Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் இந்திய மக்களே, எச்சரிக்கை! : மீண்டும் வருகின்றது என்ரான்

இந்திய மக்களே, எச்சரிக்கை! : மீண்டும் வருகின்றது என்ரான்

  • PDF

05_2005.jpgமீண்டும் வருகின்றது என்ரான் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை வெய்து கொள்ளும் நாட்டில், மக்களின் வரிப் பணத்தில் இருந்து என்ரானின் அந்தியக் கடனை அடைக்கத் துடிக்கம் காங்கிரசு ஆட்சி

 

""என்ரான்'' என்ற பெயரை இந்திய மக்கள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தாராளமயத்தால் இந்தியாவிற்குக் கிடைக்கப் போகும் நன்மைகளின் குறியீடாக, என்ரான் இந்திய மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், என்ரானின் கதையோ, ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது என்பார்களே, அந்தப் பழமொழிக்கேற்ப அவலமாக முடிந்து போனது.

 

அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான என்ரான், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பித்த தபோல் மின் உற்பத்தி நிலையம் மிகப் பெரும் அந்நிய முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் என இந்திய ஆட்சியாளர்கள் பீற்றிக் கொண்டார்கள். ஆனால், என்ரான் இந்தியாவில் போட்ட 9,000 கோடி ரூபாய் முதலீட்டில் ஏறத்தாழ 40 சதவீதம் (3,600 கோடி ரூபாய்) இந்திய நாட்டு வங்கிகளிடமிருந்து கடனாகப் பெறப்பட்டது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதையாகத்தான், என்ரான் இந்தியாவில் தொழில் தொடங்கியது.

 

மேலும், என்ரான் தயாரிக்கும் மின்சாரம் முழுவதையும் மகாராஷ்டிரா மாநில மின்சார வாரியம் வாங்கிக் கொள்ளும்படி ஒப்பந்தம் போடப்பட்டு, அந்நிறுவனத்திற்கு உத்திரவாதமான சந்தை ஏற்படுத்தித் தரப்பட்டது. என்ரான் போட்ட "மூலதனத்திற்கு' 16 சதவீத இலாபம் கட்டாயம் கிடைக்கும்படி ஒப்புக் கொண்டு, மைய அரசு பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது. இதற்கு ஏற்ப, அந்நிறுவனம் தயாரித்த மின்சாரம், யூனிட் ஒன்றுக்கு ரூ. 7.00 என்ற விலையில் மகாராஷ்டிரா அரசின் தலையில் கட்டப்பட்டது. அதேசமயம், டாடா போன்ற தனியார் நிறுவனங்கள் யூனிட் ஒன்றுக்கு ரூ. 2.00 என்ற விலையில்தான் மின்சாரத்தைத் தயாரித்து, மகாராஷ்டிரா அரசிற்கு விற்று வந்தன. என்ரானின் இந்தக் கட்டணக் கொள்ளை ஒருபுறமிருக்க, திறன் கட்டணம் என்ற பெயரில் மாதாமாதம் 95 கோடி ரூபாயை மானியமாக மகாராஷ்டிரா அரசு என்ரானுக்குக் கொடுத்து வந்தது.

 

இந்தப் பகற்கொள்ளையின் ஒரு கட்டத்தில், 920 கோடி ரூபாய் வருமானம் பெற்று வந்த மகாராஷ்டிர மின்சார வாரியம், அதில் ஏறத்தாழ 80 சதவீதத்தை 725 கோடி ரூபாயை என்ரானுக்கு மின் கட்டணமாகவும், மானியமாகவும் கொடுக்க வேண்டிய நிலை வந்தபொழுது, அம்மின்சார வாரியமே திவாலாகிவிடும் அபாயத்தை எட்டியது. இந்த நிலையில்தான் மகாராஷ்டிரா அரசு என்ரானிடமிருந்து மின்சாரம் வாங்குவதில்லை என முடிவெடுத்தது. இதே சமயத்தில், என்ரான் அமெரிக்கப் பங்குச் சந்தையில் நடத்திய மோசடியின் காரணமாகத் திவாலாகி விட, என்ரானின் துணை நிறுவனமான தபோல் மின் உற்பத்தி நிலையம் இழுத்து மூடப்பட்டது.

 

""மம்மி ரிடர்ன்ஸ்'' என்ற திரைப்படக் கதையைப் போல, இப்பொழுது மீண்டும் என்ரானின் மின்சார நிறுவனத்திற்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மைய அரசு. என்ரான், தபோல் மின்சார நிலையத்தை அமைப்பதற்கு அந்நிய நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை முதலில் அடைப்பது; பிறகு, ஒரு 1,500 கோடி ரூபாயை மீண்டும் மூலதனமாகப் போட்டு, மூடிக் கிடக்கும் மின் நிலையத்தைத் திறந்து நடத்துவது என்ற திட்டம் இதற்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

 

எத்தனையோ பொதுத்துறை நிறுவனங்கள் போதிய மூலதனம் கிடைக்காமல், அரைகுறையாக இயங்கி வருகின்றன் அல்லது இழுத்து மூடப்பட்டுக் கிடக்கின்றன. அந்த அரசு நிறுவனங்களை மீண்டும் இயக்குவது பற்றி அக்கறை காட்டாத மைய அரசு, தனியார் நிறுவனமான என்ரானின் மீது திடீர் கரிசனம் காட்டும் பின்னணியைக் கேட்டால், காங்கிரசு கும்பலின் மீது காறி உமிழத்தான் தோன்றும்.

 

என்ரானுக்குக் கடன் கொடுத்த அந்நிய நிதி நிறுவனங்கள், அசலையும், வட்டியையும் கேட்டு மைய அரசை நிர்பந்தித்து வருகின்றன. தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் கடைசி நாட்களில், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பிரதமர் வாஜ்பாயிடம் என்ரானின் அந்நியக் கடன் பிரச்சினை குறித்துப் பேசியிருக்கிறார். வாஜ்பாயால் செய்ய முடியாமல் போனதை, காங்கிரசு ஆட்சி நிறைவேற்றத் துடிக்கிறது.

 

நியாயமாகப் பார்த்தால், மைய அரசு கடன் கொடுத்த நிறுவனங்களிடம், ""உங்க கடனை என்ரான் முதலாளியின் கூட்டாளி ஜார்ஜ் புஷ்ஷிடம் கேட்டு வாங்கிக் கொள்'' என்று கூறியிருக்க வேண்டும்; என்ரானுக்கு கடன் கொடுத்த இந்திய அரசு வங்கிகளின் அசலையும், வட்டியையும் திருப்பிக் கொடுக்கும்படி அமெரிக்க அரசிற்கு நிர்பந்தம் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், காங்கிரசு கும்பலோ ஊரான் கடனை நம் தலையில் சுமத்தப் பார்க்கிறது.

 

இந்திய அரசிற்கும், என்ரானுக்குக் கடன் கொடுத்த அந்நிய நாட்டு வங்கிகளுக்கும் இடையே சிங்கப்பூரில் கடந்த சனவரி மாதம் நடந்த இரகசிய பேச்சுவார்த்தைகளின்படி, இந்த வங்கிகளுக்குத் தர வேண்டிய 1,150 கோடி ரூபாய் அசலை ஏப்ரல் மாத இறுதிக்குள் திருப்பித் தருவதாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

""சர்வதேசக் கூட்டுறவுக்கான ஜப்பானிய வங்கி'' உள்ளிட்ட சில அந்நிய நிதி நிறுவனங்களுக்குத் தர வேண்டிய 2,250 கோடி ரூபாய் கடனை டிசம்பர் முதல் தேதிக்குள் அடைத்துவிட இந்திய அரசு சம்மதித்திருக்கிறது.

 

அமெரிக்க அரசுக்குச் சொந்தமான ""ஓ.பி.ஐ.சி.'' என்ற நிதி நிறுவனம் என்ரானுக்குக் கொடுத்துள்ள 690 கோடி ரூபாய் கடனில், 103.5 கோடி ரூபாயை ஜூலை மாத முதல் வாரத்திற்குள் கொடுப்பதாகவும், மீதிக் கடனை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அடைப்பதாகவும் இந்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

 

இந்தக் கடன்கள் ஒருபுறமிருக்க தபோல் மின் நிலையத்தின் பங்குகளை இப்பொழுது ஜி.இ. மற்றும் பெக்டேல் என்ற இரு அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களும், ""மகாராஷ்டிரா மாநில அரசு தபோல் மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வாங்கும் ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததால், தங்களுக்கு நட்ட ஈடாக 26,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும்'' எனக் கோரி இலண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இந்திய அரசுக்கும் மார்ச் 17 ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் நடந்த பேச்சு வார்த்தையில் 1,750 கோடி ரூபாய் வரை நட்டஈடாகத் தர இந்திய அரசு சம்மதித்துள்ளது.

 

மொத்தமாகப் பார்த்தால், திவாலாகிப் போன என்ரானுக்காக இந்திய அரசு 5,250 கோடி ரூபாயை அந்நிய நிறுவனங்களுக்குத் தூக்கிக் கொடுக்கப் போகிறது. ஏற்கெனவே பற்றாக்குறை பல்லவி பாடிக் கொண்டிருக்கும் ப.சிதம்பரம், இவ்வளவு பெரிய தொகையை எங்கிருந்து சுடப் போகிறார் தெரியுமா? மைய அரசிடம் உள்ள தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்தும், ஆயுள் காப்பீட்டுக் கழக சேமிப்பு நிதியில் இருந்தும் பணத்தை எடுக்கத் திட்டம் போட்டுள்ளனர்.

 

தொழிலாளர் வைப்பு நிதிச் சட்டத்தின்படி, அந்நிதியை அரசுத்துறை ஃ பொதுத்துறை நிறுவனங்களில்தான் முதலீடு செய்ய முடியும்; என்ரான் போன்ற தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாது. அதனால் தொழிலாளர் வைப்பு நிதியைத் தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது, காங்கிரசு ஆட்சி.

 

தொழிலாளர் வைப்பு நிதிக்கு வழங்கி வரும் வட்டியை உயர்த்துவதை எதிர்த்து ஆயிரம் நொண்டிக் காரணங்களை அடுக்கிய காங்கிரசு ஆட்சி, முதலாளிகளுக்காக சட்டத்தையே மாற்றுகிறது.

 

இது ஒருபுறமிருக்க, தேசிய அனல் மின் நிலைய கார்ப்பரேசன், இந்திய இயற்கை எரிவாயு ஆணையம், பொதுத்துறை வங்கிகள் இணைந்து, தபோல் மின் நிலையத்தை மீண்டும் நடத்துவதற்கு 1,500 கோடி ரூபாய் மூலதனம் போட வேண்டும் என மைய அரசு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது. தபோல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கிவிட்டால், போட்ட பணத்தை சீக்கிரமே எடுத்துவிடலாம் என நப் பாசை காட்டுகிறது, காங்கிரசு ஆட்சி.

 

ஆனால், இந்தியாவில் என்ரானின் "தொழில் திறமையை' ஆய்வு செய்துள்ள நிபுணர்களோ, தபோல் மின் நிலையத்தில் பணத்தைப் போடுவதும்; பணத்தைக் கிணற்றுக்குள் போடுவதும் ஒன்றுதான் என்கிறார்கள். தபோல் மின் நிலையத்தை இயக்குவது என்பது யானையைக் கட்டித் தீனி போடுவதற்குச் சமமானது என்பதால்தான், மூடிக் கிடக்கும் இம்மின்நிலையத்தை எந்தவொரு தனியார் முதலாளியும் வாங்கி இயக்க முன் வராமல், அதை நைச்சியமாக அரசின் தலையில் கட்டப் பார்க்கிறார்கள் என இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

 

என்ரானின் அந்நியக் கடனை அடைத்துவிட்டு, தபோல் மின் நிலையத்தை மீண்டும் இயக்குவதற்காக ஒரு கமிட்டியை அமைத்திருக்கிறது, மைய அரசு. இக்கமிட்டியில் திட்டக் கமிசனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவும், விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரும் இடம் பெற்றுள்ளனர்.

 

பல்வேறு அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, என்ரான் தபோல் மின் நிலையத்தை அமைக்கவும்; அதற்குப் பல்வேறு சலுகைகளை வாங்கித் தரவும் தரகனாகச் செயல்பட்டவர் சரத்பவார்.

 

மைய அரசின் கீழுள்ள மின்சார ஆணையம், தபோல் மின் நிலையம் மின்சார உற்பத்தியைத் தொடங்குவதற்கு அனுமதி கொடுக்க மறுத்த பொழுது, அம்முடிவுக்கு எதிராக வரிந்துக் கட்டிக் கொண்டு வேலை செய்தவர், உலக வங்கி கைக்கூலியான மாண்டேக் சிங் அலுவாலியா.

 

இந்த கமிட்டியில் நேரடியாகப் பங்கு பெறாமல், மறைமுகமாக இக்கமிட்டியை இயக்கிக் கொண்டிருக்கிறார், நிதியமைச்சர் ப.சிதம்பரம். அவர் திவாலாகிப் போன என்ரானின் முன்னாள் வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தனியார்மயம் தாராளமயத்தின் பின், அரசிடம் உள்ள மக்களின் வரிப்பணத்தை, வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பை தனியார் முதலாளிகள் சூறையாடுவது அடுத்தடுத்து நடக்கத் தொடங்கியுள்ளன. அர்சத் மேத்தா தலைமையில் நடந்த பங்குச் சந்தை ஊழலில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான பொதுப் பணம் சூறையாடப்பட்டது.

 

பங்குச் சந்தை மோசடியால் யூனிட் டிரஸ்ட் நிறுவனம் கவிழ்ந்த பொழுது, அந்நிறுவனம் திவாலாவதைத் தடுக்க, மக்களின் வரிப் பணத்தில் இருந்து 15,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

 

தரகு முதலாளி டாடா, ""வீ.எஸ்.என்.எல்.'' நிறுவனத்தை வாங்கி, அந்நிறுவனத்தில் இருந்த 1,200 கோடி ரூபாய்க்கும் மேலான சேமிப்பை, தனது சொத்துக் கணக்கில் சேர்த்துக் கொண்டார்.

 

ரிலையன்ஸ் நிறுவனம், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை ஏமாற்றி, 1000 கோடி ரூபாய்க்கு மேலாகச் சுருட்டிக் கொண்டது.

 

ஏற்கெனவே 3,600 கோடி ரூபாய் வங்கிப் பணத்தை விழுங்கிவிட்ட என்ரான், இப்பொழுது 7,000 கோடி ரூபாயைச் சுருட்டப் பார்க்கிறது. பொதுப் பணத்தை, பொதுச் சொத்தைச் சட்டபூர்வமாகச் சூறையாடுவதன் மறுபெயர்தான் தனியார்மயம் தாராளமயம் என்பதற்கு இன்னுமா ஆதாரங்கள் வேண்டும்?

 

· ரஹீம்

 

Last Updated on Sunday, 18 May 2008 20:03