Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் விடுதலைப்புலிகளில் ஆயுதம் ஏந்திய பெண்கள் - பெண் விடுதலையைச் சாதிப்பார்களா?

விடுதலைப்புலிகளில் ஆயுதம் ஏந்திய பெண்கள் - பெண் விடுதலையைச் சாதிப்பார்களா?

  • PDF

book _6.jpgஆசியா கண்டத்தில் நடந்த பல்வேறு வர்க்கப் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு பல வீரம் செறிந்த வரலாறுகள் பலவற்றை எமக்கு விட்டுச் சென்றுள்ளது. ஆனால் பலர் விடுதலைப்புலிகளில் உள்ள பெண்களின் பங்களிப்பே ஆசியாவிலேயே முதல் ஆயுதப் போராட்டம் என்று காட்டுவதும், இதை இதன் அடிப்படையில் இருந்து விமர்சிப்பதும் என அண்மைக் காலத்தில் பலர் குறிப்பாகப் பெண்ணியல்வாதிகள் களம் இறங்கியுள்ளனர்.


பெண்கள் ஆயுதம் ஏந்திய வரலாறு இலக்கியத்திலேயே கிடையாது என்றும், பெண்கள் ஆயுதம் ஏந்துவது பெண்ணின் இயல்புகளைச் சிதைப்பவை என்றும் பல்வேறு கருத்துகளைப் பெண்ணியல்வாதிகள் முன்வைத்து வருகின்றனர்.


தனிச்சொத்துரிமை அமைப்பில் உருவான சொத்துரிமையைக் கையாள்வதில் உருவாகும் வர்க்க யுத்தங்கள் ஆணாதிக்கத் தன்மை கொண்டவை என்பதும், அதன் அனைத்து உள்ளடக்கத்தையும் தனக்குள் ஆழமாகக் கையாள்பவை என்பதும் அடிப்படையான யுத்த உள்ளடக்கமாகும். ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை நீடிக்கும் வரை யுத்தங்கள் அதன் உள்ளடக்கமாக இருப்பது மனித வரலாற்றின் பொதுவிதியாகும். இந்த யுத்தத்தையும், ஆணாதிக்கத்தையும், தனிச் சொத்துரிமையையும் மனித வரலாற்றில் இருந்து அகற்ற முடியாதா? மனித வரலாற்றில் இது என்றுமே இருந்தது கிடையாதா?


கடந்த மூவாயிரம் வருடத்துக்கு முந்திய வரலாற்றில் இவை வெறும் கற்பிதங்கள் தான். மிருகத்துடன் உயிர் வாழும் போராட்டம் இருந்த போதும் சரி, மனிதனுக்கு இடையில் ஏற்பட்ட போதும் சரி-போராட்டத்தில் மனிதனை மற்றொரு குழு மிருகமாகவே அடையாளம் கண்டு போராடினர். ஆனால் மனிதனை மனிதன் அடையாளம் கண்டு அவனை அடக்கி, அவன் உழைப்பைச் சுரண்ட அடிமைப்படுத்த தொடங்கிய போதுதான் யுத்தம் அதற்கிடையிலான வர்க்க யுத்தங்களாக மாறின. அதாவது மனிதனுக்கிடையிலான ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய சுரண்டல், தவிர்க்க முடியாமல் வர்க்க யுத்தத்துக்கு வித்திட்டது. இந்த யுத்தங்கள் உலகம் தழுவிய விரிந்த தளத்தில் உலகக் சொத்துரிமையைக் கைப்பற்றும் எல்லை வரை இன்று விரிந்து விட்டது.


இங்கு அடிமைப்படுத்திய வரலாற்றில் பெண்ணடிமைத்தனம் அதன் சாரமாகின்றது. யுத்தங்களையும், ஆணாதிக்கத்தையும், தனிச் சொத்துரிமையையும், சாதியத்தையும் ஒழிக்க வேண்டுமாயின், நாம் மனிதனின் இயற்கையான வாழ்வை நோக்கி அதாவது கடந்த மூவாயிரம் வருடத்துக்கு முந்திய மனிதனின் வாழ்வில் இருந்த சமூகத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு போராட வேண்டும்.


ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமையின் விளைவு என்பதை வரலாற்று ரீதியாகப் புரிந்து கொள்வதன் ஊடாக, அதை(தனிச்சொத்துரிமையை) ஒழிப்பதில் மட்டுமே ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியும். இந்தத் தனிச்சொத்துரிமை அமைப்பு வன்முறை ஊடாகவே சமூகச் சொத்துரிமையைக் கைப்பற்றி வருவதுடன், அதை வன்முறையூடாகவே பாதுகாக்கின்றது. அதாவது இன்றைய சமூக அமைப்பின் பாதுகாப்பு என்பதை வன்முறை நிறுவனங்களே கட்டிப் பாதுகாக்கின்றன. இது அமைதியாக இருப்பதாகப் பாசாங்கு செய்யும் ஜனநாயக அமைப்பாக இருந்தாலும் சரி, வர்க்க நெருக்கடியால் நேரடியாக வன்முறையைக் கையாளும் ஜனநாயக அமைப்பாக இருந்தாலும சரி; வன்முறை வடிவம் பொதுவிதியாக இருக்கின்றது. வர்க்க ரீதியான போராட்டம் மட்டுமே இதன் பண்பின் தன்மையை வேறுபடுத்துகின்றது. கடந்த மனித வரலாற்றின் அனைத்து யுத்தங்களும் வர்க்க யுத்தமாக இருந்தாலும், அவை எவ்வளவு புரட்சிகரமாக இருந்தாலும், அனைத்தும் தனிச்சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்டு தன்னை மீள மீள பழைய முரண்பாட்டைப் புதுப்பித்துக் கொண்டது. ஆதலால் அது மீள மீள யுத்தம் தொடர்வது தவிர்க்க முடியாத விதியாகின்றது.


இந்த வரலாற்றில் தான் சொத்துரிமையை ஒழிப்பதை அடிப்படையாகக் கொண்ட வர்க்க யுத்தத்தை, முதன் முதலாக யுத்தங்கள் மீது கோருவது புதிய மனித வரலாறாகின்றது. இது அடிப்படையில் ஆணாதிக்கத்தைத் தனிச்சொத்துரிமை வடிவில் ஒழிக்கின்றது. இது சாதியைத் தனிச்சொத்துரிமை மீது ஒழிக்கின்றது. இது சுரண்டலைத் தகர்க்கின்றது. இதனால் யுத்தங்கள் ஒழிந்து போகின்றன. யுத்தங்கள் எதற்காக நடக்கின்றன? என்ற அடிப்படையான ஆழ்ந்த உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அதை மாற்றுவதன் மூலம் யுத்தத்தையே இல்லாது ஆக்க முனைவது புதிய மனித வரலாறாகும். மார்க்சியம் முதன் முதலாக யுத்தங்கள் தனிச்சொத்துரிமையை அடிப்படையாகக் கொண்ட வர்க்க யுத்தமாக இருப்பதைத் துல்லியமாக நிறுவியது. எந்தளவுக்கு விரிந்த மேற்தளத்தில் பல்வேறு காரணங்களை முன்வைத்து அணிதிரண்டாலும், உண்மையில் அதன் ஆழ்ந்த நோக்கம் அதன் உள்ளடக்கம் தனிச்சொத்துரிமை சார்ந்து கிடப்பதை மார்க்சியம் எடுத்துக் காட்டியது, காட்டுகின்றது. உலகத்தில் நடந்த யுத்தங்கள் அனைத்துமே இதைத் தாண்டி நடந்து விடவில்லை என்பதை, வரலாற்று எதார்த்தம் நிர்வாணமாக்கியுள்ளது.


வன்முறை மூலமும், யுத்தங்கள் மூலமும் தனிச்சொத்துரிமை அமைப்பைக் கட்டிப் பாதுகாப்பதுடன், சொத்துரிமை குவிக்கப்பட்டு வரும் வரலாற்றில், மக்கள் தமது வாழ்வுக்காகப் போராடுவது என்பது மீள மீள நடப்பது இயங்கியல் வாழ்வு விதியாகும். மக்கள் வாழ்வின் தற்காப்பு சார்ந்து போராடும் போதும், பறிகொடுத்ததைப் போராடிப் பெறுவதிலும் வெளிப்படையான, மேலெழுந்தவாரியான காரணத்தையே எப்போதும் முதன்மையான அம்சமாகக் கொண்டு உள்ளது. இதை எதிர்ப்பது மக்களின் நியாயமான வாழ்வியல் கோரிக்கைகளை மறுப்பதிலும், சுரண்டும் வர்க்கத்தை ஆதரிப்பதிலும் போய் முடிகின்றது. மக்களின் மேலெழுந்தவாரியான ஒவ்வொரு கோரிக்கையையும் தனிச்சொத்துரிமையை ஒழிப்பதை நோக்கி மாற்றுவதன் ஊடாகவே, யுத்தத்தின் உள்ளடக்கத்தைத் தகர்த்து மக்களின் நலனைப் பெற்றெடுக்க முடியும். இது தவறுகின்ற பட்சத்தில் யுத்தம் புதிய வடிவில் மீள வருகின்றது.


இங்கு பெண்கள் ஆயுதம் ஏந்துவது பெண்ணியல் பண்புகளைத் தகர்க்கின்றதா? பண்புகள் என்பது என்ன? பெண்களின் பண்புகளை ஆணாதிக்கம் வரையறுத்ததே ஒழிய, பெண்களின் இயற்கை குணாம்சம் அல்ல. பெண்களின் தாய்மை, குழந்தை வளர்ப்பு சார்ந்த இயற்கை உணர்வுகள் எல்லாம் என்றைக்கும் ஒன்றாக இருந்;தவையுமல்ல. மாறி மாறி வந்தது மட்டுமின்றி இன்று அதை ஆணாதிக்க வழியில் சிதைப்பதும் நிகழ்கின்றது. பல பெண்ணியல்வாதிகள் ஆணாதிக்க வழியில் இயற்கை சார்ந்த பெண்ணியல் உணர்வுகளைச் சிதைக்க முனைகின்ற போது, பெண்களின் ஆயுதம் ஏந்தும் உரிமையைக் கொச்சைப்படுத்த தயங்கவில்லை.


யுத்தம் என்பது தனித்துவமான மனிதனை விலகி உருவான பண்பு அல்ல. மனிதன் உணவுக்காக மற்ற மிருகத்துடன் போராடி வாழ்ந்த போது, பெண் அதற்காகத் தலைமை தாங்கி போராடினாள். தனிச்சொத்துரிமை அமைப்பு தாய்வழிச் சமூகத்தைச் சிதைத்து ஆண் வழிச் சமூகத்தை உருவாக்கிய போது, பெண்ணின் போராட்டம் இயற்கையாக எழுந்தது. இந்த வாழ்வுக்கான போராட்டங்கள் குடும்பத்தில் இருந்து ஒரு மக்கள் கூட்டத்தைப் பிரதிபலித்த போது, அங்கு பெண்ணின் நலன்களை உள்ளடக்கியபடி இருப்பதால் பெண்ணும் அதற்காகப் போராடவேண்டி இருக்கின்றது. வாழ்வு என்பது போராட்டத்தை உள்ளடக்கியது என்பதால், மனிதர்களுக்கிடையிலான இந்தப் போராட்டத்தில் பெண் பங்களிப்பு ஆண் சார்ந்ததல்ல. சொந்த ஆளுமையிலும், சொந்த நலன் சார்ந்தும் வெளிப்படுவது இயற்கையானது. ஆனால் பெண், ஆணைச் சார்ந்து வாழ வைக்கும் தனிச்சொத்துரிமை சமூக அமைப்பில், பெண்ணின் வாழ்வுக்கான போராட்டத்தை ஆணாதிக்கம் கட்டுப்படுத்திய போது, யுத்தங்கள் ஆண்களின் யுத்தங்களாக வெளிப்படுகின்றன. ஆனால் அந்த யுத்தத்தின் விளைவுகள் பெண்ணையும் உள்ளடக்கியது. இந்த வகையில் யுத்தத்தின் சாதக, பாதக விளைவுகள் பெண்ணைப் பாதித்தது, பாதிக்கின்றது. எல்லா விதமான மனிதப் பிளவுகளும், அதன் விளைவுகளும் பெண்ணைத் தனித்துவமாக விட்டுவிடுவதில்லை.


உயிரியல் விளைவுகளின் படி மனிதன் எப்படி சுற்றுச் சூழல் உடன் போராட வேண்டியிருக்கின்றதோ, அதே போல் மனிதனுடனும் போராட வேண்டியிருக்கின்றது. உயிர்வாழ்வதற்கான மனித உரிமை போராட்டத்தை நிபந்தனையாக்குகின்றது. இந்த வகையில் போராடுவது பெண்ணின் உரிமையாகின்றது. இது சமுதாயத்தில் சகல விடயங்கள் மீதும், சொந்தப் பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்துப் போராடுவது அவளின் உரிமையாகின்றது. இந்த வகையில் இந்தச் சமுதாயம் எந்த ஆயுதம் மூலம் கட்டமைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றதோ, அந்த ஆயுதத்தை அதற்கு எதிராகக் கையாள்வதன் மூலமே நிலைமையை மாற்ற முடியும். பெண் தனது உரிமையை வென்றெடுக்க, மனிதனின் இயற்கையான வாழ்வை மீட்டெடுக்க, இவை தோன்றிய வடிவத்தைத் தகர்ப்பதில் ஆயுதபாணியாவது நிபந்தனையானது.


இந்த வகையில் போராடாத பெண்கள் மீளவும் புதிய வடிவில் புதிய அடக்குமுறையைத் தனக்குத் தானே ஏற்படுத்த, தியாகம் செய்வதாக இருக்கும். இந்த வகையில் விடுதலைப்புலிகளில் பெண்களின் பங்களிப்பை ஆராய்வோம். தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறும் உரிமை எந்த விதத்திலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது.


பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் உரிமை முற்போக்கானது. அந்த வகையில் விடுதலைப்புலிகளில் பெண்களின் பங்களிப்பு முற்போக்கான தன்மை கொண்டது. இதை மறுப்பது பிற்போக்கானதும், ஆணாதிக்க இனவாத அரசுக்குச் சார்பானதுமாகும். உள்ளடக்கத்தில் ஏகாதிபத்திய உலகமயமாதல் அமைப்புக்குச் சாதகமானதுமாகும்.


ஆயுதம் ஏந்திய பெண்கள் தமது துயரத்துக்கான இனப் பிரச்சினை முதல் ஆணாதிக்கம் வரையிலான காரணத்தைப் புரிந்து மாற்ற தவறுகின்ற நிலையில், அந்த பங்காற்றல் என்பது பிற்போக்காக உள்ளது. அந்த வகையில் விடுதலைப்புலிகளில் பெண்களின் பங்காற்றல் விளைவுகள் பிற்போக்கான பாத்திரத்தை வகிக்கின்றது. விடுதலைப்புலிகளின் போராட்டம் போராடும் உரிமை சார்ந்து முற்போக்காக இருக்கும் அதே தளத்தில், அதன் விளைவு பிற்போக்காக இருக்கின்றது.


போராடும் உரிமையை முற்போக்காகக் கொண்டு போராடும் போது, அங்கும் இரண்டு தளத்தில் அதன் தன்மை சமூக விளைவைக் கொடுக்கின்றது. போராடும் உரிமையைத் தான் கொண்டிருக்கும் அரசியலை மக்கள் சார்ந்து முன்னெடுக்கும் போது அது முற்போக்காக இருக்கின்றது. அதுவே மக்களில் இருந்து அன்னியப்பட்டு இருப்பின் அது பிற்போக்காக இருக்கின்றது. இந்த வகையில் விடுதலைப்புலிகளில் இணைந்துள்ள வடிவம் பிற்போக்காக உள்ளது. போராடும் விளைவில் சமூகக் காரணத்தை முழுமையில் புரிந்து மாற்றும் போது முற்போக்காகவும், அதை மறுத்து நிற்கும் போது பிற்போக்காகவும் இருக்கின்றது. பெண் விடுதலைப்புலிகள் இந்த வகையில் பிற்போக்கான பாத்திரத்தை வகிக்கின்றனர். இதை விரிவாக ஆராய்வோம்.


இலங்கையின் சிங்கள இனவாத அரசு ஏகாதிபத்திய உலகமயமாதலைத் தீவிரமாக்க, முன்னெடுத்துச் செல்லும் இனவாத ஆணாதிக்க யுத்தத்தை எதிர்த்து போராடும் உரிமையில், ஆண்களுக்குத் தனிச் சலுகை என்பது ஆணாதிக்கமாகும். பெண்களும் ஆண்களைப் போல் போராடும் உரிமையை மறுப்பது ஆணாதிக்கமாகும். பெண்கள் ஆண்களைப் போல் ஆயுதம் ஏந்தி போராடும் உரிமை, பெண்ணின் அடிப்படையான உயிர் வாழ்தலுடன் தொடர்புடைய உள்ளடக்கமாகும்.


தமிழ் மக்களின் போராட்டம் எழுச்சி பெற்ற போது, இயக்கங்கள் மத்தியில் பல்வேறுபட்ட அப்பிராயங்கள் இது தொடர்பாக இருந்துள்ளது. சில இயக்கங்கள் பெண்ணை இணைத்த போது, சில அதைத் திட்டவட்டமாக எதிர்த்து, பெண்கள் வீட்டுக் கடமைகளைச் செய்தால் போதும் என்ற கண்ணோட்டத்தில், போராட்டத்தை ஆண்களின் கடமையாக வரையறுத்தது. இந்த வகையில் கி.பி.1984-களில், யாழ்ப் பல்கலைக்கழகத்தையும் அதைச் சுற்றியும் விநியோகிக்கப்பட்ட துண்டுப ;பிரசுரத்தில், பெண்களின் ஒழுக்க விதியில் வடமராச்சி (சில இயக்கங்களின் தோற்றம் கள்ளக் கடத்தல் சார்ந்து வடமராச்சி தன்மை கொண்டிருந்தது.) பாணியில் நீண்ட உடுப்புகளைப் பாவிக்கவும் (உடுத்தவும்), சைக்கிள் ஓட்டத் தடை போன்ற ஆணாதிக்கக் கற்பு விதிக்கமைய எச்சரிக்கைகளுடன் வெளிப்பட்டது. இது எந்த இயக்கத்தையும் பிரதிபலிக்காவிட்டாலும், இதன் பின்னால் இயக்கம் இருந்தது தெளிவானது.


விடுதலைப்புலிகள் ஆரம்பம் முதலே பெண்களை இணைப்பதை எதிர்த்து வந்தனர். பெண்கள் ஆண்களின் தியாக உணர்வுகளைச் சிதைக்கும் தன்மை கொண்டவர்கள் என்று கருதினர். விடுதலைப்புலிகளின் ஆரம்பக் கால உறுப்பினரான உமாமகேஸ்வரன் (இவர் பின்னால் பிளாட்டில் (Pடுழுவு) இது போல் பல உறவுகளைக் கொண்டிருந்ததுடன், பல இயக்கப் பெண்களை மிரட்டியும், இயக்கத் தலைமை செல்வாக்கைக் கொண்டும் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தியதுடன், பாலியல் நடத்தை அம்பலமாவதைத் தடுக்க, கொன்ற வரலாறும் உண்டு.) ஊர்மிளாவுடனான உறவு, விபச்சார தன்மையில் அமைந்திருந்தது. இந்த வடிவங்கள் கூட, இயல்பான பூர்சுவா ஆணாதிக்க இயக்கத்தை, தூய்மையான வடிவத்தை அடிப்படையாகக் கொண்;டு தன்னை வெளிப்படுத்தியது. நெருக்கடியில் தலைமறைவான வாழ்க்கையில் இருப்போர், தங்கிய இடங்களில் ஏற்படும் பாலியல் உறவுகள், திருமணங்கள+டாகப் போராட்டத்தைக் கைவிடுதல் போன்றன ஆணாதிக்கப் பூர்சுவா இயக்கக் கண்ணோட்டத்தில் பெண் எதிர்ப்பாக மாறிவிடுகின்றது. இது பெண்களை இயக்கத்துக்குள் நெருங்குவதை முற்றாக மறுத்தது. ஆண், பெண்ணின் இயற்கை உணர்வுகள் மற்றும் சீரழிவுகளுக்கான காரணத்தைக் கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்குப் பதில், பூர்சுவா இயக்கத்துக்குரிய எதார்த்த ஆணாதிக்க வடிவில் சிந்தித்ததன் விளைவு பெண்களை எட்ட(தூர) நிறுத்தியது.இந்தவகையில் விடுதலைப்புலிகள் பெண் எதிர்ப்பு ஆணாதிக்க இயக்கமாகவே வளர்ச்சி பெற்றது.


மறுதளத்தில் பெண்களை இணைத்துக் கொண்ட இயக்கங்கள் பல்வேறு போக்குகளை உள்ளடக்கி வெளிப்படுத்தின. எல்லா இயக்கங்களும் பூர்சுவா இயக்கங்களாக இருந்ததால், பெண்கள் எப்படி, எந்த நிலையில், எந்தக் கட்டத்தில், என்ன வேலை செய்தனர் என்பதைப் பொறுத்து அவர்களின் நிலைமை வெளிப்பட்டது. பெண்கள் பூர்சுவா சுய ஆளுமையுடன் மக்களிடையே வேலை செய்தவர்கள், தமது சுயத்தை இழந்து விடவில்லை. மற்றபடி பாலியல் தேவைக்கும், கூலி பட்டாளமாகவும், பல்வேறு ஆணாதிக்கப் பண்பாட்டு நடத்தைகளிலும் பயன்படுத்தப்பட்டனர். இயக்கத்தில் இருந்த சொந்த அரசியல் சீரழிவாலும், முரண்பாட்டிலும் விலகிக் கொண்ட பெண்களையும், இயக்க அழிப்பினூடாக ஒதுங்கிய பெண்களையும் சரி, ஆணாதிக்கச் சமுதாயம் இயல்பான வகையில் ஒரு கற்புள்ள பெண்ணாக ஏற்றுக் கொள்ளவில்லை.


ஆணாதிக்கச் சமூக விளைவுகளின் அதீதமான கொடூரத்தை, அப்பெண்கள் தமது இயல்பான வாழ்க்கையில் எதிர் கொண்டே வாழ்கின்றனர். இந்த இயக்கங்களில் இணைந்து கொண்ட பெண்களும், இயக்கத்தின் பூர்சுவா எல்லையால் ஆணாதிக்கக் கடமைகளை நிறைவு செய்பவர்களாகவே பங்காற்றினர். இந்த இயக்க அரசியலில் இருந்து வெளியில் வந்து சுய ஆற்றல் உள்ள பெண்களாகத் தம்மை வெளிப்படுத்தியவர்கள் இல்லை என்றளவுக்கு நிலைமை உள்ளது. அதாவது ஆண்கள் எப்படி சுய ஆற்றல்; இழந்தவர்களாக, சமூக இயக்கத்தில் இருந்து ஒதுங்கினரோ, அதுவே பெண்ணுக்கும் நடந்தது.


விடுதலைப்புலிகள் இயக்கங்களைத் தடைசெய்த போது தண்டனைகளில் (படுகொலைகளைச் செய்வதில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள்) இருந்து விடுவித்த ஒவ்வொரு இயக்க ஆணையும், விடுதலைப்புலிகள் திருமணம் செய்யவும், வெளிநாடு செல்லவும் கோரிய போது, இங்கு விடுதலைப்புலிகளின் மரபாந்த ஆணாதிக்கக் கண்ணோட்டம், பெண்ணைப் பாலியல் பண்டமாக இழிவுபடுத்தியே வெளிப்பட்டது. இயக்க அழிப்பினால் இயக்கத்தில் இணைவுக்கான ஆட்சேர்ப்பைக் கேள்விக்குள்ளாக்கியது.


தமிழ் மக்களில் பெரிய பகுதி இந்த இயக்க அழிப்பின் விளைவை ஏதோ ஒரு வகையில் நேரடியாக அனுபவித்தது. இதனால் ஏற்பட்ட அதிர்வுகள் இயக்க இணைவின் சமநிலையைத் தகர்த்து. அத்துடன் இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மேலும் இதைக் கேள்விக்குள்ளாக்கியது. இந்த இடத்தில் தான் விடுதலைப்புலிகள் முதன் முதலாகப் பெண்களை இயக்கத்தில் இணைப்பதை அடிப்படையாகக் கொள்கின்றனர். அத்துடன் கி.பி.1980-களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் திருமணம் ஊடாக, நீண்ட கால உறுப்பினருக்குத் திருமணம் செய்யும் உரிமை வழங்கப்படுகின்றது.


போராட்டத்தைக் குறுகிய கால வரையறையில் வென்றுவிடும் பூர்சுவா கனவு, அது சார்ந்த தூய்மை அதீதமாகக் கோரியது வெறும் கனவாகி சாத்தியமற்ற ஒன்றாகின்றது. இயக்க பலம் மற்றும் உள்ளார்ந்த தன்மைகளினால் சில நெகிழ்வுத் தன்மையை விடுதலைப்புலிகள் கையாளுகின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பெண்களின் பங்கு, இணைப்பு பற்றிய கருத்தில் ''இந்த மண்மீட்புப் போர்க்களத்தில் இன்று தமிழ் இனப் பெண்கள் ஆயுதமேந்தி நிற்கிறார்கள். முழு உலகமுமே வியக்கும் வகையில் அபாரமான அர்ப்பணிப்புகளைச் செய்து வருகின்றார்கள். விடுதலைப் புலிகளின் மகளிர் படைப்பிரிவின் தோற்றமும், வளர்ச்சியும், எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று என்பதை நான் பெருமிதத்துடன் கூறமுடியும். தமிழீழப் பெண்ணினத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றிலே இது ஒரு புரட்சிகரமான திருப்பத்தைக் குறித்து நிற்கின்றது."29


பெண்களை இயக்கத்தில் இணைத்த போது விடுதலைப்புலிகள் பெரிய விரிந்த இயக்கமாக மாறினர். இதற்குப் புறநிலை சாதகமாக மாறியது. யாழ் மனோபாவம் கொண்ட எம் தேசியவாத இயக்கங்களின் ஆட்சேர்ப்பைச் சுயநலம் பிடித்த பூர்சுவா சமுதாயத்தால் தீர்க்க முடியாது. இந்தப் பூர்சுவா சமுதாய உள்முரண்பாடுகளில் சரியான கண்ணி மட்டுமே ஆட்சேர்ப்பை விரிவாக்கும். ஆட்சேர்ப்பில் ஏற்பட்ட நெருக்கடியைக் கடந்து செல்ல, சிறுவருக்கேயுரிய கவர்ச்சியும், சுதந்திரத்தையும் விரும்பும் வயது குறைந்த இளைஞர்கள், பெண்கள் என சமூக அடிப்படையில் மிக பின்தங்கிய புரிதல் உள்ளவர்களைச் சார்ந்திருப்பதை, இயக்க உள்வெளி அரசியல் நிலைமை நிர்ப்பந்தித்தது.


இது மட்டும் தான் விடுதலைப்புலிகளின் இருப்பையும், தமிழ் மக்களின் தற்காப்பு யுத்தத்தையும் பாதுகாக்கும் எல்லையாகியது. ஆணாதிக்கத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் மீது இருந்த கட்டுப்பாட்டை விடுதலைப்புலிகள் தமக்குச் சார்பாக உடைத்த போது, பெண்கள் அலைஅலையாக இயக்கத்தை நோக்கி செல்வது புதிய வடிவமாகியது. அதாவது பூட்டி வைத்திருந்த ஆணாதிக்க அடக்குமுறையில் சிக்கியிருந்த பெண்கள், வீட்டை விட்டு வெளியில் வருவதை விடுதலைப்புலிகளின் ஆயுதம் சார்ந்த அதிகாரத்துடன் கூடிய பலம் துரிதப்படுத்தியது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியாவிட்டாலும் சரிக்குச் சரி பெண்களால் ஆனது என்பது மட்டும் உண்மை. இந்திய இராணுவத்தின் கெடுபிடி யுத்தத்தில் ஆண் விடுதலைப்புலிகளை விட, பெண் விடுதலைப்புலிகள் தாக்குதல் இலக்கை அடைவது சுலபமாக்கியது. இதனால் பெண்கள் சுய ஆற்றல் உள்ள தாக்குதல் இலக்கை அடைவதன் மூலம், புறநிலையாக விடுதலைப்புலிகள் முன்னிலைக்கு வந்தார்கள்;. விடுதலைப்புலிகளின் இயக்க உள் நிலைமையினூடாக அல்ல, புறநிலை நிர்ப்பந்தம் பெண் விடுதலைப்புலிகளின் முக்கியத்துவத்தை, தனித்துவத்தை வெளிக்காட்டியது.


இதனால் தனியான படைப்பிரிவுகள், தலைமைகள் பெண் சார்ந்து வெளிப்படத் தொடங்கியது. சில தாக்குதலில் தனித்து பெண்களே முன்னிலையான பாத்திரத்தை வகித்தனர். ஆனால் விடுதலைப்புலிகளின் ஆணாதிக்கப் பூர்சுவா இயக்கக் கட்டமைப்பில் பெண்கள் பற்றிய அரசியல் மற்றும் மரபார்ந்தக் கொள்கையில் மாற்றம் ஏற்படாததால், (இங்கு சில மாற்றம் பெண்களை இணைப்பது, பெண்களுக்கும் முடியும் போன்றன நிகழ்ந்தன.) புலிகளின் இரண்டாம், மூன்றாம் மட்டத் தலைமையை நோக்கிப் பெண்கள் வருவது அரிதான, விதிவிலக்கான விடயமாக உள்ளது. நீண்ட அனுபவம் கொண்ட யுத்தத் தலைமை பெண்களிடம் வந்துவிடவில்லை. அது இன்னமும் ஆண்களிடமே உள்ளது.


இயக்கத்தில் இணைந்து கொண்ட பெண்கள் முன் ஆணாதிக்கம் பற்றிய கருத்துகள் சென்றதன் மூலம், விடுதலைப்புலிகள் சில நடைமுறை ரீதியாக நடவடிக்கை எடுத்தனர். சீதனத் தடை முக்கியமான ஒன்றாக மாறியது. இது மறைமுகமாக விடுதலைப்புலிகளுக்குப் பணம் திரட்டும் ஊடகமாக மாறியது. இந்தச் சீதனத் தடை எந்தவகையிலும் உயிரோட்டமுள்ள வகையில் முன்னெடுக்க முடியாது போனதுடன், அவை தனிச்சொத்துரிமை அமைப்பின் எல்லையால் மறைமுகமாக அல்லது நேரடியாக மீறப்படுவது நிகழ்ந்துள்ளது.


ஆணாதிக்க அமைப்பைத் தகர்க்க தனிச்சொத்துரிமை வடிவம் மீது தொடுக்க வேண்டிய வர்க்கப் போரை விடுதலைப்புலிகளின் அரசியல் அனுமதிக்காது. ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண்களின் போராட்டம் வெறும் இனவிடுதலையுடன் தொடர்புடையது என்று நம்புவோமாயின், உலகில் இன விடுதலையடைந்த நாடுகளில் ஆணாதிக்கம் தகர்ந்திருக்கும். ஆனால், ஆணாதிக்கம் தகரவில்லை. ஆதலால் இன விடுதலை பெண் விடுதலையைப் பெற்றுத் தராது என்பதை வரலாற்று ரீதியாக உலக வரலாறு காட்டுகின்றது.


இரண்டாவதாகப் பெண்கள் ஆயுதம் ஏந்துவதன் மூலம் ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியுமா? எனின் இல்லை என்பது உண்மையாகும். உலகில் பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடிய வரலாறுகள் பெண்ணை ஆணாதிக்கத்திடம் இருந்து விடுவித்து விடவில்லை. ஆயுதம் ஏந்துவது ஆணாதிக்கத்தை ஒழிக்கும் எனின் அது கற்பனை என்பது எல்லோருக்கும் தெரியும்.


அப்படியாயின் ஆணாதிக்கத்தை ஒழிக்கும் வழி என்ன? ஆணாதிக்கம் எப்படி உலகம் முழுவதிலுமான ஆணாதிக்கச் சமுதாயமாக உருவானது என்பதைக் கண்டறிவதும், எப்படி உருவானதோ அதே வழியூடாக ஒழிப்பதைப் புரிந்து கொண்டும் போராடுவதே ஆணாதிக்கத்தை ஒழிக்கும் வழியாகும். ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமை அமைப்பில், பெண் சொத்துரிமை இழந்ததன் ஊடாக உருவாகின்றது. அதாவது பெண் வீடு சார்ந்த உற்பத்தியில், இனவிருத்தியில் நிலைத்திருக்கவும், ஆண்களின் உழைப்பு சார்ந்த உற்பத்தி உபரியைப் பெற்று தந்த போதும், யுத்தக் கைதிகள் மேலதிக உபரியைப் பெற்றுக் கொடுத்தபோதும், பெண்ணின் கண்டுபிடிப்புகள் மற்றும் உழைப்பைக் ஆண் கைப்பற்றிய தொடர்ச்சியில் பெண் சொத்துரிமையை இழந்தாள். ஆனால் விடுதலைப் புலிகள் எதை விடுதலையாகக் காட்டுகின்றனர் எனப் பார்ப்போம்.


''ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர், ஒருவரின் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், கௌரவத்தையும் மதித்து குடும்ப வாழ்வில் பொறுப்புகளைப் பகிர்ந்து சமூகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக் கொண்டு வாழ்ந்தால், இந்தப் பால் வேறுபாட்டால் எழும் பல்வேறு முரண்பாடுகள் நீங்கும்"29 என பெண்விடுதலையை விளக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் கூற்றைப் பார்ப்போம். இந்தக் கூற்றை விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் கடைப்பிடிப்பின், இது கூட சமுதாய ரீதியாகப் பெண் ஒருபடி மேல் செல்வாள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது நடைமுறையில் வெறும் கோஷமாக இருப்பதே நிகழ்கின்றது. இனி இந்தக் கூற்றில் சமுதாயத்தில் பரஸ்பர உறவுகள், பகிர்ந்து கொள்ளுதல், பங்களித்தல், மதித்தல் என்ற எல்லைக்குள் ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியும் என்பதே தெளிவாகின்றது. உலகளவில் எல்லாப் பூர்சுவா பெண்ணியல்வாதிகளும் இதையே தமது அடிப்படை உள்ளடக்கமாகக் கொள்வதையும் காணமுடியும். விடுதலைப்புலிகளுடன் முரண்பட்ட பெண்ணியல் பிரிவுகளும் இதையே தமது நோக்கமாக வரிந்து கொள்வதும் எதார்த்தமாக உள்ளது.


இது ஆணாதிக்கத்தை ஒழிக்குமா? பால் வேறுபாட்டால் எழும் பல்வேறு முரண்பாடுகளை ஒழிக்குமா? எனின் இல்லை. மாறாக இவை ஒரு சமூக இயக்கமானால் பெண் சில சலுகைகள் பெற்று, ஆணாதிக்கத்துக்குட்பட்டே வாழ முடியும். ஆணாதிக்கத்தின் தோற்றம் பரஸ்பர உறவுகள், பகிர்ந்து கொள்ளுதல், பங்களித்தல், மதித்தல் போன்றவற்றில் ஏற்பட்ட சமுதாய வேறுபாட்டால், ஆண் பெண் பிளவு ஏற்படவில்லை. மேற்குச் சமூகங்களில் பரஸ்பர உறவுகள், பகிர்ந்து கொள்ளுதல், பங்களித்தல், மதித்தல் போன்றவற்றில் ஆண் பெண் உறவுகள் முழுமையாக இல்லாவிட்டாலும், உயர்ந்த உறவுகளை ஏற்படுத்திய போதும், ஆணாதிக்கம் நிலவுவது காணமுடியும். மிக பின்தங்கிய எம் சமூகத்தில் இதை வந்தடைய குறைந்த பட்சம் எம் பொருளாதார அமைப்பே அதற்குத் தடையாக நிற்கின்றது. அதாவது மேற்கைப் போல் வந்தடைய தேசிய முதலாளித்துவப் புரட்சி அவசியம்;. இந்தத் தேசியம் தமிழ்த் தேசியமாக இருந்தால், தேசிய முதலாளித்துவப் பொருளாதாரத்தைக் கட்டுவதற்கு, குறைந்த பட்சம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அணிதிரட்டப்பட வேண்டும். இதை விடுதலைப்புலிகள் திட்டவட்டமாக மறுக்கின்றனர். இதில் இருந்தே பெண் விடுதலையில் பொருளாதார அலகு பற்றி குறிப்பிடுவதைக் கூடத் தவிர்க்கின்றனர்.


பெண் பரஸ்பர உறவுகள், பகிர்ந்து கொள்ளுதல், பங்களித்தல், மதித்தல் போன்ற உரிமைகளைப் பெற, பெண் பொருளாதார ரீதியாக ஆணில் இருந்து சுதந்திரம் அடைவது அவசியம். ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்வழி உறவுகளின் அடிப்படையில் கிடைக்கும் பொருளாதாரப் பலம் கூட, பெண்ணைப் பொருளாதார ரீதியாகச் சுயேட்சையுள்ள மனித ஜீவியாக்கிவிடவில்லை. ஆணைச் சார்ந்து வாழும் பொருளாதாரக் கட்டமைப்பில் பெண் சிக்கியுள்ளாள். இதைத் தாண்டி பொருளாதார ரீதியாக ஆண் அளவுக்கு, உழைக்கும் பெண் கூட ஆணைச் சார்ந்து நிற்கின்றாள்;. சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுக் கலாச்சார எல்லையில் அதை மறுத்து, ஒரு புரட்சி வீச்சாகக் கொண்டு பெண்களை அணிதிரட்டிப் போராடாத வரை, பெண் விடுதலையை அடைய முடியாது. சில விடயங்கள் வெறும் கோஷங்களாக, மேற்கோளாக மாறி விடுகின்றது அல்லது இவை மேற்கோளாக நடைமுறையின்றி முன்வைக்கப்படுகின்றது.


இன அழிப்பு நடந்து கொண்டிருக்கின்றபோது, மக்களின் தற்காப்பிற்காகப் போராடும் பெண் விடுதலைப்புலிகள், இனவிடுதலைப் போராட்டத்தில் முற்போக்கான பாத்திரத்;தினூடாகப் பங்களிக்க முடியும். ஆனால் அது பெண் விடுதலையைத் தந்து விடுவதில்லை. இந்தக் கோணத்தில் பிற்போக்குப் பாத்திரத்தை வகிக்கின்றது. ஆயுதம் ஏந்தும் உரிமை ஆணுக்கு மட்டும் உரியது அல்ல..அது பெண்ணுக்கும் உரியதே. ஆயுதம் ஏந்தும் உரிமையும், போராட்டமும் தியாகமும் பெண் விடுதலையாகி விடுவதில்லை. ஆயுதம் ஏந்திய பெண்கள் உலகெங்கும் இருந்தார்கள். ஆனால் உலகெங்கும் பெண் அடிமையாக இருக்கின்றாள். இது ஏன்? என்ற கேள்வி அடிப்படையானது. இது விடுதலைப் புலிகளை நோக்கி மட்டுமல்ல, எல்லா பூர்சுவா பெண்ணியல்வாதிகளையும் நோக்கிய கேள்வியாகின்றது. பெண் விடுதலைப்புலிகளின் போராட்டம் ஆணைப் போல் ஆண் சமுதாயத்தை வென்று எடுப்பதே அதன் எல்லையாகின்றது. இதைப் புலிகளின் பிரதான கவிஞர் புதுவை இரத்தினதுரை பாடல் வரிகளில் இருந்து பார்ப்போம்.


''வீரத்துக்கு எங்கள் மண்ணில்
வித்தியாசங்கள் கிடையாது
ஆணுக்கும் பெண்ணுக்கும் பேதங்கள் இல்லை
குஞ்சென்றும் மூப்பென்றும் எல்லைகள் இல்லை"29


—- என்ற வரிகளில் வீரத்துக்குச் சம உரிமையை வழங்கியதே ஒழிய, பேதங்களை, வித்தியாசங்களை நடைமுறை ரீதியாகச் சமுதாயம் பெற்று விடவில்லை. யுத்தமுனையில், போரிடும் முனையில் பெண் வயது கடந்து பெற்ற வீரத்தை வெளிப்படுத்தும் உரிமையை, சமுதாயத்தின் எல்லாத் துறையிலும், ஏன், விடுதலைப்புலிகளின் மற்ற துறைகளிலும் பெற்றுவிடவில்லை. சமுதாயத்தின் இயக்கம் விடுதலைப்புலிகளைக் கடந்து, இயல்பான ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் இயங்குவது இதன் அப்பட்டமான அடிப்படையாகும்.


பெண் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி பொது வாழ்வில் ஈடுபடும் போது அவளை ஆணாதிக்கச் சமூகம் எப்படி அணுகுகின்றது என்பதும், அவள் திருமணம் செய்கின்ற போது அவளின் குடும்ப நிலைமை எல்லாம் எமக்கு ஆணாதிக்கச் சமூகத் தன்மையின் இறுக்கத்தை மாற்றமின்றி காட்டுகின்றது. இராணுவம் ஒரு பெண்ணைக் கற்பழித்துவிடும் போது, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேச உணர்வுகள் கொண்டிருக்கும் உள்ளக் கொதிப்பான உணர்வுகள், அவளின் கற்பு மீதான ஆணாதிக்க ஒழுக்கக் கோர்வை சார்ந்து, பெண்ணை இழிவுக்குள்ளாக்கிக் கற்பிழந்தவளாகக் காணும் போது அதை அங்கீகரிக்கின்றது. இதில் தான் விடுதலைப்புலிகளில் ஆயுதம் ஏந்தி நிற்கும் பெண், இனவிடுதலையில் தமிழ் மக்களின் தற்காப்பில் முற்போக்காக இருக்க முடியுமே ஒழிய, ஆணாதிக்கத்துக்கு எதிரான தனது சொந்த விடுதலையில் பிற்போக்கான பாத்திரத்தை வகிக்கின்றாள். விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் பெண்ணின் ஆற்றல் பற்றி கூறுவது எதை என்று பார்ப்போம்.


''மனித ஆளுமை பாலியல் வேறுபாட்டுக்கு அப்பாலானது. ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பால் மனிதம் இருக்கின்றது. அது மனிதப் பிறவிகளுக்குப் பொதுவானது. இந்த மனிதத்தின் ஆற்றல்களை உடற்கூறு நிர்ணயிப்பதல்ல. பெண்ணிடமும் மனிதம் இருக்கிறது. அதன் அற்புதமான ஆற்றல்களையும், அலாதியான பண்புகளையும் பாலியல் அளவு கோலால் நிர்ணயிக்க முடியாது. எதையும் பெண்ணால் சாதிக்க முடியும் என்பதற்கு எம் போராட்டம் ஓர் உன்னதமான உதாரணமாகத் திகழ்கின்றது"29 என்ற கருத்துகள் எல்லை கொண்டவை. உலகில் ஆயுதம் ஏந்தி போராடிய பல விடுதலைப் போராட்டத்தில் பெண்ணின் பங்கு பலமுறை நிறுவப்பட்டுள்ளது. இது விடுதலைப்புலிகளின் போராட்டத்திலும் மீள நிறுவப்பட்டுள்ளது என்பதில் மறுப்பு இருக்க முடியாது.


ஆனால் பெண்ணின் ஆளுமை, மனிதம் என்பவை ஆண்மைக்கும் —பெண்மைக்கும் அப்பாற்பட்டது என்கின்ற கருத்து, ஆண்மை என்ற ஒன்றும் பெண்மை என்ற ஒன்றும் இருப்பதாக அல்லவா கூறப்படுகின்றது. இது உடற்கூறு நிர்ணயிப்பதில்லை என்கின்ற கருத்து மேலும் உடற்கூறில் ஏதோ ஒன்று இருப்பதாக அர்த்தம் கொடுக்கின்றது. பாலியல் அளவுகோளால் தீர்மானிக்க முடியாது என்கின்ற கருத்து ஏதோ ஒன்று பாலியலில் இருக்கின்றது என்கின்ற அர்த்தத்தையும் கொடுக்கின்றது. அதுவே ஆணாதிக்கமாகும்.


பெண்களின் ஆற்றல், மனிதம் ஆகியவற்றை இன விடுதலைப் போராட்டத்தில்; வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அது ஆணாதிக்கத்துக்கு எதிராக, சாதியத்துக்கு எதிராக, சுரண்டலுக்கு எதிராகத் தனது ஆளுமையை, மனிதத்தை வெளிப்படுத்தியதில்லை என்பதையும், புலிகளின் அரசியல் அதை அனுமதிக்காது என்பதையும் எம் இனவிடுதலைப் போராட்டம் நடைமுறை ரீதியாக அம்பலமாக்குகின்றது.


இங்கு இப்போராட்டம் தேசியப் போராட்டமாக அல்லாது இனப் போராட்டமாகவும் இருக்கின்றது. தேசியப் போராட்டமானது பொருளாதாரம், மொழி, பண்பாடு, நிலத்தொடர் மீது தனது தேசியத்தை முதன்மைப்படுத்திப் போராட வேண்டும். விடுதலைப்புலிகளின் போராட்டம் நிலத்தொடர் மீது போராட்டத்தைத் தீவிரப்படுத்தியபோது, மொழியின் மேலடுக்குகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் தேசியப் பொருளாதாரத்தை, பண்பாட்டைக் கட்டமைப்பதில் ஏகாதிபத்திய எதிர்ப்பை அவர்கள் கைக்கொள்ளவில்லை. விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் ஏகாதிபத்தியப் பொருளாதார ஊடுருவலும், பண்பாட்டு ஊடுருவலும் அனுமதிக்கப்படுகின்றது. இதனால் போராட்டம் சிங்கள இன ஆட்சியாளரிடம் இருந்து விடுதலை என்ற எல்லைக்குள், இன விடுதலைப் போராட்டமாகி விடுகின்றது. இன விடுதலைப் போராட்டம் ஆணாதிக்கத்தை ஒழிக்காது. தேசிய விடுதலைப் போராட்டம் பெண்களின் நலன்களை உயர்த்தும். தேசத்தின் நலன் முழுக்க முழுக்க சொந்தப் பலத்தைச் சார்ந்து போராடும் போதே, அப்போராட்டம் இன விடுதலையில் இருந்து வேறுபட்டுத் தேசிய விடுதலைப் போராட்டமாக வளர்ச்சிபெறும். இது தான் பெண்களின் பிரச்சனையை நனவு பூர்வமாக முன்னெடுக்கும்.


ஆண்மையும், பெண்மையும், பாலியல் அளவு கோலும் எதை நிர்ணயிக்கின்றது? ஆணின் பாலியல் மேலாண்மையை நிர்ணயிக்கின்றது. பெண்ணின் தாழ்ந்த தன்மையை அது கோருகின்றது. இதைத் தாண்டிப் பெண் சமுதாயப் பிரச்சினையில் ஆற்றலுடன் போராட முடியும் என்ற கருத்தைப் பல்வேறு தேச மற்றும் இன விடுதலைப் போராட்டமும், பெண்ணின் உழைப்பாற்றலும் வெளிப்படுத்தி உள்ளதை, விடுதலைப்புலிகள் மீள நடைமுறை ரீதியாகப் பெண்களை தம் போராட்டத்தில் பயன்படுத்துகின்றனர் அவ்வளவே. இதைத் தாண்டி ஆணாதிக்கம் ஒழிந்துவிடாது.


உலகப் புகழ் பெற்ற பிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சி கி.பி.1789-இல், நடந்த போது, அதில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. புரட்சிக்குப் பின் அந்தப் புரட்சியில் பங்கு பெற்ற ஒலிம்பி டி ஜோர்ச் என்பவர் (ழுடுலுஆPநு னுநு புழுருபுநுளு) பெண்களின் உரிமையைக் கோரிய போது கி.பி. 1792-இல், படுகொலை செய்யப்பட்டார். புரட்சியின் முற்போக்கான பங்கு புரட்சிக்குப் பின்னால் மறுத்து படுகொலை செய்யப்படுவதைக் காட்டுகின்றது. இது புரட்சியின் ஊடேயும், புரட்சியின் பின்பும் நிகழ்வது உலகளவில் தொடர்ச்சியாக நிகழ்கின்றது. தியாகங்களும், பங்களிப்புகளையும் சுரண்டும் ஆணாதிக்க அமைப்பு சார்ந்து கொச்சைப்படுத்தி விடுவது நிகழ்ந்து விடுகின்றன.


பெண் விடுதலைப் புலிகள் இன விடுதலையில் காட்டும் தீரம் யுத்தத்தில் ஆட்பலத்தையும், வெற்றியையும் பெற்றுக் கொடுப்பதற்கு அப்பால், தனது சொந்த விடுதலையை நினைத்துப் பார்க்க கூட முடியாது. இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கூற்று ஒன்றைப் பார்ப்போம்;.


''எமது வேதாந்தங்களும், மதச் சித்தாந்தங்களும், மனுநீதி சாஸ்திரங்களும் அந்தக் காலம் தொட்டே பெண் அடிமைத்துவத்தை நியாயப்படுத்தி வந்திருக்கின்றன. ஆணாதிக்கம், சாதியம், சீதனம் என்று பல்வேறு பரிமாணங்களில் இந்த ஒடுக்குமுறையானது பெண்களின் வாழ்க்கையை ஊடுருவி நிற்கின்றது. அவர்களது வாழ்க்கையைச் சிதைத்து வருகின்றது."29 இக்கூற்றை புலிகளின் தலைவர் குறிப்பிடும் போது, அதன் உள்ளடக்கத்தை அவ்வமைப்பு என்றைக்கும் ஏற்றுக்கொண்டதில்லை. மூச்சுக்கு மூச்சு தலைவரின் வழிகாட்டல் பற்றி கூறும் புலிகள், தலைவரின் இந்தக் கூற்றைச் சரியான முறையில் முன்னெடுத்து பிரச்சார உத்தியாக, விளக்கமாக மக்களுக்குள் எடுத்துச் சென்று இருந்தால், இதன் விளைவு சமூக ரீதியாக வேறுபட்டிருக்கும். ஆனால் தலைவரின் இக்கூற்றை எந்தத் தளத்திலும் அரசியல்படுத்தியதைக் காண முடியாது.


மாறாக இதற்கு எதிராக இதன் பாதையில் விடுதலைப்புலிகள் தம்மை ஒழுங்கமைப்பதையே காணமுடியும். இங்கு இக்கூற்றுகள் விடுதலைப் புலிகளுக்குள்ளும், அது சார்ந்த சமூகத்துக்குள்ளும் வெறும் கோஷமாக, மேற்கோளாக நடைமுறை எதார்த்தத்துக்குப் புறம்பாக இருப்பது கண்கூடு. தலைவரின் இந்த மேற்கோள் உள்ளடக்கத்தை விடுதலைப்புலிகளுக்கு வெளியில் அரசியல் மையப்படுத்த, முன்னெடுக்க, சமுதாயமயமாக்க முனையும் போது, அதை விடுதலைப்புலிகளுக்கு எதிரானதாகக் காண்பதும், அதற்கு எதிராக விடுதலைப்புலிகளின் வன்முறை வெளிப்படுவதுமே எதார்த்தமாகும். இந்த மேற்கோளில் எந்தக் கட்டத்திலும் தனிச்சொத்துரிமை அமைப்புதான், ஆணாதிக்கத்தின் தோற்றுவாய் என்பதைக் கவனமாகத் தவிர்த்து விடப்பட்டுள்ளது. இதையே, இன்றைய பாட்டாளி வர்க்கமல்லாத எல்லாப் பெண்ணியல்வாதிகளும், பொதுவாகத் தனிச்சொத்துரிமை அமைப்பு ஆணாதிக்கத்தின் உள்ளடக்கமாக இருப்பதைக் காண்பதைத் தவிர்த்தே, ஆணாதிக்கம் பற்றி பேசுகின்றனர்.


ஆணாதிக்க ஒழிப்பு பெண் அடிமைத்தனத்தைத் தோற்றுவித்தத் தனிச்சொத்துரிமை அமைப்பைத் தகர்ப்பதில் சார்ந்துள்ளது. அது வேதாந்தங்களும், மதச் சித்தாந்தங்களும், மனுநீதி சாஸ்திரங்கள் என்று அனைத்துச் சமூகப் பண்பாட்டுத் தளங்கள் மீதும் அரசியல் மையப்படுத்திய புரட்சியாக வேண்டும். இது இல்லாத வரை ஆணாதிக்கம் ஒழியாது. அதுவரை பெண் விடுதலை என்பது கற்பனையாகவே இருக்கும். விடுதலைப்புலிகளின் இன விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் பங்கு பெறல், தற்காப்பில் பங்கு பெறல் என்ற முற்போக்கான பங்காற்றலைத் தாண்டி, ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பைப் பாதுகாத்தலில் பிற்போக்கான பங்காற்ற வகிக்கின்றது.

Last Updated on Thursday, 12 June 2008 19:31