Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களின் உரிமை பறிப்புக்கு எதிராக வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்

  • PDF

 மறுகாலனியாக்கச் சூழலில், தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் எவ்வாறு நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் தொடரும் கொத்தடிமைத்தனமே நிரூபித்துக் காட்டுகிறது. ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 460 பேரும், தற்காலிக  ஒப்பந்த  பயிற்சித் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 3000 பேரும் வேலை செய்கின்றனர். 240 நாட்கள் வேலை செய்தால் அத்தொழிலாளியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஆலை நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எந்த உரிமையும் சலுகையுமின்றி மூன்றாண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தற்காலிக  பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களோ, எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதோடு, காண்டிராக்டர்களின் கொடிய சுரண்டலுக்கும் ஆளாகி நிற்கிறார்கள். 


 தற்காலிகத் தொழிலாளர்கள் காலை 7.30 மணிக்கு ஆலைக்குள் நுழைந்தால், பணிநேரப்படி 4.30 மணிக்கு அவர்களுக்கு வேலை முடிந்தாலும், மாலை 67 மணி வரை கட்டாயமாக வேலை வாங்கப்படுகின்றனர். இதுதவிர,


"இணிட்ணிஞூஞூ " என்ற பெயரில் ஒருசேர இரண்டு ஷிப்ட் (16 மணி நேரம்) வேலை வாங்கிக் கொண்டு, சட்டப்படி தரவேண்டிய இரட்டிப்பு ஊதியத்தைத் தராமல் ஏய்ப்பது, சீருடைபாதுகாப்புச் சாதனங்கள் இன்றி வேலை செய்ய நிர்பந்திப்பது, மருத்து ஈட்டுறுதிக்காகவும் சேமநல நிதிக்காகவும் சம்பளத்தில் பிடித்தம் செய்து கொண்டு அதற்கான அடையாள அட்டை வழங்காமல் ஏய்ப்பது, உணவகத்தில் தரமற்ற உணவைக் கொடுத்து புதிய வகை தீண்டாமையைப் பின்பற்றுவது, தொழிலாளர்களைக் கீழ்த்தரமாக ஏசுவதோடு, உற்பத்திப் பொருட்களை நாசமாக்கி விட்டதாக வீண்பழி சுமத்தி மிரட்டிப் பணம் பறிப்பது என நிர்வாகத்தின் அட்டூழியங்கள் கேள்விமுறையின்றித் தொடர்கின்றன. தற்காலிகபயிற்சித் தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரண்டு போராடினால் மட்டுமே உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்த்தி, லேலண்டு ஆலையில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு அமைப்பாக்கி வந்தது. இந்நிலையில், நிர்வாகத்தால் ஏவிவிடப்பட்ட ரௌடிகள் தற்காலிகத் தொழிலாளர்களைத் தாக்கியதை எதிர்த்து, பு.ஜ.தொ.மு. தலைமையில் தற்காலிகத் தொழிலாளர்கள் கடந்த டிசம்பர் 4ஆம் தேதியன்று திடீர் வேலைநிறுத்தம் செய்தனர். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என்று தொழிலாளர்களைச் சமரசப்படுத்திய சி.ஐ.டி.யு. சங்கம், பின்னர் இத்தொழிலாளர்களைக் கைகழுவியது. நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மற்ற சங்கங்களோ, கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தின.


 தொழிலாளர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு கடந்த ஜூன் 4ஆம் தேதியன்று மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நாடகமாடிய நிர்வாகமும் போலீசும் தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்க முயன்றன. இதை அம்பலப்படுத்தி மீண்டும் வேலை நிறுத்தத்துக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள், சங்கமாக அணிதிரளாமல் நிர்வாகத்தைப் பணிய வைக்க முடியாது என்பதை உணர்ந்து பு.ஜ.தொ.மு. தலைமையிலான ஒப்பந்த மற்றும் தற்காலிகத் தொழிலாளர் சங்கத்தில் அணிதிரளத் தொடங்கினர். ஜூன் 17ஆம் தேதியன்று மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆலை வாயிலில் தொழிலாளர்கள் திரளும் முன்பே, பெருமளவில் போலீசைக் குவித்து போராட்டத்தை நடத்த விடாமல் கலைத்த நிர்வாகம், முன்னணித் தொழிலாளர்கள் 5 பேரை வேலை நீக்கம் செய்து பழிவாங்கியது. இந்த அடாவடித்தனத்தை எதிர்த்தும், தற்காலிகத் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை வலியுறுத்தியும் பு.ஜ.தொ.மு. தலைமையில் ஆலைவாயில் முன்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.


தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்.

Last Updated on Wednesday, 06 August 2008 05:40