Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் ஏழை நாடுகளின் அந்நியக் கடன் தள்ளுபடி: மறுகாலனியாதிக்கத்தின் "மனித முகம்'

ஏழை நாடுகளின் அந்நியக் கடன் தள்ளுபடி: மறுகாலனியாதிக்கத்தின் "மனித முகம்'

  • PDF
11_2005.jpgறுமை, பஞ்சம், பட்டினிச் சாவுகள் உலகெங்கிலும் பரவலாகக் காணப்பட்டாலும், இந்த மூன்றும் மற்ற நாடுகளைவிட, ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த மிகவும் வறியஏழை நாடுகளை ஒரு சாபக்கெடு போல பிடித்தாட்டி வருவதை யாரும் மறுக்க முடியாது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு எத்தியோப்பியர் பத்தாண்டுகளுக்கு முன்பு சோமாலியர் இப்பொழுது நைஜர், பர்கினோ ஃபாஸோ, மாலி, மொரிதானியா ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் பட்டினிச் சாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளன.

இந்நாடுகளில் வயதுக்கு வந்த பெரியவர்கள் காட்டுக் கிழங்குகளைத் தின்று உயிரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஐந்து வயதுக்குக் கீழான குழந்தைகளுக்கு ஒரு சொட்டு பால்கூடக் கிடைக்காததால், பட்டினியால் கொத்துக் கொத்தாக மடிந்து கொண்டிருக்கின்றன. வயல்வெளியெங்கும் செத்துப் போன ஆடு, மாடுகளின் எலும்புகள் சிதறிக் கிடப்பதைப் பார்க்கும் பொழுது, ""திறந்தவெளி இறைச்சி வெட்டும், கூடத்தில்'' நுழைந்துவிட்டதைப் போன்ற பீதி ஏற்படுகிறது.

 

அதிகார வர்க்கத்தின் கணக்குப்படியே நைஜரில் 36 இலட்சம் பேர்; பர்கினோ ஃபாஸோவில் 5 இலட்சம் பேர்; மாலியில் 11 இலட்சம் பேர்; மொரிதானியாவில் 8 இலட்சம் பேர் பட்டினிச் சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்க கண்டத்தில் நடக்கும் இப்பட்டினிச் சாவுகளைத் தடுத்து நிறுத்தக் கோரி, ஐரோப்பாவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்த பிறகுதான், ஏகாதிபத்திய நாடுகளின் எடுபிடியான ஐ.நா.மன்றம் ""கஞ்சித் தொட்டி''யைத் திறக்க முன்வந்தது; — அதுவும் நைஜரில் மட்டும்.

 

இதே சமயத்தில் ஸ்காட்லாந்தின் க்ளென்ஈகிள்ஸ் என்ற நகரில் கூடிய ஜி8 நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ரசியா, கனடா, ஜப்பான்) தலைவர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து மட்டுமல்ல, உலகில் இருந்தே வறுமையை ஒழித்துக் கட்டப் போவதாகச் சபதம் எடுத்துக் கொண்டார்கள். இதற்காக, மிகவும் வறிய 18 ஏழை நாடுகள் தர வேண்டிய கடன்களை ரத்து செய்யப் போவதாக அறிவித்தார்கள். தற்பொழுது பட்டினிச் சாவுகள் நடந்து கொண்டிருக்கும் நான்கு ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்டு, 12 ஆப்பிரிக்க நாடுகள் இக்கடன் தள்ளுபடியால் பயன்பெறும் என்று ஜி8 மாநாட்டில் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டது.

 

மேலும், ""2010க்குப் பிறகு ஏகாதிபத்திய நாடுகள், ஏழை நாடுகளுக்குச் செய்யும் உதவி 4,000 கோடி அமெரிக்க டாலர்கள் (ஏறத்தாழ 1,80,000 கோடி ரூபாய்) அதிகரிக்கும். இதில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு 2,500 கோடி அமெரிக்க டாலர்கள் (1,12,500 கோடி ரூபாய்) கூடுதலாக உதவி கிடைக்கும்'' என்றும் ஜி8 நாடுகளின் தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

 

இதைக் கேட்கும்பொழுது, 18 ஏழை நாடுகளின் வெளிநாட்டுக் கடன்கள் அனைத்தும் அடியோடு ரத்து செய்யப்படும்; இக்கடன் தள்ளுபடி போக, நிதியுதவி கிடைக்கும் என்று நாம் கற்பனை செய்து கொண்டால், நம்மைவிட ஏமாளி வேறு யாரும் இருக்க முடியாது.

 

""உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி ஆகிய நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடன்கள்தான் ரத்து செய்யப்படும். இதிலும் கூட, இந்த நிதி நிறுவனங்களிடமிருந்து வணிக நோக்கத்திற்காகப் பெறப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படமாட்டாது. இந்த நிதி நிறுவனங்கள் அல்லாது, வேறு சர்வதேச நிதி நிறுவங்களிடமிருந்து பெறப்பட்ட கடன்களும் தள்ளுபடியாகாது. இதற்கும் மேலாக, இக்கடன் தள்ளுபடியால், இந்த மூன்று நிதி நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய நட்டத்தை ஈடு செய்வதற்கு ஏற்றவாறு, ஏகாதிபத்திய நாடுகள் நிதி அளித்தால்தான் கடன் தள்ளுபடி நடைமுறைக்கு வரும்'' இவையனைத்தும் கடன் தள்ளுபடி என்ற டாம்பீக அறிவிப்பின் பின் மறைந்துள்ள நிபந்தனைகள்.

 

இது ஒருபுறமிருக்க, ரசிய ஏகாதிபத்தியம் தனது சார்பாக எவ்வளவு கடன் தள்ளுபடி செய்யப்படுகிறதோ, அதையே தனது கூடுதல் நிதியுதவியாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறிவிட்டது. பிரான்சு ஏகாதிபத்தியம், தான் அளிக்க வேண்டிய கூடுதல் நிதியுதவியில், மூன்றில் ஒரு பங்கு கடன் தள்ளுபடியாக இருக்கும் எனக் கூறிவிட்டது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், 18 ஏழை நாடுகளின் வறுமையை ஒழிக்க ஏகாதிபத்திய நாடுகள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி கூடுதல் நிதியுதவி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தான் இருக்கும் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களே நையாண்டி செய்கிறார்கள்.

 

ஆப்பிரிக்காவைப் பிடித்தாட்டும் வறுமைக்கும், பஞ்சத்திற்கும் அக்கண்டத்து நாடுகளில் நடைபெறும் சர்வாதிகார ஊழல் ஆட்சி, இனக்குழுக்களுக்கு இடையேயான சண்டை இவைதான் காரணம் என ஏகாதிபத்திய நாடுகள் குற்றஞ் சுமத்துகின்றன. எனவே, கடன் தள்ளுபடி பெற விரும்பும் ஆப்பிரிக்க ஏழை நாடுகள், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் நல்லாட்சி நடைபெற உத்தரவாதம் அளிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கின்றன.

 

""எண்ணெய் வயல் நிறைந்த நைஜீரியாவில் நடந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியை இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தேசங்கடந்த எண்ணெய் தொழிற்கழகமான ""ஷெல்'' தான் தாங்கிப் பிடித்தது; காங்கோவில் நடந்த மொபுடுவின் சர்வாதிகார ஆட்சிக்கு, பன்னாட்டு சுரங்கத் தொழிற்கழகங்கள்தான் முட்டுக் கொடுத்தன் ருவாண்டாவில் நடந்த ஹ_டு டுட்ஸி இன மோதலுக்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சிதான் காரணமாக அமைந்தது; சியாரா லியோனின் வைரச் சுரங்கங்களைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்காகவே, அந்நாட்டில் ஏகாதிபத்தியங்களால் உள்நாட்டுக் கலவரம் தூண்டிவிடப்பட்டது'' என நீளமாகப் போகும் இந்தப் பழைய வரலாற்றை மறந்துவிட்டால், நாமும் ஏகாதிபத்தியங்களின் நல்லாட்சி திட்டத்திற்கு ""ஜெ'' போடலாம்.

 

ஆப்பிரிக்காவை இருண்ட கண்டமாக்கிய ஏகாதிபத்தியங்களின் சதி ஒருபுறம் இருக்கட்டும். ""வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் நல்லாட்சி'' என்பதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா?

 

ஏகாதிபத்தியங்கள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி சலுகையைப் பெறப் போகும் 18 நாடுகளுள் ஜாம்பியாவும் ஒன்று. இந்தச் சலுகையைப் பெறுவதற்காக, ஜாம்பியா, ஏகாதிபத்தியங்களின் கட்டளைப்படி, சமூக நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையை மேலும், மேலும் வெட்டித் தள்ளுகிறது.

 

இந்தப் பதினெட்டு நாடுகளுள் ஒன்றான கானா, தனது நாட்டின் விவசாயத்தையும் கால்நடை வளர்ப்புத் தொழிலையும் பாதுகாக்க, சிறப்புச் சட்டமொன்றினை இயற்றி வைத்திருந்தது. இச்சட்டத்தை நீக்கினால்தான் கானாவிற்குக் கூடுதல் நிதியுதவி கிடைக்கும் என உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் நெருக்குதல் கொடுத்ததையடுத்து, இச்சட்டம் நீக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்நாட்டின் அரிசிச் சந்தையில் 40 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொண்டதால், அந்நாட்டின் உள்நாட்டு அரிசி உற்பத்தியே நிலைகுலைந்து போய்விட்டது.

 

கடன் தள்ளுபடி பெற விரும்பும் ஏழை நாடுகள் தனியார்மயம் தாராளமயத்தை மேலும் தீவிரப்படுத்தினால்தான், ஏகாதிபத்தியங்களிடமிருந்து நல்லாட்சி சான்றிதழைப் பெற முடியும். இதை, ""ஆப்பிரிக்க வளர்ச்சி மற்றும் வாய்ப்புகள்'' என்ற அமெரிக்கச் சட்டம் மிகவும் பச்சையாகவே கூறுகிறது:

 

""தனியார் சொத்துரிமையைப் பாதுகாக்கக் கூடிய சந்தைப் பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்; அமெரிக்காவின் வர்த்தகத்திற்கும், மூலதனத்திற்கும் தடையாக இருக்கக் கூடியச் சட்டங்களை நீக்க வேண்டும்; அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு நாடு பிடிக்கும் மேலாதிக்கப் போர் வெறிக்கு ஒத்துழைப்பு தரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.''

 

தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் ஏகாதிபத்தியங்கள் திணிக்கும் இந்த சந்தை பயங்கரவாதம்தான், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பஞ்சத்தையும், பட்டினிச் சாவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உண்மையை நைஜர் நாட்டு நிலைமை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது.

 

நைஜர் நாட்டு மக்கள் அரைக்கவளம் சோறு கிடைக்காமல் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும்போது, அந்நாட்டு அரசும், தரகு முதலாளிகளும் அண்டை நாடான நைஜீரியாவுக்கு அரிசியை ஏற்றுமதி செய்கிறார்கள்.

 

நைஜர் நாட்டு ஏழை விவசாயிகள், தங்களின் குழந்தைகளுக்குப் பால் கூட வாங்க முடியாமல் போண்டியாகி நிற்கும் பொழுது, அந்நாட்டுத் தலைநகரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு காபிக்கு ஏழு வகையான ஜீனி பரிமாறப்படுவதைக் குறிப்பிட்டு, அந்நாட்டில் செல்வம் ஒரு பக்கமும்; ஏழ்மையும் பட்டினியும் ஒரு பக்கமும் குவிந்து கிடப்பதை அம்பலப்படுத்துகிறார், ஒரு பத்திரிகையாளர்.

 

கடந்த ஏப்ரல் மாதம் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்க வேண்டும் எனக் கோரி, அந்நாட்டு தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பொழுது, ஐ.நா. மன்றமும், நைஜர் அரசும், ""இலசமாக அரிசி வழங்கினால், சந்தை பாதிக்கப்படும்'' என்ற மனிதத் தன்மையற்ற, இலாபவெறி பிடித்த காரணத்தைக் கூறி, இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்க மறுத்துவிட்டார்கள். இதற்குப் பரிசாகத்தான் ஏகாதிபத்திய நாடுகள், நைஜருக்குக் கடன் தள்ளுபடி என்று சலுகையைத் தூக்கிக் கொடுத்துள்ளன.

 

உண்மை இப்படியிருக்க ஏகாதிபத்தியங்களோ மழையின்மை, வெட்டுக் கிளி படையெப்பு போன்ற இயற்கை சீற்றங்களின் மீது பழியைப் போட்டுவிட்டுத் தப்பித்துக் கொள்ள முயலுகின்றன.

 

1970 தொடங்கி 2002 வரையில், ஆப்பிரிக்க நாடுகள் ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து வாங்கிய கடன் 54,000 கோடி அமெரிக்க டாலர்கள்; இந்த 32 ஆண்டுகளில், வாங்கிய கடனுக்கு வட்டியாகவும், அசலாகவும் அந்நாடுகள் திருப்பிச் செலுத்தியிருக்கும் தொகை 55,000 கோடி அமெரிக்க டாலர்கள். வாங்கிய கடனுக்கு மேலே 1,000 கோடி அமெரிக்க டாலர்கள் (45,000 கோடி ரூபாய்) திருப்பிச் செலுத்திய பிறகும், கந்துவட்டிக்காரன் கணக்குப் போல, ஏகாதிபத்திய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் இன்னும் திருப்பி அடைக்க வேண்டிய அசல் 29,500 கோடி அமெரிக்க டாலர்கள் எனக் கணக்கு காட்டுகின்றன.

 

ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனத்தையொட்டி அமைந்துள்ள நாடுகளில் இருந்து மட்டும், தாராள இறக்மதி என்ற பெயரில், கடந்த இருபது ஆண்டுகளில் 27,200 கோடி அமெரிக்க டாலர்களை (12,24,000 கோடி ரூபாய்) ஏகாதிபத்திய நாடுகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளன. இந்தப் பணம் அந்நாடுகளின் கஜானாவில் இருந்திருந்தால், ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்து வாங்கிய கடனை மட்டுமல்ல, அந்நாட்டு மக்களுக்குத் தேவையான கல்வி, மருத்துவம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து, வறுமையையும், பஞ்சத்தையும் ஓட ஓட விரட்டியிருக்க முடியும்.

 

ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தனியார்மயம் தாராளமயத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் ஆப்பிரிக்க கண்ட நாடுகளில் இருந்து 10,400 கோடி ரூபாயை இலாபமாகக் கொள்ளையடித்துச் செல்கின்றன. இது, ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏகாதிபத்திய நாடுகள் வழங்கும் வருடாந்திர நிதி உதவியை விட 14 மடங்கு அதிகம்.

 

இந்தப் புள்ளிவிவரங்கள் ஆப்பிரிக்காவின் வறுமைக்கும், பஞ்சத்திற்கும் ஏகாதிபத்தியச் சுரண்டல்தான் காரணம் என்பதை மட்டும் எடுத்துக் காட்டவில்லை. ஏகாதிபத்திய நாடுகள் அறிவித்துள்ள கடன் தள்ளுபடி, கூடுதல் நிதியுதவி என்பதெல்லாம் மிகப் பெரிய மோசடி என்பதையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.

 

மாட்டை இரண்டு முறை தோலுரிப்பது என்பார்களே, அதைப்போல, ஏற்கெனவே ""கடன்'' என்ற போர்வையில் ஏழை நாடுகளை அடிமைப்படுத்திவிட்ட ஏகாதிபத்திய நாடுகள், இப்பொழுது தங்களதுச் சுரண்டலையும், மேலாதிக்கத்தையும் தொடரவும், தீவிரப்படுத்தவும் ""கடன் தள்ளுபடி'' என்ற முகமூடியை மாட்டிக் கொண்டு வருகிறார்கள். போலி கம்யூனிஸ்டுகளின் மொழியில் சொன்னால், ""கடன் தள்ளுபடி'' என்பது ஜி8 நாடுகள் மறுகாலனியாதிக்கத்திற்கு மாட்டிவிட்டுள்ள ""மனித முகம்!''

 

ரஹீம்