Tue04232024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் "எங்களை விபச்சாரத்திற்குத் தள்ளாதே!" : "இரவு விபச்சாரத்திற்குத் தள்ளாதே!" இரவு விடுதிகளில் நடனமாடும் பெண்களின் வேதனைக் குரல்

"எங்களை விபச்சாரத்திற்குத் தள்ளாதே!" : "இரவு விபச்சாரத்திற்குத் தள்ளாதே!" இரவு விடுதிகளில் நடனமாடும் பெண்களின் வேதனைக் குரல்

  • PDF

05_2005.jpgமகாராஷ்டிரத்தை ஆளும் காங்கிரசு கூட்டணி அரசுக்குத் திடீரென இளைஞர்கள் பற்றிய அக்கறை பொத்துக் கொண்டு பொங்கி வழியத் தொடங்கியிருக்கிறது. மும்பய் மாநகராட்சி எல்லை தவிர, அம்மாநிலத்தின் பிற பகுதிகளில் இயங்கி வரும் இரவு நேர நடன விடுதிகளைத் தடை செய்யப் போவதாக அறிவித்துள்ள அம்மாநில அரசு, ""இந்த விடுதிகள் இளைஞர்களின் மனதைக் கெடுப்பதோடு, நமது பண்பாட்டுக்கு ஆபத்தாகவும் இருக்கிறது'' என இத்தடைக்குக் காரணங்களை அடுக்கியிருக்கிறது.

 

இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும், இப்பிரச்சினை தடை செய்வதோடு முடிந்து விடுவதில்லையே! இரவு விடுதிகளில் நடனமாடி வரும் 75,000க்கும் மேற்பட்ட பெண்களின் பிழைப்பு பறிபோகும் நிலையில் அவர்கள், ""எங்களுக்கு மாற்று வேலை கொடு'' எனக் கோரி போராடத் தொடங்கியிருக்கிறார்கள். ""எங்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து கொடுக்காவிட்டால், நாங்கள் விபச்சாரத்திற்குள் தள்ளப்படுவோம்'' என அவர்கள் கூறுகிறார்கள்.

 

நடனமாடும் பெண்களைச் சமூகம் கீழ்த்தரமாக பார்ப்பதால், அவர்களுக்கு இந்த வேலை போனால், வேறு வேலை கிடைப்பது அவ்வளவு எளிதானதல்ல. அரசு அனுமதியுடன் நடத்தப்படும் மதுக்கடைகள் மூடப்படும்பொழுது கள்ளச் சாராயம் ஆறாய்ப் பெருகி ஓடுவதைப் போல, இவ்விடுதிகள் மூடப்படும்பொழுது விபச்சாரம் முன்னைவிடப் பன்மடங்கு பெருகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, தங்களின் எதிர்காலம் தற்போது இருப்பதைவிட மோசமானதாகப் போய் விடுமோ என இப்பெண்கள் அச்சப்படுவதில் நியாயம் உண்டு.

 

""இரவு விடுதிகளை ஒழுக்கக் கேட்டை பரப்பும் தொழில் எனத் தடை செய்யக் கிளம்பியுள்ள அரசு, மேட்டுக்குடி கும்பல் குடித்துவிட்டு ஆபாசமாக நடனமாடும் ஐந்து நட்சத்திர விடுதிகளைத் தடை செய்யுமா? இரவு விடுதிகளின் மூலம் வருடாவருடம் 200 கோடி ரூபாயை வருமானமாகப் பெற்ற அரசு, அந்தப் பணத்தையெல்லாம் பாவப் பணமாகக் கருதி எங்களிடம் திருப்பித் தர வேண்டாமா?'' என இப்பெண்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், இஞ்சி தின்ன குரங்கைப் போல முழிக்கிறது, அம்மாநில அரசு.

 

பெரும்பாலான விடுதிகளை போலீசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் பினாமி பெயரில் நடத்திவரும் பொழுது, நடனமாடும் இப்பெண்களை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதில் என்ன நியாயம் இருக்கிறது? ""ஆணுறையை அணிந்து கொண்டு விபச்சாரிகளிடம் செல்லுங்கள்; எய்ட்ஸ் பயமில்லாமல் வாழுங்கள்'' என இளைஞர்கள் கெட்டுப் போகக் குறுக்கு வழி சொல்லும் அரசிற்கு, நல்லொழுக்கம் பற்றிக் கவலைப்பட என்ன தகுதி இருக்கிறது? அரசாங்கம் முதலில் இப்பெண்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்து தரட்டும்; பிறகு வேண்டுமானால் கலாச்சாரம் பற்றிக் கவலைப்படட்டும்!

 

Last Updated on Monday, 12 October 2009 06:57