Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பார்ப்பன சேவையுடன் பிழைப்புவாதம்

பார்ப்பன சேவையுடன் பிழைப்புவாதம்

  • PDF

07_2005.jpgதலித்திய சீரழிவின் புதிய பரிமாணங்கள் ஆடுகள் ஒன்றுசேர்ந்து ஓநாய்களுக்கு விழா நடத்தி கூட்டணி கட்டியதுண்டா? தாழ்த்தப்பட்டோர் ஒன்றுதிரண்டு பார்ப்பனர்களுக்கு விழா நடத்தியதுண்டா? அதிசயம்; ஆனால் உண்மை. உ.பி. மாநில வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத புதுமை. "சரித்திரம்' படைத்துக் கொண்டிருக்கிறார், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான செல்வி மாயாவதி!

 

"ஒடுக்கப்பட்ட' சாதியினரான பார்ப்பனர்களைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் மாநிலமெங்கும் 22 வட்டார மாநாடுகளை நடத்திய மாயாவதி, கடந்த ஜூலை 9ஆம் நாளன்று லக்னோ நகரில் மிகப் பெரிய பார்ப்பன மாநில மாநாட்டை நடத்தியுள்ளார். அம்பேத்கரின் புகழ்பாடி ""ஜெய்பீம்'' என்று முழங்கி வந்த தாழ்த்தப்பட்டோர், இம்மாநாட்டுப் பேரணியில் ""ஜெய் பரசுராம்'' என்று முழங்கினர். இம்மாநாட்டில் பார்ப்பனர்கள், பரசுராமனின் நினைவாக வெள்ளிக் கோடாரியை மாயாவதிக்குப் பரிசளித்து கௌரவித்தனர்.

 

இந்தப் பரசுராமன் என்ற பார்ப்பனர், சத்தியர்களைக் கோடரியால் தாக்கி அழித்து பார்ப்பன சாதியினரைக் காத்தார் என்பது புராணக் கதை. 21 இனக் குழுக்களைச் சேர்ந்த சத்திரியர்களை அழித்து, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டியவன்தான் பரசுராமன் எனக் கூறப்படுகிறது. ஏடறிந்த வரலாற்றில் புஷ்யமித்திர சுங்கன் என்ற மன்னன் பார்ப்பன ஆதிக்கத்தின் சின்னமாகக் கருதப்படுவதைப் போல, புராண காலத்தின் பார்ப்பன ஆதிக்கத்தின் சின்னமாக கருதப்படுபவன்தான் பரசுராமன். புராண காலத்தில், பரசுராமன் கோடாரியை ஏந்தி சத்திரியர்களை அழித்ததைப் போலவே, தற்காலத்தில் தலித் சகோதரி மாயாவதி சத்திரிய ஆதிக்கத்தை அழித்து, முழுமையான பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, பார்ப்பனர்கள் இந்தத் தலித் குடிகெடுக்கும் கோடாரிக் கொம்பிற்கு (மாயாவதிக்கு) வெள்ளிக் கோடாரியை நினைவுப் பரிசாக அளித்துள்ளனர்.

 

வேத மந்திரங்கள் முழங்க பார்ப்பனர்கள் இம்மாநாட்டில் தனக்களித்த வரவேற்பைக் கண்டு பூரித்துப் போன மாயாவதி, ""எங்களது தேர்தல் சின்னமாகிய யானை, பார்ப்பனர்களின் முழுமுதற் கடவுளான கணேஷ்இன் அவதாரம். எங்கள் கட்சியை பார்ப்பனர்களுக்கும் மேல்சாதியினருக்கும் எதிரான கட்சி என்று சிலர் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். எமது நடைமுறையே இந்த அவதூறுகளை வீழ்த்திவிடும். இனிமேலும் பார்ப்பனர்கள் இதர அரசியல் கட்சிகளை நம்பி ஏமாற மாட்டார்கள். பார்ப்பனர் தலித் கூட்டணியானது உ.பி. மாநிலத்தில் புதிய மாற்றங்களையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நல்வாழ்வையும் கொண்டு வரும்'' என்று இம்மாநாட்டில் முழங்கினார்.

 

""வடக்கே ஒரு விடிவெள்ளி'', ""தாழ்த்தப்பட்ட மக்களின் புரட்சித் தலைவி'' என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்படும் மாயாவதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை, ""திலக், தராஜூ, தல்வார் ஆகியவற்றைச் செருப்பால் அடிப்போம்'' என்று மேடைகளில் முழங்கி வந்தவர். திலக் நெற்றியில் பொட்டு வைக்கும் பார்ப்பனரையும், தராஜூ பனியா எனும் வணிக சாதியினரையும், தல்வார் தலைப்பாகை அணியும் ராஜபுத்திர சாதியினரையும் செருப்பால் (தாழ்த்தப்பட்டோரில் ஒரு பிரிவினரது தொழில்) அடிப்போம் என்று முழங்கி வந்தவர்தான், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவியான மாயாவதி. ஆதிக்கசாதி இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக எப்போதும் மேடைகளில் பேசி வந்தவர்; அம்பேத்கரையும் பெரியாரையும் தமது வழிகாட்டிகள் என்று போற்றியவர்.

 

இந்தக் கொள்கையும் லட்சியமும் வீர வசனங்களும் ஓட்டுப் பொறுக்கி அரசியல் களத்தில் காலிப் பெருங்காய டப்பாவாகி விட்டது. எந்தக் கட்சியை எதிர்த்து அரசியல் நடத்தி வந்தாரோ அந்தக் கட்சியுடன், 1997ஆம் ஆண்டில் எந்தக் கட்சி தனது முதுகில் குத்தி ஆட்சியைக் கவிழ்த்ததோ அந்தக் கட்சியுடன் அதே பாரதிய ஜனதா கட்சியுடன் 2002 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதிய கூட்டணி கட்டிக் கொண்டு உ.பி. முதல்வராகி, அரசியல் விபச்சாரத்திலும் பிழைப்புவாதத்திலும் தனி முத்திரை பதித்தார், மாயாவதி.

 

""தலித் பிரச்சினையை தலித் மக்களால் மட்டுமே உணர முடியும்; தலித்துகளுக்கு தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும்; தலித்துகளே, பிற கட்சிகளில் சேராதீர்கள்; பிற ஆதிக்க சாதியினரை எமது கட்சியில் சேர்க்கவே மாட்டோம்'' என்றெல்லாம் கொள்கைச் சவடால் அடித்து வந்த ""பகுஜன்'' சமாஜ் கட்சி இன்று பார்ப்பனர்கள் முக்கிய பொறுப்புகளில் அங்கம் வகிக்கும் ""சர்வஜன்'' கட்சியாகி விட்டது. மாயாவதி கூட தமது கட்சி ""சர்வஜன்'' கட்சிதான் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

 

ஆதிக்க சாதியினரையும் அவர்களது கட்சிகளையும் ""மனுவாதிகள்'' என்று சாடிவந்த பகுஜன் சமாஜ் கட்சி, இப்போது அதே மனுவாதிகளை தமது கட்சியின் முக்கிய பிரமுகர்களாக பொறுப்புகளில் அமர்த்தியுள்ளது. பார்ப்பன எதிர்ப்பு ஆதிக்க சாதி எதிர்ப்பு என்றெல்லாம் சவடால் அடித்து வந்த அக்கட்சி இன்று அவர்களின் நம்பகமான கூட்டாளியாகி விட்டது.

 

கடந்த 2002 உ.பி. மாநில சட்டமன்றத் தேர்தலின்போது பார்ப்பனர்களுடன் சங்கமித்த மாயாவதி, தமது கட்சியின் சார்பில் 38 பார்ப்பனர்களை வேட்பாளர்களாக நிறுத்தினார். இவர்களில் 5 பேர் வெற்றி பெற்றனர். 2004 நாடாளுமன்றத் தேர்தலின் போது 7 பார்ப்பனர்களை வேட்பாளர்களாக நிறுத்தினார். இவர்களில் பதக் என்ற ஒரு பார்ப்பனர் மட்டும் வெற்றி பெற்றார். பின்னர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக சதிஷ் மிஸ்ரா என்ற பார்ப்பனரை பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அமர்த்தினார். இவை யாவும் போதாதென்று இப்போது பார்ப்பன மாநாடுகளை நடத்தி, பாரதிய ஜனதா கட்சியே மிரண்டு போகுமளவுக்கு தனது பார்ப்பன சேவையில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்.

 

""தலித் பிரச்சினையை தலித்துகளால் மட்டுமே உணர முடியும்; தலித்துகளுக்கு தலித்துகள்தான் தலைமை தாங்க வேண்டும்'' என்றெல்லாம் சவடால் அடித்து வந்த மாயாவதி, தனது கட்சியின் பொதுச் செயலாளராக சுதிர் சந்திர மிஸ்ரா என்ற பார்ப்பனரையே நியமித்துள்ளார். இதுதவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் 25 பேர் கொண்ட ""சகோதரத்துவ மேம்பாட்டுக் கமிட்டி''களை பகுஜன் சமாஜ் கட்சி நிறுவியுள்ளது. இக்கமிட்டிகளின் தலைவர், துணைத்தலைவர் பொறுப்புகளில் பார்ப்பனர்கள் இருக்க, தாழ்த்தப்பட்டோர் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எந்தவொரு கட்சியும் பார்ப்பனர்களுக்கு இப்படி அரசியல் மேடையை அமைத்துக் கொடுத்ததில்லை என்று பார்ப்பனர்களே புகழும் அளவுக்கு மாயாவதியின் பார்ப்பனச் சேவை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறுகிறது.

 

சாதி அரசியல் கொடி கட்டிப் பறக்கும் உ.பி. மாநிலத்தில், வெறும் தலித் முசுலீம் கூட்டணியை வைத்துக் கொண்டு சாதிய ஓட்டு வங்கிகளைத் தகர்த்து பதவியைக் கைப்பற்ற முடியாது என்பதைப் புரிந்து கொண்டதாகவும், எனவேதான் தலித் முசுலீம் பார்ப்பனர் மற்றும் பிற சாதியினருடன் புதிய கூட்டணி அமைத்துள்ளதாகவும் தனது பிழைப்புவாதத்துக்கு சித்தாந்த விளக்கமளிக்கிறார், மாயாவதி. இது வெளியே தெரிந்த உண்மை. தமது சாதிய ஆதிக்கத்துக்கும் அதிகாரத்துக்கும் பகுஜன் சமாஜ் கட்சியால் எந்த இடையூறும் ஏற்படாது என்ற உத்திரவாதமும் நம்பிக்கையும் கிடைத்ததால்தான் பார்ப்பனர்களும் மற்றும் பிற ஆதிக்க சாதியினரும் பகுஜன் சமாஜ் கட்சியை ஆதரிக்கின்றனர். இது வெளியே தெரியாத உண்மை.

 

பகுஜன் சமாஜ் கட்சியின் பொறுப்புகளில் உள்ள பார்ப்பனர்களும் ஆதிக்க சாதியினரும் தாங்கள் தீண்டாமையை எதிர்ப்பதாகவோ, தமது சாதியினர் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவிவரும் அடக்குமுறை சுரண்டலை எதிர்ப்பதாகவோ வாயளவில் கூட வாக்குறுதி அளிக்கவில்லை. ஆனாலும், இப்பார்ப்பன ஆதிக்க சாதியினரின் நலன்களைப் பாதுகாக்கப் போவதாகச் சூளுரைத்து மாநாடுகளை நடத்துகிறார், மாயாவதி. உ.பி.யில் பார்ப்பனர்கள் "சிறுபான்மையினராக' உள்ளதால், சத்திரிய சாதியினரின் ஆதிக்கத்தால் பாதுகாப்பற்ற உணர்வில் பரிதவிக்கிறார்களாம்; காங்கிரசும் பாரதிய ஜனதாவும் அவர்களை வஞ்சித்து விட்டதாம்; எனவேதான், ஒடுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வரும் சாதியினரான பார்ப்பனர்களையும் அரவணைத்துக் கொண்டு சமூக நீதி காக்கப் போராடுகிறாராம் மாயாவதி. இத்தகைய பார்ப்பன சேவையுடன் கூடிய பிழைப்புவாதத்தையே அவர் ""தலித்தியம்'' என்கிறார்.

 

தலித்தியம் என்ற பெயரிலான இப்பிழைப்புவாத சித்தாந்தமும் அரசியலும் மாயாவதியுடன் நின்றுவிடவில்லை. தமிழகத்தில் மாயாவதியின் அன்புச் சகோதரரும் "தலித்திய பேரறிஞருமான' பிரம்ம ஸ்ரீ ரவிக்குமார் அவர்களும்கூட, காஞ்சி மட பார்ப்பன பயங்கரவாதி ஜெயேந்திரன் கைது செய்யப்பட்ட போது ""காலச்சுவடு'' இதழில், பார்ப்பனர்கள் சிறுபான்மையினராகி விட்டதாக அங்கலாய்த்து வரலாற்றை "மறுவாசிப்பு' செய்தார். தலித்தியத்தின் பெயரால் ஜெயேந்திரனோடு, வை.பாலசுந்தரம், விஸ்வநாதன்கக்கன், "தடா' பெரியசாமி, புரட்சி பாரதம் பூவை.மூர்த்தி ஜெகன் மூர்த்தி வகையறாக்கள் கூட்டணி கட்டிக் கொண்டனர். சாதி இந்து வெறியர்களான ராமதாசு, சேதுராமன், கண்ணப்பன், நடராசன் (சசிகலா) ஆகியோரோடு திருமாவளவன் தமிழ்ப் பாதுகாப்புக் கூட்டணி கட்டிக் கொண்டுள்ளார். இச்சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட தலித் மக்களின் பிணங்களின் மீதேறி நின்று அவர், ""சாதிக்காக இனி ரத்தம் சிந்த நாங்கள் தயாராக இல்லை'' என்று முழங்குகிறார். இதற்காக அவருக்கு "தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்'தின் தலைமைப் பதவி கிடைத்திருக்கிறது.

 

இதற்கு முன்பு பாசிச எம்.ஜி.ஆரை ""புரட்சித் தலைவர்'' என்று திருமா துதிபாடினார். மூப்பனாரை எனது வழிகாட்டி, தலைவர் என்று புகழ் பாடி அவரோடு கூட்டணி கட்டினார். பார்ப்பன பயங்கரவாத காஞ்சி மட சங்கராச்சாரியைச் சந்திப்பதில் என்ன தவறு என்று எதிர்வாதம் புரிந்தார். நந்தனை எரித்த தில்லை நடராசர் கோயில் தீட்சிதர்கள் அளித்த முதல் மரியாதையை சட்டையைக் கழற்றி விட்டு பவ்யமாக ஏற்றுக் கொண்டார். ஓட்டுக்கும் கூட்டுக்கும் இப்படி பிழைப்புவாதத்தில் புரள்வதை கம்யூனிசப் புரட்சியாளர்கள் அம்பலப்படுத்திய போது, அவரது எடுபிடிகளும் தலித்திய பிழைப்புவாதிகளும் சேற்றை வாரியிறைத்து தமது பிழைப்புவாத சித்தாந்தத்தை நியாயப்படுத்தினர்.

 

இப்போது திருமாவளவன் இன்னும் ஒரு படி முன்னேறி "கார்ப்பரேட்' சாமியாரான ஈஷா யோக மையத்தின் அதிபரான வாசுதேவை ""சத்குரு'' என்று போற்றுகிறார். ""சாமியார்கள், மக்களிடையே மதக் கருத்துக்களைத் திணிப்பவர்கள், நடைமுறைக்கு ஒவ்வாத கருத்துக்களைக் கூறுவோர் என்ற நிலைதான் இருந்து வருகிறது. ஆனால் சத்குரு ஜகி வாசுதேவைப் பொருத்தவரை, காவி உடை அணிந்த பெரியார் அல்லது மார்க்ஸ் என்றே கூறலாம்'' என்று கொஞ்சமும் கூச்சமின்றி ஒரு சாமியாரை பெரியாருடனும் மார்க்சுடனும் ஒப்பிட்டு துதிபாடுகிறார்.

 

இந்த சத்குரு ஜகி வாசுதேவனின் பின்னணி என்ன தெரியுமா? இவர், கவுண்டர் சாதியில் பிறந்த சாமியார். தனது சாதியைச் சேர்ந்த வெறியர்கள், கோவை மாவட்டத்தில் வாழும் அருந்ததியர்களை நர வேட்டையாடி வருவதை எதிர்த்து இதுநாள்வரை தனது சுண்டுவிரலைக் கூட அசைக்காதவர். இப்படி கமுக்கமாக கவுண்டர் சாதி வெறியர்களுக்குத் துணை போகும் இந்தச் சாமியார் ஆரம்பித்துள்ள கிராமப் புத்துணர்வு இயக்கத்துடன் இணைந்து கிராம மேம்பாட்டுப் பணிகளைச் சிறுத்தைகளும் செய்யப் போவதாக திருமாவளவன் அறிவித்துள்ளார். ஐயோ பாவம், சிறுத்தைகள்!

 

""இந்தியா அன்பு நிறைந்த நாடாக மாற வேண்டும். இதற்கு அரசியல் தலைவர்கள், வணிக அதிபர்களிடையே மாற்றம் ஏற்பட வேண்டியுள்ளது. அந்த மாற்றம் ஏற்பட்டால் சாதி, சமய பூசல்கள் வராது'' என்று உபதேசம் செய்கிறார் திருமா. சாதிய அடக்குமுறையை ஒழிக்கவும் மத வெறியை முறியடிக்கவும் என்னே ஒரு அற்புதமான தீர்வு! ஈஷா யோக மையத்தில் தொடர்ந்து பயிற்சி பெறப் போவதாகவும் திருமா அறிவித்துள்ளார். எட்டு நாட்கள் பயிற்சி பெற்றவுடனேயே இப்படி உபதேசம் செய்யும் திருமா, தொடர்ந்து பயிற்சி பெற்றால் சுவாமி திருமாவளவனந்தாவாக மாறி இன்னும் பல உபன்னியாசங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம். அதற்குமுன் ஈஷா யோக மையத்துக்கு ஒரு நல்ல தமிழ்ப் பெயர் சூட்டிவிட்டால் அவருக்குப் பெருமையாக இருக்கும்.

 

தலித் விடுதலை என்றும் இந்தத்துவ எதிர்ப்பு என்றும் ஆவேசக் குரலெழுப்பி வந்த தலித்தியவாதிகள் இன்று பார்ப்பனஆதிக்க சாதிகளுக்குச் சோரம் போகும் தமது பிழைப்புவாதத்தில் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். புரட்சிகர அரசியல் சித்தாந்தம் எதுவுமின்றிச் சீரழியும் இத்தகைய பிழைப்புவாத இயக்கங்களை நிறுவனமயமாக்கிக் கொண்டு ஆளும் வர்க்கங்களும் ஆதிக்க சாதிகளும்தான் இறுதியில் ஆதாயமடைகின்றன.

 

""வடக்கே ஒரு பெண் புலி; தெற்கே ஒரு இளஞ்சிறுத்தை!'' என்று மாயாவதியையும் திருமாவையும் தலித்திய பிழைப்புவாதிகள் போற்றிப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாமும் பாராட்டத்தான் வேண்டும் தலித்தியம் என்றால் பார்ப்பனஆதிக்கசாதி சேவையுடன் கலந்த பிழைப்புவாதம் என மீண்டும் நிரூபித்துக் காட்டியதற்காக.

 

பாலன்