Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அமெரிக்காவின் போர் குற்றங்கள: அன்று வியட்நாம் இன்று ஈராக்

அமெரிக்காவின் போர் குற்றங்கள: அன்று வியட்நாம் இன்று ஈராக்

  • PDF

12_2005.jpgஅமெரிக்க ஏகாதிபத்தியம் ஈராக்கில் தினந்தோறும் நடத்திவரும் பச்சைப் படுகொலைகளும் அதை மூடிமறைக்க ஜார்ஜ் புஷ் கும்பல் அவிழ்த்துவிடும் புளுகுணிப் பிரச்சாரமும் இட்லரையும், கோயபல்சையும்கூட வெட்கப்பட வைத்துவிடும்.

கடந்த அக்டோர் 16ஆம் தேதி, ஈராக்கின் ரமாடி நகரில் அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதலொன்றை நடத்தியது. ""இத்தாக்குதலில் 75 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், அந்த ஊரைச் சேர்ந்த மக்களுக்குச் சிறுகாயம் கூட ஏற்படவில்லை'' என்றும் அமெரிக்கா தனது எடுபிடி பத்திரிகைகள் மூலம் பிரச்சாரம் செய்தது.

 

அன்று அமெரிக்கா நடத்திய விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுள் 6 வயதான முகம்மது சாலிக் அலியும் நான்கு வயதான சாட் அகமதுவும் எட்டு வயதான ஹைஃபாவும் அடக்கம் என்பது ஈராக்கியர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

 

அன்று, அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போராளிகள், ரமாடி நகரில் ஒரு அமெரிக்க இராணுவக் கவச வண்டியைக் குண்டு வீசித் தகர்த்து, ஐந்து அமெரிக்க சிப்பாய்களைக் கொன்றனர். குண்டு வீச்சில் சிதைந்துபோன அந்த வண்டிக்கு அருகே இந்தக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த பொழுதுதான், அமெரிக்கா இராணுவம் விமானத் தாக்குதல் நடத்தியது. குண்டு வீச்சுக்குப் பலியான இந்தக் குழந்தைகளும், அப்பாவி பொதுமக்களும்தான் ""தீவிரவாதிகளாக'' அறிவிக்கப்பட்டனர்.

 

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் போராளிகளைப் பிடிப்பதற்கு, அவர்கள் வீட்டுப் பெண்களைப் பிணைய கைதிகளாகக் கடத்திக் கொண்டு போகும் கீழ்த்தரமான ""தாதா'' வேலையை, அமெரிக்க இராணுவம் ஈராக்கில் மதிப்புமிக்க தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையாக்கி விட்டது.

 

அமெரிக்க இராணுவம் ஒரு ஈராக்கியரைக் கைது செய்ய, அவர் போராளியாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ""எதிர்காலத்தில் போராளியாக மாறுவார்'', ""எதிர்காலத்தில் தற்கொலைப் படை மனித வெடிகுண்டாக மாறுவார்'' என்று "கண்டுபிடித்து', அமெரிக்க இராணுவத்தால் கை காட்டப்படுபவர்கள் அனைவரும் கைது செய்யப்படுகின்றனர். இப்படிப்பட்ட கற்பனையான குற்றச்சாட்டின் கீழ் மட்டும் 122 பெண்கள் சிறையில் எவ்வித விசாரணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ளனர்.

 

அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த வியட்நாம் மக்கள் மீது ""ஏஜெண்ட் ஆரஞ்சு'' என்ற இரசாயன ஆயுதம் வீசப்பட்டது போல, ஈராக்கில் பலூஜா நகரைப் போராளிகளின் பிடியில் இருந்து கைப்பற்ற, அமெரிக்கா நடத்திய சண்டையின் பொழுது, வெள்ளை பாஸ்பரஸ் என்ற தடை செய்யப்பட்ட இரசாயன ஆயுதம் அந்நகரின் மீது வீசப்பட்டது. மேலும், அச்சண்டையில் காற்றில் இருந்து ஆக்ஸிஜனை உறிஞ்சுவதன் மூலம், எதிரிகளை மூச்சுத் திணற வைத்துக் கொல்லும் இரசாயன ஆயுதங்களையும் அமெரிக்க இராணு வம் பயன்படுத்தியிருக்கிறது.

 

பலூஜா நகர் மீது இரசாயனக் குண்டுகள் வீசப்பட்ட பொழுது, ஏறத்தாழ 50,000 பொது மக்கள் அந்நகரில் இருந்தனர். இவர்களுள் எத்தனை ஆயிரம் பேர் உடனடியாக இறந்து போனார்கள்? எத்தனை பேர் எதிர்காலத்தில் சிறுகச் சிறுக உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்து போவார்கள் என்பது மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படுகொலை பற்றி பத்திரிகை நிருபர்கள் கேட்டதற்கு, அமெரிக்க இராணுவ மந்திரி டொனால்டு ரம்ஸ்ஃபெல்டு, ""நாங்கள் பிணங்களை எண்ணுவதில்லை'' எனத் திமிராகப் பதில் அளித்தார்.

 

இந்த அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, நாகரிக உலகம் போர் குற்றங்கள் என்கிறது. ஆனால், ஜார்ஜ் புஷ்சும், மன்மோகன் சிங் போன்ற அவரது எடுபிடிகளும் இந்த போர் குற்றங்களைத் தான் "ஜனநாயகம்' என்கிறார்கள்!