Thu04182024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய ஜனநாயகம் அடி முதல் நுனி வரை அழுகி நாறும் சி.பி.எம்:

அடி முதல் நுனி வரை அழுகி நாறும் சி.பி.எம்:

  • PDF

04_2006.gif

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனைப் பகுதியில் அமைந்துள்ள "லேணா திருமண மண்டபம்' நகரில் மிகப்பெரும் ஆடம்பரமான  வசதி படைத்தவர்கள் நாடும் திருமண மண்டபமாகும். அந்த மண்டபம் அமைந்துள்ள மதுரை சாலையில் 16.3.06 அன்று காலை 11 மணியளவில் சென்று கொண்டிருக்கையில் ""வைகை மணி இல்லத் திருமண விழா'' என்று பல வண்ணங்களில் ராட்சத வரவேற்பு போர்டுகள் திருமண மண்டபத்தின் முகப்பு வாயிலில் நிறுவப்பட்டிருந்தன. அனைத்து வரவேற்பு போர்டுகளை விட நல்ல சிவப்பு நிறத்தில் அரிவாள் சுத்தியலை வெள்ளை நிறத்தில் கம்பீரமாய் போட்டு' மேலாளர் தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்களே!''.... இன்னும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்களின் பெயர்களை எல்லாம் பொறித்து அனைவரையும் வருக! வருக! என "கம்பீரமாக' வரவேற்றது சி.பி.எம். கட்சியின் விளம்பர போர்டு!

 ""திருமண விழாவிற்கு வருகை தரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கீ. உமாநாத் அவர்களே! மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர் மோகன் அவர்களே! சி.ஐ.டி.யு. மாநிலத் தலைவர் தோழர் குமார் அவர்களே! "தீக்கதிர்

            ஆகா! கம்யூனிச இயக்கத் தோழர் இல்லத் திருமண விழா போலிருக்கிறது. அந்தப் "புரட்சிகர திருமணத்தை' எப்படியும் பார்த்துவிட வேண்டுமே என்ற துடிப்பில் அழையா விருந்தாளியாக மண்டபத்தினுள் நுழைந்து விட்டேன்.

            சாதிமத அடிப்படையில் இரண்டு பார்ப்பனர்கள் "அக்கினி' வளர்த்து, வேதம் ஓதி, மணமக்களைத் தத்தம் பெற்றோர்களுக்கு "பாதபூசை' செய்விக்கும் நிகழ்ச்சியை நடத்தி முடித்தபின் வரவேற்பு நிகழ்வு தொடங்கியது.

            "மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர  முன்னணித் "தோழர்' வைகை மணியின் அருந்தவப் புதல்வர் திருமண நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர், இந்தியன் வங்கி ஊழல் "புகழ்' எம்.கோபாலகிருஷ்ணன்; திருமணத்தை நடத்தி வைத்தவர் சென்னை உயர்நீதி மன்ற "நீதியரசர்' எஸ்.அசோக்குமார்; ஆக, வாழ்த்திப் பேசியவர்கள் பலரும் யாதவா சாதி பண மூட்டைகள், சர்வகட்சியிலுமுள்ள யாதவா சாதித் தலைவர்களே ஆவர். அத்துடன் "மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கண்ட முக்கியப் புள்ளிகள், பகுதித் தொண்டர்கள், தி.மு.க., ம.தி.மு.க.வி னர் பங்கேற்றனர். யாதவ சாதி "உறவுக்கார' பாமர மக்கள் அமைதியாக உட்கார்ந்து வேடிக்கை பார்த்தனர்.

            வாழ்த்திப் பேசியவர்களில் சிலர் வைகை மணி என்ற விளந்தூர் மணி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அதி தீவிர உறுப்பினர் என்றும் அவர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதில் பெருமிதம் கொள்வதாகவும் புகழ்ந்துரைத்தனர். கட்சி நிதியாக ரூபாய் இருபதாயிரத்தை "தீவிர உறுப்பினர்' வைகை மணி, "தோழர்' உமாநாத்திடம் "பலத்த கரவொலி'க்கிடையில் வழங்கினார்.

            அனைத்து "தலைவர்'களுக்கும் பகட்டான பட்டாடைகள்  சால்வைகள் அணிவிக்கப்பட்டன. அதன்பின் தலைவாழை இலையில் "முக்கனி', இனிப்பு வகைகள், வறுவல், பொறியல், வடை, பாயாசம், கூட்டு, பச்சடி வகையறா, அப்பளம், ரசம்; இதுபோக குடிப்பதற்கென்று தனித்தட்டில் சூப், ஐஸ்கிரீம் வகையறா, பிரியாணி, வெள்ளை "சாதம்', சாம்பார், குழம்பு, பருப்புக் குழம்பு, வெண்ணெய், தயிர், மோர் என அமர்க்களப்படுத்தி விட்டார்கள். என் மதிப்பீடு, இலை ஒன்றுக்கு ரூ. 100 முதல் ரூ. 125 வரை இருக்கும். ஆடம்பர திருமண அழைப்பிதழ் ஒன்றின் மதிப்பு மட்டுமே ரூ. 25க்கு மேல் இருக்கும்.

            பரமக்குடி அருகிலுள்ள மேற்கு கொட்டகுடி கிராமத்தை சேர்ந்த மணி, பேருந்தில் ஓட்டுனராக வேலை பார்த்துள்ளார். அதனையொட்டி சி.ஐ.டி.யு. தொழிற்சங்க உறவு; பிறகு "கம்யூனிஸ்ட்' உறவு! என்னதான் உழைத்தாலும் ஓட்டுனராக இருந்து கொண்டு பொருளாதார ரீதியாக உயர முடியுமா? எனவே, வெளிநாடுகளுக்கு ஆள் அனுப்பும் புரோக்கர் தொழிலில் ஈடுபட்டார். மிகக் குறுகிய காலத்திலேயே கோடீஸ்வரனாகி விட்டார். பல்வேறு கிராமங்களில் நிலத்தை விற்று, நகையை விற்று, ஆடுமாடுகளை விற்று ரூ. 50,000/ முதல் ஐந்து லட்சம் வரை மணியிடம் பணம் செலுத்திவிட்டு, மாதக் கணக்கில்ஆண்டுகணக்கில் காத்திருந்து காத்திருந்து, வெளிநாடும் செல்ல முடியாமல், கொடுத்த பணத்தையும் திரும்பப் பெற முடியாமல் ஏமாற்றப்பட்டவர்கள் ஏராளம். பிறகு ஏன் மணி கோடீஸ்வரன் ஆக முடியாது? கோடீஸ்வரன் ஆகி விட்டாலே "அந்தஸ்து'மிக்கவர்களின்  சர்வ கட்சியினரின் உறவு தன்னாலேயே வந்து விடுகிறது அல்லவா? அந்த உச்சகட்ட காட்சிதான் இந்த திருமணம்!

            எப்படிப்பட்ட தொழிலிலும் ஈடுபடலாம்; சாதிவெறி உணர்வில் திளைக்கலாம்; ஏமாற்றி மோசடி செய்தும் பணம் சம்பாதிக்கலாம்; கோடீஸ்வரன் ஆகலாம் என்ற கோட்பாடு ஓட்டுக்கட்சி அரசியலில்  சாதிவெறி அரசியலில் சாதாரணமாகி விட்டது. மேற்கண்ட சீரழிவுகளில்  பிழைப்புவாதத்தில்  ஆடம்பர மோகத்தில் எள்ளளவும் குறையாதவர்களே "மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியினர்! பார்ப்பனப் பண்பாட்டில் மூழ்கி திளைப்பவர்களே "மார்க்சிஸ்ட்' கட்சியினர்!  என்பதற்கு இத்திருமண நிகழ்ச்சி மற்றுமோர் எடுத்துக்காட்டு.

            சரி, "மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியின் "தீவிர' உறுப்பினர் மணி தம் புதல்வனுக்கு எப்படிப்பட்ட இடத்தில் பெண் எடுத்துள்ளார் தெரியுமா? மணமகள் உஷாவின் தந்தையான சண்முகம், 199196களில் கொள்ளைக் கூட்டத் தலைவி ஜெயா அமைச்சரவையில் சக்கை போடு போட்ட அமைச்சர் கண்ணப்பனின் பினாமியாக இருந்தவர். கண்ணப்பனின் பினாமிச் சொத்துக்களை சண்முகம் "ஏப்பம்' விட்டு விட்டதாகவும்இதனால் கண்ணப்பன் தமது அடியாட்களைக் கொண்டு சண்முகத்தை வெளுத்து வாங்கி விட்டதாகவும், எனினும் சண்முகத்திடமிருந்து கோடிக்கணக்கான பணத்தையும், சொத்துக்களையும் மீட்க முடியவில்லை என்றும் பரவிய செய்திகள் மறுக்க முடியாத உண்மை என்பதை சிவகங்கைகாளையார்கோவில் பகுதி மக்கள் பெரும்பாலோர் நன்கறிவர். அந்த வகையில் காளையார் கோவிலில் மிகப் பெரிய ஒரே கோடீசுவரர் "தோழர்' மணியின் சம்பந்தி அ.தி.மு.க. சண்முகம்தான்! எனவே இது பொருத்தமான சம்பந்தமாக அமைந்து விட்டது.

            எப்படியோ, கட்சிக்கு ஆதரவாளராக கோடீஸ்வரர்கள் இருந்தால் தானே அப்போதைக்கப்போது நிதி பெறலாம்; தோழருக்கு தோழராச்சு! பணத்திற்கு பணமாச்சு! என்ற கொள்கையில் ஊறித் திளைக்கும் "மார்க்சிஸ்ட்' கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் முதல் தொண்டர்கள் வரை என பெருந்திரளாக வந்து லேணா திருமண மண்டபத்தையே "மார்க்சிஸ்டு'களின் மாநாடு போல ஆக்கிவிட்டார்கள்.

            கேரளத்தின் முன்னாள் முதல்வரும், சி.பி.எம்  கட்சியின் மத்தியக் கமிட்டி உறுப்பினராகவும் இருந்த ஈ.கே. நாயனார் தனது மகன் திருமணத்தை  பாசிச ஜெயா நடத்திய வளர்ப்பு மகன் திருமணத்தையே விஞ்சும் வகையில் சாதிமத சடங்குகளோடு மிக ஆடம்பரமாக நடத்தினார். நாடாளுமன்ற சபாநாயகரான "மார்க்சிஸ்ட்' சோம்நாத் சாட்டர்ஜி தனது பேரனுக்கு பார்ப்பன சனாதன முறைப்படி பூணூல் அணிவிக்கும் விழா நடத்தி அசத்தினார்.

            "மார்க்சிஸ்டு' தலைவர்களே இப்படி ஆடம்பர மோகத்திலும், பார்ப்பனியத்திலும் மூழ்கி கிடக்கும்போது, திடீர் பணக்கார "தோழர்' வைகை மணி தனது மகனுக்கு எளிய முறையில் சாதிமத அடையாளமின்றி திருமணம் நடத்துவார் என்று எதிர்பார்க்க முடியுமா?

 

மு வி. இரவி,

பரமக்குடி.