Fri04192024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் தீண்டாமை எதிர்ப்பைச் சுவாசிக்கும் மாவீரன்!

தீண்டாமை எதிர்ப்பைச் சுவாசிக்கும் மாவீரன்!

  • PDF

03_2006.jpg

"அவர்கள் என் அங்கங்களைத்தான் சிதைத்து விட்டார்கள்; என் குரல் இன்னும் என்னிடம் உள்ளது; நான் இன்னமும் பாடுவேன்!''

 

போராட்டம் என்றாலே ஒதுங்கிப் போய்விடும் சமரச மனோபாவம் ஊட்டி வளர்க்கப்படும் இந்தக் காலத்தில், எப்படிபட்ட நிலையிலும் துவண்டு போய்விடாமல் நீதிக்காகப் போராடுவதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளும் மனிதர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும். அப்படிபட்ட அபூர்வ மனிதர்தான், பாந்த் சிங்.

 

பஞ்சாப் மாநிலம் மான்ஸா மாவட்டத்திலுள்ள ஜாபர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்டவர் பாந்த் சிங். அவர் மீது ஜாட் சாதி வெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலின் காரணமாக, அவரது இரண்டு கைககளும், ஒரு காலும் சிதைந்து புரையோடிப் போய் விட்டதால், அறுவைச் சிகிச்சையின் மூலம் வெட்டி எறியப்பட்டு விட்டன. அதிகமான இரத்தப் போக்கின் காரணமாக அவரது சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டன. வாய் வழியாகத் தண்ணீர் கூடக் குடிக்க முடியாமல், சண்டிகர் அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார், பாந்த் சிங். இப்படிபட்ட நிலையில்கூடத் துவண்டு போய்விடவில்லை அவர். ""எதிரிகள் எனது உடல் உறுப்புகளைத்தான் சிதைத்து விட்டார்கள். எனது குரல் இன்னும் மிச்சமிருக்கிறது. என்னால் இன்னமும் பாட முடியும்'' என்கிறார், அந்தப் போராளி.

 

பாந்த் சிங்குக்கு இந்த மனவலிமையைக் கொடுத்தது எது? மேல்சாதி ஒடுக்குமுறையில் இருந்து விடுதலையடைந்து, சமத்துவமிக்க மனிதனாக வாழ வேண்டும் எனச் சிறுவயது முதலே அவரது நெஞ்சினில் கனன்று கொண்டிருக்கும் சாதி ஆதிக்க எதிர்ப்புணர்வுதான், இந்தப் போராட்டக் குணத்தை பாந்த் சிங்கிடம் வளர்த்துவிட்டுள்ளது.

 

ஜாட் சாதி நிலப்பிரபுக்களிடம் கூலி வேலைக்குப் போனால், தனது சகோதரர்களைப் போல, மற்ற தாழ்த்தப்பட்டவர்களைப் போல, தானும் அடிமையாக மாற்றப்படுவோம்; சுயமரியாதையோடு வாழ முடியாது என்பதனாலேயே பாந்த் சிங், விவசாயக் கூலி வேலைக்குச் செல்வதைத் தவிர்த்துவிட்டு, கறவை மாடு வளர்ப்பது, பன்றி வளர்ப்பது போன்ற சுயதொழில்களைச் செய்து, எட்டு குழந்தைகள் கொண்ட தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். இப்படிபட்ட சுயமரியாதை வேட்கை கொண்ட தாழ்த்தப்பட்டவரை, ஆதிக்க சாதி கும்பலால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

 

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, பாந்த் சிங்கின் மூத்த மகள் பல்ஜித் கவுரை, சிறுமி என்று கூட இரக்கம் காட்டாமல், ஆதிக்க சாதி வெறியர்கள் பாலியல் பலாத்காரப்படுத்தினர். பஞ்சாப் கிராமங்களில் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவிவிடப்படும் இப்படிபட்ட சாதி ஆதிக்க வன்முறைகளைப் போலீசு நிலையத்தில் புகார் செய்ய, ஆதிக்க சாதி வெறியர்கள் அனுமதிப்பதில்லை. பின்தங்கிய பீகாரைப் போலவே, ""முன்னேறிய'' பஞ்சாபிலும், சாதி பஞ்சாயத்துகள்தான் இப்படிபட்ட வழக்குகளில் தீர்ப்பு சொல்லும்.

 

பல்ஜித் கவுர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட வழக்கில், ""அச்சிறுமியைப் பாலியல் பலாத்காரப்படுத்திய குற்றவாளிகளுள், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் பல்ஜித் கவுரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்'' எனத் தீர்ப்புச் சொன்ன ஜாபர் கிராம சாதி பஞ்சாயத்து, மற்ற குற்றவாளிகள் அனைவரையும் விடுதலை செய்தது. ""இது தீர்ப்பல்ல் என் மகளை அவளின் வாழ்நாள் முழுவதும் பாலியல் பலாத்காரப்படுத்துவதற்கு வழி செய்து கொடுக்கும் ஆயுள் தண்டனை'' எனச் சாதி பஞ்சாயத்தின் தீர்ப்பை ஏளனம் செய்தார் பாந்த் சிங். தன் மகளைப் பாலியல் பலாத்காரப்படுத்திய சாதிவெறியர்கள் மீதும், அவர்களுக்கு ""மாமா'' வேலை பார்த்தவர்கள் மீதும் அவர் போலீசில் புகார் கொடுத்தார்.

 

பாந்த் சிங்கை மிரட்டிப் பணிய வைக்க முடியாது எனப் புரிந்து கொண்ட ஆதிக்க சாதி கும்பல், பணத்தைக் காட்டி அவரை விலைக்கு வாங்க முயன்றது. பாந்த் சிங்கின் மகள் போலீசில் கொடுத்த புகாரைத் திரும்பப் பெற்றால், அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் கொடுப்பதாகப் பேரத்தைத் தொடங்கிய ஆதிக்க சாதி கும்பல், பேரத்தை உயர்த்திக் கொண்டே போய், பத்து இலட்ச ரூபாயும், பாந்த் சிங்கின் மகளுக்குத் தங்க நகைகளும்; அவரது திருமணத்திற்கு இரு சக்கர வாகனமும் தருவதாக வலை விரித்தது. ""பணத்திற்காக எனது மகளின் தன்மானத்தை அடகு வைக்க விரும்பவில்லை'' எனக் கூறி, அக்கும்பலின் முகத்தில் கரியைப் பூசினார் பாந்த் சிங்.

 

பாந்த் சிங்கின் மகள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட வழக்கில், ஜாட் சாதியைச் சேர்ந்த மந்தீர் சிங்; தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தார்செம், குர்மாயில் கவுர் என்ற பெண் ஆகிய மூன்று குற்றவாளிகள் மட்டும் கீழமை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர். ஜாபர் கிராம சுற்று வட்டாரத்திலேயே, ஒரு தாழ்த்தப்பட்டவர் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராகப் போராடிப் பெற்ற முதல் தீர்ப்பு இதுதான் எனக் கூறப்படுகிறது.

 

இத்தீர்ப்பு வெளிவந்த பிறகு எல்லாம் ""சுபமாக'' முடிந்துவிடவில்லை. பாந்த் சிங் நீதிக்காக நடத்திவரும் போராட்டத்தின் இரண்டாவது அத்தியாயம் நீதிமன்ற தீர்ப்பின் பிறகு தொடங்கியது. ஜாட் சாதி வெறியர்கள் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததோடு, வழக்கைத் திரும்பப் பெறக் கோரி, பாந்த் சிங்கின் குடும்பத்தையும், அவரது உறவினர்களையும் மிரட்டி வந்தனர். இம்மிரட்டலுக்குப் பயந்து, பாந்த் சிங்கின் மூத்த சகோதரர் ஹன்ஸா சிங், ஜாபர் கிராமத்தை விட்டே ஓட நேர்ந்தது. பாந்த் சிங் இம்மிரட்டல்களுக்கெல்லாம் பணியாததோடு, இ.பொ.க. (மாலெ) விடுதலைக் குழுவின் கீழ் இயங்கி வரும் கூலி விவசாயிகள் சங்கத்தில் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

 

பாந்த் சிங், கடந்த (2005) ஆண்டில் மட்டும் ஆதிக்க சாதி வெறியர்களால் இரண்டு முறை தாக்கப்பட்டார். அவர் இத்தாக்குதல்கள் பற்றி போலீசில் புகார் கொடுத்த போதும், குற்றவாளிகள் அதிகார வர்க்கத்தின் துணையோடு, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு, தண்டனையின்றித் தப்பித்துக் கொண்டனர்.

 

இப்படிப்பட்ட நிலையில், ஆதிக்க சாதி கும்பல், பாந்த் சிங்கை அழித்தொழித்துவிடும் நோக்கத்தோடு கடந்த சனவரி 5ஆம் தேதி, அவர் மீது மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியது. ஜாட் சாதியைச் சேர்ந்த அப்பி என்பவன் தலைமையில் வந்த கும்பல், துப்பாக்கியோடு பாந்த் சிங்கைச் சுற்றி வளைத்த பொழுது, அவர் உயிருக்குப் பயந்து ஓட முயலவில்லை. மாறாக, ""உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள்ளுங்கள்'' என ஆதிக்க சாதிவெறியர்களை எதிர்த்து நின்றார். கோடாலியாலும், உருட்டுக் கட்டைகளாலும், இரும்புத் தடியாலும் பாந்த் சிங்கைத் தாக்கி, குற்றுயிராக அவரை கோதுமை வயலுக்குள் வீசியெறிந்தது, அக்கும்பல்.

 

•••

 

பீகாரைப் போல மிகவும் பின்தங்கிய மாநிலமாக இல்லாமல், கிராமப்புறங்களில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி விட்டால், சாதி ஆதிக்கம் ஒழிந்துவிடும் என்ற முதலாளித்துவ மாயையை பாந்த் சிங்கின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் கலைத்துவிட்டது. பசுமைப் புரட்சியின் மூலம் விவசாயப் பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைத்துவிட்டதாகக் கூறப்படும் பஞ்சாப் மாநிலமும், பீகாரைப் போலவே மேல்சாதி ஆதிக்கமும், தீண்டாமைக் கொடுமையும் நிறைந்த மாநிலம்தான் என்பதை 2003இல் நடந்த தல்ஹான் சாதிக் கலவரம் அம்பலப்படுத்தியிருக்கிறது. ""2000ஆம் ஆண்டு தொடங்கியே, தாழ்த்தப்பட்டவர்கள், மேல்சாதி வெறியர்களுக்கு எதிராக போலீசில் கொடுக்கும் புகார்கள் ஃ வழக்குகள் பஞ்சாபில் அதிகரித்து வருகின்றன. இது பஞ்சாபின் கிராமப்புறங்களில் வர்க்க முரண்பாடும், தீண்டாமை கொடுமைக்கு எதிரான போராட்டமும் கூர்மையடைந்து வருவதைக் காட்டுவதாக'' முதலாளித்துவ சமூக ஆய்வாளர்களே ஒத்துக் கொள்கின்றனர்.

 

இந்திய ஆளும் கும்பல் திணித்த ""பசுமைப் புரட்சி'' பஞ்சாபில் பொருளாதார சமத்துவத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. மாறாக, நிலமும், அரசியல் அதிகாரமும் ""இந்து'' மற்றும் சீக்கிய மதங்களைச் சேர்ந்த ஒரு சில ஆதிக்க சக்திகளிடம் குவிவதைத்தான் உறுதிபடுத்தியிருக்கிறது. பாந்த் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குத் திட்டம் போட்டுக் கொடுத்த ஜஸ்வந்த் சிங், ஜாபர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் மட்டுமல்ல் 60 ஏக்கர் நிலங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ள நிலப்பிரபுவும் கூட. இத்தாக்குதலில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகள் ஒவ்வொருவரும் 20 ஏக்கருக்கு மேலான நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்கார விவசாயிகள்.

 

பஞ்சாப் மாநிலத்தை ஆளும் காங்கிரசு கட்சி, மிகவும் வெளிப்படையாகவே இக்குற்றவாளிகளைப் பாதுகாத்து வருகிறது. பாந்த் சிங் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் நாடெங்கும் அம்பலமான பின்னும் கூட, அவருக்கு நட்ட ஈடு தர காங்கிரசு அரசு முன்வரவில்லை. சண்டிகர் அரசு மருத்துவமனைக்கு சமீபத்தில் வந்து போன பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், பாந்த் சிங்கைச் சென்று பார்க்காமல் புறக்கணித்ததன் மூலம், தனது அரசு யார் பக்கம் நிற்கிறது என்பதைப் பச்சையாகக் காட்டிக் கொண்டார்.

 

ஜாபர் கிராம பஞ்சாயத்துத் தலைவர் ஜஸ்வந்த் சிங், ""பாந்த் சிங்கை மாறுகால் மாறு கை வாங்க வேண்டும் எனச் சபதம் போட்டதாக'' ஜாபர் கிராமமே சாட்சி சொல்கிறது. ஆனாலும், அரசியல் செல்வாக்கின் காரணமாக ஜஸ்வந்த் சிங் கைது செய்யப்படவில்லை. ""வழக்கைத் திரும்பப் பெறக் கோரி, குற்றவாளிகள் தன்னை சண்டிகர் அரசு மருத்துவமனையிலேயே வந்து மிரட்டுவதாக''க் கூறுகிறார், பல்ஜித் கவுர். அந்தளவிற்கு குற்றவாளிகள் சுதந்திரமாகச் சுற்றி வருகிறார்கள். ஆனால், பஞ்சாப் போலீசோ, ""பாந்த் சிங் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் பாலியல் பலாத்கார வழக்குக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை'' எனக் கூறி, இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் வேலையில் இறங்கியுள்ளது.

 

இத்தாக்குதலைக் கண்டித்து இ.பொ.க. (மாலெ) விடுதலைக் குழு, ஜாபர் கிராமத்தில் நடத்திய பொதுக் கூட்டத்தைச் சீர்குலைக்க காங்கிரசு கட்சி குண்டர்களையும், ரவுடிகளையும் இறக்கிவிட்டது. பஞ்சாப் போலீசும் தன் பங்குக்கு ஆயுதப் படையைக் குவித்து, கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகளைப் பயமுறுத்தியது. எதிர்க்கட்சியான அகாலிதளமும் காங்கிரசு அரசின் இந்த அடாவடித்தனத்தை கண்டிக்க முன்வரவில்லை. மேல்சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில், இந்த மதவாதக் கட்சியான காங்கிரசும்; சீக்கிய மதவாதக் கட்சியான அகாலி தளமும் ஒன்றுபட்டு நிற்கின்றன.

 

பாந்த் சிங்கின் போராட்ட உணர்வை வரித்துக் கொள்ள வேண்டிய நாம், சாதி ஆதிக்கத்திற்கு எதிராக அவர் நடத்தி வரும் நீண்ட நெடிய போராட்ட அனுபவத்தில் இருந்து இன்னுமொரு படிப்பினையையும் பெற வேண்டும். சாதி ஆதிக்கத்திற்கு எதிராகச் சட்டவாத வரம்பிற்குள் மட்டும் நின்றுகொண்டு போராட்டங்களை நடத்துவதன் மூலம், குறைந்த பட்ச நீதி கிடைப்பது கூடக் குதிரைக் கொம்பான விசயம் என்பதுதான் அந்தப் பாடம்.

 

கிராமப்புறங்களைச் சேர்ந்த சாதி ஆதிக்க சக்திகளின் சொத்துரிமையையும், அரசியல் சமூக உரிமைகளையும் பறித்தெடுப்பதுதான், தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும். இதனை சட்டத்தின் மூலமோ, தேர்தல் பாதையின் மூலமோ சாதித்துவிட முடியாது. தேர்தல்கள் மூலம் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தால்கட, தாழ்த்தப்பட்டவர் மீதான தாக்குதலைத் தடுத்துவிட முடியாது என்பதை ஏற்கெனவே உ.பி.யில் நடந்த மாயாவதி ஆட்சி நிரூபித்திருக்கிறது.

 

இதற்கு மாற்றாக, கிராமப்புறங்களில் நிலப்பிரபுத்துவ ஆதிக்க சக்திகளுக்கும், அவர்களுக்குத் துணை நிற்கும் அரசு இயந்திரத்துக்கும் எதிராக ஆயுதந்தாங்கிய புரட்சிகர விவசாயக் கமிட்டிகளைக் கட்டியமைப்பதுதான் ஒரே தீர்வு. உ.பி., பீகார் போன்ற வடஇந்திய மாநிலங்களில் சாதி ஆதிக்க சக்திகள் தனிப்பட்ட படைகளை வைத்திருக்கும் பொழுது, நிலத்திற்காகவும், தீண்டாமைக்கு எதிராகவும் போராடும் ஜனநாயக சக்திகளும் ஆயுதம் ஏந்திய மக்கள் படையைக் கட்டுவதைத் தவிர வேறு வழியும் கிடையாது.

 

 

செல்வம்