Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்

ஜோர்ஜியா: பனிப்போர் இரண்டாம் பாகம் ஆரம்பம்

  • PDF

 ஒசேத்தியா, லக்சம்பேர்க் அளவே ஆன, ஜோர்ஜியாவில் ஒரு சிறுபான்மைமொழி பேசும் மக்களின் மாநிலம். சோவியத் யூனியன் உடைந்த போது உருவான ஜோர்ஜிய குடியரசில் இருக்க விரும்பாமல், 1991- 1992 யுத்தம் மூலம் பிரிந்து தனியாட்சி நடத்துகின்றது. அன்று முதல் இன்று வரை அண்டை நாடும், வல்லரசுமான ரஷ்யா பாதுகாப்பு வழங்கியதால், 15 வருடங்களுக்கு மேலாக, சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்படாத "தெற்கு-ஒசேத்தியா" என்ற தனி நாட்டை, ஜோர்ஜியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. இருப்பினும் கொசோவோ சுதந்திர நாடாக முடியுமானால், தெற்கு-ஒசெத்தியாவால் ஏன் முடியாது, என்ற ஆராய்ச்சியை ஒரு பக்கம் வைத்து விட்டு, தற்போது நடக்கும் "ஜோர்ஜிய-ரஷ்ய யுத்தத்தின்" பின்னணியையும், விளைவுகளையும் பார்ப்போம்.

 

 

2003 ம் ஆண்டு, மேற்குலக ஊடகங்களால் பெருதும் சிலாகிக்கப்பட்ட, "மாபெரும் ஒரேஞ்சுப் புரட்சி", அந்நாட்டில் ஊழல்மய ஆட்சிக்கொரு முடிவு கட்டும் என்று ஜோஸ்யம் கூறப்பட்டது. அன்றைய புரட்சியின் கதாநாயகன், அமெரிக்க கல்வி கற்ற, நெதர்லாந்து மனைவியை கொண்ட, "சாகாஷ்வில்லி" நாட்டில் தேனும் பாலும் ஓட வைப்பார், என்று மக்களும் கனவுகண்டனர். அந்தோ பரிதாபம், புதிய ஜனாதிபதி சகாஷ்வில்லியின் நண்பர்கள் வட்டத்தை தவிர, வேறு யாரும் ஒரேஞ்சுப் புரட்சியினால் பயனடையவில்லை. விளைவு? மக்கள் மீண்டும் வீதிகளில் இறங்கி போராடினர். இம்முறை புரட்சியின் நாயகனுக்கு எதிரான மக்கள் புரட்சி, கடுமையான போலிஸ் அடக்குமுறையால் முறியடிக்கப்பட்டது. மேற்குலக நாடுகள் இந்த இரண்டாவது புரட்சியை ஆதரிக்கவில்லை. ஏனென்றால், அவர்களின் மனதிற்கினிய நண்பன், சகாஷ்வில்லி ஆட்சியதிகாரத்தில் இருப்பது தான். "நம்ம ஆள்" சகாஷ்வில்லியும் ஏமாற்றவில்லை. 2000 ஜோர்ஜிய படைவீரர்களை ஈராக்கிற்கு அனுப்பிவைத்தார். அமெரிக்க தேசம்கடந்த நிறுவனங்களுக்கு நாட்டை திறந்து விட்டார். இதெல்லாம் போதாதென்று, பக்கத்திலிருந்த ரஷ்ய வல்லரசை பகைத்துக் கொண்டு, "நேட்டோ" இராணுவ கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டார்.

 

மேற்குலக எஜமானர்களின் நம்பிக்கைக்குரிய வேலைக்காரனாக காட்டிக்கொண்ட ஜோர்ஜியா, தனது இழந்த நிலப்பகுதிகளான, ஒசெத்திய மற்றும் அப்காசியா ஆகிய "தனி நாடுகள்" மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தருணம் பார்த்து இருந்தது. சீனாவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவும், ஜோர்ஜிய இராணுவம் ஒசேத்திய தலைநகர் "ஷின்வலி" மீது படையெடுக்கவும் சரியாக இருந்தது. ரஷ்யா கையை கட்டிக்கொண்டு சும்மா இருக்கவில்லை. ஒசெத்தியாவில் "சமாதானப்படை"(இந்தப்படையில் ஜோர்ஜியரும் உள்ளனர்) என்ற பெயரில் நிலை நிறுத்தப்பட்டிருந்த பத்து வீரர்கள் மரணித்ததை காரணமாக காட்டி, ஜோர்ஜிய இராணுவ நிலைகள் மீது விமானத்தாக்குதல் நடத்தியது. ஷின்வலி மீதான ஜோர்ஜிய இராணுவ ஷெல் வீச்சில் மற்றும் சண்டையில் அகப்பட்டு 14000 ஒசேத்திய பொதுமக்கள் மரணமடைந்தனர். குறிப்பிட்ட அளவு ஒசெத்தியர்களுக்கு ஏற்கனவே ரஷ்ய குடியுரிமை வழங்கப்பட்டிருந்தது. தனது குடிமக்கள் பாதிக்கப்படுகிறார்கள், என்று ரஷ்யா கூறுவதற்கு இதுவும் காரணமானது.

 

தற்போது போரின் முடிவு தெரியாவிட்டாலும், அதன் விளைவுகள் தெரிகின்றன. ஜோர்ஜிய தனது மேற்குலக நண்பர்கள் உதவிக்கு வருவார்கள், என்ற அதீத நம்பிக்கையுடன், ரஷ்ய வல்லரசுடன் மோதலுக்கு தயாராகியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை காவு கொள்ளும் போர், அவர்களின் அரசியல் சூதாட்டப் பொருளாகி உள்ளது. தன்னை மீள் கட்டமைத்துக் கொண்ட ரஷ்ய வல்லரசுக்கும், நிலைத்து நிற்கும் அமெரிக்க வல்லரசிற்கும் இடையில் திரைமறைவில் இருந்த புதிய பனிப்போர், தற்போது நிஜபோராக மாற ஜோர்ஜியா வழிசமைத்துள்ளது. இருப்பினும் அவர்கள் எதிர்பார்ப்பது போல, "ரஷ்ய ஆக்கிரமிப்பு" ஆபத்தில் உள்ள ஜோர்ஜிய நண்பனுக்கு உதவ, அமெரிக்க படைகள் வரப்போவதில்லை. இப்போதும் அமெரிக்காவும், மேற்கு-ஐரோப்பாவும் யுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு போகுமாறு தான் கூறுகின்றனர்.

 

21 ம் நூற்றாண்டின் பனிப்போர் பிரச்சாரங்கள் அன்றுபோலவே இன்றும் ஒரேமாதிரியாக உள்ளன. மேற்குலக சார்பு ஊடகங்கள், "ஜோர்ஜியா மீது ரஷ்யா ஆக்கிரமிப்பு" பற்றி அலறுகின்றன. அதற்கு மாறாக ரஷ்ய ஊடகங்கள், "ஒசேத்தியா மீது ஜோர்ஜிய ஆக்கிரமிப்பு" என்று பதறுகின்றன. பிரச்சினைக்குரிய ஒசேத்தியா தவிர்ந்த பிற ஜோர்ஜிய நகரங்கள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டு போடுவதாக, ஜோர்ஜிய அரசு கூறுகின்றது. அதை ரஷ்யா மறுக்கிறது. இருப்பினும் கொசோவோ பிரச்சினையின் போது, நேட்டோ விமானங்கள் செர்பியா மீது குண்டு போட்ட கடந்தகால நினைவுகளை, ரஷ்யா தனது செயலுக்கு நியாயம் கற்பிக்க பயன்படுத்தலாம். ரஷ்ய தொலைக்காட்சிகளில் ஜோர்ஜிய அரசு, அந்நாட்டு மக்களால் வெறுக்கப்படுவதாக காட்டும் விவரணப்படங்கள் ஒளிபரப்பாகின்றன. அதே நேரம் எதற்காக மேற்குலக ஊடகவியலாளர் யாரும் ஒசெத்தியாவினுள் இல்லை? தனியான ஒசேத்திய இராணுவம் பற்றி கூறுவதில்லை? என்று கேள்வி எழுப்புகின்றன. மேலும் ரஷ்யாவில், ஒசேத்திய எல்லையோர பிரதேசத்தில் வாழும் வடக்கு ஒசெத்தியர்கள், மற்றும் பிற மொழி பேசும், ஆனால் "கொசாக்குகள்" என்ற போது இனத்தை சேர்ந்த, தொண்டர் படைகள் ஜோர்ஜிய இராணுவத்தை எதிர்த்து சண்டையிட ஒசேத்தியா செல்வதாக, ரஷ்ய தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

எங்கேயோ இருக்கும் மேற்குலக ஆதரவை மட்டும் நம்பி போர் அன்ற சூதாட்டத்தில் இறங்கியிருக்கும் ஜோர்ஜியா, ரஷ்ய வல்லரசை எதிர்த்து வெல்லப் போவதில்லை. ஆனால் அமெரிக்கா-ரஷ்யாவுக்கு இடையிலான பனிப் போரை ஆரம்பித்து வைத்த பெருமையை மட்டும் சரித்திரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

 

http://kalaiy.blogspot.com/2008/08/blog-post_09.html

 

Last Updated on Saturday, 09 August 2008 18:44