Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஒப்பந்த விவசாயம் - விவசாயிகளைப் போண்டியாக்க

ஒப்பந்த விவசாயம் - விவசாயிகளைப் போண்டியாக்க

  • PDF

08_2005.jpg இன்னுமொரு சதி! கரும்பு விவசாயம் பருத்தி விவசாயம் குத்தகை விவசாயம் பற்றி அறிந்திருக்கிறோம். ஒப்பந்த விவசாயம் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா நடப்பாண்டில் முதல் லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக்கு ஒப்பந்த விவசாயம் விரைந்து முன்னேறும் என்று பொருளாதார சூரப்புலிகள் மதிப்பீடு செய்கின்றனர். அதென்ன ஒப்பந்த விவசாயம்?

 

ஒப்பந்த விவசாயம் என்பது ஒரு ஒப்பந்த விவசாய நிறுவனத்திற்கும் ஒரு விவசாயிக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலான விவசாயமாகும். ஒப்பந்த நிறுவனம் அளிக்கும் இடுபொருட்களான விதை உரம் பூச்சிக் கொல்லி மருந்துகள் விவசாயக் கருவிகளின் சேவை ஆகியவற்றை அந்நிறுவனத்தின் வழிகாட்டுதலின்படி விவசாயி பயன்படுத்த வேண்டும் குறிப்பிட்ட தரம் உற்பத்தி அளவு மற்றும் தீர்மானிக்கப்பட்ட காலகட்டத்தில் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து அந்நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும். இந்த ஒப்பந்த விவசாயத்தில் விவசாயி தனது நிலம் நீர் மற்றும் உழைப்பைக் கொண்டு சாகுபடி செய்ய வேண்டும். விளைச்சலை ஒப்படைக்கும் போது முன்கூட்டியே ஒப்பந்தத்தில் தீர்மானிக்கப்பட்ட விலைக்கோ அல்லது சந்தை விலைக்கோ அல்லது உற்பத்திக்கான கூலியைக் கொடுத்தோ அந்த ஒப்பந்த நிறுவனம் வாங்கிக் கொள்ளும். இத்திட்டத்தில் பங்கேற்கும் விவசாயி ஒப்பந்த விவசாயி என்றழைக்கப்படுகிறார். இந்தத் திட்டத்தை மேற்கொண்டு செயல்படுத்தும் நிறுவனத்தை ஒப்பந்த விவசாய நிறுவனம் என்றழைக்கின்றனர்.

 

பாரம்பரியமாகப் பயிரிடப்படும் நெல் கோதுமை சோளம் முதல் பணப்பயிரான கரும்பு நிலக்கடலை பருப்பு வகைகள் மிளகாய் சோயாபீன்ஸ் தக்காளி ஆரஞ்சு வரை ஒப்பந்த விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவை மட்டுமின்றி நம் நாட்டு விவசாயத்தில் இதுவரை சாகுபடி செய்யப்பட்டிராத கெர்கின் (வெள்ளரிக்காயைப் போன்றது) முசிலி (கண்வலி கிழங்கு) கட்டாமணக்கு சர்க்கரை சோளம் கத்தாழை மற்றும் பல பெயர் புரியாத மருத்துவ நறுமணத்திரவ செடிகள் ஒப்பந்த விவசாயத்தின் கீழ் பயிரிடப்பட்டு வருகின்றன. மேலும் இறைச்சிக் கோழி முட்டைக் கோழி வளர்ப்பு பால் உற்பத்தி விவசாயிகளுக்கு இதுவரை அறிமுகமில்லாத ஈமு கோழி வளர்ப்பு தீக்கோழி வளர்ப்பு என பல்வேறு துறைகளிலும் ஒப்பந்த விவசாயம் காலூன்றி வருகிறது.

 

இந்த ஒப்பந்த விவசாயத்தில் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களான இந்துஸ்தான் லீவர் கார்கில் பெப்சி பி.ஹெச். சி. மான்சாண்டோ நெஸ்லே முதல் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களான டாடா ரிலையன்ஸ் ஐ.டி.சி. மகிந்திரா அண்டு மகிந்திரா சுகுணா வெங்கி கோத்ரெஜ் பயனீர் வரை முனைப்பாக ஈடுபட்டு வருகின்றன.

 

தமிழகம் ஆந்திரம் கர்நாடகம் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடங்கிய இந்த ஒப்பந்த விவசாயம் இப்போது மகாராஷ்டிரா உத்திரப்பிரதேசம் குஜராத் அரியானா ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் இமாச்சலப் பிரதேசம் மே.வங்கம் முதலான மாநிலங்கள் வரை விரிவடைந்துள்ளது. இல் பஞ்சாப் மாநிலத்தில் ஏக்கர் பரப்பளவில் நடந்துவந்த ஒப்பந்த விவசாயம் அடுத்த ஒரே ஆண்டில் ஏக்கராக விரிவடைந்துள்ளது. க்குள் ஒட்டு மொத்த விவசாய நிலத்தில் அளவுக்கு ஒப்பந்த விவசாயத்தின் கீழ் கொண்டு வரப் போவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 

தமிழகத்தை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ள ஜெயா அரசு ஆம் ஆண்டுக்கான விவசாயக் கொள்கை அறிக்கையில் தற்போது நிலவி வரும் பருத்தி ஒப்பந்த விவசாயத்தை நடப்பாண்டில் சேலம் நாமக்கல் திண்டுக்கல் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விரிவாக்கம் செய்ய அனுமதித்துள்ளது. மக்காசோள ஒப்பந்த விவசாயத்தை தேனி திண்டுக்கல் மாவட்டங்களிலும் நிலக்கடலை ஒப்பந்த விவசாயத்தை கடலூர் வேலூர் திருவண்ணாமலை விழுப்புரம் சேலம் மாவட்டங்களிலும் எண்ணெய் வித்துக்களுக்கான ஒப்பந்த விவசாயத்தை தஞ்சாவூர் திருவாரூர் நாகை மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்ய அனுமதித்துள்ளது. இவையெல்லாம் போதாதென்று சர்க்கரைச் சோளம் காட்டாமணக்கு முதலானவற்றை ஒப்பந்த விவசாயத்தில் பயிரிட பல்வேறு நிறுவனங்களுக்கு ஜெயா அரசு அனுமதித்துள்ளது. கடந்த பத்தாண்டு காலமாக இறைச்சிக் கோழி முட்டைக் கோழி உற்பத்தியில் ஒப்பந்த விவசாய முறையே பிரதானமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பால் உற்பத்தியிலும் இத்தகைய ஒப்பந்த முறை பரவி வருகிறது.

 

விவசாய உற்பத்தியைப் பெருக்கவும் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ள இன்னுமொரு புதிய திட்டம் போல இந்த ஒப்பந்த விவசாயத்தை ஆட்சியாளர்கள் போற்றி வருவதோடு அதைத் தீவிரமாகச் செயல்படுத்தவும் கிளம்பியுள்ளார்கள். ஆனால் தனியார்மய தாராளமயக் கொள்கையின்படி நாட்டை மீண்டும் அடிமைப்படுத்தவும் விவசாயத்தை விட்டே விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்கவும் உருவாக்கப்பட்டுளள சதித்திட்டத்தின் ஓர் அங்கம்தான் ஒப்பந்த விவசாயம். உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுப்படி விவசாயத்தில் அன்னிய முதலீடுகளுக்கு வரை அனுமதி பெயரளவில் இருக்கும் நில உச்ச வரம்புச் சட்டத்தைத் தளர்த்துவது அரசின் உணவு தானியக் கொள்முதல் நிறுவனங்களைக் காலாவதியாக்குவது பன்னாட்டு நிறுவனங்கள் உணவு தானியக் கிடங்குகளை திறந்து கொள்ள அனுமதிக்கும் புதிய மாதிரி சந்தைச் சட்டம். இவையும் போதாதென்று மாதிரி விவசாய விற்பனைச் சட்டம் பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் விதைகளை மட்டுமே விவசாயிகள் இனி பயன்படுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கும் புதிய விதைச் சட்டம் என அடுத்தடுத்து கொள்கைகளையும் சட்டங்களையும் திணித்து வரும் ஆட்சியாளர்கள் இதற்கேற்ப இப்போது ஒப்பந்த விவசாய முறையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

 

உணவு தானியக் கொள்முதலை அரசு கை கழுவி விட்டதாலும் உரம் பூச்சி மருந்து முதலான இடு பொருட்களின் விலை உயர்வாலும் தாராளமயத்தால் அன்னிய இறக்குமதி காரணமாக விலை வீழ்ச்சியாலும் திவாலாகிப் போன விவசாயிகள் கடன் தொல்லை தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது வேறு வழியின்றி ஒப்பந்த விவசாயத்துக்குத் தள்ளப்படுகிறார்கள். நொடிந்து போன விவசாயிகளுக்கு இது ஏதோ நல்லதொரு வாய்ப்பு போலத் தோன்றலாம். ஆனால் ஒப்பந்த விவசாயம் என்பது உள்நாட்டுத் தேவையைச் சார்ந்திருப்பதல்ல. சர்வதேசச் சந்தையில் எந்த உற்பத்திப் பொருளுக்குக் கிராக்கி இருக்கிறதோ அதற்கேற்ப நடக்கும் விவசாய உற்பத்தியாகும். இதனால் கிராக்கி குறைந்தாலோ சர்வதேசச் சந்தையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டாலோ குறிப்பிட்ட பொருளுக்கான ஒப்பந்த விவசாயமும் படுத்து விடும் ஒப்பந்த நிறுவனமும் காணாமல் போய் விடும்.

 

இப்படித்தான் பஞ்சாபில் இந்துஸ்தான் லீவர் பெப்சி முதலான பன்னாட்டு நிறுவனங்களும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களும் உருளைகிழங்கு பயிறு கோதுமை கரும்பு முதலானவற்றை சந்தை விலைவீழ்ச்சியைக் காரணம் காட்டி ஒப்பந்த விவசாயிகளிடம் கொள்முதலை நிராகரித்து வருகின்றன. ஒப்பந்த விவசாயிகளின் கோபத்தைத் தணிக்க வேறுவழியின்றி பஞ்சாப் மாநில அரசே இவற்றைக் கொள்முதல் செய்து வருவதை ஜெயதிகோஷ் என்ற பொருளாதார ஆய்வாளரே அம்பலப்படுத்தியுள்ளார். இதேபோல மத்திய பிரதேசத்தில் கோதுமை ஒப்பந்த விவசாயத்தை மேற்கொண்டுள்ள ஐ.டி.சி. நிறுவனம் ஒப்பந்த விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச விலை கூடக் கொடுக்காமல் கொள்முதல் செய்ததால் விவசாயிகள் இதை எதிர்த்து அரசிடம் முறையிட்டனர். விவசாயிகளின் கோபத்தைத் தணிக்க வேறுவழியின்றி நான்கு ஐ.டி.சி. அதிகாரிகளைக் கைது செய்து மூட்டை கோதுமையையும் பறிமுதல் செய்து மாநில அரசு வழக்கு தொடுத்துள்ளது. (எகனாமிக் டைம்ஸ் ஏற்கெனவே கரும்பு விவசாயிகளுக்கு பட்டை நாமத்தைப் போட்டுவிட்டு கோடி கோடியாய் சர்க்கரை ஆலை முதலாளிகள் சுருட்டி ஏப்பம் விடும்போது ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் நேர்மையாக நடந்து கொள்ளும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

 

இந்த ஒப்பந்த விவசாயத்தில் பன்னாட்டு நிறுவனங்களும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களும் விவசாயிகளுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தமே மோசடியானது. எழுத்துபூர்வ ஒப்பந்தமாக இல்லாமல் பெரும்பாலும் வாய்வழி ஒப்பந்தங்களே போடப்படுகின்றன. அவையும் ஒப்பந்த நிறுவனங்களின் நலனுக்கேற்ப அதற்கு எந்தவகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலேயே போடப்படுகின்றன. பஞ்சாபில் குளிர்பான நிறுவனமான பெப்சி ஒப்பந்த விவசாயிகள் தமது நிறுவனத்திடம் மட்டுமே உற்பத்திப் பொருட்களை முழுமையாக விற்க வேண்டும் என்றும் வெளியில் விற்றாலோ சேமித்து வைத்தாலோ குற்றமாகக் கருதப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்றும் தனது ஒப்பந்தத்தில் எச்சரிக்கிறது. நைஜர் அக்ரோ புட்ஸ் என்ற நிறுவனம் தனது பதப்படுத்தும் ஆலை இயங்காமல் கொள்முதல் செய்ய முடியாமல் போனால் அதனால் ஒப்பந்த விவசாயிக்கு ஏற்படும் நட்டத்திற்கு நிறுவனம் பொறுப்பல்ல என்று தனது ஒப்பந்தத்தில் தப்பித்துக் கொள்கிறது.

 

பன்னாட்டு ஏகபோக விவசாய நிறுவனங்களே இப்படி மோசடி செய்து ஒரு தலைப்பட்சமான ஒப்பந்த விதிகளுடன் ஏய்க்கும் போது உள்நாட்டுக் கம்பெனிகளின் மோசடியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மோசடி நிதி நிறுவனங்களைப் போலவே இத்தகைய ஒப்பந்த விவசாயக் கம்பெனிகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் கோடிகோடியாய் சுருட்டிக் கொண்டு கம்பி நீட்டி விடுகின்றன. கோவை தர்மபுரி மாவட்டங்களில் ஒப்பந்த முறையில் கண்வலிக் (முசிலி) கிழங்கைப் பயிரிட வைத்த நிறுவனம் திடீரெனத் தலைமறைவாகி விட்டது. இந்த மோசடியால் நடுத்தர விவசாயிகளும் சிறு முதலாளிகளும் பல லட்சங்களை இழந்தனர். மைய அரசின் மருத்துவ செடிகளுக்கான வாரியமோ உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மருந்துச் செடி உற்பத்திப் பொருட்களுக்கு உத்திரவாதமான சந்தை இல்லை என்று அறிவித்து விவசாயிகளுக்கு இப்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேபோல ஆந்திர மாநில அரசும் அறிவிப்பு வெளியிட்டு விவசாயிகளை எச்சரித்துள்ளது.

 

இவை ஒருபுறமிருக்க வாசனைத்திரவிய மலர்ப்பண்ணை மூலிகைப் பண்ணை ஈமு கோழி வளர்ப்பு முயல் வளர்ப்பு என பலதரப்பட்ட ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் புற்றீசல் போலப் பெருகி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை வட்டத்திலுள்ள அனுசோனை கிராமத்தில் அரவிந்த் மாடர்ன் ஃபார்ம் என்ற ஒப்பந்த நிறுவனம் ஈமு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறது. ""ஈமு கோழி வளர்த்தால் குபேரனாகலாம் முயல் வளர்த்தால் முன்னேறலாம் இளைஞர்களே ஒரு நொடி சிந்திப்பீர்! உங்கள் ரத்தத்தை உறிஞ்சும் பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூலி வேலை செய்யப் போகிறீர்களா மண்ணின் மகத்துவத்தைப் போற்றும் கால்நடை வளர்ப்பில் முதலாளிகளாக மாறப் போகிறீர்களா என்று பல வண்ண விளம்பரங்களுடன் விவசாயிகளையும் வேலையில்லா இளைஞர்களையும் இந்நிறுவனம் ஆசை காட்டி இழுக்கிறது. ஆஸ்திரேலியா ஈமு கோழியை இறைச்சிக்காகவோ அல்லது பிற தேவைகளுக்காகவோ வாங்குவோர் நம் நாட்டில் அறவே கிடையாது. மறுபுறம் ஈமு கோழியை வாங்கி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் கிடையாது. ஆனாலும் இம்மோசடி நிறுவனத்தின் விளம்பரங்களுக்குப் பஞ்சமில்லை. இந்த நிறுவனத்தின் முதலாளி ஒரு தமிழன் என்பதால் அதற்கு முட்டுக் கொடுத்து ஆதரித்து விளம்பரப்படுத்துவதோடு மிகப் பெரிய சாதனையாளர் போல இந்த ஒப்பந்த நிறுவன முதலாளியிடம் பேட்டி கண்டு வெளியிட்டுள்ளது தாகம் ?என்ற தமிழினப் பிழைப்புவாதிகளின் பத்திரிகை.

 

?மோசடி செய்யாத "நல்ல நிறுவனங்களாகக் காட்டிக் கொள்ளும் பல ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் உற்பத்தியோடு நின்றுவிடாமல் விற்பனை செய்யவும் தொடங்கி விட்டன. ஐ.டி.சி. நிறுவனம் பெரு நகரங்கள் மட்டுமின்றி சந்தை நகரங்கள் கிராமங்களில் கூட பேரங்காடிகளைத் (ஷாப்பிங் மால்) திறக்கத் தொடங்கி விட்டது. இறைச்சிக் கோழி ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ள கோத்ரெஜ் சுகுணா வெங்கீஷ் முதலான நிறுவனங்கள் இப்போது நேரடியாகவே கோழி இறைச்சியை விற்க ஆரம்பித்து விட்டன.

 

வெங்கிஷ் நிறுவனம் ""புரோமார்க் சிக்கன் ?என்ற பெயரிலும் சுகுணா நிறுவனம் ""சுகிஸ் சிக்கன் ?என்ற பெயரிலும் கோழி இறைச்சி விற்பனைக் கடைகளை நகரங்களில் தொடங்கியுள்ளன. வரும் காலங்களில் பால் பாக்கெட் போல பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பாக்கெட் செய்து மக்களிடம் பிரபலமாக்கப் போவதாக சுகுணாவின் முதலாளி பேட்டியளிக்கிறார். (ஆனந்த விகடன் ?அப்பேட்டியில் கருவறை முதல் கறியாகும் வரை இருந்த இடைத்தரகர்களை அகற்றி விவசாயிகளுக்கு இலாப உத்திரவாதம் கொடுத்துள்ளோம் என்கிறார் கோடி ரூபாய் ஆண்டு வருமானமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் முதலாளி. தென்னிந்தியாவில் ஒட்டுமொத்த இறைச்சிக் கோழி உற்பத்தி விற்பனையை ஏகபோகமாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள சிறு விவசாயிகள் விற்பனை செய்யும் வியாபாரிகள் இறைச்சிக் கடைக்காரர்கள் துணைத் தொழில் (கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனத் தொழில் தீவனத் தொழில்) செய்வேரின் வாழ்வைப் பறித்து விட்டு மலிவு விலையில் ""சிக்கன் தரப்போவதாக கோடிகளைச் சுருட்டிய இந்நிறுவனம் நம் காதில் பூ சுற்றுகிறது. இவையெல்லாம் தொடக்கம்தான். ஒப்பந்த விவசாயம் இன்னும் விரிவாகத் தொடர்ந்தால் இன்னும் பல விபரீத விளைவுகள் ஏற்படுவது நிச்சயம்.

 

ஏனெனில் சாதாரண நெற்பயிரை விட அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும் ""பாசுமதி ?நெல் சாகுபடியைத்தான் பஞ்சாபில் ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் நடத்தி வருகின்றன. அதுவும் குறுகிய காலத்தில் அதிக லாபத்தைச் சுருட்டுவதற்காக ஒரே நேரத்தில் பல்லாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பாசுமதி பயிரிடப்படுகிறது. இதனால் விவசாயத்தின் பன்முகத்தன்மை இழந்து நிலம் சத்தின்றி மலடாகிப் போவதும் நிலத்தடி நீர் வரைமுறையின்றி சுரண்டப்படுவதும் தொடர்கிறது. இதுதவிர அளவுக்கு மீறி பூச்சி மருந்து களைக்கொல்லி மருந்து பூ பூக்க மருந்து காயைக் கனியாக்க மருந்து மற்றும் இரசாயன உரங்களைப் பயன்படுத்துமாறு ஒப்பந்த விவசாய நிறுவனங்கள் நிர்பந்திப்பதால் விளைநிலமானது உடனடியாக சீரமைக்க முடியாத அளவுக்கு நஞ்சாகிப் போவதும் சுற்றுச்சூழல் நாசமாவதும் தொடர்கிறது.

 

விவசாயமும் விவசாயிகளும் நாசமானால் என்ன! ஏற்றுமதி மூலம் அந்நியச் செலாவணி கிடைக்கிறதே! என்று ஒப்பந்த விவசாயத்துக்கு ஊக்கமளித்து எல்லா உதவிகளையும் ஆட்சியாளர்கள் செய்து வருகின்றனர். சாதாரண விவசாயிக்கு கடன்தர முன்வராத வங்கிகள் ஒப்பந்த விவசாய நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து ஒப்பந்த விவசாயத்துக்கு கடன்களை அள்ளி இறைக்கின்றன. கார்கில் என்ற பன்னாட்டு நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கியுடன் கூட்டுச் சேர்ந்து ஒப்பந்த விவசாயத்தை விரிவாக்கி வருகிறது. கார்கில் நிறுவனம் ஒப்பந்த விவசாயிகளுக்கு இடு பொருட்களைக் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை விவசாயியின் பெயரில் வங்கியிலிருந்து கடனாக எடுத்துக் கொள்கிறது. விவசாயிகளிடமிருந்து உற்பத்தியைக் கொள்முதல் செய்து அதற்கான பணத்தைப் பட்டுவாடா செய்யும்போது கடன் தொகையையும் அதற்கான வட்டியையும் பிடித்துக் கொண்டு மீதியைக் கொடுக்கிறது.

 

இந்த ஒப்பந்த விவசாயம் பிரச்சினையின்றி சீராக நடைபெறுவதற்காக உள்ளூரளவில் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வக் குழுக்களைப் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. உதாரணமாக அப்பாச்சி காட்டன் என்ற ஒப்பந்த விவசாய நிறுவனம் தமிழகத்தில் தங்களது பருத்தி விவசாயத்தை சுய உதவிக் குழுக்களைக் கொண்டு நடத்தி வருகிறது. தென்னிந்திய காட்டன் மில் கூட்டமைப்பு தன்னார்வக் குழுக்களை ஒப்பந்த பருத்தி விவசாயத்தில் பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்துள்ளது. விவசாயத்தில் புதிய வகை தரகர்களாகவும் ஒட்டுண்ணிக் கும்பலாகவும் தன்னார்வக் குழுக்கள் புதிய அவதாரம் எடுத்து வருவதையே இவை நிரூபித்துக் காட்டுகின்றன.

 

உணவு உற்பத்தியைக் குறை! மானியங்களை நிறுத்து! ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்! என்று உத்தரவிடுகிறது உலக வர்த்தகக் கழகம். அதற்கேற்ப பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி ஏகாதிபத்தியங்களின் தேவைக்கேற்ப விவசாயத்தை மாற்றியமைக்கும் புதிய ஏற்பாடுதான் ஒப்பந்த விவசாயம். அன்று காலனிய ஆட்சியின்போது தனது தேவைக்காக அவுரிச்செடி (நீலச்சாயச் செடி) பயிரிடுமாறு நிர்பந்தித்து விவசாயத்தை நாசமாக்கியது வெள்ளை ஏகாதிபத்தியம். அது காலனியாதிக்கம். இன்று நேரடியாக வெள்ளைக்காரன் ஆட்சி செய்யவில்லை. மாறாக ஏகாதிபத்திய எடுபிடிகள் ஆட்சி செய்கிறார்கள். அன்று போலவே இன்றும் விவசாயத்தை நாசமாக்கி ஏகாதிபத்தியங்களின் நலனுக்கேற்ப இறால் வளர்ப்பு ஈமு கோழி வளர்ப்பு வெனிலா பயிர் மருந்துச் செடி கெர்கின் காய் பயிரிடுதல் என ஒப்பந்த விவசாயம் திணிக்கப்படுகிறது. இது மறுகாலனியாதிக்கம்.

 

அன்று நம் முன்னோர்கள் அவுரிச் செடி பயிரிட மறுத்து பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக கலகம் செய்து சுதந்திரப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த வீரம் செறிந்த மரபில் வந்த நாம் ஒப்பந்த விவசாயத்துக்கும் மறுகாலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போராடுவதைத் தவிர வேறு வழி இருக்க முடியுமா?

 

செஞ்சுடர்