Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள் இரையாகும் கிராமப் பொருளாதாரம்

வட்டமிடும் பன்னாட்டு நிறுவனங்கள் இரையாகும் கிராமப் பொருளாதாரம்

  • PDF

03_2005.jpgவேலையில்லாத் திண்டாட்டம், ஆட்குறைப்பு ஆலைமூடல், விலைவாசி உயர்வு ஆகியவற்றின் காரணமாக நகர்ப்புற வர்க்கத்திடம் பொருளாதார தேக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால், கடந்த சில ஆண்டுகளாக சந்தையின் அளவு விரிவடையவில்லை. இந்தப் பின்னணியில், நகர்ப்புறத்தில் புதிய நுகர்வோர்களை கவர்ந்திழுக்க முடியாமல் பன்னாட்டு நிறுவனங்கள் திணறுகின்றன. பழைய வாடிக்கையாளர்களையே மீண்டும் குறிவைத்து விற்பனைக்கான தாக்குதலைத் தொடுக்கின்றன. பல்வேறு விளம்பரங்கள் மேற்குறிப்பிட்ட விசயத்தை உறுதிப்படுத்துகிறது.

 

உதாரணமாக, 'சன்சில்க் ஷாம்பு" விளம்பரத்தில், 'சன்சில்க் உபயோகிப்பதை தினமும் ஓர் பழக்கமாக்குங்கள்" என்பதும் 'இரவிலும் கிருமிகள் பற்களை தாக்குகின்றன் ஆகையால் இரவிலும் பல் துலக்க வேண்டும்" என்று வலியுறுத்தும் விளம்பரமும் மேற்குறிப்பிட்ட விசயத்தை தெளிவுபடுத்துகிறது. இருப்பினும் சந்தை விரிவடைதற்கான வாய்ப்புகளோ, அறிகுறிகளோ தெரியவில்லை. ஆரம்பத்தில், 10 சதவீத மேட்டுக்குடி மற்றும் நடுத்தர வர்க்கமே வாடிக்கையாளர்கள்; மீதம் 90 சதவீத பேர் பற்றி கவலையில்லை என்று கூறிய இந்நிறுவனங்கள், நகர்ப்புற பொருளாதார தேக்கத்தின் பின்னணியில் புதிய களங்களைத் தேட ஆரம்பித்தன. இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வெறிக்கான புதிய இரையாக கிராமங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.

 

கிராமச் சந்தையின் பின்புலம்

நம் நாட்டின் 100 கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையில், கிட்டதட்ட 75 கோடி மக்கள் கிராமங்களில் உள்ளனர். இம்மக்கள் 6.4 லட்ச கிராமங்களில் வசிக்கின்றனர். இதில், ஒரு லட்ச கிராமங்கள் 2000 முதல் 10,000 வரையும், 2.2 லட்ச கிராமங்கள் 500க்கும் குறைவான மக்கள்தொகையும் கொண்டவையாகும். முதலில் கூறப்பட்ட ஒரு லட்ச கிராமங்கள் ஒட்டுமொத்த கிராம மக்கள் தொகையில் 50 சதம் கொண்டதாகவும் 60 சதவீத கிராம பொருளாதாரம் கொண்டதாகவும் உள்ளது. அன்றாட மற்றும் துரித தேவையான பொருட்கள் (குயளவ அழஎiபெ உழளெரஅநச பழழனள - குஆஊபு) ஆன பற்பசை, சோப், பவுடர் போன்ற பொருட்களின் கிராமச் சந்தை மதிப்பு ரூ. 65,000 கோடியாகவும், டி.வி. மற்றும் குளிர்சாதன பெட்டி போன்ற வகையறாக்களின் சந்தை மதிப்பு ரூ. 5000 கோடியாகவும், விவசாய இடுபொருட்களின் சந்தை மதிப்பு ரூ. 45,000 கோடியாகவும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன சந்தை மதிப்பு ரூ. 8,000 கோடியாகவும் உள்ளது. அதாவது, மொத்த இந்திய கிராமச் சந்தையின் ஆண்டு மதிப்பு ரூ. 1,23,000 கோடியாகும் (ஊணூச்ணஞிடிண் டுச்ணணிடி,2002). இந்த பிரமாண்டமான சந்தையில் 35 முதல் 44 சதம் வரை மட்டுமே பன்னாட்டு மற்றும் இந்திய தரகு முதலாளிகளால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 

மீதியுள்ள சந்தையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பல்வேறு தடைகள் இருக்கின்றன. குறிப்பாக, இந்திய கிராமங்கள் மிகவும் விரிந்து பரந்து பல்வேறு புவியியல் அமைப்புகளில் உள்ளன. மேலும் 30 சதவீத கிராமங்கள் சொற்பமான மக்கட் தொகையே கொண்டுள்ளது. சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை. கிராம மக்கள், பாரம்பரியத்தாலும் உழைக்கும் வர்க்கக் கலாச்சாரத்தினாலும் பின்னிப் பிணையப்பட்டுள்ளார்கள்; அவர்களின் வாங்கும் சக்தி குறைவாக உள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களை பற்றிய விழிப்புணர்வு அவர்களிடம் குறைவு. விழிப்புணர்வை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் குறைவாகவே உள்ளது. ஆனால், மக்கள் அல்லும் பகலுமாய் சுழற்சியாய் உழைத்துக் கொண்டு, பொருளாதாரத்தை ஈட்டி தமது தேவையை உள்ளூர் மற்றும் அருகாமையில் உற்பத்தியாகும் பொருட்களின் மூலம் ஈடேற்றிக் கொள்கின்றனர். இவ்வளவு சிக்கல்கள் இருப்பினும், இந்த ஏழை எளிய கிராம மக்களிடம் உள்ள சொற்ப செல்வங்களைக் கூட கொள்ளையடித்தே ஆகவேண்டும் என்கிற வெறியில், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளுக்கு நம்பகமான தொழிற் கூட்டாளிகள் தேவைப்படுகிறார்கள். யார் இவர்களின் நம்பகமான கூட்டாளி?

 

நம்பகமான கூட்டாளிகள்

ரூ. 1,23,000 கோடி மதிப்புள்ள கிராமச் சந்தையை அடைவதற்கு பல்வேறு திறம்பட்ட கூட்டாளிகள் தேவைப்படுகின்றனர். கிராம மூலை முடுக்கெல்லாம் சென்றடைய சங்கிலித் தொடர் வலைப்பின்னலைக் கொண்ட அமைப்புகள் அல்லது நிறுவனங்கள் தேவை; கிராம பாரம்பரியத்தையும் உழைக்கும் மக்களின் கலாச்சார பின்னணியையும் உடைத்தெறிந்து நுகர்வெறி கலாச்சாரத்தைத் திணிக்கக் கூடிய ஊடகங்களும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் தேவை. மேற்குறிப்பிட்ட அம்சங்களை ஏற்படுத்திக் கொடுக்கதேவையான முதலீட்டைக் கொடுக்க, நிதி நிறுவனங்கள் தேவை. சாராம்சமாக, குறைந்த முதலீட்டை போட்டு அதிக லாபத்தை எடுக்க என்னென்ன அம்சங்கள் தேவைப்படுகிறதோ அவற்றை முடித்துக் கொடுக்கிற நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் கூட்டாளிகளாகத் தேவை. இந்தப் பின்னணியில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நம்பகமான, திறமையான கூட்டாளிகளாக தன்னார்வக் குழுக்கள், மகளிர் அமைப்புகள், சுயஉதவிக் குழுக்கள், கூட்டுறவு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்த்துக் கொண்டன.

 

தன்னார்வக் குழுக்கள் மற்றும் அதன் துணை அமைப்புகள்

தன்னார்வக் குழுக்கள் நாடு முழுவதும் கிராமங்களில் பல லட்சக்கணக்கான சுய உதவிக் குழுக்கள் மற்றும் மகளிர் அமைப்புகள், கூட்டுறவு குழுக்கள் அமைத்துக் கொண்டு வருகின்றன. 2005 இறுதிக்குள் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் நம் நாட்டில் கட்டப்பட்டிருக்கும். சில கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட சுய உதவி குழுக்கள் இருக்கின்றன. இந்த வலைப்பின்னல் பல்வேறு வகைகளில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது. சுய உதவி குழுக்கள், நுண் தொழில் மூலம் (அiஉசழ நவெநசிசளைந) மூலம் சுயசார்பு பெற்று வருவதாக செய்தி ஊடகங்களில் தன்னார்வக் குழுக்கள் பெருமையாக பீற்றிக் கொள்கின்றன. ஆனால் யதார்த்த நிலையோ வேறு.

 

பன்னாட்டு நிறுவனமான ""ஹிந்துஸ்தான் லீவர்'' 2001ஆம் ஆண்டில் 4 மாநிலங்களில் 52 மாவட்டங்களில் உள்ள 5000 கிராமங்களுக்கு தங்கள் பொருட்களை விற்பதற்காக பல்வேறு தன்னார்வக் குழுக்கள் மற்றும் அதனின் சுயஉதவிக் குழுக்களுடன் கூட்டு வைத்து விற்பனையை ஒத்திகை பார்த்தது. இந்த வெற்றியின் பின்னணியில், இவ்வழி முறையை 8 மாநிலங்களுக்கு விரிவுபடுத்தி 130 மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான மக்களை இந்நிறுவனத்தினர் சென்றடைகின்றனர். இத்திட்டத்திற்கு சுய உதவி குழுக்களிலிருந்து பெண்களை, தன்னார்வக் குழுக்களின் மேற்பார்வையில் தேர்ந்தெடுத்து பொருட்களை விற்பதற்கான பயிற்சியையும், சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி கிராம மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிமுறைகளையும் இந்நிறுவனத்தினர் கற்றுத் தருகின்றனர்.

 

இப்படி பயிற்சி அளிக்கப்பட்ட பெண்களுக்கு ""சக்தி அம்மா'' என்ற பட்டத்தையும் சூட்டுகின்றனர். சக்தி அம்மாக்கள் கிராமங்களுக்குச் சென்று சுத்தம் மற்றும் சுகாதாரம் பற்றி போதித்து ""குளோசப்'' மற்றும் ""பெப்சோடெண்ட்'' பயன்படுத்துங்கள் என்றும், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதியில்லை என்றும், 50 பைசாவுக்கு ""கிளினிக் ப்ளஸ்'' இருக்கும் பொழுது சீயக்காய் எதற்கு என்றும் கூறி விற்பனை செய்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று பற்களில் கிருமி தாக்குதலை பற்றி வகுப்பும் எடுக்கிறார்கள்.

 

மறுபுறம், தன்னார்வக் குழுக்கள் ஸ்டாக் ஏஜெண்டாகவும், கிராமச் சந்தையை ஆய்வு செய்து கொடுக்கும் நிறுவனமாகவும் செயல்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் ஆசியாவின் மிகப்பெரிய தன்னார்வ குழுவான ""பெய்ப்'' (டீயகை)யும், இந்தியாவின் மிகப் பெரிய வலைபின்னலை கொண்ட ""கேர்'' என்ற தன்னார்வ குழுவையும் கொண்டுள்ளது. பெயிப் நிறுவனம் கீழிருந்து தனியார்மயத்தை நடைமுறைப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது. ""கேர்'' என்பது பல்வேறு நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டாக செயல்படுகிறது. சமீபத்தில் இராக்கின் ""கேர்'' நிறுவனத் தலைமையை இராக் போராளிகள் கடத்தி சென்று கொன்று விட்டனர். (இதற்காக ""இந்து'' போன்ற நாளிதழ்கள் ""கேர்'' தலைவரின் சேவையைப் புகழ்ந்து அழுது தீர்த்தன). இப்படி 133 தன்னார்வ குழுக்கள் மற்றும் அதன் துணை அமைப்புகளுடன் செயல்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் ரூ. 600 கோடி மதிப்புள்ள பொருட்களை கிராமங்களில் விற்றுள்ளன. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, ஒரு கோடி மக்களைச் சென்றடைய வேலைகளை முடுக்கி விட்டு வருகிறார்கள், ஹிந்துஸ்தான் லீவர் அதிகாரிகள்.

 

இந்தப் போக்கைப் பயன்படுத்தி 75 கோடி மக்களைக் கபளீகரம் செய்ய ஐ.டி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., பிலிப்ஸ் போன்ற நிறுவனங்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கின்றன. மேற்குறிப்பிட்ட விபரங்களிலிருந்து தன்னார்வக் குழுக்கள் ஏகாதிபத்தியத்தின் இன்னுமொரு கைக்கூலி பட்டாளமே என்பது நிரூபணமாகிறது.

 

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்

தற்சமயம் செய்தி ஊடகங்களான வானொலி, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி 57 சத கிராம மக்களைத்தான் சென்றடைகிறது. பெரும்பான்மையான கிராமங்களில் தொலைபேசி இல்லை. கணினி, இணையம் என்பதோ நகரத்துடன் முடிந்து விடுகிறது. மறுபுறம், நகரத்தில் மேற்குறிப்பிட்ட விசயங்கள் எதிர்மாறாக உள்ளன. இந்தப் பின்னணியில், முதலாளித்துவ அறிவுஜீவிகள் நகரத்திற்கும் கிராமத்திற்கும் அல்லது பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையில் நிலவுகின்ற டிஜிட்டல் பாகுபாட்டை (னபைவையட னiஎனைந) குறைப்பது மூலம் ஏழை எளிய மக்கள் பல்வேறு புதிய தகவல்களைப் பெற்று தங்கள் வாழ்க்கையின் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று கூறி வருகின்றனர்.

 

இதன் தொடர்ச்சியாக, சில ஆண்டுகளுக்கு முன்பு சுவாமிநாதன் அறக்கட்டளை, புதுவையில் பல்வேறு கிராமங்களில் கணினி மற்றும் இணைய வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விசேட் மற்றும் கோர்டெக்ட் தொழில்நுட்பத்தினால் டெலிபோன் இல்லாத கிராமங்களுக்கும் எந்த கம்பிகள் இல்லாமல் இணையம் மற்றும் தொலைபேசி வசதியைச் செய்து கொடுக்கக்கூடிய சூழ்நிலையில், என்லாக் என்ற சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம், பல்வேறு தன்னார்வக் குழுக்கள், தரகு முதலாளித்துவ மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கணினியையும் இணையத்தையும் கிராமம் கிராமமாக நிறுவிக் கொண்டு வருகின்றன. இன்னொருபுறம், சில மாநில அரசுகள் (குறிப்பாக, ஆந்திரா) மேற்குறிப்பிட்ட வேலையை செய்து வருகின்றன.

 

அரசின் திட்டக் குழுவில் இருக்கும் சுவாமிநாதன், சுனாமி தாக்குதலின் பின்னணியில் ""கிராமங்களில் இணைய நிலையங்கள் நிறுவப்பட்டிருந்தால் மக்களைக் காப்பாற்றியிருக்கலாம்; ஆகையால், அரசு இவ்விசயத்தில் மெத்தனப்போக்கு காட்டக்கூடாது'' என்கிறார். ஆனால், சுவாமிநாதனுக்கு உண்மை தெரியாமல் இல்லை. ""அமெரிக்காவின் கூட்டாளியான இங்கிலாந்து இராணுவத்துக்கே தகவல் கொடுக்காமல் அமெரிக்கா இருட்டடிப்பு செய்தது'' (பார்க்க: ""இந்து'', ஜனவரி 8, 2005). இருப்பினும் தன் ஏகாதிபத்திய சேவையை, சுனாமியில் உயிரிழந்த ஏழை மக்களின் பிணங்களின் மேல் செய்யத் துடிக்கிறார், அவர்.

 

நம் நாட்டில் தற்சமயம் 60,000க்கு மேற்பட்ட கிராமங்கள் இணைய வசதியால் இணைக்கப்பட்டுள்ளன. ஐ.டி.சி. நிறுவனம் மட்டும் 5000க்கும் மேற்பட்ட கிராம இணைய நிலையங்களை நிறுவி 30 லட்ச மக்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 30 புதிய கிராமங்களை இணையத்தின் வலையில் இணைக்கிறது.

 

மரபு செய்தி ஊடகங்களான டி.வி., வானொலி மற்றும் பத்திரிகைகள், ஒருவழி செய்தி ஊடகமாகும். பயனீட்டாளர் முனையிலிருந்து செய்தி பரிமாற்றம் செய்வதற்கு வாய்ப்புகள் குறைவு. மாறாக, இணையத்தின் மூலம் பயனீட்டாளர் முனையிலிருந்து செய்திகளை மற்றும் தகவல்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்ப முடியும். அதாவது, இணைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இரு வழி தொடர்பு என்பது எளிதாகி விட்டது. இந்த கூடுதல் அம்சம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான தகவல் பரிமாற்றம் மற்றும் புதிய மாற்றங்களைக் கண்டறிவதை எளிதாகி விட்டது. இந்த தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு அரசு இணைய கல்லூரிகளை உருவாக்கலாம், அரசு பற்றிய திட்டங்களை வெளியிடலாம், மக்களின் குறைகளைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், இவைகளெல்லாம் நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு.

 

மாறாக, பன்னாட்டு நிறுவனங்கள் கிராமச் சந்தையை சீர்படுத்தி ஒருங்கிணைப்பதற்கும் மற்றும் நுகர்வெறி கலாச்சாரத்தை தூண்டி விடுவதற்கும்தான் உபயோகப்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஐ.டி.சி. நிறுவனம் கிராம இணைய நிலையங்கள் மூலம் ரூ. 450 கோடிக்கு வியாபார பரிமாற்றம் செய்துள்ளது. அதன் புதிய சிகரெட் நுகர்வோர்களில் 10 முதல் 15 சதம் பேர் கிராம இணைய நிலையத்தின் மூலம் வந்தவர்கள் ஆவார்கள்.

 

டாடா, மகேந்திரா அண்டு மகேந்திரா, ஹிந்துஸ்தான் லீவர், தான் அகடெமி, இ.ஐ.டி. பாரி மற்றும் பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வக் குழுக்கள் துணையுடன் பல ஆயிரக்கணக்கான கிராமங்களை இணையத்துடன் இணைத்த வண்ணம் இருக்கின்றன். இந்த கிராம இணைய நிலையங்கள் மூலம் கிராமச் சந்தை தேவையை அறிந்து கொள்வது, விநியோக சங்கிலியை ஒருங்கிணைப்பது, கச்சாப் பொருட்களை கொள்முதல் செய்வது, ஒப்பந்த விவசாயத்தை விரிவுபடுத்துவது, நுகர்வெறியைத் தூண்டுவது முதலானவை எளிதாக ஆக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அரசும் மற்ற பங்கேற்பாளர்களும் மேற்குறிப்பிட்ட விசயங்களைக் கூறாமல், நடப்பதை மறைத்து கிராம வளர்ச்சிக்கும், தகவல் பரிமாற்றத்திற்கும் தான் இவை செய்யப்படுகிறது என்கிறார்கள்.

 

நிதி நிறுவனங்கள்

பன்னாட்டு நிறுவனங்களின் உத்திரவாதத்தில் கடன் கொடுக்கவும் தங்களுடைய சேவைத் திட்டங்களை கிராமப்புறங்களில் விற்கவும் பல நிதி நிறுவனங்கள் புற்றீசல் போல் கிராமத்தை நோக்கிப் படையெடுத்துக் கொண்டிருக்கின்றன. பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் மேற்பார்வையில் இயங்கும் தன்னார்வக் குழுக்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுடைய நுண்கடன் சந்தையின் மதிப்பு 15 முதல் 45 ஆயிரம் கோடியாகும். இக்கடன்களை திருப்பிப் பெற்று தர, பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வக் குழுக்கள் இருப்பதால் மிகவும் இலாபகரமானதாக கருதப்படுகிறது.

 

தன்னார்வக் குழுக்களோ, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சேவை செய்யக்கூடிய திட்டங்களுக்கு மட்டுமே உத்திரவாதம் தர முன் வருகிறது. அதாவது, கிராம இணைய நிலையங்கள் வைப்பதற்கும், பன்னாட்டு நிறுவன பொருட்களை விற்பதற்கும் சுய உதவிக் குழுக்கள் நுண்கடன்களை வாங்க உத்திரவாதம் கொடுக்கிறது. தன்னார்வக் குழுக்களின் பிரதான வேலை, அசலையும் வட்டியையும் கறாராகப் பெற்று நிதி நிறுவனங்களுக்கு கொடுக்க வேண்டும்; அதாவது, அடியாள் வேலை!

 

உலக வங்கியின் வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி நூறுக்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களை உருவாக்கும் போக்கில், நுண்கடன் உள்நோக்கங்களைப் புரிந்து கொண்ட டாக்டர் சுதிர்ரேந்தர் சர்மா, அவ்வேலையிலிருந்து விலகிக் கொண்டார். அவரின் கூற்றுப்படி, 'நுண் கடன் என்பது செயற்கையான பணப் புழக்கத்தை ஏற்படுத்துகிறது; இந்த நுண் கடன் மூலம் பெரும்பான்மையான தன்னார்வக் குழுக்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் கொழுத்த இலாபத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறுகின்றன் மேலும் இந்நுண்கடன்கள், சமூக உணர்வு, அரசியல் விழிப்புணர்வு மற்றும் வாழ்வுரிமைப் பாதுகாப்பை அடியோடு அரித்து விடுகிறது; நுண்கடன் என்பது மாபெரும் சதி வலை (ஆiஉசழ டழயn ளை ய ஆயஉசழ வசயி)" என்கிறார்.

 

இன்னொருபுறம், பன்னாட்டு நிதி நிறுவனங்கள், பொது மற்றும் ஆயுள் காப்பீடு சேவை திட்டங்களை கிராமங்களில் விற்கவும் முனைந்துள்ளன. குறிப்பாக, ஐ.சி.ஐ.சி.ஐ. போன்ற தரகு பெரு முதலாளித்துவ நிறுவனங்கள் புதிதாக களத்தில் இறங்கியுள்ளன. இந்நிறுவனம் பயிர் மற்றும் கால்நடை, மழை போன்ற காப்பீடுகளில் இறங்கியுள்ளது. ஆந்திராவில் மெகபூப் நகர் மாவட்டத்தில் மழைக்கான காப்பீடுகளை விவசாய அமைப்புகளிடம் விற்று ஒத்திகை பார்த்துள்ளது.

 

விவசாயம் போண்டியாகி வரும் பின்னணியில், எண்ணற்ற விவசாயிகள் தற்கொலையைத் தீர்வாகக் கொண்டுள்ள சூழ்நிலையில், இந்நிறுவனங்கள் இருக்கும் மிச்ச மீதியையும் கொள்ளையடிக்கத் திட்டமிடுவதோடு ஒத்திகையும் பார்த்து வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் மட்டும் விவசாயிகள் மற்றும் இதர கிராம மக்கள் தங்கள் ஆயுட்காப்பீட்டுக்காக எல்.ஐ.சி.யிடம் ரூ. 1000 கோடி அளவுக்கு பிரிமியம் கட்டியுள்ளார்கள். அண்மைக்காலமாக சந்தையின் வீழ்ச்சியாலும் வறட்சியாலும் பிரிமியத்தைத் தொடர்ந்து கட்ட முடியவில்லை. வாடிக்கையாளர்கள் மரணத்தை தழுவிக் கொண்டிருக்கும் நேரத்தில், விதிமுறைகளை காட்டி, மக்கள் கட்டிய ரூ. 1000 கோடியையும் எல்.ஐ.சி. விழுங்கிக் கொண்டு விட்டது. அரசு சார்ந்த நிறுவனத்திடம் சிக்கியவர்களின் நிலைமை இப்படியிருக்கும் பொழுது, பன்னாட்டு நிறுவனங்களிடம் ஏதேனும் எதிர்பார்க்க முடியுமா?

 

பதினைந்து ஆண்டுகளாக தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவாக, விவசாயிகள் வாழ்வுரிமை இழந்து குற்றுயிருடன் உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இருக்கும் மிச்ச சொச்சங்களையும் கொள்ளையடிக்க கிராம வளர்ச்சி என்கிற போர்வையில் பிணந்தின்னிக் கழுகுகளாக தன்னார்வக் குழுக்கள், பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய தரகு முதலாளிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிராமங்களை வட்டமிட்டு கொண்டிருக்கின்றன.

 

செஞ்சுடர்