Thu03282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் வெள்ளிவிழா ஆண்டில் ப.ஜ.க: ஒழுக்கக்கேடே ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் ஒழுக்கம்!

வெள்ளிவிழா ஆண்டில் ப.ஜ.க: ஒழுக்கக்கேடே ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளின் ஒழுக்கம்!

  • PDF

02_2006.jpg1980 இல் பாரதிய ஜனசங்கத்தின் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சிக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. மும்பையில் நடந்த வெள்ளிவிழா மாநாட்டில் உரையாற்றிய அத்வானி, ""கடந்த 25 ஆண்டுகால அனுபவம் மகிழ்ச்சியாகவும், கட்சி உறுப்பினர் அனைவரும் பெருமை கொள்ளும் வகையிலும் இருந்தது. ஆனால் கடந்த 25 வாரங்களில் இலஞ்சம், ஊழல், உட்கட்சி பிரச்சினைகள், மற்றும் தேர்தல் பின்னடைவுகளால் இப்போது துயர்மிகு

 நாட்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்று சோககீதம் பாடினார். இந்த கீதத்தில் தலைவர் பதவியை வேறு வழியின்றி ராஜினாமா செய்தது குறித்து அவர் வெளிப்படையாக பேசவில்லை என்றாலும், சோகத்தின் உள்ளுறையில் மறைந்திருக்கும் அந்த வருத்தத்தை யாரும் உணர்ந்து கொள்ள முடியும்.

 

இந்தத் துயர்மிகு நாட்களின் ஏனைய அத்தியாயங்கள் வாசகர்கள் ஏற்கெனவே அறிந்ததுதான். உமா பாரதி வெளியேற்றம், பா.ஜ.க. பொதுச்செயலர் சஞ்சய் ஜோஷியின் பாலுறவு சி.டி., உ.பி. சட்டசபை உறுப்பினர் கிருஷ்ணநந்த் ராய் உள்ளூர் மாஃபியா மோதலில் கொலை செய்யப்பட்டது, திருவனந்தபுரம் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் டெபாசிட் கூடக் கிடைக்காமல் பெருந்தோல்வியடைந்தது, நாடாளுமன்ற கேள்விபதில் நிகழ்ச்சிக்காக இலஞ்சம் வாங்கிய ஆறு பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்ற உள்ளூர் நல மேம்பாட்டு நிதியில் கமிசன் பெற்று வீடியோவில் அம்பலமான மூன்று பா.ஜ.க. உறுப்பினர்கள், இறுதியாக பா.ஜ.க.வின் மராட்டிய பங்காளியான சிவசேனையில் ரானே, சஞ்சய் நிருபம் ஆகியோர் விலகலுக்குப் பிறகு தாக்கரேவின் மருமகனான ராஜ் தாக்கரே சிவசேனையை விட்டு வெளியேறியது... இவையெல்லாம் பா.ஜ.க. வின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தில் மின்னிய சோக முத்துக்கள்.

 

கண்ணைப் பறிக்கும் இந்த முத்துக்களின் ஒளிவீச்சால் பாதிப்படைந்த பா.ஜ.க.வின் அன்பான நடுத்தர வர்க்கம் சற்றே அதிர்ச்சியடைந்திருக்கிறது என்றால் அது மிகையான ஒன்றல்ல. இவர்கள், ஹிந்துவுக்கும், இந்தியா டுடேவுக்கும், துக்ளக்கிற்கும் எழுதி வரும் வாசகர் கடிதங்களில் தத்தமது புலம்பல் பல்லவியைப் பாடி வருகின்றனர். ""வித்தியாசமான கட்சி என்று பெயரெடுத்த பா.ஜ.க. இன்று பத்தோடு பதினொன்றாக மாறிவிட்டது, காங்கிரசு கலாச்சாரம் பா.ஜ.க.விலும் ஊடுருவி விட்டது, ஆர்.எஸ்.எஸ்.இன் தேசபக்தி கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கப் பயிற்சியால் உருவான தலைவர்கள் இன்று சீரழிந்து போனார்கள், அதிகாரத்தில் இல்லாத வரை நல்ல கட்சியாக இருந்த பா.ஜ.க., அதிகாரத்தில் அமர்ந்து அதை இழந்ததும் மோசடியாகி விட்டது'' என்றெல்லாம் அந்த வாசகர் கடிதங்கள் வருத்தப்படுகின்றன. பா.ஜ.க.வின் சிண்டை எப்போதும் கையில் வைத்திருக்க விரும்பும் ஆர்.எஸ்.எஸ்.சும் கூட இதே தொனியில் பா.ஜ.க.வை எச்சரிக்கை செய்கிறது.

 

இப்படி பார்ப்பனப் பத்திரிக்கைகளும், பா.ஜ.க. ஆதரவாளர்களும், சங்கப் பரிவார வானரங்களும் பா.ஜ.க.வை எப்பாடுபட்டாவது திருத்தியமைக்க வேண்டும் என்றாலும், வரலாற்றின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருக்கிறது. அது பா.ஜ.க.வின் இன்றைய சீரழிவுகள், 1925இல் ஆரம்பிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.ன் சித்தாந்த செயல்பாட்டு விளைவுகளின் தர்க்கப்பூர்வ நீட்சியிலேயே கருக் கொண்டிருக்கின்றன என்பதே.

 

உலக வரலாற்றில் தோன்றிய, தோன்றிக் கொண்டிருக்கும் பாசிசக் கட்சிகள் எவையும் மக்களது நல்வாழ்விற்கான திட்டத்தை, சித்தாந்தத்தை கொண்டிருக்க வில்லை. மாறாக, இனவெறி, மதவெறி, சாதிவெறி முதலான சிறுபான்மையினர் மீதான வெறுப்பையே பெரும்பான்மையினரின் நலனாக முன்வைக்கின்றன. ஹிட்லரையும், முசோலினியையும் வெளிப்படையாக ஆதரித்த கோல்வால்கரின் ஆர்.எஸ்.எஸ்., அதன் நிறுவனரான ஹெட்கேவார் காலத்திலேயே பார்ப்பன மேல்சாதியினரின் அதிகார வேட்கை நலனையும், முசுலீம்களை எதிர்த்து ஒடுக்குவதையுமே திட்டமாகக் கொண்டிருந்தது. அதனால்தான் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் கலந்து கொள்ள மறுத்த ஆர்.எஸ்.எஸ்., முசுலீம்களின் எதிர்ப்புக்காக பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தது.

 

பா.ஜ.க.வின் முந்தைய அவதாரமான பாரதிய ஜனசங்கம் 1950இல் ஆர்.எஸ்.எஸ்.இன் விருப்பப்படி சியாம் பிரசாத் முகர்ஜி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தின் ஏனைய இந்து அமைப்புக்கள் வெறும் பார்ப்பன உயர்சாதியினரால் மட்டும் அறியப்பட்டிருந்தபடியால், எல்லா ""இந்து''க்களையும் சேர்க்க வேண்டும் என்பதே ஜனசங்கத்தின் நோக்கமாக இருந்தது. 1949இல் தொடங்கப்பட்ட அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் எனும் மாணவர் அமைப்பு, மாணவர்கள் ஆசிரியர்கள் காலில் விழுந்து சேவித்து குருபூசை செய்ய வேண்டும் என்பதற்காகவும்; 1960களில் ஆரம்பிக்கப்பட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் தொழிலாளர் அமைப்பு, தொழிலாளர்கள் தமது வர்க்க நலனைத் துறந்து முதலாளிகளுடன் இணைந்து தேச உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும்; 1967இல் தோற்றுவிக்கப்பட்ட விசுவ இந்து பரிசத் வெளிநாடுகளில் குடியேறிய பணக்கார இந்துக்களிடம் காசு வசூலிக்கவும், நடுத்தர இந்துக்களிடம் வெறியை உண்டாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

 

இங்கே நாம் வலியுறுத்தும் விசயம் என்னவென்றால், சங்கப் பரிவார அமைப்புக்கள் எல்லாமும் தமது தோற்றத்திலேயே மக்களது நலனுக்காக பிறக்கவில்லை என்பதே. மற்றபடி இந்த வானரங்கள் அனைத்தும் பசுவதைத் தடைச் சட்டம், மதமாற்ற அபாயம், முசுலீம்கள் கிறித்துவர்களை எதிர்த்துக் கலவரம், வடகிழக்கு மற்றும் காசுமீரின் தேசிய இனப்போராட்டங்களை ஒடுக்குவது, காசுமீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் 370வது சட்டப்பிரிவை நீக்குவது, சமஸ்கிருதத்தை வளர்ப்பது முதலான இவைதான் கடந்த 80 ஆண்டுகளாக நடத்திய "மக்கள் போராட்டங்கள்.'

 

இப்படி தோற்றத்திலும் நடத்தையிலும் மக்களுக்குப் பொறுப்பாக இருக்கத் தேவையில்லை எனும்போது, நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம் வாங்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? மேலும், சங்கப் பரிவார அமைப்புக்கள் அனைத்தும் முதலாளிகள் பணக்காரர்களின் காசைப் பெற்றுக் கொண்டுதான் உயிர் வாழுகின்றன. பிரமோத் மகாஜன் எனும் தலைவரின் சிறப்புத் தகுதியே அவர் மும்பய் முதலாளிகளிடம் நன்கொடை வாங்குவதில் கில்லாடித் தரகர் என்பதுதான். இன்றும் வெளிநாட்டுப் பணத்தைக் கணக்கில்லாமல் வாங்கி வரும் அமைப்புக்களில் முதலிடம் பெறுவது விசுவ இந்து பரிசத் இயக்கம்தான். அம்பானியின் ரிலையன்ஸ் தொலைபேசி நிறுவனத்திற்கு மகாஜன் மந்திரியாக இருந்த போது செய்த "சேவைக்காக' அவருக்கு ரிலையன்ஸ் பங்குகள் கணிசமான அளவில் பரிசாக ஒதுக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. உறுப்பினர்கள் முதலாளிகளின் சங்கங்களுக்காகத்தானே கேள்வி கேட்டுப் பணம் பெற்றார்கள்; எனில், மகாஜன் செய்தது மட்டும் சரி என்றால் இவர்களது செய்கையும் சரி என்றுதானே கூற முடியும்? தெகல்கா அம்பலமாக்கிய ஆயுதபேர ஊழலில் சிக்கிய பங்காரு லட்சுமணனும் கூட கட்சிக்காகத்தானே நன்கொடை பெற்றார்? ஒருவேளை, இவர்கள் வீடியோவில் சிக்கியது மட்டும்தான் பிரச்சினையை ஏற்படுத்தியது என்றும் கூறலாம்.

 

அடுத்து, பா.ஜ.க.வில் தலைவர்களிடையே நடக்கும் கோஷ்டிச் சண்டைகளுக்கு காரணம் என்ன? முதலில் சங்கப் பரிவாரங்களில் தலைவர்களாக வருவதற்கு என்ன தகுதி வேண்டும்? இவர்கள் எவரும் மக்கள் நலனுக்கான போராட்டங்கள் நடத்தி பிரபலமாக உருவானர்களல்லர். காரணம், இந்த அடிப்படை அவர்களது திட்டத்திலேயே கிடையாது. இவர்களது முதல் தகுதி பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மற்ற தகுதிகள் என்ன? கட்சியின் அனைத்து கோஷ்டிகளையும் ஒரு தேர்ச்சியான தரகனைப் போல அரவணைத்துச் செல்வதால் வாஜ்பாயி தலைவரானவர். மேலும், இந்துத்துவாவின் மென்மையான முகம் என்ற முகமூடியையும் கச்சிதமாக வெளிப்படுத்தியவர். அத்வானி, இந்துத்துவாவின் அடிப்படைத் திட்டங்களை ஜனரஞ்சகமாக மாற்றிப் பிரபலமாக்கியதால் தலைவரானார். மகாஜன், அருண்ஜெட்லி போன்றவர்கள் இந்தியாவின் தரகு பன்னாட்டு முதலாளிகளின் தொடர்புகளைச் சிறப்பாகப் பராமரித்ததற்கும், படித்த நடுத்தர வர்க்கத்தினரை கவருமளவுக்கு இங்கிதமாகப் பேசும் திறமையினாலும் தலைவர்களானார்கள்.

 

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா, பெரும் அரச குடும்பத்தின் இளவரசி என்பதால் தலைவரானார். உமாபாரதியும், சாத்வி ரிதம்பராவும், தமது அனல் கக்கும் இந்துவெறிப் பேச்சுத் திறமையால் தலைவர்களானார்கள். பா.ஜ.க.வின் தற்போதைய தலைவர் ராஜ்நாத் சிங், உ.பி.யின் மேல்சாதியினரின் ஆதரவினாலும், அவர்களது கிரிமினல் கும்பல்களை அரசியலுக்குப் பயன்படுத்தும் திறமையாலும் தலைவரானார். இந்த வகையில் தலைவர்கள் உருவாகும் போது கோஷ்டித் தகராறுகள் எப்படி நடக்காமல் இருக்க முடியும்?

 

மேலும், சங்கப் பரிவாரங்கள் எவற்றிலும் ஜனநாயகம் என்பது கிஞ்சித்தும் கிடையாது. தலைவர்கள் எவரும் தொண்டர்களால் தெரிவு செய்யப்படுவதில்லை. எல்÷லாரும் பழைய தலைவர்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஆல் நியமிக்கப்பட்டு வந்தவர்கள்தான். அத்வானி தலைவர் பதவியிலிருந்து இறக்கப்பட்டு, ராஜ்நாத் சிங் ஏற்றப்பட்டது ஆர்.எஸ்.எஸ். இன் நிர்ப்பந்தம் காரணமாகத்தான்.

 

அதேபோல, மத்தியப்பிரதேசத்தின் முதலமைச்சராக சௌகான் பதவி ஏற்றது அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களை வைத்தல்ல் மாறாக, பா.ஜ.க. செயற்குழுவின் உத்தரவின்படிதான் அவர் முதல்வராக்கப்பட்டார். இதை எதிர்த்த உமாபாரதி கட்சியை விட்டே நீக்கப்பட்டார். அப்படி நீக்கப்பட்டதும், உமாபாரதிக்கு ஞானோதயம் வந்து, கட்சித் தலைமை உயர்சாதியினரால் நிரம்பி வழிகிறதென்று புலம்புகிறார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்சனும், உமாபாரதி மோசமான கலாச்சாரப் பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து வந்ததாக வசைபாடுகிறார். இதே உமாபாரதிக்கு பதவியில் இருக்கும்வரை பா.ஜ.க.வின் உயர்சாதி ஆதிக்கம் நினைவுக்கு வரவில்லை. மண்டல் கமிசனை அமலாக்குவதை எதிர்த்து பா.ஜ.க.வும், ஏ.பி.வி.பி.யும் போராட்டம் நடத்தியபோது ஆதரித்ததும் இதே உமாபாரதிதான். பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று வடஇந்தியா முழுவதும் உமாபாரதி முழங்கியபோது, ஆர்.எஸ்.எஸ். இன் கண்களுக்கு நல்ல சந்தியாசினியாகத்தான் தெரிந்தார்.

 

ஆக, சங்கப் பரிவாரங்களின் தலைவர்கள் மக்கள் போராட்டத்திலிருந்தோ, அணிகளின் ஜனநாயகத் தெரிவு மூலமோ உருவாகவில்லை எனும்போது, அவர்கள் குழாயடிச் சண்டையில் ஈடுபடுவதோ, லஞ்ச லாவண்யங்களில் ஊறித் திளைப்பதோ ஆச்சரியமானதல்ல.

 

பா.ஜ.க.வைக் கண்காணிப்பதற்காக பா.ஜ.க. பொதுச்செயலாளராக ஆர்.எஸ்.எஸ்.ஆல் அனுப்பப்பட்டவர் சஞ்சய் ஜோஷி. இவர் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் ""சி.டி.'' சுற்றுக்கு விடபட்டதன் பின்னணியில் சில பா.ஜ.க. தலைவர்கள் இருப்பதாக எம்.ஜி.வைத்யா எனும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் குற்றம் சாட்டுகிறார். இங்கும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஒழுக்கம் கேவலமானது குறித்து வருத்தமில்லை. அது வெளியே வந்ததுதான் பிரச்சினை. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தலைவர்களின் இத்தகைய கள்ள உறவுக் கதைகள் இதற்கு முன்னரே அரசல் புரசலாக வெளிவந்திருப்பினும், தற்போதைய ""சி.டி.'' அளவுக்கு நாறவில்லை. இதை யாருக்கும் தெரியாமல் அமுக்குவதே ஆர்.எஸ்.எஸ்.இன் "கட்டுப்பாடு' ஆகும். ஜெயேந்திரன் சங்கரமட லீலைகள் தெருவுக்கு வந்து நாறினாலும், ஆர்.எஸ்.எஸ். அதை மறுப்பதையே கட்டுப்பாட்டுடன் செய்து வந்தது.

 

பா.ஜ.க.வை ஆதிக்கம் செய்யும் ஆர்.எஸ்.எஸ்.க்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என விரும்பிய பா.ஜ.க. தலைவர்களே இந்த ""சி.டி.''யை வெளியே கொண்டு வந்தனர். இதேபோல மோகன் பகவத், சுரேஷ் சோனி போன்ற ஆர்.எஸ்.எஸ். இன் தலைவர்களது மன்மத லீலை ""சி.டி.''க்கள் விநியோகத்திற்குத் தயாராக இருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், ஆர்.எஸ்.எஸ். தனது பிரச்சாரக்குகளின் ஆண் குறிகளுக்கு ஏதாவது பூட்டு போட்டால்தான் பிரச்சினை தீரும் போலிருக்கிறது.

 

21ஆம் நூற்றாண்டில் தனது இயக்கத்தில் பெண்களை உறுப்பினராக சேர்க்க மறுக்கும் ஒரே கட்சி ஆர்.எஸ்.எஸ். ஆகத்தான் இருக்க முடியும். இப்படி பெண்களை ஒழுக்கத்திற்கு எதிராகப் பார்க்கும் பார்வையில் இருந்தே மேற்கண்ட சீரழிவுக் கதைகள் தோன்றியிருக்கின்றன. இது பார்ப்பனியத்தின் கற்பு து தேவதாசி என்ற ஒரு நாணயத்தின் இரு பக்கங்களுக்கு நிகரானது. எனவே, ஆர்.எஸ்.எஸ்.உம் கள்ள உறவுக் கதைகளும் என்றும் பிரிக்க முடியாதபடி இணைந்தே இருக்கும். அது வெளியே வந்து நாறக் கூடாது என்பதற்காகவே ஆர்.எஸ்.எஸ்.இன் புகழ்பெற்ற "கட்டுப்பாடு' பயிற்சி ஸ்வயம் சேவகர்களுக்குத் தரப்படுகிறது.

 

இப்படி கள்ள உறவில் மட்டுமல்ல, மாஃபியா வேலைகளையும் பா.ஜ.க. தலைவர்கள் செய்து வந்தனர் என்பதற்கு உ.பி.யில் கொலை செய்யப்பட்ட மொகமதாபாத் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணாநந்த் ராய் ஒரு உதாரணமாவார். இவர் உள்ளூர் மாஃபியா தலைவர் பிரஜேஷ் சிங் கும்பலைச் சேர்ந்தவர். இந்தக் கும்பலின் எதிரணித் தலைவர், மாவூ சட்டமன்ற உறுப்பினரான முக்தார் அன்சாரி ஆவார். இரு கும்பல்களுக்கும் உள்ளூர் நிழல் உலக வேலைகள் செய்வதிலும், அரசாங்க கான்ட்ராக்ட்டுகளை எடுத்துச் செய்வதிலும் பலத்த போட்டி நிலவி வந்தது. இருதரப்பிலும் கடந்த சில ஆண்டுகளாக பலர் கொலை செய்யப்பட்டனர். இந்த மாஃபியா ரவுடியிசத்தில், கிருஷ்ணாநந்த் ராய் சமீபத்தில் கொல்லப்பட்டார். உலகத்துக்கே தெரிந்த இந்த மாஃபியா கும்பல் தலைவனது கொலையை முசுலீம் மக்களுக்கு எதிரான கலவரமாக மாற்றித் தனது புனிதத்தை பா.ஜ.க. காப்பாற்ற முயல்கிறது. கடைசியில், மதவெறி என்பது மாஃபியாக்களை மறைப்பதற்கான விசயமாக சுருங்கி விட்டது.

 

கேரளத்திலும் இதே கதைதான். ""இன்றைய கேரள பி.ஜே.பி.யின் தலைவர்கள் பலரது சொத்து மதிப்பு பத்து கோடிக்கு அதிகமிருக்கும். பி.ஜே.பி. மத்தியில் ஆட்சி செய்தபோது பெட்ரோல் பங்கு ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் அனைவரும் அறிந்ததே. மேலும், நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் பினாமி கட்டுமான நிறுவனத்துடன் நெருங்கிய உறவு கொண்டவர்கள் கூட கேரள பா.ஜ.க.வில் உள்ளனர்.'' இது ஏதோ பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சியினரின் வாக்குமூலம் அல்ல. கேரள பா.ஜ.க.வின் முக்கிய தலைவரான ஓ.ராஜகோபாலின் வாக்குமூலம்தான் இது. 2004இல் நடந்த தேர்தலில் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் 2,28,000 ஓட்டு வாங்கி தோற்ற பா.ஜ.க., சமீபத்தில் அத்தொகுதியின் உறுப்பினர் மறைவால் நடந்த இடைத்தேர்தலில் வெறும் 36,000 ஓட்டுக்கள் மட்டும் பெற்று டெபாசிட்டையும் இழந்தது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் இயங்கும் பா.ஜ.க. தலைவர்களது சதியே இந்த படுதோல்விக்கு காரணம் என்பது ராஜகோபாலின் குற்றச்சாட்டு. அதற்கு ஆதாரமாகத்தான் மேற்கண்ட வாக்குமூலம்.

 

வாக்குகள் 2 லட்சத்திற்கு அதிகம் வாங்கியபோது அவருக்கு இந்த மனக்குறை இல்லை. வாக்குகள் குறைந்ததும்தான் தனது கட்சியை அம்பலப்படுத்தும் தேவை வந்திருக்கிறது. இவ்வளவு நாள் இதுபற்றி வாய்திறக்காத ராஜகோபாலின் யோக்கியதையும், வாய் திறந்ததால் பா.ஜ.க.வின் யோக்கியதையும் இப்போது சேர்ந்து அம்பலமாயிருக்கிறது.

 

எனவே, பா.ஜ.க.வின் கடந்த 25 வார சந்தி சிரிக்கும் சம்பவங்கள் எல்லாமும், அதன் 80 ஆண்டு பாரம்பரியத்தின் விளைபொருள்தானே தவிர விதிவிலக்குகள் அல்ல.

 

மு தமிழ்மணி