Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் பற்றியெரியும் பாரீஸ் நகரம்: நிறவெறி பாசிச அரசியலும் கருப்பின இளைஞர்களின் கலகமும்

பற்றியெரியும் பாரீஸ் நகரம்: நிறவெறி பாசிச அரசியலும் கருப்பின இளைஞர்களின் கலகமும்

  • PDF

12_2005.jpgபிரான்சு நாட்டின் தலைநகர் பாரீஸ் நகரில் அமைந்துள்ள ஈஃபிள் கோபுரம்; கேன்ஸ் நகரில் நடைபெறும் ஆடம்பரமான சர்வதேச திரைப்பட விழா இவை போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த அடையாளங்களைத் தவிர, பிரான்சு நாட்டைப் பற்றி வேறெதுவும் நம்முள் பலருக்குத் தெரியாது. ஆனால், அந்நாட்டைச் சேர்ந்த கருப்பின இளைஞர்கள் சமீபத்தில் ""குடியரசு''க்கு எதிராக நடத்திய தெருப் போராட்டங்கள், ""நகர்ப்புறச் சேரிகளும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும், ஏழ்மையும், வெள்ளை இன வெறியும் நிறைந்ததுதான் பிரான்சு; முதலாளித்துவவாதிகள் கொண்டாடுவது போல, அந்நாடு சமத்துவம் நிறைந்த சமூகம் அல்ல'' என்பதைப் பச்சையாக உலகத்தின் முன் தோலுரித்துக் காட்டிவிட்டது.

 

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி பாரீசின் புறநகர் பகுதியான கிளிச்சி சாஸ் போய்ஸில், 15,17 வயதுடைய பௌனா தரோர், ஜியாத் பென்னா என்ற இரு முசுலீம் கருப்பின இளைஞர்கள், உயர் அழுத்த மின்சார மின் அழுத்திக்குள் சிக்கி இறந்து போனார்கள். இவர்கள் இருவரின் மரணம் ஏதோ ஒரு வகையில் போலீசாருடன் தொடர்புடையதாகவே உள்ளது. இவர்கள் இருவரும் இதுவரை எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. எனினும், இவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே என்ன நடந்தது என்பது மர்மமாகவே உள்ளது. மின் அழுத்தியைச் சுற்றி இருக்கும் 4 மீட்டர் உயரமான பாதுகாப்புச் சுவரை, எப்படி இவர்களால் தாண்ட முடிந்தது என்பது கேள்வியாகவே உள்ளது.

 

இந்த இரு அப்பாவி இளைஞர்களின் மரணம்தான், கருப்பின இளைஞர்கள் மத்தியில், பிரெஞ்சுக் குடியரசுக்கு எதிராக நீருபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்த கோபத்தை, வெறுப்பை நகர்ப்புற வன்முறை போராட்டமாக விசிறிவிட்டது. அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி, ஏறத்தாழ இரண்டு வாரங்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் அரசாங்க அதிகாரத்தின் மையமான போலீசு நிலையங்கள் மட்டுமின்றி, கருப்பின இளைஞர்கள் படிப்பதற்கு இடம் தராத பள்ளிக் கூடங்கள்; அவர்களுக்கு வேலை கொடுக்க மறுத்த அலுவலகங்கள்; அவர்கள் வாங்கி அனுபவிக்க முடியாத கார்களும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

இப்போராட்டத்தின் பின்னுள்ள நியாயத்தை வலியுறுத்திப் பேசியிருக்கும் பிரெஞ்சு சமூகவியல் அறிஞர்கள், ""இப்போராட்டம் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே வெடித்திருக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளனர். அந்த அளவிற்கு பிரான்சு நாட்டில், கல்வி, வேலைவாய்ப்பு எனச் சமூகத்தின் சகல அரங்குகளிலும் கருப்பின மக்களுக்கு எதிரான வெள்ளை நிறவெறி கோலொச்சி வருகிறது.

 

பிரெஞ்சு போலீசு, கருப்பினத்தைச் சேர்ந்த யாரையும் நடுத்தெருவில், பேருந்தில், புறநகர் ரயில்களில் என எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி, அவர்களைச் சோதனையிடலாம். ""இந்த அவமானத்தை முதியவர்களான நாங்கள் சகித்துக் கொண்டோம். ஆனால், பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த கருப்பின இளைஞர்கள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்? அவர்களுக்கு அரபு மொழி தெரியாது; அரபுக் கலாச்சாரம் தெரியாது; பிரெஞ்சு மொழியும், பிரெஞ்சு கலாச்சாரமும் தான் அவர்களுக்குத் தெரியும். இதன் பிறகும்கூட, அவர்கள் இரண்டாதரக் குடிமக்களாக நடத்தப்படுவதற்குக் காரணம் எங்களின் தோலின் நிறம்தான்'' என பிரெஞ்சுக் குடியரசில் வேரோடிப் போயுள்ள வெள்ளை இனவெ றியை அம்பலப்படுத்துகிறார் அபுபக்கர் சாலே என்ற முதியவர்.

 

பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுவிட்டு, நுகர்பொருட்களை வீடுவீடாகச் சென்று கொடுக்கும் மிகச் சாதாரண வேலை செய்துவரும் சுலைமான் என்ற இளைஞர், ""என்னுடைய பெயரையும் என்னுடைய முகவரியையும் மட்டுமே பார்த்துவிட்டு, எனக்குப் பலர் வேலை கொடுக்க மறுத்திருக்கிறார்கள்'' என்கிறார்.

 

பிரான்சு நாட்டில் வெள்ளை இனத்தைச் சேர்ந்த தொழிலாளி, வருடத்திற்கு 10,500 யூரோ டாலர் எளிதாகச் சம்பாதிக்க முடியும்; அதேசமயம், கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இதில் பாதியளவுக்குக் கூட வருமானம் கிடைக்காது.

 

பிரெஞ்சுப் பெயர் கொண்ட ஒரு வேலையில்லாத இளைஞர், 100 வேலைகளுக்கு விண்ணப்பம் போட்டால், அவருக்கு 75 இடங்களில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்புக் கடிதம் வரும். அதேசமயம், அரபு பெயர் கொண்ட கருப்பின இளைஞர், 100 வேலைகளுக்கு விண்ணப்பம் போட்டால், அவருக்கு 14 இடங்களில் இருந்து அழைப்புக் கடிதம் வந்தாலே அதிர்ஷ்டம் தான்.

 

பிரெஞ்சு நாட்டின் மொத்த மக்கள் தொகையில் எட்டில் ஒரு பங்கு பேர் கருப்பின மக்கள். ஆனால், அந்நாட்டின் நாடாளுமன்றத்திலோ, கருப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் கூட உறுப்பினர் கிடையாதாம் இப்படி பிரான்சு நாட்டில், நிறத்தின் அடிப்படையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளைப் பட்டியல் இட்டுக் கொண்டே போகலாம்.

 

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, பிரான்சின் தொழிற்துறை அபாரமாக வளரத் தொடங்கிய நேரத்தில், அத்தொழிற்சாலைகளில் குறைவான கூலிக்கு வேலை செய்வதற்காக, பிரெஞ்சு அரசு தனது முன்னாள் காலனி நாடுகளில் இருந்து கருப்பின மக்களையும், அரேபியர்களையும் புலம் பெயரச் செய்தது. வெள்ளையர்கள் செய்ய விரும்பாத வேலையைச் செய்வதற்காகப் புலம் பெயர்ந்து வந்த இக்கருப்பின மக்களுக்கு பிரெஞ்சுக் குடியுரிமை வழங்கப்பட்டதோடு, அவர்கள் வசிப்பதற்கு தொழிற்சாலைகளை ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டன. கருப்பினக் குழந்தைகள் படிப்பதற்குத் தனி பள்ளிக்கூடங்கள்; வழிபாடு நடத்துவதற்கு தேவாலயங்கள், மசூதிகள்; மற்றும் விளையாட்டுத் திடல்கள், நுகர்பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் கூட கட்டிக் கொடுக்கப்பட்டன. எனினும், கருப்பின மக்கள் வாழும் பகுதி வெள்ளையர்களோடு கலந்து விடாத தனியொரு உலகமாகவே உருவாக்கப்பட்டது.

தற்பொழுது பிரான்சு நாடெங்கும் பரவிக் கிடக்கும் எழுநூறுக்கும் அதிகமான புறநகர் பகுதிகளில், ஏறத்தாழ 40 இலட்சத்துக்கும் மேற்பட்ட கருப்பின மக்கள், இரண்டு தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பிரெஞ்சு குடியுரிமை வழங்கப்பட்டிருந்தாலும்; நிறப் பாகுபாடு காட்டுவது சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், வெள்ளையர்கள் வசிக்கும் நகரமும், கருப்பின மக்கள் வாழும் புறநகர் பகுதியும் நம்நாட்டு ""ஊரும்'', ""சேரியும்'' போலவே பிரிந்து கிடக்கிறது.

 

பிரான்சு நாட்டின் இன்றைய அழகிய தோற்றத்தை நிர்மாணிக்க இறக்குமதியான இந்தக் கருப்பின அரை அடிமைக் கூலிகள், நவீன நிர்மாணங்கள் பூர்த்தியானதைத் தொடர்ந்து வேண்டாத கூலிகளாக மாற்றப்பட்டனர். குறிப்பாக, 1990க்குப் பின் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டு, மீள வழி தெரியாமல் முழிக்கும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அந்நெருக்கடியின் சுமையை கருப்பின மக்களின் மீது ஏற்றி வைத்து வருகிறது. புலம் பெயர்ந்து வந்த கருப்பின மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சமூகப் பொருளாதாரச் சலுகைகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்படுவதோடு, படித்த கருப்பின இளைஞர்கள் மத்தியில் வேலையில்லா திண்டாட்டம் 40 சதவீதமாக அதிகரித்துவிட்டது. இதற்கு ஏற்ப உள்நாட்டு ஓட்டுச் சீட்டு அரசியலிலும், கருப்பின முசுலீம்களுக்கு எதிரான வெள்ளை இனவெறியும், முசுலீம் மத எதிர்ப்பும் செல்வாக்கு பெற்று வருகிறது.

 

கருப்பின மக்கள் வாழ்ந்துவரும் புறநகர்ப் பகுதிகளைக் குற்றங்களின் பிறப்பிடமாகவும்; கருப்பின மக்களைக் குற்றப் பரம்பரையாகவும் பார்க்கும் அளவிற்கு, நிறவெறி பாசிச அரசியல் கருத்துகள் வெள்ளை இன மக்கள் மத்தியில் வேரூன்றி வருகின்றன.

 

பிரெஞ்சு குடியரசாலேயே நடைமுறைப்படுத்தப்படும் இந்த வெள்ளை இனவெறி பாசிச அரசியல், ""கருப்பின இளைஞர்கள் சிலர் மாஃபியா கிரிமினல் கும்பல்களில் இணைந்து சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது; கருப்பின முசுலீம்கள் மத்தியில் முசுலீம் தீவிரவாதம் ஊடுருவி வருவது'' ஆகியவற்றைக் காட்டி நியாயப்படுத்தப்படுகிறது. மேலும், கருப்பின இளைஞர்களின் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவது என்ற பெயரில் இந்த இனவெறி அரசியல் வளர்த்து எடுத்துச் செல்லப்படுகிறது.

 

பிரான்சிலேயே பிறந்து வளர்ந்த இன்றைய கருப்பின இளம் தலைமுறை, தங்களது பெற்றோர்களின் கட்டுக் கோப்பை பிழைப்புக்காக வெள்ளை நிறவெறியைச் சகித்துக் கொள்ளுதல்; பழைய பிற்போக்கு பண்பாட்டுக் கூறுகள் போன்றவற்றை ஏற்க மறுக்கின்றனர். வெள்ளை இனத்தவரின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறையும் இந்தக் கருப்பின பிரெஞ்சு இளைஞர்களைப் புறக்கணித்து, தனித் தீவாக்கிவிட்டது. கல்வி ரீதியாகவும், வேலை வாய்ப்பு ரீதியாகவும் இவர்களைப் புறக்கணிக்கும் வெள்ளை நிறவெறிக் கொள்கை, கருப்பின இளைஞர்களை எவ்வித நோக்கமும் இன்றி வீதிகளில் சுற்றித் திரியும் அராஜகவாத உதிரிக் கும்பலாக மாற்றி வருகிறது. பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தால் சமூகத்தின் பொதுப் பண்பாடாக ஊட்டி வளர்க்கப்படும் நுகர்வுவெறி கலாச்சாரம், ""லும்பன்''களாகத் தெருக்களில் சுற்றும் கருப்பின இளைஞர்களை வன்முறைக் கும்பலாகவும் மாற்றுகிறது. இதனால்தான், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நிறவெறிக்கு எதிராக வெடித்த கருப்பின இளைஞர்களின் கோபம், இலக்கற்ற, நகர்ப்புற வன்முறை போராட்டமாக நடந்து முடிந்தது. தமது வாழ்வை இழந்து எரிந்து கிடக்கும் சமூகம், தான் நுகர முடியாத, தனக்கு எதிரான அனைத்தையும் எரித்து ஓய்ந்தது.

 

நம் நாட்டு "தேசிய' அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்க முசுலீம் எதிர்ப்பு தீவிரவாத அபாயத்தை ஊதிப் பெருக்குவது போலவே, நிறவெறி பிடித்த பிரெஞ்சு ஓட்டுக் கட்சி தலைவர்கள் ""வன்முறையைக் கட்டுப்படுத்துவது'' என்ற முழக்கத்தின் அடிப்படையிலேயே தேர்தல் உத்திகளை வகுத்துக் கொள்கின்றனர். வன்முறையைக் கட்டுப்படுத்துவது என்பது பிரெஞ்சு சமூகத்தில் நடைபெறும் அனைத்து வன்முறைகளையும் கட்டுப்படுத்துவது அல்ல. வெள்ளை இனத்தவர் அல்லாத வெளிநாட்டவர் ஈடுபடும் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நிறவெறிக் கொள்கையே ஆகும். இந்த அடிப்படையில், தற்போது கருப்பின இளைஞர்கள் நடத்திய தன்னெழுச்சியான போராட்டத்தையும், நிறவெறி பாசிச அரசியலை ஊதிவிடுவதற்கு பிரெஞ்சு ஆளும் கும்பல் பயன்படுத்திக் கொண்டது.

 

2007இல் நடைபெறவுள்ள பிரெஞ்சு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புள்ள தலைவர் எனக் கூறப்படும் தற்போதைய உள்துறை அமைச்சர் மந்திரி நிகோலஸ் சர்கோஸி, கருப்பின மக்களை, ""வீட்டு மதில் சுவரில் படிந்துள்ள பறவைகளின் எச்சங்கள்; இந்த எச்சங்களைத் துடைத்தெறியாமல் விடமாட்டேன்'' என இழிவுபடுத்தி பேசி, கலவரம் தொடங்குவதற்கு நெருப்பைப் பற்ற வைத்தார். மேலும் அவர், பாரீசின் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ள போலீசு நிலையங்களுக்குப் போய், கருப்பின குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி விசாரணை நடத்தி, தன்னை வெள்ளை இனத்தின் இரட்சகனாகக் காட்டிக் கொண்டார்.

 

சர்கோஸியோடு அதிபர் தேர்தலில் நிற்க போட்டி போடும், தற்போதைய பிரதமர் டொமினிக் டி லில்லிபன், கலவரத்தை ஒடுக்க, 1955ஆம் ஆண்டில் போடப்பட்ட ஒரு பழைய ஒடுக்குமுறை சட்டத்தைத் தூசி தட்டி எடுத்தார். இந்தச் சட்டம், பிரான்சின் காலனியாக இருந்த அல்ஜீரியாவில் நடந்த சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. இந்த பிரெஞ்சு மேலாதிக்க சட்டத்தைக் கையில் எடுத்ததன் மூலம், அவர் வெள்ளை இன வெறியர்களின் ஆதரவைப் பெற முயன்றார். மேலும், கருப்பின மக்கள் வாழும் புறநகர் பகுதி மேயர் நினைத்தால் அந்தப் பகுதிகளில், அடுத்த மூன்று மாத காலத்திற்கு அவசர கால ஆட்சியை நடைமுறைப்படுத்தலாம் என்ற சட்டபூர்வ பாசிச அடக்குமுறையையும் கருப்பின மக்கள் மீது திணித்தார்.

 

இக்கலவரத்தை ஒடுக்க பிரெஞ்சுக் குடியரசு தூசி தட்டி எடுத்த கருப்புச் சட்டத்தின் கீழ், 2,500க்கும் மேற்பட்ட கருப்பின இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் பெரும்பாலோர் பதின் வயதைத் தாண்டாத சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீசின் புறநகர் ப

குதிகளில் துர்நாற்றம் வீசும் அடுக்குமாடி குடியிருப்புகளைப் பார்த்தாலே, அவ்வீடுகளில் எலியோடும், கரப்பான் பூச்சியோடும் குடித்தனம் நடத்தும் கருப்பின மக்களின் வாழ்க்கை, எவ்வளவு கேவலமாகச் சிதைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். பிரெஞ்சு சமூகம், இந்த வெள்ளை இனவெறி அநாகரிகத்தைக் கண்டித்துப் போராடாத வரை, கருப்பின இளைஞர்களின் இலக்கற்ற வன்முறை போராட்டத்தைத் தடுத்துவிட முடியாது. இது மட்டுமல்ல, நாகரீகமான பாரீசில், கேவலமான நிலையில் பல இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வதைக் கண்டு கொள்ளாத சமூகம், இந்த வன்முறைப் போராட்டங்களைக் கண்டிக்கும் தார்மீக உரிமையைக் கூட இழந்து விடுகிறது.

 

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்காக நடந்ததுதான் பிரெஞ்சு புரட்சி. அக்குறிக்கோள்களை பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகள் குழிதோண்டி புதைத்து விட்டனர் என்பதை கருப்பின மக்களின் போராட்டம் உலகிற்கு எடுத்துக் காட்டி விட்டது.

 

செல்வம்

தகவல் உதவி: பி. இரயாகரன், பாரீஸ்.