Fri03292024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வாசகர் கடிதம்

வாசகர் கடிதம்

  • PDF

01_2006.jpgசாதிய ஆதிக்கத்தைத் தகர்ப்பதே தமது லட்சியம் என்று புறப்பட்ட திருமா, இன்று ஆதிக்கசாதி பிழைப்புவாத அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு வலம் வருவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான துரோகமும் அரசியல் பித்தலாட்டமும் பிழைப்புவாதமுமாகும்.

ச. மதியழகன், ஊற்றங்கரை.

 

நக்சல்பாரிகளின் சிறைதகர்ப்பு நிகழ்ச்சியானது, வெறும் சாகசவாத நடவடிக்கை அல்ல என்பதையும் இருண்ட பீகாரில் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சிய எழுச்சி என்பதையும் பு.ஜ. கட்டுரை எடுப்பாக உணர்த்தியுள்ளது.

அஜிதா, திருப்பூர்.

திரைப்படங்களில் ஒரே நடிகர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இரட்டை வேடங்களில் நடிப்பதைப் போல, சி.பி.எம். கட்சியும் ஒருபுறம் மே.வங்கத்தில் அமெரிக்கப் போர்விமானப் பயிற்சிக்கு அனுமதித்து விட்டு, மறுபுறம் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தி இரட்டை வேடமிட்டு நடிக்கிறது. இரட்டை வேடம் போடும் இவர்கள் ஒருகாலும் கம்யூனிஸ்டுகளாக இருக்க முடியாது.

செம்மலர் மா.நடராசன், அறந்தாங்கி.

பு.ஜ. கட்டுரைகளில் பெரும்பாலும் தமிழ்ச் சொற்களைக் கையாண்டு மொழியுணர்ச்சியை வெளிப்படுத்தி வருவது சிறப்பு. எழுத்துப் பிழைகள் நேர்வது இயற்கை எனினும், அவை நேராதிருக்க உரிய கவனம் செலுத்துங்கள். ராமன்குட்டி மணியப்பன் கொலை விவகாரம் குறித்த பிரச்சினையில், இந்திய அரசு அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்குத் துணை போவதன் விளைவுதான் இப்படுகொலை என்று விளக்கியதானது, பு.ஜ.வின் அரசியல் நேர்மையையும் துணிச்சலையும் காட்டுகிறது. என்னைப் போன்ற தலித் இளைஞர்களுக்கு திருமா, வெறுமாதான்! நக்சல்பாரிகளுக்குச் சோறு போட்டது, தலித்துகள்தான் என்று கூறிவரும் ரவிக்குமார் திருமாக்களே, உங்களது பிழைப்புவாத அரசியல் பித்தலாட்டங்களை தலித் மக்கள் புரிந்து கொள்ளும்போது, உங்களுக்குச் சோறு போடும் தலித் மக்களே உங்களை விரட்டுவது உறுதி!

மணிகோ. பன்னீர்செல்வம், நாகம்பட்டி.

ஆண்டாண்டு காலமாக வஞ்சிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திய ஆதிக்க சாதி வெறியர்களோடு கூட்டணி கட்டிக் கொள்ளும் திருமாக்களின் பிழைப்புவாதப் பித்தலாட்டங்களை, இனியும் தாழ்த்தப்பட்ட மக்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இத்துரோகத் தலைமைக்கு அடங்க மறுப்பார்கள்; அத்துமீறுவார்கள்.

ப. தர்மராசு, திருச்சி.

நிலப்பிரபுக்களாலும் ரன்வீர்சேனா குண்டர்படையாலும் காலங்காலமாக நசுக்கப்பட்டு வந்த உழைக்கும் மக்கள், நக்சல்பாரிகளின் தலைமையில் திரண்டு பீகாரில் சிறையைத் தகர்த்த செயலானது, இந்தியப் புரட்சிகர வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமையும். பத்திரிகைகள் பயங்கரவாதமெனப் பீதியூட்டிய நிலையில், உண்மைநிலைமைகளை வெளிக்கொணர்ந்த பு.ஜ. கட்டுரை புதிய நம்பிக்கையை விதைத்துள்ளது.

வில்லவன், தாதகாப்பட்டி.

தலித் மக்களை ஒடுக்குமுறையிலிருந்து விடுவிக்க வந்த இரட்சகனாகவும் புரட்சியாளனாகவும் விளம்பரப்படுத்திக் கொண்ட ""தொல். திருமா'', இப்போது ஆதிக்க சாதிவெறியர்களுடன் கூட்டணி கட்டிக் கொண்டு தேர்தல் சாக்கடையில் மூழ்கி ""தொலைந்து போன திருமா''வாகி விட்ட உண்மைக் கதையை படம் பிடித்துக் காட்டியது சிறப்பு.

இனியவன், மூணாங்கரடு

தென்னமெரிக்கக் கண்டத்தில் புஷ் எதிர்ப்புப் போராட்டம் பற்றிய செய்தியில், உலக சமூக மன்ற (ஙிகுஊ) த்தின் துரோகத்தனத்தையும் அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். போராட்டம் நியாயமானது எனினும் உலக சமூக மன்றத்தின் சதிகாரத் தலைமையைத் தோலுரித்துக் காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

தமிழரசன், தஞ்சை.

பீகார் சிறை தகர்ப்பு பற்றி பு.ஜ. மட்டுமே பீகாரில் தாழ்த்தப்பட்டோர் அனுபவித்துவரும் கொடுமைகளையும், சாதிவெறியர்களின் கொலை வெறியாட்டங்களையும், புரட்சிகர சக்திகள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளையும் எடுப்பாக விளக்கியுள்ளது. அடக்குமுறையாளர்களைக் குலைநடுங்கச் செய்யும் நக்சல்பாரி புரட்சிகர இயக்கம் மென்மேலும் வளர்ந்தோங்க விழைகிறேன்.

ஜீவா, சென்னை.

தாராளமயக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, அத்தியாவசியத் தேவைகளுக்காக மாதம் ரூ. 225 கூடச் செலவிட முடியாத வறுமையில், விவசாயிகள் கொத்துக்கொத்தாகத் தற்கொலை செய்து கொள்ளுவதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் தாராளமயமாக்கலை எதிர்த்துப் போராடத் தொடங்கிவிட்டால், இக்கேடு கெட்ட கொள்கை அவர்களது ஏர்கலப்பையால் கிழித்தெறியப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவது நிச்சயம்!

நிர்மலா, திருச்சி.

இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் மரணக் குழியில் தள்ளிவரும் தாராளமயக் கொள்கையை எதிர்த்துப் போராட, விவசாயிகள் முதலில் ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற உண்மையை பு.ஜ. கட்டுரை எடுப்பாக விளக்கியுள்ளது. செங்கொடி ஏந்த அருகதையற்ற புரட்டல்வாதிகளான சி.பி.எம். கட்சியினரை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவது சிறப்பு.

செங்கொடியவன், சேலம்.

மேட்டுக்குடிக்கும், ஊசலாடும் உயர் நடுத்தர வர்க்கத்துக்கும் பூலோக சொர்க்கமாகத் தெரியும் தனியார்மய தாராளமயக் கொள்கையின் கொலைகார முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது அட்டைப்படக் கட்டுரை. புரட்சியாளர்கள் இன்னும் துரிதமாகப் பணியாற்ற வேண்டிய அவசியத்தை பு.ஜ. உணர்த்தி வருகிறது.

பனிமலர், சென்னை.

ஜனநாயகம் பற்றி வாய்கிழியப் பேசும் ஏகாதிபத்தியவாதிகள், தமது சொந்த நாட்டில் நிறவெறி பாசிஸ்டுகளாக இருப்பதை அம்பலப்படுத்திக் காட்டுவதாக பாரீஸ் கலகம் பற்றிய கட்டுரை அமைந்துள்ளது. ராமன்குட்டி மணியப்பன் கொலையில், குற்றவாளி இந்திய அரசுதான் என்பதை வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டி தொகுத்துக் கூறியது சிறப்பு.

புரட்சித்தூயன், தருமபுரி.

கடைசிப் பக்க அட்டைப்படச் செய்தி, ஈராக் மக்களின் துயரத்தை கண்ணீரில் எழுதப்பட்டதாக, அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் மீது ஆத்திரம் கொள்ளத்தக்கதாக அமைந்திருந்தது. விவசாயிகளைக் காவு கொள்ளும் தாராளமயக் கொள்கை பற்றிய கட்டுரை எளிய நடையில் சிறப்பாக உள்ளது. தமிழக விவசாயிகளின் அவலம் பற்றியும் ஒப்பந்த விசாயம் பற்றியும் இதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

வாசகர் வட்டம், வேலூர்.

தலையங்கக் கட்டுரையானது, வெள்ளத் துக்குக் காரணமான ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி, மறுவாழ்வுக்காகப் போராட அறைகூவுவதாக உரிய தருணத்தில் வெளி வந்துள்ளது. தனியார்மய தாராளமயக் கொள்கையால் விவசாயமும் விவசாயிக ளும் நாசமாக்கப்பட்டு வருவதை அட்டைப் படக் கட்டுரை எடுப்பாக உணர்த்தியது.

வாசகர் வட்டம், திருச்சி.

கொள்கை லட்சியங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு தனிநபர் துதி, பிழைப்புவாத புதைசேற்றில் புரளும் திருமாவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியிருப்பது சிறப்பு.

சுரேஷ்குமார், சென்னை.

 

பு.ஜ. இல்லையேல், சி.பி.எம். கட்சியின் சந்தர்ப்பவாதத்தையும் அமெரிக்க எதிர்ப்பு பித்தலாட்டத்தையும் தமிழக மக்கள் அறிய முடியாமல் போயிருக்கும். துரோகிகளைத் தோலுரிக்கும் உங்கள் பணி தொடரட்டும்.

கதிரவன், சென்னை.