Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் சில்லறை வியாபாரத்தில் அந்திய முதலீடு ; சிறு வியாபாரிகளை ஒழிக்கும் சிலந்தி வலை

சில்லறை வியாபாரத்தில் அந்திய முதலீடு ; சிறு வியாபாரிகளை ஒழிக்கும் சிலந்தி வலை

  • PDF

10_2005.jpgஉலக வர்த்தகக் கழகத்தின் கட்டளையின்படி, சிறுநடுத்தர வியாபாரிகள் மீது மதிப்புக் கூடுதல் வரி என்ற தாக்குதலைத் தொடுத்துள்ள மைய அரசு, இப்பொழுது, சில்லறை வியாபாரத்தில் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் நேரடியாக நுழைவதற்கு அனுமதியளிக்கத் திட்டம் போட்டு வருகிறது. ""சூப்பர் மார்க்கெட்'' கடைகளைத் திறந்து நடத்தி வரும் டாடா போன்ற தரகு முதலாளிகள், இதற்கான அனுமதியை உடனே அளிக்குமாறு அரசை நிர்பந்தித்து வருகிறார்கள். அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்டு உலகின் 12 நாடுகளில் 4,806 ""சூப்பர் மார்க்கெட்''

 கடைகளை நடத்திவரும் அமெரிக்காவின் தேசங்கடந்த நிறுவனமான ""வால்மார்ட்'' இன் அதிபர், இதற்காக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து விட்டுச் சென்றிருக்கிறார். சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்கா சென்ற பொழுது, இது தொடர்பாகப் பேச்சு வார்த்தையும் நடந்திருக்கிறது.

 

இச்சில்லறை வியாபார பன்னாட்டு நிறுவனங்களுக்கு, 49 சதவீத மூலதனம் போட அனுமதியளிப்பதா அல்லது 26 சதவீத மூலதனம் போட அனுமதியளிப்பதா என்ற ""பிரச்சினை'' முடிவுக்கு வந்துவிட்டால், அமெரிக்காவின் ""வால் மார்ட்'', இங்கிலாந்தின் ""டெஸ்கோ'', ஜெர்மனியின் ""மெட்ரோ'' போன்ற அந்நிய நிறுவனங்கள், டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியாவிலும் தங்கள் ""பல சரக்கு''க் கடைகளைத் திறந்து விடுவார்கள்.

 

சில்லறை வியாபாரத்தில் அந்நிய மூலதனம் நுழைவதற்கு அனுமதியளித்தால், ""முதலீடு பெருகும்; வேலைவாய்ப்பு பெருகும்'' எனப் பழைய பல்லவியைப் பாடி, இச்சீர்திருத்தத்தை நியாயப்படுத்துகிறார், பிரதமர் மன்மோகன் சிங்.

 

சில்லறை வியாபாரத்தில் அந்நிய நிறுவனங்கள் நுழைந்தால், பொருட்கள் தரமாகவும், விலை மலிவாகவும் கிடைக்கும். இதனால் நுகர்வோர் இலாபம் அடைவார்கள் எனத் தாராளமயத்தின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள்.

 

நிதியமைச்சர் ப.சிதம்பரமோ இன்னும் ஒருபடி மேலே போய், ""உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்குப் பொருட்களைக் கொண்டு செல்வதில், பன்னாட்டு நிறுவனங்கள் திறமையாகச் செயல்படும்'' என்கிறார்.

 

அணுகுண்டு வெடிக்கும் அளவிற்குத் திறமை வாய்ந்த நாடு; வல்லரசாகும் அளவிற்குத் தகுதி வாய்ந்த நாடு என இந்திய "தேச'பக்தியை ஊட்டும் இவர்கள், ஒரு சாதாரண கடை நடத்தும் திறமை இந்தியாவிடம் இல்லை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அளவிற்கு, நம்ம ஊர் ""அண்ணாச்சிகள்'' வியாபாரத் திறமையும், நுணுக்கமும் தெரியாதவர்களா என்ன?

 

****


இந்தியாவெங்கும் ஏறத்தாழ ஒரு கோடியே பத்து இலட்சம் வர்த்தக நிறுவனங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள் 2 சதவீத வியாபாரிகள்தான் ""சரவணா ஸ்டோர்ஸ்'' போன்று மிகப் பெரும் வர்த்தக நிறுவனங்களை நடத்துகிறார்கள். டாடா நடத்தும் ""வெஸ்ட் சைட்'', பேண்டலூன் நடத்தும் ""பிக் பஜார்'', மற்றும் ஃபுட் வேர்ல்ட், சுபிக்ஷா போன்ற ""சூப்பர் மார்க்கெட்'' கடைகளும் இந்த 2 சதவீதத்துக்குள்தான் அடங்குகின்றன.

 

இந்தியாவிலுள்ள 4 சதவீதக் கடைகள்தான் 500 சதுர அடி பரப்பளவில் வியாபாரம் நடத்தும் பெரிய கடைகள். மீதமுள்ளவை அனைத்தும் பெட்டிக்கடை அளவில் இருக்கும் மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், ஜெனரல் ஸ்டோர்ஸ், புரோட்டா ஸ்டால், தேநீர் விடுதிகள், மருந்துக் கடைகள், தள்ளுவண்டி அல்லது தரைக்கடைகள் போன்ற பல தரப்பட்ட ""வணிக நிறுவனங்கள்'' தான். இந்திய அரசின் மதிப்பீட்டின்படியே, இந்தியாவில் உள்ள 98 சதவீதக் கடைகள், விற்பனை வரி, வருமான வரிச் சட்டங்களின் கீழ் வராதவை.

 

தரகு முதலாளிகள் சங்கம் (எஃப். ஐ.சி.சி.ஐ.) 2003ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் சில்லறை வியாபாரத்தின் மதிப்பு ஏறத்தாழ 11 இலட்சம் கோடி ரூபாய். இதில் சூப்பர் மார்க்கெட்டுகள், மிகப் பெரும் வர்த்தக நிறுவனங்களின் பங்கு ஏறத்தாழ 35,000 கோடி ரூபாய். சில்லறை வியாபாரம் ஏறத்தாழ 4 கோடி பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு வழங்கியிருக்கிறது. இதில் சூப்பர் மார்க்கெட்டுகளின் பங்கு ஐந்து இலட்சம் தான்.

 

***

 

1999ஆம் ஆண்டு வாக்கில் சில்லறை வியாபாரத்தில் ஒரு சதவீதமாக இருந்த சூப்பர் மார்கெட்டுகளின் பங்கு, 2005இல் 6 சதவீதமாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இது, 2010இல் 12 சதவீதம் அளவிற்கு வளர்ச்சியடையலாம் எனக் கூறப்படுகிறது. சூப்பர் மார்க்கெட்டுகளிலும், பெரிய வணிக நிறுவனங்களிலும் பொருளை வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 35 சதவீதம் என்றும், மீதி 65 சதவீதம் பேர்தான் (அடித்தட்டு மக்கள்) தங்களின் வீட்டுக்கு அருகிலுள்ள ""அண்ணாச்சி'' கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள் என்றும் ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

 

இந்த 35 சதவீத மேல்தட்டு வாடிக்கையாளர்களை வளைத்துப் பிடிப்பதுதான் ""வால் மார்ட்'' போன்ற அந்நிய பகாசுர நிறுவனங்களின் நோக்கமாக இருக்கும் என்றாலும், இதனால் சிறிய கடைகளுக்கு எவ்விதப் பாதிப்பும் இருக்காது என்று கூறி விட முடியாது. ஏனென்றால், இந்தியாவில் சூப்பர் மார்க்கெட் கலாச்சாரம் நுழைந்த பிறகு, பழமையான, சாதாரண கடைகளில் சோப்பு, ஷாம்பு போன்ற நுகர்பொருட்களின் விற்பனை 20 சதவீதம் சரிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

 

அமெரிக்காவின் வால் மார்ட்டுக்குச் சொந்தமான ஒரு ""சூப்பர் மார்க்கெட்டின்'' சராசரி பரப்பளவு 85,000 சதுர அடி. குண்டூசி தொடங்கி நவீனமான கார்கள் வரை எந்தவிதமான நுகர் பொருளையும், எந்த நாட்டுப் பொருளையும் அந்நிறுவனத்தின் சூப்பர் மார்க்கெட்டில் வாங்க முடியும். அந்நிறுவனத்தின் ஒரு கடையின் ஆண்டு சராசரி விற்பனை 230 கோடி ரூபாய். நம் நாட்டு சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் கூட, வால் மார்டோடு போட்டி போட முடியாது எனும் பொழுது, சிறிய வியாபாரிகள் தாக்குப் பிடிக்க முடியுமா? பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், யானையோடு பூனையை மோதச் சொல்கிறது, காங்கிரசு கும்பல்.

 

""10 இலட்சம் மக்கள் தொகை கொண்ட 35 இந்திய நகரங்களில், வால் மார்ட் ஒரேயொரு சூப்பர் மார்க்கெட்டைத் திறந்தாலே, 4,32,000 சிறிய கடைகளை இழுத்து மூட வேண்டியிருக்கும்; பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்து 20 சதவீத வியாபாரத்தைக் கைப்பற்றினால், சிறிய கடைகளில் வேலை பார்க்கும் 80 இலட்சம் சிப்பந்திகளுக்கு வேலை பறிபோகும்'' என இச்சீர்திருத்தத்தின் பின்னுள்ள அபாயகரமான விளைவுகளை வெளியிட்டிருக்கிறது, ""எக்கனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி'' என்ற ஆங்கில இதழ்.

 

பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்கள் நமது நாட்டில் சில்லறை வியாபாரத்தில்தான் தற்பொழுது நுழைய முடியாதே தவிர, சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்யும் மொத்த வியாபாரத்தில் நுழைய முடியும். இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு பெங்களூர் நகரில் கடையைத் திறந்த ஜெர்மன் நாட்டு நிறுவனமான ""மெட்ரோ'', சட்ட விரோதமான முறையில் சில்லறை வியாபாரத்தையும் நடத்தத் தொடங்கியது. இதனால் பாதிக்கப்பட்ட பெங்களூர் நகர வியாபாரிகள் ""மெட்ரோ''வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் குதித்த பிறகுதான், சில்லறை வியாபாரத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது, மெட்ரோ. ""சென்னையில், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை ஒழிப்பதற்கு ஒரேயொரு மெட்ரோ நிறுவனம் போதும்'' என்கிறார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர், வெள்ளையன்.

 

***

இந்தியாவில் சில்லறை வியாபாரம் நாடெங்கும் பரந்து விரிந்த அளவில் சிதறுண்டு கிடப்பதால், பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்களின் வருகையால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று சிலர் வாதாடுகிறார்கள்.

 

கோக், பெப்சி என்ற இரு அமெரிக்காவின் தேசங் கடந்த குளிர்பான நிறுவனங்கள். ""காளிமார்க்'', வின்சென்ட் போன்ற பெரிய குளிர்பான நிறுவனங்களை மட்டுமின்றி, உள்ளூர் கோலி சோடா கம்பெனிகளையும் போண்டியாக்கவில்லையா?

அரசாங்கத்தின் தாராள இறக்குமதிக் கொள்கை,  நாடெங்கிலும் பல்லாயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்களை இழுத்து மூட வைக்கவில்லையா?

 

கிராமச் சந்தையைக் கைப்பற்றி குடிசைத் தொழில்களை அழித்துவிடும் நோக்கில் இந்துஸ்தான் லீவர், கோத்ரெஜ் போன்ற பெரிய நிறுவனங்கள் வியாபார உத்தியை மாற்றிக் கொள்ளவில்லையா?

 

சிறிய, நடுத்தர விவசாயிகளை, அவர்களது நிலத்தை வாங்காமலேயே, அவர்களைத் தங்களின் ஒப்பந்த விவசாயிகளாகப் பன்னாட்டு நிறுவனங்கள் மாற்றவில்லையா?

இந்த சமீபத்திய வரலாற்றை நினைவில் வைத்துக் கொண்டால், உள்ளூர் சில்லறை வியாபாரிகள் எத்தகைய அபாயத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

 

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ""டெஸ்கோ'' என்ற சில்லறை வியாபார நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பால் எட்கர்ட், ""உங்கள் நாட்டு வியாபாரக் கலாச்சாரம் எதுவாக இருந்தாலும், அதையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் சமாளித்து விடும். அதனால், உங்கள் அரசாங்கத்தை அந்நிய முதலீடு தொடர்பான விதிகளைத் தளர்த்தாமல் இருக்குமாறு நிர்ப்பந்தம் கொடுங்கள்'' என வெளிப்படையாகவே எச்சரித்திருக்கிறார்.

 

****

 

இந்தியாவில் தற்பொழுது நிலவும் வேலை வாய்ப்பற்ற சூழலில், சில்லறை வியாபாரம் சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதில் முக்கியமான பங்காற்றி வருகிறது. கொஞ்சம் மூலதனம், கொஞ்சம் கணக்கு வழக்குப் பார்க்கும் திறமை இருந்தால், படித்தவன்ஃபடிக்காதவன் என யாராக இருந்தாலும் ஒரு சிறிய மளிகைக் கடையைத் தொடங்கி, வாழ்க்கையை ஓட்டிவிட முடியும்; 15 மணி நேரம் உழைப்பதற்கு தெம்பு இருந்தால், ஒரு புரோட்டா ஸ்டாலிலோ, டீ கடையிலோ வேலைக்குச் சேர்ந்து விட முடியும். ""சேவைத் துறையில் வேலை வாய்ப்பு'' என அரசாங்கம் பெரிதாக விளம்பரப்படுத்துகிறதே, அது இந்த மாதிரியான வேலைகள் தானே தவிர, கணினி முன் உட்காரும் ""வெள்ளை சட்டை'' வேலையல்ல!

 

இந்தியாவில் தற்பொழுதுள்ள மொத்த வேலை வாய்ப்பில் 7 முதல் 8 சதவீத வேலை வாய்ப்பை சில்லறை வியாபாரத் துறைதான் கொடுத்திருக்கிறது. விவசாயத்திற்கு அடுத்து, சுய வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் மிகப் பெரும் துறையாக சில்லறை வியாபாரம் இருப்பதை அரசாங்கமே ஒத்துக் கொள்கிறது. இப்படிப்பட்ட துறையில் பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்களை நுழைய விடுவதை, 4 கோடி குடும்பங்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினையாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர, வெறும், பொருளாதாரப் பிரச்சினையாக மட்டும் பார்க்க முடியாது.

 

""வால் மார்ட்'' போன்ற பன்னாட்டு நிறுவனங்கள், தனது போட்டியாளர்களை ஒழித்துக் கட்டுவதற்காக, பொருட்களை சிறிய வியாபாரிகளை விட மலிவாக விற்பது என்ற வியாபார தந்திரத்தில் கண்டிப்பாக இறங்குவார்கள். உள்நாட்டு சூப்பர் மார்க்öட் நிறுவனங்கள் இந்த தந்திரத்தைக் கடைப்பி டித்துத்தான், சில்லறை வியாபாரத்தில் 6 சதவீதப் பங்கைக் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த நாணயமற்ற உத்தியைத் தான் ப.சிதம்பரம் கும்பல் ""வியாபாரத் திறமை'' என மெச்சிக் கொள்கிறது.

 

இந்தக் கழுத்தறுப்பு போட்டியால் ஏற்படும் ""நட்டத்தை'', வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் பல ஆண்டுகளுக்குக் கூடத் தாங்கிக் கொள்ள முடியும்.


ஏற்கெனவே சூப்பர் மார்க்கெட் கடைகளை நடத்தி வரும் டாடா போன்ற பெரிய முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களோடு வியாபாரக் கூட்டணி சேர்ந்து தப்பித்துக் கொள்வார்கள். ஆனால், எத்தனை சிறிய வியாபாரிகளால் வியாபாரம் சரிந்து கொண்டே போவதைத் தாங்கிக் கொள்ள முடியும்?

 

மாற்று வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்க வாய்ப்பில்லாத இச்சூழலில், ஒரு சிறிய கடை மூடப்பட்டால், அதை நம்பிப் பிழைக்கும் ஒரு குடும்பமோ, இரண்டு குடும்பமோ நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான். தமிழகத்தைப் பொருத்தவரையில் இப்பொருளாதாரச் சீர்திருத்தம், நாடார் சாதியைச் சேர்ந்த பெரும்பான்மையான வியாபாரிகளை, வணிக நிறுவனச் சிப்பந்திகளைத் திக்கற்றவர்களாக ஆக்கி விடும் எனக் கண்டிப்பாகச் சொல்லலாம்.

 

வால்மார்ட் போன்ற பன்னாட்டு சில்லறை வியாபார நிறுவனங்கள், உள்நாட்டில் தயாராகும் பொருட்க ளைத் தான் வாங்கி விற்பனை செய்யும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எந்த நாட்டில் பொருட்கள் மலிவாகக் கிடைக்கிறதோ, அங்கிருந்து இறக்குமதி செய்து, அவை விற்பனை செய்வதை இந்திய அரசு கூடத் தடுத்து விட முடியாது. ஏற்கெனவே, தாராள இறக்குமதியால் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் உள்நாட்டு சிறுதொழில் நிறுவனங்களுக்கு, இந்தப் புதிய சீர்திருத்தம் இன்னும் ஒரு மரண அடியாகவே இருக்கும்.

 

இது மட்டுமின்றி, இச்சீர்திருத்தத்தின் ஆதரவாளர்கள், அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தையும் நீக்க வேண்டும் என்றும் கோருகிறார்கள். இச்சட்டம் இருக்கும் பொழுதே, அரிசி, கோதுமை, பருப்பு போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை உள்நாட்டு வர்த்தகச் சூதாடிகள்தான் தீர்மானிக்கிறார்கள். இச்சட்டம் நீக்கப்பட்டால், இந்த ""அதிகாரம்'' வால்மார்ட் போன்ற பன்னாட்டு வியாபாரிகளின் கைகளுக்குப் போய்விடும்.

 

சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைய அனுமதியளித்த சீனா, மலேசியா, தாய்லாந்து போன்ற ஏழை நாடுகள், தற்பொழுது இந்நிறுவனங்களின் பேயாட்டத்தைக் கட்டுப்படுத்த புதிய, புதிய சட்டங்களை இயற்றி வருகின்றன் கடப்பாரையை முழுங்கிவிட்டு, அது செரிக்க சுக்குக் கசாயத்தைக் குடிக்கின்றன. இப்படிப்பட்ட நேரத்தில், ஒரு வேண்டாத விருந்தாளியை, வெற்றி லை பாக்கு வைத்து வரவேற்கத் தயாராகிறது, நயவஞ்சகக் காங்கிரசு கும்பல்!


மு செல்வம்