Tue04162024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்

அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்

  • PDF

 மனித குல விரோதி இட்லரையே விஞ்சும் வகையில், இரண்டாம் உலகப் போர் முடிந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த மிகக் கொடிய பயங்கரவாத மிருகம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம். முதலாளித்துவ வரலாற்றாளர்களால் மூடி மறைக்கப்பட்ட இந்த உண்மையை, தென்கொரியாவில் தோண்டத் தோண்ட வெளிவரும் படுகொலைக் குழிகளின் எலும்புக் கூடுகளே நிரூபித்துக் காட்டுகின்றன. 


 இரண்டாம் உலகப் போரில் பாசிச முகம் வீழ்த்தப்பட்டு, ஜப்பானிய ஏகாதிபத்தியம் தோல்வியுற்று சரணடைந்ததும், அதன் காலனியாக இருந்த தென்கிழக்காசிய நாடுகளைக் கைப்பற்றி தனது காலனியாதிக்கத்தை நிறுவ அமெரிக்க ஏகாதிபத்தியம் துடித்தது. அதற்கு முன் வியட்நாம், இந்தோனேசியா, மலேயா, கொரியா ஆகிய தென்கிழக்காசிய நாடுகளில் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும் இணைந்து, காலனியாதிக்கத்துக்கு எதிரான தேச விடுதலைப் போரில் முன்னேறி, புதிய சுதந்திர அரசுகளை நிறுவி அதிகாரத்தைக் கைப்பற்றினர். அவற்றுக்கெதிராக ஆங்கிலேய  அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் படுகொலை செய்து தமது பொம்மையாட்சிகளை நிறுவி புதிய காலனியாதிக்கத்தை நிலைநாட்டினர்.


 கொரியாவின் வடபகுதியில் கம்யூனிஸ்டுகளும் நாட்டுப் பற்றாளர்களும் இணைந்து ஆயுதமேந்திப் போராடி ஜப்பானிய காலனியாதிக்கவாதிகளை விரட்டியடித்து, அப்பிராந்தியத்தை விடுதலை செய்திருந்தனர். தென்பகுதியில் அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் வந்திறங்குமுன்னர், கொரியாவின் அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும் கம்யூனிஸ்டுகளும் கூடி தேசவிடுதலை முன்னணியின் தலைவரான லியூவூன்கியாங் என்பவர் தலைமையிலான கொரிய மக்கள் குடியரசைப் பிரகடனம் செய்தனர். ஆனால், அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களோ தென்கொரியாவைக் கைப்பற்றிக் கொண்டு, தேச விடுதலை முன்னணியை ஒடுக்கி, லியூவூன்கியாங்கையும் இதர தலைவர்களையும் படுகொலை செய்து, சைங்மான் ரீ என்ற சர்வாதிகாரி தலைமையில் அமெரிக்க ஆதரவு பொம்மையாட்சியை நிறுவினர்.


 ஏற்கெனவே கொரியாவின் வடபகுதியை விடுதலை செய்து சுதந்திர அரசை நிறுவியிருந்த கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றாளர்களும், தென்பகுதியைக் கைப்பற்றிய அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போர் தொடுத்து கொரியாவை ஐக்கியப்படுத்த முயன்றனர். கொரிய மக்களின் நீதியான இப்போரை அன்றைய சோவியத் ரஷ்யாவும் சீனாவும் ஆதரித்து ஆயுத உதவியோடு படைகளையும் அனுப்பின. மறுபுறம் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள், கொரியாவின் தென் பகுதியில் தமது பொம்மையாட்சியை நிறுவி, வடபகுதியின் மீது போர் தொடுத்தனர். 1950 ஜூன் 25ஆம் தேதியிலிருந்து 1953 ஜூன் 27ஆம் தேதி வரை நீடித்த இப்போர், இரண்டாம் உலகப் போருக்குப் பின் நடந்த மிகக் கொடிய போர் என்று சித்தரிக்கப்படுகிறது. அதன்பிறகு, சமாதான ஒப்பந்தம் உருவாகி கம்யூனிஸ்டுகள் தலைமையிலான வடகொரியா, அமெரிக்கக் கைக்கூலிகளின் தலைமையிலான தென்கொரியா என கொரிய நாடு பிளவுபட்டது.


 மூன்றாண்டுகளுக்கு நீடித்த கொரியாவின் தேச விடுதலைப் போரின் போது, அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாதமும் படுகொலைகளும் பாசிச இட்லருக்கே பாடம் சொல்லித் தருவதாக இருந்தன. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் வடகொரியாவின் மீது போர் தொடுத்து பேரழிவுகளை நடத்தியதோடு மட்டும் நின்றுவிடவில்லை. தமது பொம்மையாட்சியின் கீழுள்ள தென்கொரியாவில் கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் தொழிற்சங்க  விவசாய இயக்கத்தினரையும் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்தனர். கம்யூனிஸ்டு ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலட்சக்கணக்கில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்து அவர்களைப் பெருங்குழிகளில் போட்டுப் புதைத்தனர். போரில் வடகொரியப் படைகள் பின்வாங்கியபோது, கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிராமங்களுக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள், அங்கிருந்த அப்பாவி மக்களை விசாரணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்று சுட்டுக் கொன்று பெரும் குழிகளைத் தோண்டிப் புதைத்துள்ளன.


 சர்வாதிகாரி சைங்மான் ரீ தலைமையிலான அமெரிக்க பொம்மையாட்சி, கம்யூனிசத்தை ஆதரித்த 3 இலட்சம் விவசாயிகளை அரசின் ""தேசிய வழிகாட்டுதல் கூட்டமைப்பில்'' கட்டாயமாகச் சேர்த்து, அவர்களுக்கு கம்யூனிசத்துக்கு எதிரான கல்வி அளித்தது. பின்னர் அத்தனை பேரையும் சுட்டுக் கொன்று பெரிய குழிகளை வெட்டி ஆயிரக்கணக்கில் பிணங்களைப் போட்டுப் புதைத்தது. இதுதவிர பயனற்ற பல பழைய சுரங்கங்களிலும் பிணங்களைப் போட்டு மூடியது.


 ஒருவரல்ல; இருவரல்ல. இலட்சக்கணக்கான கொரிய மக்களை இனப்படுகொலை செய்த அமெரிக்க வெறியாட்டத்தைப் பற்றி ஆலன் வின்னிங்டன் என்ற பிரிட்டிஷ் செய்தியாளர், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான ""டெய்லி ஒர்க்கர்''இல் அப்போதே எழுதினார். ஆனால், இது கம்யூனிஸ்டுகளின் அவதூறு பிரச்சாரம் என்று அமெரிக்கா கூசாமல் புளுகியது. மறுபுறம், வடகொரியா மற்றும் சீனாவும் தான் அப்பாவி கொரிய மக்களைக் கொன்றதாக இன்று வரை பொய்ப் பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.


 கேட்ட மாத்திரத்திலேயே அதிர்ச்சியைத் தோற்றுவிக்கும் இக்கோரமான படுகொலைகளில் தமது உற்றார்உறவினர்களை இழந்தவர்கள், 1990 வரை தென்கொரியாவில் நீடித்த அமெரிக்க ஆதரவு பெற்ற பாசிச சர்வாதிகார ஆட்சிகளால் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டனர். அவர்களது குழந்தைகள் கூட "இடதுசாரிகள்' என்று முத்திரைக் குத்தப்பட்டுப் பள்ளிகளில் ஒதுக்கப்பட்டனர். அவர்களைப் போலீசு எந்நேரமும் கண்காணித்ததோடு, விசாரணை என்ற பெயரில் அடிக்கடி கைது செய்த வதைத்தது இதனால் பயபீதியில் உறைந்து போன இவர்கள் இப்படுகொலைகள் பற்றி வாய் திறக்கவே முடியவில்லை.


 கடும் வேதனையைச் சுமந்து கொண்டு காலங்கள் உருண்டோடின. 2002ஆம் ஆண்டில் தென்கொரியாவில் வீசிய கடும் புயல்  பெருமழையால், பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்று புதைத்த மிகப் பெரிய மரணக் குழி ஒன்றிலிருந்து எலும்புக் கூடுகள் வெளியே தெரியத் தொடங்கிய பின்னரே, அமெரிக்காவின் இனப்படுகொலை பற்றிய உண்மைகள் மெதுவாகக் கசியத் தொடங்கின.


 இப்படுகொலைகள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தென்கொரிய மக்கள் தொடர்ந்து போராடியதால், போராட்ட நிர்பந்தம் காரணமாக தென்கொரிய அரசு கடந்த 2006ஆம் ஆண்டில் ""அமைதி மற்றும் சமாதானத்துக்கான ஆணையம்'' அமைத்து விசாரணையைத் தொடங்கியது. அச்சத்தையும் தயக்கத்தையும் உதறிவிட்டு ஏராளமான மக்கள் இந்த ஆணையத்திடம் சாட்சியமளித்தனர். அதனடிப்படையில் புதைகுழிகளைத் தோண்டத் தொடங்கியதும், குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் வெளிவரத் தொடங்கின. தென்கொரியாவின் வடக்கே, வடகொரியாவை ஒட்டிய எல் லைப்புற பகுதியில் மட்டும் 160க்கும் மேற்பட்ட இடங்களில் இதுபோன்ற மரணக் குழிகள் கண்டறியப்பட்டன.


 டேஜியான் சிறைச்சாலையின் முன்னாள் சிறைக் காவலரான லீ ஜூன்யங், ""கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார்கள் என்ற ஒரே குற்றத்துக்காக அப்பாவி மக்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இச்சிறைச்சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர்'' என்றும், ""பெண்கள்  குழந்தைகள் உள்ளிட்ட இடதுசாரிகள் பல்லாயிரக்கணக்கில் தென்கொரிய பாசிச இராணுவத்தால் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர்'' என்றும் இந்த ஆணையத்தில் சாட்சியமளித்துள்ளார். கிம்மான்சிக் என்ற முன்னாள் தென்கொரிய இராணுவ அதிகாரி, அரசியல் கைதிகளை வரிசையாக நிற்க வைத்து அவர்களின் கைகளை பின்புறமாக மடித்து இரும்புக் கம்பியால் அனைவரையும் பிணைத்து சுட்டுக் கொன்ற கொடூரத்தை, தற்போது மனசாட்சிக்குப் பயந்து சாட்சியம் கூறியிருக்கிறார்.


 அமெரிக்க இராணுவமும், அதன் தலைமையின் கீழ் கட்டியமைக்கப்பட்ட தென்கொரிய பாசிச இராணுவமும், வடகொரிய இராணுவத்தினரைப் போல உடையணிந்து கொண்டு கவச வண்டிகளில் செங்கொடியுடன் கிராமம் கிராமமாகச் செல்வார்கள்; செம்படையினர் வருவதாகக் கருதி வரவேற்க ஓடிவரும் மக்களை அங்கேயே சுட்டுக் கொல்வார்கள் என்று ஆணையத்தின் முன் பலர் சாட்சியமளித்துள்ளனர்.


 தென்கொரியாவை ஆக்கிரமித்திருந்த அமெரிக்கப் படைகளுக்கு அன்று தளபதியாக இருந்தவர், டக்ளஸ் மெக்ஆர்தர். கம்யூனிஸ்டுகளையும் நாட்டுப்பற்றாளர்களையும் உழைக்கும் மக்களையும் ஈவிரக்கமின்றிக் கொன்றொழிக்கும் அவரது இப்பயங்கரவாத உத்தியே மெக்கார்திசம் என்று குறிப்பிடப்படுகிறது. போரில் சிக்கி வடகொரியாவிலிருந்து தென்கொரியாவுக்கு அகதிகளாக ஓடி வந்தவர்களைக் கூட சுட்டுக் கொல்லும் அளவுக்கு மெக்கார்திசம் வெறியாட்டம் போட்டது.


 ""அப்பாவி மக்களைக் கண்மூடித்தனமாக கொன்றொழிப்பதையே அமெரிக்கா தனது கொள்கையாகக் கொண்டுள்ளது'' என்று 1950களில் தென்கொரியாவுக்கான அமெரிக்கத் தூதர், அன்றைய அமெரிக்க வெளியுறவுச் செயலர் டேன்ரஸ்க்குக்கு எழுதியுள்ள கடிதமே இதனை நிரூபித்துக் காட்டுகிறது. இதுதவிர, அன்றைய அமெரிக்க சிப்பாய்களால் படம் பிடிக்கப்பட்ட போர்க்கள காட்சிகள் கடந்த ஆண்டில் சில அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியாயின. கைகள் கட்டப்பட்ட நிலையில் வெள்ளுடை அணிவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் பெருங்குழிகளின் அருகில் வரிசையாக நிறுத்தப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டு குழிகளில் வீசப்படும் காட்சிப் படங்களும் அவற்றில் இருந்தன. மேலும் அமெரிக்க விமானப் படையில் பணியாற்றி ஓய்வுப் பெற்ற உளவுத்துறை அதிகாரியான டொனால்டு நிக்கோலஸ், தனது நினைவுக் குறிப்பு நூலில் தென்கொரியாவின் சுவோன் பகுதியில் 1800 பேர் அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.


 இவ்வாறு தென்கொரியாவின் பல பகுதிகளில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் நடத்திய இனப்படுகொலைகள் பற்றி இந்த ஆணையத்தில் 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


 தனது விசுவாச பொம்மையாட்சி நிறுவப்பட்டிருந்த போதிலும், தென்கொரிய மக்களை இலட்சக்கணக்கில் படுகொலை செய்த அமெரிக்க ஏகாதிபத்தியம், வடகொரியா மீது எத்தகைய அட்டூழியங்களை ஏவியிருக்கும்? வடகொரியா மீதான ஆக்கிரமிப்புப் போரில்தான் முதன்முதலாக ""நாபாம்'' வகை குண்டுகளைக் கொண்டு அமெரிக்கா தாக்கியது. நெருப்பு மழை பொழியும் இந்த வகை குண்டுகள் வீசப்பட்டு வடகொரியாவின் பல்லாயிரம் கிராமங்களும் நகரங்களும் புல்பூண்டு கூட இல்லாமல் தீக்கிரையாக்கப்பட்டன. வடகொரிய மக்கள் தொகையில் ஏறத்தாழ 20 சதவீதத்தினர் படுகாயமடைந்ததோடு, உணவின்றிப் பட்டினி கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். தென்கொரியா, வடகொரியாவைச் சேர்த்து ஏறத்தாழ 20 இலட்சம் கொரிய மக்கள் இந்த அமெரிக்க ஆக்கிரமிப்புப் போரில் கொல்லப்பட்டனர்.


    மூன்றாண்டுகள் நீடித்த இந்த கொரிய ஆக்கிரமிப்புப் போர், பின்னாளில் அமெரிக்கா நடத்திய மிகப் பெரிய ஆக்கிரமிப்புப் போர்களுக்கெல்லாம் ஓர் ஒத்திகையாக அமைந்துள்ளது. வியட்நாம், சோமாலியா, ஆப்கானிஸ்தான், ஈராக்  என அமெரிக்க இராணுவம் எங்கெல்லாம் காலடி எடுத்து வைத்ததோ, அங்கெல்லாம் முதுகெலும்பையே சில்லிட வைக்கும் அளவுக்கு காட்டுமிராண்டித்தனமான படுகொலைகள் நடத்தப்பட்டன; நடத்தப்படுகின்றன.


    அமெரிக்கப் பயங்கரவாதிகள் நடத்திய படுகொலைகள் பற்றி விசாரணை, தென்கொரியாவில் தொடர்கிறது. அமெரிக்க விசுவாச தென்கொரிய அரசு இப்படுகொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதற்கு அடிப்படையே இல்லை. ஆனால், தென்கொரிய மரணக் குழிகளில் புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பவே செய்யும். அனைத்துலக உழைக்கும் மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டப் பெருநெருப்பு மூண்டு, அது உலக மக்களின் கொடிய எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தைச் சுட்டெரிக்கவே செய்யும்.

Last Updated on Saturday, 05 July 2008 05:32