Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் விவசாயக் கடன் தள்ளுபடி : காகித கவர்ச்சித் திட்டம் : விவாசயக் கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கி உருவாக்கியிருக்கும் நிபந்தனைகள் நயவஞ்சகமானவை

விவசாயக் கடன் தள்ளுபடி : காகித கவர்ச்சித் திட்டம் : விவாசயக் கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கி உருவாக்கியிருக்கும் நிபந்தனைகள் நயவஞ்சகமானவை

  • PDF

இந்த ஆண்டு மைய அரசின் பட்ஜெட்டில், ''குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வங்கிக்கடனில் 71 ஆயிரம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்தார். தள்ளுபடி நடைமுறைக்கு வரும் முன்பே பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தி ''விவசாயிகளுக்காக நாடு கடன்பட்டுள்ளது. அந்தக் கடனைத் திருப்பி அடைத்திருக்கிறோம்'' என்றும் ''தவறான கணக்கை எழுதிய பள்ளிக்கூடச் சிறுவனின் சிலேட்டைத் துடைத்து விட்டு, புதுக்கணக்கை எழுத வைத்திருக்கிறோம்'' என்றும் சிதம்பரம் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.


அரசின் இந்த அறிவிப்பால் உண்மையிலேயே சிறு விவசாயிகள் பலனடைந்திருக்கிறார்களா, 71 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளைச் சென்றடைந்திருக்கிறதா என்பதைப் பார்த்தால்தான் ப.சிதம்பரம் சொன்ன பள்ளிக்கூடக் கணக்கின் உண்மை நிலவரம் தெரியும்.


பட்ஜெட்டில் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய ரிசர்வ் வங்கி இதற்கான நெறிமுறைகளை வகுத்து அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறது. இதன்படி 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கும், 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகையை அடகு வைத்துக் கடன் வாங்கியவர்களுக்கும் தள்ளுபடி கிடையாது. இரண்டரை ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் குறு விவசாயிகள் என்றும், 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருப்பவர்கள் சிறு விவசாயிகள் என்றும் வரையறுக்கப்பட்டு, அவர்களுக்கு மட்டும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதர விவசாயிகளைப் பொறுத்தவரை, கடனில் 25 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும். இச்சலுகையைப் பெறுவதற்கு மீதி 75 சதவீதத் தொகையை முழுவதும் செலுத்தி இருக்க வேண்டும்.
31.3.2007க்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள குறுகிய கால பயிர் சாகுபடிக் கடன்கள், மைய அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்திற்குள் வராது. பயிர்க் கடன்கள் 31.3.2007க்குள் வழங்கப்பட்டிருந்தாலும், அக்கடன், கடன் வழங்கிய வங்கியால் 31.12.2007க்குள் தவணை தவறிய, கெடு கடந்த கடனாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்; மேலும், அப்படி அறிவிக்கப்பட்ட கடன்கள் 29.02.2008 வரை திருப்பிச் செலுத்தப்படாத நிலையில் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளுக்குப் பொருந்திவரும் குறுகிய கால பயிர்க் கடன்கள்; கிணறு தோண்டுதல், உழவு மாடு வாங்குதல், டிராக்டர் உள்ளிட்ட உழுபடைக் கருவிகள் வாங்குதல் போன்ற கூடுதல் மகசூல் பெறுவதற்காக வழங்கப்பட்ட முதலீட்டுக் கடன்கள்; பால்பண்ணை, கோழிப் பண்ணை போன்ற பண்ணைசார் தொழில்களுக்குத் தேவையான சொத்துக்களை வாங்குவதற்கான கடன்கள்தான் தள்ளுபடிக்குத் தகுதி பெற்றவையாக இந்திய ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்டுள்ளது.


ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிபந்தனைகளின்படி, 31.12.2007க்குள் தவணை தவறிய கடனாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றால், தள்ளுபடிக்குத் தகுதி பெறும் கடன்கள் 31.12.2006க்கு முன்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், அரசு வங்கிகளின் விதியின்படி கடன் வாங்கியதில் இருந்து ஓராண்டு வரை தவணைக் கட்டாமல் இருந்தால்தான் தவணை தவறிய கடனாக வங்கி அறிவிக்கும். சனவரி 2007க்கும் மார்ச் 2007க்கும் இடையில் வழங்கப்பட்ட பயிர் கடன்கள் தள்ளுபடிக்குத் தகுதி பெறாது எனத் தெரிந்திருந்தும், 31.3.2007 வரை வழங்கப்பட்ட கடன்களைத் தள்ளுபடி செய்யப் போவதாக அறிவித்து, விவசாயிகளை மோசடி செய்திருக்கிறது, மைய அரசு.


உழவு போட ஆரம்பிக்கும்போதே பெரும்பாலான சிறு விவசாயிகள் வீட்டில் இருக்கும் நகைகளை அடகு வைத்துத்தான் கடன் வாங்குகிறார்கள். 20 ஆயிரத்துக்குக் குறைவாகக் கடன் வாங்குவதும் ஒன்றுதான்; நிலத்தைத் தரிசாகப் போடுவதும் ஒன்றுதான். விவசாய இடுபொருட்கள் விற்கும் விலையை வைத்துப் பார்த்தால், இந்தச் சிறு தொகைக்குக் குறைவாக நகைக்கடனை வாங்கியவர்களை விரல்விட்டு எண்ணிவிட முடியும். நத்தம் தொகுதி அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் விசுவநாதன், தனது தொகுதியில் இந்தக் கடன் தள்ளுபடியால் பலன் அடைந்த 10 விவசாயிகளைக் கூட காண முடியவில்லை என்கிறார்.


பண்ணைசார் தொழில்களுக்காக 50,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்கள், சிறு, குறு விவசாயிகளாகக் கருதப்பட்டு, அவர்களின் முழுக் கடனும் தள்ளுபடி செய்யப்படும். அதற்கு மேல் கடன் பெற்றவர்கள், இதர விவசாயிகளாகக் கருதப்பட்டு, அவர்களுக்கு 20,000 ரூபாய் அல்லது 25 சதவீதக் கடன் தள்ளுபடி, இதில் எது அதிகமோ அத்தொகை கடன் நிவாரணமாக அளிக்கப்படும்.


அதேபொழுதில், காவிரிப் பாசனப் பகுதிகளான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, இந்த 25 சதவீதக் கடன் தள்ளுபடி கூடக் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஓரவஞ்சனை மூப்பனார் போன்ற பினாமி பண்ணையாளர்களை வேண்டுமானால் பாதிக்காமல் போகலாம்; ஆனால், நடுத்தர விவசாயிகளுக்குப் பெரிய இடியாகவே இருக்கும்.


சுய உதவிக் குழுக்கள் விவசாயம் செய்வதாகத் தகவல் எதுவும் இல்லை. வாங்கிய கடனை மீட்டர் வட்டிக்கும், கந்து வட்டிக்கும் கொடுத்து நிதியைச் சுழலச் செய்வதே இக்குழுக்களின் முக்கியத் தொழில் என்பது ஊரறிந்த இரகசியம். எனி னும், அவர்களுக்குக் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.


சுய உதவிக் குழுக்களின் சர்வதேச எஜமானனான பன்னாட்டு நிதி நிறுவனங்களைத் திருப்திபடுத்துவதற்காகக் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கலாம்! விவசாயிகள் வாங்கிய கந்துவட்டியை ரத்து செய்யத் துணியாத மைய அரசு, கந்துவட்டிக்கு விடும் சுய உதவிக் குழுக்களின் வங்கிக் கடனை ரத்து செய்வது வேதனையான முரண்பாடு.


இரப்பர், ஏலக்காய் பயிர் செய்து அந்நிய செலாவணி ஈட்டினால் அது பாரம்பரியத் தோட்டப்பயிர். காட்டாமணக்கு வேளாண்மை, மெடிசின் காய்ப் பண்ணை அமைத்தால் அது பாரம்பரியமில்லாத தோட்டப்பயிர். விவசாயத்தை நாசமாக்கும் இந்த "தேசிய' சேவைக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை தள்ளுபடியாம். ஆனால் நெல், கம்பு, சோளம் பயிரிட நகைக்கடன் வாங்கி இருந்தால், அதற்கு 20 ஆயிரத்துக்குள் வரம்பாம்.


எளிய விவசாயிகளுக்கு உரிய காலத்தில் கடனைத் தராமல் வங்கிகள் இழுத்தடிப்பதால் அவர்கள் அவசரத்திற்கு நகைகளை மார்வாடிகளிடம்அடகு வைத்துக் கடன் பெறுகின்றனர். மார்வாடிகளோ வங்கி அதிகாரிகளுடன் கள்ளக் கூட்டணி வைத்து நகைக்கடன்கள் பெற்று வருகின்றனர். இப்போது "தள்ளுபடி மேளா'வின் பலனை இவர்களும் அனுபவிக்கின்றனர் என்கிறார்கள், சீர்காழி–கழுமலையாறு பாசன விவசாயிகள் சங்கத்தினர்.


ரிசர்வ் வங்கி ஏகத்துக்கு நிபந்தனைகள் போட்டு தள்ளுபடியையே ஒன்றுமில்லாமல் ஆக்கிட முயற்சி செய்யும் போது, அரசு வங்கிகளும் தங்கள் பங்கிற்குத் தள்ளுபடிக்குத் தகுதியான விவசாயிகள் பட்டியலைத் தயாரிக்கும்போது, திருத்தத்திற்கு மேல் திருத்தம் செய்து கடன் தள்ளுபடிக்குத் தகுதியான விவசாயிகள் பலரையும் வஞ்சித்துள்ளது.


தஞ்சை மாவட்டம் குருங்குளம் ஊராட்சியில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகளின்படி 5 கோடி ரூபாய்க்கு மேல் தள்ளுபடி செய்திருக்க வேண்டிய கடனைச் சுருக்கி, வெறும் ஒன்றே கால் கோடி ரூபாயை மட்டும் தள்ளுபடி செய்திருக்கின்றது. தள்ளுபடிப் பட்டியலையும் பகிரங்கமாக ஒட்டாமல் இரகசியமாகப் பூட்டி வைத்திருந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் ஆத்திரமடைந்து கடந்த ஜூலை 21ஆம் நாளன்று வங்கிக் கிளையை முற்றுகை யிட்டு அதன் ஊழியர்களை உள்ளே வைத்துப் பூட்டிச் சிறைவைத்தனர். 4 மணி நேரம் நடந்த இந்தப் போராட்டம், வங்கி அதிகாரிகள் வந்து, நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் எனும் உறுதிமொழி தரும் வரை நீடித்தது.


ஆயிரத்துக்குமேற்பட்ட பருத்தி விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட மகாராஷ்டிரா மாநிலம் விதர்பாவில் இதுவரை கடன் தள்ளுபடி வழங்கப்படவில்லை. நபார்டு வங்கியின் ஆணைப்படி 1997 ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கிய கடன்களைத் தள்ளுபடி செய்ய முடியாது என அரசு அறிவித்ததால், கட்ட வேண்டிய கடன் தொகையும் கடன் தொகையை விடப் பல மடங்குள்ள வட்டித்தொகையும் சேர்ந்து விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து இறுக்கி வருகிறது. கடன் தள்ளுபடி இழுபறியில் இருப்பதால் விவசாயிகளுக்குப் புதிதாக கடன் ஏதும் கிடைக்காது என்பதும், இதனால் அவர்கள் கந்து வட்டிக்காரர்களிடம் மறுபடியும் சிக்க வேண்டியிருக்கும் என்பதும்தான் நடைமுறையாகி யுள்ளது.

 

·  இரணியன்

Last Updated on Tuesday, 26 August 2008 06:57