Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back இரயாகரன் - சமர் மூலதனத்துக்குக் கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள்

மூலதனத்துக்குக் கிடைக்கும் வரம்பற்ற சலுகைகள்

  • PDF

book _4.jpgஒருபுறம் இலங்கை ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலைமை கனிந்து செல்லுகின்றது. இந்த நிலைமையை உருவாக்கும் மூலதனம் உயர்ந்தபட்ச சலுகைகளை அன்றாடம் பெறுகின்றது. சர்வதேச மூலதனம் தேச மூலதனத்தை விழுங்கி ஏப்பமிடும் வகையில் இச்; சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றது. உலகமயமாதலின் செல்லக் குழந்தையாக இலங்கையைச் சீராட்டி வளர்க்கும் ஏகாதிபத்தியங்கள், இதனடிப்படையில் உள்நாட்டில் ஏற்படும் எந்த நெருக்கடியிலும் உதவத் தயாராகவே உள்ளது.


 2003 மார்ச் முதல் 50 லட்சத்துக்கும் மேல் வரி கட்டக் கூடிய வருமான உடையோருக்கு 30 சதவீத வரிச் சலுகை வழங்கப்பட்டது. பெரும் மூலதனத்துக்கு வரிச் சலுகை இதன் மூலம் வழங்கப் பெற்றது. சிறிய மூலதனம் பெரிய மூலதனத்தை விட அதிக வரி கட்ட நிர்பந்திக்கப்பட்டது. அடிப்படையில் தேசிய மூலதனம் முடமாக்கப்பட்டது. பெரிய மூலதனத்தின் உற்பத்திச் செலவு வரிச்சலுகை மூலம் குறைக்கப்பட்டது. இதன் மூலம் தேசிய மூலதனங்கள் பெரிய மூலதனத்துடன் போட்டியிட முடியாத நிலையில் முடக்கப்படுகின்றது. இதை விட 2002-ம் ஆண்டுக்கான வரவு செலவில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் வரி அறவீடுகள் 0.75 சதவீத்தில் இருந்து 0.5 சதவீதமாக வரி குறைக்கப்பட்டது. வெளிநாட்டுப் பொருட்களின் விலையை உள்ளுர் சந்தையில் குறைக்க இது உதவியுள்ளது. விமான நிலைய மற்றும் துறைமுக வரிகளைக் குறைத்ததன் மூலம், அன்னிய உற்பத்தியாளர்களுக்கு அதிக  சலுகை வழங்கப் பெற்றது. அதே நேரம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் பொருளிலும் அன்னியன் அதிகம் லாபம் பெறும் வகையில் வரி குறைப்பு வழங்கப்பெற்றது. பெரும் வரிச் சலுகை பெறும் நிறுவனங்கள் லாபங்களுடன் திடீரெனத் தலைமறைவாவது இலங்கையில் அன்றாட நிகழ்வாகின்றது. இப்படி  2003-இல் 67 தொழிற்சாலைகள் மூடப்பட்டன. 50000 தொழிலாளர்கள் இதனால் வேலை இழந்தனர். இவை எதுவும் நட்டத்தினால் மூடப்படவில்லை. மூலதனத்தைக் கடத்திச் சென்ற போதே இவை மூடப்பட்டன. பல வெளிநாட்டு மூலதனங்கள் எந்த அறிவிப்பும் இன்றி நாட்டைவிட்டே சென்றன. தொழிலாளர் சம்பளங்களையும் கூட சுருட்டிச் கொண்டே தலைமறைவாகிவிடுகின்றன. சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத பாதுகாப்பை உலகமயமாதல் மூலம் மூலதனம் பெற்றுள்ளதால், இது ஒரு சாதாரண அன்றாட விடையமாகிவிட்டது. தொழிலாளர்கள் வீதியில் வீசப்படுவது அன்றாட நிகழ்வாகி உள்ளது.


 மறுபுறத்தில் உழைக்கும் மக்கள் மேல் சுமைகள் பெருகிச் செல்லுகின்றது. 2004 மாசி மாதம் உலகவங்கி ஆலோசனைக்கு இணங்க மின்சாரக் கட்டணத்தை 3.50 சதத்தில் இருந்து 5.75 சதமாக உயர்த்த மின்சாரசபை சிபாரிசு செய்தது. 2.25 சதத்தால் ஏற்படும் உயர்வு தேர்தலில் முடிவை மாற்றி அமைக்கும் என்பதால், அதை பின் போட்டுள்ளனர்.  2003 வரவு - செலவு திட்டத்தில் அத்தியாவசியப் பொருளான மா, சீனி, வெங்காயம், பருப்பு, கிழங்கு, வீட்டு எரிவாயு, மருந்து என்பவற்றுகான 10 சதவீத வரி 15 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதே நேரம் ஆடம்பர பொருளுக்கான வரி 20 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கொள்கை என்பது அன்னிய மூலதனத்துக்கு சேவை செய்வதுதான் என்பது தெட்டத் தெளிவானதாக உள்ளது. வறுமையுடன் வாழ்வை நடத்த முடியாத சமூக அவலம் பெருகும் போது, அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமான அடிப்படையான பொருட்களின் மேல் வரி அதிகரிக்கின்றது. அந்த மக்கள் வாங்க வக்கற்ற பொருட்களுக்கு வரி குறைக்கப்படுகின்றது. மேட்டுக் குடிகளின் வரவு செலவில் பாதிக்காத வகையில் ஒன்றை ஒன்று சரிகட்டும் வரவுசெலவு, அவர்களின் நலன்களை பேணுவதில் அக்கறையாக இருக்கின்றது. அன்னியனுக்கு அதிக விற்பனையையும், அதிக லாபத்தை பெறும் வகையில் ஏழைகளின் வயிற்றில் அடித்துக் கொடுக்கும் கொள்கை கையாளப்படுகின்றது.


 அன்னிய உரக் கம்பெனிகள் விரும்பியவாறு விலைநிர்ணயம் செய்து கொள்ளையடிக்கும் ஏகபோக உலகளாவிய கொள்கையை இலங்கை அரசும் அடிபிசகாது பின்பற்றுகின்றது. இலங்கையின் பாரம்பரியமான விவசாயத்;தை அழித்து விட்டு, அதனிடத்தில் எந்தப் பிரயோசனமும் அற்ற இரண்டாம் உலக யுத்தத்தில் பயன்படுத்தி வெடிபொருளான நஞ்சை உரமாக விவசாயிகளின் தலையில் சுமத்தும்; கொள்கை தொடருகின்றது. விவசாயக் கொள்கையை மாற்றுவதை உலகமயமாதல் அனுமதிக்காது. இதில் கிடைக்கும் ஏகபோகக் கொள்ளையை காலத்துக்குக் காலம் அதிகரித்த வகையில் சூறையாடுகின்றது. இதற்குத் தாளம் போடும் தேசிய அரசுகள், அதை விவசாயிகளின் தலையில் கட்டுகின்றது. சிறிய மானியம் ஒன்றை வழங்குவதன் மூலம் அதை நேரடியாகவே அன்னிய உரக்கம்பெனிக்கு முன் கூட்டியே தானமாகக் கொடுத்து விடுகின்றனர். இதனடிப்படையில் 2002-இல் உரத்தின் விலையை 525 ரூபாவாக அதிகரித்த அதேநேரம், மானியமாக உரக் கம்பனிக்கு 150 ரூபாவை வழங்கினர். இப்படி வழங்கிய அரசு விவசாயிகளின் முதுகில் 375 ரூபாவை சுமக்கக் கோரி விவசாயத்தை முடமாக்கும் கொள்கையை அமுல் செய்கின்றது. இதன் மூலம் தேசிய உற்பத்திகளை முடக்கி, உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்யும் கொள்கை படிப்படியாக அமுலுக்கு வருகின்றது.


 1990-இல் இலங்கையின் மொத்த வருமானத்தில் விவசாய உற்பத்தி 23.2 சதவீதமாக இருந்தது. இது மொத்த வேலை வாய்ப்பில் 44.7 சதவீதத்தைப் பூர்த்திசெய்தது. இது 2000-ஆம் ஆண்டில் தேசிய வருமானத்தில் 19.4 சதவீதமாக இருக்க, இந்த துறை சார்ந்த உழைப்போ 36 சதவீதமாகியது. இது 2001-இல் தேசிய வருமானத்தில் 19.4 சதவீதமாக இருக்க, இந்த துறைசாhந்த உழைப்பு 32.4 சதவீதமாக குறைந்தது. வறுமையும், தொழில் இழப்பும் அதிகரித்துச் செல்வதைப் புள்ளிவிபரம் காட்டுகின்றது. 1997ம் ஆண்டு உலகவங்கி நிபந்தனைக்கு இணங்க, தேசிய அரசு அரிசி இறக்குமதிக்கு இருந்த தீர்வை வரியான 35 சதவீதத்தை நீக்கி 10.5 சதவீதமாக்கியது. இது போல் பல்வேறு பொருட்களின் தீர்வை வரியைக் குறைத்ததன் மூலம், விவசாயமே ஒட்டுமொத்தமாக நாசமாகியுள்ளது. பல்வேறு நாடுகளில் விவசாயத் தீர்வை 31 சதவீதமாக இருந்த போதும் இலங்கையில் அது 10.5 சதவீதமாகியுள்ளது.


 அடிப்படை விவசாயத்தை அழிக்கவும், அன்னியனை நம்பி விவசாயிகள் கையேந்தி நிற்கும் தேசியக் கொள்கை திட்டமிட்ட வகையில் விரிவாக்கி வருகின்றது. அன்னிய உரம், கிருமிநாசினி, விதைகள் அற்ற விவசாயம் என்பது, அறவே அற்றுப் போய்விட்டது. ஏகபோக அன்னியக் கம்பனிகளின் நிபந்தனைகள் தான் தேசிய கொள்கையாகின்றது. உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையை அவர்கள் தான், தமது சொந்த விலையின் மூலம் நிர்ணயம் செய்வதாக மாறிவிட்டது. இதன் மூலம் நாட்டை முடக்கவும், அடிபணிய வைக்கவும் முடியும். உதாரணமாக இலங்கையில் கிருமிநாசினியின் பயன்பாடு 1950 இல் 20000 தொன்னாக இருந்தது. இது 2000 ஆண்டில் 212 000 தொன்னாக அதாவது 10 மடங்குக்கு மேலாக மாறியுள்ளது. அதாவது ஆசிய நாடுகள் அனைத்தையும் விட இலங்கையில் வருடம் 28 மடங்கு அதிக அளவில் கிருமிநாசினி பயன்படுத்தப்படுகின்றது. உலகில் பல நாடுகளில்  தடை செய்யப்பட்டவை இலங்கையில் சாதாரணமாகவே விற்கப்படுகின்றது. உலகமயமாதலின் செல்லக் குழந்தையாக இலங்கை நாடு இருப்பதால், வழங்கும் கடன் உரமாகவும், கிருமிநாசினியாகவும் அதாவது நஞ்சாகவே வாரி வழங்கப்படுகின்றது. உலகச் சந்தையில் எது தேங்குகின்றதோ, எது தடை செய்யப்படுகின்றதோ அவை எல்லாம் இலங்கைக்குக் கடன் என்ற பெயரில் கொட்டிக் குவிக்கப்படுகின்றது. உலக மூலதனம் நொந்து போகக் கூடாது என்பது இலங்கைத் தேசியவாதிகளின் இரக்க மனப்பான்மையாக உள்ளது. சொந்த மக்களும், சொந்த நாடும் எப்படிப் போனாலும் கவலைப்படாத குறுந் தேசிய வாதங்களும், கைக் கூலித்தனமும் தான் ஜனநாயகமாகிப் போயுள்ளது.


 அன்னியனுக்கு மக்களின் பெயரில் மானியத்தையும், வரிச் சலுகைகளையும்; சட்டப் பூர்வமாக்கும் இலங்கை அரசு, வரியைக் கட்டாத முதலாளிகளுக்கும் வரிச் சலுகையை வழங்கும் கொள்கையை கையாளுகின்றது. 1996-97-க்கு முற்பட்ட காலத்தில் வரிகட்டாதோருக்கு வரி விலக்கு வழங்கியதன் மூலம் 5600 கோடியை முதலாளிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தனர். இது ஒரு முடிவற்ற தொடர் கதை தான். 2002-இல் மக்களிடம் அறவிட்ட வற் வரியான 2000 கோடி ரூபாவை, வர்த்தக நிறுவனங்கள் அரசுக்குத் தரவில்லை என்று வரி அறவிடும் நிறுவனம் அறிவித்துள்ளது. வரியை ஏழையிடம் புடுங்க முடியும், முதலாளியிடம் தரவில்லை என்று சொல்ல மட்டுமே முடியும். அதுவும் மக்களிடம் அவர்களை ஏமாற்றி அறவிட்ட மறைமுக வரியைக் கூட முதலாளிகளிடம் இருந்து பெற முடியாத மூலதன அதிகார மையங்கள், வரிச் சலுகை கொடுக்கக் கோரி அறிக்கை சமர்ப்பிக்கவே முடியும்;. நம்பினாலும் நம்பா விட்டாலும் இது தான் ஜனநாயகம்.


 இது மட்டுமா எனின் இல்லை. இலங்கையில் 32000 கம்பெனிகள் இருப்பதாகவும், அதில் 9000 கம்பெனிகளே 2000-2001-க்கான கணக்கை சமர்பித்ததாகவும், 2850 கம்பெனிகளே வரி கட்டியதாகவும் அரசே அறிவித்துள்ளது. வேடிக்கையான பெயரளவிலான ஜனநாயகமான அரசாங்கம். ஆட்சி என்பது மூலதனத்தின் ஆட்சி தான்; என்பதும், அரசு என்பது மூலதனத்துக்கு தாளம் போட மட்டுமே உள்ளது என்பதை இது மீண்டும் எமக்கு நிறுவுகின்றது. 2003-ம் ஆண்டு அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் 19,186 உள்நாட்டுக் கம்பெனிகள் வரி செலுத்துவதாகவும், 246 வெளிநாட்டுக் கம்பெனிகள் மட்டுமே வரி செலுத்துவதாகவும் அறிவித்தனர். இதைவிட 175,346 பேர் வரி செலுத்துவதாகக் கூறினர். பல ஆயிரம்  கம்பெனிகள், தனிநபர்கள் வரி கட்டுவதில்லை என்பதை பாராளுமன்றத்தில் ஒத்துக் கொண்டனர். இதில் வெளிநாட்டு நிறுவனங்களும் அடங்கும். இலங்கையில் சில ஆயிரம் வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளையிடுகின்றன. ஆனால் 246 நிறுவனங்கள் மட்டுமே சலுகை அடிப்படையில் சிறிய தொகையை வரியாகக் கட்டுகின்றன. முதலாளிகளுக்கு வரியை முற்றாக நீக்குவது என்பதே மூலதனத்தின் உலகமயமாதல் கொள்கை. இதனடிப்படையில் வரிக் குறைப்பு, வரிச் சலுகை, வரி நீக்கம் மானியங்கள் என்று பலவற்றைத் தேசிய அரசுகள் வாரி வழங்குகின்றன. மக்களிடம் மறைமுகமாக வர்த்தக நிறுவனங்கள் திரட்டும் வரியைக் கூட, மூலதனம் திமிருடன் கொடுக்க மறுக்கின்றது. அரசும், அரசு இயந்திரமும் மூலதனத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்குவதால், மூலதனத்திடம் வரிகளை அறவிடுவது என்பது முடியாது. விரும்பின் வரி நீக்கத்தை அடிப்படையாக கொண்ட மானியமாக அதை விட்டுவிட வேண்டும். இதை ஒரு பெரும்பான்மை வாக்குகள் மூலம் ஜனநாயகப்படுத்தி விடுவதே காலத்துக்குக் காலம் நடக்கின்றது. மக்கள் முதுகு முறிய மூலதனத்துக்காக அனைத்தையும் சுமந்து நிற்க வேண்டியது அவர்களின் ஜனநாயகக் கடமை என்பது உலகளவிய உலகமயமாதல் கொள்கையாகும்.


 இப்படி மானியங்கள், சலுகைகள், வரிச் சலுகைகள் என ஒருபுறம் வழங்கிய படி, மறுபுறம் அதை ஈடுசெய்ய அரசுத்துறையை அவர்களுக்கே மானியமாக விற்றுவிடுவது என்று அறிவித்து விடுகின்றனர். அரசுத் துறையை விற்பதன் மூலம் 1000 கோடி ரூபாவைத் திரட்ட உள்ளதாக அறிவித்தனர். வெளிநாட்டவனுக்கு இலங்கையை விற்பதன் மூலம் அவர்களிடம் வெளிநாட்டு மானியமாக 1000 கோடி ரூபாவைத் திரட்ட திட்டமிட்டனர். இதைவிட வெளிநாட்டுக் கடனாக 5,000 கோடி ரூபா திரட்ட உள்ளதாக அறிவித்தனர். வரவு செலவில் பெரும்பகுதி கடன் கொடுப்பனவுக்கும், வட்டிக்கும் மீண்டும் சென்று விடுகின்றது. வரவு செலவைச் சமர்ப்பிப்பதே வெளிநாட்டவனுக்கு வட்டி மற்றும் கடன் கொடுப்பனவுகள் கொடுப்பதற்காகவே ஒழிய மக்களுக்குச் சேவை செய்ய அல்ல. அரசானது மூலதனத்துக்குச் சேவை செய்வதைக் கொள்கையாகவே ஜனநாயகமாகவே ஆக்கி விட்ட பின், அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது அடிப்படை கொள்கையாகின்றது. முதலில் அதை நட்டமடைந்ததாக காட்டுவது தொடங்குகின்றது. கடந்த 10, 15 வருடங்களில் அரசுத் துறைகள் நட்டமடைந்ததாகக் கூறியே அரசுத் துறைகள் உலகம் முழுக்க விற்கப்படுகின்றன. இந்த வகையில் அரசு - பொதுத்துறைகள் அனைத்தையும் தனியார்மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக அது வருடம் 150 முதல் 200 கோடி நட்டமடைவதாக கூக்குரலிடுகின்றது. இதே போல் பெற்றோலியம் கூட்டுஸ்தாபனம் 2150 கோடியும், மின்சார சபை 1560 கோடியும், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் 830 கோடியும், தபால் திணைக்களம் 230 கோடியும், இலங்கைப் போக்குவரத்துச் சபை 210 கோடியும் நட்டமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதைத் தெரிவித்த நிதி அமைச்சர் கே.என்.சொக்சி தனது பதவிப்பிரமாணத்தில் ~~சீர்திருத்தம் வருத்தம் மிகுந்தது|| என்ற கூறி, தேசியச் சொத்துகளை அந்நியனுக்கு விற்பதற்கான ஒரு நியாயவாதத்தை முன்வைத்துள்ளார். அத்துடன் ~~மக்களைக் குறிப்பிட்ட காலம் எங்களுடன் தாங்கிக் கொள்ளுமாறு கேட்கவேண்டும்;. அதன்படி அவர்கள் குறைந்த பட்சம்; ஒரு வித்தியாசமான சித்திரத்தைக் காண்பார்கள்||  எனவும் கூறியுள்ளார். இப்படியாக அரசுப் போக்குவரத்துத் துறை முதல் பல துறைகள் தனியார்மயமாகின்றது.


 அரசாங்கத்தின் மற்றொரு கொள்கை தனியார் தேசிய உற்பத்திகளை அன்னியருக்குத் தாரைவார்ப்பதாகும். இதற்கு முதல்படியாக அவர்களை மீளமுடியாத கடன்காரர் ஆக்குவதாகும். நவீன இயந்திரத்தை உற்பத்தியில் புகுத்துவது என்ற பெயரில், அன்னிய இயந்திரங்களைப் பெரியளவில் புகுத்த கடன் தாராளமாக வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அன்னிய இயந்திரத்துறை கொழுக்கும் அதே நேரம், இத்துறைகள் அன்னிய மூலதனத்துக்குப் படிப்படியாக அடிமைப்பட்டுச் சிதைந்து அழிவதை துரிதமாக்கின்றது. இதனடிப்படையில் சிறிய மற்றும் மத்திய உற்பத்திக்குக் கடன் வழங்க என அரசு 3500 கோடி ரூபாவை 2004-ம் ஆண்டுக்கு ஒதுக்கியுள்ளது. இதைவிட அன்னியக் கடன் கொடுப்பனவுகள் பல இதற்கு என சிறப்பாகப் பெரிய அளவில் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் சிறிய மற்றும் மத்திய தேசிய உற்பத்திகள் முடக்கப்படுவது எதார்த்தமாகின்றது. அன்னிய உற்பத்;திகள் சந்தையைக் கைப்பற்றுவது இலகுவானதாகின்றது. இலங்கையில் படிப்படியாக அன்னிய மூலதனம் பெருகி வருகின்றது. தேசிய மூலதனம் சிறுத்து சிதைந்து வருகின்றது.


 கடனுக்கு வெளியில் நாட்டை விழுங்கும் வகையில் வெளிநாட்டு மூலதனம் இலங்கையில் பெருகி வருகின்றது. 2001 இல் 8.2 கோடி; டொலராக (அண்ணளவாக 820 கோடி ரூபா) இருந்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள், 2002-இல் 23 கோடி டொலராக (2300 கோடி ரூபாவாக) அதிகரித்தது. 2003-இல் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 5000 கோடி ரூபாவாக அதிகரித்தது. இதை அரசாங்கம் தங்கள் மேலான வெளிநாடுகளின் நம்பிக்கையைக் காட்டுவதாக பீற்றியது. தாம் வெளிநாடுகளுக்கு கைக்கூலிகளாக இருப்பதை பாராட்டுகின்றன என்பதையே பெருமையாக பீற்றுகின்றனர்.


 கடந்த சில வருடங்களில் அன்னியன் வருகை பொருளாதாரத் துறையில் என்றுமில்லாத வகையில் ஊடுருவுவதானது - நாடு அடிமையாகிச் செல்வதையேக் காட்டுகின்றது. நாட்டில் மொத்த வெளிநாட்டுச் சொத்துக்கள் 2003 இன் கடைசிப் பகுதியில் 290 கோடி அமெரிக்க டொலராக (அண்ணளவாக 29000 கோடி ரூபாவாக) அதிகரித்துள்ளது. இது ஆண்டு இறுதியில் 300 கோடி அமெரிக்க டொலராக (அண்ணளவாக 30,000 கோடி ரூபாவாக) உயரும் என்று பெருமையுடன் அரசு அறிவித்து இருந்தது. இது சுமார் ஐந்து மாதங்களுக்குக் கூடிய இறக்குமதிச் செலவை ஈடுசெய்யக் கூடியதாக இருக்கும் என்று பீற்றியது. அன்னிய மூலதனத்தின் வருகை, 2002-ம் ஆண்டை விட பத்து சதவீதம் ஏற்றுமதியை அதிகரிக்க வைத்தது. கைத்தொழில் ஏற்றுமதி 2 சதவீதம் அதிகரிக்க இது காரணமாக இருந்தது. நாடு மறுகாலனி எல்லையில் தன்னை நிலைநிறுத்தி நிற்கின்றது. தேசிய வருவாய்க்கு நிகராக அன்னிய மூலதனம் நாட்டில் புகுந்துவிட்டது. கடன், தேசிய வருவாயை மிஞ்சி நிற்கின்றது. வருடாந்த கடன் கொடுப்பனவுக்கான வட்டி தேசிய வருவாயைத் தாண்டி நிற்கின்றது. தன்னை சுதந்திர நாடு என்று சொல்லக் கூடிய எந்தத் தகுதியும் இலங்கைக்கு கிடையாது. பொருளாதார ரீதியாக மறுகாலனிய அடிமை நிலையில் ஏற்கனவே இலங்கை கடந்து சென்றுவிட்டது.


 2003-இன் முதல் பத்து மாதங்களில்; நான்கு தடவைகள் வட்டி வீதங்களை மத்திய வங்கி குறைத்தது. இதன் மூலம் வியாபாரம் மற்றும் கைத்தொழில் மூலதனங்கள் கொழுத்தன. கடன் வழங்கலுக்கான வட்டி விகிதம் 2001 இல் 22.4 சதவீதமாக இருந்தது. இது 2003-இன் தொடக்கத்தில் 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. 2003 செப்டெம்பரில் அது மேலும் குறைக்கப்பட்டு 9.3 சதவீதத்துக்குக் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வங்கித் தொழிலுக்கும், தனியார் துறையினருக்கும் லாபம் பெருகியது. வட்டி விகிதங்களின் குறைப்பு மூலதனத்துக்கு மற்றொரு கொடையாகும். வட்டி யாருக்கு குறைக்கப்பட்டது? அன்றாட மக்களின் சேமிப்பு பணத்துக்கே வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டது. இது நேரடியாகப் பெரு மூலதனத்துக்கு விசேட சலுகையாகியது. மக்களின் சேமிப்புகள், ஓய்வூதியப் பணங்கள் (ஓய்வ+திய பணச் சேமிப்பு 32000 கோடி ரூபா உள்ளது) என்று, பல பத்தாயிரம் கோடி ரூபா மீதான வட்டி வகிதங்களின் குறைப்பு நேரடியாக மக்களுக்கு மேல் திணிக்கப் பெற்ற மேலதிக சுமையாகியது. மக்களின் வாழ்வு மேலும் கீழே தள்ளப்பட்டுள்ளது. அரசு, மக்களின் பணத்தை எடுத்துக் கொண்டு விட்ட நிலையில், வழங்கிய வட்டிக்கு தானே வட்டி விகிதங்களை குறைத்ததன் மூலம், மக்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தின் அளவைக் குறைத்துக் கொண்டது. அதை அன்னியனுக்குக் கொடுப்பதன் மூலம் சேவை செய்ய முடிகின்றது. மற்றொரு பக்கத்தில் பெரும் மூலதனங்களும், அன்னிய மூலதனங்களும் சொந்தப் பணத்தை வைத்துக் கொண்டு முதலீடுவதில்லை. மாறாக மக்களின் அன்றாட சேமிப்புகளை அபகரித்தே, அதைக் கொண்டே மூலதனத்தை பெருக்கி வந்தன. அதாவது மக்களைச் சூறையாடி வந்தன. அரசுத் துறைகளைக் கூட மக்களின் சேமிப்பு பணத்தைக் கொண்டு வாங்குகின்றன. வட்டி விகிதக் குறைப்பு என்பது மூலதனங்கள் மக்களின் பணத்துக்கு வழங்க வேண்டிய வட்டி விகிதத்தை மூன்று மடங்கு குறைத்துள்ளதேயாகும். இதனால் அவர்களின் லாபம் சில மடங்காகியுள்ளது. மக்களின் சேமிப்பைக் கொண்டு வங்கிகள் நடத்தும் பல்வேறு சூதாட்டத்தில் ஏற்பட்ட கொழுப்பு, வட்டி விகிதக் குறைப்பால் அதிர்ஷ்டம் தலைகால் தெரியாத அளவில் விசிறியடித்தது. குறைந்த வட்டி பணத்தின் விசிறல் தொடர் மாடிக் குடியிருப்புகளில் பெருமளவில் முதலீடப்படுகின்றது. வட்டி விகிதங்களை குறைக்கக் கோருவது உலகமயமாதலின் அடிப்படை நிபந்தனையாகும்;. இதன் மூலம் மக்களின் சேமிப்பை எடுத்து விரும்பியவாறு கொள்ளையிடவும், அதைக் கொண்டு அந்த நாட்டுக்கே கடன் கொடுக்கும் கொள்கையும் உலகளவில் வெற்றி பெற்று வருகின்றது. இந்த வகையில் இலங்கையிலும் இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.


 அத்துடன் மக்களின் சேமிப்புப் பணத்தை மீளக்கொடுக்க முடியாத நிலையை இலங்கை அடைந்துவிட்டது. மீள் கொடுப்பனவை பின் தள்ளும் முயற்சியாகவும் இந்த வட்டி விகித குறைப்பைப் பயன்படுத்தினர். முன்பு 3 ஆண்டு முதிர்ச்சிக் காலத்தை உடைய 14.95 சதவீத வட்டி விகிதத்தில் திறைசேரி உண்டியல் விற்க முயன்றனர். அதாவது மூன்று வருடத்துக்குப் பணத்தை மீள எடுக்க முடியாது. அன்று அதை விற்க முடியவில்லை. பொதுவான உயர் வட்டி விகிதங்கள் இதை அனுமதிக்கவில்லை. ஆனால் வட்டிக் குறைப்பை கொள்கையாக்கி, அதிரடியாக 4 முறை 2003-இல் குறைத்ததன் மூலம், சேமிப்பாளர்களைத் தொடர் பீதிக்குள்ளாக்கினர். இதை மூலதனமாக்கி வங்கிகள் ஜனவரி முதல் ஒக்ரோபர் வரையான காலப் பகுதியில் 9.4 வீதம் என்ற வட்டி வீதத்தில் 10, 15, 20 ஆண்டுகால திறைசேரி உண்டியல்களை 3600 கோடி ரூபாவுக்கு பொதுமக்களின் தலையில் கட்டிவிட்டன. மக்களின் சேமிப்புப் பணமான 3600 கோடி ரூபாவை 10, 15, 20 வருடத்துக்கு மீளப் பெற முடியாத நிலையை ஏற்படுத்தினர். மக்கள் தமது சேமிப்புகளை ஒரேயடியாக மீளப் பெறுவதை தடுக்கும் வழியில், தொடர் பணப்பத்திரங்களை விற்க வட்டிக் குறைப்பு மேலும் உதவி வருகின்றது.


 மக்கள் மேலான பல முனைத் தாக்குதலினால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட முடியாத நிலையில் மக்கள் அல்லாடுகின்றனர். பல விலையேற்றங்கள் தொடராக அமுல் செய்யப்படுகின்றது. உதாரணமாக 2003 ஜுன் மாதம் முதல் போக்குவரத்து கட்டணத்தைத் தூர இடத்துக்கு 40 சதவீதமும், குறுகிய தூரத்துக்கு 60 சதவீத உயர்வை ஏற்படுத்தியது. இது போல் வீதிகளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வரி அறவிடும் முறை ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, வாகனங்களை வருடந்தோறும் பதிவுசெய்யும் போதும், பெற்றோல், டீசல் விநியோகத்தின் போதும் இந்த வரியை அரசு மறைமுகமாக அறவிடத் தொடங்கியுள்ளது. மக்களின் வாழ்வியல் மேலான தொடர் தாக்குதலால் மக்கள் விழிப்புற்று மூலதன அமைப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தாத விதத்தில், தனியார் துறையில் உள்ள 62 லட்சம் பேருக்கும், 10 சதவீத சம்பள உயர்வையும் வழங்குமாறு தொழில் அமைச்சர் மஹிந்சமரசிங்க முதலாளிமார்களிடம் கெஞ்சிக் கேட்கின்றார். 10 சதவீத சம்பள உயர்வைக் கொடுக்க சட்டம் போடவில்லை. இரந்து கேட்பதே ஜனநாயகப் பண்பாகியுள்ளது. அரசு ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உலகமயமாதல் கோருகின்றது. இதை ஆராய திஸ்ஸ தெய்வேந்திரா ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய 30 சதவீதமான அரசு ஊழியர்களை வேலையிலிருந்து ஓய்வு பெறச் செய்யும் வகையில் திட்டம் ஒன்றை சமர்ப்பித்தது. இதற்கென ஏகாதிபத்தியமும், உலக வங்கியும் சிறப்பு நிதிகளை கொடுக்கின்றது. பணத்தைக் கொடுத்தும், சில சலுகைகளைக் கொடுத்தும் அரசு ஊழியர்களை அகற்றுவதன் மூலம், அரசுத் துறையைத் தனியார்மயமாக்க உலக வங்கி கோருகின்றது.