Thu04252024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அறிவுக் களஞ்சியம் பாலியல் கல்வி : எனது பார்வையில்.

பாலியல் கல்வி : எனது பார்வையில்.

  • PDF

கேள்வி : “பாலியல் கல்வி தேவையா?”
பதில் : “சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை”

இப்படி ஒரு கேள்வி பதிலை சமீபத்தில் மிக மிகப் பிரபலமான வார இதழ் ஒன்று பிரசுரித்திருந்தது.

 

பாலியல் கல்வியின் தேவையும், பாலியல் கல்வி என்பது என்ன என்பதையும் முதலில் அவருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் எனப்படுகிறது.

 

பாலியல் கல்வி என்பது வாத்சாயனாரின் காமசாஸ்திரத்தை விலாவரியாகக் கற்றுக் கொடுக்கும் விஷயம் போலிருக்கிறது என்றே தான் பெரும்பாலானவர்கள் கருதிக் கொள்கின்றனர்.

 

இதற்குக் காரணம் பாலியல் என்பதே உடலுறவு என்பது மட்டும் தான் என்னும் சிந்தனை நமக்குள் நுழைக்கப்பட்டது தான்.

 

பாலியல் கல்வியை பள்ளிக்கூடங்களில் பயிற்றுவிப்பதை விட தொலைக்காட்சி வழியாகக் கற்றுக் கொடுக்கலாம். அப்போது தான் பெற்றோரும் கூடவே இருந்து குழந்தை சரியாக கற்றுக் கொள்கிறதா, தேவையானவை மட்டும் தான் கற்றுக் கொடுக்கப்படுகிறதா என்பதை கவனிக்க முடியும்.

 

மேற்குறிப்பிட்ட தத்துவத்தை உதிர்த்தது நானல்ல, ஒரு பிரபல வார இதழின் “தலையங்கம்” ! பள்ளிக்கூடத்தில் குழந்தை பாடமாகக் கற்பதை விட வீட்டில் அமர்ந்து படிப்பதே சிறந்ததாம்.

 

அப்படியெனில் ஒவ்வொரு குழந்தையின் வயது வாரியாக, வகுப்பு வாரியாக பாடங்கள் எடுப்பது எப்படி என்பதும், கற்றுக் கொள்ளவேண்டிய மாணவர்களை விட்டு விட்டு குழந்தைகளும் கற்றுக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

 

மட்டுமன்றி “தேவையானது” என்பதை ஒவ்வொரு பெற்றோரும் எப்படி நிர்ணயிக்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 

ஆசிரியர்களிடம் சங்கோஜப்படும் குழந்தைகள், பெற்றோர் முன்னிலையில் சகஜமாக கற்றுக் கொள்ளும் என்பதையும் ஏற்றுக் கொள்வதற்கில்லை.

 

இந்தியாவில் நிகழும் பாலியல் கொடுமைகளை தினம் தோறும் பத்திரிகைகளில் வாசித்தும், எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் கொண்ட நாடு எனும் பட்டியலில் இடம்பெற்றும், 80 விழுக்காடு குழந்தைகள் குடும்ப உறவினர்களால் ஏதோ ஒருவகையான பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள் என்னும் புள்ளி விவரங்களைத் தெரிந்திருந்தும் பாலியல் கல்வியை மக்கள் எதிர்ப்பது வியப்புக்குரியதாய் இருக்கிறது.

 

பாலியல் கல்வி என்ன என்பதையும் பாலியல் கல்வியில் இடம்பெறப்போகும் பாட திட்டங்கள் என்ன என்பதையும் முடிவு செய்து அரசு பெற்றோருக்குத் தெரியப்படுத்தலாம். இதன் மூலம் குழந்தைகள் என்ன கற்றுக் கொள்கிறார்கள் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள முடியும்.

 

இரண்டாவதாக, மேலை நாட்டு பாலியல் கல்வி முறையிலிருந்து வேறுபட்டு நமது பாலியல் கல்வி முறை இருத்தல் நலம். மேலை நாடுகளில் சொல்லப்படும் “திருமணத்திற்கு முன்பான பாதுகாப்பான உடலுறவு” போன்றவற்றையும், கருவுறாமல் இருக்க செய்ய வேண்டியவை பற்றியும், உடலுறவு வகைகள் பற்றியும் சொல்லாமல் இருக்கலாம்.

 

அதற்குப் பதிலலக திருமணத்திற்கு முன்பான உடலுறவு தீமையானது என்பதையும், நமது கலாச்சாரம் குறித்தும், குடும்ப உறவுகளின் தேவை குறித்தும் விளக்கலாம்.

 

பால்வினை நோய்கள், அதுகுறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு இருத்தல் மிக மிக அவசியம். மேலும் வாழ்க்கை முறை பாலியல் வளர்ச்சியில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை விளக்குதல் அவசியம். இதன் மூலம் புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களை மாணவர்கள் விலக்கும் வாய்ப்பு உண்டு.

 

மிக மிக முக்கியமாக பாலியல் கல்வி குறித்து ஆசிரியர்களுக்கு தெளிவான வரையறையும் பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.

 

அமெரிக்காவிலேயே பாலியல் கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் நிறைய பாடங்களை சொல்லாமல் விட்டு விடுவதாகவும், அதற்குக் காரணம் அவர்களுக்கு அதில் போதிய பயிற்சி இல்லாமல் இருப்பதும், சொல்வதற்கு தயங்குவதுமே காரணம் என நியூயார்க் ஆராய்ச்சி ஒன்று கடந்த வாரம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

 

பாலியல் கல்வி தேவையானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் சரியான அணுகுமுறையுடனும், தெளிவான பார்வையுடனும், உறுதியான வரைமுறையுடனும் அதை அரசு செயலாக்கம் செய்ய வேண்டியது அவசியம்.

 

http://sirippu.wordpress.com/2008/02/12/sexeducation/

Last Updated on Tuesday, 05 August 2008 18:59