Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் ஜனநாயக கோசத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியத்தை எப்படி இயக்கங்கள் திரித்தன?

ஜனநாயக கோசத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழ் தேசியத்தை எப்படி இயக்கங்கள் திரித்தன?

  • PDF

தமிழ் தேசியத்தையே தமிழ் மக்களுக்கு எதிராக திரித்த வரலாறு தான், எமது தேசிய வரலாறு. ஏன் ஜனநாயக வரலாறும் கூட. வெறும் புலிகளல்ல, அனைத்து பெரிய இயக்கங்களும் இதைத்தான் செய்தன. மக்களை தமது எதிரியாகவே நிறுத்தின.

 

அனைத்து பெரிய இயக்கங்களும், அன்னிய சக்திகளின் அரசியல் ஏஜண்டுகளாக இருந்தனர், இருக்க முனைந்தனர். அவர்களையே தமது நண்பனாக, தோழனாக கருதினர். மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், மக்கள் இடையே இருந்த முரண்பாடுளை களைந்த ஒரு ஐக்கியப்படுத்தப்பட்ட போராட்டத்துக்கு பதில், அதற்கு வேட்டுவைத்தனர். இதில் தியாகியானோர் வரலாறு போற்றப்படுவதில்லை. அவர்களை தூற்றியபடி, மக்களிடையேயான முரண்பாடுகளை பாதுகாத்து, அதை மேலும் ஆழ அகலமாகிப் பிளந்தனர். 

 

தமிழ் மக்கள் கோரியது என்ன? தாம் சக மனிதன் போல் வாழும் ஜனநாயக உரிமையைத்தான். இந்த அடிப்படையான ஜனநாயக உரிமையை மறுத்த பேரினவாதத்துக்கு எதிராகத் தான், தமிழ் மக்கள் போராடினர். ஆனால் இதை மறுத்துத்தான், தேசியத்தின் பெயரில் (பெரிய) இயக்கங்கள் தோன்றின. தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை மறுத்த தேசியம், அன்னிய எடுபிடி தேசியமாகவும் பாசிசமாகவும் புளுத்தது.

 

இந்த தேசியம் மக்களின் அடிப்படை தேசிய உரிமைகளை மறுத்தது. புலி முதல் புலியெதிர்ப்பும், ஏன் அதற்கப்பாலும் கூட இதை மறுப்பவர்களாகவே, இந்த போராட்டம் அன்று முதல் இன்று வரை திரிபடைந்துள்ளது. எந்த உரிமையை மக்கள் பேரினவாதத்திடம் கோரினரோ, அதை வைத்து போராடும் உரிமையைக் கூட, தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறியவர்களிடம் இழந்தனர். இது தான் தேசியமாகவும், புலியெதிர்ப்பு ஜனநாயகமாகவுள்ளது. மக்களை தமது அடிமைகளாக, தமது குறுகிய தேவைக்கு தொட்டுக் கொள்ளும் ஊறுகாயாகவே மாற்றினர்.

 

இன்று இவர்கள் தான் மக்கள் போராட்டம் என்பது சாத்தியமற்றது என்றும் கூறுகின்றனர். நடைமுறைக்கு பொருத்தமற்றது என்கின்றனர். அன்றும் இதைத்தான் சொன்னவர்கள். மக்கள் போராட்டம் என்பதே 'புனைவு" என்கின்றனர். இது நடைமுறைக்கு பொருந்தாது என்கின்றனர். இது இரயாகரனின் வெறும் கற்பனை என்கின்றனர். நீங்கள் எத்தனை பேர் உள்ளீர்கள் என்கின்றனர்.

 

இப்படி பலவழியில் மக்கள் போராட்டத்தைக் குழிதோண்டி புதைத்தவர்களும், புதைப்பவர்களும், அதை எள்ளிநகையாடுபவர்களையும் கொண்ட எதிர்ப்புரட்சிக் கும்பலாக கொண்ட அரசியலே எங்கும் உள்ளது. இந்த எதிர்புரட்சிக் கும்பல் நடைமுறை சாத்தியமானதாக, எதைத்தான் அவர்கள் முன் வைக்கின்றது. புலி பாசிசத்தையும், அரச பாசிசத்தையுமே, நடைமுறைச் சாத்தியமான மக்களுக்கான ஒரே தீர்வு என்கின்றனர். அது அல்லது இது என்கின்றனர். இதில் ஒரு பகுதியினர் மக்கள் யாரை எதிரியாக கருதி போராட முனைந்தனரோ, அதே பேரினவாதக் காலை நக்கியபடி அவர்களை ஜனநாயகத்தின் காவலர் என்கின்றது.

 

இப்படிப்பட்டவர்களுடன் ஒன்றிணைந்து நிற்பதும், முரண்பாட்டுடன் அவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்வதும், செய்ய முற்படுவதாக கூறுவது எல்லாம், மக்களின் முதுகில் குத்தும் அயோக்கியத்தனமாகும்.

 

அன்று முதல் இன்று வரை இவர்கள் ஒரே குரலில் கூறுவதோ, மக்களின் முரண்பாட்டை களைகின்ற மக்கள் போராட்டம் சாத்தியமற்றது என்கின்றனர். அதாவது சாதியம், பிரதேசவாதம், இனவாதம்,… என எதையும் நாம் களையமுடியாது என்கின்றனர். இதை களைய முனைவதற்கு எதிராகப் போராடுவதே, 'தேசியம்" 'ஜனநாயகம்" என்கின்றனர். இதை த்தான் அவை செய்கின்றன, இதை உங்கள் யாராலும் மறுக்க முடியுமா?

 

தேசியத்துக்கு போராடுவதாக கூறியவர்களாலேயே, தேசிய அடிப்படைகள் (மக்களின் அடிப்படை நலன்கள்) மறுக்கப்படடது. இப்படி ஆரம்ப முதலே தேசிய போராட்டம் திரிக்கப்பட்டது. தேசியப் போராட்டம் தீர்க்கக் கோரிய சமூக முரண்பாடுகளை, தனக்கு எதிரானதாக நிறுத்தியது. இப்படி ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் தனக்கு எதிராகவே நிறுத்தியது. ஆனால் மக்கள் தம் மீதான ஒடுக்குமுறையில் இருந்து விடுபடவே விரும்புகின்றனர். என்ன நடந்தது, ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை மறுத்த இயக்கங்கள், அது எழுந்துவிடா வண்ணம் நஞ்சை சமூகம் மீது வௌவேறு வழிகளில் தெளித்தது, தெளிக்கின்றது. 


பி.இரயாகரன்
05.07.2008


தொடரும்

 

Last Updated on Friday, 11 July 2008 06:22