Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் நேபாளம்: எதிர்ப்புரட்சி துரோகிகளின் இடைக்கால வெற்றி!

நேபாளம்: எதிர்ப்புரட்சி துரோகிகளின் இடைக்கால வெற்றி!

  • PDF

நேபாள அரசியலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக அந்நாட்டு நேபாளி காங்கிரசு, நேபாள ஐக்கியக் கம்யூனிச (மார்க்கியலெனினிய) கட்சி மற்றும் நேபாளத்தில் உள்ள தேசிய சிறுபான்மை இனமான மாதேசி மக்களதிகார அரங்கம் ஆகிய பிற்போக்கு, சமரச, இனவாதக் கட்சிகள் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டு, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய பதவிகளைக் கைப்பற்றிக் கொண்டுவிட்டன.


இச்சம்பவங்களை யாரும் எதிர்பாராத திடீர் திருப்பம் என்றோ, முன்னேறி வந்த நேபாளப் புரட்சிக்கு மிகப் பெரிய தோல்வி என்றோ கருத முடியாது. நேபாளப் புரட்சியின் நீண்ட பாதையில் செயல்தந்திர ரீதியிலான ஒரு பின்னடைவு என்று சொல்லலாம். புரட்சி என்பதே சமநீர்ப் பயணமோ, நெளிவு சுழிவுகளற்ற நேர்கோட்டுப் பாதையில் முன்னேறக் கூடியதோ அல்ல. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நேபாள அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களில் தனிப் பெரும்பான்மைக் கட்சியாக நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்டுக் கட்சி வெற்றி பெற்றவுடன், ""உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் மேலும் பல சவால்களை எதிர் கொண்டு முறியடித்து நேபாளப் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது'' என்று எழுதினோம். நேபாளப் புரட்சிக்கு எதிராக இப்போது உள்ளேயிருந்து எழுந்துள்ள அரசியல் சவால்தான் இந்தப் பிற்போக்கு, சமரச மற்றும் இனவாதக் கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணியும், அது அடைந்துள்ள அரசியல் வெற்றியும் ஆகும்.


கடந்த ஏப்ரலில் நடந்த அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல்களில் தொகுதிவாரிப் பிரதிநிதி முறையில் அறுதிப் பெரும்பான்மை இடங்களைப் பெற்ற நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி, வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையிலான பிரதிநதிகள் நியமனத்துக்குப் பிறகு, அரசியல் நிர்ணய சபையில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை; என்றபோதும் மொத்தம் 601 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இந்த உரிமையில், தனது கட்சியின் பிரதிநிதியைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கம் அமைக்கவும், மலை மக்கள், சமவெளி மக்கள், பழங்குடி மக்கள் மற்றும் பெண்கள் ஆகிய நான்கு பிரிவினரிடையே குடியரசுத் தலைவர், துணைத்தலைவர், பிரதமர் மற்றும் அரசியல் நிர்ணய சபைத் தலைவர் ஆகிய நான்கு உயர்நிலை அரசியல் சட்ட அமைப்புப் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளவுமான திட்டத்தை நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி முன் மொழிந்தது.


அக்கட்சியின் நியாயமான, ஜனநாயகப்பூர்வமான இம்முன்மொழிவை பிற அரசியல் கட்சிகள் ஏற்க மறுத்து, நேபாள அரசியலில் ஒரு தேக்க நிலையை ஏற்படுத்தின. மன்னரின் பாசிச சர்வாதிகாரத்தின் கீழும், பின்னர் இடைக்கால அரசிலுமாக நீண்டகாலம் பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டிருந்தவருமான கிரிஜா பிரசாத் கொய்ராலா என்ற ஆதிக்க சாதிக்காரன் மற்றும் கடைந்தெடுத்த மூத்த திருத்தல்வாதியான நேபாள ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சித் தலைவரான மாதவ் குமார் நேபாள் ஆகிய இருவரைத் தவிர, யாரை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவராக ஏற்கத் தயார் என்று நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சி முன் வந்தது. அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களில் படுதோல்வி அடையச் செய்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும் பழம் பெருச்சாளிகளுமான இவ்விருவரில் யாரையாவது குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்பதில் நேபாளி காங்கிரசு மற்றும் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் பிடிவாதமாக இருந்தன.


அரசியல் எதிரிகள் ஏற்படுத்தியிருக்கும் தேக்க நிலையை உடைப்பதற்காக, மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் ஏற்கெனவே முன்மொழிந்தபடி, பெண் பிரதிநிதியாகிய சாந்தா சிரேஸ்தாவை குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் ராமராஜ் பிரசாத் சிங்கைக் குடியரசுத் தலைவர் வேட்பாளர்களாக அறிவித்தது. அவசரமாகவும் சதித்தனமாகவும் கூட்டுச் சேர்ந்த நேபாளி காங்கிரசு, மாதேசி மக்களதிகார அரங்கம், ஐக்கிய மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் முறையே ராம் பரன் யாதவ் என்பவரை குடியரசுத் தலைவராகவும், பரமானந்த் ஜா என்பவரைத் துணைத் தலைவராகவும், சுபாஷ் நேம்வாங் என்பவரை அரசியல் நிர்ணய சபைத் தலைவராகவும் போட்டியிடச் செய்து,அப்பதவிகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டன.


குடியரசுத் தலைவருக்கான தேர்தலின் முதல் சுற்றை நேபாள முன்னாள் மன்னரின் விசுவாச ராஷ்ட்ரிய பிரஜதந்திரா கட்சி, கூட்டாட்சிக்கு எதிரான ராஷ்ட்ரிய மக்கள் முன்னணி மற்றும் இன்னொரு போலி கம்யூனிஸ்ட் ஐக்கியக் கட்சி ஆகியன புறக்கணித்தன. இதனால் குடியரசுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான குறைந்த பட்ச வாக்குகளை முதல் சுற்றில் யாரும் பெற முடியவில்லை. இரண்டாவது சுற் றில் மன்னராட்சியின் விசுவாசக் கட்சி ஆதரவோடு நேபாளி காங்கிரசின் ராம் பரன் யாதவ் குடியரசுத் தலைவரானார்.


அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களில் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் தனிப் பெரும்பான்மைக் கட்சியாகத் தேர்ந்தெடுத்து, அக்கட்சியே நேபாளத்தை ஆளவேண்டும் என்ற நேபாள மக்களின் எண்ணத்தை சதித்தனமானசந்தர்ப்பவாதக் கூட்டமைத்து முறியடித்து, நேபாளப் புரட்சியைப் பின்னுக்கு இழுப்பதில் வெற்றி கண்ட பிற்போக்கு, சமரச, இனவாதக் கட்சிகள், மாவோயிசக் கட்சியின் தலைவரான பிரசந்தாவைப் பிரதமர் பதவியேற்கும்படி கோருகின்றனர். பிரசந்தாவைப் பிரதமராகவும் வேறு சில மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை அமைச்சர்களாகவும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நேபாள மக்கள் ஆதரவைப் பெற்று தங்கள் விருப்பம்போல ஆட்சி நடத்த முடியும் என்று ஏற்கெனவே சந்தர்ப்பவாதக் கூட்டு அமைத்து அரசியல் சட்டப் பதவிகளைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்ற பிற்போக்கு, சமரச, இனவாத கட்சிகள் எத்தணிக்கின்றன.


எனவே, பிரதமர் பதவியேற்க மறுத்த பிரசந்தா நேபாள அரசில் பங்கேற்பதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளார். தாங்கள் அரசமைத்தால் புதிய அரசியல் நிர்ணய சட்டம் வகுக்கப்படும் வரை இரண்டாண்டுகளுக்கு தாம் ஆட்சி பொறுப்பு வகிக்கும்படி அனுமதிக்கப்பட வேண்டும்; நேபாளி காங்கிரசு, ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதேசி மக்களதிகார அரங்கம் ஆகியவற்றின் முக்கூட்டு கலைக்கப்படவேண்டும்; தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள வாக்குறுதிகள் அரசின் குறைந்தபட்ச பொதுத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். இம்மூன்று நிபந்தனைகளும் நிறைவேற்றப்படாத நிலையில் தாம் ஆட்சியில் சேரப் போவதில்லை என்றும் எதிர்க்கட்சியாகவே செயல்படப் போவதாகவும் நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.


200 ஆண்டுகளுக்கு மேலாக நேபாளத்தில் நீடித்திருந்த பாசிச மன்னராட்சிக்கு முடிவு கட்டவேண்டுமென்று நேபாளி காங்கிரசோ, ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, தேசிய சிறுபான்மை இன உரிமைக்கான மாதேசி இனவாத அமைப்புகளோ ஒருபோதும் உறுதியாகப் போராடியதே இல்லை. குறிப்பாக, ஏதாவது ஒரு வகையில் பாசிச மன்னராட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், இந்தியா மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்துக்கு ஆதரவாகவும் நேபாளி காங்கிரசு செயல்பட்டு வந்திருக்கிறது. நேபாள மன்னர் வீசியெறிந்த எலும்பு துண்டுகளைக் கவ்விக் கொண்டு, அது ஏற்படுத்திக் கொடுத்த போலியான ஜனநாயக அமைப்புகளை ஏற்று, பாசிச மன்னராட்சி நீடிப்பதற்காக மக்களிடையே நியாயவாதங்கள் புரிந்து வந்தது. போலிகளான ஐக்கிய மார்க்சிஸ்ட்லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ பாசிச மன்னராட்சி நீடித்திருக்கும் வகையிலான சட்டபூர்வ, சமரசப் பாதையில் அழுந்திக் கொண்டிருந்தது. இந்திய விரிவாக்கஆதிக்க சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து, பாசிச மன்னராட்சிக்கு எதிரான நேபாள மக்களின் ஜனநாயகப் புரட்சியைச் சீர்குலைப்பதில் மாதேசி இனவாதக் குழுக்கள் ஈடுபட்டிருந்தன.


இத்தகைய துரோகத்துக்கும் சமரசத்துக்கும் மாறாகவும், எதிராகவும் பாசிச மன்னராட்சியையும், அதன் இராணுவத்தையும் எதிர்த்துப் பத்தாண்டுகளுக்கு மேலாக வீரமிகு மக்கள் போரை நடத்தி, பல ஆயிரம் புரட்சியாளர்களை தியாகம் செய்து, இறுதியில் மன்னராட்சியைத் தூக்கியெறிவதற்கான மாபெரும் மக்கள் பேரெழுச்சிக்குத் தலைமையேற்றது, நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். பாசிச மன்னராட்சிக்கு எதிரான ஐக்கிய முன்னணி நீடித்திருப்பதற்காகப் பதவிகளை விட்டுக் கொடுத்தும், மன்னராட்சியின் வீழ்ச்சியை உறுதிப்படுத்தவும் தேசிய சிறுபான்மை இனத்தின் உரிமையை நிலைநாட்டவும் வேண்டி இடைக்கால அரசாங்கப் பதவிகளைத் துறந்து, அரசியல் நிர்ணயச் சபைத் தேர்தல்களுக்கு முன்பாகவே நேபாளத்தை மக்கள் ஜனநாயகக் குடியரசுக் கூட்டமைப்பாகப் பிரகடனப்படுத்தவும் போராடி வெற்றி பெற்றது. நேபாள ஜனநாயகப் புரட்சியையும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல்களையும் சீர்குலைப்பதற்காக இந்திய மற்றும் ஏகாதிபத்தியக் கைக்கூலிகள் சதிகளும் நாசவேலைகளும் படுகொலைகளும் புரிந்தபோதும், இத்தகைய அரசியல் சவால்களை வீரதீரத்துடனும் விவேகமாகவும் எதிர்கொண்டு முறியடித்தது.


நேபாள மாவோயிசக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கண்ட புரட்சிகர பணிகளை ஆற்றியிராவிட்டால், நேபாளத்தில் பாசிச மன்னராட்சி வீழ்த்தப்பட்டிருக்காது; மக்கள் ஜனநாயக உரிமைகளையும் தேசிய சிறுபான்மை இனத்தவர்களும், பழங்குடிகளும் சமத்துவ உரிமைகளையும் பெற்றிருக்க முடியாது.


ஆனால், இவற்றையெல்லாம் மூடி மறைத்துவிட்டு, பிற்போக்கு, சமரச, இனவாத சக்திகள், நேபாள மாவோயிசக் கம்யூனிசக் கட்சியைத் தனிமைப்படுத்தி, புரட்சியைப் பின்னுக்கிழுத்து, மாபெரும் பேரெழுச்சி மற்றும் அரசியல் நிர்ணயசபைத் தேர்தல்கள் மூலம் நேபாள மக்கள் நிலைநாட்டியுள்ள முடிவுகளை தலைகீழாகப் புரட்டிப் போட எத்தணிக்கின்றன. இவர்களின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை வீரமிக்க நேபாள மக்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள். சமீபகால வரலாற்றில் நிரூபித்ததைப் போலவே, நேபாள மாவோயிச கம்யூனிசக் கட்சியின் தலைமையில் அணிதிரண்டு இந்த எதிர்ப்புரட்சி சதிகாரர்களை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் வீசி எறிவார்கள்; முழுமையான மக்கள் ஜனநாயகக் குடியரசை நிறுவுவார்கள்.


· ஆர்.கே.

Last Updated on Tuesday, 12 August 2008 05:52