Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பாரதீயம், சாதியம், இனவாதம், திரிபுவாதம் த.தே.பொ.க.வின் கலக்கல் தயாரிப்பு

பாரதீயம், சாதியம், இனவாதம், திரிபுவாதம் த.தே.பொ.க.வின் கலக்கல் தயாரிப்பு

  • PDF

11_2005.jpgதுரத்தி வரும் கூட்டத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக் கொள்ளும் முயற்சியாக திருடன் கடைப்பிடிக்கும் பிரபலமான தந்திரம், ""திருடன், திருடன்! அதோ திருடன்! ஓடறான், விடாதீங்க, பிடிங்க, பிடிங்க!'' என்று கூச்சல் போட்டுக் கொண்டே ஓடுவானாம்.

 

அதைப் போன்று, த.தே.பொ.க. என்ற பெயரில் உள்ள மணியரசன் கும்பல் தானே ஒரு பார்ப்பனப் பாதந்தாங்கியாக இருந்து கொண்டு, ம.க.இ.க. முதலிய புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளைப் பார்த்து ""மறைமுகப் பார்ப்பனியம்'' என்று கூச்சல் போடுகிறது. அக்கும்பலோடு சேர்ந்து அதன் பங்காளிகளும் கூட்டு ஒப்பாரி வைக்கின்றனர்.

 

இந்தத் த.தே.பொ.க. வெறுமனே ஒரு பார்ப்பன பாதந்தாங்கிகள் கட்சி அல்ல. பாசிச பார்ப்பன பாதந்தாங்கிகள்; அதனால்தான் தனது பங்காளிகள் அல்லாதவர்கள் எல்லாம் பகையாளிகள் என்கிறவாறு தனது தன்னுரிமைக்கு முன்னுரிமை அளிக்காதவர்கள் எல்லாம் ""அகில இந்தியத்தை ஏற்கும் பூணூலிஸ்டுகள்தாம்'' என்று கோயபல்சு பாணியில் கூட்டு ஒப்பாரி வைக்கிறார்கள்.

 

நம்பூதிரிபாடு பள்ளியில் தத்துவமும் தர்க்கமும் பயின்றவர்கள் அல்லவா! அதுதான் எதிராளியின் நிலைப்பாடுகள் என்னவோ அதன் மீது வாதங்கள் வைப்பதற்கு பதில், அதற்குத் தாமே ஒரு வியாக்கியானம் கொடுத்து, அதன் அடிப்படையில் வாதங்களை அடுக்குகிறார்கள்!

 

வியாக்கியானத்தின் மீது விமர்சனம்: நம்பூதிரித்தனம்!

ஒரு நாட்டு அரசின் கீழ் ஒடுக்கப்பட்டிருக்கும் அனைத்து தேசிய இனங்களுக்குமான விடுதலை புரட்சி என்று திட்டம் வைத்துக் கொண்டிருந்தாலே, அது தனித்தனி தேசிய இனங்களுக்கு எதிரானது என்று வியாக்கியானம் செய்து கொண்டு, நாம் ""அகில இந்தியத்தை ஏற்பவர்கள்'' என்று முடிவு செய்து எகிறுகிறார்கள். அனைத்து இந்தியா என்றாலே ஆர்.எஸ்.எஸ். காங்கிரசு பேசும் இந்திய தேசியம்தான் என்று மேலும் ஒரு கருத்தை இட்டுக் கட்டி ""அகில இந்திய தேசிய பூணுலிஸ்டுகள்'' என்று அவதூறும் செய்கிறார்கள்.

 

அதேசமயம் இந்திய தேசியத்தை ஏற்கும் வைகோ முதல் ஜார்ஜ் பெர்ணான்டஸ் வரையிலானவர்கள் இவர்கள் கண்ணோட்டப்படி பூணூல் ""லிஸ்டில்'' வரவில்லை; இவர்களின் தோழர்கள் ""லிஸ்டில்'' வருகிறார்கள்.

 

அதே நம்பூதிரித்தனத்தை ஈழப் பிரச்சினையில் எமது நிலைகுறித்த விசயத்திலும் பிரயோகித்திருக்கிறது, மணியரசன் கும்பல். ஈழப்பிரச்சினையில், ஈழவிடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை, அதையும் அதன் தலைவர் பிரபாகரனையும் பாசிஸ்டுகள் என்று ம.க.இ.க.வும் பிற புதிய ஜனநாயகப் புரட்சி அமைப்புகளும் கருதுகின்றன் இந்த நிலைக்கான அடிப்படையைப் பலமுறை விளக்கியும் எமது நிலையை திரித்துப் புரட்டி வியாக்கியானம் செய்து நாம் ஈழவிடுதலைக்கு எதிரானவர்கள்; எமது நிலையும் சோ முதலிய பாசிசப் பிற்போக்காளர்களின் நிலையும் ஒன்றுதாம் என்று அவதூறு செய்கிறார்கள்.

 

முன்பு ""தனி ஈழம்தான் ஒரே தீர்வு'' என்று தீர்க்கமாக வரையறுத்துச் சொன்ன மணியரசன் கும்பல் மற்றும் அதன் பங்காளிகள் இப்போது அது குறித்தும், உலகமயமாக்கலையும், அமெரிக்க மேலாதிக்கத்தையும் ஏற்று, தன்னுரிமைக்குப் புதுவிளக்கம் தரும் ஈழவிடுதலைப் புலிகளின் நிலை குறித்தும் மேல்வாயையும் கீழ்வாயையும் மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

 

இதற்குப் பெரியார் வழி ; அதற்கு நேரு வழியா?

ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் ""மறைமுகப் பார்ப்பனியம்'' என்று ஆத்திரம் பொங்க மணியரசன் கும்பலும் அதன் பங்காளிகளும் அவதூறு செய்வதற்கான இன்னொரு காரணமாக, நாம் ""பெரியாரின் உயிர் மூச்சான இடஒதுக்கீடு கொள்கையை எதிர்க்கிறோம்'' என்ற இட்டுக் கட்டுதலைக் கூறுகிறார்கள்.

 

""பிற்பட்ட சாதிகளுக்கான இடஒதுக்கீடு'' என்ற ஏற்பாடு உண்மையில் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் ஒடுக்கப்படும் சாதிகளுக்குப் பயன்படும் சமூக நீதியாக இல்லை. அவ்வாறான ஒடுக்குமுறை செலுத்தும் சில ஆதிக்க சாதிகளுக்குத்தான் பயன்படுத்துவதாக உள்ளது. ஆதிக்க சாதிகள் தாமே ஒடுக்கப்பட்டவர்களாக காட்டிக் கொண்டு சமூக நீதிக்கான உரிமை கோருவதும், போட்டியிடுவதும், வெற்றி பெறுவதும் நடக்கிறது. சமூக சாதி ஒடுக்குமுறையில் ஈடுபடும் ஆதிக்க சாதிகள் எதுவானாலும் அவற்றுக்கு இடஒதுக்கீடு முதலிய சமூக நீதிச் சலுகைகள் மறுக்கப்பட வேண்டும்.''

 

""வருணாசிரம வரைமுறைக்கும் இன்றைய சாதிய அமைப்பு முறைக்கும் உள்ள சமூக, வரலாற்று உறவை, சமூக நீதிக் கோட்பாட்டாளர்களான பெரியாரும் அம்பேத்கரும் கூட வரையறுக்கவில்லை. மேலும், இடஒதுக்கீடு என்பது ஆளும் வர்க்கத்தால் அமலாக்கப்படும் ஒரு சீர்திருத்தம்; ஆகவே, பொதுவில் அதை நாம் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை. அதேசமயம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள், சேவை சாதிகள் போன்ற உண்மையில் ஒடுக்கப்பட்டுவரும் சாதிகளுக்கான இடஒதுக்கீடுகளை ஒரு சீர்திருத்தம், சலுகை என்ற முறையில் நாம் ஆதரிக்கிறோம்'' இவ்வாறான ம.க.இ.க. மற்றும் இதன் தோழமை அமைப்புகளின் நிலைப்பாடுகள் பலமுறை விளக்கப்பட்டிருக்கின்றன.

 

இந்த நிலைப்பாடுகளுக்கு தகுந்த மறுப்பு எதுவும் இதுவரை தராத மணியரசன் கும்பல் மற்றும் அதன் பங்காளிகள் அவர்களது சொந்தத் திரிபு அடிப்படையில் நமது நிலை ""மறைமுக பார்ப்பனியம்'' என்று புளுகித் திரிகிறார்கள்.

 

சாதியத்தைப் பாதுகாப்பதில் மணியரசன் கும்பலுக்குள்ள பற்றுதலைப் பாருங்கள்! சாதியத்தை ஒழிப்பதை ஒரு அங்கமாகக் கொண்ட போராட்டத்தினூடாகத்தான் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று நாம் கருதுகிறோம். அதை மறுக்கும் மணியரசன் கும்பல், தன்னுரிமையாளர்கள் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே சாதிகள் ஒழிந்து விடாது, தமது ஆட்சியிலும் இடஒதுக்கீடு தொடரும் என்று கூறுகிறது. தன்னுரிமை ஆட்சி அமைவதற்கான போராட்டத்தின் ஒரு அங்கமாக சாதிய ஒழிப்பு இல்லை; அதன்பிறகும் சாதியத்தை கடைப்பிடிப்பது தண்டனைக்குரிய அரசியல், சமூக விரோதச் செயல் என்று கருதப்பட மாட்டாது என்கிறது மணியரசன் கும்பல். அவ்வாறு கருதப்படும் என்றால் இடஒதுக்கீடு நீடிக்க வேண்டிய அவசியமென்ன? மேலும், இடஒதுக்கீடு நீடிக்கும் என்றால் சாதிய அடையாளமும் தேவை, நீடிக்கும் என்று தானே பொருள்? இந்த அடையாளத்தை வைத்துத்தானே சமூக ரீதியிலான இடஒதுக்கீட்டை அமலாக்க முடியும்?

 

பெரியாரின் உயிர் மூச்சு என்று அவர்கள் குறிப்பிடும் இடஒதுக்கீடு ஃ சமூக நீதி விசயத்திலேயே இரட்டை நாடகமாடுகிறார்கள். நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகளில் பங்கேற்காமல் புறக்கணிக்கிறது, மணியரசன் கும்பல். அதற்கான காரணமாக, காலனிய ஆட்சிக் காலத்தில் முதலில் காந்தியும் காங்கிரசும் பின்பற்றிய கொள்கை, பிறகு சவகர்லால் நேரு முன்வைத்த புறக்கணிப்பு வாதங்களை அடுக்குகிறது. ""அடிமை கொண்ட அரசு நடத்தும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும்'' என்று தேசிய விடுதலைப் போராட்டம் நடத்துவோர்க்கு காந்தி நேரு காங்கிரசு கற்றுக் கொடுத்த பாடத்தின் அடிப்படையில், இப்போது ஆதிக்கம் செலுத்தும் தில்லி அரசு நடத்தும் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்கிறது மணியரசன் கும்பல்.

 

ஆனால், அதே ஆதிக்கம் செலுத்தும் ஆளும் வர்க்கங்களால் உருவாக்கப்பட்டு அவர்களின் நலன்களுக்காக இயங்கி வரும் அரசு எந்திரத்தில் பங்கேற்கும் இடஒதுக்கீட்டை மணியரசன் கும்பல் எதிர்க்கவோ, புறக்கணிக்கவோ இல்லை. நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற அமைப்புகளில் பங்கேற்பதை விட மிக மோசமானது அவர்களின் அரசு எந்திரத்தில் பங்கேற்று அவர்களுக்குச் சேவை செய்வதாகும். இது நம்பூதிரிபாடின் சீடர்களும், அரசியல் தத்துவ ஆராய்ச்சியாளர்களுமான மணியரசன் கும்பலுக்குத் தெரியவில்லையா?

 

அரசு எந்திரத்திற்கான இடஒதுக்கீட்டில் பங்கேற்பதற்கு பெரியாரின் உயிர்மூச்சான சமூக நீதித் தத்துவத்தையும், நாடாளுமன்ற சட்டமன்றப் புறக்கணிப்புக்குப் பண்டித நேருவின் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறார்கள் என்பதே ஒரு வேடிக்கை. தாமே பங்கேற்காது புறக்கணிக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்காக இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உரிமைக் குரல் எழுப்புவது மேலும் ஒரு வேடிக்கை.

 

நாடாளுமன்ற, சட்டமன்ற அமைப்புகளில் ""சமூக நீதி உரிமை'' வழங்கப்பட்டிருப்பினும் அது தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்குத்தான், ""தமது சாதிகளுக்கு'' இல்லை என்பதால்தான் பங்கேற்காது புறக்கணிக்கிறார்களோ என்ற சந்தேகத்துக்கு இடமிருக்கிறது என்பதை அவர்கள் மறுக்க முடியாது.

 

உண்மை என்னவென்றால், நாடாளுமன்ற சட்டமன்ற அமைப்புகளை மணியரசன் கும்பல் புறக்கணிப்பதற்கு காரணம் ""சீ... சீ... இந்தப் பழம் புளிக்கும்'' என்ற நரிக்கதைதான். தனிக்கட்சி துவங்கியபின் தமிழ்நாட்டின் இரண்டு முதன்மைக் கூட்டணிகளாலும் கழித்துக் கட்டப்பட்ட ராமதாசு, அப்துல் சமது போன்றவர்களின் கட்சிகளுடன் சேர்ந்து ""மூன்றாவது அணி இதுதான் கொள்கைக் கூட்டணி'' என்று பிரகடனம் செய்து தேர்தல்களில் போட்டியிட்டது, மணியரசன் கும்பல். காப்புத் தொகை இழந்து படுதோல்வி கண்டபிறகு, ராமதாசின் சந்தர்ப்பவாத அரசியல் அம்பலமான பிறகு, ""பூனை வெளியே வந்துவிட்டது'' என்று எழுதியது. ராமதாசு தானே தன் கொள்கை வேடத்தைக் கலைத்த பிறகுதான், அவருக்குள் ""பூனை'' பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தது.

 

இங்கிருந்து ஈழம் வரை "புதைபொருள் அகழ்வாராய்ச்சி' நடத்தும் இந்தத் தத்துவ வித்தகர்களுக்கு ஒரு கட்சி, அதன் தலைவர் பற்றி சரியான மதிப்பீடு செய்யக் கூடவா தெரியவில்லை! ஜெயலலிதாவை ஆதரித்து ஆட்சி பீடமேற்றிய பிறகு, ""அவர் அப்படிச் சொன்னார், நம்பி விட்டோம்; இப்போது மாறிவிட்டார்'' என்று கதைக்கும் போலி கம்யூனிஸ்டுகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு? பெரும்பாலும் வேறுபாடு எதுவும் பெரிதாகக் கிடையாது என்பதுதான் உண்மை! குறிப்பாக, பொதுவுடைமைச் சித்தாந்தத்தை நிராகரிப்பது, பார்ப்பனியத்துக்கு சேவை செய்வது என்பதில் வேறுபாடு எதுவும் கிடையாது.

 

மணியரசன் கும்பலின் பாரதீயம்

பார்ப்பன சனாதன வருணாசிரம் தர்மம்தான் இந்துமதம். இந்துத்துவம் என்பது அதன் நவீனகால அரசியல், சித்தாந்த, பண்பாட்டு அவதாரம். இந்து மதத்தை அழிக்காமல், இந்துத்துவத்தை முறியடிக்காமல் பார்ப்பன சனாதன வருணாசிரம சாதியத்தை ஒழிக்க முடியாது. பெரியார் அம்பேத்கார் போன்றவர்களின் கருத்தும் இதுதான்.

 

ஆனால், மணியரசன் மற்றும் போலி கம்யூனிஸ்டுக் கட்சிகளின் நிலை என்ன? ""இந்துமதம் என்பது வேறு, இந்துத்துவம் என்பது வேறு, பார்ப்பனிய வருணாசிரம தர்மம் என்பது வேறு. இந்து மதம் என்பது மக்களின் கடவுள் நம்பிக்கை, இதை இப்போதைக்கு அழிக்க முடியாது; அதற்கான அவசியமில்லை'' என்பதுதான்.

 

இந்து மதத்தை எதிர்த்து அழிக்க வேண்டிய அவசியத்தை ஏற்காத மணியரசன் கும்பல் ""பார்ப்பனியத்தையும்'', ""இந்துத்துவாவையும்'' எதிர்க்கிறதாம்! என்னவொரு பித்தலாட்டம்!

 

""இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்!'' என்று பெரியாரும் அம்பேத்கரும் அறைகூவல் விட்டது குறித்து மவுனம் சாதிக்கும் மணியரசன் கும்பலுக்கு ம.க.இ.க.வும் இதன் தோழமை அமைப்புகளும் அவ்வாறு கூறினால் மட்டும் ""மறைமுகப் பார்ப்பனியம்'' என்று தெரிகிறது. இந்துமதத்தை விட்டு வெளியேறினால் இடஒதுக்கீட்டால் பலன் பெறும் வாய்ப்பு பறிபோய் விடுமாம். இடஒதுக்கீடு ஃ சமூக நீதி கொள்கையின் நாயகர்களான பெரியாரும் அம்பேத்கருக்கும் இது தெரியாதா? இந்து மதத்தையும், இட ஒதுக்கீட்டுப் பலனையும் காப்பதில் இவர்களுக்கு எவ்வளவு அக்கறை!

 

ம.க.இ.க.வையும், அதன் தோழமை அமைப்புகளையும் இந்திய தேசியத்தை ஏற்பவர்கள், மறைமுகப் பார்ப்பனியம் என்று அவதூறு பேசும் மணியரசன் கும்பலுக்கு பாரதீயத்தை ஏற்றிப் போற்றும் சுப்ரமணிய பாரதி, பார்ப்பன சனாதன தர்மத்தை ஏற்கும் திலகரையும், இந்துத்துவத்தின் பிதாமகனான சாவர்க்கரையும் கொண்டாடிய பாரதி, சாதிகளை எதிர்ப்பதாகக் கவிதை எழுதிவிட்டு நடைமுறையில் வருணாசிரமத்தையும் சாதியத்தையும் தாங்கிப் பிடித்த சுப்ரமணிய பாரதி ""முற்போக்குக் கவிஞராகத்'' தெரிகிறார்.

 

சி.பி.எம்.முடன் தொப்புள் கொடி உறவு!

தமிழ்தேசியப் பொதுவுடைமைக் கட்சி என்று பெயர் வைத்துக் கொண்டு பொதுவுடைமை சித்தாந்தத்துக்குக் குழிபறிப்பதில் தமது தாய்க் கட்சி வழியில் நடக்கிறது மணியரசன் கும்பல். சோவியத் ஒன்றியத்தில் 1950களிலேயே குருச்சேவ் காலத்திலேயே பாட்டாளி வர்க்கக் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஆகியவை அதிகாரபூர்வமாகவே கைவிடப்பட்டு, முதலாளியம் நிலைநாட்டப்பட்டு விட்டது. சீனத்தில் 1970களிலேயே, டெங்சியாவோ பெங் காலத்திலேயே அதிகாரபூர்வமற்றவாறு நடந்தது. ஆனால், ""அதெல்லாம் கிடையாது. கோர்பச்சேவ் காலம் முடிய சோவியத் ஒன்றியத்தில் கம்யூனிஸ்டுக் கட்சியும் சோசலிசமும் நிலவியது; சீனத்தில் தற்போதும் சோசலிச ஆட்சிதான் நடக்கிறது'' என்று சி.பி.எம். கட்சி வாதாடி வருகின்றது. இதுதான் மணியரசன் கும்பலின் நிலை.

 

சோவியத் ஒன்றியத்தில் சோசலிசத்திற்கு ஏற்பட்ட பின்னடைவுக்குக்கான முக்கிய காரணம் அங்கு நிலவிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தான் என்று கண்டுபிடித்து, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற இலட்சியத்தைக் கைவிட்டு பல வர்க்க, பல கட்சி நாடாளுமன்ற அமைப்புதான் சிறந்தது என்ற முடிவுக்கும் வந்தது, சி.பி.எம் கட்சி. பல வர்க்க, பல கட்சி நாடாளுமன்ற அமைப்பில் தொழிலாளர் வர்க்க, மற்றும் கம்யூனிசக் கட்சி தலைமையில் ஆட்சி அமைப்பதுதான் தனது இலட்சியம் என்று திட்டம் வகுத்துக் கொண்டது. அதேபோல சோசலிசப் பொருளாதாரத்துக்குப் பதில் கலப்புப் பொருளாதார அமைப்பை ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கம் என்று வகுத்துக் கொண்டுள்ளது. இதன் பொருள், தற்போதைய அரசியல் பொருளாதார அமைப்பையே தொழிலாளர் வர்க்கம் மற்றும் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைமையில் பாதுகாப்பார்கள். போலி கம்யூனிஸ்டுகளின் இத்திட்டத்தை ஒரே ஒரு வேறுபாட்டுடன் மணியரசன் கும்பல் ஏற்கிறது. அதாவது, தமிழ் தேசிய இனத்துக்கு மட்டும் மேற்படி அரசியல், பொருளாதார அமைப்பைப் படைப்பதுதான் இவர்களின் திட்டமாக உள்ளது. சி.பி.எம். கட்சி நாடு முழுவதற்குமாக இதைச் செய்யும்.

 

சர்வதேச மதிப்பீடுகள் உறவுகளிலும், ஈழ விடுதலைப் புலிகளை மணியரசன் கும்பல் ஆதரிக்கிறது, சி.பி.எம் ஆதரிக்கவில்லை என்ற ஒரு வேறுபாடு தவிர வேறெந்த வேறுபாடும் கிடையாது. உலகின் திரிபுவாதக் கட்சிகளையெல்லாம் கம்யூனிச கட்சிகள் என்று சி.பி.எம். கட்சி ஏற்பதைப் போலவே மணியரசன் கும்பல் செய்கிறது. இரு தரப்புமே முனை மழுங்கிய அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புக் காட்டுகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் பின்னடைவுக்கான காரணங்கள், அதற்கான அரசியல், சித்தாந்த அடிப்படைகள் குறித்த ஒரே கணிப்புகளைக் கொண்டிருக்கின்றன. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைக் கைவிடுவதுதான் சரியான நிலை என்று கருதினாலும், அவ்வாறு செய்யாத சீனா, வடகொரியா, வியத்நாம் மற்றும் கியூபாவை எவ்வித விமர்சனமின்றி சோசலிச நாடுகள் என்று கொண்டாடுகின்றனர்; குறிப்பாக சீனாவில் கொண்டு வரப்படும் தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கலை நியாயப்படுத்துகின்றனர். இவற்றிலெல்லாம் சி.பி.எம். கட்சியே மணியரசன் கும்பலின் வழிகாட்டியாகவும் முன்னோடியாகவும் விளங்குகிறது. பத்துக்கு ஒன்பது பங்கு தாய்க் கட்சியின் வழியில் நடக்கிறது மணியரசன் கும்பல். எஞ்சிய ஒரு பங்கு அதன்நிலை முரண்பாடுகள் நிறைந்ததாகவே இருக்கிறது.

 

முற்போக்கு சாயம் பூசிய இனவாதம்!

தன்னுரிமைக்கு முன்னுரிமை தரும் புரட்சிப் போர்க்களத்தில் 1998 ஜூன் ஜூலை காலத்தில் மார்வாடி குஜராத்தி சேட்டுக்களைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவோம் என்று முழங்கி ""தமிழகம் தழுவிய அளவில் பல போர்க்குணமிக்க போராட்டங்களையும் மாநாட்டையும்'' நடத்தினர். அடுத்து 2003 ஆகசெப் காலத்தில், ""தமிழகத்தில் தொழில் வணிகம் தொடங்கும் அயல் இனத்தார் (வெளிநாட்டினர், வெளி மாநிலத்தவர்) தங்கள் நிறுவனத்தில் 33மூ மூலதனப் பங்காளிகளாகத் தமிழர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்'' என்ற கோரிக்கையை முன்வைத்து மீண்டும் ""தமிழகம் தழுவிய அளவில் பல போர்க்குணமிக்க போராட்டங்களையும் மாநாட்டையும்'' நடத்தினர்.

 

1998இல் யாரை வெளியேற்றுவோம் என்று முழங்கினார்களோ அவர்களையும் உள்ளடக்கிய அயல் இனத்தார்கள், தமிழர்களுக்கு 33 சதவீதம் மூலதனப் பங்களித்தால் வெளியேறத் தேவையில்லை என்று 2003இல் முடிவு செய்கிறார்கள். முன்னது அடிப்படைக் கோரிக்கை, பின்னது ""இடைக்காலக் கோரிக்கை, உடனடி எதிர்காலத்தில் சாதிக்கக் கூடியது, சட்டவகையில் அரசால் புறக்கணிக்க முடியாதது, அடிப்படை இலக்கு நோக்கி மக்களைத் திரட்டப் பயன்படக் கூடியது'' என்று விளக்கமளித்தனர். ஆனால், இப்படி எதுவும் நடக்கவே இல்லை என்பதுதான் உண்மை.

 

தமிழர் இனவிடுதலை பேசிக் கொண்டே, தமிழர்களில் சிலரை தரகு முதலாளிகளாக்கும் முனைப்பைக் காட்டுகிறார்கள். தமிழர்கள் ஏதோ மூலதனத்தைக் குவித்து வைத்துக் கொண்டு, அயல் இனத்தார் தொடங்கும் தொழில் வணிக நிறுவனங்களில் முதலீடு செய்ய முடியாமல் தவிப்பது போலவும் உளறுகிறார்கள்.

 

2003இல் மணியரசன் கும்பலும் அவர்களின் பங்காளிகளும் செய்த கணிப்பு சற்றும் நகராத அதேசமயம் 2005இல் தமது அடிப்படை முழக்கத்தையே விரிவுபடுத்தி, மார்வாடி குஜராத்தி சேட்டுகள், மலையாளிகள், வடநாட்டவர் போன்ற வெளியாரை வெளியேற்றும் முழக்கத்தை முன்வைத்து பரப்புரையும் மாநாடும் நடத்தினர். 2003இல் எழுப்பிய உடனடிக் கோரிக்கை, உடனடி முழக்கம் எந்த அளவு நிறைவேறியது என்பது பற்றி மூச்சுப் பேச்சுக் கிடையாது. பஞ்சாபில் காலிஸ்தானிகள், அசாமில் கனபரிசத்தினர், மராட்டியத்தில் சிவசேனர்கள் அடைந்த திடீர் பிரபலம் போல ""வெளியாரை வெளியேற்றுவோம்'' என்ற முழக்கத்தின் மூலம் சாதித்து விடலாம் என்று மணியரசன் கும்பல் எத்தணிக்கிறது. இது குறுக்கு வழிகளால் பிரபலமடைவது என்ற பிரபலமான திராவிட, தமிழினவாதிகளின் வழக்கமான உத்திதான்.

 

அசாமிலும், மராட்டியத்திலும் வெளியாரை வெளியேற்றுவதை ஆர்.எஸ்.எஸ். ஆதரித்தது. மேலும் இசுலாமியர்களை வெளியேற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ். கும்பல் முன் வைக்கும் வாதத்தைப் போலவே அயல் இனத்தார்க்கு எதிராக மணியரசன் கும்பல் முன்வைக்கிறது. தமிழர்களின் தாயகத்தையும் தமிழர்களின் மக்கள் தொகை விகிதத்தையும் தமிழ் பண்பாட்டு அடையாளத்தையும் சிதைக்கும் வகையில் ""அயல் இனத்தார் வந்தால் வெளியேற்றுவோம்'' என்கிறது.

 

ஆனால், உண்மையில் தமிழர்களின் மக்கள் தொகை விகிதம் இப்போ துதான் மாறிவருகிறதா? ஏற்கெனவே சிக்கலாக உள்ளது. தமிழ் மண்ணில் நீண்டகாலமாக வாழ்ந்து முழு வாழ்வுரிமை பெறத் தகுதி உடையவர்களாக மணியரசன் கும்பல் ஏற்கும் தெலுங்கு மொழி பேசும் மக்கள், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் வகையில் தமிழ் நாட்டின் கணிசமான தொகுதிகளில் உள்ளனர். திராவிட, தமிழ் இனவாத அரசியல் அமைப்புகளில் பொறுப்புகளிலும் உள்ளனர்.

 

இந்த உண்மைகளை மறந்துவிட்டு ஃ மறைத்துவிட்டு எதையாவது பேசி, எழுதி மாபெரும் சிந்தனையாளர்கள் ஃ ஆய்வாளர்கள் ஃ மேதைகளாகக் காட்டிக் கொள்கிறது, மணியரசன் கும்பல். அவர்கள் எந்த அளவு உண்மை பேசுபவர்கள் என்பதற்கு இங்கே ஒரு வகைமாதிரியைத் தருகிறோம். அதிலிருந்து வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.

 

""சொந்தச் சரக்கில்லாதவர்கள் அடுத்தவர் சரக்கைக் குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். சொந்தமாகச் சோறு போட முடியாதவர்கள் கல்யாண வீட்டில் பிள்ளை வளர்க்க முயல்வார்கள். இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தாம் ம.க.இ.க.வினர், த.நா.மா.லெ.க.வினர். இவர்களது அரசியல் திட்டங்களின் வெறுமையை அக்குவேறு ஆணி வேறாகத் திறனாய்வு செய்து தமிழர் கண்ணோட்டத்தில் எழுதியுள்ளோம். அவற்றுக்கு இதுவரை அவர்கள் விடையளிக்கவில்லை.

 

இவர்கள் சந்துமுனைச் சிந்து பாடிகள்; சாலையோர விமர்சகர்கள். கோள்மூட்டும் குசுகுசுப் பேர்வழிகள். சொல்லிக் கொள்வதற்கு சொந்த வேலைத் திட்டம் இல்லாதவர்கள். அடுத்தவர்களை "அம்பலப்படுத்துவதாக'க் கூறி அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள்''.

 

— தமிழர் கண்ணோட்டம், பக். 28, சூன் 2005.

ஆர்.கே.