரசிக்கலாம், அதை தொட்டு உணர்ந்து பாலியலாக நுகர முடியாது. சந்தையில் எல்லோராலும் நுகர முடியாத பொருட்களைப் போல். அதாவது பெண்ணின் தனித்துவமான இணக்கம் அவசியம் என்பது, சதையை நுகர்வதை மறுதலிக்கின்றது. பார்க்கும் விளம்பரத்தைப் போல், சதை ஆபாசத்தை கற்பனையில் தனிமையில் ரசிக்கலாமே ஒழிய, சமுதாயம் முழுக்க பாலியலாக நுகர முடியாது. நுகர்வதற்கு அதற்கே உரிய நிபந்தனைகள் உண்டு. மனிதன் நுகர முடியாததால் தான், அவை சிலருக்கான விளம்பரமாகின்றது, காட்சிப் பொருளாகின்றது. பொருளை நுகர அராஜக வழிகள் எப்படி சமூகத்தில் அதிகரிக்கின்றதோ, அப்படியே தான் திமிரும் சதையை நுகர முனைகின்றது. நிலவுகின்ற வன்முறை கொண்ட ஆணாதிக்க குடும்பத்தினுள், இலகுவாகவே சதை சார்ந்த நுகர்வை அடையும் வெறி வன்முறைக்குள்ளாக்கி அனுபவிக்க துணையாகின்றது.

 

இப்படி ஒருபுறம் வன்முறை சார்ந்த நுகர்வாகவும், மறுபக்கத்தில் தனது ரசனைக்கும் ரசிப்புக்கும் நேர் எதிரான மனப்பாங்கில் முரண்படுகின்ற போக்கு காணப்படுகின்றது. இதை ஆண் மட்டுமல்ல, பெண்ணும் கூட கடைப்பிடிக்கின்ற முரண்நிலைதான், கலாச்சாரத்தின் முரண்பாடாகின்றது. இப்படி இரட்டை உலகில் வாழ்கின்ற சமூக எதார்த்தம், இங்கு இயல்பாக அதை பிரித்தறிய முடியாத சூழலில் பிரதிபலிக்கின்றது.

 

இதற்கு பின்னால் ஒளிந்திருப்பது சந்தை என்ற கவர்ச்சி உலகமும், அதை மறுக்கும் உழைப்பு என்ற உலகமும். மிக நுட்பமான உலகளாவிய இந்த முரண்பாடு தான், சமூகத்தினுள்ளான கலாச்சார முரண்பாட்டிற்கான சமூக சாரமாகும். உண்மையில் இதை வெளிப்படையாக உணராத செயல்பாடுகள் தான், அன்றாட கலாச்சார முரண்பாடுகள்.

 

சினிமா மக்கள் கலாச்சாரத்தை வழிகாட்டும் ஒரு ஊடகமா?

 

சினிமா என்பது சந்தைக் கலாச்சாரத்தின் விளம்பர ஊடகம் தான். சந்தைக்கு பாய்விரித்து தொழில் நடாத்தும் விபச்சாரம் தரகுத் தொழில் தான், இந்தக் கலை. பாலியல் விபச்சாரத்தை தொழிலாகவே நடத்தும் அதே கலை நேர்த்தி, இந்த சினிமா என்ற கலைக்கும் உண்டு.

 

இந்த சினிமா பற்றிய விவாதம் மிகப்பெரியது. நாம் குறிப்பாக மட்டும் ஆராய்வோம். பிரதேசத்துக்கு பிரதேசம், சூழலுக்கு ஏற்பவும் சினிமா பற்றிய மதிப்பீடுகள் மாறுபடுகின்றது. மேற்கு சினிமா கீழைத்தேய நாடுகளின் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதும், கருத்துரைப்பதும் உண்டு. இதே போல் தான் கீழைத்தேய சினிமா பார்க்கப்படுகின்றது.

 

சினிமா உள்ளடக்கமும், அதன் ஆன்மாவும் எப்படி எந்த வழியில், கலைத்துவம் என்ற பெயரில் விபச்சாரமாகவே இருக்கின்றது என்பதை நாம் மேலே பார்த்தோம். கலை பற்றி சமூகத்தின் விபச்சார நிலை தான், அதையே சமூக ரசனையாக்குகின்றது. மறுபக்கத்தில் சமூகத்தை வழிநடத்த முடியாத நிலைக்குள், சமூகம் தாழ்ந்து சீரழிந்துவிடுகின்றது. மேலிருந்து திணிக்கப்படும் உலகமயமாதல் நிகழ்ச்சிகளை, கீழ் இருந்து எதிர்கொள்ள முடியாது சமூகம் திணறுகின்றது.

 

சமூகம் தான் கொண்டிருந்த கடந்த கால அறிவு, நம்பிக்கைகள், வழிகாட்டல்கள் எதுவும் இதன் முன்னால் செயலற்றதாக்கப்படுகின்றது அல்லது இழிவாக்கப்படுகின்றது. சமூகம் மீதான தனது சுய நம்பிக்கையைக் கூட, சமூகம் தன்னளவில் இழந்து விடுகின்றது. தனது சொந்த வழிகாட்டல் மீதே நம்பிக்கை இழக்கின்றது. மேலிருந்து இடியாக சமூகம் மீது இறங்கும் சமூகச் சிதைவை எதிர்கொள்ளும் ஆற்றல் என்பது, சமூகத்தின் கீழ் இருந்து அதை ஒருங்கிணைத்து எதிர்கொள்ள வேண்டும். மேலிருந்து சமூகத்துக்குள் வருவது வெளிப்படையானது. குவிந்த பணமும் அது வக்கரிக்கும் பண்பாடும் தான், அதாவது அதன் சொந்த வக்கிரம் தான் மேலிருந்து வருகின்றது. கீழிருப்பதோ வறுமையும் மனித அவலமும். இங்கு வெளிப்படுவது நேர் எதிரான இரண்டு கலாச்சாரங்கள். மேலே பணத் திமிர் கலாச்சாரமாக, கீழ் இருப்பது தாழ்வு மனப்பான்மையும், அடிமை மனப்பாங்கும், கையாலாகாத்தனமுமாகும். இதற்கு ஏற்ப மேலுள்ளதை உள்வாங்குவது அல்லது ஏதோ ஒரு வகையில் திருத்திபடுத்தும் சுய கோட்பாட்டை கூறியபடி, மேல் இருந்து வரும் கலாச்சாரத்தில் சீரழிவதாகும். உண்மையில் சுய திருத்திக் காணும் கோட்பாடுகள், சமூகத்தின் மேல் நஞ்சிடுவதாகும்.

 

இதை எதிர்த்து இதை எதிர்கொள்ளல் என்பது, இருக்கின்ற சமூகத்தின் இன்றைய பொது அறிவால் முடியாது என்பதே உண்மை. மாறாக சமூகத்தில் இருந்து சமூகத்தை துருவிக் கற்றல், அதை மீளக் கற்றுக் கொடுத்தல் என்ற கடந்தகால சமூக வாழ்வியல் வழியை கண்டறிதல் அவசியம். தொலைக்காட்சிகள், சினிமாவின் வருகைக்கு முந்தைய காலத்தில் கற்றல், கற்றுக்கொடுத்தல் என்ற அடிப்படையில் தான் சமூகங்கள் இயங்கின. ஆனால் இன்று பணம் உள்ளவன் மேலிருந்து திணிக்கும் தொலைக் காட்சியிடமும், சினிமாவிடமும் மனித விரோத சீரழிவை கற்றுக் கொடுத்தல் என்ற பணியை தாரைவார்ப்பதை, நாம் எப்படி அனுமதிக்க முடியும். ஆனால் அதைத்தான் நாம் வெட்கமின்றி செய்கின்றோம். வழிகாட்டும் சமூகப் பாத்திரத்தை இழந்து, வெறும் நுகர்வு பண்பாட்டுக்குள் மனித உறவுகளை சிதைக்கின்றோம். சமூகம் கொண்டுள்ள மனித உறவுகள், பொருளைச் சார்ந்த ஒன்றாகவே மாறிவிட்டது. பொருட்களை வாங்கிக் கொடுப்பது, அன்பளிப்பு செய்வது என்று அதைச் சுற்றியே உலகம் இயங்குகின்றது. இப்படி இழிவான மலட்டு மனிதப் பண்பாடுகள், கலாச்சாரங்கள் உருவாகிவிட்டன. இதைத்தான் சமூகத்தின் மனித செயல்பாடாக மாற்றிவிட்டு, ஒரு பொருளுலகத்தின் அடிமையாக வாழ்கின்றோம். பொருளை கொடுத்தல், வாங்குதலுக்குள் மனித உறவுகளை தீர்மானிக்கின்ற மனித அவலம். மனிதன் வெளிப்படுத்தும் உணர்ச்சி, ரசிப்பு, ஈர்ப்பு, சிரிப்பு, மகிழ்ச்சி, கோபம், அழுகை, உரையாடல், நடைமுறை முதல் காதல் வரை, பொருள் சார்ந்த நுகர்வின் எல்லைக்குள் மலினப்பட்டு, அதற்குள் சடங்குத் தன்மையில் அசட்டுத்தனமாக உயிர்வாழ்கின்றது.

 

பொருள் சார்ந்த நுகர்வுக் கலாச்சாரத்தை, பண்பாட்டை மறுத்து வாழமுற்படுதல், அந்த நடைமுறையை பின்பற்ற மறுப்பதை எல்லாம், இழிவான செயலாக எண்ணுகின்ற, கற்பிக்கின்ற மனப்பாங்கு உருவாகியுள்ளது. குடும்பங்களில் இந்த உறவின் எல்லைக்குள், பிளவுகள் கற்பிக்கப்படுகின்றது. இப்படி பொருள் சார்ந்த உலகை நடைமுறையில் பின்பற்ற மறுப்பதை விநோதமாக நோக்குகின்ற அற்பத்தனங்கள், சமூக அரங்கில் பல்லிளித்து மிரட்டுகின்றது. இந்த பொருள் சார்ந்த உலகம் உருவாக்குவது, கவர்ச்சியும் ஆபாசமும் தான்.

 

மனித உறவுகளைச் சுற்றி இந்த நுகர்வு நிகழ்ச்சி நிரலை இனம் காண்பது என்பது கடினமானது. சமூக உண்மைகளையும் விமர்சனம் சுயவிமர்சனம் ஊடாக கற்பதும், நடைமுறை வாழ்விலான போராட்டத்தில் அதை தெரிந்து கொள்வதன் மூலமுமே இதை எதிர்கொள்ள முடியும். பகட்டான, ஆடம்பரமான, வீம்பான, எடுப்பான திமிர்தனங்களால், எதார்த்த உண்மையை புரிந்து கொள்ளவே முடியாது. சமூகத்தின் பொதுப் புத்தி மட்டம் இதற்குள் தான், தன்னை விளம்பரப்படுத்தும் அற்பத்தனத்தில் உளறுகின்ற துயரம் நிகழ்கின்றது.

 

பொதுப்புத்தி மட்டம் நாணம் கட்டிய மாடுகள் போன்று பழக்கப்படுத்தப்படுகின்றது. புதிய தலைமுறைகளை கருவிலேயே இருந்து இதற்குள் உற்பத்தி செய்கின்றனர். கருவிலேயே புகுத்தப்படுகின்ற நுகர்ச்சிவெறி சார்ந்த கவர்ச்சியும் ஆபாசமும் திமிராகவே வெளிப்படுகின்றது. வெளிப்படுத்தும் இந்த நுகர்வு வெறி சார்ந்த திமிருக்கு முன்னால், உழைக்கும் சமூகம் கூனிக்குறுகி விடுகின்றது. எப்படி பணக்காரனுக்கு முன்னால் கூனிக்குறுகி நிற்கும் உழைக்கும் வர்க்கம் போல், நுகர்வு வெறிக்கு முன்னால் உழைக்கும் மக்கள் கூனிக்குறுகின்றனர். இதுவே சொந்த குடும்பங்களில், பழைய புதிய தலைமுறைக்குள்ளும் நடக்கின்றது. உலகமயமாதலின் அற்பத்தனத்தை முன்னெடுக்கும் தர்க்கம் மற்றும் நடைமுறை வாதத்தின் முன்னால், அதை மறுக்கும் உழைக்கும் வர்க்கம் கைகட்டி நிற்கின்ற மனித அவலம். இதற்குள் சீரழிந்து விடுவதும், சினிமாவூடாக அதை கற்பனையில் நுகர்ந்து வாழ முனைவதும், இதை நியாயப்படுத்துகின்ற எல்லைக்குள் அங்கீகரித்து விடுவதும் நிகழ்கின்றது. தமக்கு தாமே, தமது மனத்திரையில் இந்த மாயையை உற்பத்தி செய்கின்றனர்.

 

இதன் எதிர்நிலை தம்மை தாமே திருத்தி செய்கின்ற கோட்பாட்டையும், இதே உலகமயமாதலில் கண்டுபிடிக்கின்றது. சினிமாவை கலாச்சாரத்தின் ஊடகமாகவும், மொழியின் ஊடகமாகவும், காணவும் சிந்திக்கவும் தொடங்கி, அதுவாக அது இருப்பதாக காட்டத் தொடங்குகின்றது. சொந்த சமூகத்தில் இருந்து அன்னியமாகின்ற போது ஏற்படும் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளின் அதிர்வு, அதை சினிமா ஊடான கலாச்சாரமாக மொழியாக காண்கின்ற அவலமும், அதை விளக்குகின்ற தர்க்க வாதமும் உருவாகின்றது.

 

சமூகத்தின் போலியான மனப்பாங்கு சார்ந்த பிரமை சார்ந்த சமூக அறியாமையே இதன் மூலதனமாகின்றது. ஆங்கிலப் படம் பார்த்தால் ஆங்கிலம் படிக்க முடியும் என்ற சமூக மனப்பிரமையும் அதை நோக்கிய அறியாமையும் தான், தமிழ் படத்தைப் பார்த்தால் தமிழைக் கற்க முடியும் என்று நம்புகின்றது. இதுபோல் தான் கலாச்சாரத்தையும் பற்றிய, மனப்பிரமையும் உருவாகின்றது. சமூகம் என்ற தொப்பிள் கொடியில் இருந்து சமூக உறுப்புகள் அன்னியமாகின்ற போது, முரண்பட்ட இரண்டு கலாச்சாரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றது.

 

இந்தத் தளத்தில் பலமான இழிவான நுகர்வுக் கலாச்சாரம் ஆதிக்கம் வகிக்கின்ற நிலையில், பலமற்ற கலாச்சாரம் அதை எதிர்கொள்ளும் ஆற்றலை இழக்கும் போது, சாக்கடைக்குள் வடிகாலை கண்டுபிடிப்பதில் தான், தன்னைத்தானே திருத்தி செய்து கொள்கின்றது. இந்த சாக்கடை சினிமாக் கலாச்சாரத்தையும், இது பேசும் மொழியைப் பற்றியும் சுய திருத்தி கொள்கின்றது. உண்மையில் இந்த விடையத்தைப் சமூக முழுமையில் புரிந்து கொள்ளாமல், அதற்குள் ஒரு தீர்வைக் கண்டுள்ளதாக மனப்பிரமை கொள்கின்றனது.

 

இது பலதளத்தில் பலவிதமாக இருந்த போதும், இந்திய கலாச்சாரத்தில் இதை மேற்கத்தைய கலாச்சாரமாக குறுக்கிப் பார்க்கின்ற, சுயதிருத்தி ஊடாக வெளிப்படும் பொதுப்புத்தியில் அணுகுகின்றது. இந்தியக் கலாச்சாரம் உயர்ந்ததாகவும், மேற்கத்தைய கலாச்சாரம் தாழ்ந்ததாகவும் கற்பிக்கின்ற பொதுப்புத்தி மட்டும், தனது அறிவு சூனியத்துக்கு ஏற்ப விளக்கம் கொடுத்து அதை அணுகுகின்றது. குறிப்பாக பெண்களின் ஓழுக்கவியல், நடையுடை பாவனைகள், முதல் அவளின் திருமணங்கள் அனைத்தையும் இதற்குள் ஓப்பிட்டு காண்பதே, இந்த இந்தியக் கலாச்சாரத்தின் பொது எல்லையாகும். இது மறுக்கப்படும் போது, இவை அத்துமீறப்படும் போது, நிலப்பிரபுத்துவ சமூக உறவு சார்ந்து பெண்ணின் எதிர்கால பாலியல் பற்றிய அச்சம் ஏற்படும் போது எல்லாம், சினிமா கலாச்சாரம் பற்றியும், அது பேசும் மொழி பற்றிய பிரமைகள், எதிர்வு கூறல்கள் முன்வைக்கப்படுகின்றது.

 

மேற்கத்தைய கலாச்சாரம், கீழைத்தேய கலாச்சாரம் என்ற பிளவுக்கு இடையிலான பொது அடிப்படை என்பது பொருளாதார உள்ளடகத்தில் இருந்தும் சீரழிந்துவிட்டது. முன்பு முதலாளித்துவக் கலாச்சாரம், நிலப்பிரபுத்துவ கலாச்சாரம் என்ற ஒரு பொதுக்கோடு பிரித்த போதும், அவை படிப்படியாக ஒன்றுக்குள் ஓன்றாகவே சீரழிந்தது. நிலப்பிரபுத்துவமும் ஏகாதிபத்தியமும் கொண்டிருந்த இணக்கமானதும், ஒன்றையொன்று சார்ந்த தமக்குள் புனிதமான விபச்சாரத்தை செய்து கொண்டது. இந்த ஏகாதிபத்திய கலாச்சாரம் இன்று, முழுமையான உலகமயமாதல் என்று நுகர்வுக் கலாச்சாரமாகிவிட்டது. இது வாழ்வியல் கூறுகளில் ஏற்படுத்தும் பாரிய தாக்கத்தை, அதன் விளைவையும் சமூகத்தால் உட்கிரகிக்க முடிவதில்லை. அதனால் அது அதனிடத்தில் தன்னை அறியாமல் விலகிய முரண்பாட்டுடன் அம்மணமாகவே சரணடைகின்றது.

 

1. உலகமயாதல் ஏற்படுத்தும் சமூக விலகல். தனிமனித வாதம், நுகர்வு வாதத்தின் மையப்புள்ளியாக ஒன்றிணைந்தது, சுய அனுபவிப்பு பற்றிய பிரமையில் சமூத்தை எதிராக நிறுத்துகின்றது. இது கலாச்சாரம் பற்றிய எதிர்நிலை முரண்பாடுகளை உருவாக்குகின்றது.

 

2. சமூக அமைப்பில் நுகர்வு கலாச்சாரம் ஏற்படுத்தும் சீரழிவு. உலகமயமாதலில் நுகரக் கூடியவனுக்கும், நுகர முடியாதவனுக்கும் இடையிலான இரட்டைக் கலாச்சாரம். இதற்கு இடையில் அங்குமிங்குமாக ஓடிப்பிடிக்கும் வக்கிரம். இது தனிமையில் வக்கிரமடையும் போது, வன்முறை கொண்ட அராஜக கலாச்சாரத்தை கொண்டு, சமூக விரோத கலாச்சாரத்தை கட்டமைக்கின்றது.

 

3. உலகமயமாதலால் ஏற்படும் சமூக கொந்தளிப்புகளால் ஏற்படும் பாரிய புலம்பெயர்வுகள், கலாச்சார ஏற்றுமதிகளும், கலாச்சாரத்தில் ஒரு சமூக அதிர்வை உருவாக்குகின்றது. குறிப்பாக இரட்டைக் கலாச்சாரம், இரட்டை மொழி சூழல், இதனால் பெற்றோருக்கும் குழந்தைக்குமான கலாச்சார இடைவெளிகள் பாரிய அளவில் அதிகரிக்கின்றது.

 

உலகமயமாதல் கலாச்சாரத்தில் முழுமையாக வாழத் தொடங்கும் புதிய தலைமுறைக்கும், அதற்கு முந்தைய தலைமுறைக்கும் இடையில் அடிப்படையான முரண்பாடாக இருப்பது, சமூகத்தன்மையை மறுத்தலாகும். உலகமயமாதலுக்குள் பிறந்த புதிய தலைமுறை, மனிதன் என்ற சமூக கலாச்சாரமற்ற தனிமனித நுகர்வு கலாச்சார நிலையில் வாழத் தூண்டுகின்றது. முந்தைய தலைமுறை மனித கலாச்சாரத்தில் சேர்ந்து வாழ்தல் என்ற முரண்பாடு, சரியாக உணரப்படாத ஒன்றாக உள்ளது.

 

புலம்பெயர்வு முதல் உலகமயமாதல் தரிப்பிடங்கள் எங்கும், இந்தக் கலாச்சார முரண்பாடுகள் விசுவரூபம் எடுக்கின்றது. இடையில் நிற்கும் மத்தியதர வர்க்கத்திடையேயான பாரிய ஒரு சமூக நெருக்கடியை இது உருவாக்கின்றது. இளம் பருவ சமூக உறுப்புகள் மீதான சமூகக் கட்டுப்பாட்டை இழக்கின்ற ஒரு முரண்பாடாக மாறுகின்றது. இதுவே தலைமுறைக்கு இடையிலான முரண்பாடாகவும் உருவாகின்றது. அவசரம் அவசரமாக தமக்குத் தெரிந்த குறுக்கு வழியை நாடுகின்றனர். இதன் ஒரு அங்கமாக சினிமா ஊடாக கலாச்சாரம், சினிமா ஊடாக மொழி என்று, குறுக்குவழியில சமூக உறவுக்கு பாலம் அமைக்க முனைகின்றனர். இது எப்படி இருக்கின்றது என்றால், குழந்தைகளைப் பராமரிக்க தொலைக்காட்சியை பயன்படுத்தும் அதே தவறான உத்திதான். இங்கும் பருவ வயதுக்கும் உரிய பெற்றோரின் பிரச்சனைகளுக்கு, சினிமாவை தீர்வாக காண்பது சமூக அறியாமையாகும்.

 

இதையும் மத்தியதர பெற்றோர்கள் என்ற சமூகம் கண்டுபிடித்து வழிகாட்டவில்லை. மாறாக உலகமயமாதல் சந்தை இளைய தலைமுறையை அதற்குள் உள்ளிழுக்க, பெற்றோர் அதற்கு கொள்கை ரீதியில் சுயவிளக்கம் வழங்கி ஊக்குவிக்கின்றனர். பெற்றோர் இதற்கு கலாச்சாரம் மொழி என்று சுய விளக்கம் வழங்க, குழந்தை விரும்பும் ஆபாசத்தில் கவர்ச்சியிலும் அதற்குள் மூழ்கி விடுகின்றனர். இந்த ஒருமைப்பாடு மூலம் பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் ஒன்றிணைந்த சமூகமாக இருப்பதாக நம்புகின்றனர். உலகமயமாதல் என்ற நுகர்ச்சிக் கலாச்சாரத்தில், பெற்றேர்ர் சுயமாக குழந்தைகளுக்கு (சமூகத்துக்கு) வழிகாட்டியாக இருக்க முடிவதில்லை என்பதே உண்மை. சுயமாக சிந்திக்கும் பெற்றோர் முன் உள்ள கேள்வி சிக்கலானதே.

 

1. பருவமடைந்த ஆண்கள் பெண்கள் (சிறுவயதில் அக்கறைப்படாத) சினிமாவை ஏன் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்?

 

2. சினிமா பார்ப்பதை தமிழ்க் கலாச்சாரம் என்ற எல்லைக்குள் பெற்றோர் பார்க்க முனையும் போக்கும், பிள்ளையின் கண்ணோட்டத்துக்கும் இடையிலான முரண்பாடுகள் என்ன?

 

சினிமா விரும்பிப் பார்ப்பதை, குழந்தையின் சீரழிவாகப் பெற்றோரால் பார்க்கப்படுவதில்லை. மாறாக நல்ல அம்சமாக பெற்றோரால் பார்க்கப்படுகின்றது. இந்த வகையில், இது ஏதோ ஒருவகையில் ஊக்குவிக்கப்படுகின்றது.

 

பொத்தாம் பொதுவிலும், இயல்பான சமூக ஓட்டத்திலும், எதையும் சுயவிமர்சனம் விமர்சனத்துக்குள்ளாக்காத எமது சமூக மனப்பான்மையின் மொத்த விளைவு இது. வெறும் மந்தைகளாக, மந்தை மனப்பாங்கில் வாழமுனையும் அடிமை மனப்பாங்காகும். இதை பாதுகாக்க முனையும் குட்டிபூர்சுவா மனப்பாங்கு. குழந்தைக்கு பின்னால் ஓடி, வால் பிடித்துச் செல்லும் சமூக அறியாமையாகின்றது. குழந்தைக்கு வழிகாட்டிச் செல்லவேண்டிய பெற்றோர்கள், அதை செய்ய முடியாது சிதைகின்றனர். உலகமயமாதல் விதைக்கும் நஞ்சுகளை நுகர்வுச் சந்தையில் இருந்து வேகமாக உள்வாங்கும் குழந்தையும், இந்த குழந்தைக்கு பின்னால் ஒடுகின்ற பெற்றோரின் பரிதாபகரமான நிலைமையையும் உலகமயமாதல் உருவாக்குகின்றது. உண்மையில் பெற்றோரின் பின்தங்கிய அறிவுசார் வளர்ச்சியின்மையை, உலகமயமாதல உருவாக்குகின்றது. சமூகம் சார்ந்த கூட்டு செயல் சார்ந்த இயலாமையும், குழந்தையின் நிலைக்கு தத்துவ விளக்கம் காண முயலுகின்ற சுயபெருமை வாதங்களில் மூழ்குகின்றது. இந்த வகையில் கலாச்சார சினிமா பற்றிய பெருமை, சினிமா மொழி பற்றிய பிரமையில், குழந்தையின் நடத்தையை, அதற்கூடாகவே தம்மை குழந்தையுடன் இணைக்க முனைகின்றனர். குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான இணைப்பை, சினிமாவாக கருதுகின்ற எளிமையான இலகுவான எடுகோளாகின்றது.

 

இந்த தமிழ் சினிமா எதை, ஏப்படி, எந்த வழியில் சொல்ல முனைகின்றது. இதன் மொழி என்ன? இதன் கலாச்சாரம் என்ன? தமிழ் சினிமா மேற்கு சினிமாவில் இருந்து எப்படி மாறுபடுகின்றது? இப்படி பல கேள்விகளை சுய அறிவுள்ள எவரும் சுயமாக எழுப்பு முடியும். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டத்தில் அப்படி எழுப்பப்படுவது கிடையாது. மாறாக இதன் பின் வால்பிடித்து ஒடும் குறுகிய ஓட்டமும், இதற்கு சுயவிளக்கம் கண்டுபிடிக்கும் பொது அறிவுமாக, அரைத்த மாவையே அரைக்கின்ற செக்குமாடுகள் நிலையில் மனித குலம் அடிமைப்படுத்தப்படுகின்றது.

 

தமிழ் சினிமா தமிழ் கலாச்சாரத்தின் ஊடகமா? தமிழ் மொழியின் ஊடகமா? அப்படி நம்புவது, நம்ப வைப்பது அபத்தமாகும். தமிழ் சினிமாவின் பின்னால் உள்ள கட்டமைப்புகள் என்ன? அதன் சாரமே தனிமனித நுகர்வு வெறியும், தனிமனித வன்முறையும், பாலியல் நுகர்ச்சி வக்கிரமும் தான். இவை அனைத்தும், இயற்கையின் பாலியல் சார்ந்த தூண்டுதல் உருவாக்கும் காதலை, கவர்ச்சி கொண்டு ஆபாசமாக்கி புகுத்தப்படுகின்றது. இந்த சினிமாக் கலை, பாலியல் கவர்ச்சியை ஆபாசத்தை தனிமனித நுகர்வாகத் தூண்டும் ஒரு ஊடகவியல். இதுதான் தமிழ் சினிமாவின் ஆன்மா. இதுவின்றி அது உயிர் வாழமுடியாத ஆபாசத்தில் மூழ்கி மிதக்கின்றது. ஒவ்வொரு மனிதனின் உள்ளும் இருக்கின்ற பாலியல் உணர்வைத் தூண்டி, அதை தரம்கெட்ட வகையில் வக்கிரப்படுத்தி வியாபாரம் செய்யும் ஊடகம் தான் சினிமா என்ற வியாபாரக் கலை. இதன் கலாச்சாரம், மொழி என அனைத்தும் இந்த வியாபாரம் என்ற ஆபாசத்துக்கு உட்பட்டதே.

 

கிட்லர் மக்களின் போராட்டம் மற்றும் மக்களின் எதிர்ப்பை கட்டுப்படுத்துவது பற்றி கூறிய போது 'மக்களா? அவர்களுக்கு தேவை ஒரு ரொட்டித் துண்டும், சர்க்கஸ் மட்டுமே" என்றான். இதற்கு மேல் யாரையும் சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஆள்பவர்களும், அடக்குமுறையை மக்கள் மேல் ஏவுபவர்களும் விதிவிலக்கின்றி இந்த அடிப்படையில் தான், மக்களை மந்தைகளாக வைத்திருகின்றனர். சமூகத்தின் பொதுப்புத்தி மட்டம் இதற்குள் தான் இயங்குகின்றது. தமிழ் சினிமா இதற்கு விதிவிலக்கா? இல்லை. மக்களின் உணர்வுகளை அற்ப இழி உணர்வுகளாக மாற்றுவது, இதன் சாரம். இங்கு எழுவது இழிவான அற்பமான பாலியல் ஆபாச உணர்வு என்பதை, சமூகம் காண மறுக்கின்ற அறியாமை என்னும் அவலம். இதன் கழிசடைத்தனமே கலையாகின்றது.

 

தனிமனித நுகர்ச்சி வெறிசார்ந்த கழிசடைத்தனம் எப்படியோ, அப்படித்தான் இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள். அது சமூக உறுப்பை ஒன்றுக்கு ஒன்று எதிரியாக்குகின்றது. குடும்பம் என்ற சமூக அலகை தகர்க்கின்ற அற்ப உணர்வை, நாடகம் தன்னூடாக விதைக்கின்றது. குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் ஒருவருக்கொருவர் எதிரியாக்குகின்றது. இதன் ஒழுக்கம் என்பது, தனிமனித நுகர்வுக்கு உட்பட்ட நீதியாகின்றது. அது தனக்கு என்று ஒரு சமூக வரையறையைக் கொண்டிருப்பதில்லை. இன்றைய நுகர்வு எப்படி அராஜகத்தன்மை கொண்டதோ, அதன் போக்கில் இதன் நீதியுள்ளது. இது நுகர்வு வெறிக்குள்ளான சொத்துரிமையில் தகவமைக்கப்படுகின்றது. அற்பத்திலும் அற்பத்தனம்.

 

இந்த நாடகங்கள் சமூகத்தில் (உதாரணமாக குழந்தைகளில்) இருந்து அன்னியமாகும் உறுப்புகளின் (பெற்றோரின்) கலாச்சாரத்தை வக்கிரப்படுத்துகின்றது. சமூகத்தை (குழந்தைகள்) ஆபாச உலகத்தில் தள்ளிவிடுகின்றது சினிமா. நாடகம் தனிமனிதன் சதா புலம்பும் உலகத்தில், மனிதனைத் (பெற்றோரை) தள்ளி விடுகின்றது. வாழ்க்கையை பறி கொடுத்துவிட்டதாக சதா நம்புகின்ற ஒரு மனப்பிரமையே தனிமனித புலம்பலாகின்றது. முடிவின்றி சதா எதையோ திட்டித் தீர்க்கின்றது. எதிரிகளை தேடுவதே, குடும்பத்தின் அடிப்படைப் பண்பாகின்றது. அது குடும்பத்தின் உள்ளேயே அதை இனம் காண்கின்றது.

 

இப்படி நாடகங்கள் முரண்பட்ட மோதலை குடும்பத்தில், தனிமனித வடிவில் திணிக்கின்றது. சினிமா முரண்பட்ட மோதலை சமூகத்தில் தனிமனிதர்களுக்குள் திணிக்கின்றது.

 

இந்த தொலைக்காட்சி நாடகங்கள் என்னும் அற்பத்தனமான அற்பபுத்தியுள்ள கலை மனிதனுக்கு கூறுவது என்ன? மனிதர்களுக்குள் இணைங்கிச் செல்லும் நட்பு முரண்பாட்டை, பகை முரண்பாடாக மாற்று என்பதைத் தான். உலகமயமாதலின் சந்தைக்குரிய, ஒருவனை ஒருவன் எதிரியாக காண்கின்ற, தனது உயர்வுக்கு மற்றவனை தடையாக காண்கின்ற அற்பர்களை நாடகம் உருவாக்குகின்றது. தனிமனித வெறி பிடித்த நுகர்வாளர்களை உருவாக்குவது தான் இதன் நோக்கம். இப்படி இதன் நோக்கில் இணங்கி வாழ்வதை சிதைக்க, முரண்பாடுகளை பெருப்பிப்பதற்கான அற்பத்தனமான விடையங்களை, அதை ஒட்டிய நுட்பத்தை தூண்டுவது தான் நாடகங்கள். இணங்கி வாழும் மனித உணர்ச்சியை செல்லரிக்க வைத்து, இணங்கி வாழ மறுக்கும் உணர்ச்சியை உருவாக்குவது இதன் உத்தி. தனிமனித குதர்க்க வாதத்தை, சமூக வாதத்துக்கு எதிராக நிறுத்துவதே நாடகத்தின் ஒழுக்கவிதியாகும். மனிதர்கள் விட்டு கொடுத்துச்செல்லும் முரண்பாட்டை, பகை முரண்பாடாக கிண்டி எடுப்தே நாடகமாகின்றது. கதை சுற்றிச் சுழன்று என்ன சொன்னாலும், நாடகத்தின் அரசியல் நோக்கம் இதுதான். தனிமனித உறவுகளை முடிந்த வரை ஒன்றுக்கொன்று எதிராக வக்கிரப்படுத்தி, எதிரியை குடும்பத்தில் தேடத் தூண்டி மோத விடுவதன் மூலம், இந்த சமூக அமைப்பு நுட்பமாக பாதுகாக்கப்படுகின்றது. எதிரி குடும்பத்தினுள், உறவினுள் உருவாக்கி, அதுவே ஒவ்வொரு உறுப்பினரினதும் தலையாய மண்டையை வெடிக்க வைக்கும் பிரச்சனையாக்கப்படுகின்றது. முரண்பட்ட குடும்ப அலகுகள் வன்முறைக்குள்ளும் அல்லது கண்டும் காணமல் இருக்கும் தனிமைவாதத்தில் மூழ்கடிக்கப்படுகின்றது. நாடகம் உணர்ச்சி சார்ந்த மோதல் வக்கிரத்தைத் தூண்டுகின்றது.

 

சினிமா சொல்லும் பாலியல் கவர்ச்சியும், ஆபாசமும், உடல்சார் வக்கிரத்தை முதன்மைப்படுத்தி தூண்டுவதன் மூலம், மனித உணர்வை அதற்குள் வக்கிரப்படுத்துகின்றது. தனிமனித வன்முறை மீதான நவீனத்துவம், வன்முறை மீதான சட்டம் என்று எல்லைக்குள் கதை சொல்கின்ற ஒரு சினிமா மக்களின் வாழ்வியல் உணர்வை நலமடிக்கின்றது.

 

இந்த உண்மையை புறக்கணித்து, இந்தியக் கலாச்சாரம் அல்லது தமிழ் கலாச்சாரம் என்று சினிமாவை நம்புவது அறியாமையின் மொத்த விளைவாகும். எமது வாழ்வியல் சார்ந்த சமூக கூறுகளில், சினிமா எந்த இடத்திலும் பிரதிபலிப்பதில்லை. தமிழர் பண்பாடு, தமிழர் கலாச்சாரம் என்ற சமூகக் கூறுகளை விட்டு விலகி, நுகர்வுச் சந்தைக்கான தனது சொந்தச் சந்தைக்காக சினிமாவை உற்பத்தியாக்குகின்றது. காட்சிகள், படிமங்கள் என அனைத்தும், உலகமயமாதலின் விறுவிறுப்பான சீரழிவை உள்வாங்கித் தான் பிரதிபலிக்கின்றது. உலகமயமாதலின் சந்தைக்கு ஏற்ற கவர்ச்சி, நுகர்வுக்கு ஏற்ற கிளர்ச்சியை உருவாக்கின்றது.

 

கலை என்ற பெயரில் உலகமயமாதல் நுகர்வுப் பண்பாட்டை பரப்பும் சமூக விரோத புல்லுருவிகள், இதை மக்களின் ரசனை என்கின்றனர். மக்கள் கோருவதைத்தான் தாம் படைப்பதாகவும், இதனால் தான் மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர் என்கின்றனர். வேடிக்கையான வியாபாரிகளுக்கே உரிய கிழட்டு வாதம். இது எப்படி இருக்கின்றது என்றால், விபச்சாரம் செய்பவனின் ரசனைக்கும், ஆபாசத்துக்கு ஏற்ற, பெண்ணைக் கொண்டு வருவதே தரகனின் கடமை என்ற தர்க்கத்துக்கு ஒத்தது.

 

இது உள்ளடகத்தில் கடவுள் தான் ஏழை பணக்காரனை உருவாக்கியதாக கூறுவதுக்கு ஒத்தது. இல்லாத கடவுளை மனிதன் தனது அறியாமையால் கற்பித்தான் என்றால், அவனே எழை பணக்காரனை படைத்ததாக கூறுவது எப்படிப்பட்ட மோசடித்தனமோ அப்படிப்பட்டது. மனிதன் தான் கற்பித்த கடவுள் எப்படிப்பட்டவர் என்பது அவனுக்கே தெரியாத அறியாமை. உண்மையில் அவன் கற்பித்த கடவுள் ஏழையையோ பணக்காரனையோ உருவாக்கியதில்லை. ஆனால் அந்த கடவுள் தான் ஏழை பணக்காரனை உருவாக்கியதாக சொல்லி, கடவுளை தனக்கு பக்கபலமாக பணக்காரன் வைத்துக் கொள்ளவில்லையா! இந்த அசிங்கமான தனிமனித சொத்துரிமை சமூக அமைப்பு போல் தான், இந்த சினிமா ஆபாச கலை வியாபாரிகளின் தர்க்கங்களும் அமைகின்றது.

 

பருவ வயது ஆண்கள், பெண்கள் சினிமாவை அதிகம் ரசிக்கத் தொடங்குகின்றார்கள். அதற்குள் மூழ்குகின்றார்கள். இந்த ரசனை தமிழ் பண்பாடு கலாச்சாரத்துக்கு புறம்பாகவே நிகழ்கின்றது என்பதே இதில் உள்ள சூக்குமமாகும். எமது கலாச்சாரத்தை தேடியே, சினிமாவை நாடுவதாக நம்புவது பொய்மையாகும். உண்மையில் சினிமா மீதான அதிதமான நாட்டம், சினிமா வெளிப்படுத்தும் ஆபாசம் கவர்ச்சி மீதான பாலியல் உந்துதல் என்பதே அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

 

அவர்களின் பருவ வயது என்பது, இயல்பாகவே பாலியல் நாட்டம் கொண்டது. இதை அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்ளவும், அதனடிப்படையில் வாழ்வை வழிகாட்ட வேண்டிய பெற்றோர் சினிமாவுக்குள் அதை வடியவிடுகின்றனர். பருவ வயதில் ஏற்படும் பாலியல் உந்துதல், சினிமாவின் வக்கிரமான அற்ப உணர்வுக்குள், அற்பத்தனமாக வாழவைக்கின்றது. பாலியல் பற்றிய பிழற்சி பெற்ற ஒரு உணர்வில், இயல்பான பாலியல் வாழ்க்கை முறையையே இழந்து விடுகின்ற, அற்பமான பாலியல் நடத்தைக்கே சினிமா வழிகாட்டுகின்றது. இந்தியக் கலாச்சாரத்தில் அதீதமான பாலியல் மனநோயாளிகளை உற்பத்தி செய்வதில், சினிமா வக்கிரப்படுத்தும் பாலியல் முக்கிய காரணம். சிறுவயதில் இருந்து சினிமா மீதான நாட்டத்தை விட, இடையில் வரும் தீவிர நாட்டம் தான், இளமையை சீரழிக்கும் அளவுக்கு மிகவும் ஆபத்தானது.

 

பருவ வயதில் பால் ரீதியான அதீதமான கவர்ச்சி, அதீதமான வக்கிரம், அதீதமான வன்முறை மீதான நாட்டம், இதையொட்டி அதிகரிக்கின்ற மனக்கிளர்ச்சி தான், இயல்பாக தமிழ் சினிமா மீதான தீவிர நாட்டத்தைத் தூண்டுகின்றது. மேற்கத்தைய சினிமாவில் இந்தளவுக்கு, பாலியல் கவர்ச்சியும் வன்முறையும் தூண்டுவதில்லை. மேற்கு சினிமாவில் நிர்வாணமான ஒரு படுக்கையறைக் காட்சி, பருவ வயது குழந்தைக்கு வக்கிரமான உணர்வை தூண்டுவது ஒப்பீட்டளவில் குறைவு. தமிழ் சினிமா தூண்டுதலுக்காக கையாளும் கவர்ச்சியும் ஆபாசமான வக்கிரமும், குழந்தையின் பாலியல் பற்றிய அறிவையே இழிவாக்கி மலடாக்குகின்றது.

 

இயற்கையான பாலியல் மனப்பாங்கை கடந்த வக்கிரமான பாலியல் தேர்வு, கல்வி முதல் முழு வாழ்க்கையையுமே சிதைக்கின்றது. இந்த ரசனைக்குள் அடிமையாகிவிடும் போது, குழந்தைகள் அதீதமான வக்கிரமான காட்சிகளை காண்பதில் நாட்டம் மேலும் மேலும் அதிகரிக்கின்றது.

 

தமிழ் கலாச்சாரத்தை தேடுதல், எமது சமூகத்தை நோக்கிச் செல்லுதலே குழந்தையில் தேர்வாக இருந்தால், தமிழ் சினிமாவை அது நாடாது. மாறாக அது நோக்கிய ஒரு கல்வி முறையிலான தேடுதலாக இருக்கும். கலாச்சாரம் தொடர்பான நூல்களை தேடிப் படித்தல், பெற்றோரின் மொழியைக் கற்றுக்கொள்ளல், அதன் ஊடாக கற்றுக் கொள்வதாக இருக்கும். இதற்குள் பொதுவாக நடக்காமல், சினிமாவில் நாட்டம் என்பது ஒரு சமூக விலகலாகும். பருவ வயதின் தேவையை, அது ஏதோ ஒரு வகையில் அற்ப உணர்ச்சியில் பூர்த்திசெய்கின்றது.

 

சந்தைக் கலாச்சாரமும், உழைப்புக் கலாச்சாரமும்

 

இது எங்கும் நிலவுகின்றது. எதிலும் பிரதிபலிக்கின்றது. மனித முரண்கள், இதற்குள்ளும் தீவிரமான பங்காற்றுகின்றது. சமூக ரீதியாக இதை எதிர்கொள்ளும் மனித அறிவும் ஆற்றலும் அருகும் போது, இதன் விளைவு கடுமையானது. முரண்பாடுகள் அற்பத்தனமானதாக, மேலெழுந்தவாரியாக, சின்னசின்ன விடையங்களில் பிரதிபலிக்கின்றது. இதன் ஆழம் தெரியாத இந்த சமூக முரண்பாடு, மனிதனுக்குள்ளான பாரிய தனிமனித முரண்பாடாக மாறுகின்றது.

 

இதில் ஒன்றுதான் பெண் சார்ந்த கலாச்சார முரண்பாடுகள். இது தீவிரமான பிரதிபலிப்பை உருவாக்குகின்றது. நெருங்கிய சமூக உறவுக்குள், இது மையமான முரண்பாடாகின்றது. தீவிரமான பிளவுகளையும், எதிர்நிலைக் கண்ணோட்டத்தையும் உற்பத்தி செய்கின்றது. தலைமுறை கடந்த இடைவெளிக்கு அப்பால், இது ஆற்றும் பங்கு வெளிப்படையாக வெளிப்படுவதில்லை. உண்மையில் இதன் சமூகத்தன்மையை தெரிந்து கொள்ளாததன் விளைவு, தனி மனிதர்களின் சின்னத்தனங்கள் கிறுக்குத்தனமாக பிரதிபலிக்கின்றது. சமூகப் பொதுப் புத்திக்கு இவை தனிமனித குற்றங்களாகின்றது.

 

இந்த முரண்பாடுகள் அன்றாடம், பெண் சார்ந்து கூனிக் குறுகிப்போகின்றது. சில சமூகங்களில் இது, இதற்குள் மட்டும் ஆதிக்கம் வகிக்கின்றது. சமூகம் இப்படித் தான் உள்ளது. கலாச்சாரத்தை பெண்ணின் ஊடாக, சொந்த உறவுக்குள்ளாக சுருக்கிப் பார்க்கின்றது. பெண்ணின் பாலியல் நடத்தையில், இதை ஒன்று குவித்து பார்க்கின்ற மனப்பாங்கே, கலாச்சாரமாக புரியப்படுகின்றது.

 

தன்னைச்சுற்றி உள்ள பெண்ணுக்கு கலாச்சார வேலியை போடும் சமூகம், சமுதாய அளவில் இதன் மீறல்களை ரசிக்கின்ற மனப்பாங்கு, ஒரு முரண்னிலையாக காணப்படுகின்றது. குறிப்பாக பெண்ணின் உடை முதல் அந்த பெண்ணின் திருமண வரையிலான தீர்மானத்தை யார் எப்படி எடுப்பது என்ற எல்லைக்குள்ளாக, நுகர்வுக் கலாச்சாரத்துக்கு எதிரான மனப்பாங்கு சுருங்கி வெளிப்படுகின்றது. இது முற்போக்கான திசையில் அல்ல, படுபிற்போக்கான ஆணாதிக்க மனப்பாங்கில் வெளிப்படுகின்றது. இந்த எல்லைக்குள் தான் மொழி குறித்தும், கலாச்சாரம் குறித்ததுமான அக்கறை காட்டப்படுகின்றது.

 

இந்த அக்கறை தவறாகவே குறுகிய எல்லையில் எழுகின்றது. முதலில் உலகமயமாதல் உருவாக்கும் சந்தைக் கலாச்சாரம் பற்றிய தெளிவு இன்றி, எதையும் சரியாக காணமுடியாது. குறுகிய சிந்தனைகள், தனிப்பட்ட மனப்பிரமைகள், இந்த சந்தைக் கலாச்சாரத்தின் போக்கில் முன்வைக்கும் புலம்பலாகிவிடுகின்றது.

 

உலகமயமாதல் உற்பத்தி செய்யும் நுகர்வு சந்தைக்குரிய கலாச்சாரம், தனக்கு தடையானதையும், தேவையற்றதையும், தனது சொந்த இழிவின் ஊடாக அழிக்கின்றது. இங்கு உலகமயமாதலை தடுக்கின்ற, சமூக இருப்பு சார்ந்த கலாச்சார பண்பாட்டுக் கூறுகளை அழிப்பதை அடிப்படையாக கொண்டே, நுகர்வுச் சந்தையை நாளொரு பொழுதாக உலகமயமாதல் கைப்பற்றுகின்றது. பொருளை அற்ப நுகர்வு வெறிக்குள்ளாக்கி விற்பனை செய்ய, ஆபாசமான கவர்ச்சியான பெண்ணின் வக்கிரத்தை சந்தை முன்னிறுத்துகின்றது. இதன் மூலம் ஆணாதிக்க சமூக அமைப்பில் நுகர்வை, பெண்ணூடாக சந்தை அணுகுகின்றது. பெண் பற்றிய பார்வையை, சந்தையின் நுகர்வுக்குரியதாக, தீவிரமாக தனக்கு இசைவாக புதிய பண்பாடு கலாச்சாரம் ஊடாக மாற்றுகின்றது. கவர்ச்சி, ஆபாசம், அது உருவாக்கும் பாலியல் வக்கிரம் பற்றிய சமூகத்தின் எதிர்மனப்பாங்கு, நுகருவதற்கு தடையாக இருப்பதை உலகமயமாதல் அனுமதிப்பதில்லை. இதற்கு பண்பாடு, கலாச்சாரம், அதை ஒட்டி வாழும் மொழி தடையாக இருக்குமெனின், அதையும் அழிக்கின்றது.

 

இந்த வகையில் மொழி முதல் சமூகங்களின் பண்பாடுகள் கலாச்சாரங்கள் என அனைத்தையும் உலகம் தழுவியதாக அழிக்கின்றது. உதாரணத்துக்கு உணவை எடுத்தால், உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒரே உணவை உண்ண வேண்டும் என்பதையே சந்தை கோருகின்றது. இதபோல் ஒரு குடிபானம், பொருட்களை விற்கும் ஒரு கடை என்று அனைத்தும், இந்த குறுகிய ஒன்றாகவே கோருகின்றது. இப்படி உருவாக்கப்படும் கலாச்சாரம், பண்பாடுகளை அடிப்படையாக கொண்டு சந்தை இயங்குகின்றது. சிறு குழந்தையில் இருந்தே, இந்த நுகர்வு பண்பாடு என்னும் நஞ்சு, திட்டமிட்டு இடப்படுகின்றது. சமூகத்தை மந்தைக்குரிய ஒரு பொருள் சைக்கோக்களை நுகர்வு உருவாக்குகின்றது. இதை நோக்கிய உலகத்தை, நுகர்வு சந்தை மாறிச் செல்லுகின்றது. இதற்கு எதிரான அனைத்தும் அழிக்கப்படுகின்றது.

 

நுகர்வு சந்தைக்கு தடையான பண்பாடு, கலாச்சாரம் முதல், அதன் வேராகவுள்ள மொழியையும் அழிக்கின்றது. இந்த சந்தைக் கலாச்சாரத்தில் மூழ்கியெழும் ஒரு சமூகம் அல்லது சமூகத்தின் தீர்மானகரமான சக்திகள், தத்தம் குறுகிய எல்லையில் மொழி கலாச்சாரம் குறித்து ஒப்புக்கு முண்டு கொடுக்கின்றனர். இதைப் பெண்ணின் எல்லையில் மட்டும் காண்பது தான், இதன் முரண்னிலையாகும்.

 

மனிதத் தன்மைகள் ஒன்றுக்கொன்று எதிரானதா?

 

இப்படி சுற்றிச் சுற்றி கலாச்சாரம் என்ற பெயரால், மொழி என்ன பெயரால், நாம் பாதுகாக்க முனைவது எதை? எமது மனிதத்தன்மையற்ற பண்பைத்தான். மனிதத் தன்மை என்பது என்ன? மனித தன்மையற்ற அனைத்தையும் எதிர்ப்பது தான், மனிதத் தன்மை. மனிதாபிமானம் என்பது, மனிதன்மையற்ற சமூகத்தின் இருப்பினால் உருவாகின்றது. இதை நாம் புரிந்து உள்வாங்குவது கிடையாது. மேலெழுந்தவாரியான, மனஉணர்வுகளாகவே அவை பிரதிபலிக்கின்றது.

 

இந்த வகையில் இன்று பெண்ணின் எல்லையில் காணப்படும் பண்பாட்டு, கலாச்சாரம் கூறு சார்ந்த சமூக முரண்பாடுகள், எமது மனித தன்மையற்ற போக்கின் விளைவாகும். இது இரண்டு தளத்தில் பிரதிபலிக்கின்றது.

 

1. ஒருபுறம் பெண் பற்றி நுகர்வு சந்தை உருவாக்கும் ஆபாசம் கவர்ச்சி சார்ந்த பண்பாடு கலாச்சாரம் ஊடாக உருவாக்கின்றது.

 

2. மறுபுறம் பெண்பற்றி குறுகிய எதிர்நிலை மனப்பாங்கு ஊடாக உருவாகின்றது.

 

இந்த விவகாரம் அடிப்படையில் புரிந்து கொள்வது மிகவும் சிக்கலுக்குரியது. இரண்டு கூறுகள் இதில் இருப்பதை தெரிந்து கொள்வதும், அதை மறுத்து சிந்திப்பதற்கும் எமக்கு விமர்சன மனப்பாங்கு இருக்கவேண்டும். மாறாக சரியானதை வைக்கும் சுய சமூக ஆற்றல் இருக்கவேண்டும். பொதுவாக மாறா வகைப்பட்ட கிளிப்பிள்ளைகளாக வாழுகின்ற சமூகப் போக்கில், ஆதிக்கம் வகிக்கும் நடைமுறையில் தொங்கியபடி இழுபடுவதே சமூகத்தின் பொதுபுத்திமட்டமாக உள்ளது. இப்படி அங்குமிங்குமாக இடறியடித்தபடி வாழ்கின்ற வாழ்வை பெருமையாக கருதி, நியாயப்படுத்துகின்ற சமூக இயக்கத்தின் எடுபிடிகளாக இருப்பதில் பெருமைப்படும் மனித மனப்பாங்கே, சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றது.

 

நாம் என்றும் எமது மனப்பாங்கு சார்ந்த பிரமைகள் ஊடாக கற்பிக்கும் ஒரு முடிவுகளை வந்தடைந்த நிலையில், எதையும் தெளிந்து உள்வாங்குவதையும், விமர்சனம் செய்வதையும் மறுதலிக்கின்றது. நிலவுகின்ற சமூகத்தின் போலித்தனத்தை, திறந்த ஒரு வெளியில் போட்டு உடைப்பதை மறுக்கின்றது.

 

பெண்ணின் உடை பற்றி, இரண்டு தீவிரமான கலாச்சாரம் பண்பாடு சார்ந்த மனப்பாங்கில் சிக்கிக்கிடப்பதன் ஊடாக, இதன் மீதான பார்வைக் குறைபாடு சமூகக் குறைபாடாகின்றது. ஒருபுறம் கவர்ச்சி, ஆபாசம் என்ற வக்கிரப்படுத்தும் நுகர்வுப்பண்பாடு. மறுபுறம் அடக்க ஒடுக்கமான பெண் என்ற எல்லைக்குள், பெண்ணின் மீதான எதிர்நிலைப்பாடு. ஆணாதிக்க அமைப்பின் பெண் பற்றிய சமூக நோக்கின் எல்லைக்குள், இப்படி செயற்படுகின்றது. அறிவுபூர்வமாக இந்த விடையம் அணுகப்படுவதில்லை என்பதே, இதில் உள்ள முக்கியமான விடையமாகும். இங்கு மனிதப் பண்புகள் தீவிரமான மறுப்புக்குள்ளாகின்றது.

 

பெண்ணை உடல் கவர்ச்சி ஊடாக அணுகும் சமூக மனப்பாங்கு என்பது மனிதபண்பற்ற நுகர்வுக் கலாச்சாரமாக உள்ளது. மறுபக்கத்தில் மனித தன்மையற்ற வகையில், பெண்ணின் மீதான அடக்குமுறையூடாக, பெண் மீதான ஒழுக்கம் திணிக்கப்படுகின்றது. இது அறிவியல் பூர்வமான விவாதம் மட்டுமின்றி, விமர்சனம் கூட. ஆணாதிக்க சமூக அமைப்பு கொண்டுள்ள மனப்பாங்கில், ஆபாசமும் நேர் எதிர் மனப்பாங்கில் அடக்க ஒடுக்கமான பெண் என்ற சமூகப் பார்வைகள் ஆதிக்கம் வகிக்கின்றன. இந்த நோக்கில் இருந்து, இதை தீவிரமாக விமர்சனம் செய்து, சமூகத்தை சிந்திக்க தூண்டுவது மட்டும் தான் சரியான சிந்தனை முறையாகும்.

 

அறிவியல் பூர்வமாக ஆண் ஏன் உடல் தெரிய, ஆபாசமாக உடுப்பை அணிய மறுக்கின்றான். சமூகம் ஏன் அதை மாற்றத்துக்குள்ளாக்கவில்லை. ஆணாதிக்க அமைப்பு ஆண் சார்ந்து இதை அனுமதிக்கவில்லை. பெண் மீது இது தீவிரமாக மாற்றுகின்றது, திணிக்கின்றது. பெண் சுயமற்ற ஆணாதிக்க அமைப்பில், அதன் எடுபிடியாக காவியாக இருப்பதை ஆணாதிக்க அமைப்பு உறுதி செய்கின்றது. ஆணாதிக்க அமைப்பில், பெண் தீவிரமான மாறுகின்ற அமைப்பின் கலாச்சார ஊடகமாகின்றாள்.

 

இந்த போக்கில் இருந்து சமூகம் விடுபட்டேயாக வேண்டும். ஒரு முரண்நிலையாக, பெண்ணிணை அடக்கவொடுக்கமாக அடிமைப்படுத்தும் மூடிக்கட்டிய பெண்ணை கோரும் ஆணாதிக்க சமூகம், ஆணாதிக்க ஆபாச கலாச்சாரத்தின் ரசிகனாக இருப்பதையும், அது ஒரே நேர் கோட்டில் இருப்பதை பார்க்கின்றோம். எந்த எதிர்வினையும் அதை மாற்றுவதை கோருவதில்லை. ஒட்டுமொத்தமாக இந்த கலாச்சாரத்தின் சமூக கூறுகளை மாற்றப் போராட வேண்டும்.

 

இதேபோல் திருமணத்தை எடுத்தால், நுகர்வுச் சந்தை பெண்ணை விபச்சார நிலைக்கு தள்ளிவிட்டது. சமூகப் பொது தளத்தில் பாலியல் என்பது, வெறும் நுகர்வாக அதுவும் பாலியல் அனுபவிப்பாக மாற்றிவிட்டது. சமூகத்தின் கூட்டான சமூக மனப்பாங்கை, இது தீவிரமாக மறுக்கின்றது. மறுபக்கத்தில் பெண்ணை பாலியல் அடிமையாக மாற்றி, ஒரு ஆணின் சொத்தாக விபச்சாரியாக கோருகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் பாலியல், இப்படி இரண்டு தளத்தில் பந்தாடப்படுகின்து.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் பாலியல் கலாச்சாரம் என்பது நுகர்வதற்குரிய ஒன்றாக உலகமயமாதல் சந்தை மாறிவிட்டது. மறுபக்கத்தில் அது மொழி, இனம், நிறம், சாதி என்ற குறுகிய எல்லைக்குள் பெண் வாழவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகின்றது. அதற்குள் பெண் திணிக்கப்படுகின்றாள். இப்படிக் கோருபவர்கள் உலகமயமாதலின் நுகர்வுப் பண்பாடு சார்ந்த கலாச்சாரத்தின் கூறுகளாக இருந்தபடி, பெண்ணை நுகர்வு பண்பாட்டுக்கு எதிராக வாழக்கோருவது இதன் முரண்நிலையாகும்.

 

ஒருபுறம் நுகர்வுக் கலாச்சாரம் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறுகின்றது. மறுபுறம் இதற்கு எதிராக கட்டிப்போட்டு ஒழுக்கம் என்கின்றது. உண்மையில் இங்கு இதன் பின் பிரதிபலிப்பது, மனித தன்மையற்ற சமூகக் கூறுகள் தான். மனிதர்களுக்கு இடையிலான இயல்பான இணக்கமான அம்சங்கள், ஆபாச கலாச்சாரத்தாலோ, அடக்கியொடுக்கும் பண்பாட்டு கலாச்சாரத்தாலோ, எந்தவகையாலும் யாராலும் நியாயப்படுத்திவிட முடியாது.

 

இந்த சமூக முரண்நிலையை சதா வாழ்க்கையில் சந்திக்கும் போதும், இந்த உண்மை உறைப்பதில்லை. அது வெறும் சம்பவங்களாகின்றது. தனிப்பட்ட விடையங்களாக கூனிக் குறுகிவிடுகின்றது. அவை மற்றவன் விவகாரங்களாகவும் குசுகுசுப்பாகவும் மாறிவிடுகின்றது. ஆனால் அதைச் சுற்றி முழு சமூகமும் நீக்கலற்று இயங்குகின்றது. இதற்குள் சமூகத்தின் அனைத்துக் கூறுகளும் முரண்படுகின்றது. இது பற்றிய சமூகத் தெளிவு இன்மையால், இவை சமூக இயக்கமாக வெளிப்படுவதில்லை. இதை பற்றிய விவாதங்கள் கருத்துகள் கூட, இந்த எல்லையைத் தாண்டி பிரசவிப்பது என்பது இலகுவான ஒன்றாகவுமில்லை.

 

உண்மைக்கு நேர்மாறாக எமது கற்பனையான முரண்ணிலை விருப்பங்கள், உண்மை சார்ந்த முரண்ணிலைக்குரிய கூறை மறுதலிக்கின்றது. உலகமயமாதல் வரவும், அதன் சீரழிவு சார்ந்த கலாச்சார பண்பாடும், தலைமுறைக்கு இடையில் அதீதமான மோதலை அதிகப்படுத்தியுள்ளது. வாழ்க்கை அனுபவமற்ற, உழைப்பை அறியாத குழந்தை உணர்வுகளை நச்சுப்படுத்தி நுகர்வு வெறிக்குள் நகர்த்தும் உலகமயமாதல், சமூகத்தை தனி அலகுகளாக உடைத்து போடுகின்றது. ஒரு குடும்பம், ஒரு சமூக அலகு என்று நீடித்த பரஸ்பர சமூக இருப்பு இப்படியாக நலமடிக்கப்படுகின்றது. சுயநலம் கொண்ட, தனிமனித நலனை முன்னிறுத்துகின்ற நுகர்வுக் கலாச்சாரம், இயல்பில் குடும்ப அலகுகளை உள்ளீடாகவே சிதைக்கின்றது. இந்த தனிமனித வாதம் என்பது, தனிமனித நுகர்வு வெறி சார்ந்த கலாச்சாரமாக இருக்கின்றது. இது மற்றய மனிதனுடன் கூடி வாழ்தல் என்ற, சமூகத்தின் இயற்கை சார்ந்த உணர்வை, கடமையையும் மறுதலிக்கின்றது. சமூக அடிப்படையை மறுதலிக்கும் போக்கு, புதிய தலைமுறையில் அதீதமாக பிரதிபலிக்கின்றது. பெற்றோர் குழந்தைகளுக்கு செய்யும் இயற்கையான சமூகக் கடமைகள் பற்றிய கண்ணோட்டம், படிப்படியாக குழந்தைகளை பெறாமை என்ற நுகர்வு கண்ணோட்டமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. குழந்தையை பெற்றோர் அல்லது குடும்ப அலகைச் சேர்ந்தோர், குழந்தையால் வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை என்று சலித்துக்கொள்கின்றனர். தனிமையும், தனி மனிதவாதங்களும் சமூக செயல்கள் மீது குதறுகின்றது. இதன் மறுபக்கத்தில் புதிய தலைமுறை முதிர்ந்த பெற்றோருக்கு செய்யவேண்டிய சமூகக் கடமையை மறுதலிக்கின்றது. உலகமயமாதல் விதிப்படி சமூகக் கடமையைச் செய்தல், நுகர்வுக்கு தடையாகவே இருக்கின்றது. சமூகப் பாதுகாப்புகளைப் பெற்றதாக நம்பப்படும் மேற்கில் கூட, உழைத்து வாழ முடியாத முதிர்ந்த தலைமுறையின் சமூக பாதுகாப்பு என்பது, வாழமுடியாத எல்லையில் அற்பத்தனமானதாக உள்ளது. இந்த நாடுகளில் குறைந்தபட்ச கூலியின் அரைவாசியே, சமூக பாதுகாப்பு நிதியாக (ஒய்வூதிய நிதியாக) வழங்கப்படுகின்றது. உழைப்பு ஆற்றலை இழந்த சமூகத்தை இப்படி மூலதனம் கையேந்தி வாழும் நிலைக்கு தரம் தாழ்த்தியுள்ளது. குழந்தைகள் இந்த பெற்றோரை இட்டு அலட்டிக் கொள்ளாத வகையில், நுகர்வு வெறிக்குள், அவர்களின் சமூக உணர்வுகள் மலடாக்கப்பட்டுள்ளது. ஒருவனை ஒருவன் புடுங்கித் தின்னும் வாழ்க்கை முறை தான், உலகமயமாதல் கலாச்சாரம். இது கவர்ச்சியால், ஆபாசத்தால் அழகுபடுத்தப்பட்டு உள்ளது.

 

இந்த நிலையை மாற்ற நாம் என்ன செய்யப் போகின்றோம்?

 

மக்கள் சமூகமாக கூடிவாழும் சமூக உணர்வை, எப்படி எந்த வழியில் நாம் மீளப் பெறப் போகின்றோம்?

 

மக்கள் மக்களாக ஒன்று இணைவதைத் தவிர, வேறு மாற்று வழி கிடையாது. சக மனிதனை ஒடுக்காது இருக்க முதலில் நான் போராடுவது அவசியம். மனித்தன்மையுள்ள மனிதனாக நான் என்னை இனம் காண்பது, அதற்காக சக மனிதனையும் வென்று எடுப்பதும், கற்பிப்பதும் அவசியம். இந்த வகையில் மனிதத் தன்மையற்ற அனைத்தையும் எதிர்த்துப் போராடுவது அவசியம். இது மனிதனாக இருக்கும் ஒவ்வொருவனினதும் சமூகக் கடமையாகும்

பி.இரயாகரன்
06.05.2007 

Last Updated on Saturday, 19 April 2008 06:31