Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பஞ்சைப் பராரிகளின் பேரெச்சி - ஏகாதிபத்திய வாயிலில் இடிமுழக்கம்

பஞ்சைப் பராரிகளின் பேரெச்சி - ஏகாதிபத்திய வாயிலில் இடிமுழக்கம்

  • PDF

07_2005.jpg பொலிவியாவில் அண்மையில் நடந்த மக்கள் பேரெழுச்சியும் அதைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் அமெரிக்காவுக்குத் தப்பியோடியிருப்பதும் தென்னமெரிக்கக் கண்டத்தையே உலுக்குகிறது. அக்கண்டத்து நாடுகளின் பலதரப்பட்ட மக்கள் விரோத ஆட்சியாளர்கள் பொலிவிய பாணியில் இங்கேயும் மக்கள் போராட்டங்கள் வெடித்துவிடுமோ என்று பீதியில் நடுநடுங்குகிறார்கள். ஏனென்றால், கடந்த ஈராண்டுகளில் இரண்டு முறை பொலிவிய நாட்டின் அதிபர்கள், மக்கள் போராட்டங்களால் பதவியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மேலும், பொலிவியாவில் நடக்கும் போராட்டங்கள், அந்நாட்டிற்கே உரித்தான உள்நாட்டு

 விவகாரமல்ல் தென்னமெரிக்கக் கண்டம் முழுவதும் பற்றிப் படர்ந்து வரும் புரட்சிகர மக்கள் திரள் போராட்டங்களின் ஓர் அங்கம். தென்னமெரிக்காவின் மேற்கு பகுதியில் பெரு, சிலி ஆகிய நாடுகளை அடுத்துள்ள ஏழை நாடுதான் பொலிவியா. ஐந்தாண்டுகளுக்கு முன்பு அந்நாட்டின் ஆட்சியாளர்கள் தண்ணீரைத் தனியார்மயமாக்கியதை எதிர்த்து, கொச்சபம்பா எனும் நகரில் உழைக்கும் மக்கள் ஆயுதமேந்திப் போராடி பெக்டெல் எனும் அமெரிக்க தண்ணீர் கம்பெனியை விரட்டியடித்து, இப்போராட்டத்தால் உலகெங்கும் பிரபலமடைந்த நாடுதான் பொலிவியா. தண்ணீரைத் தனியார்மயமாக்கும் கொள்கைக்கு எதிராக மட்டுமின்றி, இயற்கை வளமும் தாது வளமும் எரிவாயு வளமும் நிறைந்த அந்நாட்டை ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியாக்கும் கொள்கைக்கு எதிராகவும் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். தாங்கள் தேர்ந்தெடுத்த அதிபர்கள், வாக்குறுதியை மீறிச் செயல்பட்டால், அடுத்த தேர்தல்வரைக் காத்திருப்போம் என்று அவர்கள் அமைதியாக இருப்பதில்லை. நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்தும் கொள்கையை எந்த அதிபர் பின்பற்றத் தொடங்கினாலும், உடனே பொலிவிய மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி, துரோக ஆட்சியாளர்களைத் தூக்கியெறிகிறார்கள்.

 

பொலிவியா தென்னமெரிக்கக் கண்டத்தில் வளமான இயற்கை மூலவளங்களைக் கொண்ட நாடு. இக்கண்டத்தில் வெனிசுலாவுக்கு அடுத்து இயற்கை எரிவாயு வளத்தைக் கொண்டுள்ள நாடு. இதுதவிர நிலக்கரி செம்பு, வெள்ளி, மங்கனீசு, தகரம் முதலான கனிம வளங்களைக் கொண்டுள்ள நாடு. இருப்பினும் பொலிவியாவின் 70மூக்கும் மேலாள மக்கள் வறுமையிலும் அரைப்பட்டினியிலும் பரிதவிக்கின்றனர். கிராமப்புறங்களில் மின்சாரம், குடிநீர், சுகாதாரம் மருத்துவம் போன்ற எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி மக்கள் ஊழல்கின்றனர். பொலிவிய விவசாயிகளுக்கு கோகோ பயிர் சாகுபடி பாரம்பரியத் தொழில். கோகோவிலிருந்து கொøகன் என்ற போதை மருந்து தயாரிக்கப்படுவதாலும், அமெரிக்காவில் அதன் புழக்கம் பெருகி விட்டதாலும் அமெரிக்காவின் கட்டளைப்படி பொலிவியாவில் கோகோ பயிர் சாகுபடிக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் வாழ்விழந்து நிற்கிறார்கள். ஏகாதிபத்திய வல்லரசுகளால் மறுகாலனியாக்கப்பட்டு தனியார்மயமும் தாராளமயமும் பொலிவியாவில் தீவிரமாக்கப்பட்டதன் விளைவாக, நகர்ப்புறங்களில் தொழிலாளர்கள் வேலையிழந்து வாழ்விழந்து பரிதவிக்கிறார்கள்.

 

இருப்பினும், தனியார்மயம் தாராளமயம் எனும் நாட்டை அடிமைப்படுத்தும் நாசகாரக் கொள்கைகளுக்கு எதிராக இந்நாட்டு பஞ்சைப் பராரிகள் தொடர்ந்து விடாப்பிடியாகப் போராடி வருகிறார்கள். உலக வங்கியின் கட்டளைப்படி பொலிவிய சர்வாதிகார ஆட்சியாளர்கள் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான கொச்சபம்பாவின் குடிநீர் வழங்கலை 1999இல் பெக்டெல் என்ற அமெரிக்கக் கம்பெனிக்கு கையளித்ததை எதிர்த்தும், ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும் பொலிவிய மக்கள் நடத்திய போராட்டம் வீரம் செறிந்தது. தண்ணீரைத் தனியார்மயமாக்கி தமது வாழ்வுரிமையைப் பறிக்கும் ஆட்சியாளர்களை எதிர்த்து 2000வது ஆண்டில் பெரும்படையாகத் திரண்டெழுந்த விவசாயிகள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு முடக்கியதோடு, மாணவர்இளைஞர்களோடு இணைந்து தேசிய நெடுஞ்சாலைகளில் தடையரண்களை எழுப்பி போக்குவரத்தை முற்றாகத் துண்டித்து பல வாரங்கள் தொடர்ந்து போராடினர். ஆட்சியாளர்கள் இராணுவத்தை ஏவி அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டபோதிலும் மக்களின் போராட்ட உறுதியைக் குலைக்க முடியவில்லை. தண்ணீரை ஏகபோகமாக்கிக் கொண்டு கொள்ளையடித்து வந்த அமெரிக்க பெக்டெல் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்து, அந்நிறுவனத்தை நாட்டை விட்டே வெளியேற்றும் வரை அம்மக்களின் போராட்டம் ஓயவில்லை.

 

தண்ணீர் தனியார்மயமாக்கலுக்கு எதிரான இப்போராட்டத்தில் பொலிவிய மக்கள் பெற்ற இம்முதற்கட்ட வெற்றியானது, தென்னமெரிக்கக் கண்டம் முழுவதும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சியது. பொலிவியாவைப் போலவே, ஈக்வடார், சிலி, பிரேசில், அர்ஜெண்டினா முதலான நாடுகளில் தண்ணீரைத் தனியார்மயமாக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துப் பரவின.

 

பொலிவிய மக்களின் போராட்டம் நாட்டைச் சூறையாடிய பெக்டேல் நிறுவனத்தை விரட்டியடிப்பதோடு நின்றுவிடவில்லை. நாட்டின் மூலவளங்களைக் கொள்ளையடித்து வரும் அனைத்து அன்னிய ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு எதிரான போராட்டமாக அது விரிவடைந்தது. ""19ஆம் நூற்றாண்டில் வெள்ளி மற்றும் குவானாவை அவர்கள் கொள்ளையடித்தார்கள். 20ஆம் நூற்றாண்டில் நிலக்கரியையும் தகரத்தையும் சூறையாடினார்கள். இப்போது எமது இயற்கை எரிவாயு வளத்தையும் உறிஞ்சிக் கொழுக்கிறார்கள். இனியும் நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம்'' என்று பொலிவிய மக்கள் குமுறுகிறார்கள்.

 

பொலிவியாவின் இயற்கை எரிவாயு பல்லாயிரம் கோடி டாலர் மதிப்புடையது. இந்த எரிவாயுவை உறிஞ்சி எடுத்து சிலி நாட்டின் வழியே அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் திட்டத்தை அப்போதைய பொலிவிய அதிபரான கான்சலோ லோசடா அறிவித்தார். ""கோனி'' என்று செல்லமாக அழைக்கப்பட்ட இந்த அதிபர், இதன் மூலம் பொலிவியா கொழுத்த ஆதாயமடைந்து சொர்க்கபுரியாக மாறிவிடும் என்று நம்பச் சொன்னார். ஆனால், அவரது எரிவாயு ஏற்றுமதி திட்டத்தால் பொலிவியாவுக்கு மொத்த மதிப்பில் 18மூ அளவுக்குத்தான் வருவாய் கிடைத்தது. அதையும் அதிகாரவர்க்க இராணுவக் கும்பல்களும் மேட்டுக்குடியினரும் விழுங்கியது போக, பஞ்சைப் பராரிகளான பொலிவிய மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. இதுவும் போதாதென்று அரசுத்துறை கட்டுப்பாட்டிலிருந்த எரிவாயு வளத்தை பிரிட்டிஷ்கேஸ், எக்சான்மொபில், ஸ்பெயின் நாட்டின் ரெப்சோல் ஆகிய பன்னாட்டு எண்ணெய்எரிவாயு ஏகபோக நிறுவனங்களிடம் அதிபர் கோனி 2003இல் தாரை வார்த்தார்.

 

நாட்டை மீண்டும் காலனியாக்கும் இத்தனியார்மயக் கொள்ளையை எதிர்த்தும் அமெரிக்கக் கைக்கூலி அதிபர் கோனியைப் பதவி விலகக் கோரியும் பொலிவிய மக்கள் ஆர்த்தெழுந்தார்கள். 2003ஆம் ஆண்டின் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் தொழிலாளர்களும் விவசாயிகளும் மாணவர்களும் இளைஞர்களும் ஓரணியில் திரண்டு, எரிவாயு வளத்தை நாட்டுடமையாக்கக் கோரி நாடு தழுவிய போராட்டத்தில் குதித்தனர். இது ""எரிவாயு யுத்தம்'' என்றழைக்கப்படுகிறது. அதிபர் கோனி இராணுவத்தை ஏவி போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 70க்கும் மேற்பட்டோரைக் கொன்றொழித்தார். இருப்பினும் பொலிவிய மக்களின் போராட்டப் பெருநெருப்பை இராணுவ அடக்குமுறையால் தணிக்க முடியவில்லை. அடக்குமுறையை எதிர்த்து அக்.14ஆம் தேதியன்று தலைநகர் லாபாசை 50,000க்கும் மேற்பட்ட விவசாயிகளும் பழங்குடியின மக்களும் முற்றுகையிட்டு, கொலைகார அதிபரை உடனடி பதவி விலகக் கோரி போராடினர். அதிபர் மாளிகையை மக்கள் முற்றுகையிட்டதால் பீதியடைந்த அதிபர் அடுத்த ஒரே வாரத்திற்குள் பதவி விலகி தனி விமானத்தில் அமெரிக்காவுக்குத் தப்பியோடினார்.

 

வேறு வழியின்றி துணை அதிபரான கார்லோஸ் மேசா அதிபராகப் பொறுப்பேற்றார். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றப் பாடுபடப் போவதாகச் சவடால் அடித்த இவர் நரித்தனத்தில் நரசிம்மராவின் உடன்பிறவா சகோதரர். எரிவாயு வளத்தை நாட்டுடமையாக்க முன்வராத அதிபர் மேசா, எரிவாயுவை ஏற்றுமதி செய்வதா, வேண்டாமா என்று நாட்டு மக்களிடம் கருத்து கணிப்பு தேர்தல் நடத்த உத்தரவிட்டார். எரிவாயு ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வறுமை ஒழிப்பு சமூக நலத் திட்டங்களை நிறைவேற்றப் போவதாகப் பசப்பினார். கருத்துக் கணிப்பு தேர்தலில் வாக்களிக்காவிட்டால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.

 

இம்மோசடியை அம்பலப்படுத்திப் போராடாமல் ஓட்டுக் கட்சிகள் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டதால், ஜூலை 2004இல் நடந்த கருத்துக் கணிப்புத் தேர்தலில் ஆகப் பெரும்பான்மையான மக்கள் எரிவாயு ஏற்றுமதியை ஆதரித்து வாக்களித்தனர். இருப்பினும், ஏற்றுமதி செய்யப்படும் எரிவாயு மீது எவ்வளவு வரி விதிப்பது, எவ்வளவு லாபம் கோருவது என்பதில் ஓட்டுக் கட்சிகளிடையே ஒத்த கருத்து இல்லாததாலும் எரிவாயு திட்டங்களில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிதி நிறுவனங்களின் நிர்பந்தத்தாலும் நாடாளுமன்றம் எந்த முடிவும் எடுக்காமல் இழுத்தடித்தது. இந்த இழுபறி நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு பன்னாட்டு எரிவாயுக் கம்பெனிகள் தமது கொள்ளையைத் தொடர்ந்தன.

 

எரிவாயு வளத்தை நாட்டுடமையாக்காமல் கண்ணாமூச்சி ஆடும் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்து கொண்ட பொலிவிய மக்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து போராட்டங்களில் இறங்கினர். எரிவாயு வயல்களை நாட்டுடமையாக்கக் கோரி பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் என ""இரண்டாவது எரிவாயு யுத்தம்'' தொடங்கியது. விவசாயிகளும் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் ஒன்றிணைந்து சாலைகளில் தடுப்பரண்களை நிறுவி முற்றுகையிட்டதோடு, ஒருசில ஏகாதிபத்திய எரிவாயு கம்பெனிகளையும் கைப்பற்றி உற்பத்தியை முடக்கினர். இதனால், பொலிவியாவுக்குக் கடன் கொடுத்துள்ள ஏகாதிபத்திய நிதி நிறுவனங்கள், பொலிவியாவின் வர்த்தகத்தை முடக்கி தண்டிக்கப் போவதாக எச்சரித்ததோடு, உலக வர்த்தகக் கழகத்தில் வழக்குத் தொடரப் போவதாக அச்சுறுத்தின.

 

பீதியடைந்த அதிபர், ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று ஒருபுறம் அறிவித்துவிட்டு, மறுபுறம் மக்கள் போராட்டங்களைச் சாந்தப்படுத்த அன்னிய எரிவாயு நிறுவனங்கள் மீது சற்றே கூடுதலாக வரிவிதிக்கும் புதிய சட்டத்தை மே 17ஆம் நாளன்று பிறப்பித்தார். ""நாங்கள் பல நூற்றாண்டுகளாகச் சூறையாடப்பட்டோம்; வஞ்சிக்கப்பட்டோம். மீண்டும் நாங்கள் சூறையாடப்பட அனுமதிக்க மாட்டோம். எரிவாயு வளத்தை நாட்டுடமையாக்காத எந்தச் சட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்'' என்று இறுதி எச்சரிக்கை விடுத்த பொலிவிய மக்கள் இம்மோசடி சட்டத்தை எதிர்த்தும், துரோக அதிபரை பதவி விலகக் கோரியும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். மே 20ஆம் நாளன்று எல் அல்டோ நகரிலிருந்து தலைநகர் லாபாசை நோக்கி ஒரு லட்சம் பேர் பேரணியாகத் திரண்டு எரிவாயு வளத்தை நாட்டுடமையாக்கக் கோரி போராட்டத்தைத் தொடர்ந்தனர். தொழிலாளர்களும் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். மே 24ஆம் நாளன்று சுரங்கத் தொழிலாளர்களும் பழங்குடியின விவசாயிகளும் அணிதிரண்டு கொச்சபம்பா நகரிலிருந்து தலைநகர் லாபாஸ் வரை 190 கி.மீ. தூரத்துக்கு நீண்ட பேரணி நடத்தி தலைநகரை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சாலை மறியல்களும், அரசு அலுவலங்கள் முற்றுகையிடப்படுவதும் பற்றிப் படர்ந்தன.

 

மக்களின் பேரெழுச்சியைச் சாந்தப்படுத்த, புதியதொரு தேசிய அரசியல் நிர்ணய சபையை விரைவில் நிறுவப் போவதாகவும் அது வகுத்தளிக்கும் சட்டங்களின்படி இனி நாட்டை நிர்வகிக்கலாம் என்றும் அதிபர் மேசா பசப்பிப் பார்த்தார். எரிவாயு வளத்தை நாட்டுடமையாக்காமல் எந்த சமரசத்தையும் ஏற்க முடியாது என்று பொலிவிய மக்கள் தமது உறுதியான போராட்டங்களின் மூலம் பதிலடி கொடுத்தனர். மக்களின் போராட்டப் புயலை எதிர்கொள்ள முடியாமல் அதிபர் மேசா கடந்த ஜூன் 6ஆம் நாளன்று பதவி விலகி ஹெலிகாப்டரில் தப்பியோடினார்.

 

புயலடித்து ஓய்ந்தது போல் மக்களின் ஆத்திரம் சற்றே தணிந்திருக்கிறது. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி, இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்று விரைவில் தேர்தல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். அடுத்தது என்ன என்ற பீதி ஓட்டுக் கட்சிகளையும் ஏகாதிபத்தியவாதிகளையும் பிடித்தாட்டிக் கொண்டிருக்கிறது.

 

பொலிவியா மட்டுமல்ல, தென்னமெரிக்காவிலுள்ள ஈக்வடார் நாட்டின் அதிபரான லூசியோ கூடியர்ஸ், கடந்த ஏப்ரல் 20ஆம் நாளன்று மக்களின் போராட்டங்களைக் கண்டு அஞ்சி பதவி விலகி ஓடியுள்ளார். அவரது மாளிகையை முற்றுகையிட்டு போராடிய பஞ்சைப் பராரிகள் தன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்று பீதியில் உளறிய அவர், அம்மாளிகையின் மேல்தளத்தில் தயாராக இருந்த ஹெலிகாப்டரில் தப்பியோடியுள்ளார்.

 

ஈக்வடாரில் இப்படி நடப்பது முதன்முறையல்ல. இதற்கு முந்தைய இரு அதிபர்களும் இப்படித்தான் மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சி தப்பியோடியுள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் அனைவருமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். ஆனால், அவர்கள் பின்பற்றிய தனியார்மயம் தாராளமயம் எனும் கேடுகெட்ட கொள்கையே மக்களைச் சீற்றங்கொள்ள செய்து அவர்களை விரட்டியடித்துள்ளது. இதேபோல, அர்ஜெண்டினாவின் அதிபரான டி லா ருவா, அவரது மாளிகையை முற்றுகையிட்ட மக்களின் பேரெழுச்சியைக் கண்டு அஞ்சி டிசம்பர் 2001இல் பதவி விலகி ஹெலிகாப்டரில் தப்பியோடினார். இன்னும் பெரு, ஹெய்தி முதலான தென்னமெரிக்க நாடுகளிலும் அதிபர்கள் பதவி விலகி தப்பியோடியுள்ளனர்.

 

முன்பெல்லாம், இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு எப்போது நடக்குமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த தென்னமெரிக்க நாடுகளின் அதிபர்கள், இப்போது மக்கள் பேரெழுச்சி எப்போது வெடிக்குமோ என்று அஞ்சி நடுங்குகிறார்கள். துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் கண்டு அஞ்சிய மக்கள் விரோத ஆட்சியாளர்கள், இப்போது பஞ்சைப் பராரிகள் காலிப் பானைகளுடன் தெருக்களில் ஒலியெழுப்பிக் கொண்டு ஊர்வலமாக வருவதைக் கண்டு அஞ்சுகிறார்கள். தமது மாளிகையில் எப்போதும் தயாராக ஹெலிகாப்டரை வைத்துக் கொள்கிறார்கள்.

 

பொலிவியா மட்டுமின்றி, தென்னமெரிக்கக் கண்டம் முழுவதும் அமெரிக்க எதிர்ப்பும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் மக்கள் போராட்டங்களில் கனன்று கொண்டிருக்கிறது. அமெரிக்கக் கைக்கூலி ஆளும் வர்க்கம் பிளவுபட்டு தத்தளிக்கிறது. தொழிலாளர்களும் விவசாயிகளும் இளைஞர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் ஓரணியாகத் திரண்டு போராட்டக் களத்தில் நிற்கின்றனர்.

 

பொலிவியாவை மட்டுமல்ல் ஏகாதிபத்திய தளையிலிருந்து நாட்டை விடுவிக்கும் புரட்சிக்குக் குறைவான எத்தகையதொரு ஆட்சி மாற்றமும் தென்னமெரிக்க நாடுகளின் மக்களைச் சாந்தப்படுத்த முடியாது. பொலிவியாவும் தென்னமெரிக்க நாடுகளும் புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியொன்றின் தலைமைக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

 

மனோகரன்